ஒவ்வொரு தமிழனும்
ஓரு ஜல்லிக்கட்டுக்காளை

காலத்தின் கட்டாயத்தில்
வாடிவாசல் திறக்கும்

தமிழனை அடக்க 
எவனுக்கும் சக்தியில்லை

தமிழன் வெல்வான்

இந்தியாவை 
மாற்றியெடுப்பான்

பன்னெடுங்கால
உயர் கலாச்சாரப் 
பெருமை செழிக்கும்
தன் நாடாக்கிக் கொள்வான்

அன்புடன் புகாரி
வாழ்த்துகள் வாழ்த்துக்கள்
எது சரி?
வாழ்த்துகள்தான் தமிழ் இலக்கணப்படி சரி.
தொன்றுதொட்டு என்னும் வழக்கில் வாழ்த்துகள்வாழ்த்துக்களாய் ஆகின்றது
கற்கண்டை கல்கண்டு எழுதி அதையே இதழின் தலைப்பாகவே வைத்தார் தமிழ்வாணன்
இன்னும் பாற்கடல் பால்கடல் என்றும் எழுதப்படுகிறது
இலக்கணப்படி பிழையானவை புழக்கத்தின் படி பயன்பாட்டில் வந்துவிடுகின்றன. இவைபோல் பல சொற்கள் இருப்பதைக் காண்கிறேன். பெரும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் எழுதுவதைக் காண்கிறேன்
அவை என்பதை அவைகள் என்று சிலர் எழுதப்பார்த்திருக்கிறேன்
அவையளுக்கு என்ன தெரியும்? - இது இலங்கைத் தமிழர்களின் அன்றாடப் புழக்கச் சொற்றொடர்
நாம் பரவாயில்லை ஏதோ கொஞ்சம் இலக்கணம் கற்றோம். இன்று பள்ளிகளில் தமிழே இல்லாமல் ஒழிந்துபோக ஆவன செய்கிறார்கள்
ஆங்கிலம் + பாலர் பள்ளியில் தமிழ் பின் ஆங்கிலம் + இந்திதானாம் ஆறாம் வகுப்பிலிருந்து
யாருக்காவது தப்பும் தவறுமாக எழுதவாவது தமிழ் தெரியப்போகிறதா????
அன்புடன் புகாரி
கனடாவில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் இஸ்லாமிய மரபு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு நவம்பர் மாதமும் இந்து மரபு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு டிசம்பர் மாதமும் கிருத்துவ மரபு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் மரபு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் சிறப்பேன் சிறப்பு
October Islamic Heritage Month
November Hindu Heritage Month
December Christian Heritage Month
January Tamil Heritage Month
Canada is great
அன்புடன் புகாரி
கெந்திக் கெந்தி
அந்த இந்தி வருது
மீண்டும்

வீறுநடைத் தமிழைத்
தாய்மொழியாய்க் கொண்ட
வெற்றித் தமிழா

நீ
உடைத்தனுப்பிய
ஒருகால் சப்பாணி
போதாதுபோலும்

இன்னொரு காலையும்
உடைத்தெறி

இனி 
ஒருபோதும்
தமிழின் எல்லைதொட
துகல் எலும்புமின்றி
நொறுங்கட்டும்

குச்சியூன்றும்
சூனியக் கிழடுகள்
கொடிபற்றித் தொங்கும்
சவலைக் குரங்குகள்
காணவும் சகியா
எழுத்துக்கள்

ஏறி முதுகமர
ஏய்ப்புக் குரலோடு
கெந்திக் கெந்திவரும்
அந்த மந்தியை
எழவே முடியா
முடமாக்கிப் 
புதை

காத்து நில்
தமிழா
தாய்த் தமிழை

அன்புடன் புகாரி









இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்துகொண்டே வந்திருக்கிறோம். வருகிறோம்.
குறிப்பாக சமீபகாலமாக வெகு வேகமாக இழந்திருக்கிறோம்
முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்றைய வாழ்வை ஒப்பிட்டால் தலை சுற்றுகிறது
உண்ணும் உணவு பொய் உடுத்தும் உடை பொய் காணும் காட்சி பொய் கேட்கும் குரல் பொய் ஆளும் ஆட்சி பொய் என்று எங்கும் எதிலும் பொய்மை நிரம்பி வழிகிறது
அன்றெல்லாம் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று வருகிறது என்றால் நாம் அதை அப்படியே நம்புவோம். இன்று நம்பமுடிவதில்லை
வீடியோக்கள் எல்லாம் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. எல்லோரும் கைதேர்ந்த பொய்யர்களாய் ஆகிவிட்டார்கள்.
மனிதன் பாதி எந்திரம் பாதி என்று ஒரு ஸ்மார்ட்போன் இல்லாதவன் மனிதனாகவே இல்லை இன்று
மனதும் மூளையும் கையடக்க ஸ்மார்ட்போனில் இருக்கிறது மனிதனிடம் இல்லை
நான் என்ன சிந்திக்க வேண்டும் நீ என்ன சிந்திக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. நாம் எல்லோரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளாய் ஆனோம்
நாளை?
நீயும் எந்திரம்
நானும் எந்திரம்
நினைத்துப் பார்த்தால்
எல்லாம் எந்திரம்
அன்புடன் புகாரி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்
நிறைந்தச் சின்னவனே - விண்ணை
விஞ்சிடும் பேரொளி பொன்நிலாக் கண்களில்
விளைந்திடும் பூமகனே

எல்லாம் வல்ல இறையருள் ஓங்க
ஏற்றமே வாழ்வாக  - இன்பம்
பிறந்த இந்நாள் இன்னும் இனிதாய்ப்
பிறந்திட வாழ்த்துகின்றேன்

இன்பம் மலரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
அன்பில் மிளிரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்

கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
அன்னை மகிழும் பிறந்தநாள்
தந்தை நெகிழும் பிறந்தநாள்

கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்

கைகள் ஏந்தும் பிறந்தநாள்
கருணை கேட்கும் பிறந்தநாள்
இன்பம் வழங்கும் பிறந்தநாள்
இறைவன் அருளும் பிறந்தநாள்

ஆண்டுகள் ஆயிரம் உருண்டோட
மீண்டும் மீண்டும் இவ்வினியநாள்
வேண்டும் சுகமுடன் மலரட்டும்

பொன் மகனே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க

லாஸ் வேகாஸ் துப்பாக்கி
பாட்டுக்கேட்க வந்தவர்கள்
பாடையில போனார்கள்
பத்துப்பெட்டிகளில்
சிறிதும் பெரிதுமாய்
துப்பாக்கிகளையும்
குண்டுகளையும்
தீபாவளி பட்டாசை
தெருமுனை கடையில்
வாங்குவதைப்போல
வாங்கிக் குவித்திருந்தான்
கொலைகாரன் மிஸ்டர் பட்டாக்
அமெரிக்காவில்
தக்காளி வாங்குவதுகூட
சிரமமானதாய் இருக்கலாம்
துப்பாக்கி வாங்குவது
எளிதிலும் எளிது
துப்பாக்கிக் கலாச்சாரத்தில்
கைவைத்தால்
பிரசிடெண்ட் வேலைதேடி
வெளிநாட்டுக்குப் போகவேண்டியதுதான்
அதுதான் அமெரிக்கா?
நம்ம நாட்டுல
சாதியை ஒழிக்கமுடியுமா
சொல்லுங்க?
துப்பாக்கி இங்கே
சாதியைவிட அழுத்தமானது
வெத்துவேட்டு ஐ எஸ் ஐ எஸ்
நான்தான் நான்தான் என்று
யாருடைய விந்துக்கோ
சொந்தம் கொண்டாடப் பாக்குது
எஃப்பிஐ சொல்லிட்டான்
சும்மா இருடா சோம்பேறி
என்று
சுட்டவன் சுத்தமானவனாத்தான்
அதுவரை வாழ்ந்திருக்கான்
இப்ப என்ன கேடுன்னுதான்
எவனுக்குமே தெரியல
இவனைப் பெத்தவனாவது
சித்துமுத்து வேலை செய்து
சிறையில கிடந்திருக்கான்
எப்படியோ
பாட்டுக்கேட்க வந்தவர்கள்
பாடையில போனார்கள்
வேட்டுச்சத்தம் கேட்காத
நாளிருக்கா அமெரிக்காவில்
ஆனாலும் இது
அத்தனைக்கும் மேலதான்
அஞ்சலிகள்
ஆயுள் முடிந்தவர்களுக்கும்
அடிபட்டுக் கிடப்பவர்க்கும்
அன்புடன் புகாரி
இள மனதில் பதியும் சில நம்பிக்கைகளுக்குப் பொருள் கிடையாது
பொருள் புரியும்போது முதிர்ச்சியின் வருகையால் ஓர் அமைதி வந்து ஒட்டிக்கொள்ளும்
புன்னகை மிளிரும்
பிக்க் பாஸ்ஸ் நிகழ்ச்சி நேற்று முடிவடைந்தது
கலந்துகொண்டவர்கள் நடிகர்கள்
நடத்தியவர் நடிகர்
ஆனால் நடிப்பே இல்லாத உண்மை நிகழ்ச்சி
என்று கூறுகிறார்கள் 
பிக்க் பாஸ்ஸ் மேடையைப் பயன்படுத்திக்கொண்டு
கமல் அரசியலுக்கு வருகிறேன் என்று
வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்
காவிக்குள் கருப்பு அடக்கம் என்று சொன்னதுதான்
புரியவே இல்லை
உள்வாங்கிக்கொள்ளவும் முடியவே இல்லை
நடிகர்களும் அரசியலுக்கு வரலாம்
அதில் ஏதும் பிழையே இல்லை
எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்குள் வந்திருக்கிறார்கள்
எல்லோரும் வெற்றிபெற்றதில்லை
நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம்
என்பதில்தான் வெற்றி இருக்கிறது
தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும்
எதிரான எதையும் கையில் எடுத்துக்கொண்டு
தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியவே முடியாது
கமல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
மாற்றுக்கருத்தே இல்லை
அரசியலிலும் அவரைப் பிடிக்க
வாய்ப்புகள் நிறைய இருப்பதாய் நினைத்தேன்
நிறைய மாற்றுக் கருத்துக்கள் கிளம்புகின்றன
அன்புடன் புகாரி
மூடர்களின்
கூடம்

மூர்க்கர்களின்
தடாகம்

பிணங்களின்
கடைசி வேடம்

ஆகப் பெருவிலைப்
பாடம்

போர்

அதுதான்
நரக நெருப்பின்
முன்னுதாரணம்
குற்றம் ஒருபோதும் 
பாதுகாப்பாகாது
இன்னொரு 
பெரிய குற்றத்திற்கான 
வேராகவே 
அது வளரும்