29 ஊசிகளாய் உறையும் கனடியக் குளிர்

எங்கள் ஊரில், அதாவது கனடாவில் உள்ள டொராண்டோ நகரத்தில் (22 ஜனவரி 2013) இன்று குளிர் எவ்வளவு தெரியுமா? மைனஸ் 26 செல்சியஸ். 

உணவைக் கெடாமல் வைத்திருக்கும் ரெஃப்ரிஜிரேட்டர் அதாவது குளிர்ப் பெட்டியில் இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியல் இருந்தால் போதும். ஆனால் எங்கள் ஊரில் மைனஸ் 26 செல்சியஸ்.

உணவை உறைநிலையில் வைத்திருக்கும் ஃப்ரீசர் அதாவது குளிர்ப்பதனப் பெட்டியில் மைனஸ் 18 லிருந்து மைனஸ் 23 வரை இருக்கும். ஆனால் எங்கள் ஊரில் இப்போது மைனஸ் 26. 

இது வெறும் மைனஸ் 26ஆக மட்டுமே இருக்காது மேலும் இறங்கி இறங்கி மைனஸ் நாற்பதுக்குக்கூடச் செல்லக்கூடும்.

குளிர்பதனப் பெட்டியில் இருக்கும் உணவு கெட்டுவிடாது, பாதுகாப்பாக இருக்கும். அதனால்தான் நாங்களும் கெட்டுப் போகாமல் அப்படியே பிறந்த குழந்தைகளாகவே இருக்கிறோம் ;-)

நான் முதன் முதலில் 1999ல் கனடாவில் குளிரைச் சந்தித்தபோது எழுதிய குளிர்க் கவிதை இப்போதும் என் நேசிப்புக்குரியதாகவே இருக்கிறது.


ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து

இதோ
உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிட்டது
அந்தக் கனடியக் குளிர்

ஓ தீக் குழம்பே
நீதான்
எத்தனைச் சுகமாகிப் போனாய்
இப்போது

உன்னையே
ஆடையாய் நெய்து நான்
உடுத்திக் கொள்ளத் தவிக்கிறேன்
இந்தக் குளிருக்கு

காற்றே
உனக்குக் குளிர் தாளாவிட்டால்
வேறு எங்கேனும் போய்த் தொலை
கதறிக் கொண்டு வந்து
என்னை ஏன் குதறுகிறாய்

நானோ
துளைகளே இல்லாத
இன்னுமோர் கவசத் தோல் கேட்டு
இங்கே தவமிருக்கிறேன்

திமு திமுவென வந்திறங்கும்
வேற்றுக் கோளின்
வெள்ளைப் சிப்பாய்களாய்
எங்கும் பனி

கொட்டுகிறது
கொட்டுகிறது

அன்று
பூத்துப் பூத்துக் குலுங்கிய
பூக்களெல்லாம் இன்று எங்கே

சிகப்பும் மஞ்சளுமாய்
வர்ணங்கள் மாறி மாறி
சின்னச் சின்னக் கன்னியராய்
கைகோர்த்தும் முகம்முட்டியும்
ஆடி ஆடி
உள்ளத்தின் உட்தளங்களையும்
கொள்ளையடித்த
அந்த இலைகள் எங்கே

எழிலத்தனையும் இழந்துவிட்டு
எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும்
மூளி மரங்களே
இன்று மிச்சம்

உயிர்களை
வேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு
இன்னும் எத்தனை நாட்கள்தாம்
தங்களையே கரங்களாய் உயர்த்தி
அந்த வானதேவனிடம்
யாசித்து நிற்குமோ
இந்தப் பச்சை ஜீவன்கள்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பனியின் படர்வு

எண்ணிக்கையில் அடங்காத
வெள்ளை வெள்ளைப் பிரமிடுகளாய்

வெண்ணிற முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு
குளிர் மூச்சு விடும் ராட்சச பூதங்களாய்

சிறைப்பட்ட வசந்தங்கள்
வானிலிருந்து சிந்தும்
வெள்ளை இரத்தமாய்
எங்கும் பனியின் படர்வு

எப்படி?

என் கண்கள் பார்த்திருக்க
இந்தக்
காடு மலை மேடுகளெல்லாம்ஒரே நாளில்
வெள்ளை ஆடைகட்டி
விதவைகளாகிப் போயின

ஆடைகளும்
ஆடை உடுத்திக் கொள்ளும் இந்த நாட்களில்
ஆள் அரவமில்லாத அனாதை வீதிகளில்
காற்று மட்டும் கட்டறுந்து ஓடுகிறது

காது மடல்களை
கண்ணில் அகப்படாத கொடிய மிருகம்
தன் விஷப் பற்களால் கடித்துத் துப்பியதுபோல்
ஒரு சுளீர் வலி நிரந்தரமாய் நீள்கிறது

தொடு உணர்வுகளெல்லாம்
எங்கோ தொலைந்துபோயின

கால்களைத் தொட்டுப் பார்க்கக்
கைகளை நீட்டினால்
கால்களையும் காணவில்லை
தொடப்போன கைகளையும் காணவில்லை

இதயத்துக்குள்
இனம்புரியாத ஏதோ ஓர்
இக்கட்டு நிலவுகிறது

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடு கட்டுகின்றன

பனிக்குள் காணாமல்போன
போக்குவரத்துச் சாலைகளில்
ஓடமறுக்கும் காருடன்
ஒரு பொழுது சிக்கிக் கொண்டால்
கடைசி ஆசை என்னவென்று கேட்காமலேயே
கொன்றுபோடும் இந்தக் குளிர்

வீதியெங்கும் வெள்ளைச் சகதி
சாலைகளில் உப்பைத்தூவி
உழுது உழுது நின்றால்தான்
இங்கே கார்கள் ஓடும்

குளிர்ப்பதனப் பெட்டிக்குள் அமர்ந்து
இறுக மூடிக்கொண்டுவிட்டால்
இந்தக் கனடியக் குளிரிலிருந்து
கொஞ்சம் தப்பிக்கலாமோ
என்றுகூடத் தோன்றுகிறது

ஒரே ஒருநாள்
இந்த மின்சாரம்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும்
மூச்சின்றிப் போவார்களோ என்ற பயம்
என்னை முட்டுகிறது

பூமியே
கொஞ்சம் வேகமாய் ஓடு

மீண்டும் அந்த
கனடிய வசந்தங்களில்
எங்களைத் தவழவிடு

அங்கேயே நீ
நிதானமாய் இளைப்பாறலாம்.

28 எங்கள் கலைக்கூடம் கலைந்தது


ஜூலை 21, 2001

காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு தன் புனிதம் கெட்டது. தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதை நிரூபிக்கும் சான்றுகளாய், தன் உயிர் சொட்டும் உச்சரிப்பால், நம் செவிகளையெல்லாம் தலையாட்ட வைத்த நடிகர் திலகம் இன்று மறைந்தார்.

கட்டபொம்மனாகட்டும் அல்லது அந்தக் கடவுளாகட்டும் அவர் காட்டாமல் எந்தப் பாமரனுக்கும் தெரியாது. நகமும் முடியும்கூட நடிப்பை உருக்கி உணர்வுகளை வார்க்க, பொய்யான திரைக்குள், நிஜத்தைக் காட்டி தமிழ் சினிமாவுக்குக் கிரீடம் சூட்டிய பத்மஸ்ரீ இன்று மறைந்தார்.

எப்படி கர்ஜிப்பது என்று சிங்கங்களுக்கு வகுப்பெடுக்கும் குரல் சக்கரவர்த்தி. பாசமலர் பார்த்தால், நமெக்கெல்லாம் சகோதரனாவார். புதிய பறவை பார்த்தால், 'எங்கே நிம்மதி' என்று நம்மையும் அலையவைப்பார். பார்க்க வந்தவர்களையும் பாத்திரங்களாக்கி வென்ற செவாலியர் சிவாஜி இன்று மறைந்தார்.

நடிப்பின் அகராதி, மூன்றாம் தமிழின் ஒப்பற்ற கலைக் களஞ்சியம், இப்படி மறைந்துவிட்டார், மறைந்துவிட்டார் என்று கூறுவது சரியா கலைஞர்கள் மறைவதில்லை. கலைஞர்களையே உருவாக்கும் பிரம்மக் கலைஞருக்கு ஏது மறைவு




தீந்தமிழ்ச் சாறெடுத்து
தித்திக்கும் தேன்குழைத்து
பாந்தமாய்ப் பேசியாடி
பலகோடி மக்கள் நெஞ்சில்

வேந்தனாய் பவனிவந்த
வெற்றித்திலகமே தமிழனே
ஏந்தினாய் தீபமொன்று
எந்நாளும் அணையுமோ


தவமெனப் பெற்றாளே
தமிழன்னை உனையிங்கே
எவருண்டு உன்நடிப்பை
எள்ளளவும் நகலெடுக்க

சிவனே என்றாலும்
சிவாஜி நீ காட்டாது
நவரசக் கலைஞனே
நானிலந்தான் அறியுமோ


நடையெனில் ஒருநூறு
நகைப்பெனில் நானூறு
புடைக்கின்ற நரம்புகளில்
புவியையே அளந்தவன்

தடையற்ற வெள்ளமெனத்
தமிழ்ச்சொல் வீசியே
படையெடுத்து நின்றவுன்
பார்புகழ் அழியுமோ


இனிதெனில் தமிழேயென
ஈடற்ற மாகவியும்
பனிமலர்த் தூவியே
போற்றினான் செந்தமிழை

தனியனாய் நின்றதனை
தங்கக் குரலெடுத்து
இனியது தமிழேயென
வழிமொழிந்தத் திலகமே


நுண்மதி மாந்தர்கட்கும்
நடிப்பையா காட்டினாய்
வண்ணத்திரையில் நீ
வாழ்க்கையன்றோ காட்டினாய்

சின்ன அசைவினிலும்
பொன்னென மின்னினாய்
இன்னுமோர் நடிகனும்
இனியில்லை என்றானாய்


மூன்றாம் தமிழ்வளர்த்த
முதன்மைக் களஞ்சியமே
ஆன்றோர் வியந்துவக்கும்
அகராதி நீதானே

வான்தொடு உயரத்தில்
வெற்றித் திருச்சுடர் நீ
தேன்வளர் திரைக்கலைஞர்
தேடும் பொற்கனா நீ


சிங்கங்கள் அணிவகுக்கும்
சிம்மக்குரல் கேட்க
அங்கங்கள் சிலிர்க்குமெந்த
அரசவைப் புலவர்கட்கும்

மங்கா புகழ்வென்றாய்
மறையா நிலைபெற்றாய்
எங்கெலாம் கலையுண்டோ
அங்கெலாம் சிரிக்கின்றாய்


கண்ணீர் பொங்குதய்யா
காலனுனைக் கவர்ந்தானே
வெந்நீர் விழுந்தமலர்
வேதனையில் துடிக்குதய்யா

உன்னதக் கலைஞர்களை
உருவாக்கும் பிரம்மனே
உன்புகழ் வாழ்க வாழ்க
உனக்கென்றும் மரணமில்லை

26 உயிரைத் தேடாதே


யாரங்கே
குட்டிச் சுவரோரம் நின்று
திருட்டுத் 'தம்' அடிப்பது

உன்
நுரையீரல் மாளிகையில்
ஒட்டிக் கொள்ளப் போகும்
பிசாசுகளை விரட்ட
மந்திரக்கோல்
வைத்திருக்கிறாயா

வளையம் வளையமாய்த்
துப்புகிறாயே புகை
அவை உன் ஆயுட் கைகளை
நீட்ட விடாமல் மாட்டப்படும்
விலங்குகளென்று தெரியுமா உனக்கு

உன்
சல்லடை உடலை
மெல்லப்போகும்
கல்லறைக் குழியை
அவசர அவசரமாய்த் தோண்டும்
மண்வெட்டிகளே சிகரெட்டுகள்
ஞாபகமிருக்கட்டும்

ஏன்
புகையைக் காதலித்துச்
சாம்பலை மணக்கிறாய்

உன்
தற்கொலை முயற்சிக்கு
சிகரெட்டு நார்களிலா
கயிறு திரிக்கிறாய்

ஒரு கொள்ளிக்குத்
தாங்காத நீ
இன்னும்
எத்தனைச் சிகரெட்டுகளுக்குக்
கொள்ளி வைப்பதாய்
உத்தேசம்

22 இந்தியனே நீ வெட்கப்படு

*இந்தியனே நீ வெட்கப்படு*

என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைபுகள் கவிதைத் தொகுப்பில் இருபத்தி இரண்டாவது கவிதையாக அச்சேறிய கவிதைதான் இது. இன்று மீண்டும் எடுத்து வாசித்து நேசித்தேன்.

எண்பதுகளில் என் இந்தியாவை நான் பார்த்து துக்கப்பட்டு சினந்து கொதித்து கொப்பளித்து எழுதிய இளவயதுக் கவிதைதான் இது.

”வெளிநாட்டுக்குப் போய் உக்காந்துகிட்டா என்ன வேணும்னா சொல்லலாமா?” என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக இன்றும் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. காரணம், நான் வெளிநாட்டில் குடியேறியவனாக வாழ்ந்தாலும் ஓர் இந்தியனாகவே வாழ்கிறேன். மண்ணின் வாசனையோடும் தமிழ்க் கலாச்சார வேர்களில் பலாவாய்ப் பழுத்தவனாகவும்தான் வாழ்கிறேன்.

அடுத்து இன்னொரு கேள்வி எனக்கு எழுந்தது. அன்று நான் உணர்ந்து எழுதிய இந்தியாவுக்கும் இன்று இருக்கும் இந்தியாவுக்கும் இந்த கவிதையின் வாயிலாகப் பார்த்தால் ஏதேனும் மாற்றம் உண்டா என்பதுதான் அது. மாற்றம் ஏதும் தெரியவில்லையே என்பதே இதை மீண்டும் வாசித்த எனக்குள் வந்த எண்ணங்கள். உங்களுக்கு எப்படி?

*
*

வெட்கப்படு இந்தியனே
நீ வெட்கப்படு

நீ வெட்கப்படாததால்தான்
இந்தியா துக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது

O

பசித்தால்-
கையேந்த மட்டுமே
உனக்குத் தெரியும்

தேவைப்பட்டால்-
திருட மட்டுமே
உனக்கு விருப்பம்


கோபப்பட்டாலும்-
கொளுத்துவதற்கு மட்டுமே
உன் கைகள் நீளும்

O

நீ
படிக்கப் போனால்
வினாத்தாள் திருடுகிறாய்

ஆளப்போனாலோ
நாட்டையே திருடுகிறாய்

தினமும்
வீட்டிலும் வீதிகளிலும்
உண்டியல் குலுக்கியே
பாரதத்தை
இன்று ஒரு
சில்லரைக் காசாக்கிவிட்டாய்

O

சொல்
கண்டதுக்கெல்லாம்
கொடி தூக்கிக்
கோஷம் போடுகிறாயே

என்றாவது உன்
தேசியக் கொடியை
நேசித்தது உண்டா
O

ஜீவநதிகள்
ஊர்வலம் வருகின்ற
நாட்டில்
விக்கித் தவிக்கிறாய்

அள்ளித்தரும் நன்நிலங்கள்
எங்கும் கிடக்கின்ற நாட்டில்
பட்டினி கிடக்கிறாய்

O

ஒன்றா இரண்டா
உனக்கு
எத்தனை கோடி கைகள்


இருந்தும் அவை
பிச்சையெடுக்கவே
என்று
பிரகடனப்படுத்திவிட்டாயே


இந்தியனே
நீ வெட்கப்படு

நீ
வெட்கப்படாததால்தான்
இந்தியா
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

அன்புடன் புகாரி
19800101

21 இந்த மனசு

தேடித் தேடி
தினமும் வாடும்

வாடி வாடி
உயிரைச் சுடும்

விட்டுவிடு என்று
கட்டளை இட்டால்

முன்னைவிடத் தீவிரமாய்
தொட்டுக்கொண்டு
அழும்

தொடலாம் வா
என்றழைத்தாலோ

தூரமாய்ப் போய்
துவண்டு கிடக்கும்

அவ்வப்போது
உறக்கத்தைத்
திருடிக்கொண்டு
கெக்கரித்துச் சிரிக்கும்

ஆசைகளைச்
சேகரித்துக் கொண்டு
கனவுகளாய் முளைக்கும்

அவிழ்த்துவிட்டால்
விளையாடும்

அடைத்துப் போட்டால்
உடைத்துக் கொண்டு
வெளியேறும்

இந்த மனசு