கோபம் இறைவன் தந்த வரம்


கோபம் கொள்ளுதல் வேண்டும்
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

கோபம் கொள்பவனைவிட
கோபப்பட வைப்பவனிடமே
கோபம் கொள்ளுதல் வேண்டும்

சித்தார்த்தர் கோபப்பட்டார்
அன்பு வளர்த்தார்

காந்தி கோபப்பட்டார்
சுதந்திரம் பெற்றுத்தந்தார்

பாரதி கோபப்பட்டார்
புரட்சிக் கவிதை எழுதினார்

கோபம் இல்லா இதயத்தில்
நியாயம் இருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லாக் கண்களில்
கருணை இருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லா எதிர்பார்ப்பில்
அன்பிருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லா உடலில்
வீரம் இருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லாக் குணத்தில்
கற்பிருக்க வாய்ப்பில்லை

கோபத்தை
வெளிக்காட்டுவதில்
அளவற்ற
நாகரிகம் வேண்டும்
ஆனால்
கோபமற்ற பிணமாய்
ஒருநாளும்
ஆகிவிடக்கூடாது

கோபம் வந்தவன்தான்
நேர்மையை நிரூபிக்கிறான்

கோபம் வந்தவன்தான்
போட்டியில் வெல்கிறான்

கோபம் வந்தவன்தான்
சுயமரியாதை உயர்த்துகிறான்

கோபம் வந்தவன்தான்
சுதந்திரக்கொடி ஏற்றுகிறான்

இரத்தம் கொதித்தால்தான்
வக்கிரங்கள் வெந்துமடியும்

அறிவு கொதித்தால்தான்
ஆராய்ச்சிகள் வெற்றிபெறும்

அன்பு கொதித்தால்தான்
உறவுகள் வலுப்படும்

உயிர் கொதித்தால்தான்
வாழ்க்கை உண்மையாகும்

19 comments:

Selvi Shankar said...

புகாரி,

அன்பு உணர்வுகள் ஆத்திரத்தின் அடிப்படையில் தான் பிறக்கின்றன. அவை உறவுகளை அரவணைக்கின்றன.

//கோபம் இல்லா இதயத்தில்
நியாயம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா கண்களில்
கருணை இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா எதிர்பார்ப்பில்
அன்பிருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா உடலில்
வீரம் இருக்க வாய்ப்பில்லை
கோபம் இல்லா குணத்தில்
கற்பிருக்க வாய்ப்பில்லை//

முரண்பாடுகள் தான் வாழ்வில் சுவை கூட்டும்.
கவிதை அருமை. பாராட்டுகள்

அன்புடன் ..... செல்வி ஷங்கர்

Cheena said...

புகாரி,

கோபம் எனக்குப் பிடித்த ஒன்று
என்ன இரத்த அழுத்தம் கூடும் - அவ்வளவு தான்

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் - இல்லையா

ஒன்றும் செய்ய இயலாத நிலையிலும் கோபம் வரும்

கோபம் தவறுகளைத் திருத்தும்
கோபம் அன்பிற்கு வித்திடும்
பெரும்பாலும் நட்புகள் கோபத்தின் விளைவால் விளைந்தவைகளே

அன்புடன் ..... சீனா

Begum said...

கோபத்தில் கூட இத்தனை நல்ல விடயங்களா?
எனக்கு அதிகமாகக் கோபம் வரும்.......அப்பெல்லாம்.......என் மீதே எனக்கு கோபம் கோபமா வரும்.
உங்க கவிதையைப் பார்த்த பின் அட பரவாயில்லையே.........நம்ம கோபத்திலும் நல்ல விடயங்கள் இருக்கத்தானே செய்யுது எனும் சந்தோசம் வருது.

அன்புடன் ஆயிஷா

N Suresh said...

புரட்சியைக் கோபமென்று தப்பாக சொல்வது போல் தோன்றுகிறதே

என் சுரேஷ்

அன்புடன் புகாரி said...

சற்றே உட்பார்வை கொள்ளுங்கள் சுரேஷ்!

ஒரு புரட்சிக்கான வித்தே கோபம்தான்
அது இல்லாமல் சாப்பிட்டுவிட்டுத் தூக்கம் வரவில்லையே, வாங்க எல்லோரும் புரட்சி செய்யலாம் என்று யாரும் புரட்சி செய்யக் கிளம்பமாட்டார்கள்.

P Kanagasabapathy said...

Thank you. It is really a good piece
P. Kanagasabapathy

அன்புடன் புகாரி said...

கோபத்தையும் கோபம் வந்தவன் செய்யும் அநாகரிக செயலையும் யாரும் குழப்பிக்கொள்ளக் கூடாது

கோபம் கொள்ளுதல் கண்டின்பாக மனிதர்களுக்கு அவசியம். ஆனால் அந்தக் கோபத்தின் காரணமாய் வரும் நாகரிகமானதாய் இருக்கவேண்டும். அதையும் நான் கவிதையில் சொல்லியிருக்கிறேன்.

கோபப்படுபவன் பிச்சை எடுப்பானா? பிச்சை எடுப்பதால் கோபம் அவனுக்கு வரவே இல்லை. ஆனால் அவனைப் பார்த்தால் எனக்குக் கோபம் வருகிறது. என் கோபம் அவனை மிதித்தால் அது அநாகரிகம், அவனுக்கு வேலை தருகிறேன் என்று முன்வந்தால் அது நாகரிகம். இந்த இரண்டுமே கோபத்தின் விளைவுகள்தான் என்றாலும் என் கவிதை நாகரிகத்தையே பேசுகிறது என்பதை ஆழ்ந்து வாசிப்போர் அறிந்துகொள்வர்.

அன்புடன் புகாரி

Anonymous said...

//கோபம் வந்தவன்தான்
நேர்மையை நிரூபிக்கிறான்
கோபம் வந்தவன்தான்
போட்டியில் வெல்கிறான்
கோபம் வந்தவன்தான்
சுயமறியாதை உயர்த்துகிறான்
கோபம் வந்தவன்தான்
சுதந்திரக்கொடி ஏற்றுகிறான்//

இதயத்தால் நிறம் மாறாத கோபம் எதுவும் நிலைத்ததில்லை அல்லவா?

இதையும் சரித்திரம்தான் நமக்கு சொல்லித்தருகிறது.

அன்புடன் புகாரி said...

நல்ல ஒரு விசயத்தை முன்வைத்திருக்கிறீர்கள் நவன்.

கோபம் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் பலர்.

நான் கூறும் கோபங்களையெல்லாம் ஆழ்ந்து வாசித்தால், அவை எப்படியானவை என்று புரியும்.

சட்டுச்சட்டென்று வந்து மறையும் சினம் கோபம் அல்ல. அதை முன்கோபம் என்று சொல்வர். அவை வெறும் உணர்வுகளின் அடிப்படையில் கொதிப்பவை.

உண்மையான கோபம் என்பது உணர்வுகளையும் அறிவையும் நீடித்த வாழ்வையும் கொண்டது.

ஒருவனின்பின் கோபம் இருந்தால்தான் அது அவனை இயக்கிக்கொண்டே இருக்கும். அவன் எடுத்ததை முடிக்கும்முன் அந்தக் கோபம் குறையும் என்றாலே அந்தக் கோபம் நிறமிழந்த கோபம். அது போலிக்கோபம் ஆகிவிடுகிறது.

கோபம் பற்றி நிறைய சிந்திக்கலாம், சிந்திக்கும்போது புரியும் கோபம் என்ற வயலில் வளரும் களைகள். அந்தக் களைகளை நான் கோபம் என்று ஏற்பதில்லை, பிடுங்கே வெளியே எறிந்துவிட வேண்டும் என்று கோபம் படுவேன்.

சிலர் முன்கோபப்படுவார்கள். கொஞ்ச நேரம் ஆனதும், அட ஏன் கோபப்பட்டேன் என்று தங்கள் மீதே கோபப்படுவார்கள். இனி முன்கோபம் கொள்ளமாட்டேன் என்று உறுதியெடுப்பார்கள்.

கோபம் கொள்ளவேண்டுமா வேண்டாமா?

அன்புடன் புகாரி

புதுகைத் தென்றல் said...

அளவான கோபம் அவசியம் தான்.

நல்லா சொல்லியிருக்கீங்க....

Saboor Adam said...

கோபம் கொள்ளவேண்டுமா வேண்டாமா?

என்னைப் பொருத்தமட்டில் கோபம் என்பதும் ஒரு அழகான உணர்ச்சியின் வெளிப்பாடுதான், முன் கோபம் அதிகமாக இருப்பவர்கள் கூடிய இரக்க மனப்பான்மையை கொண்டிருப்பார்கள். இதயச்சுத்தியோடு செயற்படுவார்கள், மனதில் நயவஞ்ஞகம் வைத்திருக்க மாட்டார்கள். இதயம் திருந்து பேசும் போதுதான் உண்ர்சிகள் அதிகமாக் வெளியாகும். ஆகவே கோபம் கொள்வதை ஒரு உணர்ச்சின் வடிவம் என்றுதான் நோக்க வேண்டுமே தவிர, மாறாக ஒரு கேட்ட நடத்தையாக கணிப்பிடக் கூடாது என்பது என் கருத்து :)
நாம் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது. நாம் விரும்பும் வகையில் மற்றவர்கள் எம்மை அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் எம்மை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.

நன்றி
என்றும் அன்புடன்
சபூர் ஆதம்

V Pichumani (Madumitha) said...

நான் கூடபடுபவன்தான்
விழைவு என்ன நமது உடல் நலத்தை அடுத்தவர்கள் மனதை புண்படுத்தியது தான்
மிச்சம் வேறு என்ன நடந்து விடப்போகிறது.
உலகத்தில் எதையும் நம்மால் மாற்ற வியலாது. நமக்குள் நாமே முரண்பட்டு
கிடக்கிறோம் .அல்லவா. நம்மை திருத்தவே நம்மால் முடியாது போது ஏன்
மனைவி பிள்ளை உற்றார் உறவினர் . தொழிலாளி மற்றவர்களை முயற்ச்சித்து
தோல்விகண்டு கோப்பட வேண்டும். இப்படி இருக்க வேண்டுமென்று
விரும்புவதுதான் நம்மால் முடியும் நடப்பது என்பது இயற்கையின் கையில்
உள்ளது.

அன்புடன் புகாரி said...

அன்பின் பிச்சுமணி,
நம் கோபம் பண்பட்டதாக இருக்க வேண்டும். மிகுந்த நாகரிகத்தோடு அது வெளிப்பட வேண்டும். வெளிப்படாமல் மௌனமாய் இருக்கும் கோபம் நிறையவே சாதிக்கிறது. நீண்டநாள் இருக்கிறது. வெற்றியில்தான் தணிகிறது.

கோபப்பட்டவர்களெல்லாம் சமுதாயத்தை மாற்றிவிடுவதில்லை. ஆனால் சமுதாயத்தை மாற்றியவர்கள் எல்லோரும் கோபப்பட்டே மாற்றியிருக்கிறார்கள். என்ன ஒரு பெரிய வித்தியாசம் என்றால் நெருப்பை முறையாகப்பயன்படுத்தினால் எப்படி பல ஆக்கக் காரியங்களுக்குப் பயன்படுகிறதோ அப்படி. அதுவல்லாமல் குடிசைக்குத் தீவைக்கும் கோபம் கோபமா? அது வெட்கப்படவேண்டிய கேவலம். அதையெல்லாம் நான் கோபத்தின் போலிகள் என்று அழைக்கிறேன்

அன்புடன் புகாரி

Rasool said...

புகாரி அண்ணன் கோபத்தைபற்றி நீங்கள் கூறியது அருமை

அதே கோபத்தைபற்றி லேனா தமிழ்வாணப் குமுதத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் இருந்துவிடுவான் ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒருநிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான்.

உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படிதான் மகிழ்ச்சியான நிமிடங்களை மிகவும் விரும்பும் மைதன் கோபமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவதே இல்லை.கோபமான உன்ர்ச்சியும் அப்படிதான்.ஆம் ! எல்லாருடைய உண்மையான் கோபமும் ஒரு நிமிடம் தான்.

" என்னடி நெனச்சிக்கிட்டிருக்க உன் மனசிலே? பெரிய மகாராணின்னு நினைப்பா?" என்று ஒரு கணவர் ஆரம்பிக்கிறார் என்றால் பொங்குகிற பாலில் தண்ணீர் தெளித்து அதை அடக்குகிற கதையாய் " அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க தயவு செய்து கோபப்படாதீங்க" சூட்டைக் குறைக்கிற வார்தைகளை தெளித்தால் கணவன் அடங்கிய பாலாகி விடுவான்.

ஒரே நேரத்தில் கணவன் ம்னைவி இருவருமே கோபப்படவே கூடாது. அந்த நிமிடம் அப்படியே விட்டுவிடவேண்டும்." எவ்வளவு வேண்டுமானால்ம் கத்து.நான் ஒன்றும் பேசப்போவதில்லை.நீ அடங்குவேல்ல ! அப்ப வச்சுக்கறேன் உனக்கு" என்று ஒரு கணவன் அந்த நிமிடம் அடங்குவானேயானால் அவன் புத்திசாலி.

இருவரும் ஒரே காலகட்டத்தில் கோபப்படும்போதுதான் வார்தைகள் தடிக்கின்றன.கைகள் நீளுகின்றன.ஏன் இன்னும்கூட விபரீதமாகவெல்லாம் ஏதோ நிகழ்ந்துவிடுகின்றன்.

ஒருவர் சூடேறுவதும் சூடு இறங்குவதும் ஒரு நிமிடத்தில்தான்.

" கோபம்வரும்போது மனதை திசைதிருப்பி ஒன்று, இரண்டு,மூன்று என்று முடிந்தவரை எண்ணுங்கள் உங்களுக்கே நம் கோபம் அடங்கிவிட்டது என்று தோன்றும்வரை எண்ணுங்கள் " என்று உளவியல் நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.இப்படி எண்ணிப்பார்தால் அறுபதிற்க்கு மேல் உங்களால் எண்ண முடியாது.ஆமாம் உங்களது கோப உணர்ச்சியெல்லாம் ஒரு நிமிடம் தான்.

நம்மீது பாய்ந்து வருகிறவரின் கோபத்தை சாரி என்கிற ஒரு வார்த்தை பாதியாக்குகிறது பதிலாக சொல்லப்படும் எரிச்சலூட்டுகிற சில வார்த்தைகளோ அவர் கோபத்தை பல மடங்காக்கிறது.கோப உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு எந்த நியாயமும் புரிவதில்லை.கோப உணர்ச்சியிலிருந்து வெளிக்கொனர்ந்த பிறகு எடுத்து சொன்னால்தான் தலைக்குள் ஏறுகிறது.

உங்களுக்கு கோபம் வந்தாலும் சரி,பிறர் கோபத்திற்கு ஆளானாலும் சரி அந்த ஒரு நிமிடத்தை சரிவர பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் நிச்சயம் நினைத்ததை சாதிப்பீர்கள் ! .

ஆக கோபம் இறைவன் தந்த வரம் தான் ஆனால் அதை பயன்படுத்திக் கொள்பவனுக்குதான் அது வரம்,அந்த வரம் கோபப்படுபவனிற்க்கும் கிடைக்கலாம் அல்லது கோபத்திற்க்கு ஆளாகுபவனிற்க்கும் கிடைக்கலாம் எவன் கோபம் வரும்போது பொருமையாக இருக்கிறானோ அவனுக்குதான் கோபம் இறைவன் தந்த வரம்,

அன்புடன் ரசூல்.

அன்புடன் புகாரி said...

அன்பின் ரசூல்,

லெணா முன்கோபத்தைப் பற்றி வெகு அருமையாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் கோபம் என்பது அதுவல்ல.

முன்கோபம் சில நிமிடங்களில், அல்லது சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில் தீர்ந்துவிடும். உண்மையான கோபம் என்பது அப்படியல்ல.

அதற்கு உதாரணங்களாகத்தான்

சித்தார்த்தர் கோபப்பட்டார்
அன்பு வளர்த்தார்
காந்தி கோபப்பட்டார்
சுதந்திரம் பெற்றுத்தந்தார்
பாரதி கோபப்பட்டார்
புரட்சிக் கவிதை எழுதினார்

இப்படி எழுதினேன். இவர்களுடையது எதுவுமே முன்கோபம் அல்ல. சீக்கிரத்தில் அணைந்துபோகும் நெருப்பு அல்ல. அதோடு தனிமனிதனை அல்லது சமுதாயத்தை அல்லது உலகத்தைச் சீர்கெடுக்கும் கோபப் போலி அல்லது மூர்க்கச் சினம்.

சினம் வேறு கோபம் வேறு. நான் நிறைய விளக்கங்கள் கொடுத்து கவிதையை மிக நீண்டதாக ஆக்கவிரும்பவில்லை. ஆனால் தேவையான இடங்களில் நல்ல உதாரணங்களைக் கொடுத்து நான் எதைக் கோபம் என்கிறேன் என்பதைப் புரியவைத்திருக்கிறேன்.

அன்புடன் புகாரி

Hayah said...

கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட இதயத்தின் உஷ்ணக்காற்று……..

கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..

கோபம் மட்டுமல்ல எல்லா உணர்ச்சிகளுக்கும் அததற்குரிய நேரத்தில் இடத்தில் வரத்தான் வேண்டும்.

அன்புடன் புகாரி said...

கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..

கோபம் மட்டுமல்ல எல்லா உணர்ச்சிகளுக்கும் அததற்குரிய நேரத்தில் இடத்தில் வரத்தான் வேண்டும்.


கோபம் மட்டுமல்ல மனிதனின் எல்லா உணர்வுகளுமே நீ இப்ப வராதே நீ இப்ப வா என்று செயற்கையாய் தடுக்கவோ அழைக்கவோ முடியாது.

ஆனால் அறிவின் பயனாய், இந்த உணர்வுகளை எல்லாம் முறைப்படுத்தலாம் நெறிப்படுத்தலாம். அதையே நான் கூறுகிறேன். கோபம் கொள்ளும்போது அளவற்ற நாகரிகம் வேண்டும் என்று. அளவற்ற நாகரியம் கோபத்தை மட்டுமல்ல எல்லா உணர்வுகளையுமே நெறிப்படுத்தும்.

நடுவீதியில் நின்று காதலர்கள் கட்டிப்பிடித்து முத்தமிடாமல் வைத்திருப்பது அந்த நாகரிகம்தானே?

நாலுபேர் மத்தியில் மனிதன் நிர்வாணமாய் நில்லாமல் இருப்பதே நாகரிகம்தானே?

அதையே கோபத்திற்குச் செய்தால் போதும்.

என் கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை கையில் கிடைப்பதை எடுத்து எறிந்துவிடுவேன் என்று எவன் சொல்கிறானோ அவனிடம் நாகரிகம் இருக்கிறதா?

ஆகவே என் கவிதை இப்படிச் சொல்கிறது:

கோபத்தை
வெளிக்காட்டுவதில்
அளவற்ற
நாகரிகம் வேண்டும்
ஆனால்
கோபமற்ற பிணமாய்
ஒருநாளும்
ஆகிவிடக்கூடாது

ஒரு மனைவியின் அல்லது காதலியின் கோபத்தை வெளிக்காட்ட ஓர் அடர்த்தியான மௌனம் போதுமல்லவா? இடத்திற்கும் நிலைக்கும் ஏற்ப கோபம் நாகரிகமாக வெளிப்படவேண்டும்.

அன்புடன் புகாரி

Prabu Kumaran said...

கோபம் பற்றிய அருமையான கவிதை மற்றும் கருத்தாடல். எப்பொதெல்லாம் கோபம் தேவை, எப்போதெல்லாம் தேவையில்லை என சிந்திக்க வைக்கிறது. தேவையான கோபமே நாகரீகத்தையும், ஒழுக்கத்தையும் கொண்டு வரும்.
-த.பிரபு குமரன்

சுரேகா.. said...

நல்லா சொல்லியிருக்கீங்க..

அதுவும் அன்புடன். உங்க பாணியில்

அட...
என்ன ஆச்சர்யம்..

இதைப்பாருங்க..!


http://surekaa.blogspot.com/2008/02/blog-post_26.html