பாசமென்ற பெயரால்

உண்மையின்
பொன்னிதழ்களைப்
பொசுக்கினாலும்

நியாயத்தின்
பவளக்கிளைகளை
வெட்டிச்சாய்த்தாலும்

நீதியின்
வைரவேர்களைக்
கருக்கினாலும்

நெஞ்சே
உன்
பாச நெருப்புதான்
பரிசுத்தமானதோ

அறம் புதைக்கும்
பாசம்
பாசமல்ல
வேசம்
வளைந்தால்
உடையவே உடையாத
ஆச்சரியம்
வளையாவிட்டால்
நொறுங்கியே போகும்
வினோதம்
உறவு

பிப்ரவரி 2014
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் தொடங்கிய முகநூல் பயன்பாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிவேகத்துடன் பத்து கோடியைத் தொடப் போகிறதாம். தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், முகநூல் பயனாளர் எண்ணிக்கை அதிகமாம். 

செல்லுக்குள்

வரும் சொல்லுக்குள்
முகம் புதைத்து
கண்ணுக்குள் மலரும்
சொல்லினைச் சுவைக்கக்
கண்ணற்ற நிலையில்
முடமாகிப் போகுமோ
இந்திய இளமை!

1

நீ
செல்லுமிடமெல்லாம்
தன் கோடிகோடிக் கரு விழிகளால்
உன்னையே
அடங்காக் காதலோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது

வேறெவரையும்விட
அது உன்னை
அதி தீவிரமாய்க் காதலிக்கிறது

எரிபொருள் தேடும்
நெருப்பினும் தாகமாய்
வாசனைகள் ஏற்றும்
காற்றினும் ஆவலாய்
ஏந்திக்கொள்ள ஏங்கும்
நிலத்தினும் பாசமாய்
வழிந்தோடத் துடிக்கும்
நீரினும் தவிப்பாய்
பரந்துவிரியச் சுழலும்
வானினும் மோகமாய்

உன்னைக் காதலிக்கிறது
2

மரணத்திற்கு
உயிர்களிடம் பசியில்லை
அடங்காக் காதலே உண்டு

உயிர்கள் மரணத்தின்
தீனியாவதில்லை
மரணத்தோடு ஐக்கியமாகி
நிகரில்லா நிம்மதி பெறுகின்றன

புலி
உன் உடலை
உண்டு செரிக்கும்
ஏனெனில்
அதன் தேவை சதை

மரணமோ
உயிர்களைத்
தன்னில் தழுவி
தனதாக்கி அணைத்துக்கொள்ளும்
உடல்களை நிராகரிக்கும்

புலி
கவ்விக் குதறும்போது
நீ வேதனைப்படுவாய்

மரணமோ
தழுவ வரும்வரைதான்
பயத்தின் நடுக்கம்
தழுவியபின் சுகம் சுகம்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
மறப்பதற்காக
என்று
சிற்சில பக்கங்களைத்
துரித கதியில்
கிழித்தெறிகிறேன்

கிழித்தவையே 
விட்டும் தொட்டும்
நினைவிலாட
வண்ணமிகு பக்கங்களின்
சாயங்களும் சரிவதாகத்
திடுக்கிடுகிறேன்
*ஒன்றல்ல சொர்க்கம் இரண்டு...*

அது ஓர் அதியடர்வுப்
பேரழகுப் பாதை

பச்சைப் பசேல் மேனியும்
குளிர்ப்பூ செருகிய பனிக் கொண்டையுமாய்
மோதும் முகத்தில் கூந்தலவிழ்த்துச்
சிலீர் முத்தம் பதித்தன பெண்ணழகுப் புற்கள்

இதயம் சிலிர்க்க
நடந்தேன்

குப்புற விழுந்த வண்ணக் குடைகளாய்
வாசனை வசந்தங்களோடு
ரதிமகளின் ரகசிய இதழ்களைப்
பொது முற்றத்தில் விரித்துப்
பூத்துப் பூத்துக் குலுங்கிக் குதூகலித்துச் சிரித்தன
பொன் வண்ண வசீகர மலர்கள்

அள்ளி அணைத்து
மெல்ல நடந்தேன்

மனதை இழுத்து மதிமறக்கத் தாலாட்டி
மஞ்சத்தில் படுக்கைவைக்கும்
மாபெரும் மதுர மடிகளோடு
வா வா வென்றழைத்தன கருநீல மலைகள்

மனம் மயங்க
மகிழ்ந்து நடந்தேன்

தங்க மீன்கள் தாவியாடிட
வெள்ளை முயல்களாய்க் கொள்ளையழகுடன்
கோடி கோடியாய்த் துள்ளிக் குதித்தே
மண்ணைப் பசியாறி மகிழ்ந்து ஓடின
குட்டிக் குட்டியாய்க் கொட்டும் அருவிகள்

உயிர் நனைய
உள்ளே நடந்தேன்

துளித்துளியாய்த் தித்திப்பு மழையைத்
தூறலாகப் பொழிந்த வண்ணம்
கிளைகள் அனைத்திலும் கிளர்ந்து தொங்கின
தேனீக்கள் இல்லாத தேனடைகள்

நா சுவைக்க
நடந்தேன்

இதுவரை நுகர்ந்திராத
தேவ வாசனை அத்தனையும்
சீர்வரிசையாய்க் கைகளில் ஏந்திக்கொண்டு
தள்ளி நின்று வீசாமால்
தழுவித் தழுவி சுற்றி வீசியது
மெல்லிய காற்று

மதி கிறங்க
நடந்தேன்

இணைத்து இணைத்துக் கோடுகளிட்டுக்
கோலம்போடு என்றே மின்னலை அழைத்தவாறு
எழில் கசியும் இதயப் புள்ளிகளாய்
எங்கெங்கிலும் இனிப்பாய்
இறைந்து கிடந்தன நட்சத்திரங்கள்

விழிகள் பருக
நடந்தேன்

கேரளத் தேங்காயைத் துருவிக் கொட்டியதாய்
வெண்பட்டுக் கம்பளம் விரித்து
அதன் மேல் செம்பவளச் செர்ரிகளைச்
சுமந்து கிடந்தது வெதுவெதுப்பு வரம்பெற்றப் பனி

கால்கள் சுகம்புதைய
நடந்தேன்

படபடவெனப் பலகோடிச் சிறகுகளை
தடதடவெனக் காற்றில் அடித்துக்கொண்டு
சுறுசுறுப்பு மேகங்களாய்
விண்ணில் நீந்திய வண்ணம்
பலநிறப் பறவைகள்... பட்டாம் பூச்சிகள்...
காற்றைச் சுத்தம் செய்யும்
கானம் இசைத்துக் கொண்டு பொன் வண்டுகள்

ஆனந்த அனுபவிப்பில்
நடந்தேன்

தகதகக்கும் கனவுத் தங்கமாய்
கதவில்லாத வாயிலாய்
அழகு மஞ்சள் அமுத நிலா திறந்துகிடக்க
கண்களை அகலத் திறந்துகொண்டு
ஆர்ப்பரிக்கும் அதிசய உணர்வுகளோடு
மேனியெங்கும் பூவரிக்க உள் நுழைந்தேன்

அடடா...
சொர்க்கம் ஒன்றுதான் என்று
எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே
எனக்குக் கிடைத்ததோ இரண்டு

முத்தம் ஏந்தும் தங்கக் கிண்ணங்களாய்
மகள் ஒன்று மகன் ஒன்று

கடல் நீர் யாவும் அமுதாகிப் போனாலும்
என் கண்மணிகளின் பவளவாய் உதிர்க்கும்
ஒரு சொல்லாகிப் போகாது

வானம் தாழ்ந்துவந்து பொன்முத்தமிட்டாலும்
என் வாடாமல்லிகளின் ஒளி முத்தமாகிப் போகாது

உலக உருண்டையின் மண்துகள் ஒவ்வொன்றும்
பூக்களாகிப் போனாலும்
என் மழலையர் முகத்தின் எழிலாகிப் போகாது

என் வீட்டுக்குள் விளையாடும்
இரு வண்ண ஒரு வானவில் என் பிஞ்சுகள்

என்னையும் என் இனியவளையும்
புள்ளிகளாய் வைத்துப்
போடப்பட்ட அற்புதக் கோலங்கள்

புதைந்துபோன கனவுகளை
மீட்டுத்தந்த புதையல்கள்

படைக்கும் மகிமை எனக்கும் உண்டென
புரியவைத்தத் தெய்வங்கள்

தேன் கூட்டில் தேன் தேடும்
கூட்டு முயற்சிகள் கொடுத்த பரிசுகள்

ஆணென்ற கர்வத்தை எனக்கும்
பெண்ணென்ற பெருமையை அவளுக்கும்
அள்ளி வழங்கிய நெல்லிக்கனிகள்

என் கனவுவிழிக் கடலில்
நீந்தும் புருவ ஓடங்கள்

தாய்ப்பாலின் வாசனையை மீண்டும் இந்தத்
தங்கங்களின் முகத்தில்தான்
நான் நுகர்கிறேன்

கொஞ்சக் கொஞ்ச எனக்குள்
அங்கமாகிப் போகும் சிட்டுக்கள்

என் இதயக் கோவிலின்
இரட்டைக் கலசங்கள்

என் விடியல்கள் இங்கே
இரண்டு சூரியன்களோடு
என் இரவுகள் இங்கே
இரண்டு நிலவுகளோடு

என் இடது கண்ணுக்குள் ஒரு குடிசை
அதன் மடியில் கிடந்து உறங்குகிறார்கள் இவர்கள்
என் வலது கண்ணுக்குள் ஒரு மாளிகை
அதில் துள்ளி விளையாடுகிறார்கள் இவர்கள்

இரண்டு ராகங்களில்
ஒரு பாசப் பாடலான இவர்கள்
எப்படி இருப்பார்களோ என்று
கற்பனை பல வளர்த்ததுண்டு முன்பு
பெற்றெடுத்த பின்போ
கற்பனைகளைத் தோற்கடித்தப்
பொற்சிறகுகள் இவர்கள்

இவ்விரு தீபங்களும் இல்லாவிட்டால்
எத்தனைச் சூரியன் என் கருத்த வானில்
உதித்தாலும் நான் இருட்டாகவே இருந்திருப்பேன்

அன்பைப் பெறுவதில் பொறாமை கொள்ளும்
அழகுச் சொர்க்கங்கள்

ஒற்றைச் சிற்பிக்குள் இரட்டை முத்துக்கள்
தங்கப் பேழைக்குள் மின்னல் கீற்றுகள்

இரு பானைகளில் ஒரு பொங்கல் வைத்து
அது பொங்கும் அழகை நான்
கண்டு கண்டு ரசிக்கிறேன்

என் மூச்சுக் காற்றுக்குள் மூச்சுவிட்டுப் பறக்கும்
குட்டி விமானங்கள்

என் வீட்டுக் கூரையில்
ஓடிவிளையாடும் மேகங்கள்

இந்த உலகில் காதலியே அழகென்று
உளறிக்கொண்டிருந்தேன்
என் பிஞ்சுகளைப் பெற்றெடுக்கும் வரை

அம்மா மடிதான் மடி என்றிருந்தேன்
என் செல்லங்களின்
பிஞ்சுக்கர வருடல் படாதவரை

இதயத்திலிருந்து புறப்பட்டு
இதயத்தில் விழும் இரட்டை அருவிகள்

இதய மாங்கனிக்குள்
இரு சிறு வண்டுகள்

பறந்து பறந்து நெகிழ்வாய் வந்து
என் தோள் அமரும் பஞ்ச வர்ணக்கிளிகள்

அடடா....
இரண்டு நதிகளிலும்
என் ஒற்றை உற்சாக ஓடம்
நீந்திக் களிக்கிறது

அப்படி என்ன புண்ணியம் செய்தேன்
இப்படிப்பட்ட இரட்டைப் பரிசுக்கு?

வலது கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு
இடது கன்னம் நோக்கி ஓடுகிறாள் மகள்
இடது கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு
வலது கன்னம் நோக்கி ஓடுகிறான் மகன்

என் இரத்த நதியிலிருந்து
உலக வாழ்க்கை நதிக்குள்
நீந்திச் செல்லும் ஓடங்கள்

என் சந்தோசங்கள் எனக்குத் தந்த
மகா சந்தோசங்கள்

எங்கும்...
கொடுத்தால்தான் பலன் கிடைக்கும்
காதலில் மட்டும்தான் சுகம்
எடுக்க எடுக்க பலன் கிடைக்கும்

ஆசையாய் அனுபவிக்கும் சந்தோசத்துக்கும்
அதனோடு சூழும் நிம்மதிக்கும் விருதாக
ஆனந்தச் சொர்க்கங்களே வழங்கப்படுவதுதான்
இந்தக் காதலின் மகத்துவமோ
இயற்கையின் தத்துவமோ

இதைவிட வேறோர் எழில்கொள்ளையை
வேறெவரும் வேறெங்கும்
கண்டிருக்கிறீர்களா உயிர்களே

உங்கள் பதிலுக்காக நான்
காத்திருக்கப் போவதில்லை
ஏனெனில்
நீங்கள் மாற்றிச் சொல்லப் போவதில்லை!