20160724

நிர்வாணம் அழகில்லை
ஆடை குறையக் குறைய
கொதித்தெழுந்த உணர்வுகள் குறைந்து குறைந்து
பின் எது வந்து எப்படி நின்றாலும் 
எந்தச் சிலிர்ப்பும் இல்லாமல் வாழ்க்கை
படு சொதப்பலாய் சொத்தையாய் கடுப்பாய்
வெறுப்பாய் பாலைவனமாய் ஆகிவிடும்
அறுபதிகளின் படங்களில் வந்த கதாநாயகிகள் தந்த எந்த உணர்வுகளையும் இன்று எந்த கதாநாயகியும் தறுவதில்லை

*
பத்மினிகள் கனவுகளை நிறைத்தார்கள், சரோஜாதேவிகள் கனவுகளில் வாழ்ந்துவிட்டே போனார்.
இன்று யார் பெயரையும் சொல்ல முடியாது, சதைகள்தான் கனவில் வருகின்றன. அப்படியே திடுக்கிட்டு எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு அடச்சே என்ன கெட்ட கனவு என்று படுத்துக்கொள்கிறான் இளைஞன்.

*
யாரைப்பார்த்தாலும் சந்தேகம்படுபவன் அனுபவமோ தெளிந்த அறிவோ வாழ்க்கையில் நம்பிக்கையோ இல்லாதவன்.
இதோ குற்றவாளி என்று அடையாளப்படுத்திக் கண்டுபிடித்து அவனை மட்டும் கொத்தாக அள்ளிச் சென்று தண்டனை அளிப்பவன் தான் புத்திசாலி, வெற்றியாளன், சமூக சீர்திருத்தவாதி.
என் வீட்டில் ஒரு பெண்சில் காணாமல் போய்விட்டது என்று இந்த உலகில் உள்ள எல்லோரும் திருடர்கள் என்று சொல்லும் மடமை கையாலாகாதத் தனத்தால் வெளிப்படுவது.
ஒரு திருடனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஊரெல்லாம் திருடன் என்று சொல்வது வக்கற்ற நிலையன்றி வேறில்லை.
வேண்டாம் அது உங்களுக்கு!

*
போர்கள் காலத்துக்கு ஏற்ப மாறுகின்றன.
அன்று ஒரு ஊரும் இன்னொரு ஊரும்தான் சண்டை போடும்.
பிறகு நாடும் நாடும்.
அப்புறம் எல்லா நாடுகளும் கோதாவில் இறங்கி.
இப்போ, சூழ்ச்சி செய்து உள்ளாட்டுக் கலவரங்களைப் பிற நாடுகள் உருவாக்கி உலகமெங்கும் கொடுமையான யுத்தம் நடக்கிறது.
நேரடியாய்ப் பார்த்தால் யுத்தம் மாதிரி தெரியாது, ஆனால் முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்த யுத்தம்தான் கொடுமையானது.

ஏனெனில் இதற்கு முடிவே கிடையாது

*
துறவு முக்திநிலை மாயை என்பதெல்லாம்
வாழ்க்கை ஆகாது
இந்த உலகம் வாழ்க்கையால் கட்டப்பட்டிருக்கிறது. வழுக்கி விழுந்தவர்களால் கட்டப்படும் துறவால் அல்ல

*

இஸ்லாம் என்பதும் நாத்திகம் என்பதும் 
99 புள்ளிகளில் அப்படியே ஒன்றுபடுகின்றன. 
ஒரே ஒரு புள்ளியில்தான் அவை வேறுபடுகின்றன. 
அந்தப் புள்ளியின் பெயர் இறை நம்பிக்கை

*
>>>எங்கள் மத அடிப்படை அல்லது அடித்தளம் குறையுள்ளதா என்று சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் <<<
எல்லா மதத்துக்கும் அடிப்படை / அடித்தளம் **அறம் அன்பு அறிவு** என்பதாகத்தான் இருக்கும். ஆகவே அத்தனை மதங்களையும் நான் நேசிக்கிறேன்.
இந்த மூன்றுக்கும் பங்கம் விளைவிப்பது மீண்டும் மனிதர்களால்தான். அவற்றை மனிதர்களே தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும்.
இஸ்லாத்துக்குள் நுழையும் பொய்க் கதைகளை, ஜிகாத் என்பதன் உண்மைப் பொருளை நான் இயன்றவரை விளக்கம் கூறிக் களைய முற்படுவேன்.
அப்படித்தான் ஒவ்வொரு மதத்தவரும் செய்ய வேண்டும். செய்தால் மட்டுமே **அறம் அன்பு அறிவு** பூரணமாகும் என்று நம்புகின்றேன்.
இஸ்லாம் என்பதும் நாத்திகம் என்பதும் 99 புள்ளிகளில் அப்படியே ஒன்றுபடுகின்றன. ஒரே ஒரு புள்ளியில்தான் அவை வேறுபடுகின்றன. அந்தப் புள்ளியின் பெயர் இறை நம்பிக்கை

*
துறவு கூடாது
வாழ்வில் நம் இறுதி மூச்சுவரை வாழ்வதற்கான எல்லாமும் இந்த மண்ணில் இருக்கிறது.
இறைவனை அடைவது என்றால் என் அகராதியில்...

இறைவன்
அளவற்ற அன்புடையவன்
நிகரற்ற கருணையுடையவன்
என் அன்பையும் கருணையையும் அதிகரிக்க அதிகரிக்க நான் நான் இறைவனை நெருங்கிக்கொண்டே இருப்பேன்.

*

No comments: