பயணக்கிறக்கம் (Jet lag)


பயணக்கிறக்கம் (Jet lag)

ஜெட்லாக்கை பயணக்கிறக்கம் என்று பயணக்கிறக்கத்தோடு மொழிபெயர்த்தேன்.

ஓர் ஒன்பது தினங்களுக்காக, கனடாவிலிருந்து ஜெர்மனி வழியாக சென்னை, பின் சென்னையிலிருந்து ஜெர்மனி வழியாகக் கனடா, சிறகடிக்காத ஏர் கனடா மற்றும் லுஃப்தான்சா விமானங்கள் விசிலடிக்கப் பறந்தேன்.

டொராண்டோ விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையம் 6340 கிலோமீட்டர் தூரம் ஏழரை மணி நேர பயணம். ஜெர்மனியில் சுமார் ஐந்து மணி நேரம் அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கும் பயண ஓய்வு. பின் ஃபிராங்ஃபர்டிலிருந்து சென்னை விமான நிலையம் 7600 கிலோமீட்டர் தூரம் ஒன்பதரை மணி நேர பயணம்.

ஆக மொத்தம் 13,940 கிலோ மீட்டர் தூரம், 17 மணி நேர விமானப் பயணம், 5 மணி நேர பயண ஓய்வோடு 22 மணி நேரம். ஏழு தினங்கள் கழித்து மீண்டும் சென்னையிலிருந்து ஜெர்மனி வழியாக கனடா. போக ஒரு நாள் வர ஒருநாள் போக ஒன்பது நாள் பயணத்தில் ஏழே நாட்கள் தமிழ்நாட்டில்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தஞ்சை திருச்சி மதுரை கோவை திருநெல்வேலி செல்வதெல்லாம் அடுத்தப் பெருங் கதை. அது நமக்கு இப்போது தேவையில்லை.

இந்த என் திடீர்ப் பயணம் குளிர்கால நள்ளிரவுக் கனவைப் போல் கழிந்தது. படுத்தவன் விழித்தபோது கனடாவின் இயந்திர தினங்களில் மீண்டும் நிற்காத ஓட்டங்களோடு இழைந்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் ஒரு வித்தியாசம். யாரோ முகம்தெரியாத துரோகிகள் பலர் இரவோடு இரவாக என் கனவுக்குள்ளேயே வந்து என்னை அடித்து நொறுக்கிப் போட்டு விட்டதைப்போல ஒரே களைப்பு, கழித்தெடுக்க முடியாத அலுப்பு. ஏன்? எப்படி? அதுதான் ஜெட் லாக் எனப்படும் பயணக்கிறக்கம்.

விமானத்தை விட்டு இறங்கிய சில நாட்களுக்கு ஒருவித சோர்வு, மயக்கம், தடுமாற்றம் என்று எல்லாவித பலகீனச் சொற்களும் நம்மைக் கூடி நின்று கும்மியடிக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், தேர்தலுக்கு நிற்கும் இளம் அரசியல்வாதியின் இடைவிடாத குழப்பம். எதிலும் கவனம செலுத்தமுடியாமல் ஒரு திக்குமுக்காடல். வாகனம் ஓட்ட முடிவதில்லை, கவிதை வாசிக்க முடிவதில்லை, முக்கியமான விசயங்களையும் கவனம் பிசகாமல் விவாதிக்க முடிவதில்லை. எந்த வல்லாரை லேகியத்துக்கும் வசப்படாமல், மண்டைக்குள் அடையாளம் தெரியாத நண்டுக் கால்கள் கலங்கலாக ஓடிக் கொண்டிருப்பதுபோல் ஒரு தத்துப் பித்துத் தாண்டவம்.

இதனால் தொடர் உறக்கம் தொலைந்துபோய், முந்தாநாள் பிறந்த குழந்தைக்கு வரும் துண்டுத் துண்டு உறக்கங்களைப் போல விட்டு விட்டு வந்து தட்டுக்கெட்டு நிற்கும். வாழும் இடத்திற்கும் பருவ நிலைக்கும் ஏற்ப உடலுக்குள் உருவாகி ஒழுங்குக்கு வந்திருக்கும் நம் திடநிலை, தடதடவென்று குலுக்கப்பட்டு தாறுமாறாகக் குலைக்கப்படுகிறது. அவற்றை உடலும் மூளையும் மீண்டும் சரி செய்துகொண்டிருப்பதுதான் இந்த மயக்க, கிறக்க நிலைக்குக் காரணம்.

இதுபற்றி அமெரிக்காவிலுள்ள வானவூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகமான "நாசா" என்ன சொல்கிறது தெரியுமா? ஒரு மணி நேர இட வித்தியாசத்தைச் சரிசெய்துகொள்ள உடலுக்கு ஒரு நாள் வேண்டும் என்கிறது. அப்படியென்றால் எனக்கு ஒன்பதரை நாட்களாவது வேண்டும். கனடாவுக்கும் இந்தியாவிற்கும் தற்போது ஒன்பதரை மணி நேரம் வித்தியாசம் நிலவுகிறது.

விமானம் தரையிறங்கும் தருணத்தில் ஒரு புதுக்கவிதை வாசித்தேன். அதுவோ அதி நவீன கவிதையாய் என் தலையோடு முரண்டுபிடித்தது. எல்லாம் இந்தப் பயணக்கிறக்கம் தந்த பிடிபடாத மயக்கம்தான். இந்த மயக்கத்தால் சில சமயம் நான் வவ்வால் மாதிரி தலைகீழாய்த் தொங்குவதுபோல் உணர்வு.

விமானத்தில் நிலவும் உலர்ந்த நிலையால் உருவாகும் தலைவலியோ மற்றுமொரு கொடுமை. தோலெல்லாம் வறண்டுபோய், மூக்கெல்லாம் (ஒண்ணுதானே?) சொறிந்துவிடு சொறிந்துவிடு என்று விடாது விண்ணப்பித்துக்கொண்டே இருக்க, நீர்க்கேடு (இப்படியெல்லாம் ஜலதோஷத்தை நான் மொழி பெயர்ப்பதும் பயணக் கிறக்கப் பலன் என்று நீங்கள் தாராளமாக நினைத்துக்கொள்ளலாம். ஜலதோசத்தை, நீர்கோத்துக்கொண்டது என்று ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன்) வந்து தலையில் முகாம் இடுவதைப்போல் இருக்கும். தொண்டைக்குள் நம் தங்கக் குரலைத் திருடிக்கொண்டு யாரோ கரகரப் பித்தளைக் குரலை பொருத்திவிட்டுப் போவார்கள்.

உக்கார்ந்துகொண்டே தூங்குவதற்கு நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சிதான் இம்மாதிரியான நீண்ட பிரயாணங்கள் என்று சத்தியமே செய்வேன் நான்.

கால்களில் இனம்புரியாத இக்கட்டு. பாதங்கள் நம்முடையவை அல்லவோ என்ற தப்புத் தப்பான நினைப்பு. போட்டிருக்கும் காலணியை சடக்கெனக் கழற்றி எறிந்துவிட்டுப் பாசமாய் அவ்வப்போது கால்களையும் பாதங்களையும் வாஞ்சையாய்க் கட்டிப்பிடிக்கத் தோன்றும். அதே சமயம் நிம்மதியாய்த் தூங்க இந்தக் கால்கள்தான் இடையூறு என்பதுபோல் இருக்கும் அவ்வப்போது. கால்கள் இல்லாவிட்டால், இந்தக் குறுகிய இருக்கையில் அப்படியே மல்லார்ந்து படுத்து உறங்கிவிடலாமே.

விமானத்தின் அசையாத இறகுகள் அடித்துக்கொள்ளாமல் பறந்துகொண்டிருக்க அசையும் என் கால்கள் அவசியம் அற்றதாய்க் கிடக்க, விமானப் பயணம் படுசோம்பேறித்தனமாய் நீண்ண்ண்ண்டு நிகழும்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாமெல்லோரும் குழந்தையாவே இருந்துடக்கூடாதா என்று அவ்வப்போது ஏங்குவோமே, அந்த ஏக்கத்துக்கு இங்கே அதிக பொருள் உண்டு. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்படி மயக்கம் கிறக்கம் என்று எதுவுமே வருவதில்லை. அவர்களின் உடல் அத்தனை எளிதாய் பயணத்தால் வரும் மாற்றங்களை எல்லாம் சரி செய்துகொண்டே இருக்கிறது

ஆமாங்க.... வளர வளர நமக்கு நம் உடல் ஒரு சுமைதாங்க.

அலுவலகம் வீடு சமையல்கட்டு என்று வாழும் அன்றாடச் செக்குமாடுகளுக்கு நீண்ட தூர விமானப்பயணம் என்பது இன்னும் அபத்தமாய் முடியும். அதனாலென்ன அவர்களுக்கு எல்லாமே எப்போதுமே அபத்தம்தானே?

கனடாவிலிருந்து சென்னையில் குதித்தபோதுகூட இந்தப் பயணக்கிறக்கம் என்னை ஒன்றும் செய்யவில்லை. அக்கினி வெயிலுக்குமுன் பயணக்கிறக்கமாவது மண்ணாவது? ஆனால் சென்னையிலிருந்து கனடா வந்தபின்தான் உயிரை எடுக்கிறது. ஏனெனில், சென்னைக் காற்றில் ஏகப்பட்ட ஈரப்பசை

சென்னையில் நான் ஒரு நண்பரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றேன். வெளியே மழை பொழிகிறதா என்று கேட்டார் நண்பர். அப்படி நனைந்திருந்தேன் வியர்வை அருவியால். அந்த முழுநீள உப்பு ஈரத்திலிருந்து விமானத்தின் உலர்ந்த சூழலில் ஒரு நாள் முழுவதும் வீற்றிருந்தால் என்னாகும்? கிறுக்கான கிறக்கம்தானே வந்துசேரும்?

நீண்ட விமானப் பிரயாணம் செய்யப் போகின்ற செலவாளிகளே என் தலைக்கனமில்லாத யோசனைகளைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.

பணிப்பெண்களெல்லாம் வாஞ்சையாய் அருகில் வந்து நின்று டீ குடிக்கிறாயா கண்ணா? காப்பி குடிக்கிறாயா செல்லம்? பழரசம் வேண்டுமா தங்கம்? போதையில் மிதக்கப் பிரியமா குடிமகனே என்றெல்லாம் குழைவார்கள்

அப்படியே சித்தார்த்தம் தொலைத்த புத்தனாய் மாறி வேண்டாம் வேண்டாம் என்று விரட்டிவிடுங்கள் அவர்களை. ஆனால், நாங்கள் தமிழகத் தமிழர்கள், கர்னாடகாவிடம் மட்டுமல்ல உங்களிடமும் ஒன்றே ஒன்றைத்தான் கேட்போம் "தண்ணீர் தண்ணீர்" என்று பொழுதுக்கும் தொல்லை செய்யுங்கள்.

அடிக்கடி தண்ணீர் குடிப்பதும், குடித்ததை வெளியேற்ற, ஒப்பனையறை செல்வதால் கால்களை இயல்புக்குக் கொண்டுவருவதும் ஆபத்தாண்டவனைப்போல் உங்களைக் காக்கும்

நீங்கள் பெருங்குடிமகன்களாய் இருந்தால் ஒரு மிக முக்கியக் குறிப்பு தருகிறேன். விமானத்தில் நூறு மில்லி அடிச்சா தரையில் நாநூறு மில்லி அடிச்சதுக்கு சமம். அப்புறம் ரஜினிமாதிரி தோளில் துண்டு போடுவதற்குக்கூட கையைக் காலை உதற வேண்டிவரும்.

விமானத்தில் முதல் வகுப்பிலும் வணிக வகுப்பிலும் அடிக்கடி காற்று செலுத்தி தேவலோகமாக வைத்திருப்பார்கள். வழக்கம்போல் நம் வகுப்பில் காற்றும் மட்டமாகவே வழங்கப்படும். காப்பி வேணுமான்னு கேட்டுவரும் பணிப்பெண்ணிடம் காற்றுவேண்டும் என்று கட்டளையே இடுங்கள். அவள் ஏற்பாடு செய்வாள் காற்றுக்கு. இல்லாவிட்டால் காற்றில்லாமல் நீங்கள் தடாலென்று மயங்கிவிழ தடித்த வாய்ப்புண்டு.

வயிறும்கூட கொஞ்சம் குழம்பிப் போய்தான் இருக்கும். ஒரு மாதிரியாகவே நாம் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் வயிற்றின் இயல்பு வாழ்க்கை சிதைந்து "வாழ்வே மாயம்" பாடிக்கொண்டிருக்கும், அவ்வேளையில் நீங்கள் பணிப்பெண் கொண்டுவந்து தரும் எதையாவது உள்ளே கொட்டிக்கொண்டே இருந்தால், வாந்தியும் மயக்கமும் வரக்கூடும்.

அவ்வப்போது எழுந்து உடம்பைக் கொஞ்சம் முறித்துக்கொண்டு நீட்டி மடக்கிப் பயிற்சி செய்வது எல்லாவற்றுக்குமே நல்லது. என்னைப்போல் ஐந்துமணி நேரம் அடுத்த விமானத்திற்காக ஜெர்மனி போன்ற விமான நிலையங்களில் காத்திருக்க நேர்ந்தால், சுகம்மா ஒரு குளியல் போட்டு இரத்த ஓட்டத்தை ஒழுங்கு செய்வது உத்தமம். அல்லது ஜெர்மனி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் ஏதாவது ஒரு பொருளை ஆசையாக எடுத்து விலை கேளுங்கள். அவன் சொல்லும் விலையைக் கேட்டு இரத்த ஓட்டம் தானே உச்சத்தை அடையும்!

இந்தப் பயணக்கிறக்கத்தைத் தீர்க்க நிறைய மாத்திரைகள் வந்திருக்கின்றன. மிகவும் தொல்லையாய் உணர்ந்தால்மட்டும் ஒன்றிரண்டை விழுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் சில மருந்துகள், சித்தெறும்புப் பிரச்சினையைச் சிறுத்தைப் பிரச்சினையாய் ஆக்கிவிட்டுவிடும். அப்புறம் பயணம் முழுவதும் அவசர சிகிச்சைகளுடன் படுக்கையில்தான் கிடக்க வேண்டி வரும். மகா தொல்லையாய் இருக்கிறதே இந்தச் சனியன் பிடித்தக் கிறக்கம் என்று தூக்கமாத்திரைகளை விழுங்கி வைக்காதீர்கள். அது விமானத்த்துக்கும் மேலே உங்கள் உயர்ப் பறவையை ஒரேயடியாய்ப் பறக்க வைத்துவிட நிறைய வாய்ப்புகள் உண்டு.

விமானம் ஏறுவதற்குமுன் நன்றாக தூங்கி எழுங்கள். நிம்மதியாக நீராடுங்கள். நல்ல உடற்பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தைக் குட்டிக் கரணங்கள் போட வைத்துக்கொள்ளுங்கள். விமானம் ஏறியபின் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், விமானத்தின் மென்மையான இசையை மயக்கத்தோடு கேளுங்கள், அடிக்கடி எழுந்து ஒப்பனையறை செல்லுங்கள், அவ்வப்போது உலாவுங்கள், பணிப்பெண்களின் அசைவுகளை அதிர்ந்து அதிசயிக்காமல் இனிமையாய் ரசியுங்கள், அப்புறம் நிம்மதியாய்த் தூங்குங்கள். இந்தப் பயணக்கிறக்கத்தை முக்கால்வாசிக்கும்மேல்.... ஏன் முழுவதுமேகூட வென்று மென்று தின்று செரித்துவிடலாம்.

பிறகென்ன, எத்தனை நாடுகளுக்கு வேண்டுமானாலும் எவ்வளவு குறுகிய காலத்திலும் இளகுவாகச் சென்று வென்று வரலாம் நீங்கள், வாழ்த்துக்கள்!

18 வரம்


என் வரம்
வரம் கேட்கிறது என் விழியோரம்
தவமிருக்கிறேன்
விலகிவிடக்கூடாதே என்ற தவிப்போடு

என் உறக்கம்
உறங்குகிறது என் மார்மீது
விழித்திருக்கிறேன்
கலைந்துவிடக் கூடாதே என்ற கவலையோடு

என் உயிர்
உயிர்க்கிறது என் உதட்டோடு
உறிஞ்சுகிறேன்
துளி அமுதும் சிந்திவிடக் கூடாதே
என்ற அக்கறையோடு

என் சொர்க்கம்
சுரக்கிறது என் மடிமீது
சிலிர்க்கிறேன்
என் இதயம் நின்றுவிடக் கூடாதே
என்ற பதட்டத்தோடு

என் நதி
நீர் கேட்டு என் வாய்க்கால்களில்
நீந்துகிறேன்
நிஜம்தானா என்று என்னைக்
கிள்ளிப் பார்த்துக்கொண்டே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
தைத்திங்கள்
தமிழ்ப்புத்தாண்டுப்
பொங்கல் திருநாள்

தைத்திங்கள் தலைநாள்
தமிழுழவர் ஒளிநாள்
தமிழ்மக்கள் பெருநாள்
தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள்

தென்திசை ஓய்ந்த கதிரவன்
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்

நெல்லுக்கும் உழவர்க்கும்
மடிதரும் நிலம்
உயிர்தரும் நீர்
மூச்சுதரும் காற்று
ஒளிதரும் சூரியன்
மழைதரும் ஆகாயம் என்ற
ஐம்பூதங்களுக்கும்
நன்றியோடு விழா எடுக்கும்
பொன்னாள்

வரப்புகளில் விளையாடி
வயலுக்குள் வாழ்ந்து
வளர்ந்த நெற்கதிர்களை
வெண்மணி அரிசியாக்கி
புத்தம்புதுப் பானையில்
பாலும் சர்க்கரையும்
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் கூட்டி
நிலத்தை முத்தமிட்டுச்
சூரியனை வாழ்த்தி
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல்நாள்

தைத் திங்கள்
தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல்
தித்திப்பு வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்

தைமாதம் தைமாதம்
தமிழனுக்கு நெய்மாதம்
கைவிட்ட கனவெல்லாம்
கைகூடும் மெய்மாதம்

கும்மியடி கும்மியடி
குங்குமமே கும்மியடி
தைமகளும் வந்துவிட்டாள்
தாலிக்கொடி தந்துவிட்டாள்

கோத்துயெடு கோத்துயெடு
கொத்தோடு இஞ்சிமஞ்சள்
கட்டியெடு கட்டியெடு
கட்டோடு செங்கரும்பு

கூரைபிரி கூரைபிரி
கீத்தெல்லாம் மாத்தியெறி
மாடுபிடி மாடுபிடி
மணிச்சலங்கை பூட்டிவிடு

சுண்ணாம்பு வெள்ளாடை
சுவரெங்கும் கட்டிவிடு
மாக்கோலப் பொன்னாடை
முன்வாசல் இட்டுவிடு

முத்தமிடு முத்தமிடு
மண்தொட்டு முத்தமிடு
நெத்திவிழும் நீர்முத்தை
நெஞ்சாரக் கொஞ்சிவிடு

பொங்குதடி பொங்குதடி
புதுப்பானை பொங்குதடி
பொங்குறதும் பூக்குறதும்
புதுச்சோறா பூமுகமா

நிலமகளை நீர்முகிலை
மாடுமனை ஏர்உழவை
நெஞ்சோடு நெகிழ்வோடு
கொண்டாடும் பொங்கலிது

பால்பொங்கல் கண்டவன்நான்
பனிப்பொங்கல் காண்கிறேன்
பனிதூவும் பொழுதுக்குள்
நினைவோடு வேர்க்கின்றேன்

ஆயிரமாய்ப் பண்டிகைகள்
அங்குமிங்கும் வந்துபோகும்
தமிழனுக்கோர் தனிமகுடம்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

எதையும் தாங்கும் இதயம்

வெந்துபோன சோற்றுக்குள்
வேகாத அரிசிகளாய்
விடைதேடி விடைதேடி
விடை காணா மயக்கமா

தெரிந்த ஓர் விடைகூட
பச்சோந்தித் தோல்போல
நேற்று ஓர் நிறமாகி
இன்று ஓர் முகமானதா

தேய்கிறதா செல்லமே
துயிலாத உயிர்க்குஞ்சு
விலகாத கதவின்முன்
விரல்கூட்டித் தினந்தட்டி

நண்பர்களே பகைவரெனில்
பகைவர்களே நண்பர்களோ
இருட்டுகளின் தத்துவங்கள்
உறக்கத்தை மேய்கிறதா

ஒளிந்திருக்கும் இருட்காட்டில்
விகாரத்தின் எச்சங்கள்
உனக்குள்ளும் நஞ்சென்ற
நிசங்காட்டிச் சுடுகிறதா

நிசமென்று வந்ததெலாம்
நிழல்தானோ முழுப்பொய்யோ
தொப்புள்கொடி அறுத்தெறிந்த
அப்பொழுதே தாய் பொய்யோ

காலத்தின் சுழற்சிகளில்
அனுபவத்தின் ஆய்வுகளில்
கண்ட ஞானக் கீற்றின்முன்
நீயுந்தான் ஓர் பொய்யோ

அம்மம்மா நடுக்கங்கள்
அசராத தண்டனைகள்
இடுகாட்டுத் தீப்பொறியாய்த்
தளிருயிரைத் தீய்க்கிறதா

துயர்வேண்டாம் செல்லமே
தீய்க்கட்டும் தீருமட்டும்
தெரிந்துகொள் புரிந்துகொள்
தெளிவாயொரு பேருண்மை

இன்றுதான் உன் வாழ்வமுதின்
இனிப்பான சுகப்பயணம்
உண்மையான பொற்தளத்தில்
உயிர்ச்சுவடு பதிக்கிறது

முட்டையிருள் ஓடுடைக்கக்
குட்டிகளும் அழுமோடா
முட்டியதை உடைத்தெறிந்து
முளைவிட்டு வெளியில் வா

சத்தியங்கள் அனைத்தும் நீ
சந்தித்துத் தெளியாமல்
வாழ்வென்னும் குருட்டாடு
வழியறிந்தே ஓடிடுமா

துயரங்கள் பெருக்கெடுக்க
துக்கத்தின் கணக்கெடுத்தாய்
இன்பங்கள் வேண்டுமெனில்
இருபுறமும் அலசிப்பார்

வரவுகளும் செலவுகளும்
வாழ்வென்னும் நியதியடா
வரப்போகும் இன்பமினி
வந்தவற்றை மிஞ்சுமடா

செலவுகளில் சிதையாமல்
சொர்க்கவழி தினந்தேடு
வரவுகளை எதிர்நோக்கி
வலிமையுடன் நீச்சலிடு

ஓடுடைத்து இம்முறை நீ
உனக்காகப் பிறக்கின்றாய்
வீரனாகப் பிறக்கின்றாய்
விழவில்லை மரணத்துள்

.

தீண்டும் தீண்டும் துயரம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம்
எதையும் தாங்கும் இதயம்
என்னிடம் நான் கேட்கும் என் கேள்விகள்

தன்னைப்பற்றி ஒரு நாளேனும் சிந்திக்காமல் ஒருவர் இருப்பது அரிது. இன்று சிந்திக்காவிட்டால் நாளை நிச்சயமாக சிந்திப்பார் என்றே நான் நம்புகின்றேன்.

தன்னைப்பற்றிய சிந்தனை என்ற உடனேயே, தன்னை நோக்கிய கேள்விகளாய் அவை படை எடுக்கின்றன. அந்தக் கேள்விகளே நான் என்று ஆகிவிடுகின்றன.

கேள்வியும் நானே பதிலும் நானே என்பது தன்னைப் பற்றி அறியும் நிலைப்பாடுகளுள் மிக முக்கியமான ஒன்று.

தன்னைப்பற்றி தானே அறிய முயலும்போது அங்கே பொய் என்ற பேச்சுக்கே இடமில்லை. எவருக்காகவும் எதையும் மாற்றிச் சொல்ல வேண்டுமே என்ற சங்கடம் இல்லை. உண்மைத் தளத்தில் தான் என்ற உயிரின் நடை உயர்வாய்ச் செல்கிறது. அதுவே அந்தரங்கம் என்றும் ஆகிறது.

அப்படி தன்னை அறியும் பொருட்டு தன்னிடம் கேட்கும் தன் கேள்விகளை எண்ணி வியக்கும் வியப்புகளே இக்கவிதை.


என் கேள்விகள்…

என் இருத்தலின்
அகராதிகள்

எனக்கான
என் பயணங்கள்

என் மூச்சுக் காற்றுக்குச்
சூடு தரும் சக்திகள்

என்னை எனக்கே
அடையாளம் காட்டும்
கைகாட்டிகள்

என் வலிமையோடு
என் வலிமையைப்
போரிட வைக்கும்
தளபதிகள்

முகத்திரைகளற்ற
என் முகங்கள்

என் சொற்களில்
சுகப்படாத
என் தேடல்கள்

தனிமைக் குகைக்குள்
என்னைத்
தாகத்தோடு அடைத்து
மீண்டுவர பல
ஆண்டுகள் ஆக்கிவிடும்
பூதங்கள்

எனைச் சாகடிக்கும்
மரண நெருக்கடிகள்
சாகாமல் வாழவைக்கும்
உயிர்த் துளிகள்

என் வாழ்வுப் பாதையில்
என்னை எனக்குமுன்
நானே நிறுத்தி விசாரித்த
என் விசாரிப்புகளுக்கு
வெகுமதிகளாய்க்
கவிதைகளைத் தந்த
படைப்பாளிகள்

கேள்விகள்தாம் கேள்விகள்தாம்
எல்லாம் எல்லாம்
என்னை நோக்கிய
என் கேள்விகள்தாம்

#அறிதலில்லாஅறிதல்
#கவிஞர்புகாரி
#கவிதை




***45

கேள்விகள்

என் இருத்தலின்
அகராதிகள்

எனக்கான
என் பயணங்கள்

என் மூச்சுக் காற்றுக்குச்
சூடு தரும் சக்திகள்

என்னை எனக்கே
அடையாளம் காட்டும்
கைகாட்டிகள்

என் வலிமையோடு
என் வலிமையைப்
போரிட வைக்கும்
தளபதிகள்

முகத்திரைகளற்ற
என் முகங்கள்

என் சொற்களில்
சுகப்படாத
என் தேடல்கள்

தனிமைக் குகைக்குள்
என்னைத்
தாகத்தோடு அடைத்து
மீண்டுவர பல
ஆண்டுகள் ஆக்கிவிடும்
பூதங்கள்

எனைச் சாகடிக்கும்
மரண நெருக்கடிகள்
சாகாமல் வாழவைக்கும்
உயிர்த் துளிகள்

என் வாழ்வுப் பாதையில்
என்னை எனக்குமுன்
நானே நிறுத்தி விசாரித்த
என் விசாரிப்புகளுக்கு
வெகுமதிகளாய்க்
கவிதைகளைத் தந்த
படைப்பாளிகள்

கேள்விகள்தாம் கேள்விகள்தாம்
எல்லாம் எல்லாம்
என் கேள்விகள்தாம்

அன்புடன் புகாரி

8 இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
.... இன்னும் கொஞ்சம்
இன்னும் இன்னும்
.... இன்னும் கொஞ்சம்

உன்னைக் கொஞ்ச
.... உன்னைக் கொஞ்ச
உன்னுள் என்னுள்
.... மின்னல் மிஞ்சும்

சின்னச் சின்னக்
.... கன்னப் பாளம்
கிள்ளக் கிள்ள
.... நாடித் தாளம்

கண்ணில் பொட்டு
.... கூட்டம் போடும்
கைகள் பட்டு
.... கோலம் ஆகும்

பெண்ணே பெண்ணே
.... என்னைக் கொன்று
கண்ணைக் கட்டி
.... உன்னைக் கொன்று

என்னை விட்டு
.... எங்கே போனாய்
வண்ணம் கெட்டு
.... விம்மும் பாவாய்

ஊரும் பேச்சும்
.... பின்னே வந்தது
உயிர்கள் தானே
.... முன்னே வந்தது

மனங்கள் வாழா
.... மணங்கள் எல்லாம்
குணங்கள் கெட்டே
.... குப்பை ஆகும்

கண்ணின் மணியில்
.... என்னைக் கொழுவு
உன்னைப் பேணும்
.... உயிரே எனக்கு

மண்ணாய்ப் போகும்
.... எண்ணம் போதும்
மரணம் தொடவும்
.... நீயே வேண்டும்

உன்னால் என்னால்
.... இயலாக் கதவை
உண்மைக் காதல்
.... உடைத்தே நொறுக்கும்

உன்னுள் என்னை
.... அள்ளிப் பின்னு
இன்னல் வந்தால்
.... விண்ணும் மண்ணு