* * * *

விபுலாநந்தர்

சுகந்தம் மொட்டுடைக்கும் சுகராகம் காற்றுடைக்கும்
வசந்தம் பனியுடைக்கும் வஞ்சிமுகம் துயருடைக்கும்
நீயுடைத்த நெருஞ்சிக்காடும் நெற்கள் கோத்தது
உன் தொண்டுடைத்தத் தமிழுலகம் அறிவாய்ப் பூத்தது

வானுடைக்கக் கையுயர்த்தி நாளும் நின்றவனே
உன் உயர்வெண்ணி  உழைப்பெண்ணி உள்ளமுமெண்ணி
என் உட்குளத்துப் பொற்குமிழ்கள் வண்ணஞ்சிதற
சிலுசிலுத்துப் படபடத்து உடையக் கண்டேனே

தங்கமாமுனியே தாரகைச்சுடரே
மயில்வாகனனே மாதமிழ்க்கோனே
விண்ணுடைத் தமிழே விபுலாநந்தா

உன் முதன்மைப் பற்றென்ன
தமிழா இசையா
துறவா தொண்டா
கல்வியா காருண்யமா
அறிவியலா அறவழியா
பக்தியா பரிவா
பன்மொழியா உன்மொழியா

இன்னும் இவைபோல் எத்தனை எத்தனை
முத்துக்களைக் கோத்தெடுத்தாய் வித்தகா

என்றால்... ஒற்றைச் சொல்லில் நானுனை
அழைப்பதுதான் எப்படி
மா மகிழ்வே... விபுல் ஆனந்தா...

தமிழிசைக் கருவூலம் பேரறிவுப் பெட்டகம்
யாழ்நூல் யாத்தவனே

சங்க இலக்கியம் தொட்டு
சந்து பொந்துகளிலெலாம் கையிட்டு
தீரா உழைப்பில் திரட்டிய இசை நூலை
யார்தான் செய்வார் நீதான் கோமான்

குறிஞ்சி மலர்பூக்க ஆகும் பன்னிரு ஆண்டுகளை
தமிழிசை மணம்பூக்கத் தாயெனத் தந்தவனே

பேராசிரியப் பெரும்பணியையும்
துச்சமாய்த் தூக்கியெறிந்து
இசை ஆய்வில் இழைந்தாய்
என்றால் நீ இசைக்குத்தான் தாசனா

அப்படியொன்றும் உன் எல்லைக் கோட்டை
சின்னஞ்சிறு பம்பரக்கோடாய்
வரைந்துவிடவும் முடியுமா

கவிதை கட்டுரை கற்றல் கற்பித்தல்
ஆய்வுரை பேருரை மொழியாக்கம் சங்கத்தமிழ்
கலைச்சொல்லாக்கம் தலைத்தமிழ்ப் பேராசிரியன்
என்றுபல நிலாக்கலசக் கோபுரங்களின்
நாயகன் நீயல்லவா

தமிழ் ஒரு வானம்
சிறிதும் பெரிதுமாய்ப் பலகோடி நட்சத்திரங்கள்
ஒவ்வொரு நட்சத்திரத்தினாலும்
ஆனதே அந்தப் பேரொளி வானம்

உயிரொளி சிந்தி ஓயாது சுற்றி வந்த
பென்னம் பெருத்ததொரு நட்சத்திரம்
விபுலாநந்தத் தமிழனல்லவா

அறிந்ததோ ஆயிரம் பல்லாயிரம் ஆயினும்
உன்னை நீ மறந்ததோ உயிர்த் தமிழோடும்
தமிழர்தம் உயர்வோடும் மட்டுமே அல்லவா

மலைத்தேன் பெருங்கூடாய் நிலைத்தாய் தமிழோடு
தமிழ்த்தாய் மடிமலரில் அமிழ்தாய் வழிந்தாய்
உலகின் உயிர் அன்பெனக் கண்டாய்
உலகை வெல்ல தொண்டினையே கொண்டாய்

வேண்டும் இடங்களிலோ விருந்துபோல் வாய்முத்து
வேண்டாப் பொழுதெனில் மௌனத்தின் பூங்கொத்து
ஏந்திய உன்  நுண்ணறிவோ ஆழிப் பெருஞ்சொத்து
கற்றோரும் கொள்ளாரோ உன்மீது தனிப்பித்து

சொல்லித்தரத் துடிக்கும் தவிப்பில்
உன்னிடம் இருந்தது ஜல்லிக்கட்டுக் காளையின் வேகமா

ஆரியம் திராவிடம் இடையே அன்பு நெய்தவனே
மனிதநேயமே உயிரின் நேயமென வாழ்ந்தவனே
அறமும் தர்மமும் உரமெனக் கொண்டவனே
எளிமையையே வலிமையாக்கி நின்றவனே
தொண்டுக்கே தொண்டு செய்தவனே
பொறாமை வெறுப்பு பொசுங்கச் செய்தவனே
நாடும் மொழியுமே கண்களெனக் கண்டவனே

பாவரசு பாரதிக்கே வீசுவொளி பாய்ச்சியவனே
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை
அசைத்துப் பார்த்தவனே

இயந்திர மொழியின் இரும்புச் சொல்லுக்கும்
கரும்புத் தமிழேந்திய அருந்தமிழ்க் காவலனே

ஆழத்தமிழ் மதுரையில் கற்றுத்தேர்ந்த
ஈழத்தமிழ் முதற் பேராசானே

அகத்தியனோ இவன் கபிலனோ
அன்றி கரிகால் வளவன்தானோ என்று
பண்டிதர்களையும் திண்டாட வைத்த
சங்கத்தமிழ்ச் சிங்கமே

துறவு கொண்ட நீ துறக்காத ஒர் ஆசை
தமிழ்க்குலத்தார் உயர்வல்லவா

தூயதமிழ்த் தீபமேற்றி நாளும் பொழுதும்
தொழுதுநின்ற உண்மைத் தமிழா

உன்னை நினைத்து மேடைகள் இட்டு
வாழ்த்தி மகிழ்வதா பெரிது
உன்னை நினைத்து ஆயிரம் பல்லாயிரம்
கவிதைகள் பொழிவதா பெரிது

ஈழத்தவர் இன்று உலகத்தவர் ஆனார்
பாரின் கண்டறியா எல்லைக் கோட்டிலும்
பாதச் சுவடுகள் பதிக்கின்றார்

வையத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும்
ஒரு விபுலாநந்தனை... ஒரு நூறு விபுலாநந்தனை...
ஆயிரம் பல்லாயிரம் விபுலாநந்தனை...
ஈன்றெடுக்கப் போகின்றார்

அதுவொன்றே உனையெண்ணி உருகியேந்தும்
வாழ்த்தும் பாராட்டுமல்லவா

அதற்கேங்கும் உள்ளக் கமலமேயன்றி
ஆகப் பெரிதென்றுதான் உனக்கொன்று உண்டா

அன்புடன் புகாரி

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ