பாவ அழிப்பு

நூறு நூறு
ஜென்மங்களில்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த
எத்தனையோ கோடி
பாவங்களுக்கான
மிகக் கொடுந் தண்டனையை
உன் வழியே
அனுபவித்தாயிற்று


இன்னும்
ஆயிரம் ஆயிரம்
ஜென்மங்கள் ஆயிடினும்
இந்த ஜென்மத்தில்
நீ எனக்குச் செய்த
உன் மாபாவங்களில்
சிலவற்றையேனும்
உன்னால்
அழிக்கத்தான் இயன்றிடுமோ?

வாலி வாழி

வலிக்கிறது வாலி
உனக்கு என் உயிரின் அஞ்சலி

வானம் உடைந்தாலும்
உன் வாலிபக் கோட்டை மட்டும்
உடையவே உடையாது

வயதைத் தின்று
வார்த்தைகளில் வாழ்ந்து
விரல் நுனிக் காம்புகளில்
இசைச் சொல் சுரந்த
பத்துப் பத்தாயிரம் மடியே
உனக்கு ஏது மறைவு

வாலி நீ வாழி

உன் அடுத்த பாட்டை
அங்கிருந்தும் எழுது
சிலிர்க்கக் காத்திருக்கிறோம்
இதழ்களில்லா
இதயம் பாடும் மௌனராகம்
அது எனக்கு மட்டும் கேட்கும்
என் உயிரிருக்கும் இடமறிந்து
நீ என்னைத் தொட்டால்
அது உனக்கும் கேட்கும்
என்றேன் நான்

நானென்னும்
இவள் இன்று வெற்றுக்கூடு
என் உயிர் பறந்து
உன்னைச் சேர்ந்தது
நல் உள்ளம் கண்டு

இனி உன் இதயம்
என்பதுவும் வேறா
எனில் என் இதயம்
சென்றதுதான் எங்கே
என்றாய் நீ

14

நீ
கோலம் போடுவதற்கு
என்னால்
புள்ளிகளாய் இருக்க
முடிந்தது

நீ
கோயில் செல்லுவதற்கு
என்னால்
பக்தியாய் இருக்க முடிந்தது

ஆனால்
நீ மாலை சூடும்போது மட்டும்
என்னால்
மாப்பிள்ளையாய்
இருக்க முடியவில்லையே


நீ வரவேண்டாம்
உன் காதலை அவசரமாய் அனுப்பிவை
இங்கே உன் உயிர் சாகக் கிடக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*
அன்பே
எனக்குத் தெரியும்
உன்னைத் தொடுவது
தகாதது என்று

இருந்தும்
உன்னைத் தொடாதபோது
துடிக்கும் என் உயிர்
எனக்கா சொந்தம்
உனக்குத்தானே

என்னைத் தொடவிடு

*
008

என்னவளே
நீ என்னுடனேயே
இருந்திருந்தால்
என் இதயத் துடிப்புகளை
உன் உயிரில்
எழுதியிருப்பேன்
இன்றோ
காகிதங்களில்
எழுதுகிறேன்

உன் பிரிவு
என்னை வருத்தியதைவிட
அதன் விளைவு எனக்குள்
கவி மழை பொழிவதே
மிகை

என்னவளே
இன்றும் நானுன்னை
நேசிக்கிறேன்
கவிதைகளாய்

நீ வாழ்க

*
009

என் இதய உண்டியலில்
விழுந்ததெல்லாம்
செல்லாக் காசுகள்தாம்

இன்றொரு
தங்க நாணயம்
தன்னேர்ச்சியாய் விழுந்ததும்
அத்தனைச்
செல்லாக் காசுகளும்
பொற் காசுகளாகிப்
போனதென்ன மாயம்

*
010