30 அன்புடன் இதயம்


விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

என்
கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன்
கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம்
இருவர் எண்ணங்களும்
அருகருகே
நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும் நிதர்சனம் தழுவ

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

’சரியா?’ -- ’நூறுசதம்’
’அழகா?’ -- ’அற்புதம்’
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

’சரியா?’ -- ’ம்ஹூம்’
’அழகா?’ -- ’மாற்று’
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த
உலக நம்பிக்கை அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள்
ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா


25 கவியரசனே கண்ணதாசனே
அக்டோபர் 17, 1981 கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அந்த நினைவுநாளில் அவர் நினைவாக நான் அவரின் பிறந்தநாளுக்காக எழுதிய ஒரு கவிதை


*

எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்

அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்

அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்

என்
இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

ஆனால் நீ இறந்த நாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது

ம்ம்ம்
எப்படி மறப்பது

அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..

அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்
எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து
உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

இதோ என் கண்ணீர்:

ஞானத் தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான் எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன் வலக்கர விரல்கள் ஆறு

ஆம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா
கடைசியில் இடும்
என் கையெழுத்தைத் தவிர
என் காதல் கடிதங்களில்
உன் கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என் உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன் செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ அழுதிருக்கமாட்டாய்

அந்த அகோர ராகத்திற்கும்
ஓர் அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

நீ
இருந்தது கொஞ்ச நாள்
இயற்றியது எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த என் அழுகை
உன் சமாதியைக் கரைத்து
உன்னை வெளிக்கொண்டு வருமா

என் இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

கண்ணதாசன்: ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981

22 தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ தமிழா
உன் தரமின்று தாழ்வதோ தமிழா

கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
உன் உயிரின் மொழியென்பது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்

தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும் சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும் இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
கொஞ்சிக் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா