கடவுளின் மடிகள்

அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட
எது அழிந்து எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும் சுயநினைவைச் சூறையாட
விழுந்துகிடக்கிறது கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள் கடவுளின் மடிகள்
இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான் இப்போதெல்லாம்

மனிதநேயம் நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு
பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
விசப்பல் அச்சுகளோடு மட்டும்
குப்பைத் தொட்டிகளில்

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு
நல்லதோர் எச்சரிக்கை

நீதானே நாளைய கிழம்
இன்றே சுதாரித்துக் கொள்
உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சில்லறையை
எவரும் தொடாத இடத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப்
பசியையாவது போக்கும்

இணையப் பேரரசு

அகிலத்தை
அள்ளியெறிந்து விளையாடும்
கூடைப்பந்தாட்ட வீரனாக

அண்டவெளியெங்கும்
தகவல் ரத்தம் பாய்ச்சும்
பைனரி
நரம்பு மண்டலமாக

ஆகாய உள்ளங்கையின்
அடையாள
ரேகை ஓட்டமாக

விசும்பும் ஏகாந்த உயிரை
விரும்பிய திசையில்
விருப்பம்போல் செலுத்த
நாநோ நொடிதோறும்
திறந்தே கிடக்கும்
மந்திர வாசலாக

பள்ளிகளும் தள்ளி நிறுத்த
அனாதையாய் அழுத தமிழைக்
கெட்டிப் பாலூட்டி
தட்டச்சு மடிகளில்
தட்டிக் கொடுத்து வளர்க்கும்
கணிவலைத்தாயாக

வணிகமொழி
களவாடிக்கொண்ட
இதயமொழி எழுத்தாளர்களை
இழுத்துவந்து
ஈர்ப்பேற்றி
இலக்கியமழை பொழியவைக்கும்
நிலவான சூரியனாக

உருப்படாத ஊடகங்கள்
உதறியெறிந்து
முடக்கிய அருங்கலைகள்
அனைத்தையும்
உச்சிமோந்து உயர்த்திப் பிடிக்கும்
வலைப்பூக் கரங்களாக

வேற்றுக்கோள் தமிழனோடும்
ஊற்றெடுக்கும் பசியோடு
ஒன்றாய்த் தமிழுண்ண
மின்னிலையிட்ட வலைப்பந்தியாக

நாதோன்றும் முன்னரே
சொல் தோன்றி
வளர்ந்த தமிழை
மின்கலை ஊற்றி வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கமாக

இணையம்
என்ற பேரரசு

இன்னொரு ஜென்மம்

பச்சையிலை மாநாட்டில்
பனிவிழும் பூக்காட்டில்
வேர்நரம்பும் விட்டுவிடாமல்
விதைகளுக்கு உள்ளேயும்
தேடினேன் தேடினேன்

ஏழு வண்ணமா என் வண்ணமா
என்ற கேள்வியழகோடு
அன்றலர்ந்த ரோஜா ஒன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் கவர்ச்சி வனப்பில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

நீண்டு நிதானமாய் நன்னீர் சுழித்தோடும்
நதியினுள் குதித்துத் துழாவித் துழாவித்
தேடினேன் தேடினேன்

வெள்ளிச் செதிள் சிவக்க
விளையாடும் செங்கண் சிரிக்க
கெண்டை மீனொன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் ஒய்யார ஆட்டத்தில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

ஆழக் கடல் தொட்டு அடிச்சென்று மூச்சடக்கி
அகண்ட கண் விரித்து அதுவீசும் சுடரொளியில்
தேடினேன் தேடினேன்

குட்டிப் பவளப் பேழைகளாய்க்
கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின்
கதவு திறந்த முத்தொன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் ஒளிரும் கர்வத்தில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

மெத்து மெத்தென்ற மேகக் கூட்டங்களை
முன்னும் பின்னுமாய் இழுத்திழுத்து விலக்கித்
தேடினேன் தேடினேன்

வானத்தின் வெண்பொட்டு
வயதேறா குமரி மொட்டு
வட்டநிலா ஓடிவந்து
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் பகட்டுப் பேரழகில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

அண்டப் பெருவெளியில் அயராத ராட்டினத்தில்
இங்கும் அங்குமாய் இமை கழித்த விழிகளோடு
தேடினேன் தேடினேன்

சில்லென்ற மேனியதிரச் சுற்றிவரும் தித்திப்பாக
செய்வாய்க் கோள் வந்து
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் புதிரான விளையாட்டில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும் அக்கினியாய்த் தேடினேன்
அகப்படா நிலையிலென்
ஆழுயிர்த் துடித்தே வாடினேன்

அத்தனைக் காற்றும் ஓய்ந்தே போனதோ
அத்தனை ஓசையும் ஒடுங்கியே போனதோ
அத்தனை ஒளியும் ஒழிந்தே போனதோ
நம்பிக்கை யாவும் நஞ்சுக்குழி விழுந்து
சுட்ட பிணங்களாகின

தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி உதிர்ந்து உடைந்தன

தேடும் தவம் துறந்து தேடா வரம் பெற்று
ஊனமுற்ற நாட்களுக்குள் உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு
விந்தி விந்தி நடக்கையிலே

கிழிந்த விழிகளை மூடிக்கிடக்கும்
என் நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர்

அடடா
என் கண்களுக்குள் நீர் வற்றித்தான்
நெடுநாட்கள் நகர்ந்துவிட்டனவே
இதென்ன இது உள்ளிருந்து வாராமல்
வெளியிலிருந்து விழிநீர்
அதுவும்
உள்விழி நீரின் அதே அடர்வு உப்போடு

யார் உகுக்கும்
கருணை நீர் இது

ஒரு பூர்வ ஜென்ம வாசனை
என் நாசிக் குகைக்குள் நர்த்தனம் ஆடுகிறது
நான் பிறந்த போதே இழந்துவிட்ட
என் பிறப்பு வாசனையல்லவா இது

ஓர் இளஞ்சூட்டு ஈரம்
என் இதழ்தொட்டு மூடுகிறது
அப்பப்பா காயங்கள் காயங்களோடு
ரணங்கள் ரணங்களோடு ரகசிய ஒத்தடங்கள்
படபடப்பாய்ச் சிறகடிக்கின்றன

காதுகளில் ஒரு கானம்
இதுவரை இசைக்கப்படாத
எனக்கான தாலாட்டாகத் தழுவுகிறது
உணர்வுக்குள் உணர்வுகள் உட்கார்ந்து
உரையாடுகின்றன
உயிருக்குள் உயிர்கள் எழுந்து
ஓடிவிளையாடுகின்றன
நானென்ன கனவு காண்கிறேனா

ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே

படக்கென
இமைகள் வெடிக்கிறேன் நான்
ஓ நீதான் நீதான்
அது நீயேதான் என்கிறேன்
உயிருக்குள் மௌனித்துக்கிடந்த
உள்ளுயிர்க் குரலில்

ம்ம்ம்..
நான் தேடியபோதெல்லாம் வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய் என்றேன்

'தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில்
எனக்குள் இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது

(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)

அன்புடன் புகாரி

அறப்போரில் எழுவோம்

உச்சிச் சூரியன்மீது எறியப்படும்
பச்சையிலைப் பனித்துளிகளாய்
நிமிடங்கள்தோறும் உயிர்கள்
அழிந்ததும் அழியப்போவதும்
அழிந்துகொண்டிருப்பதும்
குருதி நிறைத்து மிதக்கும் கண்களில்
அப்பட்டமாய்த் தெரிந்தும்

செய்வதேதும் அறியாமல்
செய்வதற்கேதும் சிக்காமல்
ஈனக் கதறல்களை மட்டுமே
ஓங்கி உயிர்கிழித்துச்
செய்ய முடிந்தது

நரக எரிமலைக் குழம்புகளால்
பறித்துச் செல்லப்படும்
கால்களுமற்ற எறும்புகளாய்
அப்பாவி உயிர்களங்கே
எப்படியெல்லாம் எரிந்தெரிந்து
துடிதுடித்துச் செத்திருக்கும்

அப்பப்பா அக்கொடுமை
எவ்வொரு நொடிப்பொழுதும்
இனி எமக்கும் எவருக்கும்
வேண்டவே வேண்டாம்

திண்மை நெஞ்சோடும்
தொய்வழித்த நடையோடும்
உயிர்த்தீ உயர்த்திப் பிடித்துப்
போராடுவோம்

உரிமைகளை
உள்ளங்கைகளில் பெறுவோம்
உயிர்களைப்
பொத்திப்பொத்திக் காப்போம்

ஆயுதப்போரழிப்போம்
உயிர்களே
அறப்போரில் எழுவோம்

மனிதத்தையும்
மனித உயிர்களையும் தாண்டி
போற்றுதலுக்குரியதென்றோ
புனிதமானதென்றோ
பிரபஞ்சத்தில் வேறேதும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

அழிவில் வாழ்வா


கலவரம்
அது இங்கே தினம் வரும்

அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா
திடீர்த் துவேசம் உன்னைத்
துண்டாடித் துண்டாடி
வெறியின் பசிக்குத் தீனியாக்கிவிட்டதா

முதலில் என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்

இது ஓரிரு நிமிடங்களில்
காய்ந்துபோகும் ஈர ஒத்தடம்தான்
இதனால் உன் உயிருக்குள்
கொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்
நிச்சயமாய் நிற்கப்போவதில்லைதான்

ஆகையினாலேயே
நிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்
இந்தக் கவிதை உருவாக வேண்டும்
என்ற உயிர்த் தவிப்போடு
என் வார்த்தைகளை உருக்கி உருக்கி
உன்முன் வார்க்கிறேன்

நீயோ -
இன்றைய வெறிச் சூறாவளியில்
வெற்றிகண்ட இனத்தின்
துவம்ச வதைகளால் குதறப்பட்ட
தளிர்க்கொடியாய் இருக்கலாம்

அல்லது -
தோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து
துயரக் கொடியில் தொங்கவிட்ட
நைந்த ஆடையாய் இருக்கலாம்

நீ யாராய் இருந்தாலும்
என் கரிசனம் மட்டும்
உனக்கு ஒன்றுதான் சகோதரா

இன்று நான்
உனக்குச் சொல்லும் சேதியை
உன் மூளையின் மத்தியில்
ஓர் சுடராக ஏற்றிப்பார்

இங்கே
கண்ணீரை முந்திக்கொண்டோடும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

தன்மானமென்பது கடைப்பொருளல்ல
அது உன் உயிர்ப் பொருள்தான்
உன்னத உணர்வுகளின் கருப்பொருள்தான்

கருகிக் குவிந்து கிடக்கும்
கணக்கற்ற சடலங்கள்
உன் சுற்றமும் நட்புமல்லவா
நொறுங்கி நீராகிக் கிடப்பது
உன் உடலும் உள்ளமுமல்லவா

ஆயினும்
என் அன்புச் சகோதரா
உன்னிடம் எனக்கொரு கேள்வியுண்டு

உன் நிதான நிமிடங்களின்
நிழல்மடி அமர்ந்து
எனக்கொரு பதிலைச் சொல்

வெற்றி என்பது என்ன சகோதரா

முட்டாள் கரமெடுத்து
மூர்க்க அரிவாள் வீச்சில்
மூடத் தலைகளை
முடிவற்று வெட்டிச் சாய்ப்பதா

இல்லை சகோதரா
இல்லை

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா

இன்று தப்பலாம் உன் தலை
அது என்றும் தப்புமா சகோதரா

இன்றும் கூட
உன் தலைக்குப் பதிலாய்
இங்கே உருண்டோடிய உன்
இனத்தின் தலைகள்தாம் எத்தனை எத்தனை

வாழ்வில்
அழிவு வரும்தான்
ஆனால் -
அழிவில் வாழ்வு வருமா

சரித்திரம் பார் சகோதரா
வந்தபின் ஒத்தடம் அறிவீனமல்லவா
வருமுன் வேரறுப்பதே வெற்றியல்லவா

ஒருமுறை
அந்த இரத்தக் காட்டேறி
நம்மை நசுக்கி அரைத்து
நகைப்புக் காட்டி நகர்ந்துபோய்விட்டது
மீண்டும் அதையே வரவேற்று நீ
சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா

என்னருமைச் சகோதரா
இனி நீ செய்யச் சிந்திக்கவேண்டிய
காரியமென்ன தெரியுமா

மூட வெறியர்களின் மூர்க்க வேட்டுகள்
முற்றும் துளைக்காத கேடயமாய்
உன்னை நீ உருவாக்கு

கையரிவாள்களை
கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு
உன் மனோ பலத்துடன் மீண்டு வா

எது கேடயம் என்று நீ கேட்டுத் தவிப்பது
எனக்குத் கேட்கிறது சகோதரா

கேள்

பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு

இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா உனக்கு வேண்டும்

எந்த நாய் நரியும் உன்
அழுக்கையும் தொடத் துணியாத
உயர் நிலையை உன் உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு

வெட்டிக் கொண்டு சாவதை
வீர மரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே

ஒப்புகிறேன்
வீடு புகுந்து நம் பெண்களின்
முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை
முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்
சகோதரா

அதில் மரணம்
உன் மண்ணின் பெருமைக்கும்
தன்மான உணர்வுக்கும்
மனிதகுல இனத்திற்கும்
மகத்தான தொண்டுதான்

ஆனால்
நடந்து முடிந்த களத்தில்
வீரம் கொள்வதென்பது
இனி வரும் சந்ததிப் பெண்களின்
முந்தானையையும் இழுக்கக் கொடுக்க
இன்றே கையப்பமிடும் சாசனமல்லவா

'வெட்டு' என்பது
என்றும் விட்டுப் போகும் விசயமா
வெட்டாமையே பேரறிவல்லவா

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை

வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை உணர்த்தும் இயற்கையை
உற்றுப்பார் சகோதரா

வெறியரின் தலைகளை வெட்டிச் சாய்ப்பது
உனக்கு வெற்றியா தோல்வியா

தொடரும் அழிவுகள் என்பது
எக்காலத்தும் எவர்க்கும்
தோல்விதானே சகோதரா

அன்று
அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்
இன்றோ அது தன் உழைப்பின் வெற்றியோடும்
பொருள்வளப் பெருக்கோடும்
அறிவுச் சுடர் ஏற்றி உள்ளத் திண்மை பூட்டி
உலகை வென்றே உலா வருகிறதே
அந்தப் பேரெழில் கண்டாயா

அதுவன்றோ வெற்றி
அதுவன்றோ வீரம்
அதுவன்றோ வாழ்வு

மீண்டும் ஓர்
அணுகுண்டுப் போரென்று
அடிபட்ட ஜப்பானும் தாழ்ந்து போனால்
புல்லும் பூண்டும் கூட எங்கும் மிஞ்சுமோ

என் அன்புச் சகோதரா
இரத்தப் பாளமான உன் நெற்றியை
அறிவென்னும் நெருப்புக் கோடுகள்
அழுத்தமாய்ப் பதிய
சுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்

இன்றின் அவலம் மற
மூட வெறிக்கு முக்கியத்துவம் தராதே

நாளையேனும்
நல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி
உன் நெஞ்சோடு போராடு
நல்ல விடையோடு எழு

வாழ்க்கை ஒருமுறைதான்
அதை மூடருடன் முட்டிக்கொண்டு
முடித்துக்கொள்ளல் அறிவீனம்

காயங்களைச் செப்பனிட்டு
உன் கேடயங்களைத் தேடு

அந்த அறிவு வெளிச்சம்
உனக்குள் பட்டுத் தெறிக்க
சின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்
பூக்கவைத்தால் மட்டுமே

இது ஒரு கவிதை
சகோதரா

கல்லெறிதல்

காய்த்த மரம்தான்
கல்லடிபடும்

கற்களுக்கு
வலிப்பதும் இல்லை
ஆனால்
அடிபட்டும்
புன்னகைப்பதேன்
கனிகள்

என்னை
உண்டாவது
அறிவு பெற்றுக்கொள்
என்ற ஞானத்தாலா

அல்லது
என் காயங்களில்
இருப்பவை
உன் முகவரிகள்தான்
என்ற ஏளனத்தாலா

எது
எப்படியாயினும்
காலைத்தூக்கும் நாய்க்கு
முட்டிக்கொண்டு நிற்கும்
உபாதைதான் முக்கியமாகிறது

மைல் கல்லா
மையல் சிற்பமா
என்பதல்ல

காலம்
நிதானமாய்ப் பொழியும்
நியாய மழைத் துளிகளால்
சிற்பம் கழுவப்படும்தான்

ஆனாலும்
அந்தக் கவலையெல்லாம்
இல்லையே நாய்களுக்கு

வாழ்க்கை அகதி

கடல் கண்டுகொள்ளாத
அலை நான்
மேகத்தில்
ஏறிக்கொண்டேன்

மேகம் மறுதலித்த
மழைத்துளி நான்
நிலத்தின்
மடி வீழ்ந்தேன்

நிலம் நிராகரித்த
நீர் நான்
காற்றில்
தொற்றிக்கொண்டேன்

வீசும் காற்றுடன்
அலைந்தேன்
திரிந்தேன்

காட்டு மரம் ஒன்றில்
கருங்கல் பாறை ஒன்றில்
மூங்கில் கிளைகளில்

பேய் உறங்கும்
பழைய மாளிகைச்
சுவற்றில்

கொடிக்கம்பு
நுனியில்

பாய் மரத்தின்
விளிம்பில்

வேப்பமர
இலையில்

குஞ்சுகள் வெளியேறிய
அனாதைக் கூட்டில்

துருவேறிய
கம்பிகளில்

கொம்பில் விழுந்த
பறவையின் எச்சத்தில்

ஒட்டிக்கிடக்கின்றன
என் இரத்தத் திசுக்கள்

புரியாத கவிதைகள்


உள்ளேறி உசுப்பும்
உன்னதங்களை
ஊரேறி உரைக்கும்
உள்ளுரமுமின்றி

சொல்லேறிச் சுடரும்
சுயவானம் வரையாது
எழுத்தாணி மூடும்
நிம்மதியுமின்றி

சுற்றிச் சுற்றியே
தொடுதூரப் புள்ளிகளை
வெற்று
வட்டமடிக்கிறார்

புள்ளியும் சிக்காமல்
வட்டமும் வசப்படாமல்
புதிர்புதிராய் நிறைகின்றன
புரியாத கவிதைகள்