கீழே உள்ள இரண்டு கவிதைகளும் ஒன்றுதான். இறைவன் என்றாலும் அல்லாஹ் என்றாலும் பொருளில் யாதொரு மாற்றமும் இல்லை. 

அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்) = God (ஆங்கிலம்)

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை மாற்று மதத்தவர் பலரும் அனுபவித்துப் பாடுவார்கள். அப்படியானதோர் அற்புதப் பாடல் அது. மனித உயிர்கள் நெஞ்சுருக நேசிக்கும் இறைவனின் குணாதிசயங்களை அருமையாகப் பாடிச் செல்லும் அந்தப் பாடல்.   

இறைவன் இறைவன் என்றே எல்லா இடங்களிலும் வரும் அந்தப் பாடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ’அல்லா’ என்ற அரபிச் சொல்லைப் பயன்படுத்திவரும்.

அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

இதை ஒரு மேடையில் ’ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று மாற்றிப்பாடினார்கள். பிழையே இல்லை. ஆனாலும் தமிழர்களாகிய நாம் எத்தனையோ வடமொழிச் சொற்களையும் அரபுமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குள் அழகாகக் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம். அதுபோலவே அல்லா என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். ஏனெனில் அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். God என்றுதான் பொருள். 

நான் அறிந்து சில மாற்றுமத எழுத்தாளர்கள் இன்சால்லா என்ற சொல்லை வெகு சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். 

நான் மதநல்லிணக்கம் பாடுபவன். இதுபோல் எழுதி இணக்கம்தேட விழைபவன்.

*
அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

*
இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

அன்புடன் புகாரி
20171120

No comments: