அ. முன்னுரை - அன்புடன் இதயம்


உயிர் முத்தங்கள்

தமிழால்
அமைந்த
கணினி
மேடைக்கும்
அதில்
தமிழெடுத்து
ஆடும்
இணைய
தேவதைக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல்

இணையம்!

தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ்

வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும்

தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம்

ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள்

சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம்

இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல்

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று

வறுமை கிழித்துப்போட்ட குடும்பத்தின் கடைசி ஆடையையேனும் தைத்தெடுத்து விடலாம் என்ற பதட்ட உணர்வுகளோடு மண்ணைப் பிரிந்த தமிழர்கள், தமிழோடு சேர்ந்திருக்கிறார்கள்

தாய்நாட்டில் எவர்க்கும் தமிழ்ப்பற்றே இல்லை என்றுரைக்கும் கண்ணற்ற ஓட்டமல்ல இது. போற்றிப் புகழும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று எல்லோருமே இன்னமும் அங்கேதான் அமோகமாய் விளைகிறார்கள். இருப்பினும், நாளுக்கு நாள் அமீபாக்களாய்ப் பெருகும் ஒரு கூட்டம் திசைமாறிப் பயணப்பட்டு, தமிழை நெருப்பில் புதைத்துச் சிரிக்கிறதே.

இவர்களின் மத்தியில், உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா?

இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கிவிட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து.

புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள்.

உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள்.

வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி உதைத்து விளையாடுகிறது இன்று.

நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடிநடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும்.

தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்ப்டும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன.

இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று.

தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்க்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம்.

உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல்.

தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி
தீர்ந்தே போவதோ?

விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின்
நெற்றியில் தமிழே!

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!

அன்புடன் புகாரி

416-500-0972
anbudanBuhari@gmail.com