உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்


உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

அடடா இங்கே கண்ணதாசன் தன் பாடலை அறிவியல் தளத்துக்கு அப்படியே எடுத்துச் செல்கிறார் பாருங்கள். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்கிறான் அந்தப் புதியவன். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்றால் என்ன பொருள்? ஆணிடம் விந்தாகவும் பெண்ணிடம் கருமுட்டையாகவும் நான் ஆரம்பத்தில் வாழ்ந்திருந்தேன் என்கிறான்.

அதோடு நின்றானா? உறவூரில் மிதந்திருந்தேன் என்கிறான் அடுத்த வரியில். இங்கேதான் காதல் வந்து தன் விளையாட்டின் முக்கியமான காரியத்தைச் செய்கிறது. ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் தனித்தனியாகத்தான் இருந்தேன், ஆனால் காதல் என்ற உறவினால் நான் மிதக்கத் தொடங்கினேன். அப்படியே மிதந்து மிதந்து கருவூரில் குடி புகுந்தேன் என்கிறான். அதாவது தாயின் கருவறையில் நான் கருவாக உருவாகிவிட்டேன் என்கிறான். ஊர் என்ற சொல்லை வைத்து கண்ணதாசன் ஆடும் இந்த விளையாட்டு

சுவாரசியமானதல்லவா?

சரி உடல் என்ற ஊரிலிருந்து புறப்பட்டு உறவு என்ற ஊரில் மிதந்து கரு என்ற ஊரும் வந்தாகிவிட்டது. இனி அடுத்தது எந்த ஊர்? கருவூரிலிருந்து மண்ணூரில் விழுந்துவிட்டேன் என்கிறான் அந்த வாலிபன். கரு என்பது பத்துமாதம் வளர்ந்து பின் இந்த மண்ணில் அதாவது இந்த உலகில் வந்து குழந்தையாய்ப்

பிறந்துவிடுகிறதல்லவா. அதைத்தான் சொல்கிறான் அவன். எத்தனை இலக்கிய முத்துக்கள் இந்த கண்ணதாசன் சிலேடைப் பாடல்களில்?

ஓ அப்படியா மிகுந்த சுவாரசியமாய் இருக்கிறதே உன் கதை. சபாஷ்! சரி சரி மீதக் கதையையும் சொல். இன்னும் எத்தனை ஊர்களில் சுற்றித் திருந்தாய் என்கிறான் அந்த ஊர்க்காரன் கதை கேட்கும் ஆவலில்.

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!

வயிற்றுக்குள் வைத்துக் கனவுக்குள் மிதந்தவள் பிள்ளையாய்ப் பெற்றெடுத்ததும் என் தாய் என்னைக் கண்ணுக்குக் கண்ணாக வைத்திருந்தாள் என்பதை எப்படி அழகாகச் சொல்கிறான் அவன். கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் - தன் தாயின் கண்ணுக்குள்ளேயே மணியைப்போல அவன் தவழ்ந்த நாட்களைவிட இனிமையான நாட்கள் வேறேதும் இருக்க முடியுமா?

அந்தத் தாயின் கையணைவில் அவன் வளர்கிறான். கையூரில் வளர்ந்திருந்தேன். மக்களே இது மீளாது மக்களே. இந்த உலக வாழ்வின் உண்மையான இன்பம் இதுதான். ஒரு தாயின் கைகளுக்குள் இருந்து அவளையே உலகமாய்க் கொண்டு வளர்வது. அவள் கீழே இறக்கிவிட்டதும் நம் இன்பங்களெல்லாம் எங்கோ ஓடிவிடுகின்றன. கங்காரு பை இருப்பதால் தன் குட்டியைச் சுமக்கிறது. ஆனால் நம் தமிழ்ப்பெண்கள் கை விட்டுக் கீழே இறக்கிவிடும் மனம் இல்லாமல் பாசத்தோடு கொஞ்சிக் கொஞ்சி சுமக்கிறார்கள்.

பிறகென்ன குழந்தை வளர்ந்து நடக்கத் தொடங்குகிறது. காலூரில் நடந்து வந்தேன் என்கிறான் இதை. அதாவது வெறுமனே காற்றை உதைத்துக்கொண்டிருந்த கால்கள் இப்போது நடக்கும் நிலைக்கு வளர்ந்து விடுகின்றன. அப்படியே நடந்து நடந்து வளர்ந்து வளர்ந்து காளையாக ஆகிவிடுகிறான். அதாவது வாலிபனாக ஆகிவிடுகிறான். அதைத்தான் கவிஞர் காளையூர் வந்துவிட்டேன் என்று இலக்கிய நயத்தோடும் ஊர் என்ற சிலேடையை விடாமலும் சொல்கிறார். ம்ம்ம்... சரி அப்புறம்?

Comments

ஆயிஷா said…
இப்பத்தான் இந்தப் பாட்டின் அர்த்தமே எனக்கு புரியுது. சுவாரஸ்யமாக உள்ளது. கண்ணதாசனை விட சிறந்த கவிஞனும் இருக்க முடியாது. ஆசானை விட சிறந்த விமர்சகரும் இருக்க முடியாது. ம்ம்ம்ம்......அப்புறம்????
அன்புடன் ஆயிஷா
சக்தி said…
அன்பின் நண்பரே புகாரி,

கண்ணதாசனின் பாடலை அவரே வ்யந்து விடுமளவிற்கு அழகாக விமர்ச்சிக்கும்
ஆற்றல் தங்களிடம் நிரம்பி வழிகிறது.

அருமையாக இருக்கிறது தொடருங்கள்.

அன்புடன்
சக்தி
நா. ஆனந்தகுமார் said…
அற்புதம் ஆசான் தொடருங்கள்!
எனது அருமை வரிகள் !
கீழூரில் வாழ்வதற்கு கிளிமொழியாள் இல்லையடா!
மேலூர் போவதற்கும் வேளை வர வில்லையடா!
அன்புடன், ஆனந்த குமார்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ