வேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன்
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!


வாலிபன் என்று ஆகிவிட்டால் நீங்கள் வலை விரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யாருக்கான வலை எப்படியான வலை என்பதெல்லாம் வலை விரித்தவர்களுக்கேகூட தெரிவதில்லை. ஊரெல்லாம் பெண்கள். பெண்கள் எல்லோரும் வெறும் கண்களோடு மட்டுமே அலைவதுபோல் தெரியும்.

கால்கள் எங்கே கைகள் எங்கே உடம்புதான் எங்கே என்று தெரியாது அவர்களுக்கு. வள்ளுவன் சொல்லும் உயிர் தின்னும் கண்கள் மட்டும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும். அதில் அகப்படாமல் தப்பிக்கும் வாலிபனுக்கு வாலிபன் என்று பெயரில்லை.

பெண்களைப் பூக்கள் என்பார்கள். ஆண்களைத்தான் வண்டுகள் என்பார்கள். ஆனால் இந்தக் கண்களைப் பார்த்தால் அந்த நியதி சற்றே மாறிப்போகும். கண்கள் இரண்டும் வண்டுகளாய் கனவுகளிலும் ரீங்கரித்துச் சுற்றிச் சுற்றி வரும். அவள் ஒருமுறைதான் பார்த்திருப்பாள் ஆனால் அது ஓராயிரம் முறை பார்த்ததைப்போல வாலிபன் கிறங்கிப்போவான். தூக்கம் கெட்டு பொடி விழுங்கிய ஓணானைப்போல ஆவான்.

பெண்ணின் ஒவ்வொரு கண்ணும் கூர்மையான வேலைப் போல் வந்து தாக்கும். வாலிபனின் சிந்தனையைத் தகர்க்கும். ஆமாம் வாலிபன் என்று ஆகிவிட்டாலே இந்தப் பெண்களிடமிருந்து தப்பிப்பது என்பது ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கிடமிருந்து தப்பிப்பதைவிட கடினமானது.

அவர்கள் வேல் பாய்ச்சும் விழிகளை எதிர்கொண்டே தீரவேண்டும். இப்ப்படியாய் பல வேல் பாய்ச்சும் விழியுடைய பெண்களைக் கண்டபின் ஒரு பெண்ணிடம் மட்டும் மனம் அப்படியே ஒட்டிக்கொண்டுவிடுவது ஆச்சரியம்தான். அதுதான் காதல்.

அந்தக் காதலில் அப்படியே தன்னை மறந்து கலந்துவிடுகிறான் அவன். அதைத்தான் வேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன் என்கிறான். பல பெண்களின் வேல் விழிகளைக் கண்டு தித்திப்பாய்க் காயப்பட்டு திசைதெரியாமல் அலைந்தவன் ஒருத்தியின் விழியில் மட்டும் ஒன்றிக் கலந்துவிட்டானாம்.

வேலூரைப் பார்த்துவிட்டு காதல் கன்னியின் விழியூரில் கலந்து சிக்கிக்கொண்டவன் அடுத்த கட்டமாக, பருவத்தின் மேன்மையை உணர்கிறான். அது படுத்தும் பாட்டில் வாழ்வைக் காண்கிறான். அது பாலூறுவதாக இனிமையாக இருக்கிறது.

பருவங்களிலெல்லாம் தாண்டிவரமுடியாமல் நம்மைச் சிக்க வைக்கும் பருவம் வாலிபப்பருவம்தானே? அந்தப் பருவத்தில் பசியில்லை உறக்கமில்லை. ஆனால் அந்தப் பருவம்தான் மிகவும் பிடித்திருக்கிறது.

இருக்காதா பின்னே காதலி கிடைத்துவிட்டால் இந்த உலகில் வேறென்ன வேண்டும்? பால் மட்டுமா ஊறும் உயிரும் ஊர்ந்து வேறு உலகத்தில் சுற்றித் திருயுமே. அப்படிப் பாலூரும் பருவம் தன் தாய் மடியில் பெற்ற இன்பத்தை மீண்டும் தருவதாக அமைவதுபோல சுகமாக இருக்கும்.

அப்படியே அதில் குடிபுகுந்து நிரந்தரம் ஆகிவிடுகிறான் வாலிபன். அதைவிட்டு விலகவோ அதை வெறுக்கவோ அவனால் அதன்பின் எப்போதும் இயலுவதே இல்லை. அதுவே அவனின் நிரந்திரப் பட்டினமாய் ஆகிவிடுகிறது.

இங்கே கண்ணதாசன் ஏன் பட்டினம் என்கிறார் இந்தப் பருவத்தை என்று நாம் கவனிக்க வேண்டும். பட்டினம் என்பது கிராமத்துக்காரர்களின் கனவு. ஒரு வாழ்க்கைத் தரத்துக்கான மேன்மை நிலை. காதலி கிடைத்து அவளுடன் பருவத்தைப் பாலூறக் காண்பதைவிட மேன்மை வேறேது. உலகின் மிக உயர்ந்த நகரத்தில் குடிபுகுவதைப்போல வாலிபன் மகிழ்கிறான்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதுவரை கதாநாயகன் பல ஊர்களில் குடியிருந்தாலும் அதையெல்லாம் நிரந்தரம் என்று அவன் நினைக்கவில்லை சொல்லவில்லை. இந்தக் காதலியோடு காதலில் கவிழ்ந்து உலகையையே வெற்றிகண்ட இந்த ஊரைத்தான் நிரந்தரமாக தான் தங்கும் இடமாக கூறுகிறான் கதாநாயகன். அதனாலேயே அதைப் பட்டினம் என்கிறான்.

”ஓ... அப்புறம்... அப்புறம்.... சொல்லு... சொல்லு...” என்று அவசரப்படுத்துகிறான் அந்தக் கிராமத்தான் கதாநாயகனிடம்.

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ