2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி

அழகு என்பது பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்றார்கள். அதைத் தொடர்ந்து புற அழகு ஒன்றுமே இல்லை என்பதுபோல் முடிக்கப்பட்டது ஒரு கருத்தாடலில்.

புற அழகு பொதுவானது, அதுதான் ஒருவருக்கான ஆரம்ப வரவேற்பு. தமிழ்ப்படங்களில் ஸ்ரேயா, அசின், ஜோதிகா, நயன்தாரா என்று கதாநாயகிகளாகப் போடுவது அதற்காகத்தான். கொஞ்சம் சுமார் ஃபிகரைப் போட்டால் படம் ஊத்திக்கும்.

வாழ்க்கைத் துணை, நட்பு, காதல் என்று வரும்போது மிக முக்கியம் இந்த புற அழகு அல்ல. அக அழகு. புற அழகு மாறலாம் சிதையலாம் ஏதும் ஆகலாம். அக அழகுதான் இனிமையான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்.

இது தொடர்பாக என் கவிதை ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதை. என் ஆழ்மனதிலிருந்து பொங்கி வந்த கவிதை:

அழகு

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு

விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு

புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு

நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு

இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு

சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு

கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு

மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு

கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு

கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு

விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு

இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு

கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு

மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு


அப்படி அக அழகு மிகுந்தவர்களுக்கு புற அழகும் கூடி இருந்தால் அது மேலும் சிறப்பு.

கண்ணுக்கு லட்சணம் என்பதே பெண் பார்க்கும் படலத்தின் முதல் நோக்கம். பின் பெண்ணுக்கு லட்சணம் ஆன பண்பு குணம் எல்லாம் பரிசீலிக்கப்படும்.

ரத்தக்காட்டேரிபோல நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடூரமான கண்களோடும் வானம் நோக்கிய மூக்கோடும் அகண்ட பெரிய வாயோடும் ஒரு பெண் இருந்தால் அவளும் சில கண்களுக்கு அழகுதான். ஆனால் பொது நிலைப்பாட்டில் புற அழகில் அவள் பாவம்தான். அவளுக்கான வரவேற்பு மிகமிக குறைவு.

அவளை ஒரு விமானத்திற்கான பணிப்பெண்ணாக நியமிக்க மாட்டார்கள். மாடலிங் செய்ய அழைக்க மாட்டார்கள். விளம்பரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். வரவேற்புகளில் முன் நிறுத்த மாட்டார்கள். பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது சன் டீவி விஜய் டிவி போன்றவையெல்லாம் அடிக்கடி அடிக்கடி அவர்கள் பக்கமே திரும்பி சில நொடிகள் நொண்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்.

உலகப் பேரழகிகள் முதல் உள்ளூர் கரகாட்டக்காரிகள் வரை புற அழகு ரொம்பவே பேசும். கண்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு அதிகத்திலும் அதிகம்.

ஒரு ஆடை எடுக்க கடைக்குப் போனாலும் புற அழகுதான் அங்கே முக்கியம். ஆயிரத்தெட்டு அழகு சாதனங்கள் நிரம்பி வழிவது புற அழகை மேம்படுத்தவே.

உலகப்புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் புற அழகை மேம்படுத்த என்னென்ன எழவெல்லாமோ செய்து தொலைத்தார்.

ஸ்ரீதேவி அழகாகத்தான் இருந்தார். ஆனாலும் ஓடிப்போய் மூக்கை ரிப்பேர் செய்துகொண்டு வந்தார். ஏன்?

ஓமகுச்சியையும் பிந்துகோஷையும் இங்கே புற அழகு இல்லை என்பதாகத்தான் உதாரணத்திற்கு எடுத்துவந்தார்கள். ஏன் ஓமகுச்சியும் எனக்கு அழகுதான் என்று ஒரு ‘உம்’ சேர்த்தார்கள்? கமலஹாச’னும்’ அழகுதான் என்று ஆரம்பத்திலெயே சொல்லவில்லை. அஜித்’தும்’ அழகுதான் என்று உதாரணம் கொண்டுவரவில்லை.

பிந்துகோஷும் அழகுதான் என்று ‘ உம்’ சேர்த்தவர்கள், நயந்தாராவும் அழகுதான் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம், ஏன் சொல்லவில்லை?

தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மேம்பட்டவர்கள் உயர்ந்த பண்புடையவர்கள் என்று போலியாகக் காட்டிக்கொள்வதற்காகவா?

முக அழகும், நிற அழகும் அழகல்ல. அகத்தின் அழகே அழகு. எனக்கும் இந்த விஷயத்தில் கமலை பிடிப்பதில்லை என்று ஒருவர் சொல்கிறார். ஏன் சொல்கிறார்? கமலுக்கு அக அழகு இல்லையா? அவரின் சாதனைகளின் அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று உண்டா?

ஓமகுச்சியையும் கமலஹாசனையும் அக அழகைப்பார்த்தா இங்கே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்கிறார்கள்? இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும்? கமலின் அக அழகாவது ஓரளவுக்கு ஊடகங்கள் மூலம் தெரியும்.

கண்தானம் மட்டுமல்லாமல் தன் உடலையே தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கமல். ரசிகர்மன்றங்கள் அர்த்தமற்று ஆகக்கூடாதென்று கண் தானம் செய்வோராக அனைவரையும் ஊக்குவிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

தனக்கு வாய்ப்பளித்து வாழவைத்து ந்டிப்பு சொல்லித்தந்த பாலச்சந்தரை இன்னமும் உயர்ந்த மரியாதை தந்து பூஜிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

பண்ம் மட்டுமே பிரதானம் என்று நடிக்கவரும் திரையுலகில், சாதனையே பிரதான்ம் என்று புதிய முயற்சிகளில் இறங்கி சொந்த வீடும் இல்லாமல் அல்லாடுபவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

"ஜீன்ஸ் போட்ட கமலா காமேஷ்" , குஷ்பு பெரியார் போன்ற விமரிசனங்கள் நடிகை நடிகர்களுக்கு எப்போதும் வரக்கூடியதே. ஆனால் அந்த த்ரிஷா போன்றோரும் குஷ்பு பொன்றவர்களும்தான் கோவில் கட்டி கொண்டாடப்படுபவர்கள். ஒரு சிலரின் விமரிசனம் மோசமென்றால் 98% விமரிசனம் அழகில் நடிப்பில் வியந்து கனவுக் கன்னிகளாக்கிக்கொள்ளும் நிலைதான் என்பது பொய்யா?

கமலை பிடிப்பவரெல்லாம் அவர் அழகுக்காகத்தான் பிடிக்கிறது என்பது மிகத் தவறான எண்ணம்.. என்று மிக அழகாக ஒருவர் சொன்னார். கமலைப் பிடிப்பதற்கான மிக முக்கிய காரணம் எது?

அவர் திரையுலகுக்கு உலக நாய்கன். திறமைகளின் கூடாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சலங்கை ஒலியைப் பார்த்துவிட்டு, இந்த முறையும் உனக்குத்தாண்டா விருது என்றார். அது!

இல்லாவிட்டால் கமலோடு அறிமுகமான அதன் பின் அறிமுகமான எத்தனையோ புற அழகால் மேம்பட்ட நடிகர்கள் அவரைப்போல் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார்கள்.

கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி!

1 நட்பின் வழியே


தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும்.

சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது.

காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம்.

எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும்.

இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை!

காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்!

காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது.

கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா?

உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!
20

எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
19

பறவை பறக்கும் உதட்டுக்காரி
பஞ்சவர்ண சிரிப்புக்காரி
சிந்தாமணி கண்ணுக்காரி
சிணுங்கிச் சிவக்கும் மூக்குக்காரி

பால்வாழை நாக்குக்காரி
பறித்தெடுக்கும் பேச்சுக்காரி
மச்சமுள்ள காதுக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி

வாழையிலை வயித்துக்காரி
வளையலளவு இடுப்புக்காரி
வசந்தம்பூத்த மார்புக்காரி
வழுக்கிவிழும் கழுத்துக்காரி

என்னை நினைக்கும் இதயக்காரி
என்னைத்தேடும் உணர்வுக்காரி
எப்போதும் என் கனவுக்காரி
எனைப்பிரியா உயிர்க்காரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
18

காத்திருப்பதற்காக
காதலிக்கவில்லை
ஆனால் காத்திருக்கிறேன்

காதலிப்பதற்காக
காத்திருக்கவில்லை
ஆனால்
காதலிக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்