புலவர்கள் பொய் மூட்டைகளா?

பொய்யிலே பிறந்து
பொய்யில வளர்ந்த
புலவர் பெருமானே
என்றால்
புலவர்கள் கவிஞர்கள் எல்லாம்
பொய் மூட்டைகளா

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்

உலகே மாயம் வாழ்வே மாயம்
என்றான் இன்னொரு சித்தன்

ஆக
புலவர் பெருமான் மட்டுமல்ல
உலகின் ஒவ்வோர் உயிரும்
காயம் என்ற
பொய்யிலே பிறந்து
உலகம் என்ற
பொய்யிலே வளர்ந்தவைதானே

4

தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று இறைவன்
அடுத்தது மரணம்

இறைவனும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
26

அடி பெண்ணே
உன்னை என் விழிகளால்
தொட்டுத் தொட்டு வாசித்தபோது
நீ அள்ளி இறைத்த நயாகராச் சாரல்
என் கண்களின் ஞாபகங்களில்
அப்படியே ஒட்டிக்கிடக்கிறது

அடடா
என்ன ஒரு நாணம்

மேப்பிள்மரத் தேன்
துளித் துளியாய்ச் சொட்டச் சொட்ட
உன் கன்னங்களில்
கனடாவின்
வடதுருவ ஒளிக்கதிர் வீச்சுகள்
வண்ணங்களை வாரியிறைக்க
என் கண் கடலுக்குள்
உன் காதலைச் செழுத்தியது
உன் நங்கூர நாணம்

என்னைக் கண்டு வெடித்த உன்
தோரண வெட்கமும்
பூரண ஆனந்தமும்
என்னைக் கிழித்தெடுத்து
உன் சந்தனக் கழுத்திலிருந்து
சறுக்கும் இடைக்குள்
நழுவி விழும் துப்பட்டாவாய்
ஆக்கிக்கொண்டன

போதாக்குறைக்கு
குழைந்து குழைந்து வழிந்தோடும்
உன் கொஞ்சு மல்லிக் குரல் வேறு

நான் கவிதை எழுதுகிறேன்
வெகு அக்கறையாய்

ஆனாலோ
காகிதங்கள்
காலியாகக் கிடக்கின்றன

ஏன்

என் கவிதையே
நீதான் அங்கே நிற்கிறாயே

ஒரு கவிதையிடம்
ஒரு கவிஞன்
உணர்வு மொழிப் பரப்பில்
உரையாடிக்கொண்டிருப்பதுதான்
எத்தனை எத்தனை அற்புதப் புல்லரிப்பு

கோடை வனக்
குற்றாலக் குளியலிலும்
கிட்டுமோ அந்த உச்சநிலைச் சிலிர்ப்பு

வண்ண வண்ண விளக்குகள்
லட்சம் பலகோடியாய்
உன் கண்களில் வரிசைகட்டி
விட்டுவிட்டு எரிந்ததைப் பார்த்து
அணைந்துதான் போனேன் முதலில்
பிறகோ எரிந்தே போனேனடி
என் கண்ணே

அன்றுமுதல்
கொஞ்சம் பைத்தியம்தான் நான்

அட
நாசூக்கு என்ன வேண்டியிருக்கிறது இதில்
முழுவதும் ஆனேனடி
உன் பைத்தியமாய் என் பெண்ணே

ம்ம்ம்...
இதையெல்லாம்
நானா எழுதுகிறேன்
எனக்குள் நுழைந்து ஏதோ செய்யும்
உன்னுடைய எதுவோ எழுதுகிறது

யாருடன்
உரையாடுகிறேன் இப்போது
இது கனவாய் இருக்குமோ
என்று நான் சுதாரித்தாலும்கூட
நகத்தின் நம்பமுடியா வேர்களுக்குள்ளும்
தித்தித்திப்பாய்த் தித்திக்கிறதடி

மனசு அலைபாய்வதை
மனசே அறிந்துகொள்கிறது
ஆனால் ஏன் என்றுதான்
அந்த மனசுக்கும் தெரியவில்லை

அட
நீதான் சொல்லேன்
சொன்னால்
உயிர் வாழ்வேன் தப்பிப் பிழைத்து
உன் சொற்காற்றைச் சுவாசித்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
25

கல்யாணம்
கூண்டில் நிற்கும்போது
காதல் மட்டுமே
அதன் நீதிபதி

வெளி வழக்கறிஞர்களின்
முறையீடுகளைக்
கண்டு கேட்டு அங்கீகரிக்க
காதலுக்குக்
கண்ணும் இல்லை
காதும் இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
24

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பத்திரமாய்

உன் என்னை
என் உன்னில் கரைக்க
எப்போது வருவாய்

மென்மையானதா?

இல்லையன்பே இல்லை
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

உன்
வானம் விழுந்து
பலகோடி நட்சத்திரங்களாய்
வெடித்துச் சிதறுண்டால்தான்
இந்நொடியே பூக்கத் தவிக்கும்
புதுப்பூவின் உள்வட்ட இதழ்களைவிட
மென்மையானதாகும்
என் காதல்

கொத்துக் கொத்தான கோள்களாய்
உனக்குள்
சுற்றிச் சுற்றித் திரிந்தால்தான்
இல்லாப்பொருளினும்
மெல்லியதென்றாகும்
என் காதல்

சிறுசிறு இழைகளாய்
உனக்குள்
பிரிந்து பிரிந்து பெருகினால்தான்
காற்றே இல்லா இடத்திலும்
அலையலையாய்ப் பறப்பதாகும்
என் காதல்

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பாதுகாப்பாய்

பூமியைக்
கழுத்தில் கட்டிக்கொண்டு
சூரியனுக்குள் விழும்
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

பில்லியன்களில் பெண்கள் இருந்தும்
செலவே செய்யாமல்
அப்படியே வைத்திருக்கிறேன்
என் காதலை
உனக்கே உனக்காக

எப்போது வருவாய்
அன்பே

அதை நீ
இப்போதும் சொல்லாவிட்டால்
வேறு எப்போதுமே
சொல்ல வழியற்றதாய்
என்னைத்
தின்று செரித்துக்கொள்ளும்
ஜென்மங்களில் தீராத
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
23

கனாக்களின் பரவச வானில்
கற்பனைகளின் பொற் சிறகுகளில்
பறந்தேன் தொலைதூரம்
முத்தமிட்டேன்
நட்சத்திர ஒளிப் பூக்களை

நிலவை மிதித்தேறியவன்
உன் சொல்தடுக்கி வீழ்ந்தேன்
கெடு நோய் நொடிக்குள்

கருவும் நீ
கருச்சிதைவும் நீ

அமைதியிலா உன்னகம்
ஆட்டிப்படைக்க

என்னைப்
புறந்தள்ளவும்
உள்ளிழுக்கவுமாய்
வழுக்கித் திரிகிறாய்
வற்றாமல்

தூள் தூளாய் உடைத்தே
சிதறியழிகிறது
என் நடுமுள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
22

அது ஒரு வனாந்தரம்

அழைத்துச் சென்ற
என் விரல் முடிச்சுகளை
அவிழ்த்துக்கொண்டு
திசைகள் திணர ஓடுகிறாய்

.....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

கண்களை விரித்து
சொற்களை அவிழ்த்து
இதழ்களில் உயிர் நிரப்பி
எல்லைகள் கனியப் பாடுகிறாய்

பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

.....பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று....

கோடி இலைகளும்
கூர் நுனிகளால்
உன்னைத் தீண்டத் தாவுகின்றன

செடிகளும் கொடிகளும்
இயற்கை வளைவுகளால்
உன்னை வளைக்கப் பார்க்கின்றன

மரங்களின் பட்டைகளும்
காதுகளாய் வெடித்து
உன் குரல் கேட்டுத் தவிக்கின்றன

பாடுகிறாய்
பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

....துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை.....

எகிறி விழுந்து
ஓடிச் சென்று
முத்தமிட்டு
நிறைவடையா தாகமாகி
உன்முன் ஆடுகிறது
உயிர்

.....நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்....

....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கணினிக்குள் கனிந்துருகும்
கண்ணறியாப் பொன்நிலா
அவள் என்நிலா

அன்பு கொய்து கனவு நெய்யும்
உறவு நெஞ்சப் பொய்கை
அவள் என் நம்பிக்கை

முகம்காணும் ஏக்கம்
நெஞ்சக் கூட்டில்
ஆயிரம் பெண்டுலம்
அதை
அழகாய் மறைக்கும்
வண்டுளம்

உனக்காகப்
பின்னப்படும் சொல்லாரங்களை
ஏதுமறியாதவளைப் போல
யாருக்கென்று கேட்பது
சொல்லவொண்ணாச்
செல்லக் குறும்பு செல்லம்

வாழ்க நீ
பஞ்சுப்பொதி நெஞ்சே

என் தனிமைக்குள்
ஏற்றிவைத்த உன் தீபங்களில்
என் விழிகள் மலர்கின்றன
விழாக்கோலம் பூண்டு

நன்றிகளின் ஊர்வலத்தை
உன் நாடுவரச் செய்கிறேன்
கடவுச்சீட்டு கேளாமல்
கதவு திறந்து நில்

ஏதோ ஒரு புள்ளியில்
எதிர்பாரா தருணத்தில்
இதய விரல்கள் கவ்வி
புல்லரித்துகொள்வதை...
தடைகளேதுமின்றி
அனுபவிக்கும் அனுபவிப்புக்கு
ஒரு பெயர் சூட்ட வேண்டுமென்றால்
என்னவென்று சூட்டுவது?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

கண்ணா
உன் காலம் வேறு
ஏசுவே
உன் காலம் வேறு

ஆனால் நீங்கள்
கைகோத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நிறம் கறுப்பு
ஏசுவே
உன் நிறம் சிவப்பு

ஆனால் நீங்கள்
எங்களை
நிறங்களற்ற
எண்ணங்கள் கொண்டவர்களாய்
ஆக்குவீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நூல் கீதை
ஏசுவே
உன் நூல் பைபிள்

ஆனால் நீங்கள்
கீதைக்கும் பைபிளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லையென
உணரச்செய்வீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்