10. கவிதைக்காய் சிலேடைக்காய் கண்ணதாசன் கொய்யாக்காய்


கோதை எனைக் காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா


அத்திக்காய் காய் காய் பாட்டின் கடைசி இரு வரிகளுக்கு வந்துவிட்டோம். இந்த இருவரிகளில் கண்ணதாசன் விருந்து வைப்பது இரு காய்களை. அதில் முதலாவது.

கொற்றவரைக்காய். கொத்தவரங்காய் என்று காய்கறிக்கடையில் கூடையில் குவித்துவைத்திருப்பார்களே அதுதான். பச்சைக் கொலுசுகளாய் அவை பளபளக்கும். கொற்றவரைக்காய் என்றால் கண்ணதாசன் முன்வைக்கும் பொருள் என்ன?

கொற்றவன் பெற்ற குலக்கொடியைக்
கல்விகற்க விட்டேனடா அடா
குற்றம் புரிந்தனையா இல்லையா
அதை மட்டும் உரைத்துவிடு


கொற்றவன் என்ற சொல் கேட்டதுமே என் மூளைக்குள் ஓடிவரும் ஞாபகம் இந்த வரிகள்தாம். இது பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன். அம்பிகாபதி அமராவதி காதல் நாடகத்தில் வரும் ஒரு பகுதி. குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதிக்குத் தமிழ் சொல்லித்தர வந்த அம்பிகாபதி அவளைக் காதலிக்கிறான். அதை அறிந்த மன்னனின் விசாரனைக் கூடம் எழுப்பும் கேள்வியே இது.

கொற்றவன் என்றால் அரசன். கொற்றவரைக் காய் என்றால் என் மன்னனைக் காய். பழந்தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவனை தன் அரசன் என்றே காண்பார்கள். என் ராசா என்று செல்லமாய்க் கொஞ்சுவார்களே அது இதன் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தக் காலப்பெண்போல கணவனைக் கடன்காரணாய்க் காண்பதில்லை :)

தலைவி சொல்கிறாள், நிலவே நீ என் தலைவனைக் காய். அவன் காதல் அதனால் பெருகட்டும். எங்கள் வாழ்வு இனிக்கட்டும். என் தலைவன் பொய்யுரைப்பதுபோல் நானொன்றும் காதல் உணர்வுகள் இல்லாமல் இல்லை. எனவே கோதை என்னைக் காயாதே. கோதை என்றால் பெண். இந்தக் கோதை காதல் வாதையில்தான் நாளெல்லாம் இருக்கிறாள். எனவே என் கொற்றவரைத்தான் நீ காயவேண்டும் என்கிறாள்.

தலைவனின் முகம் பொய்க்கோபத்தால் வாடுகிறது. இந்த ஊடலுக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் மனதைத் திருப்பிக்கொள்ளா கள்ளத்தனத்துடன்.

உடனே தலைவி அவன் தோள்களில் விழுகிறாள். இந்தப் பெண்களே ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கும் புத்திசாலிகள்தானே? அப்படியே கழுத்தை வளைக்கிறாள். மனமும் விழிகளும் கனிந்துருக வெண்ணிலவைப் பார்க்கிறாள். வெண்ணிலவே நீ எங்கள் இருவரையும் காயாதே என்று செல்லமாகச் சொல்லிச் சிணுங்குகிறாள்.

அத்தோடு அவள் நிற்கவில்லை அவள் காதல் உள்ளம் காதலை அடைந்த பூரிப்பில் இந்தக் காதலுக்குக் காரணமான நிலவைப்பார்த்து பரிதாபப்பட்டு, இப்படி தினம் தினம் தனிமையில் வந்து வானில் காய்கிறாயே பாவம் இப்படி நீ இனி தனிமையில் ஏங்காதே வெண்ணிலவே. உன் காதலன் ஆதவன் மடிசென்று சேரு என்று வெண்ணிலவுக்குப் பரிந்துரைக்கிறாள்.

இத்தோடு பாடல் முடிகிறது ஆனால் அது நம் இதயத்தில் என்றென்றும் தொடர்கிறது. காலத்தால் அழியாத இந்த கண்ணதாசப் பாடலுக்கு முடிவேது? காய் காய் என்று கவிதையாய்க் கனிந்தவன் நம் எல்லோரையும் கனியவைக்கிறான் அவன் மறைந்தபின்னும். கவிஞனுக்கு மறைவு உண்டா? இல்லவே இல்லை. கண்ணதாசன் வாழ்கிறான்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாழ்கிறான். நம் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் வாழ்கின்றான். காதல் என்ற சொல்லுக்கு கண்ணதாசன் என்று ஓர் அர்த்தம் உண்டென்று அகராதிகளைப் புதுப்பிக்க வேண்டும். இதோ அவன் கொட்டிக்குவித்த முப்பத்தியோரு காய்கள்.

01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
18. உருவங்காய்
19. பருவங்காய்
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்
30. கொற்றவரைக்காய்
31. தனிமையிலேங்காய்

இனி அவன் புகழ்பாட அவனை ஒட்டிப்பாட சில காய்கள் வருகின்றன கீழே:


கவிதைக்காய் சிலேடைக்காய் கண்ணதாசன் கொய்யாக்காய்
வேலங்காய் விழியிங்காய் தேடித் தோற்றேன் வெண்ணிலவே

நெஞ்சுருகாய் நினைத் தேங்காய் காலம் தந்த பிரிவுக்காய்
வெஞ்சருகாய் காய்க்காமல் வருவேன் நிலவே உன்னருகாய்

கள்ளிக்காய் கனவுக்காய் ஆசைகள் நெஞ்சில் சுண்டக்காய்
காதல்காய் வாழ்வல்லவோ கத்தரிக்காய் வெண்ணிலவே

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ