16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு
லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழிலக்கியம் எடுக்க வேண்டிய பாதை உங்களது பார்வையில் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

தமிழர்கள் தமிழர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு செவியையும் ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்றுக்கொடுத்து தமிழர் பண்பாடு சொல்லிக் கொடுத்து வீட்டில் தமிழ் பேசி நல்ல தமிழ்ச் சூழலில் வளர்க்க வேண்டும்

தமிழைத் தவறவிட்டுவிட்டுத் தங்களின் அடையாளம் தொலைந்துபோய் நிற்கும் தமிழர்கள் உணரும் வண்ணமாய் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் துணுக்குகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து வரவேண்டும்.

திரைப்படமும் ஒரு மகா சக்திதான். அதில் நல்ல தமிழ் உலவவேண்டும். திரைப்பாடல்கள் தரமான தமிழில் வரவேண்டும். அதைப் பாடுவோர் தமிழறிந்து பாடவேண்டும்.

அரசியல்வாதிகள் தமிழைத் தன் பிழைப்புக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அதன் வளர்ச்சிக்காகவும் அது அனைத்துத் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வழி செய்யும் மொழியாகவும் ஆக்குவதற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்

தமிழின் பெருமைகளைக் கலைகளும் இலக்கியங்களும் வானுயர்த்திப் பிடிக்கவேண்டும்

வாழ்க தமிழ். நன்றி வணக்கம்.
013


தமிழ்க் கனடா - குளிர் குளிர் குளிர்

தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள். கனடாவுக்கு மிக அதிகமாக வந்து குடியேறியிருக்கும் தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த நிலையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களைச் சொல்லலாம். அதன் பின்னர்தான் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சொல்லவேண்டும்.

இலங்கையில் பெரும்பாலும் வெப்பம் 37 பாகை செல்சியசைத் தாண்டுவதில்லை, குளிர் 22 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை தமிழ் நாட்டில் அது 40 வரை உயரும் 20 வரை தாழும். ஆக இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் தட்பவெட்பத்தில் அதிக வித்தியாசம் இல்லை.

ஆகவே தமிழர்கள் அரைக்கை சட்டையும் வேட்டியுமாகவே பெரும்பாலும் நகர்வலம் வருவார்கள். பெண்கள் இடைப்பகுதியைத் திறந்து வைத்து சேலை உடுத்துவார்கள்.

சட்டை இல்லாமல் வயல்வெளிகளில் வேலை செய்வதும் ஒரு கோவணத்தோடு மட்டுமே உலாவருவதும் கிராமங்களில் மிகச் சாதாரணமாக நடக்கும் விவசாய விசயங்கள். ஆனால் கனடா அப்படியா?

கனடா உலகில் மிக அதிக குளிர் கொண்ட முதல் மூன்று நாடுகளுள் ஒன்று. கனடாவின் குளிரைப் பற்றி எழுதினால், நீங்கள் கம்பளியைப் போத்திக்கொண்டு வாசித்தாலும் உயிர் உறைந்துபோகும். அத்தனைக் குளிர்.

கனடாவில் யூகான் பிரதேசத்தில் உள்ள ஸ்னாக் (Snag) விமான நிலையத்தில் மிக அதிகமான குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுகின்ற மூச்சுக் காற்றே கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தை உருவாக்கும் குளிர். தண்ணீரை அள்ளி வீசினால் அது தரையைத் தொடும்முன்னர் அப்படியே உறைந்து பனிப்பூக்களாய் மாறும். தொலை தூரத்தில் பறக்கும் விமானம் நம் காதுக்குள் பறப்பதைப் போல சத்தம் கேட்கும்.

ரஸ்யா, கிரீன்லாண்ட், கனடா இந்த மூன்று நாடுகளும்தான் உலகில் மிக அதிக குளிர் கொண்ட நாடுகள். இந்த மூன்று நாடுகளின் குளிரைவிட மிக மிக அதிக குளிர் உள்ள ஓர் இடம் உலகில் உண்டு. அதுதான் அண்டார்டிகா. பூமியின் தென் துருவம் இதுதான். ரஸ்யா, கிரீன்லாண்ட், கனடா ஆகிய மூன்று நாடுகளும் பூமியின் வட துருவத்தில் உள்ளன.


வடதுருவத்தைவிட தென்துருவமே மிக அதிக குளிர் கொண்ட பகுதி. அண்டார்டிகாவில் ஓஸ்டாக் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்ட குளிர் -89.2 செல்சியஸ். இது மேலும் -91 செல்சியஸ் செல்வதாக வாய்வழி தகவல்களும் உண்டு. அண்டார்டிகா ஒரு கண்டம் மட்டுமே. இங்கே நாடுகளோ மக்களோ கிடையாது என்பதால் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வக்கூடாது.

ரஸ்யாவின் வெர்கொயன்ஸ் என்னும் இடத்தில் -68 செல்சியஸ், கிரீன்லாண்டின் நார்த் ஐஸ் என்னும் இடத்தில் -66 செல்சியஸ், கனடாவின் ஸ்னாக் என்னும் இடத்தில் -63 செல்சியசும் மிக அதிக குளிர் அளவுகள் பதிவுசெய்யப்பட்டுளன. இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் அலாஸ்காவில் -62 செல்சியஸ் பதிவாகி இருக்கிறது.

தமிழ் நாட்டின் மலையரசியான ஊட்டியில்கூட குளிர் 4 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை.

கனடாவில் ஸ்னாக் என்னும் இடத்தில் -63 செல்சியஸ் குளிர் இருந்தாலும் கனடா முழுவதும் அப்படியல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் டொராண்டோவில் குளிர் -32 செல்சியஸ்வரை செல்லக்கூடும் என்றாலும் அதெல்லாம் அபூர்வம்.

ஒண்டாரியோ ஏரி டொராண்டோவின் வெப்ப நிலையை மிதமாக வைத்திருப்பதால் குளிர்காலத்தில் டொராண்டோவின் குறைந்த குளிர் அளவு பெரும்பாலும் -10 லிருந்து -20 செல்சியசுக்குள் இருக்கும்.

ஆயினும் நம்மூரிலிருந்து நேரே இங்கே டொராண்டோவில் குளிர் காலத்தில் வந்து இறங்கினால் குளிர் அதிர்ச்சி தருவதாகவே இருக்கும். ஆகையால்தான் முதலில் கனடா வருபவர்கள் கோடைகாலத்தில் வரவேண்டும். பிறகு மெதுவாகக் குளிருக்குப் பழகிக்கொள்ளலாம்.


நான் 1999 ஜூலை மாதத்தில் குடும்பத்தோடு டொராண்டோவில் வந்து இறங்கினேன். அப்போது வெப்பம் சராசரியாக 35 செல்சியஸ் இருந்தது. அக்டோபர் தொடங்கி குளிர் தன் முகத்தை என் முகத்தில் வைத்து மெல்ல மெல்ல முத்தமிடத் தொடங்கியது.

இந்தக் குளிரை முதலில் சந்தித்த என் உணர்வுகளை அறியும் எண்ணம் உங்களுக்கு உண்டா? இதோ டொராண்டோவின் குளிரில் நடுங்கிக்கொண்டே நான் எழுதிய கவிதை.

குளிர் குளிர் குளிர்

ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து
இதோ உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிட்டது
அந்தக் கனடியக் குளிர்

ஓ தீக்குழம்பே
நீதான் எத்தனைச்
சுகமாகிப் போனாய் இப்போது

உன்னையே ஆடையாய் நெய்து
நான் உடுத்திக் கொள்ளத் தவிக்கிறேன்
இந்தக் குளிருக்கு!

காற்றே
உனக்குக் குளிர் தாளாவிட்டால்
வேறு எங்கேனும் போய்த் தொலை
கதறிக் கொண்டு வந்து
என்னை ஏன் குதறுகிறாய்

நானோ
துளைகளே இல்லாத இன்னுமோர்
கவசத் தோல் கேட்டு
இங்கே தவமிருக்கிறேன்

திமு திமுவென வந்திறங்கும்
வேற்றுக் கோளின்
வெள்ளைப் சிப்பாய்களாய்
எங்கும் பனி

கொட்டுகிறது...
கொட்டுகிறது...
அன்று
பூத்துப் பூத்துக் குலுங்கிய
பூக்களெல்லாம் இன்று எங்கே

சிகப்பும் மஞ்சளுமாய்
வர்ணங்கள் மாறி மாறி
சின்னச் சின்னக் கன்னியராய்
கைகோர்த்தும் முகம்முட்டியும்
ஆடி ஆடி
உள்ளத்தின் உட்தளங்களையும்
கொள்ளையடித்த
அந்த இலைகள் எங்கே

எழிலத்தனையும் இழந்துவிட்டு
எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும்
மூளி மரங்களே இன்று மிச்சம்

உயிர்களை
வேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு
இன்னும் எத்தனை நாட்கள்தாம்
தங்களையே கரங்களாய் உயர்த்தி
அந்த வானதேவனிடம் யாசித்து நிற்குமோ
இந்தப் பச்சை ஜீவன்கள்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பனியின் படர்வு

எண்ணிக்கையில் அடங்காத
வெள்ளை வெள்ளைப் பிரமிடுகளாய்

வெண்ணிற முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு குளிர் மூச்சு விடும்
ராட்சச பூதங்களாய்

சிறைப்பட்ட வசந்தங்கள்
வானிலிருந்து
சிந்தும் வெள்ளை இரத்தமாய்
எங்கும் பனியின் படர்வு

எப்படி?

என் கண்கள் பார்த்திருக்க
இந்தக் காடு மலை மேடுகளெல்லாம்
ஒரே நாளில் வெள்ளை ஆடைகட்டி
விதவைகளாகிப் போயின

ஆடைகளும்
ஆடை உடுத்திக் கொள்ளும்
இந்த நாட்களில்
ஆள் அரவமில்லாத அனாதை வீதிகளில்
காற்று மட்டும் கட்டறுந்து ஓடுகிறது

காது மடல்களை
கண்ணில் அகப்படாத கொடிய மிருகம்
தன் விசப் பற்களால்
கடித்துத் துப்பியதுபோல்
ஒரு சுளீர் வலி நிரந்தரமாய் நீள்கிறது

தொடு உணர்வுகளெல்லாம்
எங்கோ தொலைந்துபோயின

கால்களைத் தொட்டுப் பார்க்கக்
கைகளை நீட்டினால்
கால்களையும் காணவில்லை
தொடப்போன கைகளையும் காணவில்லை

இதயத்துக்குள்
இனம்புரியாத ஏதோ ஓர்
இக்கட்டு நிலவுகிறது

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடு கட்டுகின்றன

பனிக்குள் காணாமல்போன
போக்குவரத்துச் சாலைகளில்
ஓடமறுக்கும் காருடன்
ஒரு பொழுது சிக்கிக் கொண்டால்
கடைசி ஆசை என்னவென்று கேட்காமலேயே
கொன்றுபோடும் இந்தக் குளிர்

வீதியெங்கும் வெள்ளைச் சகதி
சாலைகளில் உப்பைத்தூவி
உழுது உழுது நின்றால்தான்
இங்கே கார்கள் ஓடும்

குளிர்ப்பதனப் பெட்டிக்குள் அமர்ந்து
இறுக மூடிக்கொண்டுவிட்டால்
இந்தக் கனடியக் குளிரிலிருந்து
கொஞ்சம் தப்பிக்கலாமோ
என்றுகூடத் தோன்றுகிறது

ஒரே ஒருநாள்
இந்த மின்சாரம் தன் மூச்சை
நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும்
மூச்சின்றிப் போவார்களோ
என்ற பயம் என்னை முட்டுகிறது

பூமியே
கொஞ்சம் வேகமாய் ஓடு

மீண்டும் அந்த கனடிய வசந்தங்களில்
எங்களைத் தவழவிடு

அங்கேயே நீ
நிதானமாய் இளைப்பாறலாம்

அன்புடன் புகாரி

அதிகாரம் 109 தகையணங்குறுத்தல்


கனத்த காதணி அணிந்த இவள்
தேவ மகளோ அரியதோர் மயிலோ
அடடா இவள் மானிடப் பெண்தானோ
மயங்கித் தவிக்கிறதே என் நெஞ்சு

பார்த்தேன் அவளை பார்த்தாள் அவளும்
வெறுமனே பார்த்தாலே அந்தப் பார்வை
எனைக் கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ ஒரு படையையே விழிகளில் திரட்டி
என்னைப் பார்த்துத் தொலைத்தாளே

உயிர் பறிக்கும் காலனைக் கண்டிருக்கவே
இல்லை நான் முன்பெலாம் இப்போதோ
மாபெரும் விழிகளோடு படையெடுத்துப் போரிடும்
பெண்ணென்று கண்டுகொண்டேன்

இதென்ன முரண்பாடு
பெண்மையெனும் மென்மை அழகை
பரிபூரணமாய்க் கொண்டிருக்கிறாள் இவள்
ஆனால் இவள் கண்களோ
காண்போரின் உயிர் உண்ணும்
தோற்றத்தையல்லவா கொண்டிருக்கின்றன

உயிரைக் கொல்லும் எமனா
காதல் பொழியும விழியா
மிரண்டு நிற்கும் மானா
இந்த இளையவளின் பார்வை
இந்த மூன்றையும்
ஒன்றாய்க் கொண்டிருக்கின்றதே

இவளின் வளைந்த புருவங்கள் மட்டும்
வளையாமல் நேராய் இருந்திருந்தால்
என்னை நடுங்க வைக்கும் துயரத்தை
இவள் விழிகள் செய்யாதிருக்குமே

சற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும்
இவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா
வெறி கொண்ட ஆண் யானையின்
முகம் மீது இட்ட
பட்டாடை போலக் காட்சி தருகிறதே

அடடா, போர்க்களத்தில்
பகைவர்களைப் பயந்தோடச் செய்யும்
என் வீரம் இவளின் பேரொளி வீசும்
நெற்றியினைக் கண்டதும்
ஒன்றுமற்றதாகிப் போனதே

பெண் மானின் கவர்ச்சிப் பார்வையையும்
இதயத்தில் அகலாத வெட்கத்தையும்
இயற்கையாகவே ஆபரணங்களாய்க் கொண்ட
இந்த அழகிக்கு செயற்கை அணிகலன்கள் ஏன்

உண்டால்தான் மயக்கம் தரும் மது
கண்டாலே மயக்கம்தரும்
காதலைப்போல் அல்ல அதுஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று


அதிகாரம் 109
காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

16

ஒரு
நிலையிலிருந்து
முழுவதும்
துண்டிக்கப்பட்டு
இன்னொரு நிலை
மாறும்போது
நமக்குக் கிடைப்பது
பூரண நிம்மதி

பிறந்த குழந்தை மட்டுமல்ல
உடல் விட்ட உயிரும்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்


இணைய விவாதங்களில் நான் மனக்கசப்புகளையே அதிகம் சந்தித்தேன். இணையம் ஒரு சுதந்திர வெளி. நமக்கு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென தெரியாது. திண்ணை விவாதங்களிலும் ·பாரம் ஹப் என்ற தளத்தின் விவாதங்களிலும் நான் நேர்மையாகக் கலந்துகொண்ட நாட்களில் பலர் புனைபெயரில் வந்து என்னை வசைபாடினார்கள். என் கருத்துக்கள் திரிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் நான் சொல்லியவற்றையே விளக்கிச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்

இணைய வெளியில் ஒருவகையான மனப்பிறழ்வு அளவுக்குச் சென்று பிறரை வசைபாடும் மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும் முக்கியமில்லை. எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு வசையை கொட்டவேண்டியதுதான் இலக்கு. இணையம் அவர்களுக்கு ஓர் இடத்தை அளிக்கிறது. அவர்கள் ஒளிந்து கொள்ள வாய்ப்பும் அளிக்கிறது. தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.

பொதுவாக இணையவசைகளின் பாணியை கவனித்தால் ஒன்று புரியும். எந்தவகையிலும் பொருட்படுத்தத்தக்க எதையுமே எழுதும் திராணி இல்லாதவர்கள்தான் அதிகமும் தீவிரமான விமரிசனங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிடத்தக்க விஷயங்களை எழுதிப் புகழ்பெற்றவர்கள்தான் இவர்களின் இலக்கு. இது ஒருவகை ஆற்றாமையின், தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் இத்தகைய மனச்சிக்கல்கள் இணையம் அளிக்கும் அற்புதமான விவாத வாய்ப்பை பயன்படுத்தமுடியாமல் செய்கின்றன.

இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. ஒன்று அவதூறுகளும் வசைகளும் கலந்த விஷமயமான குப்பைகள். அல்லது எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதித்தள்ளும் சருகுக் குப்பைகள்.

தமிழ்ச்சமூகத்தின் குப்பைக்கூடையாக இணையத்தை ஆக்கியவர்கள் படித்த , பதவிகளில் இருக்கும் உயர்நடுத்தர வற்கத்தினரே என்பது நாம் வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம். இன்று ஒருவர் தமிழ் இணையத்தை மட்டும் பலவருடங்கள் வாசித்தார் என்றால் அவர் எந்தவகையான பொது அறிவும் இலக்கிய அறிவும் இல்லாத பாமரராகவே இருப்பார். தமிழில் உள்ள பல மூத்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை பார்த்தால் இது தெரியும், ஒரு பொதுப்புத்தி கொண்ட வாசகன் மதிக்கும் ஒரே ஒரு பதிவுகூட இல்லாமல் பல வருடங்களாக அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன! இத்தனை வருடங்கள் அவர் குமுதம் போன்ற ஒரு வணிக அச்சிதழை வாசித்தால்கூட அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்.

தமிழ் இணைய உலகின் இந்த இழிநிலையை மாற்ற என்ன செய்யமுடியும் என்றுதான் இப்போது கவனிக்க வேண்டும். நமக்குப்பிடிக்காதவர்களை தாக்குகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவதூறுகள் செய்பவரையும், வசைபாடுபவரையும் நாம் அங்கீகரித்து ஆதரித்தோம் என்றால் தமிழுக்கு ஒரு பெரும் கெடுதலை அளிக்கிறோம் என்று நாம் உணர்ந்தாக வேண்டும்.

ஜெயமோகன் எழுதிய இணைய உலகமும் நானும் என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா?லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


தற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம்.

உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை எண்ணிக் கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.

இந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது.

இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.

பெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும். தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.

ஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.

14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத்தகையது?லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


சிறுகதைகளைவிட கட்டுரைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கட்டுரைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. ஈர்ப்போடு கவிதைகள் எடுத்துக்கொண்டவை போக மீதமுள்ள நேரமெல்லாம் கட்டுரைகளுக்கே.

என் விடலையை விட்டு வெளியேறிய பருவங்களில் சிறுகதை எழுதி இருக்கிறேன். ஒரு சிறுகதை, நா பார்த்தசாரதியின் தீபத்திலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதும் எண்ணம் இல்லை.

கவிதைகள்தாம் என்னை அடிக்கடி இழுத்து ஒத்திப்போகும் முத்தங்கள். இருப்பினும், கதைகள் எழுதவும் பின்னாளில் நான் அமரக்கூடும்.

தமிழ் கனடா - 012 நீர்வளம்


ஹட்சன் விரிகுடா, செயிண்ட் லாரன்ஸ் நதி ஆகிய இரண்டும் கனடாவின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்துகளாகும். இவற்றின் வழியே உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கப்பல்கள் நாட்டின் நடுக் கூடம் வரை வர இயலும்.

கனடாவின் சரித்திரத்தில் நீர்வழிப் போக்குவரத்துகள் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. தார்ச் சாலைகள், ரயில் பாதைகள், ஆகாய மார்க்கங்கள் எல்லாம் தலை காட்டுவதற்கு முன் மக்கள் பயணங்கள் மேற்கொள்வதற்கும் வணிகப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் நீர்வழிகளைத்தான் பயன்படுத்தினார்கள். செயிண்ட் லாரன்ஸ், மெக்கென்ஸி, பிராஸர், சஸ்காட்சேவன், ஒட்டாவா, செயிண்ட் ஜான் ஆகிய நதிகள் கனடாவின் மிக முக்கிய நீர்வழிகளாகச் செயல்பட்டன.


உலகின் ஏனைய சரித்திரங்களைப் போல நதிக்கரையில்தான் கனடாவிலும் மக்கள் வாழத் தொடங்கினர், நாகரிகம் கண்டனர். கனடாவின் நதிகள்தான் உலகின் நீர்வழி உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. கனடாவுக்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தருகின்றன.

கொபெக் மாகாணத்தில் லா கிராண்ட் ஆற்றில் உள்ள ராபர்ட் பொரசா என்ற நீர்மின்சக்தி நிலையம்தான் கனடாவிலேயே அதிக மின்சக்தி உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தி நிலையமாகும். அதற்கு அடுத்தது சர்ச்சில் நீர்வீழ்ச்சியில் அமைந்த நீர்மின்சக்தி நிலையமாகும்.

கனடாவின் மீன்வளமும் குறிப்பிடத்தக்கது. நதிகள், ஏரிகள், கடல்கள் ஆகிய மூன்று வழிகளிலும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. உலகில் சுமார் 20 ஆயிரம் வகை மீன் வகைகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் இருநூறு வகை மீன்களே கனடாவில் ஏரிகளிலும் நதிகளிலும் உண்டு. கடலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.


கனடாவின் மீன்பிடித் தொழில் அதிக வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் தருவதாக இருக்கிறது. உலகில் மீன் உற்பத்தியில் கனடா 20 இடத்தை வகிக்கிறது.

குளிர்பதனம் செய்யப்பட்ட பட்ட குடிநீர் மீன்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவுக்கும் நார்வேக்கும் அடுத்தபடியாக கனடா மூன்றாவது இடத்தில் நிற்கிறது. உலகின் மிகப்பெரிய மீன்பிடி தளங்களில் இரண்டு கனடாவில்தான் அமைந்துள்ளது.

கடல் உணவு வகையில் விலை உயர்ந்ததும் மிகவும் சுவையானதுமான லாப்ஸ்டர் அதிகமாக கனடாவில் கிடைக்கின்றது. பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடல்வாழ் உணவுவகையில் எனக்கு மிகவும் பிடித்ததும் லாப்ஸ்டர்தான். இது கடினமான ஓடுகளுடன் கூடிய பெரிய இரால் போல இருக்கும்.


மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்ற பாட்டு கேட்டிருப்பீர்கள். கனடா அமெரிககாவிலெல்லாம் அப்படித்தான். பொழுது போக்கிற்காக, மீன் பிடிக்க விரும்புவோர் மீனைப் பிடிக்கலாம் ஆனால் மீண்டும் அதை உயிருடன் பிடித்த நீரிலேயே விட்டுவிடவேண்டும்.

மீன்களை எப்போது பிடிக்கலாம் எங்கே பிடிக்கலாம் என்பதற்கு கனடாவில் இடத்திற்கு இடம் வேறு வேறு சட்டங்கள் உண்டு. மீன் பிடிப்பதற்கு அனுமதி அட்டையும் பெற்றிருக்க வேண்டும்.

கனடியர்கள் மீன்களைவிட மற்ற உணவுகளையே அதிகம் உண்கிறார்கள் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாரம் ஒரு நாளாவது மீன் உண்ணவேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.


மீனி எண்ணையிலிருந்து உருவாக்கப்படும் மாத்திரைகள் உடல் நலத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானதாகும். நிறைய மீன் உணவு உட்கொள்பவர்களுக்கு இதுபோல மாத்திரைகளை விழுங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் நம் தமிழ் மக்கள் அதிகம் மீன் உண்பதில் அக்கறை காட்டுகிறார்கள். கனடாவின் மீன்கள் போதாதென்று ஊரிலிருந்து வரவழைக்கும் மீன்களையும் வாங்கி உண்கிறார்கள். கடல்மீன், ஏரிமீன், இரால், நண்டு, லாப்ஸ்டர் என்று எதையும் விட்டுவைக்காமல் உண்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விசயம்.

13. "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள்
வரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிறது என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்?

அதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்
3

காதலியின்
மடியில் கிடந்து ஒருவன்
உணர்வு உச்சத்தில் சொல்லும்
வார்த்தை எது

இப்படியே செத்துப் போகலாம்
என்று இருக்கிறது
என்பதுதானே

ஏன்?

அந்த நிமிடம்
பரிபூரண நிம்மதி
மரணத்தில் மட்டும்தான் என்பதை
காதல் உணர்ந்திருக்கிறது
என்பதால்தானே

மரணம் உன்னைக் காதலிக்கிறது

தமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்


பல விசயங்களில் கனடா ஒரு சொர்க்க பூமிதான். இங்கே நதிகளுக்கும் குறைவில்லை. நதிகள் என்றால் சாதாரண நதிகளா? மெக்கென்ஸி என்பது கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர்கள். வடஅமெரிக்கா மொத்தத்திற்கும் இதுதான் இரண்டாவது மிகப்பெரிய நதி. மிசிசிப்பி-மிசௌரி என்ற நதியே முதலிடம் வகிக்கிறது. அது அமெரிக்காவில் ஓடும் ஒரு பிரமாண்ட நதி.

இப்படி நன்னீர் ஏரிகளும் ஆறுகளும் சேர்ந்து உலகின் 30 சதவிகித குடிநீரை கனடாவுக்கே சொந்தமானதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. அதாவது விக்கல் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழலாம் இங்கே.

இந்தக் குடிநீரையெல்லாம் கனடாவின் நிலத்தில் பாய்ச்சினால் - சும்மா ஒரு கற்பனைக்குத்தான் - உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடா இரண்டு மீட்டர் ஆழத்தில் மூழ்கி மூச்சற்றுக் கிடக்கும்.


இந்த ஆறுகளிலும் ஏரிகளிலும் இடையிடையே ஆயிரக்கணக்கில் குட்டிக் குட்டியாய்த் தீவுகள் உண்டு. அவற்றைக் காண்பதைப் போல் ஒரு சுகம் வேறு எதிலும் இருக்கமுடியாது. ஒரு குலுக்கல் பரிசில் இங்கே ஒரு குட்டித் தீவு ஒருவருக்கு அவர் வாங்கிய 2 டாலர் சீட்டுக்கு விழுந்திருக்கிறது. இன்று அவர் ஒரு தீவின் சொந்தக்காரர்.

தீவுகளில் வாழ்பவர்கள், விசைப்படகுகள் வைத்திருப்பார்கள். சில தீவுகளில் பள்ளிக்கூடங்கள் கூட உண்டு. தீவுகளிலும் இங்கே அவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள். ஆயிரம் தீவுகள், முப்பதாயிரம் தீவுகள் என்று இரண்டு இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் தலங்கள் அவை.

முதன் முதலில் செயிண்ட் லாரண்ஸ் நதியில் இருக்கும் ஆயிரம் தீவுகளைக் காணச் சென்றது எனக்கு ஒரு கனவு போன்ற அனுபவம். இந்தத் தீவுகளில் பல கனடாவுக்கும் சில அமெரிக்காவுக்கும் சொந்தமானவை. ஏனெனில், செயிண்ட் லாரண்ஸ் நதி இந்த இரு நாடுகளுக்கும் இடையில்தான் ஓடுகிறது.

ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதியின் 200 கிலோமீட்டர் தூரம் அமெரிகாவுடன் இணைந்துள்ளது. செயிண்ட் லாரன்ஸ் நதியின் ஆயிரம் தீவுகளில் நான் மேற்கொண்ட குதூகலமான சுற்றுலாப் பயணத்தில், நான் கொண்ட அதிசயத்தை அன்று இரவே இப்படி நான் எழுதி வைத்தேன்...

ஆயிரம் தீவுகள்

கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன. ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில் ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் ஆயிரம் தீவுகள். அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.


வரம் தரும் தேவதை
வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்களோ

வசந்தங்கள் தாலாட்ட
யொவனம் ததும்ப
நனைந்து நனைந்து மிதக்கும்
நந்தவனங்களோ

வனப்புகள் புடைசூழ
மாலை வெயில் மஞ்சள் பூசி
நீராடி நாணுகின்ற
தங்கத் தாமரைகளோ

நிச்சயப் படுத்திய
அழகுப் போட்டிக்கு
அணி வகுத்த கன்னியரோ

தீர்வுக்குத் திணறித்
தப்பியோடியத் தலைவனைத்
தேடித்தான் நிற்கிறீரோ

அடடா...
பொழியும் அழகினில்
மூழ்கி மூழ்கியே நானும்
சிலிர்ப்புக்குள் சிக்கிக்கொண்டேன்

பறவைகள் மாநாட்டை
வேடந்தாங்களில் கண்டேன்
பூக்களின் மாநாட்டை
ஊட்டியில் கண்டேன்
அருவிகளின் மாநாட்டை
குற்றாலத்தில் கண்டேன்
தீவுகளின் மாநாட்டை
முதன் முதலில்
இங்குதான் காண்கிறேன்

இயற்கையே
என்றென்றும் உனக்கு என்
முதல் வணக்கம்

தீவுகளை இணைக்கும்
சின்னஞ்சிறு பாலம்
இங்குமட்டுமே என்றறிந்தபோது

விலகி விலகி என்றும்
வீணாகிப் போகும்
நம் மனிதமனங்களையும்
இணைத்துப் போட
புதுப் பாலங்கள் வாராதோ
என்ற ஏக்கம் எழுந்தது

நதியால்
தீவுகளுக்குப் பெருமையா
தீவுகளால் நதிக்கு மகுடமா
என்றொரு பட்டிமன்றமே போடலாம்

அப்படியோர் அழகு
அந்த லாரன்ஸ் நதிக்கு

ஓடாத ஓடங்களாய்
எங்கெங்கும் தீவுகள்... தீவுகள்...

அவற்றில் ஓடிப்போய் நின்று
ஓகோ வென்று உச்சக்குரலெழுப்ப
உள்ளம் மனுப்போடுகிறது

சிற்றோடைக் கரைகளில்
சின்னஞ்சிறு பருவத்தில்
காகிதக் கப்பல் விட்டுக் களித்த நாட்களை
மனம் இன்று ஒப்பிட்டுப் பார்க்கிறது

எந்தச் சிறுவனின்
அற்புத விளையாட்டோ
இந்தத் தீவுகளின் சுந்தர ஊர்வலம் ?


திசைகளெங்கும் பரவித்
திளைத்தோங்கியத் தீவுகளே... தீவுகளே...

நீங்கள் நீராடி முடித்ததும்
மெல்ல எழுந்து என்முன்
நடக்கத் துவங்கிவிடுவீர்களோ

காத்திருக்கவா
நானிந்த நதிக்கரையில் ?

இந்த நதியை சுத்தமாக வைத்திருப்பதில் கனடா அதிக அக்கறை காட்டுகிறது. ஏனெனில் துருவ மாகடலில் (ஆர்க்டிக்) வாழும் உலகின் மிக மிக அரிய மீன்வகையான வெள்ளை திமிங்கிலத்தைப் (Beluga) பாதுகாப்பதே நோக்கம்.
7

மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை
மனித வாழ்க்கைதான்
பாகுபாடுகளுடையது

ஒருவன்
கொலை செய்யப்படுகிறான்.
ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்.
ஒருவன்
நோயில் விழுந்து இறக்கிறான்.
ஒருவன்
முதுமை அடைந்து இறக்கிறான்.

இவை யாவும்
மண்ணில் நிகழும் மனித வாழ்க்கையின்
நிலையாமை தரும் பாகுபாடுகள்

மரணம் குறையற்றது
அது மனிதனுக்கு
எந்தத் துயரையும் தருவதில்லை.

துயரிலிருந்து
விடுதலை தரும் மரணத்திற்கு
துயரம் தரவேண்டிய
அவசியமும் ஏதுமில்லை

மரணம் உன்னைக் காதலிக்கிறது

அதிகாரம் 039 இறைமாட்சி


வீரர்படை உயர்மக்கள் செல்வச்செழுமை
அமைச்சரவை அயல்நாட்டுறவு உள்நாட்டுக்காவல்
இவை ஆறும் நிறைவாய்க் கொண்டதே
சிங்கம் போன்ற அரசாங்கம்

அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
தெளிந்த நல்லறிவு தளராத ஊக்கம்
இவை நான்கும் நல்லரசனின் இயல்புகளாம்

கணப்பொழுதும் கண்ணயராமை
உயர்தரக் கல்வி எதையும் தாங்கும் இதயம்
இம்மூன்றும் மண்ணாளும் மன்னரிடம்
நிறைந்திருக்கும் சிறப்புத் தகுதிகளாம்

அறவழி காப்பதில் தவறிழைத்து விடாமலும்
அறமற்ற அநீதிகள் ஏதும் நிகழாமலும்
வீரம் மிகக்கொண்டும்
மானம் பெரிதெனப் போற்றியும்
நாடாள்பவனே நல்லதோர் அரசனாவான்

வருவாய்க்கு வழியமைத்தலும்
வந்த பொருளைச் சேமித்துக் காத்தலும்
காத்த செல்வத்தைத் திறம்பட
செலவிடுதலுமே நல்லாட்சியாகும்

எளிதில் காட்சி தருபவனும்
எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனும்
ஆளுகின்ற நாட்டை சிறந்த நாடென்று
உலகமே போற்றும்

அன்போடு பேசி அளவற்றுக் கொடுத்து
எளியோரைக் காக்கும் வள்ளல்களுக்கு
இந்த உலகம் புகழனைத்தும் தந்து
அவர்களின் விருப்பம் போல் அமையும்

நீதி நிலைநாட்டி மக்களைக் காக்கின்ற
மன்னவன் கடவுள் என்றே கருதப்படுவான்

கேட்கப் பொறுக்கமுடியாத
விமரிசனங்களையும்
கேட்டுப் பொறுக்கின்ற மன்னவனின்
ஆட்சியின் கீழ் இந்த உலகமே தங்கும்

ஏழைக்குப் பொருள் அள்ளிக் கொடுப்பதும்
எதிரிக்கும் கருணை அன்பு தருவதும்
தவறாமல் நீதி நிலைநாட்டுவதும்
நலிவுற்றோரின் நலம் பேணிக் காத்தலும்
ஆகிய நான்கும் உடைய அரசன்தான்
அரசர்க்கெல்லாம் ஒளிவிளக்கைப் போன்றவன்படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசு ளேறு

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கிழ்த் தங்கும் உலகு

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

அதிகாரம் 039
பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

தமிழ் கனடா - 010 அடமான வீடுகள்


ஒரு நடுத்தர வர்க்கத்தின் வசதியான வீடு சுமார் 5 லட்சம் கனடிய டாலர்கள் ஆகும். சராசரியாக ஒரு கனடிய டாலர் என்பது 40 இந்திய ரூபாய்கள். அதாவது இரண்டு கோடி ரூபாயில் ஒரு நல்ல வீடு வாங்கிவிடலாம் இங்கே.

அதற்காக அம்மாடியோவ் என்று வாய் பிளக்கவேண்டாம். முன்பணம் மட்டும் கட்டினால் போதும் அடமான பணத்தை வங்கி உடனே கட்டிவிட்டு மாதா மாதம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என்று ஒரு தவணைமுறையில் உங்கள் சம்பளத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்.

எப்படியும் இங்கே மாதம் சுமார் 1200 டாலர்கள் அடுக்கு மாடி கட்டிடத்தின் இரண்டு அல்லது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகளுக்கு (apartment) வாடகையாகக் கொடுக்க வேண்டிவரும். வீட்டு வாடகை என்பது இங்கே பல விசயங்களை உள்ளடக்கியது. அதனால்தான் வாடகை அதிகம் இங்கே.

கனடா குளிர் நாடு என்பதால், குளிர்காலத்தில் பயன்படுத்தும் வெப்பக்காற்றுக் கருவிகள் (Heating Systems), வெயில் காலத்தில் பயன்படுத்தும் குளிர்க்காற்றுக் கருவிகள் (Air Condition Systems), மின்சாரம், மின்சார அடுப்பு, தண்ணீர், துவைத்து உலரவைக்கும் கருவிகள், அடுக்குமாடிக் கட்டிடம், தோட்டம், அவற்றைச் சுற்றியுள்ள பாதைகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி அறை, பொழுதுபோக்கு அறை, நீச்சல் குளம், பாதுகாவலர்கள், தீயணைப்புக் கருவிகள் என்று இவற்றுக்கு மட்டுமே 400 லிருந்து 600 வரை ஆகிவிடும்.

இப்படி கட்டும் வாடகையை (சுமார் 1000 லிருந்து 1600 வரை) முறையாக வங்கிக்கு (mortgage) அடமானத் தொகையாக கட்டினால், இருபத்தி ஐந்து வருடங்களில் அழகான வசதியான தனி வீடு உங்களுடையதாகிவிடும். தனியாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால், வட்டி சேர்த்து நீங்கள் வங்கிக்கு வீட்டின் விலையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகவே கட்டுவீர்கள்.

எப்படியும் அது வாடகையாகப் போகப்போகிற பணம்தான் என்பதால் இங்கே வீடு வாங்கிவிடுவதே புத்திசாலிகளின் செயல். எனவே இங்கே அனைவரும் புத்திசாலிகளாகிவிடுவார்கள்.


வீடு வாடகைக்கு எடுக்கும்போது, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பது மிக முக்கியம். ஆண் பெண் குழந்தைகளுக்கு தனித்தனி அறைகள் என்றால்தான் கனடா ஒத்துக்கொள்ளும். எல்லோரையும் சேர்த்து ஒன்றாகப் படுக்க வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். எனவே, நம்மூரில் 'பதினாறும் பெற்று' (இதன் பொருளை இங்கே தவறாகப் பயன்படுத்துவதற்காக என்னை மன்னிக்கலாம்) பெருவாழ்வு வாழ்பவர்கள் இங்கே வீடு வாடகைக்கு எடுப்பது இயலாத காரியம்.

அகதிகளாக இங்கே வந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இன்று சொந்த வீடுகள் வாங்கி வசதியாகவே வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு இங்கே முன்னேற்றப் பாதைகள் மிகவும் விசாலமானவை.

வங்கிக்கு கடன் தருவதற்கு முக்கியமாகத் தேவை ஒரே ஒரு விசயம்தான். நீங்கள் சம்பாதிக்கிறீர்களா? நிரந்தர வருமானத்தில் இருக்கிறீர்களா? அவ்வளவுதான். அப்படியானால், இந்தா பிடி என்று வீட்டு மதிப்பில் 95 சதவிகிதம் வரை கடனாகக் கொடுத்துவிடும். மீதம் 5 சதவிகித பணத்தை முன்பணமாகக் கட்டினால் போதும். இதோ முன்பணம் என்று கட்டிவிடுவார்கள் சமர்த்துக் கனடியர்கள்.


இங்கே ஒரு லட்சம் டாலருக்குக் கூட வீடு வாங்கலாம். அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள ஒற்றையறை கொண்ட வீடுகள். கணவன் மணைவி இருவருக்கும் அது போதுமல்லவா? படுக்கையறைதான் ஒன்றே தவிர, சமையலறை, முற்றம், பலகனி, குளியலறை என்ற மற்றவிசயங்கள் கட்டாயம் இருக்கும்.

இங்கே அடுக்குமாடி கட்டிட வீடு வாங்கினாலும், ஒரு விசயத்தைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். அது முன்பு சொன்ன குளியல் அறை சமாச்சாரம் மட்டுமல்ல, சமையலறையும்தான். நம்மூரில் சமையலறை எங்கே இருக்கும்? வீட்டின் பின்புறம்தானே? இங்கே நீங்கள் உள்ளே நுழைந்ததும் சமையலறையைத்தான் பார்ப்பீர்கள். அதுவும் சிறியதாகவே இருக்கும். தனி வீடுகளில் சமையலறை வீட்டின் பின்புறமும் இருக்கும்.

நம்மூர் பெண்மணிகள்தானே சமையல் கட்டிலேயே முழுப் பொழுதையும் கழிப்பார்கள் (முன்பெல்லாம்?). ஆனால், இங்கே உள்ள பெண்கள் பெரும்பாலும் முட்டையை அரைவேக்காடாய் ஆக்குவதைத் தவிற வேறெதுவும் செய்வதில்லை.

ஆனால், நம்மூர் வாசிகள் சும்மா இருப்பார்களா? கடுமையான மசாலா சமையலால் வீட்டை ஒரு வழி பண்ணிவிடுவார்கள். வீடு முழுதும் வீசும் சமையல் வாசனையிலிருந்து உடைகளைக் காப்பது மிகவும் கடினமான காரியம். அடைபட்ட வீட்டுக்குள்ளிருந்து எதுவும் எளிதில் வெளியில் செல்லாது. தலை முடியெல்லாம் கூட சாம்பார் வாசனையில் சிலிர்த்துக்கொண்டு நிற்கும். நம்மூர் சமையல் வாசனை வீசும் உடையோடு அலுவலகம் சென்றால் அதைவிட தொல்லை வேறெதுவும் இருக்க முடியாது.
26

மரணம் நேர்ந்ததும்
மண்ணின் தொடர்புகள் எல்லாம்
துண்டிக்கப்பட்டுவிடுகின்றன

மரணத்திற்குப் பின்
நிம்மதிதான்
எஞ்சி இருக்கப் போகிறது என்றாலும்
மண்ணில் உள்ள இனிய வாழ்வை
மரணத்தால் நாம் இழக்கிறோம்

அதை இழக்க
எந்த உயிரும் சம்மதிப்பதில்லை

ஆகவே
சொர்க்கத்தை
மண்ணில் காண்போம்
யாவரும் வாழவும்
நாமும் வாழவும் வாழ்வோம்

மரணம் பற்றிய சரியானதும்
நிம்மதியானதுமான அறிதல்தான்
மனிதனுக்கு அந்த
உயர்வான உணர்வுகளைத் தரும்
அதிகாரம் 001
 
*கடவுள் வாழ்த்து*


தமிழுக்கு அகரம்போல் மண்ணில்
உயிருக்கு இறைவனே
முதல்வன்

அனைத்தும் அறிந்த
அவனடி தொழாதான் கல்வி
வெறும் குப்பை

பூமனத்தில் பூத்திருக்கும்
அவன் பாதம் பணியாமல்
புகழென்பதோ எவர்க்கும்
கிட்டாத முல்லை

விருப்பும் வெறுப்புமற்ற
அவனைப் பணிந்தாலோ
துன்பங்கள் வாழ்வில்
இல்லவே இல்லை

துயர்தரும் வினைகளெல்லாம்
தூரமாகி ஓடும்

ஐம்புலன்களையும்
அடக்கியாளும் தூயவனின்
அருமை வழிச் செல்வொரே
அகிலம் வெல்வர்

நிகரற்ற அவனின்
வழி செல்லா மாந்தரோ
துயரப் பிடியினிற் சிக்கியே
துருப்பிடிப்பர்

நீதிநெறியாளன்
அவனை வணங்காமல் எவர்க்கும்
இன்பமும் பொருளும் வெல்லும்
வல்லமையோ இல்லை

தலையிருந்தும் இல்லா மூடரே
இறைவனைத் தொழா மானிடர்

இவ்வுலக இன்னல்களில் மூழ்கியே
கரைசேரும் வழியற்று
காணாதொழியும் பாவிகள்

*
*

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனில்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


*
*

அதிகாரம் 001
அறத்துப்பால் - பாயிரம் - கடவுள் வாழ்த்து

*
*

வல்லோன் வள்ளுவனுக்கு
என் புதுக்கவிதைப் பூமாலை


அன்புடன் புகாரி

தமிழ் கனடா - 009 மனிதனும் மரமும்


சிவப்பும் வெள்ளையும்தான் கனடாவின் தேசிய நிறங்கள். இங்கே மிகப் பெரிய அரசியல் மாற்றங்களைச் செய்த மக்கள் பிரான்சிலிருந்தும் பிரிட்டிசிலிருந்தும் வந்தவர்கள்தாம். ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? அவர்கள்தான் கனடாவே. இவர்களின் ஒருங்கிணைப்பில்தான் கனடா உருவானது. பிரான்சின் நிறம் சிவப்பு. பிரிட்டிசின் நிறம் வெள்ளை. இவை இரண்டும் சேர்ந்ததே கனடிய நிறங்கள்.

எனவே கனடாவின் கொடி சிவப்பும் வெள்ளையும் கொண்டதாக இருக்கும். அதன் நடுவே மிக அழகான சிவப்பு மேப்பிள் இலையும் இருக்கும். அதுமட்டுமல்ல, கனடியர்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக நீரினுள் எறியும் ஒற்றைக் காசில் (penny) மேப்பிள் இலை பிரகாசிக்கும். இவர்கள் இதுவரை நயாகராவில் விட்டெறிந்த சல்லிகளைச் சேகரித்தால் 'இது போதுமே' என்று புறப்பட்டு ஊருக்குச் சென்று ஒரு மாநிலம் வாங்கிக்கொண்டு வசதியாய் தங்கிவிடலாம்.

மனதின் ஆசைகள் நிறைவேற இவர்கள் நீரில் சில்லறைகளைச் சுண்டுவார்கள். பெரும்பாலும் ஒற்றைக் காசுதான். என்ன, கஞ்சம் கஞ்சம் என்று கூறத் தோன்றுகிறதா?

நீரில் வீசினாலும் நிதானமாகவே வீசுவார்கள் என்று ஒரு புதிய பழமொழியை இவர்களுக்காக நாம் உருவாக்கிக்கொள்ளலாமா? ஆக, தண்ணீர் என்பது இங்கே திருப்பதி உண்டியல் மாதிரி.

கனடாவில் சுமார் 8 சதவிகித நிலமே விவசாய நிலம். ஆனாலும் இதன் அளவு எவ்வளவு தெரியுமா? 8 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று தமிழர்கள் முடிவெடுத்தால் பற்பல வசதிகளோடு உடனே கனடாவில் அவர்களுக்கு வயல்கள் தயார். கோதுமைதான் கனடாவில் பெருமளவில் உற்பத்தியாகின்றது. அதனால் உலக நாடுகளிடையே கோதுமையில் முன்னணியில் நிற்படு கனடாதான்.


மனிதனும் மரமும் ஒண்ணு. எப்படி? கனடாவில் மரங்கள் மிகவும் அதிகம். இதை மரங்களின் நாடு என்றும் கூறலாம். தொட்டதற்கெல்லாம் மரம்தான். இதனால்தான் காகித விலை இங்கே மிகக் குறைவு. வீடுகளெல்லாம் மரங்களால்தான் கட்டப்படுகின்றன.

இங்கே வீடு கட்டுவதைப் பார்த்தால் வேடிக்கையாய் இருக்கும். ஆதி வாசிகள் கம்புகளைக் கட்டி குடிசை போடுவதைப் போல இவர்கள் புதிய தொழில் நுட்பத்தை வைத்து மரங்களால் வீடு கட்டுகிறார்கள். கொஞ்சம் மரம் கொஞ்சம் கண்ணாடி அவ்வளவுதான் அருமையான வீடுகள் தயார். குளிருக்கும் வெயிலுக்கும் இதுவே சொர்க்கமாக இருக்கிறது இங்கே.

நேற்று வந்து இன்று வீடு வாங்கிய என் நண்பர் ஒருவர் இந்த மரவீடுகளைப் பார்த்து வெறுத்துவிட்டார்.

'என்ன புகாரி இது? இவ்ளோ பணத்தை வாங்கிக்கிட்டு ஒரு கான்கிரீட் போட்டுத்தர மாட்டேங்கிறானுவ. தட்டுனா எல்லாம் கொட்டிப் போயிரும் போல இருக்கே? பம்மாத்து வேலையால்ல இருக்கு. இது சரிப்பட்டு வருமா?' என்றார். அண்ணே! இதுதான் இங்கே சரிப்பட்டு வரும் அவை உறுதியானவைதான் என்று சத்தியம் செய்து சமாதானப் படுத்தினேன்.

சரி நம் கேள்விக்கு வருவோம்: மனிதனும் மரமும் ஒண்ணு. எப்படி? மரத்துக்குத்தான் கை இல்லையே மனுசனுக்கு இருக்கே என்று யாராவது பழிப்புக் காட்டுவதாய் இருந்தால், நான் இந்தக் கட்டுரையை இத்தோடு நிறுத்திவிடுவேன்.

கனடாவின் தென்பகுதிகளில் மிக உயரமாக வளர்ந்து கிடக்கும் மரங்கள் குளிரான வடபகுதிக்குச் செல்லச் செல்ல குட்டையாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்கும். அதையும் தாண்டி துருவக்கடல் நோக்கிச் சென்றால் மரங்களே இருக்காது. மனிதனும் இருக்கமாட்டான். இப்போது தெரிகிறதா, ஏன் எஸ்கிமோக்கள் குட்டையாக இருக்கிறார்கள் என்று. எனவே மனிதனும் மரமும் ஒண்ணுதான் :)

தமிழ் கனடா - 008 முதல் கனடா 1867


எல்லாம் சரிதான், கனடா எப்போதுதான் உருவானது?

1867 ஜூலை முதல் தேதிதான் இன்றைய ஒண்டாரியோ, கியூபக், நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோசியா ஆகிய மாகாணங்களை ஒன்றாய்ச் சேர்த்து முதன் முதலில் ஒரு நாடாக கனடாவை உருவாக்கினார்கள். இன்றைய கனடாவில் இது கால்வாசிக்கும் சற்றே அதிகம். அவ்வளவுதான்.

பிறகுதான் கனடாவின் கட்டுக்கோப்பான அரசியல் என்னும் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல மற்ற இடங்களும் வந்து சேர்ந்து கொண்டன. இதனால் கனடா, உலகின் இரண்டாம் மிகப்பெரிய நாடாகிவிட்டது.

இதில் சில வலுவான அரசியல் காரணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது, ஒன்று சேர்ந்த நாடாக கனடா உருவாகாவிட்டால், அதன் பலபகுதிகளும் அமெரிக்காவுக்கு பெப்பரோணி பீட்சாவாக ஆகிவிடக் கூடும் என்ற ஐயம். அமெரிக்கர்களுக்கு பீட்சா ரொம்பப் பிடிக்கும். துண்டுபோடாமலேயே தின்று முடிப்பார்கள். பக்கத்தில் ஒரு கோக் இருந்தால் போதும். அதான் ஏழு ஏரிகள் இருக்கின்றனவே. அவை சோக்கான கோக் ஆகாதா?

இந்த ஒண்டாரியோவையும் கியூபக்கையும் பற்றி நாம் மீண்டும் பார்ப்போம். மற்ற இரு மாகாணங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதீர்கள். அவை குட்டியூண்டு மாகாணங்கள்தான். இலங்கைத் தமிழருக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத இடங்களும் கூட. ஆனால் அவை பாரம்பரிய பண்பாடுகள் கொண்ட இடங்கள்.


இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக வாழ்வது முக்கியமான மூன்று இடங்களில்தான். அவற்றில் முதன்மை இடம் டொராண்டோ தான். சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள். இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

அடுத்தது மாண்ட்ரியல். அதன் பிறகு என்றால் வேங்கூவரைச் சொல்லலாம். பிறகு சில்லறையாக இங்கும் அங்குமாக சிதறிக் கிடப்பார்கள் வேலை நிமித்தமாக. அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மேப்பிள்(maple) இலைதான் கனடாவின் அடையாளச் சின்னம். ஏனெனில், சில நூறு வருடங்களாகவே மேப்பிள் இலை கனடியர்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. மேப்பிள் மரங்களிலிருந்து உணவு எடுக்கும் கலையை பழங்குடியினர் கண்டுபிடித்திருந்தனர்.


மேப்பிள் மரங்கள் கனடாவில் ஏராளமான இடங்களில் தாராளமாக வளர்ந்திருக்கும். மரபு உரிமைகளுக்கும் போர்க்கால அடையாளத்திற்கும் கனடியர்கள் அந்தக் காலம் தொட்டே மேப்பிள் இலையைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மிகவும் அழகான வடிவம் கொண்ட மேப்பிள் இலையின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள 'மாப்பிள்ளை' என்ற நம்ம ஊர்ச் சொல்லை நீங்கள் நியாயமாகப் பயன் படுத்திக்கொண்டால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

புகுமுக வகுப்பில் விஞ்ஞான பாடத்தில் வந்த 'அவகாட்ரோ ஹைபதீசிஸ்' மூளையில் அறைகளில் தங்க மறுக்கிறது என்பதற்காக, என் நண்பன் ஒரு எளிமையான உத்தியைக் கையாண்டான். 'அவ காட்றா சப்பாத்தி' என்றான். முதலில் கேட்கும் போது வந்த சிரிப்பை எனக்கு அடக்க முடியவில்லைதான். ஆனால், அந்த அவகாட்ரோ ஹைபதீசிஸ் பிறகு ஒருநாளும் எனக்கு மறக்கவே இல்லை. அதோடு அதைக் கேட்கும்போதெல்லாம்கூட என் நண்பனின் ஞாபகமும் அதோடு இணைந்த சிரிப்பும் பொத்துக்கொண்டு வரும். நண்பனின் இந்த அரையணா வேலைக்கு ஆயுள் வெற்றியா?

மேப்பிள் மரங்களிலிருந்து தேன் போன்று ஒரு சாறு எடுப்பார்கள். அதன் ருசி தரமாகவே இருக்கும். நயாகராவின் இடப்புறக் கடை களில் பல்வகை அழகு சீசாக்களில் அடைக்கப்பட்டு, விற்கப்படும் மேப்பிள் பானத்தை (maple syrup) பெரும்பாலும் எல்லோருமே வாங்கிச் செல்வார்கள்.

பருவ மாற்றத்திற்கு ஏற்றாற்போல மேப்பிள் இலை தன் முக அழகை வண்ண வண்ணமாய் மாற்றுவது பேரழகு. அதுவே கனடிய தேசியக் கொடியின் உள்ளேயும் கவர்ச்சியாய்ச் சிரிக்கிறது.

பிப்ரவரி 15, 1965 அன்றுதான் சிவப்பு மேப்பிள் இலையை கனடா தன் கொடிக்குள் குடியேற்றியது. இந்த சிவப்பு மேப்பிள் இலையை, கருணை உள்ளம் கொண்ட கனடா, நிர்கதியானவர்களுக்கு நம்பிக்கை தரும் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறது.

12. தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளதுலண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்12. "தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும் ?

அன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த
நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா? இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கி விட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி
உதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!
பிறவா
வரம் வேண்டும் என்று
யாசித்துக் கொண்டிருந்தேன்
சில பக்தர்களைப் போல
உனைக் காணும் முன்பெலாம்

ஆனால் இன்றெலாம்
இனியும் நான் பிறக்க வேண்டும்
பிறக்கும் முன்பே
நீ எங்கே பிறக்கப் போகின்றாய்
என்று அறிந்து
அங்கு மட்டுமே பிறக்க வேண்டும்
என்று உயிர் தவிக்கிறேன்

தமிழ் கனடா - 007 வட அமெரிக்கா


இதோ உங்களுக்காக இன்னொரு குட்டிக்கதை. கனடாவுக்குப் பெயர் வந்த காரணம்பற்றியதுதான்.

ஐரோப்பியர்கள், உலகின் ஒரு இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த விசயம்தான். நம்மைப்போல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன்

வாழ்வோம் என்ற சில்லறைத் தத்துவங்களெல்லாம் அவர்களுக்கு ஆந்தராக்ஸ் கொடுத்து அல்லாடவிட்டாலும் ஒத்துவராத விசயம்.

காடோ செடியோ என்று நாடுவிட்டு நாடு அலைவார்கள் பொருள்தேடி நம்மைப் போல் நாலரையணா சம்பளம் வாங்க அல்ல, நாட்டையே ஒரு போடு போட.

கேட்டால் நாங்கள் எல்லாம் ஆராச்சியாளர்கள் என்று பின்னல் போட்ட கெட்டி நூலை ஒரு பிசிறும் இல்லாமல் நம்முன் விடுவார்கள் மிக இயற்கையாக. ஆனாலும் இந்த உலகத்தை ஒன்றாக இணைத்தவர்கள் அவர்கள்தானே? பின் பிரித்தாளப் பிரித்தவர்களும் அவர்கள்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

'வெள்ளையர் திருட்டு நன்மையில் முடியும்' என்று ஒரு சந்தர்ப்ப மொழி, பழமொழி போல வந்து என் நெற்றிப் பொட்டை முட்டுகிறது. ஓரமாய் ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்கிறேன்.

வெள்ளையர்கள் இந்தியா வந்திருக்காவிட்டால், நான் ஒரத்தநாட்டின் எட்டாம் சரபோஜி மகராஜாவாகி படிக்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்(!) ராணியைச் சுற்றிச் சுற்றி புழுதி பறக்க குதிரை சவாரி செய்து கொண்டிருக்கலாமோ என்னவோ இந்நேரம் :)

அப்படி வெள்ளைக்காரர்கள் பொன்னும் மணியும் தேடி கனடா பக்கம் அலையும்போது ஒரு மண்ணும் கிடைக்கவில்லை அவர்களுக்கு. வெறுப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி ஒரு உலக வெறுப்பு மாநாடே போட்டது அவர்களின் உள்ளுக்குள். இன்னாடா ஊரு இது? டப்பா ஊரு? குளிர் உட்காரும் இடத்தையும் ஊசி குத்தி ஊசி குத்தி உண்டு இல்லை என்று ஆட்டி எடுக்குது. உருப்படியா ஒரு புளியங்கொட்டையும் இல்லையே இங்கே என்று aca Canada என்று வசைபாடினார்கள். அகா கனடா என்றால் அவர்கள் மொழியில் 'ஒரு மண்ணும் கிடையாது' என்று அர்த்தமாம். பிறகு அதுவே பெயராக ஆகிவிட்டதாம். நம்புவோமே? நம்பினால் நமக்கென்ன நட்டம்?


இப்படி கதைகள் உண்டு என்றாலும் இதுதான் உண்மைக்கதை என்று சொல்ல பெரிதாய் சான்றுகள் கிடையாது. ஆனாலும் kanata என்ற முதல் கதையைத்தான் கனடா நம்பி ஏற்றுக்கொண்டுள்ளது. சரித்திரமாகவும் எழுதிவிட்டது.

அகா கனடா என்ற பட்டத்தை குளிருக்குப் பயந்து குளிக்காத சில அவசரக்கார வெள்ளைக்காரர்கள் அன்று சூட்டிச் சென்றார்கள் என்றாலும், இன்று கனடாவின் இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டதும், கனடா உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளுள் ஒன்று என்று தெரிந்துபோய் விட்டது.

குன்றாத பொருளாதார வளம் ஒருபுறம் இருக்க, உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் கனடா தொடர்ந்து முதலிடம் வகித்துக்கொண்டே இருக்கிறது. இது உலக ஐக்கிய நாட்டுச் சபையின் Human Development Index (மனித மேம்பாட்டு அட்டவணை) காரர்களால் கல்வி, செல்வம், வீரம் (உடல் நலமும் ஆயுளும்தான்!) ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், சுத்தமான சுகாதாரக் காற்று, குறைவான குற்றங்கள், உயர்ந்த உடல்நலம், அற்புதமான கல்வி. இதுதான் கனடா என்ற சொர்க்க பூமியின் கூறுகள்.

கனடியர்கள் அவ்வளவு எளிதில் மேலோகப் பயணச் சீட்டு வாங்கி விடுவதில்லை. கோடுபோட்ட கசங்கள் காகிதங்களைப் போல, உடலெங்கும் சுருக்கங்களோடு ஏராளமானவர்களை இங்கே காணலாம். ஆமாம், உலகத்திலேயே கனடியர்கள்தான் மிக அதிக காலம் உயிரோடு வாழ்கிறார்கள். ஜப்பானும் ஐஸ்லாண்டும்தான் கனடாவுக்கு இந்த விசயத்தில் மல்லுக்கு நிற்கின்றன. கிழங்களுக்கு இங்கே கௌரவம் அதிகம். Senior Citizens (உயர் குடிமக்கள்? - உயர் அதிகாரி போல) என்று அழைத்து நிறைய சலுகைகளை வழங்குவார்கள்.

இன்னொரு விசயம். உலகத்திலேயே படித்தவர்களின் விகிதம் எங்கே கொடிகட்டிப் பறக்கிறது தெரியுமா? அதுவும் கனடாதான். அமெரிக்காவெல்லாம் மெல்லமாக அப்புறம்தான் வரும்.

கனடாவின் கல்வியைப் பற்றி நான் நிறைய சொல்லவேண்டி இருக்கிறது. அந்தக் கல்விச் சாலைக்குள் இலங்கைத் தமிழர்கள் இன்றுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்றும் வேறு பல அருமையான தகவல்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு சொல்ல முட்டும் வார்த்தைகளோடு காத்திருக்கிறேன். இது முடியட்டும். கொஞ்சம் பொறுங்கள்.

நான் இங்கே அமெரிக்கா, அமெரிக்கா என்று குறிப்பிடும்போதெல்லாம் விசயம் தெரிந்தவர்கள் USA (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) என்று மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். நான் உலகெங்கும் வழங்கி வரும் வழக்கப்படி, இனியும் அமெரிக்கா என்றே குறிப்பிடுவேன்.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல, அது ஒரு கண்டம் என்பதை நாம் சின்ன வயதிலேயே படித்திருக்கிறோம். அதுவும் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று இரண்டு கண்டங்கள். ஆனாலும் வட அமெரிக்கா அல்லது அமெரிக்கா என்றால் உலகெங்கும் USA என்றுதான் அர்த்தமாகிவிட்டது. வட அமெரிக்கா கண்டத்தில் தெற்கே மெக்ஸிகோ, வடக்கே கனடா. நடுவில்தான் ஐக்கிய அமெரிக்கக் கூட்டு நாடுகள் (USA).

அதாவது வட அமெரிக்காவுக்குள்ளேயே ஒரு வட அமெரிக்காதான் கனடா. வட அமெரிக்காவின் தென் அமெரிக்காவான(!) மெக்சிகோவுக்கும் வட அமெரிக்காவின் வட அமெரிக்காவான(!) கனடாவுக்கும் இடையில்தான் USA இருக்கிறது.

என்றாலும், மத்திய அமெரிக்கா என்று ஐக்கிய அமெரிக்கக் கூட்டு நாடுகளை(USA) நாம் குறிப்பிட்டால், புதிதாக வடிவமைத்து இன்னும் பரிட்சித்துப் பார்க்காத ஒரு நாசமாய்ப் போன ஏவுகணையுடன் வந்துவிடக்கூடும் அவர்கள்.

11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன?


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்
செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்
லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.