நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு மிக முக்கியமானதுதான்.
இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்

ஆனால் காதல் என்று வந்துவிட்டால்
நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது
ஏனெனில் காதலின் நெருக்கம் மனம் + உடல்
இரண்டையும் ஆட்சி செய்கிறது
தனக்கே என்பதில் அதிக சுயநலமானது

கல்யாணம் என்று வந்துவிட்டால்
காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது
என்பது நடைமுறை உண்மை
உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும்
காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது
உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து
அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது
ஆனாலும் உண்மையான வேர்க்காதல்
உள்ளே ஒளிந்துகொண்டுதான் இருக்கும்

குழந்தைகள் என்று வந்துவிட்டால்
ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்
ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும்
அதுதான் பெண்ணின் படைப்பு
பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால்
இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம்
இல்லாமல் அழிந்துபோகும்


*

நட்பு முதலாக

ஆண் பெண் நட்பு
24-7 திறந்துகிடக்கும் சொர்க்க வாசல்
நட்பு நாடும் ஈர்ப்பில்
இருவருமே இமயங்கள்
காதலென மாறின் நட்பு
ஒருபடியேனும் கீழிறங்கும்

மனம் + உடல் என்ற
இரு பெரும் வாழ்வுச் சக்திகளை
தனதாட்சிக்குள் கவர்ந்து
தனக்கே தனக்கென்பதில்
சுயநலம் மிகுத்து
பேருறுதிகொள்வது காதல்

கல்யாணம் என்றாகிவிட்டாலோ
சன்னமாய்ச் சில படிகள்
கீழிறகிப் போய்விடுவதே
காதல்

உரிமைகள் பொறுப்புகள்
பழகியபின் வரும்
உடல் ஈர்ப்பு அலட்சியங்கள்
தொடரும் மனவெளி வெறுமைகள்
அதிகார உயர்வால் காதல் காயங்கள்
என்று துரிதகதியில் நீர்த்துப்போனாலும்
உண்மை வேர்க்காதல்
உள்ளின் உள்ளே ஒளிந்தே கிடக்கும்

குழந்தைகளென்று
உறவுவான் விரிந்துவிட்டால்
ஆண் காதல் பெண்ணிடம்
அப்படியே அப்பிக்கிடந்தும்
பெண் காதல் பிள்ளைகளுக்கென்று
புலம்பெயர்வதைத் தடுப்பதற்கில்லை

அவ்வண்ணமாய்ப் பெண்
படைக்கப்படவில்லையெனில்
இனவிருத்தி உயிர்ப்பெருக்கம்
என்பவையாவும் கழிந்து
பிரபஞ்சம் உடைந்தழியும்

ஆண்பெண் நட்பு - காதல்

ஆண்பெண் நட்பு - காதல்

உண்மையான நட்புக்கும் உண்மையான காதலுக்கும்
இடையில் எந்த வித்தியாசமும் இல்லை
ஒன்றே ஒன்றைத்தவிர...

உடல் காரணமாக வரும் சலனங்களையும் உணர்வுகளையும்
வரவிடாமல் தடுத்துக்கொள்ளப் பார்க்கும் நட்பு
தங்களை மீறிவரும் உணர்வுகளையும் சலனங்களையும்
உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு நாகரிகமாக பழகும் நட்பு

காதல் அப்படிச் செய்யாமல் அப்படியான
உணர்வுகளைத் தூண்டிவிட்டுக்கொள்ளும்
அதுதானே காதலுக்கான தீனி

அதோடு நட்பிலும் காதலிலும் தனக்கே நெருக்கம் வேண்டும்
என்ற சுயநலம் இருந்தாலும் காதலில் அது பலமடங்கு அதிகம்

*

திருமணத்திற்குப்பின் ஆண் பெண் நட்பு திருமணத்திற்கு முன்பு இருந்ததுபோல் இருக்க முடியாது.

அதாவது முன்பு தொட்டுப் பேசியவர்கள் இப்போது தொடுவதில்லை
முன்பு கட்டியணைத்தவர்கள் இப்போது கட்டியணைக்க மாட்டார்கள்
முன்பு தனியறையில் ஒன்றாக தங்கியவர்கள் இப்போது மாட்டார்கள்

திருமணம் அல்லது காதல் ஆண்பெண் தொட்டுப்பழகும் நட்பை பிரித்துவிடுகிறது.

அதாவது ஆண் பெண் நட்பு திருமணம் அல்லது காதலுக்குப்பின்
வேறு ஒரு புதிய நிலையை அடைந்துவிடுகிறது. மனதோடு மட்டும்
அல்லது சந்திக்கும்போது உரையாடுவது அல்லது நல்லது கெட்டதற்கு
சில நண்பர்களை மட்டும் அழைப்பது என்பதோடு நின்றுவிடுகிறது.

என்றால், ஆண்-பெண் இடையிலான காதல் என்றால் என்ன நட்பு என்றால் என்ன?

தனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை
ஒத்திகை பார்த்துக்கொள்வதா ஆண் பெண் நட்பு?

தனக்கென ஒரு காதல் அல்லது கல்யாணம் அமையும்வரை
தேடுதல் நடத்திக்கொள்வதா ஆண் பெண் நட்பு?

அப்படித்தான் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில்
நடக்கின்றன. அதுதான் இன்று ஊருக்கும் வந்துவிட்டது

*

நட்பு காதல் கணவன்

நட்பைவிட காதல் ஒருபடியேனும் அதிக நெருக்கம் தரும். ஏதோ புரிந்துணர்வில் இடறல் இருப்பதுபோல் தெரிகிறது. காதலன் வந்து சமாதானம் சொல்லும்போது அந்த ஊடல் வெடிப்பில் அணைப்பூ பூக்குமே அது வரம்.

காதல் கல்யாணத்தில் முடிந்தபின் அன்பின் அபரிமிதமான எதிர்பார்ப்பால் மீண்டும் விரிசல் வருவது சகஜம். ஆனால் ஒரு நாள் சூழல் சரியாக அமையும்போது, காதலனைப்போலவே கணவனின் அக்கறையும் பாசம் அன்பும் வெளிப்படும்.

உரிமை என்று ஆனதும் பலரும் மெத்தனமாய் இருந்துவிடுவது இயல்பு. கிணற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும். கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்.