8. சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலாசொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

தலைவி சொல்லிவிட்டாள் நிலாவே நாங்கள் ஏலக்காய் வாசனையாய் வாழக்காய் என்றும் ஜாதிக்காய் பெட்டகத்தின் வாசனையாய் எங்கள் வாழ்வில் இன்பம் கனியக்காய் என்றும். நிலாவை இனி காயாதே என்று சொல்லாமல் வந்து எங்களிடம் காய் அதனால் எங்களை வாழவைப்பாய் என்று சொல்லிவிட்டாள். இனி தலைவன் என்ன சொல்வது?

தலைவன் ஒரு ரகசியத்தை ரகசியமாய் சொன்னதைக் கேளாத வான் நிலாவுக்குச் சொல்லுகிறான். நிலாவே, தலைவி சொன்னதெல்லாம் உனக்கு விளங்கியதா இல்லையா? ஒழுங்காய் விழங்கிக்கொள். உனக்கு எப்பவும் சொல்வதைக் கேட்கும் பழக்கம் கிடையாது. எதையாவது குண்டக்க மண்டக்க செய்துகொண்டிருப்பாய். தூதுபோ என்றால் முகில் படுதாக்குள் பதுங்கிவிடுவாய். காயாதே என்றால் உடனே வந்து காயோ காயென்று காய்வாய். காரணம் என் மீதுள்ள ஊடல் என்று நானறிவேன்.

ஆனால் நீ புரிந்துகொள் நிலாவே, நீ தலைவியைக் காய்ந்தால்தான் அவள் என்னைத் தேடுவாள். எனக்கு நீ காயவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நான் எப்போதும் காய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆகவே என்னைக் காய்வதை விட்டுவிட்டு நீ தலைவியையே காய். அப்போதுதான் காதல் கனியும் காமம் சுவைக்கும் வாழ்க்கை வசமாகும். என்ன விளையாடுகிறாயா என்கிறாயா? உண்மையை உனக்குமட்டும் ஒரு கிசுகிசுப்பாய் உன் காதோடு சொல்கிறேன் கேள்.

தலைவியைக் காதலிக்கும்முன் நான் உன்னைத்தானே காதலித்தேன். அதில் மாற்றமில்லை என்றென்றும் நீ என்னுயிர்தான். என் செல்லம்தான். நீ தூரத்து நிலா என்பதால் உன்னை அருகில் கொண்டுவரும் வரமாகத்தான் இந்தப் பக்கத்து நிலா. உன்னைக் கிள்ளி எடுத்து வைத்தச் சின்ன நிலாதான் இவள். இந்தப் பக்கத்து நிலாவோடு நான் சொர்க்கம் காண்பது நீ காய்வதால்தான். அதாவது தலைவியிடம் நான் காணும் சுகமெல்லாம் நீ காய்வதால் அவள் கொள்ளும் காதலால்தான். அதாவது உன் காதலைத்தான். அவளைத் தூண்டிவிட்டு அவளோடு கூடும் போது நான் கொள்கிறேன். நீதானே என் உயிர் என்று நிலாவிடம் தலைவன் கதைவிடுகிறான்.

நிலா அவன் வார்த்தைகளில் மயங்கி ஓ அப்படியா கதை? நீ என்னைத்தான் காதலிக்கிறாயா என்னோடு கொஞ்சிக் குலவுதாகத்தான் நீ அவளுடன் இருக்கிறாயா என்று புரிந்துகொண்டு நாள் தவறாமல் தலைவியைக் காய நிலா அக்கறையாய் வந்துவிடும் என்று நினைப்பு தலைவனுக்கு! லஞ்ச லாவண்யங்களில் உச்சிக்கே போனவர்களாயிற்றே ஆண்கள். ஏமாற்றும் கலையைச் சொல்லித்தரவேண்டுமா? ஊடலை உடைக்க இவர்கள் சொல்லும் பொய் யுகம் தாங்குமா?

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

24.விளங்காய்
25. தூதுவழங்காய்

மேலும் நாலு காய்கள் பற்றி அடுத்த இடுகையில் நாம் காணும்வரை நீங்கள் காயாதிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள் கண்ணதாசனும் வண்ணநிலாவும்!

Comments

சாதிக் அலி said…
இத்தனைக் காய்களை கவியரசு எழுதியதில் ஒரு இன்பம்
அதை பாடியதைக் கேட்க அந்த இசையில் ஒரு இன்பம்
அதைக் காட்சியாய் பார்த்ததில் கண்ணுக்கு ஒரு இன்பம்
அதை புஹாரி சார் விளக்கியதில் நம் அறிவுக்கு இன்பம்


அது சரி கிடக்கட்டும்.....


இத்தனைக் காய்களையும் போட்டு சாம்பார் வைத்தால்....
அது இன்பமோ இன்பம்....
சாந்தி said…
அருமை.. தூதுவிளங்காய் என ஒரு பழம் உண்டுதானே?..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்