புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

காற்றுச் சிறகுகளில்
குரல்களின் ஊர்வலங்கள்
வானொலியின் வசீகரத் தேனலைகள்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
சமைக்கும்போதும் மட்டுமின்றி
படுத்துக்கிடக்கும்போதும்
காதுகளைக்
கட்டி இழுத்துக்கொண்டுபோக
வழியற்று கூடவே
கண்களும்
என்றோ புறப்பட்டுவிட்டன

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

ஆசைகளை அறைத்தள்ளி
வெறியேற்றி வீசியாடும்
ஆயிரத்தெட்டு வீடியோ பூதங்களும்
ரிமோட் எனும் அலாவுதீன் விளக்கும்
வண்ணவண்ணமாய் வழிய வழிய
பெண்ணழகு மண்ணழகு பொன்னழகு
மயக்கிச் சாகடிக்கும் காட்சியழகில்
அகலாத விழிகளாகிப்போக

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

எதைக்கேட்டாலும்
ஏழாயிரம் திசைகள் முட்டி
எழுபதாயிரம் இடுகைகள் காட்டி
எழ முடியாமல்
இழுத்து வைத்திருக்கும்
இணைய முற்றம்

இனி என்னதான் மிச்சம்
நேரம் நெஞ்சம் நல்லநூல்
ஒன்றாவது தட்டுப்பட வேண்டாமா

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதனக் கோட்டை

கிராம மூதாட்டிகளின் காதில்
கனமாககத் தொங்கிக்கொண்டிருந்த
காதனியைத் தேடிப்போக
ஸ்மார்ட்போன் ஜீன்ஸ்களுக்குக்
காரணம்தான் ஏதும் உளதோ

கரையான் உண்டதுபோக
வெள்ளத்தில் சென்றதுபோக
எதிரிகள் எரித்ததுபோக
ஏதோ ஒருசில

அவையும் ஒரு வழியாய்
ஒலியும் ஒளியுமாய்
மடியில் வந்தபின்

மூச்சுமுட்டும்
நேரத்தொங்கல் நெரிசலில்
நாளை வாசிக்கலாம் என்ற
நெருடல் நினைப்பை மட்டும்
தொடர்ந்து தந்தவண்ணம்

புத்தகம் மூடிக்கிடக்கிறது
அது காகிதங்களால் கட்டப்பட்ட
ஒரு புராதணக் கோட்டை

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே