#தமிழ்முஸ்லிம்

தலைத்துணி - ஹிஜாப் - பர்தா - அபாயா - பூர்கா

பர்தா என்றால் பெர்சியன் மொழியில் திரைச்சீலை என்று பொருள். ஆனால் அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதுதான் முஸ்லிம் பெண்கள் அணியும் மேலங்கி. அதையே அரபு நாட்டில் அபாயா என்றழைப்பார்கள்

பர்தா என்பது உடையல்ல உடைக்கு மேல் அணியும் ஓர் அங்கிதான்.

தமிழ் முஸ்லிம்கள் ஊருக்கு ஊர் வேறு மாதிரி இருந்தார்கள் இந்த பர்தா விசயத்தில்.

தஞ்சாவூரின் கடலோரப் பகுதிகளில் அத்தனை முஸ்லிம் பெண்களும் கண்டிப்பாக துப்பட்டி என்னும் வெள்ளை நிற மேலங்கியை அணிவார்கள். இதிலும் விரிதுப்பட்டி கூசாலி துப்பட்டி என்று இருவகை உண்டு.

விரி துப்பட்டி என்பது அளவில் சிறியது. மூட்டப்படாமல் ஒரு வேட்டியைப் போல விரிந்து இருக்கும்.  கூசாலி துப்பட்டி என்பது அளவிலும் பெரியது மூட்டப்பட்டும் இருக்கும்.

துப்பட்டியை இட்டுக்கொண்டால்,  கைகள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டுவிடும். வேறு எதையும் எடுத்துக்கொள்வது என்பது சற்று சிரமம். ஆனால் அப்படியே பழகி இருப்பார்கள் அவர்கள்.

இப்போது இருக்கும் பர்தா என்பது ஆடையாய்த் தைக்கப்பட்டது என்பதால் கைகள் விடுதலையடைந்திருக்கும். எளிதாக அவர்களுக்குப் பயணம் செய்ய முடியும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் துப்படியோ அல்லது பர்தாவோ அணியும் பழக்கம் அன்றெல்லாம் இல்லை.  அவர்கள் சேலையை ஒழுங்காகத் தன்னை முழுவதும் மறைத்துக் கட்டிக்கொண்டுதான் செல்வார்கள்.

தஞ்சாவூர் முஸ்லிம் பெண்கள்கூட திருச்சியைத் தாண்டிவிட்டால், மெதுவாகத் துப்பட்டியை நீக்கும் பழக்கமும் கொண்டிருந்தார்கள்.

முஸ்லிம் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என்று கண்டிப்பான அடிப்படை மதவாதிகள் மற்றும் சில ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

குறைந்தது ஹிஜாப் (தலைத்துணி) அணியுங்கள் என்று அடுத்த நிலை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

கூடவே பெற்றோர்களும் தன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்கள் இந்த பர்தாவையோ ஹிஜாபையோ அணிவதில்லை. அப்படி அணிவதுதான் அராபிய நடைமுறை வாழ்க்கைப் பழக்கம். காரணம், பாலைவனச் சூரியன் மற்றும் கொடு மணல் காற்று.

கண்களைமட்டும் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் உடல் முழுவதையும் பருத்தித் துணியால் கட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால் பாலைவன மண் முழுவதும் காது மூக்கு தலை என்று ஒரு இடம் விடாமல் நிறைத்துவிடும்.

பர்தாவின் உண்மை நோக்கம் அடுத்தவர் கவனத்தில் இருந்து பெண்ணை மறைப்பதற்கே என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இன்றைய காலத்தில், பெண்கள் மிகுந்த வேலைப்பாடு மிக்க பர்தா அணிகின்றனர். இது அடுத்தவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, பர்தா அணியும் நோக்கத்தையே பாழ்படுத்தி விடுகின்றது.

அதோடு பர்தா அணிவதைச் சில பெண்கள் வசதியாக்கிக்கொண்டார்கள். இரவு உடை போன்ற எந்த உடை அணிந்திருந்தாலும், தலை வாரி இருந்தாலும் இருக்காவிட்டாலும், உடனே நினைத்தவுடன் வெளியே கிளம்ப பர்தாவைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பொதுவாக பெண்கள் வெளியே புறப்படுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், கணவன் மனைவி சண்டை புறப்படும்போதே தொடங்கிவிடுகிறது. இதிலிருந்தும் சில பெண்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

இது இப்படி இருக்க, பர்தா ஹிஜாப் அணிவதால் ஏற்படும் மருத்துவத் தொல்லை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கனடா போன்ற குளிர் நாடுகளில், சூரிய ஒளி மிகவும் குறைவு. சூரிய ஒளி குறைவு என்பதால், விட்டமின் ’டி’ உடலில் குறையும்.

இதனால் மன அழுத்தம், மன உளைச்சல், அவசியமற்ற துக்கம், கண்ணீர் என்பவையெல்லாம் பீடிக்கும்.

கனடாவில் சுத்தமாகவே சூரிய ஒளி இல்லை என்று இல்லை, தமிழ்நாட்டை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 25 விழுக்காடு சூரிய ஒளி உண்டு.

ஆனால் அந்த சூரிய ஒளி உடம்பில் படவிடாமல், முஸ்லிம் பெண்கள் ஆடை அணிந்தால் என்னாகும்? விட்டமின் குறைவினால் பாதிக்கப்படுவார்கள்.

மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, எரிச்சல், துக்கம், கண்ணீர் காரணமாக குடும்பத்தில் சண்டை வரும். பெண்கள் சிடுசிடுவென்றும், எதிர்ப்பு காட்டும் மனோ நிலையிலும், அன்பை இழந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

இதனால் குடும்பப் பிரச்சினை விவாகரத்து வரை செல்லவும் வாய்ப்புகள் உண்டு.

எந்த உடை எங்கே சரியோ, அந்த உடையைத் தேர்வு செய்து அணிவதே அறிவுடைமை.

உலகில் பெரும்பாலானோர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிவார்கள்.

கவனமாகப் பார்த்தால் தெரியும், முஸ்லிம் ஆண்கள் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிகிறார்கள்.

ஆனால் பாவம் முஸ்லிம் பெண்களுக்குத்தான் அந்த உரிமை கொடுக்கப் படுவதில்லை.

அவர்கள் இந்த மருத்துவக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். அதில் அவர்கள் மட்டுமே சிக்கலும் துக்கமும் படவில்லை, குழந்தைகள் கணவன் குடும்பம் என்று எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்.

முன்பு கூறியதைப்போல, தமிழ்முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானவர்கள் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்வரை வெள்ளைத் துப்பட்டியைத்தான் அணிந்திருந்தார்கள். அது சூரியக் கதிர்களைப் பிரதிபளித்துவிடும் என்பதால் அதிக புழுக்கம் ஏற்படாது.

சவுதிக்குப் போன மச்சான் திரும்பி வந்தபோது அங்குள்ள கறுப்பு அங்கியைக் கொண்டு வந்துவிட்டான். அதனுள் அறிந்தும் அறியாமலும் ஆசைப்பட்டு ஏற்று புழுங்கும் பெண்கள் ஏராளம்.

இப்படி பெண்களைப் புழுக்கத்தில் இடுபவர்கள் மதத்தில் அது அவசியம் அதன் காரணமாகவே அப்படிச் செய்வதாக் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

அதோடு பெண்ணுக்கு மட்டுமே உடைக்கட்டுப்பாடு என்பதுபோல பலரும் பேசுகிறார்கள். அதுவும் உண்மையல்ல.

முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப்பற்றிக் கூறும்முன் முஸ்லிம் ஆண்களின் ஆடைகளைப்பற்றித்தான் முதலில் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது.

24:30. நபியே, நம்பிக்கையுடைய ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்;

பெண்களுக்கு குர்-ஆன் 24:31ல் கூறப்பட்டவையின் சாரம் கீழே:

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்
வெட்கத் தலங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்
வெட்கத் தலங்கள் வெளித்தெரியும் பொருட்டு அலங்கரிக்கக் கூடாது
முந்தானைகளால் மார்பகங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்

ஆகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை விசயத்தில் ஒரே கருத்தைத்தான் குர்-ஆன் கூறுகிறது.

ஆணுக்கு வெட்கத்தலம் என்பது ஆணுறுப்புப்பகுதி, பெண்ணுக்கு பெண்ணுறுப்புப் பகுதிக்கும் கூடுதலாக மார்பகங்கள்.

இந்த வித்தியாசத்தைத் தவிர ஆண்களின் உடையிலும் பெண்களின் உடையில் வேறு மாற்றங்களை குர்-ஆன் கூறவில்லை.

நான் காமப்பொருள் இல்லை என்னைப் பெண்ணாய் மதி என்று ஒரு முஸ்லிம் பெண்ணும், நான் காமப்பொருள் இல்லை என்னை ஆணாய் மதி என்று ஒரு முஸ்லிம் ஆணும் சொல்லும் வகையில் அவர்கள் ஆடை அணிதல் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே போதும். மற்றபடி தொப்பி, தலைத்துணி என்பவையெல்லாம் அவசியம் இல்லை.

மேலும், அழகிய ஆடைகளை உடுத்தி மகிழ்ந்திருக்கும்படி குர்-ஆன் கூறுகிறது.

இரண்டு காரணங்களுக்காக ஆடை உடுத்துதல் வேண்டும் என்பதை குர்-ஆன் கூறுகிறது:

7:26 நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம்

தங்களின் வெட்கத் தலங்களை மறைத்துக்கொண்டு தங்களின் மானத்தைக் காக்கவும், தங்களை அழகாக அலங்கரித்துக்கொண்டு மகிழ்வாக இருக்கவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை தேவைப்படுகிறது. இது பெண்ணுக்கு மட்டும் கூறப்பட்டதல்ல, ஆணுக்கும்தான்.

இப்படி ஆடையணிந்து மகிழ்வதை எவரேனும் தடுத்தால், அதை குர்-ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது

7:32. நபியே, இறைவன் தன் மக்களுக்காக வெளிப்படுத்தியுள்ள ஆடை அலங்கார அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?

ஆகவே, முஸ்லிம் ஆண்கள் தங்கள் பெண்களைப் பாதுகாப்பதாய் எண்ணி முழுப்போர்வைக்குள் உன்னை மறைத்துக்கொண்டு இரு, அதுதான் பாதுகாப்பு என்று சொல்கிறார்கள்

ஆனால் அவர்களின் விருப்பம் குர்-ஆனின் பரிந்துரைகளோடு ஒத்துப்போகவில்லை.

இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் பார்க்க வேண்டும். ஊரின், உலகின் சில பகுதிகளில் ஓர் அழகான பெண் நடந்துசென்றால், அதுவும் அவள் வெள்ளைத் தோலாய் இருந்துவிட்டால், விசப் பார்வைகள் கோடிகோடியாய்க் குவிந்து குத்திக் கிழிப்பதைத் தவிர்க்க முடியாது.

எந்தப் பெண்ணும் அந்தப் பார்வையில் அஞ்சி நடுங்காமலும் அருவருப்புப்படாமலும் இருப்பதில்லை. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பர்தா ஒரு நல்ல கவசமாக அவர்களுக்கு இருக்கிறது.

பார்வைகள் சாதாரணமானவையாக மாறும் இடங்களில் பெண் கண்ணியமான உடை உடுத்திச் சென்றாலே போதும் என்று அவள் நினைக்கிறாள். உதாரணமாக சேலை சுரிதார் போன்றவை.

*

சிலர் குர்-ஆனில் பெண்கள் பர்தா கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றே கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப சொற்களுக்கான பொருளை மாற்றியமைத்துக்கொண்டும் அப்படிச் சொல்கிறார்கள்.

”பெண்கள் உடலின் அந்தரங்க பாகங்களை மறைத்துக்கொள்ளட்டும்,
அவர்களின் கவர்ச்சியான பகுதிகளை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம்
மார்பகங்களின் மீது (”கிமர்ஸ்” khimars) தாவணி இட்டுக்கொள்ளட்டும்”

இதுதான் குர்-ஆன் 24:31 வசனத்தின் பெண்களின் ஆடை பற்றிய குறிப்புகள். இது மார்மீது தாவணி இட்டுக்கொள்ளச் சொல்வதைத் தலைத்துணி என்று தவறாக போதிக்கிறார்கள் சிலர்.

ஒரு முக்கியமான குறிப்பு இந்த 24:31 எதுவெனில். இந்த வசனத்தில் எங்குமே ”தலைமுடி” ”தலை” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

பெண்களே உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் சிகையை மூடிக்கொள்ளுங்கள் என்று குர்-ஆனில் எங்கேனும் உள்ளதா என்றால் எங்குமே கிடையாது.

அராபிய கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு புராதன ஆய்வாளர்கள், தாவணியைத் தலைத்துணி என்று தவறாகச் சொல்கிறார்கள். அராபியர்களின் பழக்க வழக்கங்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் மீது திணிக்கப்பார்க்கிறார்கள் வகாபிகள்.

தலையையும் தலைமுடியையும் மறைப்பது முக்கியமென்றால் இறைவன் தன் வசனங்களில் அதைத் தெளிவாகவே சொல்லி இருப்பான். அவனோ மார்பங்களை மறைப்பது பற்றியே கூறுகிறான். மார்பகங்களை மறைப்பது தாவணிதானே தவிர தலைத்துணி அல்ல.

இந்தத் தலைத்துணி என்று தவறாகச் சொல்லப்படும் தாவணிக்கு குர்-ஆனில் உள்ள சொல் ”khimar - கிமர்”

khimar என்ற அரபிச் சொல்லுக்கு cover - மூடி என்றுதான் பொருள். இந்த கிமரைக்கொண்டு மார்பகங்களை மூடச் சொல்கிறது குர்-ஆன். அவ்வளவுதான்.

ஹிஜாப் என்ற சொல் குர்-ஆனில் பல இடங்களில் வருகிறது அந்த ஹிஜாபுக்கும் இந்தக் கிமருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வசனம் 7:46, 17:45, 19:17, 33:53, 38:32, 41:5, 42:51 களைப் பார்த்துக்கொள்ளலாம்.

இறைவன் உங்கள் தலைமுடியையும் மார்பங்களையும் கிமர் இட்டு மூடிக்கொள்ளுங்கள் என்றால் குழப்பமே இல்லை. ஆனால் இறைவன் சொல்வதோ, உங்கள் மார்பங்களை கிமர் இட்டு மூடிக்கொள்ளுங்கள் என்றுதான்.

முடியை ஏன் மூடவேண்டும்? அதுவா பெண்ணின் கவர்ச்சியான பகுதி? சற்றே சிந்திக்க வேண்டாமா?

இறைவன் சொல்லாததை மனிதர்கள், மனிதர்கள் மீது சுமத்துவது கண்டிப்பாகக் கூடவே கூடாது என்று இறைவனே சொல்கிறான்.

முஸ்லிம் பெண்கள் தங்கள் மார்பகங்களை மூடிக்கொண்டால், கவர்ச்சியான பகுதிகளை மூடிக்கொண்டால், இறைவனின் கட்டளையை ஏற்றவள் ஆகிவிடுகிறாள்.

தலையோ தலைமுடியோ கவர்ச்சியானவை என்று இறைவனும் சொல்லவில்லை, நாமும் அறிவோம்.

அன்பேவா படத்தில் சரோஜாதேவியின் அழகைக் கூட்டுவதற்கு ஒரு தலைத்துணியையும் கறுப்புக் கண்ணாடியையும்தான் பயன்படுத்தி இருப்பார்கள். வழமையைவிட அழகாகத் தெரிவார் சரோஜாதேவி. அப்படியென்றால் தலைத்துணி கவர்ச்சியைக் கூட்டுகிறதா குறைக்கிறதா?

பிரச்சினை பெண்ணிடம் இல்லை, அவளை நோக்கும் ஆண்களின் பார்வையில் இருக்கிறது, அவனின் நோக்கத்தில் இருக்கிறது, அவன் மனோநிலையில் இருக்கிறது,

இது இப்படி இருக்க, ஓர் ஆண் தன் விருப்பம்போல் உடையுடுத்துகிறான், வாலிபக் கட்டுடலை வசீகரமாகக் காட்டும் ஆடை அணிகிறான். தலையையும் தலைமுடியையும் நன்கு அலங்காரம் செய்து திறந்து வைத்திருக்கிறான். இவனைக் காணும் பெண்களுக்கு இச்சைகள் வராதா? பெண் என்ன இச்சைகள் அற்றவளா?

இச்சைகளை அடக்குவதுதான் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம். ஆகவேதான் இறைவன் இந்த வசனத்தின் முதல் அடியிலேயே, பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று ஆணுக்கும் பெண்ணுக்கு சேர்த்தே சொல்கிறான்.

பிழை இறைவனின் சொல்லில் இல்லை, சந்தேகத்தில் பெண்ணை முடக்கி வைக்கும் ஆணிடம்தான் உள்ளது.

முஸ்லிம் செய்யவேண்டியது இறைவன் சொல்வதைப்போல, மனிதன் நாகரிகம் பெறுவதுதானே தவிர உச்சிமுதல் கணுக்கால்வரை பெண்ணை மூடி வைப்பதல்ல என்று மிதவாதிகள் கூறுகிறார்கள்.

தலைத்துணி என்பது அரபு நாட்டின் இஸ்லாமியர்களுக்கானது இல்லை. யூதர்கள் தலைத்துணி இட்டார்கள். கிருத்துவர்கள் தலைத்துணி இட்டார்கள். இதெல்லாம் கடுமையான பாலைவனத்தின் தேவைகள்.

கிருத்தவர்களின் கன்னிகாப்பெண்களின் துறவு வாழ்க்கைக்கு தன்னை முழுவதும் மூடிக்கொள்ளும் ஆடை தேவைப்பட்டது. அழகிய வெண்ணிறத்தில் அவர்கள் உடல் முழுவதையும் மறைத்து கூடவே தலையையும் மறைத்து ஆடை உடுத்திக்கொண்டார்கள்.

இதெல்லாம் துறவே கூடாது என்று சொல்லும் இஸ்லாத்துக்கு ஏற்புடையன அல்ல என்பதை நாம் உணரத்தான் வேண்டும்!
மீண்டும் குரங்காவோம் வா

மனிதக் கண்களுக்கு
கிட்டத்தில் உள்ளவையே
தெரியும்

வாசலில் நிற்பவரைக்
காணக்கூட
இனி
டெலஸ்கோப்தான்

முதுகு வளைந்து
மீண்டும்
மனிதன் குரங்கு

காகித எழுத்துக்களை
வாசிக்கவே முடியாது
கணித்திரை எழுத்துக்களே
கண்களுக்குத் தெரியும்

பேச்சைத்
தொலைத்துவிடுவான்
நாளைய மனிதன்

எல்லாம்
எழுத்துக்கள்தாம்

இப்படியே
தட்டிக்கொண்டே
உக்காந்திருந்தால்
வேறென்னதான் ஆகுமாம் :-)

கணினி
செல்பேசி
தொலைக்காட்சி
தருகின்ற
நவீன வாழ்வில்
மனிதன் மீண்டும்
புராதனக் குரங்கு

10 85 ஆண்களுக்குப் 15 பெண்கள்

நாடு              மக்கள்தொகை   ஆண்கள்    பெண்கள்
Saudi Arabia      28,828,870             57.50%               42.50%
Kuwait                 3,368,572             59.80%               40.20%
Bahrain                1,332,171             62.20%               37.80%
Oman                   3,632,444             63.60%               36.40%
UAE                    9,346,129             70.10%               29.90%
Qatar                   2,168,673              76.50%               23.50%

இன்று 2013ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அரபு நாடுகளின் மக்கள் தொகைகள் என்னை அதிசயிக்க வைத்தன. உலக நாடுகளில் எல்லாம் ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாக இருக்கும்போது, இயற்கைக்கு மாறாக அரபு நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கின்றன.

பெண் குழந்தைகளைக் கொன்று புதைத்த காட்டுமிராண்டிக் காலமெல்லாம் இஸ்லாம் தொடங்குவதற்கு முன், அதாவது சுமார் 1400 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவை. ஆனாலும் இன்றும்கூட அதுதான் தொடர்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிக்கிறார்களா அல்லது பெண் பிள்ளைகள் பிறப்பதே இல்லையா? மேலும் இதுபற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று தோன்றியது.

கத்தாரில் 77 ஆண்களுக்கு 23 பெண்கள்தான் இருக்கிறார்களாம்.

இதில் செல்வந்தர்களும் மன்னர் பரம்பரையும் நான்கு திருமணங்கள் செய்துகொண்டுவிட்டால், சாதாரண குடிமகனுக்கு எத்தனைப் பெண்கள் மீதம் இருப்பார்கள்? சுமார் 85 ஆண்களுக்கு 15 பெண்களே இருப்பார்களோ?

இதனால்தான் அரபு நாடுகளில் பல ஆண்கள் ஓரினச் சேர்க்கைக்குத் தள்ளப்படுகிறார்களோ?

இது பலாத்காரம், விபச்சாரம், கள்ளக்காதல் என்று பல விசயங்களுக்குக் காரணமாகிவிடுமே?


09 ஹதீதுகளின் கதை

ஹதீதுகள் தொகுக்கப்பட்ட வரலாற்றை நாம் வாசித்தல் மிக மிக அவசியமானது.

ஹதீதுகள் என்பன முகம்மது நபி அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட குர்-ஆனின் விளக்கங்கள் மற்றும் முகம்மது நபி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்.

குர்-ஆன் பெருமானாரின் காலத்தில் மனப்பாடமாகவும் எழுத்துக்களாகவும் பாதுகாக்கப்பட்டு அவரின் மறைவைத் தொடர்ந்த இரண்டு ஆண்டுகளில் ஏடுகளாகக் தொகுக்கப்பட்டு பதினாறு ஆண்டுகளுக்குள் முழுமையான நூலாக ஆக்கப்பட்டுவிட்டது.

அப்படியான எந்த உடனடி முயற்சிகளும் ஹதீதுகளுக்கு எடுக்கப்படவில்லை. அன்றைய நாளில் அத்தனை ஹதீதுகள் இருக்கவும் இல்லை.

ஹதீதுகள் என்பன முகம்மது நபியின் மறைவுக்குப்பின் இருநூறு வருடங்கள் கழித்து, வெளிநாடுகளிலிருந்து வந்த வேற்று மொழிக்காரர்களால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாகும்.

குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு சொல்லையும் மாற்றவோ மறைக்கவோ இல்லாமல் முகம்மது நபி அவர்களால் கூறப்பட்டு பல நூறு தோழர்களால் ஓர் சொல்லும் மாறாமல் பாதுகாக்கப்பட்டது.

ஹதீதுகள் அப்படியாய் பாதுகாக்கப்படவில்லை.

ஹதீதுகள் என்பன செவி வழியேயும் சில குறிப்புகள் வழியேயும் சுமார் எட்டு தலைமுறை கால மக்களால் எடுத்து வரப்பட்டவைகளின் தொகுப்பு ஆகும்.

இஸ்லாம் தொடங்கிய காலம் தொட்டே இஸ்லாத்திற்கான எதிர்ப்பு என்பது எல்லை கடந்ததாக இருந்தது.

நபி பெருமானார் வாழ்ந்த காலத்திலேயே முசைலமா என்பவன் தானும் ஓர் இறைத்தூதர் என்று அறிவித்து குர்-ஆன் வசனங்களைப் போலவே சில பல வசனங்களையும் உருவாக்கிக்கொண்டிருந்தான்.

அவன்போன்று பலரும் அந்நாளிலேயே தாங்களும் இறைத்தூதர்கள் என்று கூறிக்கொண்டும், நபித்தோழர்கள் என்று பொய்யாகக் கூறிக்கொண்டும் குர்-ஆன் வசனங்களோடு தங்களின் வசனங்களைக் கலந்து இஸ்லாத்தைச் சிதைக்க முற்பட்டனர்.

பொய்யன் முசைலமாவை அழிக்க நடந்த போரில் குர்-ஆனை மனப்பாடமாக வைத்திருந்த எழுபத்தைந்துக்கும் அதிகமான நபிப்தோழர்கள் உயிரிழந்தார்கள்.

இந்த நிலையை உணர்ந்து, எஞ்சிய நபித்தோழர்களிடம் உள்ள குர்-ஆன் வசனங்களைத் திரட்டி முழு தொகுப்பாக முதல் கலிபா அபூபக்கரால் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நபி இறந்த இரண்டே ஆண்டுகளுக்குள் பாதுகாக்கப்பட்டுவிட்டது

இது போன்ற எந்தப் பாதுகாப்பும் ஹதீகளுக்குத் தரப்படவில்லை.

முகம்மது நபி மறைந்த சில ஆண்டுகளுக்குப்பின் நபித்தோழர்கள் பலரும் பல நாடுகளுக்கும் பயணம் செய்து குர்-ஆன் வசனங்களை ஓதிக்காட்டி இஸ்லாத்தைப் பரப்பியபோது சொற்களில் சிதைவுகள் வரக்கூடாது என்று கலீபா உதுமான் வசனங்களில் குறியீடுகளை இட்டு குர்-ஆனை முழுமையாகப் பாதுகாத்துவிட்டார்.

இது போன்ற எந்தப் பாதுகாப்பும் ஹதீதுகளுக்குத் தரப்படவில்லை.

ஆனால், இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள், குர்-ஆனில் ஏதும் கலப்படம் செய்ய வழியே இல்லை என்பதை உணர்ந்து, ஹதீதுகள் வழியே தங்களின் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர்.

இதையும் ஓர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முகம்மது நபி இறந்த இருநூறு வருடங்கள் கழித்து அதாவது சுமார் எட்டு தலைமுறைகள் கழித்து வெளிநாட்டவர்களைக் கொண்டு ஹதீதுகள் தொகுக்கப்பட்டன.

அப்படி தொகுக்கப்பட்ட ஹதீதுகளுள் பொய்யான ஹதீதுகளே நிரம்பி வழிந்தன.

அந்த ஹதீதுகளைச் சுத்தம் செய்து அசலானவற்றை எடுப்பதற்கு அன்றைய நாள் முஸ்லிம்கள் பெரிதும் முயன்றார்கள்.

அவர்களுக்கு இயன்றவரை மனிதர்களின் எல்லைக்கு உட்பட்டு பிழையான ஹதீதுகளை வடிகட்டி நீக்கினார்கள்.

தொகுக்கப்பட்ட ஹதீதுகளுள், கழிக்கப்பட்டவையே 99.99 சதவிகிதம் என்றால் ஹதீதுகளின் நிலைபற்றி தனியே ஏதும் கூறத் தேவையில்லை

உதாரணமாக இமாம் புகாரி உஷ்பெஸ்கிஸ்தானின் புகாரா என்ற ஊரிலிருந்து வந்து அரபுமொழி பயின்று மூன்று லட்சத்துக்கும் மேல் ஹதீதுகளைத் தொகுத்தார். அவற்றுள் நாலாயிரம் ஹதீதுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதாவது 0.01 சதவிகிதமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது இமாம் புகாரி தொகுத்த நூறு ஹதீதுகளில் 99 ஹதீதுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் கிழித்து எறியப்பட்டன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீதுகளும் மொத்தக் குழுவினராலும் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல.


08 ஆறு ஹதீத் நூல்களுக்கு முன்னும் பின்னும் எத்தனை நூல்கள்?

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய ஆறு ஹதீத் நூல்களும் தொகுக்கப்பட்டன.

இவற்றுக்கு முன்னும் இதே காலகட்டத்திலும், வேறு பல ஹதீத் நூல்கள் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

முஸன்னப் என்றால் தலைப்புகளின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை. முஸ்னத் என்றால் அறிவிப்பாளர்களின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை.

ஹதீதுகள் வேவ்வேறு நபித்தோழர்கள், தாபியீன்கள் மூலம் கிடைத்தன. தாபியீன்கள் என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.

இன்றைய ஆறு ஹதீத் நூல்களுக்கு 100 வருடங்கள் முந்தைய வேறு பல ஹதீத் நூல்களில் முக்கியமான சிலவற்றின் பெயர்கள்:

1. மாலிக் - 92-179ஹி - மதீனா
2. ஷாபியீ - 150-204ஹி - மக்கா
3. அகமது - 164-241ஹி - ஈராக்
4. தவ்ரீ - 097-161ஹி - ஈரான்
5. அவ்சயீ - xxx-157ஹி - ஈராக்
6. இப்னு முபாரக் - xxx-181ஹி - ஈரான்
7. முகமதுபின் சலமா - xxx-167ஹி - ஈராக்
8. இப்னு உஜன்னா - 107-198ஹி - ஈரான்
9. இப்னு முஅம்மர் - xxx-191ஹி - ஏமன்

இமாம்களான ஹனபி, மாலிக், ஷாபியீ, ஹம்பலி போன்றோரில் ஹனபி எழுதிய ஹதீத் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்றும் தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் வரும் நூல்கள் அபூஹனீபா (ஹனபி) அவர்களால் எழுதப்பட்டவையல்ல என்றும், அவருக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும் என்றும், இந்நூல்களுக்கும் அபூஹனீபா அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது சொந்தக் கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி ஹனபி பெயரில் அறங்கேற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாய் பல ஹதீத் நூல்கள் உருவாகி பலவகையில் வேறுபாடுகளை உடைய இஸ்லாமியச் சட்டங்கள் மக்களிடையே அரங்கேறிக்கொண்டிருந்தன.

இவற்றுள் எது உண்மையில் முகம்மது நபி அவர்கள் சொன்னது அல்லது செய்தது என்றும் முகம்மது நபி அவர்கள் சொல்லாதது செய்யாதது என்றும் எவரும் அறியாதவர்களாய்க் குழம்பி இருந்தனர்.

இதனால் இம்மாதிரியான ஹதீதுகளைத் தொகுத்து அவற்றுள் சரியானவற்றை எடுத்துக்கொண்டு பிழையானவற்றை நீக்கவேண்டிய தேவை உருவானது.

சுன்னா வழி முஸ்லிம்கள் மட்டும் இச்சேவையில் ஈடுபட்டு அவர்களின் அறிவிற்கும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் அவர்களின் ஐயங்களுக்குப் பொருந்தவும் ஹதீதுகளை நீக்கியும் அங்கீகரித்தும் இன்றைய ஹதீது ஆறு நூல்களை உருவாக்கினர்.

ஹதீதுகள் அரபு மொழியிலேயே இருந்தன. முதன் முதலில் சஹீகுல் புகாரி என்ற நூல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது.

இது முகம்மது நபி இறந்து சுமார் 1400 வருடங்கள் கழித்து 1959ல்தான் நிகழ்ந்தது.

07 குர்-ஆனுக்கு இணை வைக்காதே

இறைவனுக்கு இணைவைப்பது கூடவே கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் மையப்புள்ளி.

எவனொருவன் இறைவனுக்கு இணைவைக்கிறானோ அவன் காபிர், அதாவது நம்பிக்கையற்ற நாத்திகன்.

இறைவன் ஒருவனே அவனுக்கு இணையானவன் யாருமில்லை என்றிருக்க இறைவனின் குர்-ஆனுக்கு இணைவைக்கிறார்கள் ஹதீதுகளை.

இது எத்தனை பெரிய இறை நம்பிக்கையற்ற செயல்.

நாத்திகத்தின் வேர் அறியாமையில் செழித்து வளர்கிறது.

எது குர்-ஆன் எது ஹதீத் எதை எப்படி அணுகுதல் வேண்டும் என்ற அறியாமைதான் மூட நம்பிக்கைகளே இல்லாத இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக முக்கிய காரணம்

06 அல்லாஹு எப்படி அது?

என்ன விந்தை
இது சகோ?

ஒரு
சந்தேகத்தைக் கொண்டு
உங்கள் வாழ்வின்
அத்தனைச் சந்தேகங்களையும்
தீர்த்துக்கொள்வீர்களா?

ஆகா
எப்படி அது?

உங்கள்
வாழ்க்கைப் பாதையில்
சந்தேகத்தின்
இல்லாத கைகளையே
இறுகப் பற்றிக்கொண்டு
மிக நிம்மதியாய்ப்
பயணம் போவீர்களா?

அடடா
எப்படி அது?

சந்தேகத்தால்
மட்டுமே ஆன
ஹதீதுகளில் ஏறிக்கொண்டு
வாழ்க்கை ஆற்றில்
அச்சமே இன்றி
சரசரவென்று இறங்குவீர்களா?

அல்லாஹு
எப்படி அது?

05 நீதான்... உன் இறைவனைத்தான்....

உன்னை அழிக்காதே
ஊரை அழிக்காதே
உலகை அழிக்காதே
என்றால் கேட்பாயா?

உன்னை உயர்த்து
ஊரை உயர்த்து
உலகை உயர்த்து
என்றால் ஏற்பாயா?

நீ கேட்பாய்
ஆனால் கேட்க மாட்டாய்

நீ ஏற்பாய்
ஆனால் ஏற்க மாட்டாய்

உன்னைக்
கேட்கவே கேட்க வைக்கவும்
ஏற்கவே ஏற்க வைக்கவும்
வந்த மார்க்கம்தான்
இஸ்லாம்

இஸ்லாம் மட்டுமா
உலகின்
அத்தனை மதங்களுமே
அதையே சொல்ல வந்தன

ஆனால் இஸ்லாம்
ஒருபடி மேலே சென்று
ஒவ்வொன்றையும்
செம்மையாய்
வகுத்துக் கொடுத்துவிட்டது

இதுவேயன்றி வேறேதும்
சூட்சுமம் இல்லை
மதங்களிடம்

நீ
வெட்டுவதும்
ஊரைச் சாய்ப்பதும்
உலகை
மரணக்கிடங்காய்க் குவிப்பதும்

உனக்காக
உன் மதத்துக்காக
உன் இறைவனுக்காக
என்றால்

நீ
வெட்டிச் சாய்ப்பது
வேறு எதையுமே அல்ல

உன்
மதத்தைத்தான்

உன்
இறைவனைத்தான்

04 சியா பிரிவினர்

கேள்வி: சியா பிரிவினர் பற்றியும் அவர்களது இறைவன் ஒருவனே பெரியவன் என்பது பற்றியும்...தங்கள் கருத்து என்ன.
Raphel Canada

சியா பிரிவினர் என்று சொல்லும்போதே சுன்னா பிரிவினர் என்று இன்னொரு பிரிவினர் வந்துவிடுகிறார்கள்.

இதில் யார் சரி யார் தவறு என்பதை ஒரு பக்கமாக ஒதுக்குவோம்.

முதலில் யார் இவர்கள்?

அண்ணல் நபியின் நண்பர்கள் வழி வந்தவர்கள் சுன்னா பிரிவினர் என்றும் நபியின் வம்சா வழியினர் சியா பிரினர் என்றும் சொல்கிறார்கள்.

முகம்மது நபியின் மருமகன் அலியை இறைத்தூதர் என்று கொண்டவர்களே சியா பிரிவினர் என்பது தவறான செய்தி.

எனக்கு இந்த இரண்டு பிரிவினரிடமும் நாட்டம் கிடையாது. ஏனெனில் இவர்கள் இருவருமே அண்ணல் நபியின் வழியினைப் பின்பற்றுபவர்கள் அல்லர்.
ஏனெனில், அண்ணல் நபி அவர்கள் கண்டது சமத்துவ, சகோதரத்துவ ஏற்றத்தாழ்வுகளே இல்லாத ஓர் அற்புத உலகம். ஒன்றே மக்கள் ஒருவனே இறைவன் என்ற அசைக்கமுடியாத கொள்கை. .

ஆனால் அதை அவர் மறைந்த உடனேயே அழித்துப் போட்டார்கள். காரணம் வேறொன்றுமல்ல அரசியல்தான்.

அண்ணல் நபிக்குப் பின் யார் ஆட்சி செய்வது நண்பரா உறவினரா என்ற பெரும் சண்டையில் பிரிந்தவர்களே இந்த இரு பிரிவினரும்.

ஒரு மதமோ, இனமோ, மொழியோ அரசியலாக்கப்படும்போது என்னாகும்? கலகம்தான் வன்முறைதான் நாசம்தான். அதுதவிர வேறென்ன நிகழ்ந்துவிடும்?

இதையா அண்ணல் நபிகள் விரும்பினார்கள் அல்லது இதையா இறைவன் கட்டளை இட்டான் என்று சிந்தித்திப் பார்க்க வேண்டும்.

அரசியல் நுழைந்தவுடனேயே ஆன்மீகம் ஆட்டம் கண்டுவிடுகிறது பின் அழிந்தே போய்விடுகிறது. பிறகெல்லாம் மதத்தின்மீதும் இறைவனின் மீதும் குறைசொல்லிக்கொண்டு ரத்த ஆறுதான் ஓடுகின்றன.

உலகமெல்லாம் இஸ்லாமியர்கள் என்று ஆகிவிட்டால் அப்படியே அன்பும் அமைதியும் கருணையும் நிறைந்ததாக இந்த பூமி மாறிவிடுமா? கலகங்களே நிகழாதா? அதாவது மதக் கலவரங்கள் வருமா வராதா? நிச்சயமாக வரும், இப்போதயதைவிட அதிகமாகவே வரும்.

ஏன் எப்படி என்று விளக்கத் தேவையே இல்லை.

பிரிவு பிரிவாகப் பல்கிப் பெருகுவார்கள் இஸ்லாமியர்கள்.

ஏன் என்றால் அவர்கள் தங்களின் ஒற்றை நூலாக குர்-ஆனைக் கொள்ள மாட்டார்கள். அப்படிக்கொண்டால் அதைக் கொண்டு அரசியல் செய்ய முடியாது, பிரிந்துபோகவே முடியாது. எல்லோரும் சமமானவர்களே என்று ஆகவேண்டும். அதைத்தான் குர்-ஆனும் சொல்கிறது அண்ணல் நபி போதித்தார்.

இந்து மதம் மட்டுமே இருந்த இந்தியாவில் இரு பிரிவினர்களாயினர் சிவா விஷ்ணு என்று கொன்றழித்தார்கள். காரணம் அதிலும் அரசியல்தான். கிருத்தவர்களும் இதையே செய்தார்கள் செய்கிறார்கள். காரணம் அரசியல்தான்.

ஆன்மிகவாதிகளுக்கு அரசியல் வன்மம் எப்படி வருகிறது? இல்லை ஆன்மிக வாதிகளுக்கு அரசியல் வருவதில்லை. அரசியல்வாதிகள்தான் ஆன்மிகத்தை ஆயுதமாய்ப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சியா - சுன்னா பிரிவினர் மட்டுமல்ல வேறு எந்தப் பிரிவினராய் இருந்தாலும் குர்-ஆனையும் அண்ணல்நபியையும் ஏற்றுக்கொண்டால் அதுதான் இஸ்லாம். மற்றதெல்லாம் இஸ்லாத்துக்கும் அண்ணல்நபிக்கும் மாறு செய்வதேயன்றி வேறில்லை.

குர்-ஆனை ஏற்காதவர்கள் பிரிவார்கள். குர்-ஆனை ஏற்பவர்கள் மீண்டும் பிரிவுகளை விட்டொழித்து இஸ்லாமியர் என்ற பெயரில் மீண்டும் இணைவார்கள்.

03 ஜிகாத்

ஜிகாத் என்பது
உன்னை
நீ
செதுக்கிக் கொள்ளும்
உட்பயணம்

உன்னை
நீ
செதுக்கிக் கொண்டால்
ஊர் செதுக்கப்படும்

ஊர்
செதுக்கப்பட்டால்
இந்த உலகம்
செதுக்கப்படும்

துளிகளால் ஆனதே
கடல்

துகள்களால் ஆனதே
உலகம்

நீதான்
துளி

நீதான்
துகள்

02. வரையப்பட்ட முகத்தில்..

அன்புச் சகோதர்களே

உங்களுக்கென்று
சர்வதேச அளவில்
ஒரு முகம்
வரையப்படுகிறது

அதில்
சங்கடமே இல்லாமல்
சிக்கிக்கொள்வதில்
வல்லவர்களாய் இருக்கிறீர்கள்
நீங்கள்

இஸ்லாம்
எங்கே செல்லும்?

01 இதுதான் இஸ்லாம்

ஓ.... மன்னா!

நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்

சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்

அட்டூழியங்கள்
அத்தனையையும்
அநாயாசமாய்ச்
செய்துகொண்டிருந்தோம்

உறவின் கயிறுகளை
அறித்தெறிந்தோம்

அயலாரைப்
படாதபாடு படுத்தினோம்

வலிமை கொண்டவர்கள்
வலிமை அற்றவர்களின் மீதேறி
சொகுசாகச் சவாரி செய்தோம்

எங்களில் இருந்து
ஓர் இறைத் தூதரை
இறைவன் எங்களுக்கு
அனுப்பித் தரும்வரை நாங்கள்
இப்படித்தான்
கேடுகெட்டு வாழ்ந்திருந்தோம்

எங்களிடம் அனுப்பட்ட தூதரின்
சத்திய வழி
நேர்மை
கண்ணியம்
பண்பு
தூய்மை
ஆகிய அனைத்தையும்
நாங்கள் நன்கறிவோம்

இறைவன் ஒருவனே என்றும்
அவனையே வணங்குதல் வேண்டும்
என்றும் அவர் கற்பித்தார்

கற்களையும் சிலைகளையும்
வணங்குதல்
வேண்டவே வேண்டாம்
என்றார்

சொல்லில் உண்மை
கொடுத்த வாக்கைக் காத்தல்
நம்பி ஒப்படைக்கப்பட்ட
பிறர் உடைமைக்கு துரோகம் இழையாமை
பெற்றோர் சுற்றத்தாரிடம்
அன்பும் கருணையும் கொண்டு நடத்தல்
குற்றம் புரிவதிலிருந்தும்
ரத்தம் சிந்துவதிலிருந்தும்
முழுவதும் விலகிக்கொள்ளுதல்
என்பனவற்றை
அழுத்தமாக எடுத்துரைத்தார்

தீமை கூடாது
பொய் கூடாது
திருட்டு கூடாது
பெண்களை இழித்தல் கூடாது
பொய்சாட்சி கூடாது
விபச்சாரம் கூடாது
என்றும் உறுதியாகக்
கட்டளை இட்டார்

ஒரே
இறைவனுக்காகவே
எங்கள் வணக்கங்கள் யாவும்
இருத்தல் வேண்டும் என்றும்

தொழுகை
நோன்பு
ஏழைவரி
ஆகியவற்றைக்
கடைபிடிக்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார்

நாங்கள்
அவரை நம்பினோம்

அவர் இறைவனிடமிருந்து
கொண்டுவந்த கட்டளைகளை
பின்பற்றி நடந்தோம்

ஆனால்
எங்கள் நாட்டவர்
எங்களுக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தனர்

எங்கள் நம்பிக்கையையும்
மார்க்கத்தையும்
நாங்கள் கைவிட வேண்டும் என்று
கடுமையாகத் துன்புறுத்தினர்

சிலை வணக்கத்திற்கும்
அழிவுப் பாதைக்குமே
நாங்கள் திரும்ப வேண்டும் என்று
எங்களைக் கட்டாயப்படுத்தினர்

உங்கள் நாட்டில்
அடைக்கலம் புகுந்துள்ளோம்

உங்கள் நீதியின்மீது
நம்பிக்கை கொண்டுள்ளோம்

எங்களைக்
கொடுமைக்குள்ளாக்கும்
எங்கள் எதிரிகளிடமிருந்து
எங்களைக் காப்பீர்கள் என்று
நம்புகின்றோம்

*

இதுதான் இஸ்லாம்

மக்கா நகர குறைசிகள் இஸ்லாத்தின் எதிர்ப்பு காரணமாக முஸ்லிம்களைப் பெருங்கொடுமைப் படுத்தியபோது அபிசீனியா நாட்டை நேகஸ் என்ற
கிருத்துவ மன்னர் ஆண்டுவந்தார்.

இறைத்தூதர் முகம்மது நபி கேட்டுக் கொண்டதன்படி சில முஸ்லிம்கள் அந்நாட்டுக்குள் அடைகலம் புகுந்தனர்.

இதை அறிந்த குறைசிகள் இஸ்லாத்தைப் பற்றி அபிசீனியா மன்னரிடம் அவதூறுகள் கூறி அடைக்கலம் புகுந்தவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக்
கேட்டனர்.

நெறி தவறாத அபிசீனியா மன்னர் முஸ்லிம்களை அழைத்து உங்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் என்றார்.

அன்று அடைக்கலம் தேடி அபிசீனியா வந்தவர்கள் கூறியதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

அவர்களின் தலைவன் ஜஃபர் அபுதாலிபு கூறியது இதுதான்.

இதைவிட ரத்தினச் சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி வேறு யாரும் சொல்லிவிட முடியாது.

பல மூடப்பழக்கங்களை இன்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களைத் தவறான வழியில் நடத்தும் சில தகாதவர்கள்தாம்.

அவர்களெல்லாம் பொருள், புகழ், அதிகாரம் தேடி தவறானவற்றைப் போதிப்பவர்களை விலக்கி, குர்-ஆனை முழுமையாகப் பொருள் உணர்ந்து வாசித்துத் தெளிவுபெற்றால் இஸ்லாத்திற்கு அதுவே பொற்காலம் ஆகும்.

(நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதியது)

01 வல்லரசாவதல்ல நல்லரசாவதே சுதந்திரம்


பொண்டாட்டி கை
நெய்யப்போல
அள்ளிக்கிறதில்லையாமே
சுதந்திரம்னா
அம்மாவோட பாசம்போல
பகிர்ந்துக்கறதாமே

சொந்த சுகத்தைவிட
அடுத்தவன் நகத்தையும்
கெடுக்காம வாழறதாமே

சாக்கடைக்கு
மூக்கைப் பொத்தறதைவிட
நாத்தத் தேக்கமே வராம
பாத்துக்கறதாமே

நூறு ரூவா லஞ்சம் கொடுத்து
குறுக்கால சாதிக்கும்போது
செல்லாத ஒத்தைச் காசா
நம்ம நாட்டை
நாமே
ஆக்கிடறோம்னு தெரியாதா

சாதிக்குத்
தலைவனிருக்கான்
மதத்துக்குத்
தலைவனிருக்கான்
கட்சிக்குத்
தலைவனிருக்கான்
இந்தியாவுக்குன்னு
யாரு இருக்கா

வல்லரசாவதல்ல
இந்தியா
நல்லரசாவதே
சுதந்திரம்