பாசமென்ற பெயரால்

உண்மையின்
பொன்னிதழ்களைப்
பொசுக்கினாலும்

நியாயத்தின்
பவளக்கிளைகளை
வெட்டிச்சாய்த்தாலும்

நீதியின்
வைரவேர்களைக்
கருக்கினாலும்

நெஞ்சே
உன்
பாச நெருப்புதான்
பரிசுத்தமானதோ

அறம் புதைக்கும்
பாசம்
பாசமல்ல
வேசம்
வளைந்தால்
உடையவே உடையாத
ஆச்சரியம்
வளையாவிட்டால்
நொறுங்கியே போகும்
வினோதம்
உறவு

பிப்ரவரி 2014
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் தொடங்கிய முகநூல் பயன்பாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிவேகத்துடன் பத்து கோடியைத் தொடப் போகிறதாம். தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், முகநூல் பயனாளர் எண்ணிக்கை அதிகமாம். 

செல்லுக்குள்

வரும் சொல்லுக்குள்
முகம் புதைத்து
கண்ணுக்குள் மலரும்
சொல்லினைச் சுவைக்கக்
கண்ணற்ற நிலையில்
முடமாகிப் போகுமோ
இந்திய இளமை!

1

நீ
செல்லுமிடமெல்லாம்
தன் கோடிகோடிக் கரு விழிகளால்
உன்னையே
அடங்காக் காதலோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது

வேறெவரையும்விட
அது உன்னை
அதி தீவிரமாய்க் காதலிக்கிறது

எரிபொருள் தேடும்
நெருப்பினும் தாகமாய்
வாசனைகள் ஏற்றும்
காற்றினும் ஆவலாய்
ஏந்திக்கொள்ள ஏங்கும்
நிலத்தினும் பாசமாய்
வழிந்தோடத் துடிக்கும்
நீரினும் தவிப்பாய்
பரந்துவிரியச் சுழலும்
வானினும் மோகமாய்

உன்னைக் காதலிக்கிறது
2

மரணத்திற்கு
உயிர்களிடம் பசியில்லை
அடங்காக் காதலே உண்டு

உயிர்கள் மரணத்தின்
தீனியாவதில்லை
மரணத்தோடு ஐக்கியமாகி
நிகரில்லா நிம்மதி பெறுகின்றன

புலி
உன் உடலை
உண்டு செரிக்கும்
ஏனெனில்
அதன் தேவை சதை

மரணமோ
உயிர்களைத்
தன்னில் தழுவி
தனதாக்கி அணைத்துக்கொள்ளும்
உடல்களை நிராகரிக்கும்

புலி
கவ்விக் குதறும்போது
நீ வேதனைப்படுவாய்

மரணமோ
தழுவ வரும்வரைதான்
பயத்தின் நடுக்கம்
தழுவியபின் சுகம் சுகம்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
மறப்பதற்காக
என்று
சிற்சில பக்கங்களைத்
துரித கதியில்
கிழித்தெறிகிறேன்

கிழித்தவையே 
விட்டும் தொட்டும்
நினைவிலாட
வண்ணமிகு பக்கங்களின்
சாயங்களும் சரிவதாகத்
திடுக்கிடுகிறேன்