அணிந்துரை - அ. முத்துலிங்கம் - பச்சைமிளகாய் இளவரசி


வானூறி மழை பொழியும்

அ. முத்துலிங்கம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோன் அப்டைக். வயது 72. இருபது நாவல்கள், கணக்கில்லாத சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்று இவர் கைவைக்காத துறையே இல்லை. சமீபத்தில் வந்த இவருடைய நாவலை மிக மோசமானது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் ஓர் எழுத்தாளர் எப்படி மோசமான ஒரு படைப்பைத் தரமுடியும்? .......முடியும்!

முழுநேர எழுத்தாளர்களுக்கு ஏற்படும் வியாதி இது. இவர்கள் எழுதினால்தான் பணம். பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்துவிடுகிறார்கள். ஒப்பந்தப்படி முடிவு தேதிக்குள் எழுதி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள் அல்லது மோசமாக எதையாவது எழுதித் தள்ளிவிடுகிறார்கள். இது பெரும்பாலும் அந்த எழுத்தாளர்களுக்கே தெரிந்திருக்கிறது.

இந்த நிலை அநேகமான தமிழ்ப் படைப்பாளிகளிடம் கிடையாது. இவர்கள் பிழைப்புக்காக எழுதுபவர்கள் அல்ல. வருமானத்துக்கு ஏதாவது ஒரு தொழில் அவர்களிடம் இருக்கும். தமிழ் ஆர்வத்தினால் உந்தப்பட்டு எழுத வந்தவர்கள்.

திரு புகாரியை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் கணினித் துறையில் நிறையப் படித்தவர். சவூதியில் பல வருடங்களாக வேலைபார்த்து இப்போது கனடாவில் நிரந்திரமாகத் தங்கி இணைய தொழில்நுட்பத் துறையில் ஆலோசகராக வேலைபார்க்கிறார்.

இவர் கிடைக்கும் நேரத்தைத் தன் துறையிலேயே செலவழித்து மேலும் பணம் பெருக்கலாம். ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை. கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் தமிழ் இணையதளம் ஒன்றும் வலைப்பூ ஒன்றும் யுனிகோடு தமிழ் குழுமம் ஒன்றும் நடத்துகிறார்; கவிதை, கட்டுரை என்று எழுதுகிறார்; எழுதாத நேரங்களில் கவிதையாகவே மூச்சு விடுகிறார்.

தன்னை அறிமுகம் செய்யும்போதெல்லாம் கணினித்துறை ஆலோசகர் என்று கூறுவது அவருக்குப் பிடிப்பதில்லை. கவிஞர் புகாரி என்றுதான் அடக்கமாகக் கூறிக்கொள்கிறார்.

திரு புகாரியை எனக்குத் தெரியாது என்றே சொல்லலாம். இரண்டுமுறையே அவரைக் கண்டு சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறேன். அவருடைய கவிதைகளை அவ்வப்போது திண்ணை, எழில்நிலா போன்ற பக்கங்களில் படித்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது முதன்முறையாக ஒரு புத்தக வடிவத்தில் அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது கிடைக்கும் உணர்வோ புதுவிதம். அடியூடாக ஒரு சரடு ஓடிக்கொண்டே இருக்கிறது.

கவியின் உள்ளத்து உணர்வுகள் பொங்கி அவ்வப்போது நிறம் மாறினாலும், ஒரே குரல்தான் ஒலிக்கிறது. மனித நேயம், இயற்கை ரசனை, கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் இதயம், ஒரு குழந்தையின் வியப்பு, இப்படி எல்லாமே கிடைக்கிறது.

இவருடைய நாட்டுப்புறப் பாடல்கள் நயத்துடன் அமைந்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

கொடை மிளகாய் மூக்கழகா
கொத்தவரும் கண்ணழகா
விடை சொல்லாச் சிரிப்பழகா
ஊசிவெடிப் பேச்சழகா


இப்படி இவர் வர்ணிக்கும்போது, எமக்கு பரிச்சயமான, மிக இயல்பான ஒரு காட்சி எம் கண்முன்னே விரிகிறது.

கவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்கு குறைவில்லை. ஏதோ ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக எழுதப்பட்டவைகள் அல்ல அவை, ஆனால் பொருத்தமாக ஆங்காங்கே தானாகவே அமைந்துவிடுகின்றன. ஓர் இடத்தில்

'நான் கருவான முதல் இரவு
என் முதலிரவு இல்லையாம்'


என்கிறார். வீட்டை வர்ணிக்கும்போது

'சுவர்களல்ல, அறைகளல்ல
வசிப்போரின் கூட்டுயிரே வீடு'


என்று சொல்கிறார். பிறிதொரு இடத்தில், ஒரு தாலாட்டுப் பாடலில்

'வருவோரும் போவோரும், கண்ணே
இருப்போரின் தொடர்தானே'


என்ற உண்மையை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டுப் போகிறார்.

தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை. தள்ளாடும் ஒரு முதியவரின் உருவத்தை இரண்டே வரிகளில் மனக்கண்ணின் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.

காற்றடித்த சுடுமணலின்
வரிக்கவியாய்
கணக்கற்று மேனியெங்கும்
சுருக்கங்கள்.


இன்னோரிடத்தில் 'சூரியனைக் கிள்ளித்தரும் விளக்கு' என்கிறார். ஓர் அனாதைக் குழந்தையை அவர் வர்ணிக்கிறார், பாருங்கள்.

'வேரொழிந்த பூங்கொடியோ, கண்ணே
விரலெறிந்த நகச் சிமிழோ'


சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வட்டமிடுகின்றன. சூரியனை ஒரு தாய்க் கோழியாகவும், கிரகங்களை முட்டைகளாவும் எந்தக் கவியாவது வர்ணித்தது உண்டா? சூரியன் அடைகாக்கும் பூமி முட்டை என்று சொல்லும்போது அவர் கூறவந்த விசயம் சொல்லுமுன்பாகவே படிப்பவருக்கு புரிந்துவிடுகிறது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சில இடங்களில், கும்பகோணம் காட்சிகள், சுனாமி, பூகம்பம் போன்ற கவிதைகளில், கவிஞரின் மென்மையான இதயம் குமுறுகிறது. குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாய் ஆற்றாது அழுகிறாள்.

'பாவியளா, பாவியளா
என் பிள்ளை போச்சே'


மிகச் சாதாரணமான வார்த்தைகள்தான், ஆனால் அவை எழுப்பும் உணர்வுகள் நெஞ்சிலே புண்ணாக வலிக்கின்றன. அதே நேரம் சோகமான சில காட்சிகளை கிண்டலாக சொல்கிறார்.

'சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா'


இப்படித் தொடங்கும் கவிதையின் வரிகள் நகையைக் கிளப்புவதோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன.

வானூறி மழை பொழியும்
வயலூறிக் கதிர் விளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்


இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை.

இவருடைய தலைப்பு கவிதை கடைசியில் வருகிறது. தன்னுடைய மகளைப் பற்றி எழுதுகிறார். அவளை இளவரசி என்று அழைக்கிறார். பெற்றோருக்கு மகள் இளவரசிதானே. பச்சை என்கிறார். பச்சை என்றால் அழகும், இளமையும் பசுமையும். மிளகாய் உறைப்புபோல சுரீர் என்று அவளுக்கு கோபம் வருகிறது. பிறகு மறைந்து விடுகிறது. அதுதான் பச்சை மிளகாய் இளவரசி. அழகான தலைப்பு.

மாலை நேரம் இவர் அலுவலகத்தில் இருந்து களைத்து விழுந்து திரும்பும்போது குழந்தை ஓடி வருகிறாள். அவளை அணைத்து மடியில் இருத்துகிறார்.

மாலை கவிழ்ந்தால்
தளிர் மடியில்
என் மனதின்
கிழிசல் தைக்கின்றேன்.


மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது 'நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு' என்கிறார். கவித்துவத்தின் உச்சம்.

எனக்கு மிகவும் பிடித்த கவிதை வரிகள் எவையென்றால் சமீபத்தில் இவர் எழுதிய சுனாமி பற்றிய வரிகள்தான்.

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல், எழுந்து நின்றால்
என்னாவது.


கம்பனில் இருந்து கண்ணதாசன் கடலைப் பாடாத கவி இல்லை. ஆனால் யாராவது படுத்துக் கிடக்கும் கடல் எழுந்து நின்றது என்று வர்ணித்திருக்கிறார்களா? முற்றிலும் புதுவிதமான கற்பனை. சுனாமியின் திடீர்த்தாக்குதலும், பயங்கரமும் சில வரிகளிலேயே எமக்குக் கிடைத்து விடுகிறது. இப்படி உன்னதமான ஒரு சித்திரத்தைப் படைத்துவிட்டு அடுத்து வரும் வரிகள் படிமத்தின் உச்சத்தைக் குறைக்கச் செய்கின்றனவோ என்ற ஓர் அச்சம் எமக்கு உண்டாகிறது.

திரு புகாரியின் நாலாவது கவிதைத் தொகுப்பு இது. இதற்குமுன் வந்த கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது தெரிந்ததே. வானூறி மழை பொழிவதுபோல புகாரியிடம் கவிதைகள் ஊறிப் பெருகுகின்றன; அவற்றின் தரமும் மேம்படுகிறது.

சமீபத்தில் ஒரு கவி சொல்லியிருந்ததைப் படித்தேன். 'நான் எனக்கு தெரிந்ததைச் சொன்னால் எனக்கு அலுக்கிறது. உனக்குத் தெரிந்ததைச் சொன்னால் உனக்கு அலுக்கிறது. உனக்கும் எனக்கும் தெரியாததை சொல்வதுதான் கவிதை.'

புகாரி அதைத்தான் செய்கிறார். அவருடைய படைப்புகள் புதுமையாக இருக்கின்றன. மயக்கவைக்கும் உவமைகளும், மனதை அசைக்கும் படிமங்களுமாக நெஞ்சிலே நிற்கின்றன. இன்னும் நிறைய இவர் எழுதவேண்டும். என் வாழ்த்துக்கள்.

அ. முத்துலிங்கம், கனடா
எழுத்தாளர், ஓய்வுபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி
இறைவா நீ இறந்துவிட்டால்?

நீ என்பதும் வேறோ இறைவா
நான் உனக்குள் இருப்பு
நான் என்பதும் வேறோ இறைவா
நீ எனக்குள் இருப்பு

உனக்கு என்னைத் தருவதென்பது
உனக்கு உன்னைத் தருவது
எனக்கு நீயும் அருள்வதென்பதும்
உனக்கு நீயே அருள்வது

நானே காணும் சுகங்கள்
அது நீ காணும் சுகங்கள்
நானே எண்ணும் எண்ணம்
அது நீ எண்ணும் எண்ணம்

நான் இறந்தேன் என்றால்
அது யார் இறந்தார் இறைவா
நான் இறந்தேன் என்றால்
அது நீ இறந்தாய் அன்றோ

நான் இறந்தேன் என்றால்
அது நீ இறந்தாய் இல்லை
ஏன் என்கிறேன் வியந்து
ஓ... நீ பிளந்தாய் உண்மை

உன்னைத் தந்தாய் எனக்கு
ஒரு செல்லைக் கிள்ளி உயிராய்
உன்றன் பூரண இருப்பில்
சிறு துகளின் மாற்றம் மரணம்

மரணம் என்னை அழித்தும்
ஒரு துளியும் அழிந்தாய் இல்லை
உருவில் புதினம் கண்டாய்
என் உயிரைப் பிரிதாய்க் கொண்டாய்

உனக்கு அழிவே இல்லை
எனில் எனக்கும் அழிவே இல்லை
மரணம் என்பது மாற்றம்
அட மாற்றம் என்பதே இறைவன்

இரண்டு ரக்கூன்


நான் அன்புடன் என்ற ஒரு கூகுள் குழுமம் நடத்தி வருகிறேன். வருடம் முழுவதும் வசந்தம் காட்டி அன்போடு செல்லும் அந்தக் குழுமத்தில் எப்போதாவது சில வேண்டாதவர்கள் நுழைந்து அக்கிரமம் செய்வதுண்டு. அதைச் சமாளிக்க நான் பல வழிகளில் முயற்சி எடுப்பதும் உண்டு. ஒருமுறை அகிம்சை வார்த்தைகள் பலனற்றுப்போக நான் சற்று கடுமையான போர் தொடுக்க வேண்டியதாகிப் போயிற்று. அப்போது...

"அன்புடன் தென்றலாகவே தவழட்டுமே நாம் பிரச்சனைக்குள் நுழைய வேண்டாமே... ப்ளீஸ்.... கனியுள்ள மரத்தில்தானே கல்லடிபடும்.." என்று... அன்புனின்மீது மிகுந்த அக்கறையுள்ள ஒரு சகோதரி உண்மையான அன்புடனும் உரிமையுடனும் மடலிட்டிருந்தார். அவருக்கு நான் எழுதிய மறுமொழியில் ஒரு உண்மைச் சம்பவத்தை விவரித்தேன்.

அன்பிற்கினிய சகோதரி, வணக்கம். நாம் எப்போதாவது எதற்காகவாவது எந்தப் பிரச்சினைக்குள்ளும் நுழைந்திருக்கிறோமா? வந்த பிரச்சினையைத்தானே நாம் இதுவரை விரட்டி இருக்கிறோம். தென்றலென்பது தெளிந்த நீரோடைக்குச் சமமானது! வெறுமனே தென்றல் என்று அழைப்பதால் அது தென்றலாகிவிடாது!

இந்தக் கோடையில் ஒருநாள் குடும்பத்தோடு நாங்கள் கூடாரவாசம் (கேம்பிங்) காணப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அதிகாலையில் எங்கள் வீட்டின் கதவைத் திறந்ததுமே இரண்டு ரக்கூன்கள் உள்ளே ஓடிவந்துவிட்டன.

ரக்கூனைப் பற்றி கனடா அமெரிக்காவாழ் மக்களைக் கேட்டுப்பாருங்கள். கதை கதையாய்ச் சொல்வார்கள். அது ஒரு அழிச்சாட்டியம்பிடித்த மிருகம். ஒரு பெரிய பூனையின் அளவு வளர்ந்து இருக்கும்.

அவ்விரு ரக்கூன்களையும் வீட்டைவிட்டு வெளியில் விரட்டாமல் நாங்கள் எப்படி கூடாரவாசத்திற்குச் சென்று இனிமையாய்க் கொண்டாட முடியும்?

என் மனைவி அவற்றைப் பார்த்ததுமே பயந்துகொண்டு மாடிக்கு ஓடிவிட்டார் :) என் மகளும் மகனும் என் முதுகுக்குப் பின் நின்று என்ன செய்யப் போறீங்க... என்ன செய்யப் போறீங்க... பாருங்க பாருங்க குறுகுறுன்னு பாக்குது.. பயமா இருக்கு.... பயமா இருக்குன்னு கத்துறாங்க.

பத்து நிமிடங்களில் புறப்பட்டால்தான் கூடாரவாசமும் கைகூடும். நண்பர்கள் பெட்ரோல் நிறுத்தத்தில் காத்திருக்கிறார்கள்

போலீசைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தலாமென்றால் அதற்கு ஒருநாள் ஆகிவிடும். திட்டமிட்ட கூடாரவாசம் இயலாமல் போய்விடும்.

மூன்றுநாட்கள் தங்குவதற்காக புறப்பட்டிருக்கிறோம் நண்பர்களின் குடும்பங்களைச் சேர்த்தால் ஒரு முப்பது பேராவது இருக்கும் எல்லாமே கெட்டுவிடும். என்ன செய்வது? எனக்குத் தெரிந்தது தெரியாதது என்று என்னவெல்லாமோ செய்தேன்.

போ போ என்று முதல் அதட்டினேன் அவை என்ன சாதாரண நம்மூர் நாய்களைப் போலவா? அசையவே இல்லை

வீடுபெருக்கும் நீண்ட துடைப்பத்தை எடுத்து நீட்டி பயங்காட்டி விரட்டினேன் ம்ம்ம்..... அவை அசையவே இல்லை

அப்படியே காட்டேறிகளைப்போல ஓயாமல் அகண்டு விரிந்த பேய்நெருப்பு விழிகளால் பார்த்த்துக்கொண்டே இருக்கின்றன

பயமாய் இருக்கிறது, பதட்டமாய் இருக்கிறது

நண்பர் சொன்னாரென்று சுடுநீரை அள்ளி அவற்றின் முகங்களிலே எறிந்தேன். ஐயோ அதற்கும் அவை அசையவே இல்லை. அப்படியே சாம்பூவும் சோப்பும் கொடு என்று கேட்பதுபோல் முகத்தைக் காட்டின.

எனக்கும் உடம்பெல்லாம் நடுங்குது. ஆனாலும் விட்டுட முடியுமா? நான் தானே அவற்றை விரட்டவேண்டும்?

மிக நீளமான... கனமான குச்சி ஒன்றைத் தேடி எடுத்தேன் என் பயமும் வெறுப்பும் என்னைத் தின்றுகொண்டுதான் இருந்தன.

அப்படியே எட்டி எட்டித் தள்ளியே வெளியில் எறிந்தேன் முதலில் ஒன்றை. இனி அடுத்தது எங்கே என்று தேடினால் அது சோபாவுக்கு அடியில் சென்றுவிட்டது

அய்யோ அதற்காக அந்தப் புத்தம்புது பெரும் சோபாக்களை அகற்றி... எங்கே அது எகிறி என்னைக் கடித்துவிடுமே என்று பதறித் துடித்து... அப்பப்பா எத்தனைக் கொடுமை என்கிறீர்கள்

இதற்கிடையில் கலாரசனையும் காசும் கொட்டி ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த இரண்டு மீன் தொட்டிகள் விழுந்து உடைந்தன. சுவற்றில் மாட்டியிருந்த மிக அழகான இயற்கைப்படம் ஒன்று சுடுநீரால் சீரழிந்தது

மீன்கள் தரையில் விழுந்து துடிக்கின்றன. மீன்களைக் காப்பாற்ற வேண்டும். கிட்டே நெருங்கினால் கடிக்குமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் மீன் துடிப்பதைக் காணச் சகிக்காமல் ஓடிச்சென்று அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன் முதலில்

எனக்கு அவதியில் இருக்கும் உயிர்களைக் காப்பதில் அக்கறை அதிகம் என் உயிர் அழிவதுபற்றியும் கவலைப் படமாட்டேன். அப்புறம் என் கடுமையான போராட்டத்திற்குப்பின் அதையும் வெளியேற்றினேன்.

அதன்பின் எங்கள் நால்வருக்கும் கிடைத்த நிம்மதி இருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. என் மகன்தான் தன் அறியாமையால் சற்றும் எதிர்பார்க்காமல் கதவை முழுவதும் திறந்து வைத்து அந்த அட்டூலியங்களை உள்ளே விட்டுவிட்டான். அதன்பிறகெல்லாம் அவனின் முன்னெச்சரிக்கைகளைப் பாராட்டியே தீரவேண்டும்.

ஆனாலும்... ஏதேனும் தீதொன்று எப்படியோ கிடைக்கும் சந்தில் புகுந்து உள்ளே வரத்தானே செய்யும் அதுதானே தீதின் முரட்டுத்தன்மை...

எங்கள் தந்தை எப்படியும் தீதை விரட்டிவிட்டு வீட்டின் அமைதியைக் காப்பார் என்றுமட்டும் என் பிள்ளைகள் முழுமையாய் நம்புகின்றன.

அதன்பின் ஆர அமர உட்கார்ந்து நண்பர்கள் கதை கேட்டுச் சிரித்தார்கள். இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று யோசனைகள் சொன்னார்கள்.

கடைசியாக விடைபெற்றுச் செல்லும்போது எங்கள் வீட்டுக்குள் ரக்கூன் வராது.அப்படி வந்துவிட்டால் உங்களைத்தான் கூப்பிடுவேன் புகாரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் :)

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

கள்ளக்காதல் என்றதும் சிலர் சதையையே பிரதானமாக வைத்துப் பார்க்கிறார். ஏக்கங்களையும் தனிமையையும் ஈர்ப்பையும் ஆறுதலையும் முன்னிலைப்படுத்திய உறவைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறார்கள்

காமம் நோக்கமில்லை என்றாலும் உயர்வான நட்பும் காதலும்தான் நோக்கம் என்றாலும். கள்ளக்காதல் காமம் கொள்வதை மெல்ல மெல்ல அங்கீகரித்துவிடும். பின் எல்லாம் சரி என்றே ஆகிவிடும். இது இயல்பு.

மனம் கட்டிய துணையுடன் ஒட்டாமல் இன்னொரு இடத்தில் ஒட்ட்ட்ட்டிக்கிடக்கும். காமத்தால் அல்ல, காதலால். இதனால் பாதிப்பில்லை என்கிறார்கள் சிலர். தவறு பெரிய பாதிப்பு இதில்தான் உண்டு. தன் கட்டிய துணையோடு ஒரு நிமிடமும் பேசத் தோன்றாதவராய் இவர்கள் ஆவர். கட்டிய துனையோடு கொள்ளும் உடலுறவையும் வெறுப்பர். சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும்தான் கணவன் மனைவியாய் இருப்பர். தான் நேசிக்கும் துணையுடன் கணவன் மனைவியாகவே இருப்பர். காமம் இல்லாமலேயே இருப்பர். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த மனோநிலை உள்ளவர்கள் காமத்திலும் விழுவர்.

எப்படியானாலும் கள்ளக்காதல் தவறு. அதை எப்படி தடுப்பது. சிலர் சொல்வது விவாகரத்து செய்துவிட்டு விரும்பியவரோடு வாழு என்பது. விவாகரத்து என்பது எல்லா குடும்பங்களிலும் நடக்காது. சமாதானம் செய்வார்கள். மீண்டும் இய்ந்திர வாழ்க்கை. மீண்டும் தேடல் ஏக்கம் மீண்டும் கள்ளக்காதல்தான்.

சிலர் கள்ளக்காதல் என்று தன் காமத்தேவைக்கு கையில் கிடைத்தவர்கலையெல்லாம் அனுபவிப்பது என்று தவறாக நினைத்திருக்கிறார்கள். அதன் பெயர் காசு பெறாமல் நடத்தும் விபச்சாரம். கள்ளக்காதல் என்பது ஒரே ஒருவரிடம் மட்டுமே வரும். அப்படி இல்லாமல் ஊர் மேய்ந்தால், அது விபச்சாரமே!

ஒரே ஒருவரிடம் மட்டும் யாவுமாகி வந்த கள்ளக்காதல் விவாகரத்து செய்துவிட்டு மணப்பதை விரும்புகிறது என்றாலும், அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், குடும்ப கௌரவம் இருக்கலாம். அவளையும் கட்டிக்கோ என்னையும் வெச்சிக்கோ என்று சில துணைகள் சொல்லலாம். சூழல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் மாறும். பலதாரமணமும் தலை தூக்கும்.

இள வயதில் பல பெண்களோடும் பல ஆண்களோடும் காமம் காதல் நட்பு என்று லூட்டி அடித்துவிட்டால், அது ரத்தத்தில் ஊறிவிடும். பிறகு கல்யாணம் ஆகி சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் அது தலைட்காட்டாமல் இருக்கலாம். ஆனால் ருசி கண்ட பூணை மீண்டும் பால் தேடும்.

கள்ளக்காதல் எல்லோரும் செய்வதில்லை. தன் தாம்பத்தியத்தில் 50 சதம் திருப்தி கொண்டாலே போதும் கள்ளக்காதல் தலை தூக்காது. ஆனால் நிர்கதியற்ற நிலை, தனிமை மண்டிக்கிடக்கும் அவலம், ஏக்கங்களால் ஆன இதயம் என்பன கள்ளக்காதலுக்கான இலகுவான தூண்டில்கள்

கள்ளக்காதல் என்பதும் சின்னவீடு என்பதும் ஒரே பொருள்தான். சின்னவீடு என்பதும் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். பலபேருடன் கொட்டமடிக்கும் இடத்தில் காதலுக்கு வழியே இல்லை. அங்கே காமம் மட்டுமே இருக்கும். அதை கள்ளக்காதல் என்று சொல்லக்கூடாது. விபச்சாரம் என்றே கூறவேண்டும்.

உண்மையான கள்ளக்காதல் பரிதாபத்துக்குரியது. தவிக்கின்ற இதயம் தேடும் வாழ்க்கைதான் அது. கள்ளத்தனம் நோக்கமல்ல. தன் வாழ்வைத் தேடுவதன் நீட்சிதான் அது. எனக்கு நீயே ஆரம்பத்திலேயே துணையாய் வந்திருக்கக்கூடாதா என்று சொல்லாத கள்ளக்காதல் இருக்கவே முடியாது. இருவரோடு வாழவேண்டும் என்பது அவர்களின் நோக்கமே அல்ல. அதைப் புரிந்துகொள்ளாவிட்டால், கண்டபடி சிலபேரைப்போல வேறு வழியற்று கள்ளக்காதலில் சிக்கியவர்களை வசைபாடவே தோன்றும் எவருக்கும்.

எப்படியானாலும் கள்ளக்காதல் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. அதை ஒழிப்பது என்பது நம் வாழ்க்கைத் தரத்தையும் திருமண முறைகளையும் மாற்றாமல் நிகழவே நிகழாது.

ஒரு மதமாற்ற கருத்தாடல்

மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம் என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை இணையத்தில் வந்தது. அதைத் தொடர்ந்து என் கருத்தாடல்:

நான்:
ஒரு முஸ்லிம் அல்லது கிருத்துவன் அல்லது யூதன் இந்து மதத்துக்கு மாற் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

நண்பர்:
அரசாங்க கெஜட்டில் தனது மதம் இந்துமதம் என தெரிவித்தால் போதும்.

நான்:
சர்டிபிகேட் கேட்பார்களே!

நண்பர்:
இந்துமதத்துக்கு மாறுகிறேன் என ஒரு அபிடவிட்டும், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் காப்பியும் கொடுத்தால் போதும்

நான்:
புரியல. நானே எழுதி நானே கையெழுத்துப் போட்டுக்கொடுக்கணுமா? எந்த பூசாரியும் எனக்கு சர்டிபிகேட் தரமாட்டாரா?

நண்பர்:
அபிடவிட் என்பது எழுத்துபூர்வமாக தரும் தாள்.நீங்களே எழுதி கையெழுத்து போட்டுதரலாம். பூசாரியின் சர்ட்டிபிகேட் வேண்டியதில்லை.பூசாரி சான்றிதழ் கொடுத்தால் செண்டிமெண்டாக நல்லது என நினைத்தால் எந்த கோயிலிலும் போய் நிர்வாக அதிகாரியிடம் / பூசாரியிடம் போய் என்னை ஆசிர்வதித்து ஒரு வரவேற்பு சான்றிதழ் எழுதிகொடு என கேட்கலாம்.கொடுப்பார்கள்:-)

நான்:
நான் ஒரு பிராமன ஜாதியில் சேர்ந்துகொள்ளலாமா?

நண்பர்:
எதாவது ஜாதியில் சேரவிரும்புகிறவர்கள் தயவு செய்து இந்துமதத்துக்கு வரவேண்டாம். மனிதனாக இருக்க விரும்புகிறவர்கள் மட்டும் வரவும். இருக்கும் ஜாதி வெறியர்களை திருத்துவது எப்படி என்பதே பெரும் சிக்கலாக இருக்கிறது.புதுசா எதுக்கு அந்த கூட்டத்துக்கு ஆள் சேர்க்கணும்?

நான்:
நான் அப்படி வந்தால் புதிய சாதியைத் தோற்றுவித்து அதனுள் தனியே நிற்பேன். எவளும் என்னைக் கட்டிக்கொள்ள மாட்டாள். குலம் கேட்பாள் கோத்திரம் கேட்பாள். தனிமனிதனாக இருந்து சாவதற்கு நான் மதம்மாற வேண்டுமா? எந்த சாதியும் என்னை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஜாதி இருக்கும்வரை இந்து மதத்துக்கு யாரும் மாறமாட்டார்கள். இருப்பவர்களும் ஓடுவார்கள் என்பதே நான் கண்ட உண்மை. நான் இந்து மதத்துக்கு எதிரியல்ல. எனக்கு மதவெறி கிடையாது. மதமாற்றம் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் சாராம்சத்தை அறிவிப்பதே என் நோக்கம்.

கிருத்தவர்கள் மிகுந்த சேவை செய்கிறார்கள்:

1. அனாதைகளுக்கு அனாதைவிடுதி உலகமெங்கும் வைத்டிருக்கிறார்கள் கிருத்தவர்கள். இந்த சேவைக்கு இணை வேறு எதுவும் கிடையாது. நான் ஒரு முஸ்லிம் இந்து நாட்டில் பிறந்து இந்துக்களோடு வாழ்ந்தவன். ஆனால் கிருத்துவர்களைப்போல ஆனாதை விடுதி சேவைகளை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்வதில்லை. மனிதம் போற்றினால்தான் அது மதம். இல்லாவிடால் அது ஒரு புண். கடந்த முறை இந்தியா சென்றபோது மாதாகோவில் சென்று அனாதைகளுக்கு பிரியாணி கொடுத்தேன் என் பிறந்தநாளுக்கு. அந்த சுகம் இன்னும் என் நெஞ்சில் ஒட்டிக்கிடக்கிறது.

2. சிறந்த கல்வி கொடுக்கிறார்கள் கிருத்தவர்கள். அனாதைகளை அப்படியே விட்டுவிடுவதில்லை. அருமையான ஒழுக்கம் சொல்லித் தருவார்கள்.என் தம்பி மாதாகோவில்தான் படித்தான். நல்லொழுக்கம் என்று ஒரு தனி வகுப்பே நடக்கும். இளய வயதில் ஆழமாக நல்லொழுக்கத்தைப் படிப்பிப்பார்கள். ஆயிரம் கோவில் கட்டுவதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றானே பாரதி அதைச் செய்வது கிருத்துவ மதம்தான். இஸ்லாமோ இந்து மதமோ அல்ல.

3. அளப்பரிய கருணையைக் கற்பிக்கிறது கிருத்துவம். சிறு வ்யது முதலே ஏசு நாதரின் படஙக்ளைப் போட்டுக்காட்டி. கருணையாக இருங்கள் பாவம் செய்யாதீர்கள் என்று ஒவ்வொரு நாளும் சொல்ல்லித் தருவார்கள். மனதில் ஒரு இரக்க குணத்தை எப்படியும் வரவழைத்துவிடுவார்கள். உண்மையான கிருத்துவன் - True Christian என்று பெருமையாக சொல்வதையே விரும்புவார்கள். மாதா கோவில் சென்று நான் நிறைய ஏசுநாதர் படம் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன். மனம் அப்படியே பண்படும். இரக்க குணம் பொங்கும்.

4. சகிப்புத் தன்மையை கிருத்துவம் கற்பிக்கிறது. இந்தியாவில் எப்போது பார்த்தாலும் இஸ்லாம் வெறியனும் இந்து வெறியனும் அடித்துக்கொண்டு செத்து மடிவான்கள். அந்த அளவுக்கு கிருத்துவர்களின் கதை வருவதில்லை. மிகக் குறைவாகவே அதை நான் கேள்வியுற்றிருக்கிறேன்.

இத்தனையையும் தந்துவிட்டு அவர்கள் கேட்பது என்ன மதம் மாறுகிறாயா என்றுதான். விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்த மாட்டார்கள். இஸ்லாமும் கட்டாயப் படுத்தாது. இந்துமதமோ மதம் மாறு என்று கேட்கவே கேட்காது. ஏனெனில் மதம் மாறுவதென்பது மிகுந்த குழப்பம் உள்ள ஒரே மதம் இந்துமதம்தான். அதில் பிற்ப்புதான் எல்லாம். பிரமணனாய்ப் பிறந்தால் மட்டுமே பிராமனன். தலித்தாய் பிறந்தால் தலித்தான். ஒரு தலித் பிரமணாய் மாறவே முடியாது. ஒரு பிராமணன் கல்லனாய் மாறவே முடியாது. மற்ற மதங்கள் அப்படியல்ல, ஒருவனின் நடத்தையால்தான் அவன் அந்த மதத்தவன்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால், மதஙக்ள் அத்தனையிலிருந்தும் மனிதனுக்கு விடுதலை வேண்டும். அதற்கான தொடக்கம் மதமாற்றம்தான். மதங்கள் இப்போதைக்கு ஒளியாது. ஆகவே பிடித்த மதத்துக்கு மாறிக்கொண்டே இருங்கள். இன்று இது பிடிக்கவில்லை என்றால் நாளை இன்னொன்று. மதம் மாறும்போது மதவெறி அழிகிற்து. மதப்பற்று சிதைகிறது. வாழ்வும் வசதியுமே பிரதானமாய் ஆகிவிடுகிற்து.

நாம் ஏன் கொத்தடிமைகளாக கீழ் சாதியினராக ஒரு மதத்தில் இருக்க வேண்டும்? உடனே மாறவேண்டியதுதானே? ஒரு மதத்தில் மேல் ஜாதியாக நான் இருந்தால் எல்லா மரியாதையும் எனக்கு இருக்கிறது. நான் மாற வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் என்னை அடிமையாக்கி ஒரு மதம் வதைக்கிற்தென்றால் நான் ஏன் அதில் இருக்க வேண்டும். இப்படியாய் மாறிக்கொண்டே சென்றால் ஒரு நாள் மதம் என்பது கேலிச்சித்திரங்களாய் ஆகிவிடும். அது ஒரு வகையான மார்க்கம் அதாவது வாழ்க்கை நெறி மட்டுமே என்பது உறுதிபடும். எனக்குப் பிடித்த மார்க்கத்தில்தானே நான் வளமோடு வாழமுடியும்

அரபுக் கனலிலே எத்தனைக் காலம்


இந்தப் பாடலுக்கான முன்னுரையில், என் தாயைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். முப்பது வயதுக்குள் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு
தன் கணவனைக் காலனிடம் வாரிக்கொடுத்துவிட்ட பாலை மணலலை என் தாய்.

என் தாயின் வெள்ளைச் சேலையை மாற்றி வண்ணச் சேலை கட்டச் சொல்லி தினமும் அழுவேன் என் ஒன்பது வயதில். செய்வதறியாது என் தாய் என்னோடு சேர்ந்து அழுவார்.

நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று என் அம்மா என்னைப் பெற்றெடுக்கவில்லை. என் தாயின் துயர நிலை கண்டு என் கண்கள் கழன்று விழுந்தன. நானே வீட்டில் மூத்த ஆண் மகன்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி, பற்றி எரியும் கவிதைகள் எழுதிக்கொண்டு வீட்டில் சாம்பலானது போதும் என்று அவசரமாய் முடிவெடுத்தேன்... பாலைவனம் புறப்படேன்.

அப்படியே இரத்த நாளங்களைப் பிய்த்துக்கொண்ட பயணமான அந்த நாளை என்னால் மறக்கமுடியாது.

அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குப் பத்தாயிரம் பணம் வேண்டும் என்றார்கள். நான் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்காவிட்டால் அதை என்னால் கொடுத்திருக்கவே முடியாது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார் இது இரண்டாவது உம்மல் பரிதா என்று. அதுதான் என் தாயின் பெயர்.

அப்போது சவுதியில் இருந்தபடியே ”பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்” என்ற பாடலின் மெட்டுக்கு இப்படி ஒரு பாடலை எழுதினேன்.அரபுக் கனலிலே எத்தனைக் காலம்
வாழ்க்கை என்னும் பூ வாடும்

பூக்க மறந்து சருகாய்ச் சிதைய
யார் விட்ட சாபம் அரங்கேற்றம் - இங்கு
யார் விட்ட சாபம் அரங்கேற்றம்

பூங்கவிக் குயிலொன்று தானே முன்வந்து
பணம் தரும் கரங்களில் விழி பெருக்கும்

பூமெத்தை மடிகளில் பெட்ரோல் வளங்களில்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும் - என்றும்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும்

தாய்மலர் இதயத்தில் தீயொன்று விழுந்தது
துணைநின்று காத்திட வழியேது

உருக்கிய இரத்தம் பணமாய்ப் பூத்தது
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது - இன்று
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது

அவன் பெயர் போர் வீரன்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம்
மனிதன்
பரிணாம வளர்ச்சியே
பெறவில்லை
என்ற அறிவிப்பு
போர்

கண்காணாத தேசத்தில் விளைந்த
ஆப்பிள் என் ரத்தமாகிறது

என் காலடி மண்ணில் விளைந்த நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது
எது

சுயநலத்தால்
அறுபட்ட நரம்புகளாய்
உலகில் எல்லைக் கோடுகள்

தாய்மண் என்பது
போரெனத் திரிந்தால்
அது மயானம்

தாய்
புதைக்கப்பட்டுவிடுகிறாள்

இரத்தம் தந்து
வளர்த்தெடுத்த தாய்மண்
ரத்தம் கேட்கும்
பிசாசாகிவிடுகிறது

மனிதன்
மிருகமானால்
அவன் பெயர் போர்வீரன்

அமைதி காக்கப்
போரிட வந்தவனுக்குப்
பெண் வெறி
எங்கிருந்து வந்தது

நாடு காக்கப் போரிடும்
அவனுக்கு
சதை தின்ன
எப்படித் தோன்றிற்று

வாழும்போது
எவையெலாம் ஒழுக்கமோ
அவையே
முதலில் கொல்லப்படுகின்றன
போரிடும்போது

அநீதிகளில்
விளையும் நீதியும்
அநீதிதான்

ஒவ்வொரு யுத்தத்திலும்
பெண்கள் ஏன்
பிழிந்தெடுக்கப் படுகிறார்கள்

போரை வெறுப்போம்
போர் வீரனை மறுப்போம்

மனிதனிலிருக்கும்
தெய்வத்தை
மனிதனில் இருக்கும்
மிருகம்
கொன்று தின்னும் காட்சிதான்
போர்வீரன்

மொழிவெறி
மதவெறி
இனவெறி
நிலவெறி
சாதிவெறி
என்று
எதுவானாலும்
அது
வெறிதான்

போர் மறுப்போம்
போர் வீரனை வெறுப்போம்

மனிதர்களாய் மட்டுமே
வாழ்வோம்

அணிந்துரை - ப்ரியன் - நட்சத்திரங்களால் ஒரு நிலவு

மேகங்களில் மடல்கள் எழுதி, நிலாவினில் வலைப்பக்கங்கள்
செதுக்கி, நட்சத்திரப் பொத்தான்களைத் தட்டித்தட்டி பைனரி
மின்னிழைகளில் தமிழ்க் கவிதைகள் எழுதும் இனியவர்,
இளையவர் கவிஞர் ப்ரியன்.

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடனில் இவர்
எனக்கு அறிமுகமானார். இவரின் இதயத்திலிருந்து நேரடியாய்
இணையத்தில் இறங்கும் கவிதைகளோ உன்னை நான் முன்பே
அறிவேனே என்று புரிபடாத ஜென்மக் கதைகள் பேசின.

சின்னச் சின்னதாய்க் கொஞ்சிக் கொஞ்சி காதல் கவிதைகள்
எழுதத் தொடங்கிய ப்ரியன் இன்று ஒரு புத்தகமே போட
வளர்ந்திருப்பது தமிழுக்கும் எனக்கும் தித்திப்பாய் இருக்கிறது.

காகங்கள் கூடியிருக்கும்போது ஒரு கல்லெறிந்து கலைத்து
விடுவதைப்போல, தனிமைகள் கூடியிருக்கும் இதயத்தில்
இவரின் கவிதைகளைச் செல்லமாய் எறிந்து அப்படியே
ஓட்டிவிடலாம்.

வாசிக்கத் தொடங்கிய உடனேயே வேற்றுக் கோளுக்கு
இழுத்துப் போகும் மந்திரக் கயிற்றை இவரின் கவிதைகளில்
நான் அவ்வப்போது கவனித்து வருகிறேன்.

இவரின் பார்வை இவர் மனதைப் போலவே மென்மையானது,
காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள்
காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன.

இவர் நிலாவைப் பார்ப்பார் நிலா தெரியாது, பூவைப் பார்ப்பார்
பூ தெரியாது, மழையைப் பார்ப்பார் மழை தெரியாது, காற்றில்
அசையும் இலைகளைப் பார்ப்பார் இலை தெரியாது,
அதிகாலையில் ஒளிப்பூ மலர்வதைப் பார்ப்பார் விடியல்
தெரியாது, எல்லாமாயும் இவருக்கு இவரின் காதலி மட்டுமே
தெரிவாள்.

தன் இதயத்தின் சுற்றுப்புறங்களையும் சேர்த்தே இவர் தன்
காதலிக்குக் கொடுத்துவிட்டுப் புல்லரிக்கும் கவிதைகளையும்
பொழுதுக்கும் கொடுத்துக்க்கொண்டே இருக்கிறார்.

அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை
ஆனாலும்
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்

காதலி சாரலில் நனைந்ததற்கே இவர் தெப்பலாய் நனைந்து
விட்டாராம் அவள் தெப்பலாய் நனைந்திருந்தால் இவர்
டைடானிக் கப்பலாய்க் கவிழ்ந்திருப்பார் என்று சொல்லாமல்
சொல்லும் இந்தத் துவக்கக் கவிதையே சிலிர்ப்பானது.

காதலியை எப்படி எப்படியெல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள்
கவிஞர்கள். இவர் எப்படி வர்ணிக்கிறார் என்று கொஞ்சம்
பாருங்கள்.

தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்ன சில்லுகள்தாம்
மழை

சில்லுகளெல்லாம் மழைத்துளி என்றால் சிலை என்னவாக
இருக்கும்? யோசிக்கும்போதே நனைந்துபோகிறதல்லவா,
தலை துவட்டிக்கொள்ளவும் மறந்துபோகும் நம் கற்பனைகள்?
கவிஞனின் கற்பனை முடியும்போது நம் கற்பனை தொடங்கி
விடவேண்டும். அதுதான் நல்ல கவிதைக்கு அடையாளம்.
அப்படியான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம்.

சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்

யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன்
காதலியையா? மழையோடு கோபம் கொண்டு மழை பொழியும்
நாட்களிலெல்லாம் இவரை சன்னல்களும் இல்லாத அறையில்
பூட்டிவைக்கப் போகிறார் இவரின் காதலி :)

மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை

இப்படி இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலிப்பது தமிழ்ப்
பண்பா :) ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனாலும்
கட்டுபடியாகும் ஆசையாக இருக்கக்கூடாதோ ப்ரியன்?

நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை

இதற்கு என்ன பொருள்? மழையே பொழியாமல் இருந்திருக்குமா
என்ன? அப்படியல்ல. பெய்தவையெல்லாம் இவருக்கு மழையாகத்
தெரியவில்லை. அவள் இருந்தால் பெய்யாதபோதும் மழையை
உணர்கிறார் இவர். அப்படியென்றால் காதலியும் மழையும் வேறு
வேறு அல்ல. இவரின் காதல்தான் மழையோ?

எதையும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்தால் அது எத்தனை
அழகானாலும் அலுப்புதான் தோன்றும். எத்தனை முறைதான்
ஒன்றையே காண்பது?
ஆனால் காதலனுக்குத் தன் காதலிதான்
பிரபஞ்ச அதிசயம். பொழுதுக்கும் அவளைக் கண்டு கொண்டே
இருப்பான் அலுக்கவே அலுக்காது என்பதைவிட காணக்காண
மேலும் மேலும் ஆவலையே தூண்டுவாள் அவள். அதை
எத்தனை எளிமையாய்ச் சொல்கிறார் பாருங்கள் ப்ரியன்.

வானம்
பெய்ய மழை
பெய்யப் பெய்ய பெருமழை
நீ
காண அழகு
காணக் காணப் பேரழகு

அவள் ஓர் ஏழை. ஆனால் அழகில் சீமாட்டி. கிழிந்த ஆடை அவள்
அழகைக் குறைக்கவில்லை மேலும் கூட்டிவிடுகிறது. அதோடு
கொஞ்சம் மழை நீரும் சேர்ந்துகொண்டால் அவளின் அழகு
என்னவாகும்? இந்தக் காட்சியை எத்தனை நயமாய்ச் சொல்கிறார்
பாருங்கள். ஓர் எசகுபிசகான காட்சியை மிக நாகரிகமாகச்
சொல்லும் இந்த மெல்லிய வரிகளை பண்பாடுமிக்க ஒரு
பொன்மனக் கவிஞனால்தான் பொழியமுடியும்.

உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு

அதென்ன "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" என்றொரு தலைப்பு?
இதோ காரணத்தை அவரே சொல்கிறார் கேளுங்கள். அது எத்தனை
இனிமை என்று உணருங்கள்

மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்

இவரின் மழைத்துளிக் கவிதைகளில் மேகத்தின் மொத்தமும்
அப்படியே ஊர்வலம் போகிறது. உதாரணத்திற்காக ஒரு கவிதை
இதோ

நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழைப்போல
நீ நின்றுபோன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு

காதலின் மிக முக்கிய ஓர் பணி என்னவென்றால், அது காதலர்களைப்
பண்படுத்த வேண்டும். எத்தனைக் கரடுமுரடான இதய வேர்களையும்
அது சீவிச் சிக்கெடுத்து இனிப்பு நீரில் நீந்தச் செய்யவேண்டும்.
காதலியின் பார்வையால் மீண்டும் மீண்டும் பிரசவமாகும் உயிரைப்
போன்றவன்தான் காதலன்.

பூமியை சுத்தமாக்கி
புதியதாக்குவது மழை
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை

காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த
பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு. அதையும் மிக அழகாக
ஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் ப்ரியன்

எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்
அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்

காதல் என்றாலே அது அதீத சந்தோசமும் அதீத சோகமும் கொண்ட
வினோதமான பூ. அழுகை அந்தப் பூவின் இதழ்கள். சந்தோச நெசிழ்வில்
அழுகை, சோகத்தின் பிடியில் அழுகை. ஆனால், நாம் அழவேண்டாம்,
நமக்காக அழ ஓர் ஆள் இருக்கிறது என்று காதலியிடம் சொல்கிறார்
ப்ரியன். யார் அந்த ஆள் என்று பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை

என்றால் மழை இவருக்கு யார்? இந்தக் கேள்வியை இதயத் தாடைகளில்
அசைபோட்டபடியே இந்தத் தொகுப்பெனும் தோப்பினுள் நீங்களும்
முயல்களாய்த் தத்தித்தத்திச் செல்லுங்கள். குயில்களாய்ப் பாடிப்பாடித்
திரியுங்கள். மலர்களாய்ப் பூத்துப்பூத்துக் குலுங்கள்.

பிரியாத ஆர்வத்தோடு கவிஞர் ப்ரியன் மேலும் பல நல்ல கவிதை
நூல்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகின்ற
இவ்வேளையில் வாழ்க இவர் போன்ற கவிஞர்களால் மேலும் இளமை
எழில் கொப்பளிக்கும் தமிழ்க் கவிதைகள் என்றும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அன்புடன் புகாரி
கனடா
பிப்ரவரி 23, 2006
வாழ்க்கை நாடகசபா

ஒரு நாடகம் தொடங்கியது
மேடையிலல்ல; என்னைச்சுற்றி

என்னைப்
பொறியிலடைத்துத் தூக்க
உறவுகளால் ஒரு தத்ரூப நாடகம்

புரிந்துபோனதும்
புதிராய்த்தான் உதிர்ந்தேன்
முதலில்

பிறகு...
நானும் கலந்துகொண்டேன்
ஆவலும் அவசியமும் உந்த

நானும் நடிக்கிறேன் என்று
அந்த நடிகர்களுக்குத் தெரியாது

என் பாத்திரத்தின் கதை வசனம்
அவர்கள் அறியாதது

இதனுள் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர்
எத்தனை அரிதார முகங்களுடன்
நடிக்கிறார்களோ தெரியாது

ஒரு சிலரைக் காணும்போது
இவர்கள் இன்று நடிப்பதாய்த்
தெரியவில்லையே என்று
நானே வியக்கும் அளவுக்கு
அத்தனை இயல்பாய் நடிக்கிறார்கள்

இதில் நானும் நடிக்கிறேன் என்று
அறிய முடியாத முட்டாள்கள்
அவர்கள் என்று நான் நினைத்தால்
நான்தான் முட்டாளோ
என்று தோன்றுகிறது

அடுத்த காட்சி
எனக்கு வேறாகவும்
அவர்களுக்கு வேறாகவும்
இருப்பதால்
இந்தப் பல்முனை நாடகத்தில்
அடிக்கடி வசனங்களை
மாற்றிக்கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கிறது

எல்லோரும் கைதேர்ந்த
வசனகர்த்தாக்களாய்
வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்
காட்சிகளை அருமையாய்
அரை நொடியில் திட்டமிட்டு
அப்போதே அரங்கேற்றுகிறார்கள்

திறமையற்றவர்களெல்லாம்
சில காட்சிகளிலேயே
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

என்றாலும்
இந்த நாடகத்தின் முடிவு
எவருக்குமே தெரியவில்லை

இந்த நாடகம்
முடிவடையாது என்றும்
புரிந்துபோய்விட்டது

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல

வாழ்வது எப்போது
என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை

கனடிய சந்திப்பு - ஜெயபாரதனைச் சந்தித்தேன்

இனிய ஜெயபாரதன் அவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். எனவே நட்சட்திரக் குறியிட்டு அப்படியே இம்மடலை வைத்திருந்தேன். என் பணிச்சுமை அப்படி... இன்றும் போதிய நேரல் இல்லை என்றாலும் சில வரிகளாகவது சொல்லிப் போகவே வந்தேன்...

கனடாவில் அறிவியல் கட்டுரைப் பேரரசை இந்த அடியேன் குடும்பத்தோடு சென்று பார்த்து இரு தினங்கள் அவரின் மாளிகையில் தங்கி மகிழ்ந்து வந்த கதையைச் சொல்ல பக்கங்கள் போதாது. குறிப்பாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஜெயபாரதனின் அறிவு இல்லத்தில் நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தது புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று புத்தகங்களுக்குள் புதைந்து
கிடந்தார்.

அடுக்கிவைக்கப்பட்ட ஒளிநாடாக்களில் சரித்திர விசயங்கள் ஏராளம். அதில் ஈழத்தின் புலிமுகாம்களில் பிபிசி எடுத்த குறும்படம் பார்தோம். சொல்ல வார்த்தைகள் இல்லை. சயனைட் தாலி கட்டிக்கொள்ளும் பிஞ்சுகளைக் கண்டால் கண்ணீரல்ல கண்களே வெளிவந்து விழுகின்றன... இந்திய சுதந்திரகால பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம் இன்னொரு ஒளிநாடாவில்...

பின் தோட்டத்தில் கொத்துக்கொத்தாய் காய்கறிகள் பழங்கள் என்று சுறுசுறுப்பாய்த் தோட்டவேலையில் சாதனை காட்டி இருக்கிறார். ஒரு கறுவேப்பிலைக் கன்றை தத்தெடுத்துக்கொண்டு வந்தோம் நாங்கள் டொராண்டோவுக்கு..

ஏரிக்கரையில் உல்லாசமாக அலைந்தோம் புகைப்படங்கள் எடுத்தோம்... இனிப்பாய்க் கழிந்த நாட்களைக் கடந்து மீண்டும் வீடுநோக்கி வரும்போது வழியில் ஒரு அழகி பூனைக்குட்டி மியாவியது என்னை அழைத்துப்போ என்று. அள்ளி எடுத்துக்கொண்டோம். வரும் வழியிலேயே அதற்குப் பெயர் சூட்டு விழா நடந்தது.

தேன்முகில் என்று பெயரிட்டேன். என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது பெயர். முகில்... முகில்... என்றால் இப்போதெல்லாம் பூனைக்குட்டிக்கு ஒரே ஆனந்தம். அதற்கும் அந்தப் பெயர் பிடித்துப் போனதில்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...

அன்புடன் புகாரி
வருடம்: 2006
உன்னைப் பிரிந்து
தூரமாய்ச் செல்லச் செல்ல
மனதுக்குள் மூச்சு முட்டும்
ஏதோ ஒரு பாரம் தன் எடையை
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

உன் நினைவுகள்
ஒன்றிரண்டாய் வந்து வந்து
உசுப்பிவிட்டது போக
இன்று மாநாடே கூட்டி
வா... வா... என்றழைக்கும்
மரண வாயிலைத் திறந்து விடுகின்றன

என் மூச்சுக் காற்று என்னை
வாழவைத்ததெல்லாம் பழைய கதை
இன்று அந்த மூச்சுக் காற்றே
என் மூச்சை நிறுத்த வந்த
நெருப்புக் காற்றாகி விட்டது

இப்போதய என் விழிகள்
திறந்தபோதும் நீ மூடிய போதும் நீ

நீயென் அருகில் இருந்த போது
திடீரென்று விரித்துக்கொண்ட
என் சிறகுகளுக்குத்தாம்
எத்துணை வலிமை

என்னைத் தூக்கிக் கொண்டு
நான் கண்டறியாத ஏதேதோ
சொர்க்க வெளிகளிலெல்லாம்
அலைந்தனவே

இன்று தேடிப் பார்த்து
சிறகுகளைக் காணாத என் பார்வை
நிலைகுத்தி நிற்கிறது

விசித்திரம்தான்
உன்னை விட்டு நான்
தூரமாய் நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய என் பாதை
நெருப்பு முட்காடாய் விசுவரூபம் எடுப்பது

ஆச்சரியம்தான்
உன் விழிகளின் ஒளிக்கீற்று
என்னை இவ்வளவு தூரம்கூட
விடாமல் துரத்தி வந்து தாக்குவது

இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள
என்ன வழி என்றுதான்
நான் தவித்தேன் அப்போது

ஆனால்
வலியின் ருசியை
உயிரில் நிறைக்க நிறைக்க
காதல் எனக்கு
வாழ்வின் அமுதத்தை
அள்ளி அள்ளி ஊட்டுகிறது

அதில்
சிக்கி இருப்பதே
சுகம் எனக்கு இப்போது!

அணிந்துரை - ஜெயபாரதனின் நூலுக்கு

உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு அந்நியர் ஆகார்...

தமிழ் என்பதொரு கடல். அதில் உலக நதிகள் அத்தனையும் வந்து கலந்திட வேண்டும். தமிழ்க்கடல் வந்து சேராத ஒரு துளி எழுத்தும் உலகின் எந்த மூலையிலும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் அத்தனை எழுத்துக்களும் அச்சுமாறாமல் தமிழுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.

தமிழ் என்பதொரு மழை. இந்த மழை பொழியாத எந்த நிலமும் உலகில் எங்கும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் காய்ந்த மண்ணிலும் ஈரமாய் தமிழ் நின்று பொழிந்திட வேண்டும். தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உலகின் அத்தனை மொழிக்கும் பெயர்க்கப்படவேண்டும்.

இவை செய்பவன் போற்றுதலுக்குரிய தமிழன். அந்தத் தமிழனை தமிழ் தன் முத்தங்களுக்குள் பொத்தி வைத்துத் தாலாட்டும். அப்படித் தாலாட்டப்படும் சில நூறு தமிழர்களுள் அறிவியல் சிரிப்போடு ஜெயபாரதனும் இருப்பார்.

கவியோகி இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர். அவர் எழுதிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாய் ஏற்று நூறு+ கோடி மக்களும் தினமும் மரியாதை செலுத்திப் பாடி வருகிறோம்.

பழம்பெரும் இந்தியப் பண்பாட்டை மேற்குலகக் கருத்துக்களோடு இணைத்து சிறப்புறச் செய்து பெருமை பெற்றவர் தாகூர். அவரின் கீதாஞ்சலிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தாகூரின் தாய் மொழியான வங்காளத்தில் எழுதப்பட்டு அவராலேயே ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அப்படியான ஒரு மொழிமாற்றத்திலிருந்து இன்னொரு மொழிமாற்றமாக நம் ஜெயபாரதன் கீதாஞ்சலியைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம், பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும் சிதையாமல் அப்படியே மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும் வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு செத்துப்போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.

ஜெயபாரதனின் மொழியாக்கம் சிறப்பாய் அமைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர் மூலப்படைப்பின் சொல் பொருள் கவிதை நயங்களின் அலைகளில் அப்படியே சிலிர்த்துப்போயிருக்கிறார். அவை அப்படியே அவர் இதயத்தில் கூடுகட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த குஞ்சுகள் மூலத்தின் ராகத்தை அப்படியே இயல்பாய் இசைத்திருக்கின்றன.

உதாரணத்திற்காக ஜெயபாரதனின் மொழியாக்க வானத்திலிருந்து ஓரிரு நட்சத்திரங்களின் ஓரங்களை மட்டும் இங்கே நாம் உரசிப் பார்ப்போம்.

ஆதியில்லாக் காலத்திற்கு அந்தமில்லை
உந்தன் கைகளுக்குள் நகர்வதால்
எந்தன் அதிபதியே
காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை
எண்ணிக் கணிப்பவர் எவருமில்லை

சூட்சும தரிசனங்களின் ஆணிவேர்களைத் துலாவிப் பார்க்கும் இம்மாதிரியான வெளிச்ச விரல்கள்.

மெய்வருந்தி இறுகிப்போன வயலை
உழவன் எங்கே உழுதுகொண்டு இருக்கிறானோ
வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்

ஆன்மிகத் தேடலின் நிதரிசனங்களாய் உருளும் இம்மாதிரியான மனப்பயணச் சக்கரங்கள்.

தன் சொந்த வீட்டை வந்தடைய
ஒவ்வோர் அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி தட்ட வேண்டியுள்ளது

பிறரிடம் பிச்சை எடுப்பவனே
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று யாசித்திடு

இயல்பான அசைவுகளால் காற்றில் துடிப்போடு மிதக்கும் இம்மாதிரியான சிந்தனைச் சிறகுகள்.

குளிரும் மழை வேளைகளில்
அங்குமிங்கும் அலையும் காற்றைப் போல்
நிலைமாறிக் கலங்குது என் நெஞ்சு

எப்போது முகம் காட்டுவாய் நீ என் அன்பே
கண்ணிமை கொட்டாது கவலையில் சோர்ந்துபோய்
விண்வெளிக்கு அப்பால் நோக்கியவண்ணம்
நிற்கிறேன் விழித்துக்கொண்டு

அழைத்துப் பாடுவது காதலியையா கடவுளையா என்று மயங்கவைக்கும் இம்மாதிரியான அழகு நயங்கள்.

நான் இசைத்த முந்தைய பாசுரங்கள்
நாக்கில் வரண்டு போனதும்
புதிய கீதங்கள் ஊறிப்
பொங்கி எழுந்தன நெஞ்சில்
பழைய தடங்கள் மறைந்து போன இடத்தில்
புதிய பூமி உதித்தது அதிசயமாய்

அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் நம்பிக்கையின் திசையில் மனதை நகர்த்தி அந்த அதிசயம் நிகழ்வதே வாழ்க்கையென்று அறிவிப்பதுபோல் இருக்கும் இம்மாதிரியான முத்திரைச் சித்திரங்கள்.

நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாடநினைத்த கீதம்
இன்றுவரை வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது

வேட்கை மீறி கீதம் வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை
பூரணமாகக் கீதம் பூத்து
விரியவில்லை சீராக இன்னும்

அருகில் பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்

கவியோகி தாகூருக்கும் அதே திருப்தியற்ற நிலைதானா என்று வியக்கவைக்கும் இம்மாதிரியான முத்துச் சரங்கள்

இப்படியாய், இந்தத் தொகுப்பு முழுவதும் தாகூரின் கவிதைகள் ஜெயபாரதனின் மொட்டிலிருந்து பூத்தவைபோல் பூத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புதானா என்று வியக்க வைக்கும் வண்ணம் குற்றால அருவிகளாய்க் கொட்டுகின்றன.

தாகூரின் எண்ண நுணுக்கங்களை அப்படியே நுணுங்காமல் தருவதிலும், பரந்து விரிந்த தாகூரின் ஆன்மிக இதயத்தை அப்படியே தமிழ்த் தாம்பூலத்தில் ஏந்தித் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயபாரதன்.

இணையம்தான் ஜெயபாரதனை எனக்கு அறிமுகம் செய்தது.

இணையவலை பிரித்துக் கொரித்துக்கொண்டிருந்த ஓர் மதியப் பொழுது ஜெயபாரதனின் கட்டுரை ஒன்றை என் கண்களுக்குள் இழுத்து வந்தது. அது ஓர் அறிவியல் கட்டுரை. நீளம் அகலம் ஆழம் என்று எல்லா திசைகளிலும் அடர்த்தியாய் இருந்த அந்தக் கட்டுரை என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அறிவியல் கட்டுரை எழுதுவோர் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க இயலாமல் திண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அக்கட்டுரையோ மிக இயல்பான அழகு தமிழில், ஒவ்வொரு கலைச் சொல்லுக்கும் எளிதான தரமான தமிழ்ச்சொல் இட்டு, எண்ணத்தில் ஒரு வண்ணத்த்துப் பூச்சியைப்போல சட்டென ஏறிக்கொள்ளும் வண்ணமாய், பல புகைப்படங்களால் சூழப்பெற்று ஒரு காட்சி வர்ணனையைப் போல ஆக்கப்பட்டிருந்தது.

இன்று கனடாவில் வாழும் ஜெயபாரதன், 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்திலும் 17 ஆண்டுகள் கனடிய அணுசக்தித் துறையகத்திலும் பணியாற்றிவிட்டு இப்போது முழு ஓய்வில் இருக்கிறார். "ஆக்க வினைகளுக்கு அணுசக்தி" என்னும் இவரது முதல் புத்தகத்துக்கு சென்னை பல்கலைக் கழகம் மாநில முதற் பரிசை அளித்துள்ளது.

கடந்த கோடை விடுமுறையில் என் குடும்பத்தோடு இவர் இல்லம் சென்றேன். நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார் ஜெயபாரதன்.

தன் இரு மகள்களையும் கனேடியர்களுக்கு மணமுடித்துக்கொடுத்து பேரப்பிள்ளைகளோடு குதூகலமாய் வாழும் இவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்கும் ஒருவரால் இவரை ஓய்வுபெற்று வாழும் ஒருவராகக் காண்பது கடினம். நேற்றே மீசை முளைத்த துடிப்பான இளைஞரைப் போல சுறுசுறுப்பாய்ச் செயலாற்றி வருகிறார்.

தமிழறிவும் அதற்கு இணையான ஆங்கில அறிவும் மட்டுமல்லாமல் கவிதை ரசிப்பும் ஆன்மிகத் தேடலும் ஜெயபாரதனின் விரல்களை கீதாஞ்சலி மொழியாக்கத் தளத்தில் உறுதியானவையாக ஆக்கி உலவ விட்டிருக்கின்றன.

தாகூரின் கீதாஞ்சலியை நான் இப்போதுதான் முழுவதுமாக வாசிக்கிறேன். ஜெயபாரதனின் தமிழ் உள்ளத்தால் அது என் கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டி இருக்கிறது. வாசித்து மகிழ்ந்தவன் நன்றி கூறுகிறேன். என்னைப்போல் பலரும் நிச்சயம் நன்றி கூறுவர்.

தாகூர் கவிதை எழுதவில்லை. கவிதைகள் தாகூரை எழுதி இருக்கின்றன. தன்னுள்ளம் எதுவென்று பாடுகிறாரா, தன் காதலியிடம் ஏங்குகிறாரா அல்லது கடவுளிடம் தவிக்கிறாரா என்ற பொதுநிலைப்பாடு கீதாஞ்சலியின் வெற்றி.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஆன்மிகப்பற்றும் அற்புத வழிதரும் என்பதற்குச் சான்றுகளாய் இத்தொகுப்பெங்கும் பல பாடல்கள்.

ஒவ்வொரு மொழி மாற்றத்தின்போதும் ஏதோ ஒரு வகையில் மூலம் சிதைவடைவது இயல்புதான். இருந்தும், ஆங்லத்துக்கு மொழிமாற்றப்பட்ட தாகூரின் வங்காளக் கவிதைகளை நம் தமிழ்க் கடற்கரைகளில் சூரியனைத் தொட்டுப் பறக்கும் பட்டங்களாய் பறக்கவிட்டிருக்கிறார் ஜெயபாரதன்.

தாகூரின் சொற்களில் சிறு சிதறலுமின்றி லயித்திருந்தால்தான், தாகூரின் கருத்தோட்டங்களோடு செம்புலப்பெயல் நீரென ஒன்றிப்போயிருந்தால்தான், இப்படி ஓர் அழகான அச்சுமாறாத இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுத்த இன்னொரு தாயைப்போல் நிறைவோடு நிற்கமுடியும் ஜெயபரதனால்.

பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ் வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது. இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம் தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.

அன்புடன் புகாரி

வேண்டுதல் வேண்டுமா?

தேவைகள் உள்ளவனே மனிதன். தன் தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை கொண்டவனும் அவனே.

ஆனால் எது தன் தேவை என்று அறியாதபோது அவன் தோல்வியுறுகிறான். தேவையறிந்து திட்டமிடுதலே எதிலும் முதல்படி. காரியம் என்பது கடைசிப்படிதான்.

வேண்டுதல் என்பது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது.

நிறைவேற்ற சிரமம் தரும் தேவைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு இவற்றைச் செய்யவேண்டும் என்று உறுதி செய்துகொள்வதுதான் வேண்டுதல்

இந்த ஆற்றை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்று நினைத்து முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர்.

இந்த ஆற்றைக் கடக்க இறைவா எனக்கு அருள்செய் என்று கூறிக்கொண்டு முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர்.

இந்த இருவருமே தன் தேவையைத் தன்னிடமே உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆற்றைக் கடப்பது சிரமங்கள் மிகுந்தது. ஆனால் அதை நான் எப்படியும் கடந்துவிடுவேன் என்பதும் நம்பிக்கை...

ஆற்றைக் கடப்பது சிரமம் மிகுந்தது இறைவன் துணையால் நான் எப்படியும் கடந்துவிடுவேன் என்பதும் நம்பிக்கை...

இரண்டுமே நம்பிக்கைகள்தாம் என்றாலும் காரியம் நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் வெறும் நம்பிக்கையில் மட்டுமல்ல அயரா உழைப்பிலும் விடாமுயற்சியிலும் இருக்கிறது

இறைவனிடம் வேண்டிக்கொண்டவன் தான் முயன்றால்தான் இறைவன் கைதருவான் என்று நம்பினால்தான் வெல்வான் இல்லையேல் இறைவன் கைவிட்டுவிட்டான் என்று இறைவனைச் சபிக்கத் தொடங்கிவிடுவான்.

அவன் உண்மையில் சபிப்பது இறைவனையா அல்லது அவனையேவா?

இறைவனிடம் வேண்டாமல் தன் சக்தியை நம்பி ஆற்றைக் கடக்கத் திட்டமிட்டவன் தன்மீது அபார நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டால் அவனும் வெற்றியடைய முடியாது.

அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கும் முட்டாளைவிட தன் முயற்சியால் வெல்வேன் என்று இறுதிவரை உயிர் வதைத்துப் போராடுபவனின் வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம்.

அவனையே இறைவன் காப்பாற்றுகிறான் என்று இறை நம்பிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அதே சமயம், தன் மீதுள்ள நம்பிக்கை எந்த ஒரு சமயத்திலும் தனக்குக் குறையும் வாய்ப்பினைப் பெற்றால் அவனைச் சுற்றியர்வகளின் உந்துதலைப் பெறவேண்டும்.

அதோடு அனவது சுயவலியும் வைராக்கியமும் மூர்க்கம் தர வேண்டும் அப்போதுதான் வெற்றி விருந்தாகும்.

இறைவனை நம்புகின்றவர்களுக்கு, எத்தனை தோல்வி வந்தாலும் இறைவன் துணை இருக்கிறான் என்ற ஒரு அழுத்தமான நம்பிக்கை இருக்கும். அது அவனைச் சோரவே விடாது.

ஆக, இறைவனின் நம்பிக்கையும் இருந்து சுயத்தின் விடா முயற்சியும் இருந்தால் அவனது வெற்றியை எவராலும் மாற்ற முடியவே முடியாது.

எப்படியாயினும் வேண்டுதல் வேண்டுமென்றுதான் ஆகிறது. எவனொருவன் எதைத் தன் உயிர் பிளந்து அதன் உள்ளே விதைக்கிறானோ அதை அவன் அடைந்தே தீருவான்.

அத்தனை சக்தி வலிமையான எண்ணங்களுக்கு இருக்கின்றன.

எண்ணமே எவருக்கும் எல்லாமுமாய் இருக்கிறது.

ஒரு எண்ணம் நிறைவேற அழுத்தமான நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை எந்த வழி வந்தாலும் வெற்றி என்பது உறுதிதான். ஆகவே, வேண்டுதல் வேண்டும்தான்

தற்கொலை என்பது தீவிரவாதமா?

தற்கொலையும் தீவிரவாதம்தான்.

தீவிரவாதம் என்றால் என்ன? மனிதம் அழிக்கும் ஒவ்வொரு செயலும் தீவிரவாதம்தான்.

தீவிரவாதத்தை நாம் அகிம்சைக்கு எதிரான நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு செயலாகப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் தற்கொலையும் தீவிரவாதம்தான்.

மனிதரை மனிதர் மாய்ப்பது தீவிரவாதம் அல்லவா? அது தானே தன்னை அழித்துக்கொள்வது என்றாலும் நியதி ஒன்றுதானே?

என்றால் உண்ணாவிரதம் இருப்பது தீவிரவாதமா? அதுவும்தான் தன்னை வருத்திக்கொள்கிறது பிறரையும் வருத்தப்பட வைக்கிறது என்று கேட்கலாம்.

உண்ணாவிரதம் என்பது தீவிரவாதத்திற்கு எதிராக மனிதர் செய்யும் அகிம்சை யுத்தம்.

அகிம்சை இல்லாதததுதான் தீவிரவாதம்.

மனிதர்களின் கருணையை எதிர்பார்த்து உண்ணாவிரதங்கள் தொடங்கப்படுகின்றன. கருணையற்ற எவரும் துன்பத்துக்கு தன்னை ஆளாக்கிக் கொள்ள மாட்டார்கள். மனிதநேயம் உள்ளவர்கள் மனிதம் காக்க நிச்சயம் முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் உண்ணாவிரத்தின் குறிக்கோள். தன் கருணை பிறரிடமும் இருக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காக தன்னை வருத்திக்கொள்வது மனித நலன் நோக்கிய வெற்றிக்கான படிக்கட்டு அல்லவா? அது எப்படி தீவிரவாதம் ஆகும்?

உழைப்பு என்பது தன்னை வருத்திக்கொள்வதுதான். ஆனால் அது தீவிரவாதமா? மனிதத்துக்கான ஓர் உரம் அல்லவா அது.

சுகப்பிரசம் என்பது பெண் தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? மனித இன ஆதாரமல்லவா?

அநீதி இழைக்கப்பட்டவன் தற்கொலைக் குண்டாக மாறுவது என்பது தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? நிச்சயம் தீவிரவாதம்தான். ஏனெனில் ஒன்று அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அடுத்தது மேலும் பல உயிர்களை அழிக்கிறான். ஆகவே மாற்றுக்கருத்து இல்லாமல் அது தீவிரவாதம்தான்.

வயல்களில் பயிரிடுவது களை பறிப்பது அறுவடை செய்வது தன்னை வருத்திக்கொள்வதுதான். ஆனால் அது தீவிரவாதமா? மனித இருப்புக்கான மகத்தான செயல் அல்லவா?

பள்ளியில் படித்து பரிட்சை எழுதுவது தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? மனித வளர்ச்சியின் ஆதாரங்களில் ஒன்றல்லவா?

வாழ்வின் சுமையைத் தாங்கிக்கொள்வது தன்னை வருத்திக்கொள்வதுதான். அது தீவிரவாதமா? சுமை தாங்கிக்கொள்பவராக நம்மை வளர்த்துக்கொள்வதும் சக உயிர்களும் துயரத்தில் வாடாமல் காப்பதும் மனிதமல்லவா?

நல்லதங்காள் எடுத்த முடிவு தன் கண்முன்னே பெற்ற குழந்தைகள் துடித்து சாவதை விட தான் கொன்றுவிட்டு செத்திடலாம் என்பது நல்லெண்ணம் தானே, அந்த சூழ்நிலையில் எல்லா தாயும் ,. ஏன் தகப்பனுமே எடுக்கும் முடிவுதானே அது.. என்பது கேட்பது நியாயமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால், நல்லதங்காள் செய்தது சரியல்ல. அதுவும் தீவிரவாதம்தான்.

பெற்ற குழந்தைகளுக்கு ஒருநாள் விடியல் வரும். அவர்கள் துன்பத்திலேயே செத்துவிடுவார்கள் என்று நினைப்பது நம்பிக்கையே இல்லாத நிலை. அவளின் அவசர கண்மறைந்த நிலை. அவள் தன்னை அழித்ததும் அவசர நிலையே. அவள் துயர் கண்டு நாம் கண்ணீர் வடிப்போம். அவளின் கோழைச் செயல் கண்டு அவளையும் சமூகத்தையும் கண்டிப்போம்.

ஒரு பெண் தன்னையும் காத்துக்கொள்ளமுடியாத தன் பிள்ளைகளையும் காத்துக்கொள்ள் இயலாத நிலையில் இருப்பது பெண்ணடிமைத்தனம்.

இதுபோன்ற சூழலில் ஒவ்வொரு தாயும் எடுக்கும் முடிவு தற்கொலைதான் என்றால் உலகில் ஓர் உயிரும் இருக்காது! உலகின் உயிர்களை அழிக்கும் எதுவும் தீவிரவாதமேயன்றி வேறில்லை.

இறைவனிடம் கையேந்துங்கள்

பிரபஞ்சம் பொருள் சக்தி என்ற இரண்டாலும் ஆனது. பிரபஞ்சத்தில் உள்ள கல் மண் புல் பூண்டு மரம் செடி கொடி விலங்குகள் மனிதர்கள் பஞ்ச பூதங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் பகுதிகள். பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் சக்தி மிக்கது. மனிதனின் இயக்கமும் மனிதனின் சக்தியும் பிரபஞ்சத்தின் இயக்கம் மற்றும் சக்தியில் ஒரு சிறு பகுதிதான்.

எண்ணங்களுக்கு சக்தி உண்டு. மனிதன் எதைத் தீவிரமாக எண்ணுகிறானோ அதை அடைகிறான். மனிதனின் சக்தியை அவனே ஒருங்கிணைத்தால் அவன் சாதிக்கக்கூடிய வற்றின் அளவு வெகுவாக உயர்கிறது.

தனக்கு எது வேண்டும் என்பதில் மனிதனுக்குத் தெளிவு வேண்டும். அந்தத் தெளிவு முழுமை பெற்றுவிட்டால், அவன் அதை சாதிக்கிறான். தன் தேவைகளில் அவன் சற்றே சறுக்கிவிட்டால் அவன் சாதனை தள்ளிப்போய்விடுகிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது.

மனிதனின் வாழ்க்கை சந்தர்ப்பங்களால் ஆனது. சில சந்தர்ப்பங்கள் நமக்கு சந்தோசம் தருகின்றன. சில சந்தர்ப்பங்கள் நமக்கு பெருந் துயரைத் தருகின்றன. இவை தவிர்த்த சந்தர்ப்பங்கள் வெறுமனே நம்மை ஓடிக்கொண்டிருக்கச் செய்கின்றன.

இந்தச் சந்தர்ப்பங்களையெல்லாம் நமக்குத் தருபவர் யார்? எங்கிருந்து இந்த நல்ல கெட்ட இடைப்பட்ட என்ற மூன்று சந்தர்ப்பங்களும் வருகின்றன. இதற்கான விடை மிக எளிது. பிரபஞ்சம் இயக்கத்தில் இருக்கிறது. அந்த இயக்கத்தின் ஓட்டமே இந்த சந்தர்ப்பங்கள்.

சரி, இந்த சந்தர்ப்பங்களை மாற்றி அமைக்க முடியுமா? நிச்சயம் முடியும். எப்படி?

பிரபஞ்சத்தைப் போலவே தானே இயங்கக் கூடிய சக்தி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் சக்திகளுக்கும் உண்டு. பிரபஞ்சத்தின் பொதுவான நீரோட்டதிலும் கொஞ்சம் தனக்கான விருப்பத்திலும் இயங்க முடியும். ஏனெனில் நாமும் பிரபஞ்சத்தின் ஒரு கூறுதான்.

நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி வேண்டிக்கொண்டால், அதாவது அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தால் நாம் அதை வென்றெடுக்கலாம். நல்ல சந்தர்ப்பம் நம்மைத் தேடிவரும். அதற்கான சக்தி நம் எண்ணங்களுக்கு உண்டு.

ஒரு திருடனுக்கு நல்ல சந்தர்ப்பம் என்பது திறந்து கிடக்கும் செல்வந்தன் வீடு. ஒரு காதலனுக்கு நல்ல சந்தர்ப்பம் என்பது அவன் காதலியின் அருகாமை. இப்படியாய் நல்ல சந்தர்ப்பம் கெட்ட சந்தர்ப்பம் என்பது ஆளுக்கு ஆள் மாறும். ஆனால் வேண்டிக்கொள்ளும் அத்தனை பேருக்கும் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்ற்ன.

ஆகவேதான் இறைவன் நல்லவர்களை மட்டும் காப்பாற்றவில்லை. கெட்டவன் நயவஞ்சகன் என்று எல்லோரையும் காப்பாற்றுகிறான். அவனிடம் நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு இல்லை.

ஆனால் இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஒரு கெட்டவன் பலராலும் வெகுவாக சபிக்கப்பட்டால், சபிப்போரின் எண்ணங்களின் ஒருங்கினைப்பு சக்தியாய்த் திரண்டு கெட்டவனை அழிக்கும் கெட்ட சந்தர்ப்பங்களை அவனுக்குக் கொடுத்துவிடும். அவன் அழிவான்.

பிரபஞ்சம் என்பதே இறைவன். இறைவனிடம் கையேந்தினால் அதாவது எண்ணங்களைத் தீவிரப்படுத்தி வேண்டிக்கொண்டால் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. நிச்சயமாக நீங்கள் பெற வேண்டியதைப் பெறுவீர்கள்.

இப்படி அருளும் பிரபஞ்சத்தின் மீது நீங்கள் வைக்கும் காதல்தான் பக்தி. உங்களின் பக்தி அதிகரிக்க அதிகரிக்க உங்கள் எண்ணங்களின் ஒருங்கிணைப்பு சந்தேகங்களைக் கடந்து தெளிவாய் அமைகிறது.

அதாவது நடக்குமா நடக்காத என்ற சந்தேகம் வந்தாலே அது நடக்காது அல்லது தள்ளிப்போய்விடும். அதாவது எண்ணம் சரியாக ஒருங்கிணைக்கப்படாவிட்டால் அந்த எண்ணங்களுக்குத் தோல்விதான்.

அந்த சந்தேகத்தைப் போக்குவதே பக்தி. உயர் பக்தி இருப்பின், எண்ண ஒருங்கிணைப்பு மிக இயல்பானதாக ஆகிவிடும். அதனால் பலன் நமக்குத்தான்.

மற்றபடி உண்டியலில் காசுபோடவேண்டாம். கடவுளுக்கு லஞ்சம் தரவேண்டாம். வேண்டிக்கொண்டால் மட்டுமே போதும். கடவுள் மீது பக்தி கொண்டிருந்தால் மட்டுமே போதும். பிரபஞ்சம் யாருக்கும் எவருக்கும் பாரபட்சமாய் இருப்பதே இல்லை. அதனால் அப்படி பாரபட்சமாய் இருக்கவும் முடியாது. அது அதன் இயல்பில் இருக்கிறது. நம் எண்ணங்களின் சக்தியால் மாற்றஙக்ளுக்கு உள்ளாகிறது. அவ்வளவே!

பலிகொடுப்பது, திருவிழா எடுப்பது, உண்டியலில் காசு கொட்டுவது என்ற அனைத்தும் அபத்தங்கள் என்று பிரபஞ்சத்தின் சக்தியைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும், தானே நமக்குப் புரிந்துவிடும்.

நம்மிடம் பிரபஞ்சம் உண்டு. அதாவது நம்மிடம் கடவுள் உண்டு. கடலின் சிறு துளியைக் கொண்டதே கடல். பிரபஞ்சத்தின் துகள்களால் ஆனதே பிரபஞ்சம். கடலின் சக்திக்கும் துளியின் சக்திக்கும் அளவில்தான் மாற்றம். மற்றபடி சக்தி உண்டு. சக்திகள் ஒருங்கிணைந்தால் சாதனை கைகூடும். வாழ்க்கை வளமாகும்

இனி கேள்விகள் பதில்கள்:

கேள்வி:
அப்படி கையேந்தாத பட்சத்தில் இறைவனான பிரபஞ்சம் நம்மை புறக்கணித்து விடுமா

என் பதில்:
நிச்சயமாக புறக்கணிக்கவே புறக்கணிக்காது. ஏனெனில் நீங்கள் பிரபஞ்சத்தின் அங்கம். இயல்பான ஓட்டத்தில் நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள். உங்களுக்கான சந்தர்ப்பங்கள் இயல்பான வழியில் வந்துகொண்டே இருக்கும். அவற்றிலிருந்து மாற்றம் வேண்டும் என்றால்தான் நீங்கள் ’கையேந்த’ அதாவது உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வேண்டிக் கொள்ளப்போகிறீர்கள்.

கேள்வி:
ஆதிகாலத்திலே மனிதன் இப்படிதான் கடவுள்னு சொல்லி இருக்கலாம், காலப்போக்கில் கடவுள் வழிபடாவிட்டால் இன்னது இன்னது நடக்கும்னு சில வியாபாரக்காரர்கள் ஏமாற்றி இருக்கக் கூடும். தொழ வேண்டும் வணங்கவேண்டும் கையேந்தி, தலை வணங்கி என்று கூறி வருங்காலத்தினருக்கு அதை ஒரு மரபாக்கி வச்சிடக்கூடாது நீங்க கண்டுபிடிக்க போகும் புது கடவுளுக்கு.

பதில்:
புது கடவுள் பழைய கடவுள் என்று ஏதும் இல்லை :) கடவுளுக்கு பலரும் பல வரையறைகளைச் சொன்னார்கள். இதுவரை சொன்னவற்றுள் மூடுமந்திரம் நிறைய. நான் அப்படியே திறந்து வைக்கிறேன். பளிச்சென்று தெரியும்படி கூறுகிறேன். இல்லாததைக் கைகாட்டாமல் இருப்பதையே சுட்டிக்காட்டி விரல் நீட்டுகிறேன். அவ்வளவுதான். நான் கடவுளை கண்டுபிடிக்கவில்லை. உருவாக்கவும் இல்லை. இருப்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்தேன். உணர்ந்ததை உஙகளிடம் கூறுகிறேன். வேண்டுதலும் எண்ணங்களின் ஒருங்கிணைபும் மரபு ஆகாது ஒவ்வொருவரின் தனித்தேவை ஆகும். வேண்டும் என்போருக்கு மட்டுமே அது வேண்டும். வேண்டாம் என்போருக்கு அது வேண்டவே வேண்டாம். அதோடு கோவில் சென்றுதான் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்றில்லை. இருந்த இடத்திலிருந்தே செய்ய முடியும். இல்லை எனக்கு கோவிலுக்குப் போனால்தான் மனம் ஒருநிலைப்படும் என்று எவரெனும் சொன்னால் அதை நான் தவறென்றும் சொல்லப்போவதில்லை. எப்படி என்ன நடக்கிறது என்பதை அறிந்து அதன் படி செய்தால் மூட நம்பிக்கைகளை முற்றாகக் களைந்துவிடலாம்.

கேள்வி:
உங்களுக்கான சந்தர்ப்பங்கள் இயல்பான வழியில் வந்துகொண்டே இருக்கும் என்றால் கிட்டத்தட்ட விதி போலவா?

ஆமாம் அதுபோலத்தான். ஆனால் ஒரு வித்தியாசம். விதி என்பது முன் செய்த பாவம் புண்ணியம் என்பார்கள். அதெல்லாம் இல்லை. விதி என்பது பிரபஞ்சத்தின் இயக்கவிதி. அதை நாம் அறியமாட்டோம். பிரபஞ்சத்திடம் கேள்வி கேட்டால் அது பதில் சொல்லாது :) நாம் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் கண்டுபிடிக்கக் கூடும்!

கேள்வி:
விதியிலிருந்து மாற்றம் வேண்டும் என்றால்தான் நீங்கள் ’கையேந்த’ அதாவது உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வேண்டிக்கொள்ளப்போகிறீர்கள்.. என்றீர்கள். ஆனால் வேண்டினால் கிடைக்குமா?.. பலருக்கு கிடைக்கவில்லையே.. அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வது?.. நம்பிக்கை சிதைந்தால் வாழ்வே சிதையுமே..?

பதில்:
வேண்டினால் நிச்சயம் கிடைக்கும். ஆனால் வேண்டிக்கொள்வதில் அறிவு வேண்டும். தீர்க்கமான ஒருங்கிணைப்பு வேண்டும். எனக்கு நிலாவை அப்படியே வாயில் இட்டு மிட்டாய் மாதிரி சாப்பிடவேண்டும் என்று ஒருவன் வேண்டிக்கொண்டால் அதில் அறிவில்லை. கிடைத்தால் நல்லது கிடைக்காட்டி பரவாயில்லை என்று ஒருவன் வேண்டிக்கொண்டால், அதில் தீர்க்கமான ஒருங்கிணைப்பு இல்லை. இதனால்தான் பலருக்கும் கிடைப்பதில்லை. சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் அவர்கள் கேட்காமலே கிடைக்கும். அது என்ன? அது பிரபஞ்சத்தின் இயல்பான இயக்கம். அது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்குத் துரதிர்ஷ்டமாகவும் ஆகிவிடுகிறது. நம்பிக்கை சிதைவதற்குத் தான்தான் காரணம் என்பதை நான் சொல்லும் நிலைப்பாட்டை உள்வாங்கிக்கொண்டால் வேண்டிக்கொண்டவனால் புரிந்துகொள்ள முடியும்.

கேள்வி:
எப்படி வேண்டணும்?

பதில்:
எண்ணத்தின் ஒருங்கிணைப்பு. அதீத நம்பிக்கையோடு சிதையாத தேடலோடு ஒரு மாறாத வேண்டுதல். தொடர்ந்த நிறுத்தப்படாத வேண்டுதல். தவம்போல. வேண்டியது கிடக்கும்வரை விடவே விடாத தீவிர வேண்டுதல்.

கேள்வி:
அப்ப நியாயமற்றதாகிடுதே.. எனக்கு கிடைத்ததெல்லாம் நான் அப்படித்தான் சொல்லுவேன்.. பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டம்தான் .. அப்ப எனக்கும் சோமாலியா குழந்தைக்கும் நியாயமற்ற ஒரு நீதியா?

பதில்:
ஆமாம். பிறந்த இடம், பிறந்த காலம் எல்லாம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கி இருக்கிறது. நீங்கள் நல்லவர் நிறைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்றெல்லாம் நினைத்து வழங்கப்படவில்லை. பிரபஞ்சத்தின் இயல்பான இயக்கத்தில் நீங்கள் அந்த அதிர்ஷ்ட பகுதியில் இருக்கிறீர்கள். சுனாமி, கொடிய நோய்கள், பூகம்பம், நிலநடுக்கம், வெள்ளம், எரிமலை, வறட்சி என்று எத்தனையோ துரதிர்ஷ்டம் இருக்கின்றதே. அவற்றுக்கான காரணம் என்ன? அவை பிரபஞ்சத்தின் இயக்கவிதிகளே அன்றி வேறொன்றுமில்லை. பிறந்த குழந்தை ஒரு பாவமும் செய்யாமலேயே செத்துவிடுகிறது. ஏன்? பிரபஞ்சத்துக்கு நம் நியாய தர்மங்களெல்லாம் அவசியமற்றது. அது அதன் செயல்பாட்டில் இருக்கிறது. அது உங்களுக்கு பலனையோ பாதிப்பையோ தருகிறது.

கேள்வி:
மரண நெருக்கடியிலும் மனிதன் மரணிக்க மறுக்க காரணம் , நம்பிக்கையா இல்லை பயமா?

பதில்:
இரண்டும்தான். பிரபஞ்ச நியதிப்படி வரும் மரணத்தை அவனால் ஒத்திப்போடவும் முடியும். அதற்கு அவனின் அறிவும் மிகுந்த நம்பிக்கையும் கொண்ட வேண்டுதல்களே காரணம். இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அவன் மரணம் அவன் எண்ணத்தின் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல அவனுக்காக தங்களின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும் அனைவராலும் நிகழும். நாம் பிறருக்காக வேண்டிக்கொள்ள முடியும். குழு பிரார்த்தனை எல்லாம் அப்படித்தான் பலன் தருகிறது. மதங்களில் சொல்லப்பட்ட நிறைய விசயங்கள் அப்படியே சரி. ஆனால் விளக்கம்தான் சரியாகத் தரப்படவில்லை. எல்லாம் அவன் செயல் என்பது அப்படியே உண்மை. ஆனால் அது எப்படி அவன் செயல் என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும்.

கேள்வி:
மாற்றங்களுக்கு இந்த பிரபஞ்சமே உட்படுகிறதா அல்லது நமது சிந்தனையின் ஊடே நாம் ஒரு புதிய பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்கிறோமா? நமது மனத் திரையில்...

பதில்:
பிரபஞ்சம் மாற்றத்தை அடைகிறது. பிரபஞ்சத்தின் மாறாத நியதி என்னவென்றால் அது எப்போதும் மாற்றங்களைக் கொண்டிருப்பதுதான். ஒவ்வொரு நொடியும் மாற்றஙக்ள் நிகழ்கின்றன. மாறும் மாற்றங்களை நம் விருப்பத்திற்கு சற்றே வளைத்துக்கொள்கிறோம்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

என்றார் வள்ளுவர். மயில் தோகைதானே என்று அதை அதிகம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும் என்று பொருள்.  இதையே நமக்கு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். நாம் இந்த பிரபஞ்சத்தில் மயிலிறகின் ஒரு சிறு முடியைவிட பலப்பலமடங்கு சிறியவர்கள். ஆனால் நம் எண்ணங்களோ மிகவும் வலிமை கொண்டவை. ஆனாலும் பிரபஞ்சத்தின் வலிமைக்கு அவை மிகச் சிறியதுதான் என்றாலும் அந்த எண்ணத்தை ஒருங்கிணைக்க ஒருங்கிணைக்க தொடர்ந்து நிலைத்திருந்த இந்தப் பிரபஞ்சத்தில் நம் பகுதி மாறும். ஒரு நல்ல வாய்ப்பு வந்து கதவு தட்டும். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவேண்டியதுதான். பிரபஞ்சம் மாறுகிறது. நம்மால் அதை மாற்றியமைக்க முடியும்!

கேள்வி:
மனதை ஒருங்கிணக்க சொன்னீர்கள்.. அதுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட மத வழிபாடு உதவலாம் என்பது என் எண்ணம்.. அது போல கூட்டு பிரார்த்தனை சர்ச், கோவில்களில் நடப்பதும் ஒன்றுகிறது..

பதில்:
மனிதம் வளர்க்கும் எதுவும் பிழையென்றில்லை. நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. ஆனாலும் பிழையான கருத்துக்களை கடவுளுக்குச் சூட்டுவது பிழை. அதனால் கோபப்பட்டு அவர் ஒன்றுமே செய்யமாட்டார். நஷ்டம் நமக்குத்தான்! சரியான அறிதல் இல்லாவிட்டால் நம் எண்ணங்கள் திசைமாறும். அதை பெரிய சக்தியின் முன் இழுத்துச் செல்வதும் நிலை நிறுத்துவதும், சந்தேகங்களற்ற நிலை கொள்ளுவதும் நமக்கு நல்லது. அது மூட நம்பிக்கைகளை, தவறான வழிபாடுகளை, பலிகளை, உண்டியலை, பாலூற்றுவதை என்ற பல காரியங்களை தவறென்று புரியவைத்து நம்மை சரியான திசையில் இறவனின் மடிகளில் அவன் சாதக இயக்கத்தில் கொண்டு சேர்க்கும்.


கேள்வி:
வேண்டுதல் என்பது நமது எண்ணங்களை, அதாவது எதை பற்றி நாம் எண்ணுகிறோமோ அதை வலுபடுத்த, திரும்ப திரும்ப வேண்டுவது. இதைத்தான் சிலர் நினைத்தால் கோவில் சென்று வேண்டுகிறார்கள், சிலர் வாரம் ஒரு முறை வேண்டுகிறார்கள், சிலர் வீட்டில் காலை மட்டும், சிலர் காலையும் - மாலையும் வேண்டுகிறார்கள் ஆனால் இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஐந்து முறை வேண்டுகிறார்கள். வேண்டுதலில் வலிமை இருப்பின், நினைத்த காரியம் கைகூடும். இதைதானே சொல்லி இருக்கிறீர்கள்

பதில்:
ஆமாம், மனித சக்தி மகத்தானது. உடல் சக்தியைவிட எண்ணங்களின் சக்தி பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது. அதை முறைப்படி பயன்படுத்தினால் எண்ணம்போல் வாழலாம். ஒவ்வொரு மதமும் வேண்டுதல் என்று வரும்போது அதை வலியுறுத்தவே செய்யும். அதற்கான காரணம் இதுதான். உன்னையே நீ அறி. உன் சக்தியை நீ உணர். உன்னை நீ உருவாக்கு! அதற்கு எண்ணங்களின் நிலையான ஒருங்கிணைப்பு மிக அவசியம்.

கேள்வி:
வீட்டுக்குள் உட்கார்ந்துக்கொண்டு எம்.எல்.ஏ ஆகனும்னு வேண்டுனா முடியுமா? வேண்டுதல் வேலைக்கு ஆகாத ஒன்று.

பதில்:
மிக நல்ல கேள்வி. வேண்டுதல் என்றால் என்ன? அப்துல் கலாம் மிக எளிமையான முறையில் “கனவு காணுங்கள்” என்றார். உடனே சிலர் படுக்கையைத் தட்டிப்போட்டுப் படுக்கப்போய்விட்டார்கள் :) அதுவா கனவு காண்பது? நீங்கள் ஒரு விசயத்தை வேண்டிக்கொள்கிறீர்கள் என்றால் அதன் பொருள் என்ன? நீங்கள் ஏற்கனவே அதற்கான முயற்சியில் இருக்கிறீர்கள் என்றுதானே பொருள்! அந்த தேவை உங்கள் உடல் உணர்வு உயிர் என்று அனைத்திலும் நீங்காமல் இருக்கிறதென்றுதானே பொருள். அப்படி அது இருந்தால் உங்கள் முயற்சி அதன் தொடர்பாக எப்படி இருக்கும்? பிறகு வேண்டுதல் இங்கே எதைச் சாதிக்கிறது? அயராத ஊக்கமுடன் அவன் தன் தேவைக்காகப் போராடுகிறான். எனவே வெற்றி பெறுவான். இடையில் வேண்டுதல் என்ன வேண்டிக்க்கிடக்கிறது என்று கேட்கலாம். நாம் ஒரு திசையில் பயணப்படும்போது நமக்கு நம் உடல் சக்தி உணர்வுகளின் சக்தி எண்ணங்களின் சக்தி உயிரின் சக்தி என்று எல்லா சக்தியும் தேவைப்படுகிறது. எண்ணஙக்ளின் ஒருங்கிணைப்புச் சக்தியை அருள்வதுதான் வேண்டுதல்கள். மனதை ஒருநிலைப்படுத்தி தன் தேவையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுதல் எதனையும் சாதிப்பதற்கான அவசியம் ஆகும். “வேண்டுதல் வேண்டுமா?” என்ற என் சிறு கட்டுரை ஒன்றை யும் என் வலைப்பூவில் பாருங்கள்.

- ஆகஸ்ட் 2003

சந்தர்ப்பங்கள்

சிரிப்புகள் மலரும்
சிறுவயதுக் கொடியிலும்
விருப்புகள் காய்க்கும்
விடலைச் செடியிலும்
வெறுப்புகள் பழுக்கும்
வளர்ந்த கிளையிலும்

ஆசைகள் தேம்பி நிற்க
சந்தர்ப்பங்களே வெல்கின்றன

தாக விழிகளுக்குள்
நிரந்தரமாய்த் தங்கிவிட்ட
பாரம் தாளாமல்
உயிர்த் தீப்பந்தம் கொளுத்தி
வெறித்தேடல் தொடங்கினாலும்
பெற்றடைந்த பொக்கிசங்களையும்
தட்டிப்பறித்துச் சிரிக்கின்றன
பொல்லாத சந்தர்ப்பங்கள்

வாழ்வுதரும் கணங்களும்
வெறுமைதரும் பொழுதுகளும்
சந்தர்ப்பங்கள்

ஒரு சந்தர்ப்பத்தை வெல்ல
இன்னொரு சந்தர்ப்பத்துக்காய்க்
காத்திருக்கவேண்டி இருக்கிறது

நல்ல சந்தர்ப்பங்களைக்
கவர்ச்சிச் சந்தர்ப்பங்கள்
கொன்றழிக்கின்றன

தேடிப்போகும் விழிகளில்
எதிர்ப்படும் சந்தர்ப்பங்கள்
தேடிப்போனவைபோல்
பாவம் காட்டுகின்றன

வேண்டாமென்று விரட்டியடித்த
விடாப்பிடிச் சந்தர்ப்பங்கள்
ஓடிப்போனவைபோல் தந்திரம்காட்டி
உட்கார்ந்திருக்கின்றன
நாம் ஏமாறும் நொடிக்காக

எந்த சந்தர்ப்பத்திலும்
தவறிவிடா வைராக்கியத்தையும்
அறுக்க ஒரு வலிய சந்தர்ப்பம்
வந்து வாய்த்துவிடுகிறது

ஆம்...
வாழ்க்கைச் சிறுமலரின்
ஒவ்வொரு இதழும்
சந்தர்ப்பங்களால் ஆனதுதான்

கனவுகளுக்குள்ளும்
கலை இலக்கியத்துக்குள்ளும்
நம் நிழல்களைத் தள்ளிவிட்டுவிட்டு
நிஜங்களை ஆள்கின்றன
நாமாகவே வாழ்கின்றன
எல்லா சந்தர்ப்பங்களிலும்
சந்தர்ப்பங்கள்

திரைவழியே இலக்கிய வெடிப்பு


கம்பன்போல் வள்ளுவன்போல் இளங்கோபோல் என்று அதிசயித்த பாரதி அவர்களின் தோளின் மீது ஏறிநின்று எழுதினான். கம்பன் தெய்வம் மனிதனாய் வாழ்ந்த காவியம் எழுதினான் இளங்கோ மனிதன் தெய்வமாய் உயர்ந்த காவியம் எழுதினான். வள்ளுவன் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நீதி சொன்னான். பாரதி இவற்றைத் தாண்டி புதுமை செய்தான்.

புதியவர்கள் எப்போதும் புதுமை செய்யவேண்டும். அரைத்த மாவை அரைப்பது தமிழின் தரத்தைக் குறைப்பது. பாரதி, சொல்புதிது பொருள் புதிது என்று வீரியம் மிக்க கவிதைகள் எழுதினான். அப்படி நவீனத்துக்குள் இறங்கியபோதும் பழைய இலக்கியச் செழுமைகளைத் தூக்கி எறிந்துவிடவில்லை. ஒரு கொள்கை வைத்து அதை அடைய கவிதையின் பணி எத்தனை உயர்வானது என்பதை முதன்முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டியவன் அவன்தான்.

அதைத் தொடர்ந்து பாரதிதாசன் வந்தார். தன் கொள்கைப் பிடிப்பில் தான் நேசித்த கவிஞனைப்போல் உறுதியாய் இருந்தார். அதே சமயம் சினிமாவுக்குள்ளும் நுழைந்தார். சினிமாவின் பலநிலைகளிலும் கால் பதித்தார்.

பின், கண்ணதாசன் வந்தார். எளிமையாக புரியும்படி எழுதவேண்டும் என்று தடம்போட்டுக்கொடுத்த பாரதியின் வழியில், உண்மையான எளிமை என்றால் கவிதையில் என்ன என்று எளிமையாகக் காட்டிய முதல் கவிஞர் அவர்தான்.

அவர்காலத்தில், பல நல்ல கவிஞர்கள், எளிமையாகவே எழுதினார்கள் அருமையாகவே எழுதினார்கள். கவிதை வானமாய் விரிந்து பரந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் கேட்கத் துவங்கியது. மூலை முடுக்குகளிலெல்லாம் கவியரங்கங்கள் மக்களை ஈர்த்தன. சினிமாவில், சினிமாவால் வாழ்ந்த கவிஞன் என்ற தனிப்பெயர் பெற்றார். கவிஞனின் ஏழ்மையை ஒழித்துக் காட்டிய முதல் கவிஞர் இவர்தான்.

இசையைப் பொருட்படுத்தாத புதுக்கவிதைகள் இதற்குள் தன் வெற்றி நாற்காலியில் அமர்ந்துவிட்டது. அப்துல் ரகுமான், மு. மேத்தா, நா காமராசு, சிற்பி போன்ற ஏராளமான பேராசிரியர்கள், மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதைகளில் ஓர் உயரத்தைத் தொட்டனர்.

வைரமுத்து இளையவர். தன் கல்லூரி நாட்களில் மரபுக்கவிதைகள் எழுதினார். அந்த மரபுக்கவிதைக்குள் புதுக்கவிதைகளின் செழுமையையும் வீரியத்தையும் கற்பனை வளத்தையும் ஏற்றி வைத்தார். கண்ணதாசனின் பாராட்டுகளைப் பெற்றார். பின் அப்துல் ரகுமான், மேத்தா போன்றவர்களின் வழியில் புதுக்கவிதைக்குள் குதித்தார். அவரின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பே அருமையாய் இருந்தது. அந்தக் கவிதை நூல்தான் திரைப்பட வாய்ப்பை இழுத்துவந்தது அவருக்கு.

கவிஞன் என்பவன் ஒரு கலவை. வைரமுத்துவும் ஒரு கலவையே. அவரின் உணர்வு உச்சங்களும், மரபு அறிவும், திடமான சிந்தனையும், அற்புதமான தமிழும், இசைக்குள் உருகி நிற்கும் மனமும், வளமான புதுக்கவிதைகளைத் தந்தன. ஆக வைரமுத்து என்பவர் பாரம்பரியத்திலிருந்து வந்தவர். தமிழின் மிகப்பெரிய பாரம்பரியத்தின் ஒரு குழந்தை. இங்கே முளைக்கும் அத்தனைக் கவிஞர்களும் அவர்போல் பாரம்பரியத்தின் விதைகள்தாம்.

இதில் இவரைப் போல் எழுதுகிறாய் அவரைப் போல் எழுதுகிறாய் என்று எவரைப் பார்த்தும் சொல்வதில் பொருள் இல்லை. கம்பனின் சொல்லழகும் கற்பனையழகும் இல்லாமல் இன்று எவருமே கவிதை எழுதிவிடமுடியாது. பாரதியின் புரட்சியும் வேகமும் இல்லாமல் எந்தக் கவிதையும் வெற்றிபெற்றுவிட முடியாது. இதேபோல், இளங்கோ, வள்ளுவர், ஔவை என்று எல்லோரையும் தொட்டுத்தொட்டுதான் இன்றும் கவிதைகள் கொட்டுகின்றன.

தமிழ்ப் பாரம்பரிய வழி வருவோர் ஒருபுறமிருக்க, அயல்நாட்டுக் கவிதைகளை ரசித்தவர்களும், அந்த இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களும், இன்னொரு திசையிலிருந்து புறப்பட்டு வந்தார்கள்

அப்படி வந்த முதல் ஆள், மரபுப் பாலை ஒரு சொட்டும் சிந்தாமல் மடக் மடக்கென்று குடித்திருந்த பாரதிதான். அவனுடைய பிறமொழி அறிவு அவற்றின் நுண்ணிய விசயங்களைத் தமிழுக்குள் கொண்டுவந்தது. இசையைத் தாண்டியும் கவிதைபாட அவனைத் தூண்டியது. வசன கவிதை பாடினான். ஹைக்கூக்களைப் பற்றியெல்லாம்கூட குறிப்பு எழுதி இருக்கிறான்.

இதனோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வளர்ச்சியும் நிகழ்ந்தது. மொழிபெயர்ப்புகள் பிறமொழி இலக்கியங்களை அறிய மிகச் சிறந்த வழி. ஆனால் இதன் ஆபத்து என்னவென்றால், புரியாததை அரைகுறையாய்ப் புரிந்துகொண்டு, வெறும் ஆர்வத்தால் மட்டுமே அவற்றை மொழிபெயர்த்து புரியாத புதிராக எழுதிவைப்பது. பின் அதையே வழக்கமாக்கிக் கொண்டுவிடுவது.

தமிழில் சிந்தித்து தமிழ்க்கவிதை வடிப்பது ஒன்று. வேற்று மொழியில் சிந்தித்துத் தமிழ்க்கவிதை வைடிப்பது இன்னொன்று. தமிழிலக்கிய மரபு இல்லாதபோது, தமிழ்நடை நொண்டிக்கொண்டு வருவது இயற்கைதானே?

சூட்சுமமாக எழுதுவதுதான் நவீனம் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னேறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியான சூட்சும வரிகள் வேறு எந்தமொழியைக் காட்டிலும் தமிழில்தான் அதிகம். சங்ககாலக் கவிதைகளில் அவை ஏராளமாய் உண்டு. ஆனால் எந்த சூட்சுமக் கவிதைக்கும் தெளிவான பொருள் கூறுவர். அப்படிக் கூறமுடியாதவை சூட்சுமக் கவிதைகள் அல்ல சுத்தப் பேத்தல்கள்.

இன்றளவில் வெற்றிபெற்ற கவிதைகளைப் பாருங்கள். அவை ஓர் அழுத்தமான கருவை மிகச் சரியாகக் கொண்டிருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் - மரபுக்கவிதை

ஒரு கவிதையின் ஒற்றை வரியே பின் முழுக்கவிதையாயும் எப்படி ஆகிப்போனது? இது சொல்கிறது, கவிதைகள் சுருக்கமாக் இருத்தல் வேண்டும் என்று.

இரவில் வாங்கினோம் விடியவே இல்லை - புதுக்கவிதை

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா - திரைக்கவிதை

இப்படி நிறையவே சொல்லிப் போகலாம். இவை அனைத்தும் திடீர் என்று கட்டாந்தரையில் முளைத்துவிட்டவையல்ல. பாரம்பரியம் தந்த பரிசுகள். இதுகாறும் வந்த கவிஞர்களுள் எந்த மரபுமே ஒட்டியிராத தனித்த ஒரு கவிஞனை எவராலும் அடையாளம் காட்ட முடியுமா?

உலகின் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்திழுத்து வைத்திருக்கும் திரைப்படம் கேவலமானதல்ல. அந்தத் திரைப்படத்துக்குள் அசிங்கம் செய்பவர்களே கேவலமானவர்கள். நல்ல திரைப்படம் என்பதும் ஓர் இலக்கியம்தான். இயல் இசை நாடகம் இல்லாத திரைப்படம் ஏது.

பாரதியின் பாடல்கள் திரை இசைக்குள் வந்தபின் சென்றடைந்த செவிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடமுடியாது. காந்தி ஐயா போராடி பெற்ற சுதந்திர நாட்டில் பிறந்தவர்களுள் பலர், அவரின் முழு சரிதையையும் காந்தி படம் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் இங்கும் அங்குமாய்ப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும். ஒரு திரைப்படம்தான் அதை மனதில் நங்கூரமாக இறக்கியது. பள்ளி கல்லூரி மாணவர்களையெல்லாம் அதைப் பார்க்கச் செய்த இந்திய அரசின் எண்ணம் தெளிவு.

சமீபத்தில் காமராஜ் பார்த்து அசந்துபோகாதவர்கள் இருக்கமுடியாது. வீரபாண்டிய கட்டபொம்பன், பாரதி, திருவிளையாடல், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

திரைப்படம் கடந்த நூற்றாண்டின் இலக்கிய வெடிப்பு!

எல்லாவற்றுக்கும் பொதுவான கடவுள்

பிரபஞ்சத்தின் புரிதல்களோடு இறைவன் பற்றிய அறிதல்கள்


1. இறைவன் என்பவன் ஒருவன்தான் - பிரபஞ்சம் என்பதும் ஒன்றே ஒன்றுதான்

2. பிரபஞ்சம்தான் இறைவன் - இறைவன்தான் பிரபஞ்சம்

3. பிரபஞ்சம் எல்லாவற்றையும்விட பெரியது - இறைவன் எல்லாவற்றையும்விட பெரியவன்.

3. பிரபஞ்சம் எல்லை இல்லாதது - இறைவன் எல்லையற்றவன்

4. பிரபஞ்சம் தொடக்கமும் முடிவும் அற்றது - இறைவன் தொடக்கமும் முடிவும் அற்றவன்

5. பிரபஞ்சம் இணையென்று தனக்கு ஏதும் இல்லாதது - இறைவன் இணையென்று தனக்கு ஏதும் இல்லாதவன்

6. பிரபஞ்சத்தின் வெளித்தோற்றத்தைக் காணமுடியாது. அது கற்பனைக்கும் எட்டாத பிரமாண்டம்.

7. பிரபஞ்சத்தின் உள் தோற்றத்தை காணமுடியும். ஆனால் காணவேண்டியது இன்னும் ஏராளம் உண்டு.

8. பிரபஞ்சம் உருவமும் அருவமும் கொண்ட கலவை.

9. பிரபஞ்சம் சக்தியாலும் பொருளாலும் ஆனது. இறைவன் சக்தி + பொருள் இரண்டையும் கொண்டவன்.

10. பிரபஞ்சத்துக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. அது அஃறிணையும் அல்ல. இவை மூன்றையும் உள்ளடக்கிய ஒன்று. அப்படியே இறைவனும்.

11. பிரபஞ்சத்துக்கு உயிர் உண்டு - இறைவனுக்கும்

12. பிரபஞ்சம் எப்போதும் இயக்கத்திலேயே இருக்கிறது - இறைவனும்

13. கல் மண் நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் புல் பூண்டு பூச்சிகள் விலங்குகள் மனிதர்கள் இருட்டு வெளிச்சம் வெளி வெற்று அசைவுகள் ஆக்கங்கள் செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் கொண்டது பிரபஞ்சம் அதாவது இறைவன்.

14. மஞ்சள் கரு மட்டும் தனியே எப்படி முட்டை ஆகாதோ, வெள்ளைக்கரு மட்டும் தனியே எப்படி முட்டையாகாதோ அதே போல பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோ செயல்களோ இறைவன் ஆகாது. ஒன்றையும் விட்டுவிடாத அனைத்தையும் சேர்ந்த ஒரே மகா சக்தியும் செயலுமே இறைவன்.

14. பிரபஞ்சத்துக்கு தனியே ஒரு நிறம் தனியே ஒரு குணம் என்று தனியே ஒரு பால் (ஆண் பெண் அலி அது) என்றெல்லாம் கிடையாது. அனைத்து நிறங்களையும் அனைத்து குணங்களையும் அனைத்து ஆண் பெண் அது என்ற அனைத்தையும் கொண்டது.

15. பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது என்பதை அறிய முடியாது

16. பிரபஞ்சம் ஓர் ஒழுங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் உயிர் மற்றும் உயிரல்லாத பொருள் + சக்தி

17. பிரபஞ்சம் தீராத கேள்விகளை என்றென்றும் கொண்டதாய் இருக்கிறது

18. பிரபஞ்சத்தின் காலம் தொடக்கமும் முடிவும் அற்றது

19. பிரபஞ்சத்தில் அனைத்தும் மாற்றங்களையே அடைகின்றன. எதுவுமே அழிவதில்லை.

20. பிரபஞ்சத்தில் மிகச் சிறியதும் மிகப்பெரியதும் பிரபஞ்சமே அதை கற்பனையால் மட்டுமே அனுமானித்துக்கொள்லுதல் வேண்டும்

மதமாற்ற எண்ணங்களின் மாற்றங்கள்

மதங்கள் இறைவனை அடையாளம் காட்டுவதற்காகத் தோன்றின. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்துச் சொல்வதற்காக வந்தன. வேறு எதற்காகவும் மதங்கள் பிறக்கவில்லை.

இது செய்யலாம் இது செய்யக்கூடாது. இது செய்தால் பாவம், நீ நரகத்துக்குப் போவாய், இது செய்தால் புண்ணியம், நீ சொர்க்கத்துக்குப் போவாய் என்றெல்லாம் நீதிகளை வகுத்துத் தந்தது மதம்.

இறைவன் மீது நம்பிக்கையை உருவாக்கி, நல்லது எது கெட்டது எது என்று வரையறை சொல்லி, சொர்க்கம் உண்டு நரகம் உண்டு, இறந்தபின் நீ வாழ்ந்த நாட்களில் நல்லது செய்திருந்தால் சொர்க்கம் புகுவாய், கெட்டது செய்திருந்தால் நரகம் புகுவாய். சொர்க்கம் சுகமானது. நரகம் கொடூரமானது. நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் இட்டு உன்னை நாளெல்லாம் வறுத்தெடுப்பார்கள் என்ற அச்சங்களைக் கற்றுத்தந்தது மதம்.

மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக் கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் வாழ்க்கை நெறிகளை வகுத்து வைத்திருக்கிறது. ஒரு மதத்தில் பிறந்ததற்காகவே, அந்த மதக்காரர்களாய் வாழ்பவர்களே பெரும்பாலானோர்.

கந்தசாமி ஒரு முஸ்லிம் வீட்டில் பிறந்திருந்தால் அவன் அப்துல் காதராய் வாழ்ந்து கொண்டிருப்பான். அப்துல் காதர் ஒரு இந்து வீட்டில் பிறந்திருந்தால் அவன் கந்தசாமியாய் வாழ்ந்துகொண்டிருப்பான்.

பிறந்து வளர்ந்து, தன் அறிவுக்கும் தேவைக்கும் ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளும் பலர், தன் மதத்தை மட்டும் மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. தனக்குப் பிடிக்காத ஒரு மதத்துக்குள் கிடந்து சிலர் புழுங்குவார்கள். அந்த மதத்தின் வரையறைகளை இரகசியமாய் மீறுவார்கள். தொடக்கத்தில் எவருக்கும் தெரியாமல் மதத்துக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பின் பழகிப் போவதால், பலரும் அறியவே செய்வார்கள்.

ஒரு மதத்தில், பாவமும் புண்ணியமும் அளந்து பார்க்கப்படலாம். நீ செய்த பாவங்கள் உன் புண்ணியத்தைவிட அதிகமாக இருந்தால், நீ நரகம் புகுவாய் என்றும், மாறாக புண்ணியம் பாவத்தைவிட அதிகமாக இருந்தால் நீ சொர்க்கம் புகுவாய் என்றும் சொல்லலாம்.வேறொரு மதமோ, நீ செய்யும் பாவங்களையெல்லாம் மீண்டும் செய்யமாட்டேன் என்று கூறினால், உன் பாவங்கள் அத்தனையும் கழுப்பட்டுவிடும். நீ சொர்க்கம் புகுவாய் என்று சொல்லலாம்.

வேறொரு மதம், நீ செய்த பாவத்துக்கு உனக்குத் தண்டனை நிச்சயம் உண்டு. நீ செய்த புண்ணியத்துக்கு உனக்குச் சொர்க்கமும் நிச்சயம் உண்டு. நீ செய்த பாவங்களுக்காய் நீ கேள்வி கேட்கப்படுவாய், நீ செய்த புண்ணியங்களுக்காய் நீ பாராட்டப்படுவாய் என்று சொல்லக்கூடும்.

இப்படியாய் மதங்களின் சட்டதிட்டங்களிலும் வாழ்க்கை நெறிகளிலும் ஒவ்வொரு மதத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கும். தனக்குப் பிடிக்காவிட்டாலும், மதங்களின் வேறு எந்த சம்பிரதாயங்களையும் சட்டதிட்டங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்தான், ஆனால் மனிதமே அவமானப் படுத்தப்படுவதைக் காலங்காலமாய்ப் பொறுத்துக் கொள்வது கொடுமையிலும் கொடுமை. தீண்டாமை, பெண்ணடிமை என்பன அப்படியான கொடுமைகளுள் சில.

ஒரு மதத்தின் தத்துவங்களில் நேரடியாய், தீண்டாமையைப் போதிக்கும் வாசகங்களோ அல்லது பெண்ணடிமையைப் போதிக்கும் வாசகங்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட நெடுங்காலமாய் செயல்முறையில் தீண்டாமையோ பெண்ணடிமையோ அந்த மதத்தில் உண்டென்றால், இந்த மதம் தீண்டாமையைப் போதிக்கவில்லை அந்த மதம் பெண்ணடிமையைப் போதிக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது.

வெறுமனே சொல்லில் இருப்பதல்ல மதம்.செயல்பாடுகளில் இருப்பதுதான் மதம்.அரக்கன் என்ற பெயரில் ஒருவன் நல்லதை மட்டுமே செய்துவந்தால் அவன் நல்லவன்தான், அரக்கனல்ல. அதுபோல நல்லவன் என்ற பெயரில் ஒருவன் அட்டூலியம் செய்துவந்தால், அவன் அரக்கன்தான், நல்லவனல்ல.

ஒரு மதத்தில் ஒருவன் இழிவு படுத்தப்படுகிறான் என்றால், அவன் அதிலிருந்து விடுதலை அடையவேண்டும். விடுதலை அடைய எந்தெந்த வழிகள் உள்ளன என்று ஆராயவேண்டும். உயிர் காக்கப்படுவதற்காகவும், மனிதம் காக்கப்படுவதற்காகவும் எடுக்கப்படும் எந்த முடிவும் தவறாகாது.

எந்த மதமும் தனக்கான தீர்வு அல்ல என்றால் எல்லா மதங்களையும்விட்டு வெளியேறவேண்டும். எனக்குச் சொர்க்கமும் நரகமும் நான் வாழும் இந்த மண்ணில்தான் என்று தெளிவாகச் சொல்லவேண்டும்.

இப்படி மதமற்றோருக்கு இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமுதாயங்களில் அங்கீகாரம் கிடையாது. அவமதிப்புகள் நிறைய உண்டு. அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில், இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை.இந்நிலையில் முன்னேற்றம் காணாத சமுதாயத்தில் உள்ள மக்கள், தங்கள் கொடுமைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உடனடி தீர்வாக, மதம் மாறுகிறார்கள். சற்றேனும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

இப்படி மதம் மாறுபவர்கள் இன்னொரு பேருண்மையைத் தெளிவாகக் காட்டுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் இன்னொரு காலகட்டத்தில் இந்த மதமும் ஏற்புடையதல்ல என்னும் பட்சத்தில், இதிலிருந்தும் மாறுவோம் என்பதே அது. இப்படிப் படிப்படியாய், மதமற்ற நிலை உலகில் உருவாக வாய்ப்புகள் ஏராளமாய் உண்டு என்றாலும் அது சற்றுத் தொலைவில்தான் உள்ளது என்பதும் உண்மையே.

ஒரு மதத்தின் உண்மையான தத்துவங்களில் இல்லாத கீழ்த்தரமான செயல்கள், இடைக்காலத்தில் சிலரின் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவை சீர் செய்யப்படவேண்டும். சீர் செய்துகொள்ள அதற்கு உடன்பாடு இல்லாவிட்டாலோ, அதனுள் இருந்து புழுங்குவோர் சீர்செய்யும் சக்தியற்று துயரத்திற்கு மட்டுமே ஆளாகுபவர்களாய் இருந்தாலோ, அவர்கள் மதம் மாறுவதிலோ, மதங்களையே நிராகரிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை. மனித வாழ்க்கை அத்தனை நீளமானதல்ல, இயலாததைப் போராடியே உயிர்துறக்க. போராடவும் வேண்டும், வாழவும் வேண்டுமென்பதே மண்ணில் பிறந்த மனித இதயங்களின் முடிவாய் இருக்கமுடியும்.

உள்நாட்டில் வேலை இல்லாதவர்கள்தாம் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள். வேலை எங்கே நான் அங்கே என்று செல்வோர்தான் இன்று உலகின் அதிக எண்ணிக்கையானோர். நாளை இதன் நிலை இன்னும் வளர்ச்சியடையும் என்பதை அனைவரும் அறிவோம். முன்பு ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், பின் மாநிலம் விட்டு மாநிலம் சென்றார்கள். இப்போது பெருமளவில் நாடு விட்டு நாடே செல்கிறார்கள். இவற்றுக்கான அடிப்படை என்னவென்றால் அது வாழ்க்கைதான். வாழ்க்கையைத் தேடிப்போவது வரவேற்கப்பட வேண்டியது.

அதேபோலத்தான் இந்த மதமாற்றங்களும்.மதம் மாறுவோர் அதிகமாக அதிகமாக எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. விரும்பாததில் வீற்றிருக்க விரும்பாதோர், அதனுள்ளேயே சாகாமல் வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறுவோர் அதிகரிக்க அதிகரிக்க எல்லா மதங்களையும்விட்டு மனிதர்கள் வெளியேறும் நாளும் விரைந்து வருகிறது.

துவக்கத்திலேயே சொன்னதுபோல, மதம் என்பது இறைவனை அடையாளம் காட்டவும் நல்ல வாழ்க்கை நெறிகளைச் சொல்லித்தரவும்தான். அப்படி இருப்பவற்றுள் எது சரி என்று ஒருவனுக்குப் படுகிறதோ அதில் அவன் மாறிக்கொள்வதே தனிமனித உரிமை, மற்றும் சுதந்திரம்.

ஒரே வீட்டில் ஏன் தாய் ஒரு மதமாகவும், தந்தை ஒரு மதமாகவும், மகன் ஒரு மதமாகவும் மருமகள் ஒரு மதமாகவும், மகள் மதமே அற்றவளாகவும் இருக்கக்கூடாது? யோசித்துப் பாருங்கள், அதில் என்ன தவறு இருக்கிறது? பிறந்துவிட்டால் அதிலேயே புழுங்க வேண்டும் என்றால், மதம் என்பதென்ன மாற்றிக்கொள்ளவே முடியாத ஊனங்களா?

மதம் மாறுவதால் இனம் மாறாது நிறம் மாறாது தன் முகம் மாறாது, ஆனால் எது கொடுமை செய்ததோ அதிலிருந்து விடுதலை கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் என்றுதான் மதமே மாறுகிறார்கள். அங்கேயும் அது கிடைக்காவிட்டால், அதிலிருந்தும் வெளியேற சில் நிமிடங்களே போதும். ஆக மனிதன் மனிதனாக வாழ எந்த மரம் நிழல் தருகிறதோ அந்த மரம் நாடுவதே வாழ்க்கை.

ஒரு மதத்தில் தீண்டத்தகாதவர்களாய் இருப்பவர்கள் இன்னொரு மதம் மாறும்போது சகோதரகளாய் ஆகிறார்கள் என்றால் மதம் மாறுவது நல்ல விசயம்தான். ஒரு மதத்தில் அடிமைகளாய் இருக்கும் பெண்கள் இன்னொரு மதம் மாறும்போது சுதந்திரமாய் ஆவார்கள் என்றால் மதம் மாறுவது சிறந்ததுதான்.

மதம் ஒன்றும் பெற்ற தாய் இல்லை, அதை மாற்றாமலேயே வைத்திருக்க. வெறுமனே அது ஒரு கொள்கைதான். அதன் நல்ல கொள்கைகள் ஈர்ப்பதைவிட அதன் மோசமான கொள்கைகள் வதைப்பது அதிகம் எனில் வெளியேறுவது நல்வாழ்வின் அடையாளம்.

எத்தனைதான் சிலர் கல்வி கற்றுவிட்டாலும், உயர் பதவிகளில் பணியாற்றினாலும், பணக்காரர்கள் ஆகிவிட்டாலும், பலர் அவர்களை வன்மையாய் சாதியின் பெயரால் கேவலப்படுத்துவார்கள். அவர்களை மோதிமிதித்துவிட்டு, முகத்தில் உமிழ்ந்துவிட்டு, மாற்றம் காணுவதே மீதி வாழ்வுக்கு அமைதி.

ஒரு மதத்திற்குள் இருந்துகொண்டே அதன் சாதிக்கொடுமைகளுக்காகப் போராட வலிமை பெற்றவர்களாய், நல்ல மனம் கொண்ட உயர்சாதிக்காரர்களாகவே இருந்திருக்கிறார்கள். தாழ்ந்த சாதிக்காரர்களில் பலர் போராடும் வலிமையும் இல்லாதவர்களாய், அதற்கான அறிவும் இல்லாதவர்களாகவே நெடுங்காலமாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். விழித்துக்கொண்ட தாழ்ந்த சாதிக்காரர்கள் போராடிப் போராடி மனம் வெறுத்து ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மதம் மாறித்தான் இருக்கிறார்கள்.

உயர் சாதிக்காரர்களுள் பலர் இன்றும், சாதியமைப்பு தீண்டாமை போன்றவற்றை மாற்றுவது அவசியமில்லை என்று வாதிடுவதும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள் பெண்ணடிமைத் தனத்தை மாற்றத் தேவையில்லை, பெண்கள் பாதுகாப்பாகவும் நலமாகவுமே வாழ்கிறர்கள் என்று கூறுவதும் வேடிக்கையான விசயங்கள். சுயநலத்தின் உச்சங்கள். வக்கிர எண்ணங்களின் எச்சங்கள்.

மதம் மாறினால் அடையாளம் தொலைந்துவிடுமே என்று சிலர் அடுத்தவர்களுக்காக வெகு அக்கறையாய்க் கவலைப்படுகிறார்கள். நல்ல அடையாளங்களையே பெற்றிருக்கும் இவர்களைப் போன்ற மேல் சாதியினருக்கும் சுதந்திர வர்க்கத்துக்கும் மாற்றம் ஏன் வேண்டும். அடுத்தவர்களை அடிமைகளாக்கி வாழ்வதுதானே இவர்களின் எண்ணம்.

நெருப்பில் நிற்பவனுக்குத்தான் வேதனை. வசதியாய் நிழலில் நின்று கொண்டு உபதேசம் செய்வது மிகவும் எளிதானதுமட்டுமல்ல அப்பழுக்கில்லாத சுயநலமானது. அப்படியே நீ நெருப்பிலேயே நின்றுகொண்டு போராடு, நிழலுக்கு ஓடிவந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதே ஏனெனில் உன் அடையாளம் தொலைந்துவிடும் என்பது இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவையாகும்.

அடையாளம் அடையாளம் என்றால் என்ன? தோட்டி என்பது ஓர் அடையாளமா? பறையன் என்பது ஓர் அடையாளமா? கீழ்ச்சாதி என்பது ஓர் அடையாளமா? அடிமை என்பது ஓர் அடையாளமா?இவற்றிலிருந்து வெளியேறாவிட்டால் நீ உன் மனித அடையாளம் தொலைக்கிறாய் என்பதை மறக்காதே. நெஞ்சு நிமிர்த்தி நான் மனிதன் என்று சொன்னால் அது உயிரினத்தின் அடையாளம். தமிழில் உரையாடி நான் தமிழன் என்று மார்தட்டினால் அது தாய்மொழியின் அடையாளம். நான் கீழ்ச்சாதி என்று சொன்னால் அது அடையாளமா? நான் அடிமை என்று சொன்னால் அது அடையாளமா?

நாம் யாருக்கும் அடிமைகள் இல்லை நாம் யாரையும் அடிமையாக்கவில்லை என்று நடைமுறையில் வாழ்ந்துகாட்டுவதே மனிதர்கள் அவசியமாகவும் அவசரமாகவும் அடையவேண்டிய அடையாளம்.

ஒரு காலத்தில் மதமாற்றம் என்றாலே அது கட்டாயத்தால் நிகழ்ந்த ஒன்றாய் இருந்தது. இன்று அப்படியல்ல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து வைக்கமுடியாது. விரும்பியவர்களை யாரும் தடுக்கவும் முடியாது.திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடினார்.

உண்மைதான், ஆனால், திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும் என்றால் அவனுக்கு நல்லவை கெட்டவைகளில் நம்பிக்கை வேண்டும். திருடுவது தவறு என்று தோன்றவேண்டும். ஆனால் அப்படி எண்ணுபவர்கள் திருடர்களாய் இருப்பதில்லை. நாட்டில் இருக்கும் சட்டங்கள் சரியாகச் செயல்பட்டால்தான் திருட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது.

அதே போலத்தான், பாவ புண்ணியங்களின் மீது பயத்தை உண்டு பண்ணி நல்லவர்களாய் வாழ வழி செய்தன மதங்கள். ஆயினும் மனிதர்கள் தவறுசெய்பவர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு நாட்டின் சட்டங்கள் சரியாகச் செயல்படுவதுதான் நடைமுறைத் தீர்வு.

நாட்டின் சட்டங்களை வகுத்தவர்கள், பல மதங்களிலும் சொன்னவற்றை அலசிப்பார்த்திருக்கிறார்கள், பல புரட்சியாளர்கள் சொன்னவற்றை அனுசரித்திருக்கிறார்கள், மக்கள் நலன், நாட்டின் முன்னேற்றம் இவை அனைத்துக்கும் எது சிறந்தவழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அனுபவத்தின் பலனால் அவ்வப்போது சட்டத்தை மாற்றியமைத்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றுள் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்துவதில் ஓட்டைகள் இருந்தால், இனி வரும் காலங்களில் நிறைவு படுத்திக்கொண்டும், ஓட்டைகளை அடைத்துக்கொண்டும் சட்டங்கள் வரும். அவை கடைபிடிக்கப்படும். நாடும் மக்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும், நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகும் பிரச்சினைகளோடு சுகமாக வாழ்வார்கள்.

ஆக, மதமாற்றம் என்பது, கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான தற்காலிக தீர்வுதான். ஆனால் அது அவசியமான தீர்வு. நிரந்தரத் தீர்வு என்பதை எட்டிப்பிடிக்க இதுபோன்ற மதமாற்றங்கள் அவசியமாகின்றன. மதமாற்றம் ஒரு மதத்தின் மீதுள்ள கண்மூடித்தனமான பற்றை அடித்து நொறுக்கி, எனக்கு வேண்டாம் என்றால் வெளியேறுவேன் என்று வீராப்பாய்ச் சொல்கிறது. இதை நான் வரவேற்கிறேன்.

பிறப்பால் ஒரு மதம் பழக்கத்தால் ஒரு மதம் விருப்பால் ஒரு மதம் அறிவால் நான் எந்த மதமும் இல்லை என்று எத்தனையோ பேர்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு மதத்துக்குள் இருக்கும் பெரும்பாலானோர் எந்த மதத்தையும் ஆதரிக்காதவர்களாய் அல்லது எல்லா மதங்களையும் ஆதரிப்பவர்களாய்த்தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஏதோ பிறந்தோம் இந்த மதத்தில் இருக்கிறோம். அப்படியே அதைப் பின்பற்றியா நடக்கிறோம், நடப்பதெல்லாம் நம் விருப்பம், இந்த சமுதாயத்துக்காக அந்த மத முகம், அவ்வளவுதான் என்று இருப்போர் பலரை பலரும் அறிவார்கள்.

சிலருக்கு மதம் ஓர் உணர்வுபூர்வமான அங்கம். அதைப் பற்றிப் பேசினாலே, கொதித்தெழுந்து அனைத்தையும் கொளுத்திப் போட்டுவிடுவார்கள். இந்த உணர்ச்சித் தளத்திலிருந்து மனிதனுக்கு விடுதலை தருகிறது மதமாற்றம்.

மனிதர்கள் அறிவாலும் அன்பாலும் முழு விடுதலை பெறவேண்டும். அதற்குத் தடையாய் இருப்பவற்றை மிதித்து உயர்வதே வாழ்க்கை.

கறுப்பு நிறத்தை வெறுத்து வெள்ளை நிறம் இரத்தவெறி கொண்டது ஒரு காலம். கறுப்பு நிறத்தைக் கண்டு அதில் மயங்கி வெள்ளை நிறம் காதல் கொள்வது இந்தக் காலம். நிறமாற்றம் ஈர்ப்பினைத் தருகிறது பலருக்கு. கறுப்பாய் இருப்பவர்கள் வெள்ளையாய் இருப்பவர்களை விரும்புவதும், வெள்ளையாய் இருப்பவர்கள் கறுப்பாய் இருப்பவர்களை விரும்புவதும் இயற்கை.

இன்று உலகின் பரப்பு சுருங்கிப் போய்விட்டது. இனங்களெல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. புதிய இனங்கள் தோன்றுகின்றன. அல்லது இன அடையாளங்கள் மறைகின்றன.

பண்பாடுகள் எல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. புதிய கலாச்சாரங்கள் உருவாகின்றன அல்லது பழைய கலாச்சாரங்களின் முகங்கள் வெளிறிப் போகின்றன.

மதங்களெல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. விருப்பமானதைத் தேர்வு செய்வதே வாழ்க்கை என்ற எண்ணம் ஒவ்வொரு இதயத்திலும் வலுக்கிறது.

இந்தச் சூழலில் மதமாற்றம் மட்டுமல்ல, மனித நலனை நோக்கிய எந்த மாற்றமும் நல்ல மாற்றம்தான்.

இடுகாட்டில் பெண்

இடுகாட்டுக்கு பெண் வர அனுமதி மறுக்கப்படுகிறது. ஏன்?

இதற்கான காரணத்தைத் தேடிப்பார்க்கிறேன். இதுதான் காரணம் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்குத் தோன்றுபவை கீழே:

1. பெண்கள் ஒப்பாரி வைப்பவர்கள். அதை வீட்டோடு நிறுத்திக்கொள்ளலாம் ஈமக்கிரியை அமைதியாக நடக்கட்டும் என்று இருக்கலாம்

2. பெண்கள் மென்மையானவர்கள், ஊரின் எல்லையில் பேய் பயங்கள் உள்ள நாட்களில் பெண் இடுகாடு வந்து பிணம் எரிவதைப் பார்த்தால் அவள் பயந்து மனோவியாதிக்குப் போவிடுவாள் என்று இருக்கலாம். திடுக் திடுக் என்று அவளுக்கு வாழ்நாள் முழுவதும் தூக்கிப்போட்டால் பாவமல்லவா?

3. எரியும்போது பிணம் எழும். அதை வெட்டியான் அடித்து நொறுக்குவான். இப்படி அடிக்கிறானே என் பாசத்துக்குரிய உறவை என்று அவள் வெட்டியானை வெட்டிப்போடவும் துணியலாம்.

4. பிணம் என்பது கிருமிகள் விரைவில் ஏற்கக்கூடியது. வயதானவர் செத்திருக்கலாம். நோய்வாய் பட்டவர்கள் செத்திருக்கலாம். யாராய் இருந்தாலும் நோய் பரவும். அது குழந்தைகளை சட்டென தொற்றும். குழந்தைகளோடு நெருக்கம் உள்ளவர்கள் பெண்கள். கர்ப்பிணி இருப்பாள், கைக்குழ்தைக்காரி இருப்பாள். நீ வா நீ வராதே என்று சொல்ல முடியாமை இருக்கலாம்.

5. ஆண்கள் இடுகாடு சென்று வரும்போது குளித்துவிட்டு வருவார்கள். பெண்களால் அவ்வளவு எளிதில் வெளியில் குளிக்க முடியாமையாக இருக்கலாம்.

இப்படியாய் பெண்களின் பாதுகாப்பே காரணமாய் இருக்கும் என்று நான் யோசிக்கிறேன்.

எண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்

கடவுள் இருக்கிறாரா? கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.
விஞ்ஞான பூர்வமாக மறுக்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால்,
இந்தப் பிரபஞ்சத்தின் மூலம் என்று எதைச் சொல்கிறார்கள்?

இறைவன் என்ற பெயருக்குப்பதில் இயற்கை என்பார்கள்.
எப்படித் தோன்றியது என்றால் தானே தோன்றியது என்பார்கள்.
எப்போது முடியும் என்றால் மாற்றமே கொள்ளும் முடியாது என்பார்கள்.

ஆக, வரையறைகள்தானே மாற்றம். சக்தி ஒன்றுதானே?
அதை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன?
கடவுள் என்று சொல்லவேண்டாம். மூலம் என்றே சொல்லுங்கள்.
யார் யாருக்கு எது சரியோ அதை அவர்கள் அப்படியே எடுத்துக்கொள்வார்கள்.

உண்மையான நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று சொல்வதில்லை.
ஆத்திகர்கள் சொல்லும் வரையறைகளின் படி கடவுள் இல்லை என்பார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று ர் போடுவது பழக்கம் காரணமான.
கடவுளை ஆண் என்றோ பெண் என்றோ சொல்வது முதலில் சரியாகுமா?
கடவுளை அது என்றும் சொல்லமுடியுமா?

கேள்விகள் சாகும்போதும் தீராது. கேள்விகள் இல்லாமல்
மூளையின் பங்கு ஒன்றுமே இல்லை.

நாம் தெளிவாகத் தெரிந்த விசயங்களில்தான் விவாதம் செய்யமுடியும்.
தெளிவில்லாத இம்மாதிரி விசயங்களில் சிந்தனை ஆடலே செய்யமுடியும்.
பதில்களெல்லாம் யூகங்கள்தான் பெரும்பாலும்.

பலரும் பழைய யூங்களே போதும் என்று இருந்துவிடுகிறார்கள்.
புதிதாக எவரேனும் பேசினால், நாத்திகவாதி என்று சொல்லிவிடுகிறார்கள்.
நீங்கள் கடவுளைப் பற்றி எண்ணியிருப்பதல்ல கடவுள் என்று தொடங்கினால்
அரைகுறை ஆத்திகவாதி என்றுவிடுகிறார்கள்.

பூமி சுற்றுகிறது. ஏன் சுற்றவேண்டும் அப்படியே இருக்கலாமே? இது கேள்வி....
சரி பூமிமட்டுமா சுற்றுகிறது என்று பார்த்தால், பிரபஞ்சத்தில் எல்லாமே
சுற்றுகிறது. திட்டம்போட்டுச் சுற்றுகின்றனவா திட்டம் போடாமலெயே
சுற்றுகின்றனவா என்பது பிறகு. ஏதோ ஓர் ஒழுங்கு அங்கே காணப்படுவது
உண்மைதானே?

மனித உடலின் கட்டமைப்பு எத்தனை அதிசயம். இரத்த ஓட்டத்துக்கு
இதயம் இயங்குவதும், மூச்சுக்கு நுரையீரல்கள் இயங்குவதும்,
கழிவுகளுக்கு சிறுநீரகங்கள் இயங்குவதும், உணவுக்கு இரைப்பையும்
குடல்களும் இயங்குவதும், அறிவுக்கு மூளை இயங்குவதும் எத்தனை
வினோதம். யார் இந்த நுணுக்கமான அமைப்புகளைக் கட்டிமுடித்தவர்?
யாருக்குத் தெரியும்?

ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், எல்லாம் ஓர் ஒழுங்கில் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மாற்றி மாற்றி ரேகைகள்... ஆச்சரியம்.
இதன் ஒழுங்கு பிரபஞ்சத்தின் சக்தி.

பிரபஞ்சம் ஒரு சக்தி. அந்த சக்திக்கு என்ன பெயரிட்டால் என்ன?
அது சக்திதானே?

நம் கேள்விகளுக்கும் எல்லைகள் இல்லை.
நம் அறிதல்களுக்கும் எல்லைகள் இல்லை.

நாளை நாம் புதிதாக அறிந்துகொள்ள நிச்சயம் எப்போதும் ஒன்று
உண்டு என்பதே நிஜம். அறிவியலின் வளர்ச்சியே அதில்தான் இருக்கிறது.
இனி கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று உறங்க அறிவியலுக்கு
வழியே இல்லை.

ஒரு முழுமையைத் தேடிச் செல்லும் அறிவு தன்னைச் செதுக்கிக்
கொண்டேதானே இருக்கும். அதில் தவறொன்றும் இல்லை.

அறிந்தவரை அறிவியல். தான் சொன்னதே சத்திய வாக்கு என்று
அறிவியல் சொல்லிக்கொண்டும் உலவவில்லை.

மதங்கள்தான் இதுதான் பூரணம் இதுதான் முழுமை இதுதான் எல்லாம்
மற்றதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுகின்றன.
அறிவியல் ஒருபோதும் அப்படிக் கூறுவதில்லை.

மதங்களின் பெயரால் மனிதர்கள் வகுத்த வரையறைக்குள்
கடவுள் வந்து சிக்குவாரா?

பிரபஞ்சம் மொத்தமும் கடவுள்தான் என்று ஓர் அனுமானமுண்டு எனக்கு.
நீங்கள் நான் புழு பூச்சி காகிதம் சருகு கல் மண் எல்லாம் எல்லாம்.

யாவும் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் மாறும் ஒரே பொருள்!
அதன் பெயரே கடவுள். அதன் பெயரே பிரபஞ்சம்.

என் அனுமானம் தவறாய் இருக்கலாம்.
ஆனால் தவறென்று உறுதியாய்ச் சொல்ல எவரால் இயலும்?

நம்மை மீறி நடக்கும் விசயங்களுக்கு விளக்கம் தெரியாதபோது
நம்மைச் சூழ்வது பயம்....

பயத்தை மூலதனமாய் வைத்து வளர்ந்தவை எத்தனை எத்தனை?
பயம்தானே மூடநம்பிக்கைகளின் வேர்

மனிதனைப் படைத்தது இறைவன் என்றால்
இறைவனைப் படைத்தது யார் என்ற கேள்வி சரியானதுதான்!

அதே சமயம்,
மனிதனைப் படைத்தது இயற்கை என்றால்
இயற்கையைப் படைத்தது யார் என்ற கேள்வியும் வரத்தானே செய்யும்?

ஒரு கேள்வியைக் கேட்கும்போதே
அதனுள் இன்னொரு கேள்வியும் எழுகிறதல்லவா?
இது முடிவடையாமல் சென்றுகொண்டே இருக்கிறதல்லவா?

எனவேதான் எதுவும் எதனிடமிருந்தும் வரவில்லை என்று கொள்ளவேண்டும்.
எல்லாம் அப்படியே எல்லையற்று இருக்கின்றன என்று கொள்ளவேண்டும்.
ஏனெனில், அது மட்டுமே இப்போதைக்கு நம்மால் இயலும் :)

இருப்பவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன
என்பதை நாம் அறிவோம்.

தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டதுதான் பிரபஞ்சம்
என்று கொண்டால் ஓரளவு தெளிவு பிறக்கும்.

அது எப்படி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டது என்று கேட்டால்
நம்மால் என்ன சொல்ல முடியும்?

பிரபஞ்சம் என்று அந்தச் சக்தியைச் சொன்னாலும் சரி
இறைவன் என்று சொல்லிக்கொண்டாலும் சரி.
எல்லாம் ஒன்றுதான்.

எல்லையற்ற பிரபஞ்சத்தையும்
இறைவனையும் பிரிப்பதை ஏற்பதற்கில்லை.

கடவுள் ஒருவன்தான் என்ற நம்பிக்கை வேண்டும்.
மதங்கள்தாம் அந்த எண்ணத்திற்கு ஊறுவிளைக்கிறதோ என்பதைப்
பல நடப்புகளில் அறிய நேர்கிறது.
எனவே அதன்மீது ஒரு வெறுப்பு வருவது இயற்கை.

இறைவன் பொதுவானவன், மதம் அப்படியா?
மதங்கள்தாம் இறைவனை வேறு வேறானவன் என்று
எல்லோருக்கும் சொல்லிக் கெடுக்கிறது!

எண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்
என்ற என் எண்ணம் தவறாகாது என்று நம்புகின்றேன்.

மதம்கடந்து மனிதம் பார்த்து, தெய்வம் ஒன்றே ஒன்றுதான்
என்று நம்பினால், உலகில் 99% பிரச்சினைகள் தீரும்!

ஜாதி மதமெல்லாம் சிறிய விசயங்கள். கடவுள் என்பது
பெரிய விசயம். அது அனைவரையும் அனைத்தையும்
உள்ளடக்கியதாய் இருந்தால் மட்டும்!

கல்லும் கடவுளும்

கேள்வி:

பிரபஞ்சம்தான் கடவுள். பிரபஞ்சத்திலிருந்து கல்லைப் பிரிக்காதீர்கள். கண்முன் பிரபஞ்சம் விரிந்து கிடக்கும்போது பார்வையைச் சுருக்காதீர்கள் என்று கல்லைக் கடவுளாக நினைக்கும் நண்பரிடன் கூறினேன். அதற்கு அவர் ”இல்லையே....பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் டெலெஸ்கோப்பின் மூலம் காண்பதுபோல் நான் கல்லின் மூலம் காண்கிறேன்.எங்கும் விழும் சூரிய ஒளியை ஒரே இடத்தில் கான்சன்ட்ரேட் செய்ய குவி ஆடி தேவைப்படுகிறதல்லவா?அந்த மாதிரிதான்.” என்றார்

பதில்:

இதிலுள்ள சிக்கல்களைக் கூறுகிறேன் கேளுங்கள்:

1. விஞ்ஞானிகள் டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பது பிரபஞ்சத்தை அல்ல. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத்தான். பிரபஞ்சத்தை முழுதாக எவராலும் பார்க்க இயலாது.

2. பிரபஞ்சத்தை நாம் பிரபஞ்சத்துக்குள் இருந்துகொண்டுதான் பார்க்க முடியும். ஏனெனில் பிரபஞ்சத்துக்கு வெளி என்று அதாவது ஓடு என்று அதாவது எல்லை என்று எதுவும் கிடையாது. எனவே நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு விச்யத்தைக் கற்பனை செய்ய முயன்று முயன்று அதிசகிக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அத்தனை பெரியவனா என்று ஆச்சரியம் நிரந்தரமாய் நிற்கும்.

3. கல்லைக் காண்கிறேன் என்று நீங்கள் கல்லைக்காணவில்லை. கல் வீதிகளில் நிரம்பிக் கிடக்கிறது. நீங்கள் அவற்றைக் காண்பதில்லை. அவற்றை வணங்குவதில்லை.

4. கல் என்ற பெயரில் நீங்கள் காண்பது ஒரு உருவத்தை. அதுவும் மனித உருவத்தை. மனதில் மனிதனே தெய்வமென்று பதிவாகும். மனிதர்களுள் சக்திவாய்ந்த எவராலும் வெல்லமுடியாத ஒரு ஹீரோவைக் கடவுள் என்று தவறாக எடுத்துக்கொள்வீர்கள்.

5. இறைவனை இப்படியாக சுருக்கி அவமானப்படுத்தக் கூடாது. அவன் மிகப்பெரியவன். நிகரற்றவன். எல்லைகள் இல்லாதவன். முதலும் முடிவும் இல்லாதவன்.

6. வாழ்ந்து செத்துப்போன மனிதர்களைக் கடவுள்கள் என்று சொல்வது மிக மிகப் பழைமையானது. செத்தொரெல்லாம் தெய்வங்கள் என்று நம்பித் திரிந்தது அறிவு வளர்ச்சியடையாத கற்காலத்துக்கும் முற்காலத்தில்.

6. இறைவனை நாம் இறைவனாகவே பார்ப்போம். அப்படிப் பார்த்தால்தான். நாம் கோவில் கட்டமாட்டோம். அங்கே சென்றுதான் கும்பிட வேண்டும் என்று எண்ண மாட்டோம். கோவில் வாசலில் உண்டியல் வைக்க மாட்டோம். பத்து காசு போட்டு பத்துகோடி லாட்டரி விழவேண்டும் என்று மூடநம்பிக்கை கொள்ளமாட்டோம்.

7. கல்லில் பலப்பல மனித உருவங்களை ஆணாகவும் பெண்ணாகவும் செய்து அங்கங்கே வைத்து வழிபட்டால், கடவுள் ஒருவன் என்ற உண்மை உள்ளங்களைச் சென்றடையாது. உயிரில் கலக்காது. கடவுள் தவறாகவே அறியப்படுவார். கடவுள் இல்லை என்று நிரூபிக்க இது ஒன்றே போதுமானதாகிவிடும்.

8. கடவுள் மறுபபாளர்கள் உண்மையில் கடவுளை மறுக்கவில்லை. கடவுள் என்ற பெயரில் உள்ள மூட நம்பிக்கைகளைத்தான் மறுக்கிறார்கள்.

9. எல்லா மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும், கல் மண் என்ற அனைத்துக்கும் ஒன்றே ஒன்று இருந்தால்தான் அது கடவுள். இல்லாவிட்டால் அது வகை வகையான கடைச்சரக்குகளாகிவிடும். ஆளாலுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எது உசத்தி என்று சண்டை பிடிப்பார்கள்.

10. நாமிருக்கும் பிரபஞ்சம் எதனுள் இருக்கிறதோ என்று யாருக்குத் தெரியும். எதனுள் என்ற அது இன்னும் வேறு எதனுள் இருக்கிறதோ யாருக்குத் தெரியும். இப்படியாய் அது எத்தனை லட்சம் அடுக்குகளோ யாருக்குத் தெரியும். இப்படியாய் கற்பனை உயர உயர கடவுளின் தோற்றம் எத்தனை பிரமிப்பைத் தரும். அதன் முன் நாம் எத்தனை சிறு தூசு என்று தெரியும். அதைவிட உயர்வாய்க் கடவுளைப்பற்றி ***அறிவுப்பூர்வமாய்*** எண்ண முடியுமா?

உயிரைச் சுமக்கும் ஒரே உயிர்

பெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும்
ஒரே உயிர்
உலகில் பெண்தானே

துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

எல்லாச் சுகங்களும்
எங்கும் கிடந்தாலும்
ஒரு பெண்ணில்லா பூமியில்
சிறு பொழுதேனும் நகருமா

அந்தப் பூமியும்
ஓர் அழகுப் பெண்ணல்லவா

நிலவா மலரா
கடலா காற்றா
காண்பதெல்லாம் 
பெண்ணல்லவா

சுகங்களின் இருப்பிடம் அவள்
சொர்க்கத்தின் பொருளும்
அவளேதான்

ஓராயிரம் ஓட்டைகளும்
உருப்படாத துடுப்புமாய்
நடுக்கடலில் விடப்பட்ட
ஆசை ஓடங்கள்தானே
மனித மனங்கள்

ஒரு பெண்ணின் துணையின்றி
வாழ்வெனும் கரைசேர
வாய்க்குமோ கனவிலும்

அவளின் அன்பின்றி
ஆயுள் ரேகைக்கு
ஆயுள்தான் ஏது

அழப்பிறவா
மனிதருண்டோ

ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
நாலெட்டில் தாரம்
ஐயெட்டில் மகளென்று
சாவெட்டு வரும்வரை
நம் கண்ணீர் நிறுத்தி
அமைதியின் மடிகிடத்த
தம் கண்ணீர் பொழியும்
கருணை மேகங்களல்லவா
பெண்கள்

அறிவுரைக்கோ
ஆயிரம் நாவுகளுண்டு
ஆறுதலுக்கு
அவளன்றி வேறு வழியுண்டோ

பெண்கள்
உயிர்களைப் பிரசவிக்கும்போது
ஆண்கள்
அணுகுண்டுகளைத்தானே
பிரசவிக்கிறார்கள்

பெண்களே விதைகள்
இந்தப் பிரபஞ்சத்தின்
வேர்கள்

- அன்புடன் புகாரி