4. மாதுளங்காய் ஆனாலும் என்னுளம்காய் ஆகுமோ


9 காய்கள் முடிந்தபின் மேலும் இரண்டு கண்ணதாசக் காய்கள்

மாதுளங்காய் ஆனாலும் என்னுளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ


இப்போது தலைவியின் அந்தப்பக்கப் பாட்டுக்கு தலைவன் இந்தப் பக்கம் இருந்துகொண்டு எசப்பாட்டு பாடுகிறான். நிலவே, இவள் சொல்கிறாள் என்று என்மீது காய்ந்துவிடாதே! நான் அவளைவிட கொதிப்பில் இருக்கிறேன். அவள் அப்படித்தான் பழியை என்மீது தூக்கிப் போட்டுவிடுவாள். அவள் உள்ளம் காய். என்மீது கனியாத காய்.

தொழில் நிமித்தமாகவே நான் இங்கே வந்து இப்படித் துடித்துச் சாகிறேன். அவளென்னவோ நான் அவளைப் பிரிவதற்காகவே இப்படிப் புறப்பட்டுவந்துவிட்டதைப் போல் உன்னிடம் முறையிடுகிறாள். நான் அப்படிப்பட்டவன் அல்லன்.

மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)

மாது அவள் உள்ளம் காய்தான் - என் மீது கனிவின்றிச் சாடுகிறது. என்னை நெருப்பாய்ச் சுட்டெரிக்க உன்னைத் தூண்டிவிடுகிறாள். அவள் என் மீது மிகுந்த அன்பு உள்ளவள்தான். ஆனால் அவளது காதல் அவளை உண்டு இல்லை ஒரு கை பார்க்கிறது. அதனால் அவள் உள்ளம் காயாகிவிட்டது. அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா?

என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? அவளுக்கு முன்பே நீதானே என் காதலி. என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே. பாருங்கள் ஆண் இங்கே நிலாவை என்னைக் காயாதே அவளைப் போய் காய் என்று மூட்டிவிடவில்லை. என்னைக்காயாதே நீயும் என் உயிர்தானே என்னை அறிந்தவள் தானே என்று கூறுகிறான். அட எப்படிப்பார்த்தாலும் ஆண்கள் நல்லவர்களப்பா :)

01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்

என்று பதினோரு காய்கள் முடிந்துவிட்டன, இனி அடுத்த இரு வரிகளில் இன்னும் ஏழு காய்கள். அம்மாடியோவ் கண்ணதாசா, அப்படியே அசத்துகிறாயே கவியரசா!

Comments

ஹரன் said…
அன்பு புகாரி,

முதலில் இந்த இழைக்காக, உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.

கவியரசனிடம் மயங்கியவர்கள், மீண்டதாய் சரித்திரம் இல்லை. அவரது எளிமையான வார்த்தைகளில், வலிமையான அர்த்தங்களைக் கொண்டுள்ள திரையிலக்கியங்களை, நான் புரிந்துகொண்ட அளவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில், ஒரு வலைப்பூ தொடங்கி, முன்பே எழுதியிருந்த சில பாடல்களையும் இட்டேன். அதோடு சரி... தூங்கிக்கொண்டிருக்கிறது. இங்கு உங்களின் பார்வையில் மெய்மறந்தேன். தொடரவும்...முடிவின்றி.

ஆலங்காய்=ஆலம்+காய்; இது எனக்குப் புதிது. நான் ஆல்+அங்கு+காய் எனப் புரிந்திருந்தேன். புதிய, அழகிய, ஆழ்ந்த பார்வைக்கு என் நன்றி.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ