தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது இறைவனுக்கு இணை வைப்பதா?
#அன்புடன்#இஸ்லாம்

கொடியைத் தொழுது துவாச் செய்யாதபோது, அது கூடாததாகாது.

தாயை மதிக்கிறோம்
தந்தையை மதிக்கிறோம்
தாய் மண்ணை மதிக்கிறோம்
தாய் நாட்டை மதிக்கிறோம்
தாய் மொழியை மதிக்கிறோம்
ஆசிரியர்களை மதிக்கிறோம்
தலைவர்களை மதிக்கிறோம்

இப்படியாய் நாம் உயர்வாக எண்ணி மதிப்பவர்கள் அல்லது மதிக்கும் பொருட்கள் ஏராளம். அவையெல்லாம் இறைவன் ஆகாது/ஆகமாட்டான் ஒரு நல்ல முஸ்லிமிற்கு.

அதைத் தெளிவாக அறியாதவன் நல்ல முஸ்லிமும் அல்ல.

மதிக்க வேண்டியவற்றை மதிக்காமல் செல்வது நல்ல முஸ்லிமிற்கு அழகல்ல.

இமாமை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

ரசூலை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

என்ன சங்கடம் இருக்கிறது இதில்?

அன்புடன் புகாரி

*உருண்டைகள்*

உலகம்
உருண்டை

இந்த
வாழ்க்கையும்
உருண்டை

இயற்கையின்
இணையிலா நியதிப்படி
உலகம்
தட்டையாக இல்லாத போது
இந்த வாழ்க்கையும்
தட்டையாக இருக்க
வாய்ப்பே இல்லை

உலக உருண்டை
ஆதாரமே இல்லாத
வெற்றிடத்தில்
பிடிமானமே இல்லாமல்
சுற்றுகிறது

வாழ்க்கையும்
எந்த ஆதாரமும் இல்லாமல்
வெறுமையில்
பிடிமானமே இல்லாமல்
சுற்றுகிறது

ஒன்றை ஒன்று
ஈர்க்கும் ஈர்ப்பில்தான்
உலக உருண்டை
வீழ்ந்துவிடாமல் சுற்றுகிறது
தன்னைச்
சுற்றிச் சுற்றும்
உருண்டைகளையும்
வீழ்ந்துவிடாமல்
காக்கிறது

அவ்வண்ணமே
வாழ்க்கையும்
மாற்றமில்லாமல்

ஈர்ப்புதான் மையம்
ஈர்ப்புதாம் உலகம்
ஈர்ப்புதான் வாழ்க்கை

ஈர்க்காத
ஈர்க்கப்படாத
எதுவும்
வெற்றிடத்தில்
வெறுமையில்
சுற்றிச் சுற்றி
உலர்ந்து
மூச்சிருந்தபோதும்
மன மரணத்துள்
வீழ்ந்து மடிவே செய்யும்

அன்புடன் புகாரி


*கலைந்தார் கலைஞர்*

கலைந்தது
தங்கத் தமிழ்ச்சங்கம்

கலைந்தது
அரசியல் ஞானக்கூடம்

கலைந்தது
சாதுர்ய மறுமொழிக்கோட்டம்

கலைந்தது
போராட்டப் படைத்தளம்



*கலைந்தார் கலைஞர்*

சூரியனுக்கே
முகவரி தந்தவர்

சந்திரனையும்
எதிர்த்து நின்றவர்

கறுப்புக்கே
நிறம் வரைந்தவர்

கழகத்தோடு
உடன் பிறந்தவர்


*கலைந்தார் கலைஞர்*

எமனோடு
மல்யுத்தம் செய்தவர்

எமலோக
விருதுபல வென்றவர்

கலைந்தும்
கலையாத நிரந்தரர்

காலத்தால்
அழியாத மறத்தமிழர்


*கலைந்தார் கலைஞர்*

அன்புடன் புகாரி
20180807