டொராண்டோ தமிழ் இருக்கை
University of Toronto Chair in Tamil Studies
ஜூன் 25, 2018

Image may contain: 3 people, people smiling, people standing and suit

இன்று சரித்திரம் காணாத ஓர் அருமை நிகழ்ச்சி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இனிதாய் நடந்தேறியது. ஒரே மணி நேரத்தில் 600,000 கனடிய டாலர்களைத் தாண்டி மகத்தான வசூல். இதில் பாதிக்கும் மேல் நன்கொடை வழங்கியவர்கள் அமெரிக்காவிலிருந்து இதற்கென விமானத்தில் வந்திறங்கிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் எனும்போது மெய் சிலிர்த்தது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. அதை பெருவெற்றியுடன் திரட்டி நிறுவிய சூடு இன்னும் ஆறவில்லை. அந்தச் சூட்டோடு சூடாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அடுத்ததொரு தமிழ் இருக்கை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு 3 மில்லியன் கனடிய டாலர்கள் போதுமாம். அமெரிக்க டாலர்களில் கணக்கிட்டால் சுமார் 2.5 மில்லியன் டாலர்கள் போதும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் தலைவர் ஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் தொடங்கிவைத்த யோகமா இது என்று தெரியவில்லை. மின்னல் வேகத்தில் நன்கொடைகள்  'கொடை' (குடை)யின்றி நிற்கும் பெண்ணின் மீது விழும் மழையாகக் கொட்டிப் பொழிந்தன.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் சார்பாக ஜானகிராமன் 51,000 அமெரிக்க டாலர்களை (சுமார் 70,000 கனடிய டாலர்கள்) முதல் நன்கொடையாக வழங்கித் துவங்கிவைத்தார். பின் 50, 000, 25,000, 10,000 என்று பல்கிப் பெருகி வந்து குவிந்தன நன்கொடைகள்.

இரண்டு வருடங்களில் 3 மில்லியன் சேர்த்தால் போதும். 18 மாதங்களில் சேர்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள். போகின்ற போக்கைப் பார்த்தால் ஓரிரு மாதங்களிலேயே 3 மில்லியன் சேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் இன்னும் நன்கொடை வழங்கத் துவங்கவே இல்லை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே தமிழ் ஆர்வத்தோடு பயில அநேகம் பேர் இருக்கிறார்கள். மாணவ எண்ணிக்கை நிச்சயமாக ஹார்வர்ட் இருக்கையைக் காட்டிலும் பன்மடங்காய் அதிகரிக்கும் என்று நான் நம்புகின்றேன்.

தமிழக அரசிடமிருந்து வாழ்த்துச் செய்தி வேறு வந்தது. அடுத்து நன்கொடையும் வரக்கூடும்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் MP நேரில் வந்து வாழ்த்துச் செய்தி வழங்கினார். கனடிய அரசு நிதியுதவி செய்யுமா என்று தெரியவில்லை. தமிழுக்கென்று கனடிய அரசும் ஏதேனும் செய்யத்தானே வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

எனக்குள் சற்றே கவிதைச் சிறகுகள் படபடத்தன. அப்படியே எழுதி வைக்கிறேன் ஆனந்தத்தோடு கீழே:

*

உலகெலாம் தமிழ் இருக்கை!

இருகை குவித்து நறுமுகை விரித்து
இருக்கை இருக்கை என்றார்கள்
காணுமிடமெலாம்

ஏதென எட்டிப்பார்த்தேன்
அட இறக்கை இறக்கை
எங்கும் இறக்கை என்றே
கண்டேன்

ஒவ்வொன்றாய் இறக்கைகள்
வெடித்துப் படபடக்க
அடடா
வான் கிழித்துப் பறக்கும்
வைரப் பறவையாய்த்
தமிழ்

தமிழ்த்தாய்க்கு
புலம்பெயர் ஏக்கப் பிள்ளைகள்
எடுத்துக் கட்டும் பொன்னாரங்கள்
அள்ளி வழங்கும் பொற்கிழிகள்

நீறு பூத்த நெருப்புத் தமிழ்
இங்கே பற்றி எரியுதடி
தங்கமே தங்கம்
என்று பாடத் தோன்றியது

*
உலகில்
ஏழாயிரம் எட்டாயிரமாய்
மொழிகள் மொழிகள்

இருந்தும்
ஏழே ஏழுமட்டுமே
அவற்றுள் செம்மொழிகள்

செம்மொழித் தேர்வின்
தகுதிகளோ பதினொன்று
அவற்றுள்
ஆறு மொழிகள் பெற்றது
ஏழோ எட்டோதாம்

அத்தனையும் பெற்றது
உலகில்
ஒரு மொழிதான்
ஒரே ஒரு மொழிதான்
அது நம் தமிழ் மொழிதான்
தமிழா தமிழா
அது நம் தமிழ் மொழிதான்

*
உலகின்
பழம்பெரும்
பல்கலைக் கழகங்களின்
இருக்கைகளுக்கு
ஏற்றப் பெருமை சேர்க்கும்
எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே

அன்புடன் புகாரி