Nadodi Tamilan
குர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்கள் சிலர்? - முடியாது. குரானுக்கு முரண்படும் ஹதீதுகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது ஹதீத் கலையின் விதிகளுள் தலையானது.
அவ்வளவுதான் அடிப்படைக் கருத்து.
இதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஹதீதுப் பிரியர்களை ஏராளமாகக் காண்கிறேன்.
ஹதீதுகள் நிராகரிக்கப்படக் கூடாது. உண்மை. மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால் ஹதீது என்பதற்காகவே முரணானவைகளும் மூட நம்பிக்கைகளும் நம்ப முடியாத கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது.
குர்-ஆன் தான் ஆதாரம். வேறு எதுவும் ஆதாரமாக ஆகமுடியாது. குர்-ஆனுக்கு விளக்கமாகவே ஆக முடியும்.
ஆதெண்டிக் - ஆதாரப் பூர்வமான என்ற ஒரு சொல்லை ஹதீதுக்கு பயன்படுத்துவார்கள்.
என் கேள்வி:
ஆதாரப் பூர்வமான வசனம் என்று எதையாவது குர்-ஆனில் சொல்வீர்களா?
எல்லாமே ஆதாரப் பூர்வமானதானே?
ஹதீதில் ஆதரப் பூர்வமான என்ற சொல் பயன்படுத்தப் பட்டுவிட்டாலே ஐயம் என்ற ஒரு சொல் அடிக்கடி ஊடாடத்தானே செய்யும்.
இது ஏன் பலருக்கும் புரிவதில்லை.

*
சகோதரரே....,
பொதுவாக சிம்பிள் ஆக எழுதிவிட்டீர்கள். நீங்கள் சொன்ன விதத்தில் குர்ஆனுக்கு முரன்படும் போது மறுப்பதில் என்ன தவறு.? என்று சாதாரண அறிவு உள்ளவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். நாம் ஹதீஸ்களை அனுகும்போது நிதானம் மிகவும் அவசியம். ஹதீஸ்களை தொகுத்த இமாம்
களும் , அவைகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்த மார்க்க அறிஞர்களும் சஹீஹான ஹதீஸ்களையும் , லயீஃபான ஹதீஸ்களையும் தரம் பிரித்து அடையாளம் காட்டியுள்ளார்கள். ஹதீஸ்களின் ஆராய்ச்சி என்பது சாதாரணமானதல்ல. மிகவும் ஆழமானது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சஹீஹான ஹதீஸ்கள் எக்காலத்திலும் குர்ஆனுக்கு முரன்படாது என்பதுதான். அப்படி முரன்படுவது போல் தெரிந்தால் அது நாம் புரிந்து கொள்வதில் உள்ள தவறாகத்தான் இருக்கும். இதை சொன்னது யார் தெரியுமா.? இப்போது ஹதீஸ்களை மறுத்துக் கொண்டிருக்கும் PJ , 90களில் காதியானிகளுக்கு சவால் விட்டு பேசியது. ஆனால் அந்த காதியானிகளின் நிலைக்கே அவர் மாறியது எதிர்பாராதது. வர வர ஆளாளுக்கு இஷ்டத்திற்கு தனது அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று ஹதீஸ்களை மறுக்கும் அளவுக்கு நிலமை ஆகி விட்டது. இவர்கள் மறுத்த அனைத்து ஹதீஸ்களுக்கும் தெளிவான பதில்கள் கொடுக்கப்பட்டு விட்டன.
அவைகள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும்.

-இக்பால் ஹசன்
 >>>ஹதீஸ்களின் ஆராய்ச்சி என்பது சாதாரணமானதல்ல. மிகவும் ஆழமானது. <<<

உண்மை. நான் அதை வாசித்திருக்கிறேன். கடுமையான சட்டங்களை உருவாக்கிக்கொண்டு அதிலெல்லாம் தேர்ந்து வருகின்ற ஹதீதுகளைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். மற்றவற்றை மறுதளித்தார்கள். சிறப்பான சேவை. பாரா
ட்டுக்குரிய சேவை

அப்படி கடுமையாகத் தேர்வு செய்ததால் இமாம் புகாரியின் ஹதீதுகள் மட்டும் 99% நீக்கப்பட்டன.

நான்கு லட்சம் ஹதீதுகளைத் தொகுத்து உலகெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார் இமாம் புகாரி. அவை அனைத்துமே ஆதண்டிக் என்று அவர் உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார்

ஆனால் கடுந்தேர்வில் தேறிவந்தவை நூற்றில் ஒன்றுதான்.

அந்த ஒன்றும் மீண்டும் மீண்டும் சில இடங்களில் வரும், அதன் தொடர்ச்சி மற்றும் சொன்னவர் பெயர் காரணமாக.

முன்பு 4 லட்சம் ஹதீதுகளை வைத்துக்கொண்டு குர்-ஆனுக்கு முரணான என்று சொன்னால் இப்படித்தான் சொன்னார்கள். சண்டைக்கு வந்தார்கள். 

பின் கடுமையான தேர்வுக்குப் பின் சுமார் வெறும் நான்காயிரத்தை மட்டும் கொடுத்தபோது அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இறைவன் ஒருவருக்கு மேல் ஒருவரை அறிவில் உயர்வானவர்களாகவே படைக்கிறான் என்று குர்-ஆன் சொல்கிறது.

மனிதர்களால் தேர்வு செய்யப்பட்டவை எல்லாம் இந்த அறிவுத் தேர்வுக்கு ஆளாகக் கூடியவையே.

இறைவனால் அருளப்பட்ட குர்-ஆன் வரிகளைத் தவிர மற்ற எல்லாமும் எல்லாக்காலமும் ஆய்வுக்கு உள்ளாக்கப்படக் கூடியவையே

இதில் மிக முக்கியமாக இன்னொரு விடயமும் இருக்கிறது.

அன்றைய கடுந் தேர்வுக் குழுவில் இருந்த எல்லோருமே எல்லா ஹதீதையுமே முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஓட்டெடுப்பு நடத்தி 50+% வாக்குகள் வாங்கிய ஹதீதுகளே ஏற்புடையன என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று வரலாறு சொல்கிறது.

அன்றே தேர்வு அறிஞர்களால் ஐயம் கொண்ட ஹதீதுகள் உண்டு என்பதையும் நீங்கள் ஏற்க வேண்டும்.

இப்படி நான் எழுதுவதால் நான் ஹதீதுகளை மறுப்பதாக நீங்கள் எண்ண வேண்டாம். 

அன்புடன் புகாரி

புகாரி இமாம் மட்டுமல்ல. மற்ற இமாம்களும் லட்சக்கணக்கான ஹதீஸ்களை திரட்டி அவைகளை அவர்களே தரம் பிரித்து சில ஆயிரங்களையே நமக்குத் தந்தார்கள். அவர்களும் மனிதர்கள்தான். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை வல்லுனராகிய நாசிருத்தீன் அல்பானி அவர்களும் மிகவும் ஆராய்ந்து சில ஹதீஸ்களை லயீப் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டிய முறையில் கண்ணியம் இருந்தது. அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான ஷேக் பின் பாஸ் அவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடன் கூடிய நட்புடன்தான் அவர்கள் பழகினார்கள். ஆனால் இப்போது இவர்கள் மறுக்கின்ற ஹதீஸ்கள் வேறுவிதமானவை. தங்கள் வார்த்தைகள் நிலைக்க வேண்டுமே என்பதற்காக மிகவும் ஆபாசமான முறையில் சித்தரிக்கின்றனர். அதை டி.வி.யில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கும் வகையில் செய்தது மிகவும் வேதனையானது.
அரைகுறை அறிவுள்ள இளைஞர்கள் சஹாபாக்களையும் இமாம்களையும் எடுத்தெரிந்து பேசுகின்ற நிலமை ஆரோக்கியமானதல்ல.
அல்லாஹ் அனைவர்களையும் நேர்வழியில் செலுத்துவானாக.

-இக்பால் ஹசன்
>>>புகாரி இமாம் மட்டுமல்ல. மற்ற இமாம்களும் லட்சக்கணக்கான ஹதீஸ்களை திரட்டி அவைகளை அவர்களே தரம் பிரித்து சில ஆயிரங்களையே நமக்குத் தந்தார்கள்.<<<

இல்லை சகோ. லட்சங்களைச் சில ஆயிரங்களாய் மாற்றியவர்கள் பிறகு வந்தவர்கள். அவரின் மாணவர்கள். தேர்வுக
் குழுவினர்.

இமாம் புகாரி தன் தொகுப்புகளை உலகெங்கும் எடுத்து அனைத்து மேடைகளிலும் உரையாற்றினார் என்ற குறிப்பைத்தான் நான் வாசித்தேன்.

மாற்றமான தகவல் இருந்தால் எனக்கு அதைத் தாருங்கள்.

 >>>அவர்களும் மனிதர்கள்தான். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.<<<

இதையேதான் நானும் சொல்கிறேன் சகோ

ஹதீதுகளைத் தொகுத்தவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்

ஹதீதுகளை ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்து தேர்வு செய்து லட்சங்களை சில ஆயிரங்களாய் மாற்றியவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

இது ஆதண்டிக் இது ஆதண்டிக் இல்லை என்று சொன்னவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

குர்-ஆன் மட்டுமே இறைவாக்கு. அது ஒன்றே ஆதண்டிக். அது ஒன்றே யாரும் ஆதண்டிக் என்று குழு அமைத்துத் தீர்மானம் நிறைவேற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதது.

குர்-ஆன் சொல்வதுபோல ஒருவரைவிட அறிவில் சிறந்த இன்னொருவர் பிறந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்களின் அலசல் மேலும் தரமானதாக இருக்கும் என்பது தெளிவு.

நான் ஹதீதுகளை வேண்டாம் என்று சொல்பவனல்ல. ஹதீது என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அதன் வழி செல்லவேண்டும் என்று சொல்பவன்.

*

>>>தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை வல்லுனராகிய நாசிருத்தீன் அல்பானி அவர்களும் மிகவும் ஆராய்ந்து சில ஹதீஸ்களை லயீப் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டிய முறையில் கண்ணியம் இருந்தது. அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான ஷேக் பின் பாஸ் அவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடன் கூடிய நட்புடன்தான் அவர்கள் பழகினார்கள். <<<<

பாராட்டுக்குரியவர்கள்

*

 >>>ஆனால் இப்போது இவர்கள் மறுக்கின்ற ஹதீஸ்கள் வேறுவிதமானவை. தங்கள் வார்த்தைகள் நிலைக்க வேண்டுமே என்பதற்காக மிகவும் ஆபாசமான முறையில் சித்தரிக்கின்றனர். <<<

நான் அவர்களின் ஆதரவாளன் அல்லன். என் நிலைப்பாடுகள் என் சொந்த அலசல் ஆய்வு காரணமானது. அனுபவம் சார்ந்தது. நான் எந்த இறுதி முடிவையும் எவருக்கும் வலியுறுத்துவதும் இல்லை. என் கருத்தைச் சொல்லிப் போவேன் அவ்வளவுதான்

*
சகோதரரே..,
நீங்கள் ஹதீஸ் மறுப்பாளர்களின் ஆதரவாளர் இல்லை என்று சொன்னது குறித்து மகிழ்ச்சி. ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரனாக இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிஞரும் சொன்னது இல்லை. அப்படியிருந்தால் அது லயீஃபான ஹதீஸாகத்தான் இருக்கும். சஹீஹான ஹதீஸ
் குர்ஆனுக்கு முரன்படாது. ஹதீஸ்கள் விஷயத்தில் நாம் மேலும் நமதறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்த மறைந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

-இக்பால் ஹசன்


>>>ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரனாக இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிஞரும் சொன்னது இல்லை<<<

அதைத்தான் நானும் சொல்கிறேன். அன்று தொகுத்தார்கள் என்பதற்காக ஏற்காமல் முரணாக இல்லை என்பதற்காக ஏற்போம்.


குர்-ஆனுக்கு முரண் என்பதை பல வழிகளில் உணரலாம்.

- அறம் சாராதது
- நம்ப முடியாத கதை
- மூட நம்பிக்கைக்கு வித்திடும் கருத்து
- அயலானை நேசிக்காதவை

இப்படியே அடுக்கிக்கொண்டு செல்லலாம்

 >>>ஹதீஸ்கள் விஷயத்தில் நாம் மேலும் நமதறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்த மறைந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். <<<

மிகவும் சரி. நாம் நமதறிவை மேலும் வளர்த்துக்கொண்டு அதற்கேற்ப ஹதீதுகளை அ
னுகவேண்டும்.

நிச்சயமாக தங்கள் நேரங்களை அற்பணித்த மார்க்க அறிஞர்களை நாம் மதித்தல் வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, இஸ்லாம் மூட நம்பிக்கைகள் அற்ற மார்க்கம் என்பதில் களங்கம் வரக்கூடாது

குர்-ஆன் கூறும் அறம் அப்பழுக்கற்றது என்பதில் ஐயம் வரக் கூடாது

*
அன்பினிய இக்பால் ஹசன், உங்களின் அக்கறையான அறிவுப் பூர்வமான பதில்கள் இதை ஒரு நல்ல கருத்தாடலாகக் கொண்டு செல்வதில் நான் மகிழ்வடைகிறேன்.

ஹதீதுகள் ஏன் குர்-ஆனைவிட அதிகம் பேசப்படுகினறன என்று என்றாவது சிந்தித்தீர்களா?


இஸ்லாம் பற்றிய உரைகள் நிகழ்த்தவரும் மார்க்க அறிஞர்களுள் பலர்.... ஏன் மேடைகளில் ஹதீதுகளைப் பற்றியே பேசுகிறார்கள். ஏன் குர்-ஆன் வரிகளை அத்தி பூத்தாற்போல் பேசுகிறார்கள் என்று சிந்தித்தீர்களா?

சியா சுன்னா பிளவுதான் அதற்கான காரணம்.

அவர்களுக்கும் இவர்களுக்கும் குர்-ஆன் தான் ஒரே நூல். அதை இருவரும் மறுப்பதே இல்லை. மறுக்கவும் முடியாது. 

பிறகு எப்படித்தான் வேறுபாட்டைக் கொண்டுவருவது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு, உனக்கொரு ஹதீதுத் தொகுப்பு எனக்கொரு ஹதீது தொகுப்பு. நாம் வேறுபட்டவர்கள். நம் மத நம்பிக்கையே வேறு என்று ஓர் அரசியல் பிரிவுக்கு மதச் சாயம் பூசினார்கள்.

அவ்வளவுதான்!

காசு பணம் மணி துட்டு துட்டு
ஓட்டுக்கு
காசு பணம் மணி துட்டு துட்டு
ஆட்சிக்கு
காசு பணம் மணி துட்டு துட்டு
வியர்வை இல்லா வெற்றிக்கு
காசு பணம் மணி துட்டு துட்டு
ஜனநாயகத்துக்கு
காசு பணம் மணி துட்டு துட்டு
நாடு நாசமாய்ப் போவதற்கு
காசு பணம் மணி துட்டு துட்டு
அன்புடன் புகாரி
வாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலையாப்பு நண்பர்களே,
நாம் இங்கே நம் கருத்துக்களை முன் வைக்கிறோம். ஒருவர் கருத்து மற்றவருக்கு ஏற்புடையதாய் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.
இருக்கும்பட்சத்தில் கவலை இல்லை. ஏற்புடையது இல்லாவிட்டால் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது
அந்த மாற்றுக் கருத்து என்பது கருத்துக்கு மட்டும்தான், நட்புக்கு இல்லை என்றால் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.
சமூக வலைத்தளங்களில் உரையாடுபவர்கள் மெல்ல மெல்ல விரோதிகளாய் ஆகிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.
அறியாமை மட்டுமே வெறுப்புக்குக் காரணம்.
இந்த உலகை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் எல்லோருடனும் உரையாட வேண்டும். எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
ஏற்பதை ஏற்று மறுப்பதை மறுத்து பின் ஒரு நாள் உணர வேண்டியதை உணர்ந்து ஏற்று என்று தொடர்ந்து செல்ல வேண்டும்.
அப்படியான அறிதலுக்கும் புரிதலுக்கும் நமக்கு உதவுபவர்கள் நம் நண்பர்கள்தாம். அவர்கள்மீது நாம் வெறுப்பு கொள்வது சரியா என்று சிந்திக்க வேண்டும்.
நம் கையின் ரேகைகள் ஒரே மாதிரி இருக்காது. எண்ணங்கள் மட்டும் ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும்?
ஆனால் அந்தக் கைகள் குலுக்கிக் கொள்ளக் கூடாது என்று வெறுப்பு கொண்டால், நாம் தெளிந்த நல்லறிவைப் பெறவில்லை என்று பொருள்.
ஆமாம் ஆமாம் என்று சொல்வதற்குத்தான் நமக்கு நட்புகள் வேண்டுமா?
மறுத்து அறிவை வளர்க்க ஆவன செய்யும் நண்பர்கள் விரோதிகளா?
உண்மையில் அவர்கள்தாம் நல்ல நண்பர்கள்.
தனி மனிதக் கீறல் இல்லாமல், எந்தக் கருத்துக்கு இடையிலும் கடும் மோதல்கள் நிகழலாம். ஆனால் அது நட்புக்கு இடையில் மோதல் என்று ஆகிவிடக் கூடாது.
என்னிடம் ஒரு நூறு கருத்துக்கள் இருக்கின்றன என்று கொள்வோம். அந்த நூறில் 80 கருத்துக்களில் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள். இருபதில் நீங்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறீர்கள்.
நான் உங்களை வெறுக்க வேண்டுமா விரும்ப வேண்டுமா?
நீங்கள் தணுஷ் ரசிகர் நான் சிம்பு ரசிகர் என்று சண்டை போடுபவர்கள் இந்த உயர்ந்த தளங்களில் இருத்தல் கூடாது
நீ தணுஷ் புகழ்பாடு நான் சிம்பு புகழ் பாடுகிறேன் ஆனால் இருவரும் கட்டியணைத்து நண்பர்களாய் இருப்போம் என்பதே நல்லறிவு.
அன்புடன் புகாரி
சியா- Shia
சுன்னா - Sunnah
என்ற பிரிவினர்களுள்
உண்மையான....
நல்ல....
சிறந்த....
முஸ்லிம்கள் யார்?
அன்புடன் புகாரி
20171228



சியா சுன்னா பிரச்சனையால் பல உயிர் இழப்புக்கள். அவரவர் வழி அவர்கள் போகட்டும் ,அதன் பலனை அவர்கள் அறியட்டும் - நீடூரலி
உயிரிழப்புக்குக் காரணம் பரிசுத்தமான மடத்தனம் என்பது என் தாழ்மையாக கருத்து
எவனொருவன் குர்-ஆன் சொல்லும் அறத்தை - தர்மத்தை - ஹலாலை உறுதியாகப் பற்றிக்கொண்டு நல்வழியில் செல்கிறானோ அவனே சிறந்தவன், அவனே நல்ல முஸ்லிம், அவனே உண்மையான முஸ்லிம்.
அப்படியானவன் சியா பிரிவிலும் இருக்கலாம் சுன்னா பிரிவிலும் இருக்கலாம்
சியா சுன்னா என்பன திமுக அண்ணா திமுக போன்ற அரசியல் கட்சிகள். இஸ்லாத்தின் பிரிவுகள் அல்ல. அதற்கும் இஸ்லாம் மார்க்கத்தின் அறநெறிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
சியா என்பவர்களும் குர்-ஆனையும் நபிபெருமானையும்தான் பின்பற்றிச் செல்கிறார்கள்.
சியா என்பவர்கள் நபி பெருமானாரின் உறவுகள்
சுன்னா என்பவர்கள் நபி பெருமானின் நண்பர்கள்
சில நண்பர்கள் உறவுகளாயும் இருக்கிறார்கள்
அன்புடன் புகாரி
இறைவனுக்கு இணை வைக்கக் கூடாது. இணை வைத்தால் அவன் இஸ்லாமியன் அல்ல.
இறைவனின் சொல்லுக்கு இணை வைப்பதும் இறைவனுக்கு இணைவைப்பதும் ஒன்றுதானே?
குர்-ஆனுக்கு இணை வைத்தால் அவன் இஸ்லாமியனா?

பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்
துணிந்தவனுக்குத் துக்கமில்லை
துக்கம் வரும் வேளையில் சிரித்தல் சிறப்பு
சிறப்பு என்பது ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் என்பது அறத்தின் மையச் சக்தி
இணையில்லாத சக்தி என்பது இறைவன்
அன்புடன் புகாரி
>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை என்பதால் சமூக ஊடகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது. <<<
நான் வேறுமாதிரி நினைக்கிறேன் மணி மணிவண்ணன்
வாதாடுபவர் தன் ஈகோவால் விடாப்பிடியாய் நின்று விரோதியாய்க்கூட மாறி ஓடிப்போகலாம்.
ஆனால் அந்தக் கருத்தாடலைக் கேட்போரின் உள்ளத்தில் பெரும் தாக்கம் ஏற்படும். அறிதல் ஏற்படும். அதுதான் கருத்தாடலின் பெரும் பலன்.
எதிர்த்து வாதிடுபவர் ஒருவர் அல்லது இருவர். ஆனால் அறிதல் புரிதலில் மாற்றமடைவோர் பல நூறு பேர்.
அதோடு இன்னொரு பயனும் எனக்குக் கிடைக்கிறது.
ஒரு கருத்தாடலில் இறங்கும்போது எனக்குப் பல தேடல்கள் எழுகின்றன. நான் தேடத் தொடங்குகிறேன். அதனால் என்னையும் நான் வளர்த்துக்கொள்கிறேன்.
அன்புடன் புகாரி
யாருக்குமே
எதிரியாய் இருக்க
விழைவதில்லை நான்

அவ்வண்ணமே
எழுதாமலும்
என்னால்
இருக்க இயலுவதில்லை

என்னை
நான் விரித்து எழுதினால்
எங்கிருந்தெல்லாமோ
தோட்டாக்களோடு
நிரம்பி வருகிறார்கள்
நண்பர்கள்

என்ன செய்ய முடியும்
நான்
எழுதிக்கொண்டேதான்
இருப்பேன்

அறம்
எழுத வந்தவனுக்கு
பயம் இருக்கக் கூடாது

தர்மம்
பேச வந்தவனுக்கு
தயக்கம் இருக்கக் கூடாது

ஹலால்
வலியுறுத்த வந்தவனுக்கு
வார்த்தை சுருங்கக் கூடாது

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்

ஜனநாயகச் சட்டத்தில் மனிதர்கள் எல்லோரும் சமம். இஸ்லாமிய சட்டத்தில், வாளும் கற்களும்தான் பதில் - (In a democratic constitution law, everyone are equal. In a Islamic Law, sword and stones are the answer.)

என்று ஒரு நண்பர் வாட்சப் உரையாடல் ஒன்றில் சொன்னார். அவருக்காக ஒரு நீண்ட பதில் எழுத வேண்டியதாயிற்று. இதை எழுத உதவிய பலரின் எழுத்துக்களுக்கும் என் நன்றி. இதோ என் பதில்:


இஸ்லாம் பற்றிய எந்தத் தெளிவும் இந்த வரிகளில் தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்த வேண்டிய கடமையை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி. 

1
ஒரு நாட்டின் மந்திரியும் செருப்பு தைக்கும் கூலியும் தோளோடு தோள் நின்று தொழுவார்கள். இது ஜனநாயகமா?


ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் என்று எவன் வேண்டுமோ எப்போது வேண்டுமோ பள்ளிவாசலுக்குள் நுழையலாம். இது ஜனநாயகமா?


இந்தியாவில் அகிம்சை என்றாலே என்போன்றோருக்கெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது மகாத்மா காந்தியைத்தான். அந்த அகிம்சாமூர்த்தி இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது பிரதிநிதியாய் வந்த உமர் பின் கத்தாப் அவர்கள் பற்றி என்ன சொன்னார் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை. ”உமர் அவர்களைப் போன்ற நேர்மையானதும் நேரானதுமானதுமான ஓர் ஆட்சியாளர் இந்தியாவை ஆட்சிசெய்தால் மட்டுமே இந்தியாவை மேம்படுத்த முடியும்”. அகிம்சையை உயிராய் நேசித்த காந்தி வாளும் கற்களும் கொண்டு ஆட்சி செய்தவரையா புகழ்வார்?


மகாத்மா காந்தி அவர்களின் பத்திரிகையான ‘யங் இந்தியாவில் ‘1924 ல். அவர் வெளியிட்ட அறிக்கை: “ முகமது நபியவர்களின் வாழ்வின் அதி சிறப்பான பக்கங்களை அறிய ஆர்வங்கொண்டு அவரின் சுயசரிதை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. அறிய அறிய உண்மை விரிவாய்த் தெரிய வந்தது. இஸ்லாத்தின் வெற்றிக்குப் பின் வாள் இருக்கவேயில்லை அதன் வடிவான வாழ்வியல் மட்டுமே இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்” அவரது வெற்றிக்கான காரணிகள்: · உறுதியான உச்சமான எளிமை · உண்மையான தன்னலமற்ற தனிப்பட்ட தன்மை · அறவே அகம்பாவமில்லாத இனிய இயல்பு · உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் கடைப்பிடிப்பதிலும் இருந்த மகத்தான பண்பு · தோழர்களிடமும் பின்பற்றுபவர்களிடமும் அவருக்கு இருத்த ஈடுபாடும் ஆழமான அன்பும். · எடுத்த வேலையைச் செம்மையாகச் செய்ய ஆபத்துக்களை அதன் அடிவரைக்கும் சென்று சந்தித்த அவரின் மன வலிமை · அவரது ஆண்மையும் ஆளுமையும் வீழ்ச்சி பெறாத வீரமும் · இறைவனிலும் அவர் எடுத்துக்கொண்ட பணியிலும் அவருக்கிருந்த ஆட்டிப்பார்க்கவே முடியாத ஆழமூன்றிய நம்பிக்கை. இது போன்ற இத்தகைய தன்மைகளையெல்லாம் தன்னகத்தே இயல்பாகவே கொண்டிருந்ததால்தான் அத்தனை கடினமான பாதைகளைக் கடந்து வெற்றியைத் தொட்டிருக்கிறார் நபி பெருமான் அவர்கள். ஆகவே வாள்களுக்கும் நபியவர்களின் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்கவேயில்லை என்றார் காந்தி 

5
ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். – காந்திஜி

6
முகம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். – ஜவஹர்லால் நேரு

7
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முகம்மது நபி ஒருவரே. – கிப்பன்

8
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். – கலைஞர் கருணாநிதி

9
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். – கவியரசி சரோஜினி நாயுடு

10
ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ வானவர் வந்து “இறைத்தூதர்” என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். - எழுத்தாளர் பா. ராகவன்

11
குர்-ஆனும், அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத விஞ்ஞானமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்-8) -விவேகானந்தர்

12
இஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனோ அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள். -மகாத்மா காந்தி

13
வேதாகம, இதிகாச, புராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால், திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபிகள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக, இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. -குருநானக் (சீக்கிய மத நிறுவுனர்)

14
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச்செய்து, சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முகம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. -ரவீந்திரநாத் தாகூர்

15
அராபியப் பாலைப் பிரதேசத்தில் முகம்மது நபி பெருமானார் அவதரித்தது அரேபிய நாட்டிற்கும், இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல, அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது. -அறிஞர் அண்ணா

16
இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும். -காஞ்சிபுரம் மீலாது விழாவில் அறிஞர் அண்ணா

17
இஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்கொள்கையையும் அதனைப் பின்பற்றி ஒழுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியும் முகம்மது நபி பெருமானார் அவர்கள் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளார்கள். பெருமானாரைப் பின்பற்றுவதிலே பெருமையுண்டு. உண்மையுண்டு. எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவுள்கொள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார். சமுதாயக்கொள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார். சமயக்கொள்கையில் தெளிவையும் எளிமையையும் நிலைநிறுத்தினார். இது எப்படி அவரால் முடிந்தது என்றால், அல்லாஹ்வின் பேரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. -மதுரை ஆதினகர்த்தர்

18
மாவீரர்களில் ஒருவராக நான் முகம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன. -ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி)

19
நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து. வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்ஷ்டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றார்கள். அன்னார் ஒரு சமுதாயத்தின் நிறுவனர். ஒரு பேரரசின் நிறுவனர். ஒரு மதத்தின் நிறுவனர். -ஜார்ஜ் பெர்னாட்ஷா

20
முஹம்மத் நபி பெருமானார் தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும், விசுவாசமும், குடும்பத்தின் மீது பரிவும், மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார். -சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா

21
அரேபிய நபியின் சரிதையை – அவர்களது குணாதிசியங்களை- அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும். -ஜெனரல் பர்லாங்

22
நபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும், அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது “நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன்” என்று கூறினார். - தாமஸ்கார்லைல் (வரலாற்றாசிரியர்)

23
பெருமானார் பூவுலகில் மக்களுக்குப் போதனைகள் புரிந்தவை அனைத்தும் உண்மைகள் பொதிந்தவை. கருத்தாழமிக்கவை. - ஜுல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா- யூத மனோதத்துவ விஞ்ஞானி)

24
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள் ‘முகம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே அப்படியின்றி அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். – எஸ். எச். லீடர் 

25
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? - வாஷிங்டன் இர்விங்

26
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. – டாக்டர் ஜான்சன்

27
முகம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். – பெர்னாட்ஷா

28
திருக்குர்ஆனுக்கும் தூதர் முகம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. – நெப்போலியன்

29
இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. – ஜி.ஜி. கெல்லட்

30
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. – வில்லியம்மூர்

31
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். – தாமஸ் கார்லைல்

32
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. – டால்ஸ்டாய்

33
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா

34
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன்

35
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.


எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. – மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100′ என்ற நூலில்..

ஆதாரம்: http://www.sltj.lk/arinyargal-paarwaiyil-nabigal-naayagam/
காந்தி சிரிக்கிறார்
மக்கள் அழுகிறார்கள்
கையில் 500, 1000

மோடி நவம்பர் 2016
நான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு என் கவிதையையோ உரையையையோ தொடங்குவது வழக்கம். அதற்காக நான் அவ்வப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றுள் சில இங்கே. இவற்றுள் எந்த வாழ்த்து உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் ஏன் என்றும் கூறுனால் மகிழ்ச்சி

கூகுளின் நெற்றியில் - தமிழே
நீயொரு குங்குமப் பொட்டு

செல்பேசி அலைகளில் - தமிழே
நீயொரு பொங்கு மாக்கடல்

இணையக் கூடுகளில் - தமிழே
நீயொரு தாய்ப் பறவை

கணினி முற்றங்களில் - தமிழே
நீயொரு கோடி நிலா

முகநூல் முகப்புகளில் - தமிழே
நீயொரு தேவதை நாட்டியம்

டிவிட்டர் இழைகளில் - தமிழே
நீயொரு ட்ரில்லியன் மீட்டர்

வலைப்பூ வனங்களில் - தமிழே
நீயொரு தீராத் தேன்கூடு

மின்னஞ்சல்கள் தோட்டங்களில் - தமிழே
நீயோர் ஆடும் பொன்னூஞ்சல்

குழுமக் கருத்தாடல்களில் - தமிழே
நீயோ நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழே தமிழே

அன்று நீ சங்கத் தமிழ்
இன்று நீ டிஜிட்டல் தமிழ்

நாளை வரும் நவீனத்திலும்
நீயே தமிழே தாயே

உனக்கு என்
தலையாய முத்த வணக்கம்


****


சந்திரனில் கையசைத்து
       செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
       மந்தகாசம் செய்கின்றாய்
எந்திரமாய்ச் சென்றவாழ்வை
       இழுத்துவரும் உந்தனுக்கு
வந்தனங்கள் தந்தவண்ணம்
       வருகின்றேன் தமிழ்த்தாயே
 
****

செம்மொழியே செம்மொழியே
செந்தமிழர்த் தாயே
செம்மொழியே செம்மொழியே
என்றானாய் என்றோ

செம்மொழியே செம்மொழியே
என்றறிந்தும் அன்றே
செம்மொழியே செம்மொழியே
என்றழைத்தார் இல்லை

செம்மொழியே செம்மொழியே
இன்றிதுவோர் மாயம்
செம்மொழியே செம்மொழியே
வந்ததென்ன ஞானம்

செம்மொழியே செம்மொழியே
இன்றேற்றார் மூடர்
செம்மொழியே செம்மொழியே
மன்னிப்பாய் தாயே

****

யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே

இன்னும் சிலவற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டதும் இடுகிறேன்

அன்புடன் புகாரி
அத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. நான் இப்படி பதில் எழுதி இட்டேன்.

அத்தான் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்த சொல். ஏனெனில் என் துவக்கப்பள்ளிப் பருவத்தில் வந்த திரைப்படங்களில் எல்லாம் மிக கவர்ச்சியாகக் கதாநாயகிகள் அத்தான் அத்தான் என்றுதான் தன் காதலனையும் கணவனையும் அழைப்பார்கள். அது அப்படியே நெஞ்சில் பசுமையாய்ப் படிந்துவிட்டது.

அத்தான் என்று சொல்லும்போது அது சாவித்திரியாய் இருக்கட்டும் அல்லது பத்மினியாய் இருக்கட்டும், ஒரு வெட்கம் காட்டுவார்கள் பாருங்கள், அது காணக் கண்கொள்ளாக் காட்சி. அப்படியான ஒரு வெட்கத்தை இன்று எந்தக் கதாநாயகியிடம் கண்டுவிடப் போகிறீர்கள்?

அத்தான்...என்னத்தான்... அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னிச் சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

இப்போது அந்த அத்தானைக் கைவிட்ட சைத்தான்கள்

காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை

என்று பாடுகின்றன

இப்போது பழைய பாடல்களையெல்லாம் அப்படியே ரீமிக்ஸ் என்ற பெயரில் புதிதாகக் கொண்டுவருகிறார்கள். இதோ  இனி வரப் போகும் அத்தான் பாட்டு

சைத்தான்
என்ன சைத்தான்
அவர் என்னை சைத்தான்
எப்படி சொல்வேன் சைத்தான்

ஆகவே அத்தான்தான் மருவி சைத்தான் என்று ஆனது நம் இன்றைய நாகரிக வாழ்வில்

பின் குறிப்பு:

அத்தான் சைத்தான் ஆவதும் தேவன் ஆவதும் பெண், பெண்ணாகத்தான் இருக்கிறாளா அல்லது பிசாசாக ஆகிவிட்டாளா என்பதிலும் இருக்கிறது

சங்க இலக்கியத்தில் சைத்தான் என்ற சொல் இருக்கிறதா என்று கூறுவீர்களா என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். குற்றம் குறை கண்டு சொல்லலாம் பிழையே இல்லை.

சாத்தான் என்பது ஹிப்ரு மொழிச் சொல். (Satan). அதன் பொருள் எதிரி. பழைய கிரேக்க மொழியிலும் சாத்தான்தான். அரபு மொழியில் அது சைத்தான். தமிழில் சாத்தான் என்றும் சைத்தான் என்றும் அழைக்கிறோம். சைத்தான் என்றால் பிசாசு என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.

யூதர்களின் நம்பிக்கையில் சாத்தான் என்பவன் எதிரி. இறைவனை வணங்குவதைத் தடுக்கின்ற துரோகி. பாவச் செயல்களைத் தூண்டுபவன்.  மனிதர்களைக் கடுமையாகச் சோதிக்க இறைவனையே தூண்டுபவன்.

கிருத்தவர்களுக்கு சாத்தான் என்பவன் இறைவனுக்கு அடிபணிய மறுக்கும் தீய சக்தி, கெட்டவைகளின் உற்பத்திக் கிடங்கு. இறுதிநாளுக்கான யுத்தத்தில் பங்குபெறும் மகா தீய சக்தி.

குர்-ஆனில் சைத்தானுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதன் பெயர் இப்லிஸ். நெருப்பால் உருவானவன். ஆதாம் என்ற முதல் மனிதனை வணங்கச் சொல்லி இறைவன் சைத்தானுக்கு ஆணை இடுகிறான். வணங்க மறுத்ததால் சைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் என்று குர்-ஆன் சொல்கிறது.

மனிதர்களை இறை வணக்கத்திலிருந்தும், அறச்செயல்களிலிருந்தும் திசை திருப்பும் தீய சக்திதான் சைத்தான். பண்டைய காலத்தில் சைத்தானை மக்கள் வணங்கிக்கொண்டிருந்தார்கள். அது கூடாது என்று குர்-ஆன் சாத்தானுக்குக் கல்லெறியச் சொல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் சாத்தானின் தூண்டுதல்களில் சிக்கித் தீயவழியில் சென்றுவிடாமல் நல்ல எண்ணங்களை வளர்த்து இறைவனின் வழி செல்ல வேண்டும் என்பதே இஸ்லாத்தின் மையக் கருத்து.

இறுதிநாளில் சைத்தான் நரக நெருப்பில் எறியப்பட்டு அழிக்கப்படுவான். இஸ்லாம்படி சைத்தான்தான் இறைவனை மறுத்த முதல் நாத்திகன். ஆகவே நாத்திகன் என்பவனை இஸ்லாம்படி இறைவன் இல்லை என்று சொல்பவன் என்பதைவிட இறைனின் சொல்லை மறுப்பவன் என்று சொல்வது சரியாக இருக்கும்.

இறைவனை மறுப்பவனும் இறைவன் இல்லை என்பவனும் கிட்டத்தட்ட ஒருவனே என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துதான்.

சங்க இலக்கியத்தில் சாத்தான் சைத்தான் என்ற சொற்கள் இருக்க வழியில்லை. மதங்களின் வரவுகளுக்குப் பின்னர்தான் இந்த நரகாசுரன், சனி, சைத்தான், சாத்தான் எல்லாம்.

அன்புடன் புகாரி






யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே
வெள்ளை என்பது 
அழகல்ல 
நிறம்

ஆங்கிலம் என்பது 
அறிவல்ல 
மொழி

கறுப்பு என்பது
நிறமல்ல
பேரண்டம்

தமிழ் என்பது 
மொழியல்ல 
பண்பாடு


சொர்க்கம் தனியாகவும்
நரகம் தனியாகவும்
இருந்தால்
அது
மேலோகம்

சொர்க்கமும் நரகமும்
சேர்ந்தே இருந்தால்
அது
பூலோகம்

அன்புடன் புகாரி
நம் இந்திய தேசத்திற்கு
ஆங்கிலமே
பொது மொழியெனப்
போதும் போதும்

நடுவண் அரசு
இந்திக்காரனோடு
இந்தியில் உரையாடட்டும்
தமிழனோடு
தமிழில் உரையாடட்டும்
தெலுங்கனோடு
தெலுங்கில்  உரையாடட்டம்

இப்படியே
அத்தனைத்
தாய்மொழியினரோடும்
அவரவர் தாய்மொழியில்
உரையாடட்டும்

தாய் மொழி அறியாதான்
ஆங்கிலத்தில் உரையாடட்டும்

ஆங்கிலமும்
தாய்மொழிகளும்தானே
இந்த தேசத்தின் கல்விமொழிகள்

அதுவன்றி
இந்தியும் ஆட்சிமொழி என்று
சில குரங்குக் கூட்டங்கள்
திணவெடுக்கும்போதுதான்
இந்த தேசத்தின்
பொன்னான தாய்மொழிகள்
நசுக்கப்படுகின்றன
ரத்த ஆறுகள் ஓடுகின்றன

இந்தியை
நாடாளுமன்றத்திலிருந்து
முற்று முழுதாக
ஒழித்துக் கட்ட வேண்டும்

தாய்நாட்டில்
தாய் மொழிகள்தான்
தாய்கள்

எந்தத் தாயும்
கண்ணீர் சிந்துதல் கூடாது

உன்
வீடாளும் மொழியே
நாடாளும் மொழியென்று
வீம்படித்தால்
வெற்றுச் சாம்பலாவாய்
எச்சரிக்கை

அன்புடன் புகாரி
20171217

நீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள்.
அரசியல் பிரிவுகள் எல்லாம் சாதி இல்லை.
திமுக, அண்ணா திமுக, விடுதலைச் சிறுத்தை, பஜக எல்லாம் சாதியா?
இஸ்லாத்தில் சாதிகளே கிடையாது!
அன்புடன் புகாரி
ஓர்
ஓட்டின் விலை
ஐந்து ரூபாயில் தொடங்கி
இன்று 
பத்தாயிரம் ரூபாய் ஆயிற்று

நாளை?

மாதா மாதம்
ஐயாயிரம் என்றாகலாம்

அல்லது
இவ்வண்ணமே  பழகிய மக்கள்
வருமானமின்றி வாடும்போது

ஒரு மந்திரியைப்
போட்டுத் தள்ளிவிட்டு
இடைத் தேர்தல் நடக்க
ஆவன செய்யலாம்

எதுவும் நடக்கும்
இனி எப்படியும் ஆகும்

ஊழல் என்பது
பன்முகக் கத்தி

அன்புடன் புகாரி
20171216
இரண்டே
சாதிகள்தாம் உண்டு

அறம்-தர்மம்-ஹலால்
வழிநடக்கும் மேலானோர்
ஒரு சாதி

அறமற்ற-அதர்ம-ஹராம்
வழிநடக்கும் கீழானோர்
மற்றொரு சாதி

இதை
நான் சொல்லவில்லை

சாதி
இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்
மேதனியில்
இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

என்று
நல்வழி நூலில்
பழந்தமிழச்சி
ஔவை சொல்கிறாள்




20171214
ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

மகாகவி பாரதி
சாதிகள்
இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம்

என்றான்
பாரதி

அவன்
கடவுள் நம்பிக்கை
இல்லாதவனும்
அல்லன்

இந்து மதத்தை
எதிர்த்தவனும்
அல்லன்

அன்புடன் புகாரி
மச்சான்,
நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்டில்
குடும்ப அன்பும், 
இஸ்லாம் தரும் அறமும்,
தமிழ் தரும் பண்பாடும்தான்.
அந்த அரணுக்குள் நுழைவது எளிதல்ல.
நாங்கள் இங்கே கனடாவில் ஊரில் வாழ்வதைவிட பாதுகாப்பாக நன்றாகவே வாழ்கிறோம்.
அன்புடன் புகாரி
Quote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி?
பஞ்ச் என்கிறார்கள் சிலர்
நச் என்கிறார்கள் சிலர்
குறிப்பு என்கிறார்கள் சிலர்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
சொன்னவை:
கூற்று
கூற்றுகள்
கூறுகை
கேட்டிகை
மேற்கோள்
கோள்
நறுக்கு
நறுக்குத் தெறித்த மாதிரி என்று பாட்டிகூட சொல்வார்கள்.
கூற்று, நறுக்கு இரண்டும் என் மனப்பக்கம் நெருங்குகின்றன
கூற்று என்பதை கூறுகை எனும்போது கொடேசன் என்பதோடு பொருந்துவதாய்ப் படுகிறது
Quotes - கூற்றுகள்
Best Quotes - நறுக்குகள்
Quotation - கேட்டிகை, கூறுகை
அன்புடன் புகாரி
>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உடல்ரீதியான பிரச்சனை.<<<
நானும் அதைப் பிரச்சினை என்றுதான் சொல்கிறேன்.
உடல் ரீதியான என்பதைக் காட்டிலும் உளவியல் ரீதியான என்பது மிகவும் சரி.
நாம்தான் நம் மருத்துவ அறிவியலால் அவர்களைக் காக்கவேண்டும்.
>>>அது தானாகவே தோன்றுமொரு ஹார்மோன் மாற்றம். இதையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.<<<
சில மாதங்களுக்குமுன் பிறந்த குழந்தை ஒன்றை சமையல் செய்து தட்டில் ஏந்திக்கொண்டு வந்து கூட்டாக நின்று வெட்டித் தின்னக் காத்திருப்பதாக வீடியோக்கள் வந்தன கண்டீர்களா?
தானாகவே தோன்றும் பசி என்று அப்படியே விட்டுவிட வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?
அன்புடன் புகாரி
பாஸ்கர், கனடா
இது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திருப்பித. தந்தது. எருமேலி சென்றவுடன், வாவர் பள்ளிவாசலில் வாவரை வணங்கி அங்கிருந்த சாஸ்தா ஆலயத்திற்கு ஆடிக்கொண்டே செல்வது இன்றும் இருக்கும் நடைமுறை. என் நினைவுகள் சரியாக இருந்தால் அந்த பள்ளிவாசலில் திருநீறு கூடத்தருவார்கள். சிறுவயதில் சென்றது. வாவர் பற்றிப் பாடும் ஒரு ஐயப்பன் பாடல் கூட உள்ளது.
பாஸ்கர்,
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஓர் உண்மையை நான் இங்கே சொல்லியாக வேண்டும். அப்போதுதான் புரிதல் வலுப்படும்.
வாவர் என்பது ஒரு பெரியவரின் பெயர். சூஃபி முஸ்லிம்கள் இவரை அவுலியா என்று அழைப்பார்கள். இவர் போல நாகூர் முத்துப்பேட்டை ஹாஜிஅலி என்று ஏராளமான இடங்களில் இதுபோன்ற பெரியவர்களின் அவுலியாக்களின் சமாதிகள் உண்டு.
பள்ளிவாசல் என்பதும் தர்கா என்பதும் ஒன்றல்ல.
பள்ளிவாசல் என்றால் அதனுள் ஒன்றுமே இருக்காது. ஒரு சுத்தமான இடம். இறைவனைத் தொழுவதற்காக. இங்கும் அங்குமாக சில குர்-ஆன் பிரதிகள் மட்டுமே இருக்கும். வேறொன்றையும் காணமுடியாது. ஆகவேதான் சுத்தமான எந்த இடமும் பள்ளிவாசல் ஆகிவிடும். பயணம் செல்லும்போது பாலைவனம் பள்ளிவாசலைப் போல ஆகிவிடும். வீட்டில் ஓர் சுத்தமான அறை பள்ளிவாசலைப்போல ஆகிவிடும். பள்ளிவாசல் என்பதே எல்லோரும் சகோதரத்துடன் இணைந்து வந்து தொழுவதற்காகத்தான். மற்றபடி இருக்கும் இடத்திலிருந்தே தொழுது கொள்ளலாம்.
தர்கா என்றால் அதனுள் ஒரு சமாதி இருக்கும். அதனைச் சுற்றி சில நேரம் சிலர் அமர்ந்திருப்பார்கள். அந்த சமாதியில் அடங்கி இருக்கும் பெரியவருக்கு சொர்க்க பதவிகளை, நிறைவான மறுமை வாழ்வைத் தந்தருள் இறைவா என்று சமாதியைத் தரிசிக்க வரும் முஸ்லிம்கள் வேண்டிக் கொள்வார்கள்.
இது இறந்துபோன எல்லோருக்குமே செய்யக் கூடிய ஒன்றுதான் என்றாலும், சமூக சேவைகள் செய்து உயர் காரியங்கள் செய்து உயிர் நீத்த பெரியவர்களுக்கு தர்கா கட்டி இப்படி இறைவனிடம் வேண்டிக்கொள்வது ஒரு வழக்கம்.
அங்கே அடங்கி இருப்பவருக்கு நமக்கு அருளும் சக்தி கிடையாது. இறைவனுக்கே அந்த சக்தி உண்டு.
அன்புடன் புகாரி
20171211