உண்மைப் பொய்

பொய்
எப்போதோ தன் பெயரை
உண்மை என்று
மாற்றிக்கொண்டுவிட்டது

பெயர்க் குழப்பத்தில்
உண்மையே
தன்னைப் பொய் என்று
அறிமுகம் செய்துகொள்ளும்
கட்டாயத்துக்குள் சிக்கிக்கொண்டு
காலங்கள் கடந்துவிட்டன

உண்மை என்ற
சொந்தப் பெயரில் இருந்த உண்மை
உண்மை என்று
பெயர் மாற்றிக்கொண்ட பொய்யின்
கவர்ச்சியையும் ஆளுமையையும்
தன்னைமறந்து
ரசிக்கத் தொடங்கிவிட்டது

உண்மை என்ற
பெயரில் இருக்கும் பொய்யும்
பெயர் மாற்றிக்கொள்ளாவிட்டாலும்
பொய் என்றே
அழைக்கப்படும் உண்மையும்
ஈர்ப்புக் காதலில்
இரண்டறக் கலந்து
பிரிக்கமுடியாத பந்தங்களாகி
நூறு நூறு ஆண்டுகள்
நெடிது வாழத் தொடங்கிவிட்டன

செயற்கைக் கருத்தருப்பில்
பிளுபிளுவென்று
இவர்களுக்குப் பிறக்கும்
சாத்தான் குட்டிகளால்
ஆக்கப்படுகிறது இவ்வுலகம்

அருந்தவக் குட்டிகளின்
சாடையெல்லாம்
அச்சு அசலாக
உண்மையைப் போலவே
இருக்கின்றன

ஆனால்
உட்சங்கதியெல்லாம்
பொய்யேதான்

அட
அது யாருக்குத் தெரியும்
இப்போது?

அன்புடன் புகாரி
20171217

No comments: