வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் நம்மைக்
காரணமேயின்றி நேசிப்பார்கள்
சிலரோ
காரணமேயின்றி வெறுப்பார்கள்

மறுக்குமிடத்தில்
மன்றாடுவதல்ல
கொடுக்குமிடத்தில்
கொண்டாடுவதுதான்
வாழ்க்கை

ஆயினும்
நேசிப்பவர்களையும்
வெறுப்பவர்களையும்
ஒரே விழிகளால் காண்பதற்கு
நம் மனதை நாம்
பக்குவப்படுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்

நேசிப்பவர்களை மட்டுமே
நேசிக்காமல்
வெறுப்பவர்களையும்
நாம்
நேசிக்க வேண்டும்

வெறுப்பவர்களை வெறுத்துவிடாமல்
அமைதியாகவும் மௌனமாகவும்
புன்னகை உதிர்த்த வண்ணமுமாய்
நகரும்போது
வெறுத்தவர்களும் விரும்புபவர்களாய்
ஒருநாள் ஆவார்கள்

எல்லாவற்றையும்
பேசியே தீர்த்துவிடமுடியாது

சிலவற்றை
உணர்ந்தும் உணரவைத்தும்தான்
தீர்க்க வேண்டும்

அது காலத்தின்
சக்திவாய்ந்த கரங்களில்தான்
இருக்கிறது

இறைவனின்
அளவற்ற அருளில்தான்
இருக்கிறது
வாய்
திறந்தே கிடந்தால்
செவிகள்
செயலிழந்து கிடக்கும்
வாயடைத்துச்
செவி திறந்தால்
அன்பும் அறிவும்
வளரும்
செவியடைத்து
வாய் திறந்தால்
வம்பும் துன்பமும்
வளரும்
பொய்
சொல்பவர்களால் கூட
இல்லை

பொய்களை
ஆய்ந்தறியாமல்
அப்படியே
உண்மையென்று
நம்பும்
மூடர்களால்தான்

வீடு ஊர்
நாடு உலகம்
எல்லாம்
துண்டு துண்டாய்ச்
சிதைவுண்டு

ரத்தம் சொட்டிக்
கிடக்கின்றன

- அன்புடன் புகாரி
உறவுகளுக்குள்
நண்பர்களுக்குள்
பொறாமை கொள்ளாதே

பொறாமை
அன்பின் நேர் எதிரி

ஆரோக்கியத்தின்
துரோகி

பொறாமை
முதலில்
உன்னை அழிக்கும்
பின்
உறவை அழிக்கும்

பொறாமை
தன்னிடம் உள்ள
உயர்வைக் காணாமல்
பிறரிடம் உள்ள
அற்ப உயர்வையும் கண்டு
உயிரை
மாய்த்துக்கொள்ளும்

பொறாமையால்
குமைவதைத்
தடுத்துக்கொள்வது
சிலருக்குக் கடினம்தான்

ஆனால்
அந்தப் பொறாமையையே
திசைமாற்றி
எவர்மீது
பொறாமை கொண்டோமோ
அவரையே
முன் மாதிரியாய்
ஆசானாய்
வரித்துக்கொண்டு

உழைப்பை உயர்த்தி
உழைப்பை உயர்த்தி
உழைப்பை உயர்த்தி

பண்பை உயர்த்தி
அன்பை உயர்த்தி
அறிவை உயர்த்தி
திறமையை உயர்த்தி

மேலே மேலே
உயர்வதும் வளர்வதும்
எந்த மேன்மைக்கும்
மேன்மை தரும்
சொக்கத் தங்கச் செயல்

அதை விடுத்து
கால்வாரி விடுவதும்
பொய்கள் புனைவதும்
கபடங்கள் செய்வதும்
கதைகள் கட்டுவதும்

உன்னையும்
உன்னை
ஒட்டி இருப்பவர்களையும்
நரக நெருப்பின்
நடுமத்திக்குக்
கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்
அன்பு நெஞ்சே

அது
வேண்டாம்
அது
வேண்டாம்
விட்டுவிடு

- அன்புடன் புகாரி
>>>-----------------

அஸ்ஸலாமு அலைக்கும் பற்றித்
தெரியவில்லை

வணக்கமென்பது
பணிவோடுகூடிய
பாசத்துடன்கூடிய
உடன்பாடு

இது
மற்றெதுவோடும்
பொருந்துவதாகத் தெரியவில்லை

-பத்மனாபன் சிவதானுபிள்ளை

<<<-----------------

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
சாந்தியும் சமாதானமும் உண்டாகுக
என்று பொருள்

அதாவது
அன்பும் அமைதியும்
மன உடன்பாடும் நிறைக
என்று பொருள்

நான் சவுதி அரேபியாவில்
வாழ்ந்திருந்த நாளில்
ஒரு வாடிக்கையாளர் கடுங்கோபத்தில் வந்து
காட்டுக் கத்தாகக் கத்தத் தொடங்கினார்

அவர் முகத்தில் சினம் கூத்தாடியது

அடிப்பதற்கு எந்த நேரமும்
கையை ஓங்கிவிடுவார் என்று தோன்றியது

அல்லது கையில் இருக்கும்
கெட்டுப்போன தொலைபேசியை
எங்கள்மீது விட்டு எறிந்துவிடுவார்
என்று தோன்றியது

இதை
எப்படிச் சமாளிக்கப் போகிறோம்
என்ற கவலை பயமாய் மாறி
படுத்தி எடுத்தது

அப்போது அப்துல்லா கத்தானி என்கிற
எங்கள் மேலாளர் வந்தார்

அந்தக் கடுங் கோபக்கார்
வாய்க்கு வந்தபடி கத்தக் கத்த

அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்...

என்று
நிதானமான.... தெளிவான.... குரலில்
ஒரு நூறுமுறைக்குமேல்
மேலாளர் அப்துல்லா கத்தானி
சொல்லிக்கொண்டே இருந்தார்

வேறு எந்த பதிலும் சொல்லவும் இல்லை
பதிலுக்குக் கோபமாகத் திருப்பிக் கத்தவும் இல்லை

வந்தவரின் கோபம் படிப்படியாகத் தணிந்தது

அலைக்கும் அஸ்ஸலாம் என்று
வந்தவர் முதன்முறையாகச் சொன்னார்

அடுத்த நொடி இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்
கட்டியணைத்துக் கொண்டார்கள்

வந்தவரின் கோபத்திற்கு எதுகாரணமோ
அதைச் சரிசெய்து
இணக்கமாக அனுப்பி வைத்தார் அப்துல்லா கத்தானி

நான் அப்துல்லா கத்தானியிடம் கற்றுக்கொண்டது ஏராளம்

அதில் முக்கியமான ஒன்று இதுதான்

அன்புடன் புகாரி
அம்மா
என் அம்மா

ஓடி விளையாடிக்கொண்டிருந்த
உன்னை
தூக்கிக்கொண்டுவந்து
மணக்கோலத்தில்
உட்கார வைத்தபோது
உனக்கு வயது 13 - 1955

நீ
அக்காவைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 16 - 1958

நீ
என்னைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 18 - 1960

நீ
காலிதைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 20 - 1962

நீ
ஹாஜாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 22 - 1964

நீ
சகாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 24 - 1966

நீ
பகுருதீனைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 25 - 1967

நாற்பதுநாள்
பால்வாய்ப் பிள்ளையோடு
நீ வெள்ளைச்சேலை கட்டியபோது
உனக்கு வயது 25 - 1967

எதுவும்
தொடங்குவதற்கு முன்பே
எல்லாமும் முடித்துவிட்டது
உனக்கு

28 வயதிலும்கூட
திருமணம் செய்யாமல்
பெண்கள் இருக்கும்போது
25 வயதிலேயே
எல்லாக் கோப்பைகளையும்
வென்று முடித்துவிட்ட
வீராங்கணையாக
உன்னை நிற்க வைத்தக்
காலக் கோலம்
கொடும் அலங்கோலம்

அம்மா
இந்தச் சேலை கட்டுமா
வெள்ளை வேண்டாம்மா
என்று ஒவ்வொருநாளும்
உன் காலைக் கட்டிக்கொண்டு
அழுத எனக்கு
உன் நிலை தெரியவில்லை

வளர வளர
வேண்டாண்டா வேண்டாண்டா
என்று
தொடர்ந்து மறுக்கும் உன்னைக்
கெஞ்சிக் கெஞ்சி
செருப்பு அணிவித்தேன்
பட்டுச் சேலையும்
கட்ட வைத்தேன்

டாப்ஸும்
ட்ராக் பேண்டும்
நைட்டியும் கூட போடவைத்து
கேரளாவில் நடக்க வைத்தேன்

இது எதனாலும்
என் காயங்கள் எதுவும்
ஆறவே இல்லையே
அம்மா

உனக்கு
மகனாக மட்டும் இல்லாமல்
தந்தையாகவும் இருந்திருந்தால்
என்ன செய்திருப்பேன் என்று
எத்தனையோ முறை
சொல்லியழுது புலம்பியும்
அந்தக் காயம் மட்டும்
அப்படியேதான் இருக்கிறது
அம்மா

நீ
எதற்குமே கலங்காத
வீரமகள்
தைரியத்தின் கோட்டை

அம்மா
கை வலிக்குதும்மா என்றால்
’சரியாப் போயிடும்’
என்ற ஒரு வரியில்
பெரிய மருத்துவம் பார்க்கும்
மனோதத்துவ
மேதை

அம்மா சொல்லிட்டாங்க
சரியாப் போயிடும்
என்று நினைக்காத
பிஞ்சுக் குழந்தைகள்
இருக்க முடியுமா

எத்தனைதான்
உனக்கு
உடல் நலம் இல்லாமல்
போனாலும்
நீ பயந்ததே இல்லை
சரியாப் போயிடும்
என்றுதான்
உனக்கும் சொல்வாய்

ஆனால்
முதன் முறையாக
2015ல் என் கைகளைப்
பிடித்துக்கொண்டு
புகாரி
முடிஞ்சுபோச்சுடா என்றதும்
அந்த நொடி முதல்
நான் என்ன செய்தேன்
என்று எனக்கே தெரியாது

இறைவன்
மகா பெரியவன்
அவன் தன் அளவற்ற
கருணையைக் காட்டினான்

எழவே முடியாத
உன்னை
எழுந்து நடக்கவைத்தான்

அந்த
நீண்ட தெருவின்
முனையில் இருக்கும்
மருத்துவமனைவரைகூட
நடந்துவந்துவிட்டாய்

நான் உன்னிடம்
சொன்னேன்

அம்மா
நான் எல்லா டாக்டர்கிட்டயும்
நிறைய பேசிட்டேன்
நீ ரொம்ப நாள்
இருக்க மாட்டாயாம்
இன்னும் 30 வருடங்கள்தான்
உயிரோடு இருப்பாயம்
என்றேன்

நல்லா படிச்சவன்
டாக்டர்கிட்ட எல்லாம்
தாறுமாறா கேள்வி கேட்குறவன்
அவன் சொன்னா
சரியாத்தான் இருக்கும்
என்று உள்மனதில்
ஓரு நம்பிக்கை கொண்டாய்

அவ்ளோ வருசமெல்லாம்
இருக்க வேண்டாம் புகாரி
என்னை விட்டுடுங்கப்பா
என்றாய்

உனக்கு வேண்டாம்மா
ஆனால்
எங்களுக்கு வேண்டுமே
அமெரிக்காவில்
எத்தனை உயிர்கள்
உன்னைக் கண்டு
கட்டியணைத்து
கொண்டாடி வாழத்
துடித்துக்கொண்டிருக்கின்ற
கருணை செய் அம்மா
என்றேன்
கண்களில் கட்டும்
நீரை
துஆவாக மாற்றிக்கொண்டு

அப்படியே
ஹஜ்ஜுக்கும்
போயிடனும்டா தம்பி
என்றாய்

உன் அறை முழுவதும்
மெக்கா மெதினா புகைப்படங்களை ஒட்டி
இதைப் பார்த்துப் பார்த்துச் துஆ செய்மா
உன் உடல்நலம் தேறும்
நாம் எல்லோரும் போகலாம்
அல்லாஹ் அருள்வான்
என்றேன்

உன் கல்யாணத் தேதியைக்
கண்டுபிடித்து
ஹாஜா குடும்பத்தினரிடமும் சொல்லி
என் குடும்பமும் சேர்ந்து
தொடர்ந்து தொலைபேசியில்
நவம்பர் 10ல்
உனக்கு மணநாள் வாழ்த்துச்
சொன்னபோது
எத்தனை பூரித்தாய்
அம்மா

இதோ
அமெரிக்கத் தேர்தல்
முடிந்ததும்
உன் ஆசை நிறைவேறும்
அத்தனை பேரும் வருவார்கள்
நானும் கூடவே ஓடி வந்துவிடுவேன்
எல்லோரும் உன்னோடுதான்
அம்மா என்றதும்

அல்லாஹ்
ஆமீனாக்கித் தருவான்
என்று என்னை நீ நம்பினாய்

உன்னை ஏமாற்ற
அப்படி நான் சொல்லவில்லை
அம்மா

அதுதான் என் தொடர்
துஆவாக இருந்தது
அம்மா

துஆக்கள் நிறைவேறும்
காலம் இதோ கனிந்துவிட்டது
அம்மா

அல்லாஹ் ஆமீனாக்க
முடிவு செய்துவிட்டான்
அம்மா
அன்பே,

நீ மனிதர்களுக்கு மிகுந்த மரியாதை தரவேண்டும். மனிதர்களிடம் மிகுந்த அன்பு காட்டவேண்டும். இறைவன் ஒருவனுக்குத்தான் பயப்படவேண்டும்.

உன் தந்தையாக இருந்தாலும் அவரிடம் நீ மிகுந்த மரியாதையோடும் அன்போடுமே இருக்க வேண்டும் பயப்படத் தேவையே இல்லை.

அன்பும் மரியாதையும் தராமல் நீ ஒருவருக்குப் பயந்தால், அதன் பொருளே வேறு.

நீ செய்யும் செயல் இறைவனின் முன்னிலையில் சரியா பிழையா என்று ஒரு முறைக்கு இருமுறை யோசித்துக்கொள். நீ தவறு ஏதும் செய்யவில்லை என்று பட்டால் துணிந்து செய்.

ஆயினும் நம் அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. பின் எவராவது நீ செய்தது பிழை என்பதைத் தண்மையாகப் புரியவைத்தால் அடுத்த நொடியே மன்னிப்புக் கேட்டுவிடு. ஒரு நொடியும் தயங்கிவிடாதே.

இல்லாமல் செய்த நேர்மையான காரியத்திற்காக கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டோ கட்டாயப்படுத்தியோ மன்னிப்புக்கேட்க எவராவது வலுக்கட்டாயப்படுத்தினால், அப்போதும் நீ மன்னிப்புக் கேள். அதிலும் பிழை இல்லை.

ஏனெனில் மன்னிப்புக் கேட்பது என்பது உயர்வான செயல். அதற்கு நீ குற்றம் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நீ கேட்கும் மன்னிப்பு என்பது இல்லாதவர்களுக்குத் தாராளமாக அள்ளித் தரும் ஈகையைப் போன்றது. அது உன்னை உயர்வு படுத்தவே செய்யும்.


நீ கதாநாயகன்
ஆக வேண்டுமா

அது
மிகவும் சுலபம்

ஒரு
நல்லவனைத் தேடிப்பிடி
அவன்
வில்லன் வில்லன் என்று
பொய்கள் புனைந்துகொண்டே
இரு

கட்டுக்கதைகளால்
அவனைச் சுற்றிச் சுற்றி
இறுக்கிக் கட்டு

முதலில்
மக்கள்
நம்பமாட்டார்கள்தாம்

ஆனால்
பொய்
மகா சக்தி வாய்ந்தது

உண்மை
ஆமையென்றால்
பொய் காட்டு முயல்

கட்டுக்கதைகள்
வெகு
கவர்ச்சியானவை

உண்மைகள்
வேர்களைப் போல் என்றால்
கட்டுக்கதைகள்
வண்ண வண்ண மலர்கள்

பிறகென்ன
ஒரு நாள்
மெல்ல மெல்ல
நல்லவன்
வில்லனாகத்
தெரியத் தொடங்குவான்

அதுதான்
சமயம் என்று
நல்லவனின் உணர்வுகளை
உசுப்பேற்றிவிடு

அவன்
கொதித்துக் குமுறுவான்

மக்கள்
கற்களைக்
கைகளில் எடுத்துவிடுவார்கள்

வழியற்ற நல்லவன்
அழுவான் புலம்புவான்
ஆனால்
கேட்க ஒருவரும்
இருக்க மாட்டார்கள்

வெறுத்து
காட்டுக் கத்து கத்துவான்

பின் வழியற்று
விலகி விலகி ஓடி ஒளிவான்

ஆனாலும்
மக்கள் நல்லவர்கள்
விரட்டி விரட்டி
அடிப்பார்கள்

தர்ம அடி
கொடுப்பதென்றால்
மக்களுக்குக்
கொள்ளைப் பிரியம்

சொந்த
கோப தாபங்களை எல்லாம்
கூட்டி வைத்து
வேக வேகமாய்க்
கல்லெறிந்து
ஆத்திரங்களைத்
தீர்த்துக்கொள்வார்கள்

ஆக
வெற்றிகரமாய்
கற்கள் வீசுவதற்கு
வில்லன்
கிடைத்துவிட்டான்

பிறகென்ன
இனி
நீதானே கதாநாயகன்

சாத்தான்
இருந்தால்தான் இறைவன்
இருக்க முடியும் என்ற
கேடுகெட்ட எண்ணமுள்ள
இந்த உலகை
விருப்பம்போல் வளைப்பது
சாத்தானாகிய உனக்குச்
சுலபமோ சுலபம்

- அன்புடன் புகாரி

அன்பு என்பது
மரியாதை

ஒருவரை
மரியாதையோடு அழைக்கும்போது
அதில் அன்பு
பேரொளியாய்த் தெரியும்

உரிய மரியாதையைத் தராமல்
கட்டிப் பிடித்துக் கைகுலுக்கினாலும்
குண்டுவைத்துத் தகர்த்த
கட்டிடத்தைப் போல
அன்பு அங்கே
தூள் தூளாகிக் கிடக்கிறது

மரியாதை
என்பது
மகத்தான
அன்பு

ஒருவன்
கோபத்தில் கொதிக்கும்போது
வாங்க போங்கவைக்
குழிதோண்டிப் புதைத்துவிட்டு
வா போ என்று தொடங்கி
வாடா போடா என்றுகூட
தரமிழந்து கத்துவான்

மீண்டும்
அன்பு பொங்கும்போது
மன்னித்து
வாங்க போங்க என்று
உயர்ந்து நிற்பான்

ஆம்
மரியாதை என்பது
மகத்தான அன்பு
மனிதப் பண்பு
உறவுகளுக்கிடையே
புரிந்துணர்விருந்தால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்

ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ளாவிட்டால்
சண்டை சச்சரவுகள்
வளரவே செய்யும்

ஆனால்
விட்டுத்தள்ளு என்ற
உயர்ந்த மனம் இருந்தால்
மீண்டும் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்

புரிந்துணர்வு
மற்றும்
விட்டுத்தள்ளு குணம்
ஆகிய
இரண்டுமே இருந்தால்
சொல்லவும் வேண்டுமா

எவரேனும்
பிறர் செய்த
தீங்கினைப் பொறுத்து
மன்னித்து விட்டால்
உறுதியாக அதுவே
உயர்ந்த மனவீரம் கொண்ட
செயலாகும் (குரான் 42:43)

பழிவாங்கும்
சக்தி பெற்றிருந்தும்
மன்னித்துவிடுபவரே
இறைவனின்
மிகுந்த நேசத்திற்குாியவர் (நபிமொழி)

எதிர்பார்ப்புகளே இல்லாமல்
எந்த உறவுகளும் இல்லை
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்போது
வெறுப்பு வளர்வது இயல்பு

வெறுப்பைக் கட்டுக்குள் வைத்து
அதை வெகுவிரைவில்
வெளியேற்றத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை வசப்படும்

கோபத்தைத் தூரத்தில் நிறுத்தி
அது வரும்போதெல்லாம்
வார்த்தைகளை
ஒளித்துக்கொள்பவனின்
வாழ்க்கைதான்
மகத்தான வாழ்க்கை

நின்றுகொண்டிருக்கும்போது
கோபம் வந்தால்
உட்கார்ந்துவிடுங்கள்
உட்கார்ந்தும் தீரவில்லையென்றால்
படுத்துக்கொள்ளுங்கள் (நபிமொழி)

இறைவன்மீது அச்சமுடையோர்
கோபத்தை அடக்கிக் கொள்வர்
மனிதர்களின் பிழைகளை
மன்னிப்போராய் இருப்பர்
அவர்களையே இறைவன்
நேசிக்கின்றான் (குரான் 3:134)

தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே
நாவினாற் சுட்டவடு (குறள்)

எப்பொருள்
யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள்)

இன்னா
செய்தாரை ஒருத்தல்
அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள்)

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பும் அமைதியும் நிறைக⁠⁠⁠⁠
மரணம்
மன்னிக்கும் மகா மனதை
உங்களுக்குத் தருகிறது

மரணித்தவர்
உங்களை மன்னித்துவிடவும்
செய்கிறது

இறைவனிடம் சென்றவர்
மனிதர்களை
மன்னிப்பவராய் ஆனதில்
ஆச்சரியம் ஏதுமில்லை

எப்போதும்
துவாக்களோடு இருங்கள்

துயரில் இருப்பவர்கள்
தனிமையில் இருக்காதீர்கள்

அன்பு நிறைந்த நெஞ்சு
வெடித்துச் சிதறும்
பஞ்சு

இறைவனிடம்
மன்னிப்புக் கேட்பது
பரிசுத்த நிம்மதிக்கான
கதவுகளைத் திறப்பது

மனதில் இருக்கும் மனிதத்தை
நன்னீரூற்றி வாழவைப்பது
தீக்குச்சியாய் இருப்பது
எளிது
தீயணைப்புப் படையாய் இருப்பதோ
கடினம்

தீக்குச்சி தன் தலையில்
கொல்லி நெருப்பின்
கனத்தோடு மட்டுமே
இருக்கிறது

அந்தத் தலைக்கனம்
உரசும்போதெல்லாம்
பற்றி எரியும் தீயைக் கண்டு
அது
கைகொட்டி மகிழ்ந்தாலும்

உண்மையில்
அந்தத் தீக்குச்சியும்கூட
அதில்
கருகிப் போய்தான்
வீழ்கிறது என்பதை
அது
அறியாமல்தான் இருக்கிறது

தனக்கான பாதிப்பையும்
பொருட்படுத்தாத
தீயணைப்புச் சேவை என்பதோ

அமைதிக்கும்
வன்முறையற்ற வாழ்க்கைக்கும்
உத்திரவாதம் தருகிறது

உறவுகளையும் உயிர்களையும்
காக்கிறது

நியாயத்தைத்
தொட்டுத் தடவி
கோபுரத்தில் ஏற்றி வைத்து
பெருமை கொள்கிறது