நீரலையைப் போன்று
புத்தம் புது அலை
வேறு எதிலும்
உருவாவதில்லை

ஓர் அலை கரை தொட்டால்
அந்த அலையின் நீர்
அடுத்த அலை புறப்படும்போது
எங்கோ எங்கோ
தொலைதூரம் சென்றிருக்கும்

புது நீரில்
புதிது புதிதாக உருவாகும்
ஒவ்வொரு நதியலையும்
நதிக்கு மட்டும் பெருமையல்ல
நமக்கும்தான்

ஏனெனில்
அது ஒரு
வாழ்க்கை ரகசியம்

வாழ்வின்
இன்ப அலையோ
துன்ப அலையோ
இடைப்பட்ட அலையோ
யாவுமே புத்தம் புதியனதான்

பழையது என்ற
நம் எண்ணம்தான்
உண்மையில் பழையது

பெண்களின் உடை

பெண்களின் உடை என்பது அதை அணிகின்ற பெண்களின் விருப்பம்.

சாதி மதம் பண்பாடு கலாச்சாரம் என்று எதையாவது சொல்லி எந்த உடையையும் வலுக்கட்டாயமாக அணிய பெண்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

ஊருக்கு ஏற்ப உடை, வீதிக்கு ஏற்ப உடை, வீட்டுக்கு ஏற்ப உடை, தனக்கு ஏற்ப உடை என்று உடுத்தும் பெண்கள் முடிவு செய்யட்டும்.

ஏன் உடையில் ஆணாதிக்கமும் அதன் சுயநலமும் இனம், மதம், சாதி, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில்?
ஞான வெளிச் சொர்க்கம்

செவி மூடியவர்களிடம்
பேச்சு வார்த்தை நடத்துவதும்
செருப்பில்லாமல்
நெருஞ்சி முட்காட்டில் நடப்பதும்
ஒன்றுதான்

வாய் திறக்க விடாமல்
குரல் மட்டும் உயர்த்துவதால்
சாதிக்கப் போவதுதான் என்ன -
புரிந்துணர்வைப் போட்டுப்
புதைப்பதைத் தவிர

கதறி அழுது சிதறிப்போகும்
நட்பை... நல்ல உறவை...
சற்றும் பொருட்படுத்தாமல்
துடித்து வெடிக்கும்
துப்பாக்கி ரவைச் சொற்களுக்கு
வாழ்க்கை அகராதிகளில்
பொருள்தான் என்ன -
பிதற்றிப் பின்னழும் வைபவத்துக்கு
விழிநீர் சேர்க்கும் எத்தனம்
என்பதைத் தவிர

இடைவிடாமல்
இரு முழு நீள மணி நேரமும்
தொலைபேசியில்
பேசமட்டுமே செய்தான்
சொந்தம் ஒருவன்

அவன்
குற்றச்சாட்டுக் குத்தீட்டிகளையும்
அறிவில்லா
அறிவுரைத் தோரணங்களையும்
ஏந்திக்கொண்டே
நான்

ஒரு
நம்பிக்கைதான்
எனக்கும் ஒரு வாய்ப்புத் திறப்பான்
நானும் பேசலாமென

”ரொம்ப நேரமா பேசிட்டோம்
அப்புறம் ஒருநாள் பேசலாம்”
சட்டெனத் துண்டித்தான்
தொலைபேசி சாதுர்யன்

அட இனி எப்போது
பேசப்போகிறானோ என்று
நிலை குலைந்து
நடுங்கித் தவிக்கிறது நெஞ்சு

கல் விழுந்த கண்ணாடிக் குடுவையைப்போல
உடைந்துதான் போனது
வெகுகாலம் குரல் நீட்டா மோனத்தில்
களித்திருந்த நெஞ்சு

சட்டென ஒரு பொறி
அக்னி பரவியது அகமெங்கும்

சொல்வதை
வாங்கு வாங்கென்று வாங்கிக்கொண்டு
மௌனத்தையே பதிலாகக்
கொடு கொடு என்று
கொடுத்திருந்தால்?

கேட்கும் செவியோடு
என்றாவது வாவெனக்
காத்திருப்பதல்லவா
ஞானவெளிச் சொர்க்கம்! 

முஸ்லிம் தீவிரவாதிகள்

1.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே, அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

காரணம் கடந்த 50 ஆண்டுகளில் 235% வளர்ச்சி பெற்று பெருகும் முஸ்லிம்களின் மக்கள்தொகையாகத்தான் இருக்க வேண்டும்.

இஸ்லாம் தொடங்கும்போதே எதிர்ப்புகளால் பல இன்னல்களைச் சந்தித்தது. ஆனால் அழிந்துவிடவே இல்லை.

இன்று, காழ்ப்புணர்ச்சி கொண்டு துவேச சொற்களை அள்ளிப் பொழியவும் பழிபோட்டு ஒரு மார்க்கத்தையே அழிக்கும் முயற்சியில் சில பல மத மற்றும் அரசியல் அமைப்புகள் முயல்வதும் நாம் தெளிவாகக் காணும் காட்சி.

ஆனால் அழிந்துபோகுமா இஸ்லாம்?



 
ஆயிரம் வேர்கள்

ஒரு
மரத்துக்கு மட்டும்
ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு
மனிதனுக்கும்
ஆயிரம் வேர்கள்தாம்

வாய்மொழி
வட்டாரமொழி
தாய்மொழி
மரபணு
மரபு
இனம்
குடும்பம்
சமூகம்
மார்க்கம்
தெரு
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
தாய்நாடு
புலம்பெயர் நாடு
உலகம்
பிரபஞ்சம்

இன்னும்
இன்னுமாய்...
இவை
அத்தனையும்
நெஞ்சு விம்மிப்
பெருமைப்படத்
தகுதி மிகக் கொண்டனதாம்

இவற்றுள் எதுவும்
குறைவும் இல்லை
உயர்வும் இல்லை

அனைத்து வேர்களாலும்
ஆனவனே மனிதன்

இன்னும்
கோடி கோடி
இலைகளையும் கிளைகளையும்
பரப்பிச் செல்பவனே
மனிதன்

சவுதிதான் இஸ்லாம்

இஸ்லாம் என்றதுமே பலர் சவுதி அரேபியாவோடு அதை முடிச்சுப் போட்டுவிடுகிறார்கள்.

சவுதிதான் இஸ்லாம். இஸ்லாம்தான் சவுதி என்ற உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்கள்.

சவுதியின் மீதான பயபக்தி சவுதி செய்யும் எந்த வகை அறமற்ற செயலையும் அறவழிதான் என்று அடித்துக் கூறும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

உணர்வுப் பூர்வமாக அணுகும் இவர்கள் அறிவுப் பூர்வமாக அணுகத் தயங்குகிறார்கள்.

காரணம் மதத்தை அல்லது மார்க்கத்தைப் பலரும் உணர்வுகளில் கட்டிப்போடுகிறார்களே தவிர அறிவோடு அலசுவதில்லை.

முகம்மது நபிபெருமானார் ஓர் உலக மகா புரட்சி நாயகர். இதுவரை அவரைப்போல மனித உள்ளங்களில் தலைகீழ் மாற்றங்களைச் செய்த மகத்தான சாதனையாளர் இன்னொருவர் கிடையாது என்று அறிஞர்கள் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கினைப் பெற்ற 100 சிறந்தவர்களை மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் தொகுத்தார்.

அதில் அவர் தேர்வு செய்த முதலாமவர் முகம்மது நபி அவர்கள்தான். நியூட்டனுக்கு இரண்டாம் இடம். ஏசுவுக்கு மூன்றாம் இடம். புத்தருக்கு நான்காம் இடம்.

மைக்கேல் ஹார்ட் ஒரு கிருத்தவராக இருந்தபோதும் வேற்றுமத இறைத்தூதரான முகம்மது நபிக்கு முதலிடம் கொடுத்தார்.

அத்தனை உயரிய பகுத்தறிவாளர் முகம்மது நபி. ஆனால் அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலர் சிந்திக்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது வேடிக்கை, வினோதம்.

இஸ்லாம் தோன்றியது கி.பி. 610. சௌதி அரேபியா தோன்றியது கி.பி. 1932. இடையில் எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சவுதி என்ற நாட்டின் சட்டதிட்டங்கள் வேறு இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் வேறு. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அதோடு இப்படி வரிந்துகட்டிக்கொண்டு முஸ்லிம் நாடு என்று பறைசாற்றிக்கொள்ளும் பெரும்பாலான நாடுகள், அறிவியல் அறிவில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் முகம்மது நபி பெருமான் அன்றே கூறியதுபோல சீனாவுக்குச் சென்றேனும் கல்வி கற்றுக்கொள் என்பதன் பொருள் புரியும்.

 
துக்கப்படவா வாழ்க்கை

எவ்வழி விரைந்தும் எப்படியேனும்
எட்டிப் பிடித்துக்
கட்டி வைத்துக் கொள்ளல் வேண்டும்
நம்முடனேயே
நமக்குப் பிடித்த யோகங்களை

அன்றி
துக்கப்படவா வாழ்க்கை?

நம்
சந்தோசங்களைக் கொய்ய
நம்மைவிட வேறுயார்
வான்முட்ட
எகிறிக் குதிப்பர்

நம் மகிழ்ச்சிகளை
நாமே மறுக்கும் பாசாங்கு நிலை
பேரவலமல்லவா

இன்றே
இப்பொழுதே
இன்பம் துய்த்து
வாழ்வதே வாழ்க்கை

நாளை என்பது 
உயிரின் தத்துவத்தில்
இல்லவே இல்லை

நேற்றுகளைப்
பாடங்களாக்கி
இன்றுகளை
பரிட்சைகளாக்கி
வென்று வாழ்வதே
வாழ்க்கை
பெரிதினும் பெரிது

நூறு வெறிநாய்களிடம்
ஒற்றை எலும்புத் துண்டு
நீ

ஆயிரம் கொள்ளிக் கட்டைகளிடம்
ஒற்றைப் பஞ்சுப் பொதி
நீ

மில்லியன் புல்டோசர்களிடம்
ஒற்றை மரக் குடில்
நீ

பில்லியன் கொசுக்களிடம்
ஒற்றை நிர்வாணம்
நீ

தப்பத் துடிக்காமல்
கருணைக்கும் அன்புக்கும்
அழுது நின்றால்

மனவீரத்தின் அகரமும் அறியா
உடைந்து ஊற்றும்
சிறு முட்டை
நீ

அடைகாத்துக்கொள்
உன்னை
நீயே

குஞ்சாகு
ஆகு
சிறகாகு
வளர்
பற பற

அதோ
பெரிதினும் பெரிய
வானம்
உன் முன்

பாவ அழிப்பு

நூறு நூறு
ஜென்மங்களில்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த
எத்தனையோ கோடி
பாவங்களுக்கான
மிகக் கொடுந் தண்டனையை
உன் வழியே
அனுபவித்தாயிற்று


இன்னும்
ஆயிரம் ஆயிரம்
ஜென்மங்கள் ஆயிடினும்
இந்த ஜென்மத்தில்
நீ எனக்குச் செய்த
உன் மாபாவங்களில்
சிலவற்றையேனும்
உன்னால்
அழிக்கத்தான் இயன்றிடுமோ?

வாலி வாழி

வலிக்கிறது வாலி
உனக்கு என் உயிரின் அஞ்சலி

வானம் உடைந்தாலும்
உன் வாலிபக் கோட்டை மட்டும்
உடையவே உடையாது

வயதைத் தின்று
வார்த்தைகளில் வாழ்ந்து
விரல் நுனிக் காம்புகளில்
இசைச் சொல் சுரந்த
பத்துப் பத்தாயிரம் மடியே
உனக்கு ஏது மறைவு

வாலி நீ வாழி

உன் அடுத்த பாட்டை
அங்கிருந்தும் எழுது
சிலிர்க்கக் காத்திருக்கிறோம்
இதழ்களில்லா
இதயம் பாடும் மௌனராகம்
அது எனக்கு மட்டும் கேட்கும்
என் உயிரிருக்கும் இடமறிந்து
நீ என்னைத் தொட்டால்
அது உனக்கும் கேட்கும்
என்றேன் நான்

நானென்னும்
இவள் இன்று வெற்றுக்கூடு
என் உயிர் பறந்து
உன்னைச் சேர்ந்தது
நல் உள்ளம் கண்டு

இனி உன் இதயம்
என்பதுவும் வேறா
எனில் என் இதயம்
சென்றதுதான் எங்கே
என்றாய் நீ

14

நீ
கோலம் போடுவதற்கு
என்னால்
புள்ளிகளாய் இருக்க
முடிந்தது

நீ
கோயில் செல்லுவதற்கு
என்னால்
பக்தியாய் இருக்க முடிந்தது

ஆனால்
நீ மாலை சூடும்போது மட்டும்
என்னால்
மாப்பிள்ளையாய்
இருக்க முடியவில்லையே


நீ வரவேண்டாம்
உன் காதலை அவசரமாய் அனுப்பிவை
இங்கே உன் உயிர் சாகக் கிடக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*
அன்பே
எனக்குத் தெரியும்
உன்னைத் தொடுவது
தகாதது என்று

இருந்தும்
உன்னைத் தொடாதபோது
துடிக்கும் என் உயிர்
எனக்கா சொந்தம்
உனக்குத்தானே

என்னைத் தொடவிடு

*
008

என்னவளே
நீ என்னுடனேயே
இருந்திருந்தால்
என் இதயத் துடிப்புகளை
உன் உயிரில்
எழுதியிருப்பேன்
இன்றோ
காகிதங்களில்
எழுதுகிறேன்

உன் பிரிவு
என்னை வருத்தியதைவிட
அதன் விளைவு எனக்குள்
கவி மழை பொழிவதே
மிகை

என்னவளே
இன்றும் நானுன்னை
நேசிக்கிறேன்
கவிதைகளாய்

நீ வாழ்க

*
009

என் இதய உண்டியலில்
விழுந்ததெல்லாம்
செல்லாக் காசுகள்தாம்

இன்றொரு
தங்க நாணயம்
தன்னேர்ச்சியாய் விழுந்ததும்
அத்தனைச்
செல்லாக் காசுகளும்
பொற் காசுகளாகிப்
போனதென்ன மாயம்

*
010








உன்
மூடக் கால்களுக்கும்
மிகக் கீழாய்
மூளையைப் புதைத்து
இரும்புப் பலகையும் இட்டு
மூடிக்கொண்டுவிட்டால்
மொக்கைக் கத்திகூட
உன்னை
அக்கக்காய் அரிந்து
வெங்காயம் கூட்டி
வதக்கி வறுத்து
வாயில்
இட்டுக்கொள்ளாதிருக்குமோ
என்
அன்புடன் இதயமே
வேறு
எதுவும் தர அல்ல
கவிதைகள்
தரவே
நீ
வந்திருக்கிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நிறைந்த விழி விரித்து
நிலவைப் பார்த்து
காதலிக்கிறேன்
உன்னை எப்போதும் என்று
உயிரின் உதடுகளும்
ஓசையெழுப்ப
சொல்லித் திரிகிறேன்

சட்டென்று
நிலவுக்கு இன்று
பேச்சு வந்துவிட்டால்?

என்னைப் பார்த்து
அது
பேசவும் தலைப்பட்டால்?

என்னதான் சொல்லும்
அந்த நிலா என்னிடம்?
 
 உலகுக்கே
  ஒளித்தேன் பொழிவதன்றோ
  என் வழமை

 பிதற்றிச் சரிவதோ
 உன் நிலைமை?

 என்னைத்
 தொடும் தூரத்தில்
  உன் விரல்கள் இல்லாதவரை
  பித்தனே நீ
  பிழைத்தாய் போ....


நிலா
இப்படியும் பேசுமா?
ஆச்சரியம்
என்னை ஆக்கிரமிக்க
 எண்ணச்சிறகுகள்
எனக்குள் படபடகின்றன

 உறங்கும்போதுமட்டுமல்ல
  இதயம் காணாததைக் கண்டு
  விழித்துக்கொள்ளும்போதும்
  கனாக்கள் பீறிடுகின்றன

 உறக்கக் கனவென்பது
  விழிக்கு உள் நிறையும்
  விருப்பச் செழிப்பு

 உறங்கா கனவென்பதோ
  விழிக்கு வெளியில்
 விரிந்து பரந்து
 விண்முட்டி நிறைந்து
  கொதிக்கும் உயிரழிப்பு

ஓ..
என்றால்
நான் நிலவிடம்
இனி என்னதான் சொல்வேன்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

வாசிப்பில் லயிப்பவர்கள்...

வாசிப்பில்
லயிப்பவர்கள்
மிதமாக
வாசிப்பவர்களைக்
கேவலமாக
ஏன் பேசுகிறார்கள்?

மனிதர்களை
அவர்களுக்காகவே
நேசிக்கத் தெரியாதவர்களின்
வாசிப்பு
அவர்களுக்கு
எதைத் தந்துவிடும்?

எழுத்து வாசிப்பு மட்டுமா
வாசிப்பு
இதய வாசிப்பு என்பது
அதனினும் பெரிதில்லையா?

வாழ்க்கையை
வாசிப்பவர்களைவிட
நூல் வாசிப்பவர்கள்
சிறந்தவர்களாகிவிட
முடியுமா என்ன?
இந்தப் பிறப்பில்

என்
மாமழைக்கும்
நனையாத
உன்
புற்கள்

என்
முகில்மடிகள்
மலடிகளானபின்
ஈரமில்லையா
உன்
நெஞ்சில்
என்கின்றன
மயான பூமி

நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும் 
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்


வாழ்க்கை வண்டி



இருட்டை
உடைத்தெறிந்து
எங்கிலும்
நிலைக்கப் பார்க்கிறது
வெளிச்சம்

வெளிச்சத்தை
உண்டு செரித்து
கருமையை
நிறைக்கப் பார்க்கிறது
இருட்டு

இத்தொடர்ப்
போராட்டங்களுக்குள்
மாய மயக்கத்தோடு
ஓடி முடிகிறது
வாழ்க்கை

பெண் புரியாத புதிர்



உலகம் போற்றும் 
கவிஞர் நீங்கள்
உங்களாலாவது 
புரிந்துகொள்ள முடிகிறதா 
பெண்ணின் மன ஆழத்தை
அவள் சிரிப்பின் அர்த்தங்களை

என்று

காதல் தவிப்பில்
காய்வதும்
காயும்முன் ஈரமாவதுமாய்
அலையடித்து
நிறம் ஒட்ட வழியற்ற
மணலாகிக் கிடக்கும்
இதயத்திடமிருந்து

ஒரு கேள்வி
வந்து முட்டியது
என்னை

பெண்ணின் மனதைத் 
தெளிவாகவே
புரிந்துகொண்டவன் 

நான்

புரிந்துகொள்ளவே 

முடியாது என்று
பெண்ணின் மனதைத் 

தெளிவாகவே
புரிந்துகொண்டவன் 

நான் ;-)

என்று இதற்கு 

நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்

ஆனாலும் 

ஒரு வாழ்க்கைச் சுவாரசியத்தை 
உங்கள் முன் வைக்கிறேன்
பாருங்கள் என்றேன்

எந்த ஓர் அழகும்

அறியமுடியா அதிசயமாய்
இருக்கும் வரைதான் 

அழகு

மீண்டும் மீண்டும் 

காண வைக்கும் 
மந்திரம்

பெண்ணின் மனம் 

புரியாததல்ல
அது சட்டென்று புரிந்துவிடும்
ஆனால் புரிந்தது 

உறுதிப்படும் முன்
மெல்ல நிறமிழப்பதாய்த் 

தோன்றும்

என்றால் அவள்
அவளே அறியாத 

வற்றாப் புதிர்

ஏன்?

அப்படி அவள் 

இருக்கும்வரைதான்
அவள்மீது எவருக்கும்

சுவாரசியம் இருக்கும்

எல்லாம் 

பளிச் பளிச் என்று 
ஆகிவிட்டால்
சட்டெனப் 

புளித்துப் போகக்கூடும்

வானத்தை 

ஆயிரம் முறை பார்த்தாலும்
அது ஏதோ 

ஒரு செய்தியைப்
புதிதாய்ச் 

சொல்லிக்கொண்டே 
இருக்கும்

இந்தப் பிரபஞ்சத்தில்
புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று
ஆகாயத்தைவிட வேறு உண்டா?

அந்த சுவாரசியம்தானே 

அதன்மீது
அடங்காத ஈர்ப்பை நமக்குள்
கட்டி வைத்திருக்கிறது

இப்படியும் பதில் சொல்லலாம்

ஓர் 

ஆணின் விழிகளில் 
ஆயிரம் ஆசைகள்


ஒரு பெண் மட்டும்
ஒற்றை ஆசையோடு 

இருக்க வேண்டுமா?

ஓர் ஆணின் தேவைகளில்
ஆயிரம் சறுக்கல்கள்
ஒரு பெண் மட்டும்
ஒற்றைத் தேவையோடு மட்டும்
உறைந்து போய் 

இருக்க வேண்டுமா?

ஓர் ஆண் எப்படியெல்லாம்
மாறித் தொலைந்து விடுகிறான்
இவனை இப்படி 

நம்புகிறோமே
ஏமாந்துவிடுவோமோ?

ஏமாந்தால் 

அவனுக்கு ஒன்றுமில்லை
நாமல்லவா 

கந்தல் துணியாகிவிடுவோம்
அப்படியல்லவா 

சமுதாயம் நம்மை
ஆக்கி வைத்திருக்கிறது 

என்று
ஒரு லட்சம் ஒரு கோடி 

சந்தேக எண்ணங்கள்
அவள் மனதில் 

ஊசலாடாதா?

ஆண் கெட்டால் 

ஒரு அத்தியாயம்தான்
பெண் கெட்டால் 

புத்தகமே போட்டுடுவாங்க
என்று நம் சமூகத்தில் ஒரு பெண்
உள்ளுக்குள் 

கதறியழாமல் இருக்க முடியுமா?

ஆக பெண் 

புதிராவது அவளாலா
அல்லது ஓர் ஆணாலா
அல்லது அவளை 

அப்படி ஆக்கிவைத்திருக்கும்
ஆண் படைத்த 

சமூகத்தாலா?
முரண்கள்

உலகப் புகழ்
மல்லிகைப்
புன்னகைகளுக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒரு கோடி ரகசியங்கள்

படைத்தவனையே
அடித்து நொறுக்கும்
வசீகர விழிகளில்
கிழிந்து வழிகின்றன
விழிநீர்ப் பேரருவிகள்
...
மென்மையிலும் மென்மை
உண்மையிலும் உண்மை
கருணையிலும் கருணை
கொண்ட இதயங்கள்
எவர்க்கும் தாங்கவியலா
வலிகளைத்
தாங்கிக் கிடக்கின்றன

இணையத்தில் 

என்னைக் கடந்த சில வரிகள்
என்னை இந்த
வரிகளாக்கிப் போயின