நினைத்துப் பார்க்கிறேன் - என் பிறந்தநாளுக்காக - 2005 08 10

** பிறந்தநாள்.... பி..ற..ந்..த..நா..ள்.. **
புகாரி
டொராண்டோ, கனடா
பிறந்த தேதி: ஆகஸ்ட் 10
புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com
இதோ, அன்புடன் சார்பில், அன்புடன் அன்பர் காந்தி ஜெகநாதனின் வாழ்த்து மடலும், நம் புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதையும், புகாரியின் நெருங்கிய நண்பரான கவிஞர் சேவியரின் கவிதையும்! வாழ்த்து முத்துக்கள் தந்த மூவருக்கும் என் நன்றிகள்!
* * * * *
பிறந்த நாள் வாழ்த்து
~~~~~~~~~~~~~~~~~~
இதயங்களை 'அன்பால்' இணையத்தில் இணைத்த புகாரி அவர்களுக்கு,
உதயமாகும் இப்பிறந்தநாளில் வாழ்த்து அனுப்பவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காண்பதற்கு மட்டும் அன்பான தோற்றமன்று,
பேச்சிலும், செயலிலும் அன்பைக் காட்டுவதில்
புகாரிக்கு நிகர், புகாரியேதான்!
வீண் வர்ணஜாலங்களை எல்லாம் காணமுடியாது
ஆனால், நகைச்சுவை உணர்வு இழையோடும்
அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்
ஒவ்வோரு நொடிப் பொழுதும்!
"தமிழை மறப்பதோ தமிழா..?" - புகாரி
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப்
போனவனன்றோ?
........
வா தமிழா...
நல்ல தமிழில் நாம்
நாளெல்லம் பேசுவோம் வா...
தமிழை நேசிக்கும்
தமிழை சுவாசிக்கும்
தஞ்சைத் தமிழனை
வாழ்த்த வார்த்தையின்றி
அன்புடன் சார்பாக நம் அனைவரின் வாழ்த்துக்களையும்
அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
~காந்தி ஜெகநாதன்~
* * * * *
புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதை:
                          வாழ்த்துகிறேன்!
                                              --- இரவா-கபிலன்

           கவிதையிலே மனமெழுதி
                           காயப் படுத்துவான்! - புகாரி,
                           காலை மாலை வேளைகளில்
                           கனவை உடுத்துவான்!
           புவியினிலே நிலவுபோன்ற
                           பொன்னு மேனிதான்! - புகாரி,
                           போகும் வழி காதல் மொழி
                           துள்ளும் கூனிதான்!
           கூவுகின்ற குயிலுபோல
                           குரலும் இனிமைதான்! - புகாரி,
                           குண்டுமேனி வண்டிபோல
                           நடையும் ஒயிலுதான்!
           காவிகட்டும் ஞானிபோன்று
                           கண்ணின் ஒளியிலே - புகாரி,
                           காட்டுகின்ற நயனமெலாம்
                           கவிதை மொழியில்தான்!

           இரவினிலே ஒளிருகின்ற
                           மின்னல் கவிதைகள் - புகாரி,
                           இதயம் மீறும் சொற்குவிப்பில்
                           மனதுள் திவலைகள்!
           அரகரவோ கரகரவோ
                           அவனுக் கில்லையே! - புகாரி,
                           ஆற்ற்ங் கரை மேட்டுக் குடி
                           மணக்கும் முல்லையே!
           பெருகிவரும் அலைவடிவாய்
                           அன்பின் வடிவுதான்! - புகாரி,
                           பேச்சுக் கலை கற்றதெலாம்
                           மூச்சு வடிவுதான்!
           கூரையிலா வானத்திலே
                           ஊரைக் கூட்டுவான்! - புகாரி,
                           கொட்டமிடும் கொட்டகையில்
                           சட்டம் இயற்றுவான்!

           கணினியிலே புகுந்துகொண்ட
                           ஒரத்த நாட்டனும் - பெற்ற
                           கல்வியெலாம் தமிழ்நிலத்தில்
                           காட்சிப் படுத்துவான்!
           பணிவுடைய புகாஅரியைப்
                           பற்றும் வயதுதான் - அவன்
                           பள்ளியிடம் தமிழகத்தின்
                           துள்ளும் உறவுதான்!
           வணிகமிலா வார்த்தைகளில்
                           வாழும் வாழ்வுதான் - புகாரி,
                           வாழ்க்கையிலே பெறற்கரிய
                           பேரும் புகழுந்தான்!
           அணியணியாய் வரிசைபெற
                           வாழ்த்து கூறுவேன்! - புகாரி,
                           ஆண்டுபல வாழ்ந்திருக்க
                           மீண்டும் கூடுவேன்!
* * * * *
கவிஞர் சேவியரின் கவிதை:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நேசக் கோட்டைக்குப்
பரவசப் படிக்கட்டுகளில்
பாதை அமைத்திருக்கும்
இனிய புகாரி,
என்ன சொல்லி வாழ்த்துவேன்.
கலையாத
தமிழ் மூட்டைகளை
பாலைவன தேசத்தில்
அலைந்து திரிகையிலும்
சுகமெனச் சுமந்ததையா ?
கனடாவின்
அவசர வீதிகளிலும்
சிந்தாமல் சிதறாமல்
தளும்பத் தளும்ப
கவிதை சுமந்ததையா ?
காரோட்டும் நேரத்திலும்
தேரோட்டப் போய்விடுமே
அந்த
நீரோட்ட நெஞ்சையா ?
இல்லை,
யார்வீட்டுப் பூ பூப்பினும்
பாராட்டப் போய்விடும்
உனது
பார் போற்றும் குணத்தையா ?
எதைச் சொல்லினும்,
சொன்னது கையளவு
சொல்லாதது உலகளவென
எனக்குள்
மனசு அணை உடைக்கிறது.
நேசம் கரை கடக்கிறது.
உனது கவிதைகளில்
கலந்து போவேன்.
ஆயினும்
கரைந்து போவது
உன் மெல்லிய மனசில் தான்.
உன் கவிதை
கனடாக் கடலிலும்
அமிர்தம் கடைந்தெடுக்கும்.
உன் நேசமோ
உடலைக் குடைந்து
உயிரின் சொடுக்கெடுக்கும்.
அதெப்படி புகாரி
உங்களால்
கனடாவில் கால்வைத்துக் கொண்டே
இதயம் நீட்டி
இந்தியா தொட முடிகிறது.
தோளில் ஆங்கிலத்தையும்
மனசில் தமிழையும்
தொய்வில்லாமல்
தூக்க முடிகிறது.
எனில்
பழமொழி ஒன்று
செத்ததாகிறதே
ஒரு உறைக்குள் இரண்டு கத்தி
சாத்தியமாகிறதே.
அதெல்லாம் போகட்டும்
மில்லியன் டாலர் கேள்வி
மனசுக்குள் முட்டுகிறது.
கேட்கலாமா என்றால்
நாவு
உள்நாக்கில் ஒட்டுகிறது.
கேட்டு விடுகிறேன்.
அதெப்படி உங்களால் மட்டும்
ஒரு கையால் காதலை வரையும்
அதே நேரத்தில்
இன்னொரு கையால்
போர்க்களத்தையும் புரட்ட முடிகிறது ?
அதெப்படி
உங்கள் தோட்டத்தில்
மட்டும்,
காய்ந்து விடாத கவிதைகள்
காய்த்துத் தொங்குகின்றன.
அதெப்படி
உங்கள் கடிகாரம் மட்டும்
கவிதைகளை
அசைபோடும் ஆர்வத்தில்
அசையாமல் நிற்கிறதா ?
வண்ணத்துப் பூச்சியின்
மேல் அமர்ந்த
மெல்லிய மல்லிகையாய்
மிதக்கிறது உன் மனசு.
ஆனாலும் அதற்குள்
போக்ரானும்
உடைத்து விட முடியாத
உறுதியான மனது.
பனித்துளிக்குள் இளைப்பாறும்
சிறு
குளிர்த்துண்டு போல
உன் நேசத்தின் துடிப்பு.
வெளிக்காட்டினாலோ
சீனச் சுவராலும்
சிறைப்பிடிக்க முடியாத
பெருங்கடலின் வெடிப்பு.
கவிதை
உன்னை எனக்கு
அறிமுகப் படுத்திய
அடையாள அட்டை.
இப்போது
நாம் சந்தித்துக் கொள்ள
அடையாள அட்டைகள்
தேவைப்படுவதில்லை.
சந்தப் புலிக்கு
சந்தத்தில் கவியெழுதையில்
வந்த கிலிக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
சந்தத்திலேயே
வாழ்த்துகிறேன்.
புன்னகை இதழ்களில் பூநீட்டும் - உன்
இருவிழி திருவிழாத் தேரோட்டம்.
உயிருக்குள் நேசத்தின் நீரூற்றும் - உன்
இதயத்தை ஊரே பாராட்டும்.
பிறப்பின் நாளது கொண்டாட்டம் - உன்
சிறப்பினை மனமது கொண்டாடும்.
இன்றைய தினத்துப் பூபாளம் - அது
என்றும் நின்றே ஆளட்டும்.
உள்ளில் கள்ளம் கொள்ளாமல் - உன்
சொல்லில் கபடம் இல்லாமல்
நெஞ்சில் வஞ்சம் எஞ்சாமல் - நீ
வாழ்வாய் என்றும் அஞ்சாமல்.
வாழ்த்துக்களுடன்
சேவியர்
* * * * *
புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com


நண்பர்கள் இல்லா நேரங்களில்
தனிமையின் சோகத்தில் தவிக்கும் நேரங்களில்
அன்புடன்தான் ஆறுதலாய்
ஆன்மாவுக்குள் அமிர்தாஞ்சன் தடவுகிறது
என்னை
இணைத்ததற்காக வாழ்த்துகிறேன்
என்
வாழ்த்துக்களையும் இணைக்கிறேன்

பத்தில் பிறந்த சொத்தே!
இணையம் தாண்டி
இதயம் இணைத்தவனே
கன்னித்தமிழை
கனடாவுக்கு கடத்தியவனே
உனக்கு என்
பிறந்தநாள் வாழ்த்து
புகாரியே!
ஓரு

பூ காரியின்
கூடை மணம்போல
உன் நாவில்
கவிதை மணக்கட்டும்
தவறாக நினைக்கவேண்டாம்
கவிதைக்கு
ஒருமைதான் பெருமை
ஒன்று தெரியுமா?
நானும் ஞானி
நீயும் ஞானி
ஆம்
நான் பெயரில்
நீ கவிதையில்

குழுமம் அமைத்து
குடும்பம் கொடுத்தாய்
இந்தக்
குடும்பக் குழுமம்
ஒருநாள்
ஒன்றாய் சந்திக்கும் நாளுக்காக
அமெரிக்க விசாவிற்காக
வாசலில் காத்திருக்கும்
மாணவர்களைப்போல
ஏக்கத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
நம் நட்பு
காதலும்- கண்ணீரும் போல
என்றும்
பிரியாமல் இருக்கட்டும்

           இதயம் நெகிழ்வுடன்

             ரசிகவ் ஞானியார்


(அன்பர்களே, புகாரியின் பிறந்தநாளுக்குக் கவிஞர் சேவியரிடமிருந்து இன்று
வந்த இன்னொரு வாழ்த்துக் கவிதை...)
.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தஞ்சம் என்பது தமிழில் - உந்தன்
நெஞ்சும் நேசத் தழலில்
விஞ்சும் சந்தம் சிந்தும் - உந்தன்
கொஞ்சும் தமிழின் நிழலில்.
அஞ்சும் என்ணம் என்றும் - உன்னில்
பிஞ்சும் இன்றிப் போகும்
எஞ்சும் மொழியும் கூடும் - உந்தன்
துஞ்சும் விழியும் பாடும்.
மிஞ்சும் நேசம் நோக்கின் - சர்ப்ப
நஞ்சும் தேனாய் மாறும்
பஞ்சும் பளுவாய் மாறும் - அக்கினி
குஞ்சும் இவனுள் தஞ்சம்
சேவியர்

No comments: