30 வெளிச்ச அழைப்புகள்


எல்லோருக்கும் முதல்காதல் என்று ஒன்று வரும். பெரும்பாலும் அது தோல்வியாகவே முடிந்திருக்கும். அப்படித்தான் எனக்கும் ஆனது. பதின்ம வயதின் முதல் ஏக்கக் கனவுகள் சட்டென்று கீழே விழுந்து உடைந்ததும் மனம் கிடந்து துடிக்கும் பாருங்கள் அதைவிட கொடுமை வேறு ஒன்று இருக்க முடியாது.

சுமக்க முடியாதவனுக்குத்தான் சுமையின் வலி மிகுதி. நடக்க முடியாதவனுக்குத்தான் நடையின் முயற்சி கொடுமை. ஆயினும் காலம் தன் மழையைக் கருணையோடு அந்த இளைய இதயத்திலும் பொழியத்தான் செய்கிறது. வாழ்க்கை வந்து முன்னின்று வாவென்று அழைக்க கனவுகள் மெல்ல வழிவிட்டுவிடுகின்றன. நாம் நடக்கத் தொடங்கிவிடுகிறோம். அப்போது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதனம் நமக்கு நாமே அருளும் மகா வரம்.

மத்திய கிழக்குக்குப் புறப்பட்ட விழிகளின் முன்னால் சூரியன் தன் ஒளிக்கரங்களை நீட்டுகிறான். அந்த வெளிச்ச அழைப்புகள் வாழ்க்கையின் படிக்கட்டுகளை செம்மையாய் அமைத்து அடியெடுத்து வைக்கச் சொல்லி அன்பு காட்டுகிறது ஆதரவு தருகிறது. வேறென்ன வேண்டும்?



வெளிச்ச அழைப்புகள்

அதோ
நம் கதாநாயகன்
செழித்த தாடிக்குள்
வாடிக்கிடக்கிறானே
அவனேதான்

கண்களில் ஒரு
காதல்கொடி ஏற்றினான் நேற்று

பாவம்
இன்று அது
அரைக்கம்பத்தில்
நிறம்மாறி இறங்கி நிற்க
வெறும்
கண்ணீர்க் கொடியாகிப்போனான்

நின்றுபோன
கடிகாரத்தைப்போல
அவன் நெஞ்சம்
கடந்தகால
வசந்தங்களையே
காட்டிக் கொண்டிருக்கிறது

அரளிப்பூ கூட
அழகாய்த்தான் சிரிக்கிறது

அப்படி ஒரு
புறச்சிரிப்பில் தானே
அவன் தன்னை இழந்து விட்டான்

வாலிபத்தின் நச்சரிப்பில்
அவன்
முட்டாளாகிக் கொண்டிருக்கிறான்
என்று அவனுக்குத்
தெரியாமல்தான் போய்விட்டது

ஆம்
அவனை
அவனாலேயே
புரிந்து கொள்ள முடியவில்லை

கண்களிலும்
கன்னங்களிலும் வழிந்த
தென்னங்கள்
அவள்
உள்ளத்தைச் சுவைக்கும் முன்
அவனை மயங்கச் செய்து விட்டது

போதை தெளிந்தபோது
புத்தி தெளிந்ததில்
உடைக்கப்பட்ட
அவன் இதயம்
ஒன்று சேரவா போகிறது

காலன் கட்டிவைத்த
கவலை வலைக்குள் சிக்கிக் கொண்டு
நிம்மதிக்குத் தவமிருக்கிறான்

வலையை அறுத்தெறியும்
வலிமையில்லாமலில்லை

அதில்
சிக்கிக் கிடப்பதிலும்
அவனொரு
சுகமல்லவா காண்கிறான்

ஆயினும்.

அவன் எதிரே
மௌனமாய்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
இரத்த பந்தங்களை ஊடுருவுகின்றான்

தன்
கைகளைக் கொண்டு
அவர்களின் கோட்டையைத் திறக்க
நம்பிக்கை பூண்டிருக்கும்
அந்தக்
கண்களை நோக்குகின்றான்

எழுந்து நடப்பதென்பது
நெருஞ்சி முட்பாதையில்
விழிகளையே பாதங்களாக்கி
நடைபயில்வதைப் போலத்தான்

இருப்பினும்
அந்தத் தவநடை

அவனையொரு
வெளிச்சமாகவல்லவா
உயர்த்திவிடும்

ஆம்
நம் கதாநாயகன்
நடக்கத் துவங்கிவிட்டான்

அவன் பயணம்
இனி
கிழக்கை நோக்கித்தான்

அவனை வரவேற்க
வெளிச்ச அழைப்புகள்
என்றென்றும்
விழித்துக்கொண்டே
இருக்கும்.