வன்முறையாளர்கள் மனிதர்கள் இல்லை

மனிதர்கள் மட்டுமே ஓர் இனத்தில் இருக்கமுடியும்

மனிதர்கள் மட்டுமே ஒரு மதத்தில் இருக்க முடியும்

மனிதர்கள் மட்டுமே ஒரு சாதியில் இருக்கமுடியும்

வன்முறையாளர்கள் மனிதர்கள் இல்லை

அன்புடன் புகாரி


உன் மௌனம்

 

மௌனம், அது விவரிக்கவே முடியாத ஒரு சொல்.  அது எதைச் சொல்லும் என்று சற்றே சிந்திக்கத் தொடங்கினால், அது காடுகொள்ளாப் பூக்களாய்க் பூத்தவண்ணம் இருக்கும், கண்டு முடியாத பேரண்டக் கோள்களாய்க் கூடிக்கொண்டே போகும், ஊற்றி முடியாத நயாகாராவாய்க் கொட்டிக்கொண்டே இருக்கும், எண்ணி முடியாத எண்ணங்களாய் பெருகிப் பெருகி நம்மை மூழ்கடித்துக்கொண்டே இருக்கும்.

என்றால், மௌனத்தின் நீள அகலம்தான் என்ன?  இந்தப் பிரபஞ்சத்தின் நீள அகலம் எது வென்றுகூட ஓர் நாள் நாம் சொல்லிவிடலாம் ஆனால் மௌனம் சொல்லும் சேதிகளின்... உணர்வுகளின்... வாழ்க்கையின்... நீள அகலத்தை மட்டும் சொல்லிவிடவே முடியாது.

அதிலும் இந்தக் காதல் இருக்கிறதே காதல். அதில் நிலவும் மௌனத்தைவிடப் பெரியது அந்தக் காதலும் இல்லை, உயிர்க் காதலியும் இல்லை. ஆமாம் மௌனம் சூழ்ந்திருக்கும்போது எழுந்து நிற்கும் காதல் இருக்கிறதே அது சொல்லிச் சிவந்த எத்தனை உயர்வான காதலையும்விட பன்மடங்கு உயர்வானது. கைகளின் வளைவுகளில் கனிந்து கிடக்கும் எத்தனை அற்புதமான காதலியையும்விட அற்புதமானது.

அப்படியான மௌனம் படுத்தும் பாடு இருக்கிறதே அதைத் தாங்கிக்கொள்ள ஆயிரம் பல்லாயிரம் தேவர்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். உயிரை எடுக்கும் அந்த மௌனமே உயிரைத் தருவதாயும் நிலவும். அந்த மௌனம் கலைந்துவிட்டால்? எப்படி கலையும்?  ஒன்று சம்மதமாகிக் கைகூடும் அல்லது சருக்கி விழுந்து சருகாகும்.

ஆனால் அது சம்மதத்தையே தொட்டு சந்தோசத்தையே அள்ளிக் கொட்டினாலும், மௌனத்தில் தவித்துத் தவித்து ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒரு கோடி முறை பூத்துப் பூத்து சொர்க்க மணம் வீசிய அந்த விவரிக்க முடியாத ஆனந்த சுகத்தை இழந்ததாகவே ஆகிப்போகும்.

இங்கே ஒரு கவிஞன் தன் காதலியின் மௌனத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து வார்த்தைகளாய் வெடித்து ஒரு கவிதை எழுதுகிறான், வாருங்கள் வாசிக்கலாம்.


உன் மௌனம்
நித்தமும்
ஒரு புதுப் புத்தகசாலை

உன்
மௌனத்துக்கு
உரை வரையத் துவங்கித்தான் -

என்
தூரிகைக்குப்
பொற்சிறகுகள் வெடித்தன

என்
வெற்றுத்தாள்கள்
தங்கத்தாள்களாக்கப்பட்டு
வைர வைடூரியங்கள்
பதிக்கப்பட்டன

என்
கனாக்களுள்
இந்திர நந்தவனங்களத்தனையும்
நறுமணத்தைக் கொட்டிவிட்டு
விதவைகளாய்த் திரும்பின

அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா

என்
உறக்கத்தைத்
தின்று தீர்க்கும் பசிப்பற்களா

நிலவொளீ...
உனக்குத் தெரியுமா

மார்கழிப் பிஞ்சுப்புல்
வைகறைப் பொழுதுகளில்
பனிப் பன்னீர்க் குடங்களைக்
கர்வமாய்ச் சுமக்குமே

அப்படித்தான்
என்
உட்கிளியும்
உன் மௌனத்தைச் சுமக்கிறது

ஒருமுறை
என் உறங்கா விழிகளின்
இமைக்கதவுகள்
அடித்து விலகும்முன்
ஓராயிரம் முறை
உன்
மௌனத்தின் நினைவுகளாய்த்
துடித்து நெளிகிறது

இந்த உன்
மௌனம் கலைக்கப்படும்
பொற்பொழுது எப்பொழுது

உன்
பொல்லாத
மௌனத்தை இழுத்து
முடிவுரை சொல்லச்செய்யும்
திடமனமும் எனக்கில்லை

அடர்ந்து கொண்டே போகும்
அதன்
அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும்
உர உயிரும் எனக்கில்லை
உலகம்

 

எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் இதழில் வெளியான விதை இது. தமிழ்நாட்டின் மாநில அடையாளக் கவிதையாக ந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை இக்கவிதையைத் தேர்வு செய்து இந்தியில் மொழிபெயர்த்து வார்சிகி 86ல் வெளியிட்டது. இக்கவிதையை இந்தியில் மொழிபெயர்த்தவர்  டெல்லி பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜமுனா.

இருந்தும் ஒரு கவிதை நூல் வெளியிடும் எண்ணம் அன்று எனக்கு வரவே இல்லை. நானொன்றும் அத்தனை பெரிய கவிஞன் இல்லை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்வேன். தீபம் எஸ் திருமலை அவர்கள் என்மீது அன்புகொண்டு நூலின் தொகுப்பு, அச்சு, வெளியீடு ஆகிய எல்லாம் தானே செய்வதாகவும் நான் ஒப்புதல் தந்தால் மட்டும் போதும் என்றும் என்னை ஊக்கப்படுத்தினார். ஆனாலும் என் மனம் உடன்படவில்லை.

கனடா வந்துதான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. காரணம் இணையமும் ஈழத்தமிழர்களும்தான். இணையத்தில் என் கவிதைகளை வெளியிட்ட என். சொக்கனின் ’தினம் ஒரு கவிதை’, என்னை ஆஸ்தான கவிஞராய் அங்கீகரித்த தமிழ் உலகம் மின்குழுமம், என் கவிதைகளை நேசித்த அகத்தியர் மின்குழுமம் என்று பாலைவனத்தில் தவித்துக் காத்திருந்த என்னை கவிதைகளுக்குள்ளேயே வாழவைத்தப் பொற்காலத்தின் தொடக்கம் அது.

என் மேடைத் தமிழும் கவிதைகளும் நேசத்துக்குரியவனவாகிப் போக நான் கனடா வந்திறங்கிய தொடக்க காலத்தில் என்னை மேடைகள் பலவற்றிலும் பாசத்தோடு ஏற்றிய டொராண்டோ வாழ் ஈழத்தமிழர்கள் -குறிப்பாக உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம், மற்றும் கீதவாணி வானொலி.

என் பழைய கவிதைகள் சிலவற்றையும் புதிய கவிதைகள் சிலவற்றையும் கோத்து வெளிச்ச அழைப்புகள் என்ற என் முதல் கவிதை நூலை கனடாவில் வெளியிட்டேன். அந்நூலில் இரண்டாவது கவிதையாக இக்கவிதையைச் சேர்த்தேன்.


சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

விருந்தளியுங்கள்
உங்கள் அறை அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து


புலம்பெயர் வாழ்வு தேவைதானா?

நம்மூர் வாழ்க்கை மாட்டுவண்டி வாழ்க்கை
மாடிரண்டைப் பூட்டிவிட்டால்
ஓடிக்கொண்டே இருக்கும் வண்டி

கனடிய வாழ்வென்பதோ மிதிவண்டி வாழ்கை
உயிரழுந்த மிதிப்பதை நிறுத்தினால்
அந்நொடியே மரண மிதிபடுவோம்

உறங்கவும் பொழுதின்றி இருபணி முப்பணியென்று
செக்குப்பணி வாழ்க்கைதான் பலருக்கும் இங்கே

கிரடிட் கார்டு என்பதைத் 
தவறாக மொழி பெயர்க்காதீர்கள்
கடன் அட்டை என்பது பிழை
கடவுள் அட்டை என்பதே நிலை

படிக்கத்தானே அனுப்பினோம் மகனை
பள்ளிசேர்ந்த ஒராண்டுக்குள்
மகனே இல்லை என்றாகிவிட்டதே
மருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனானே

பெண் பிள்ளைகள் மட்டுமென்ன
ஆளுக்கு நாலு காதல் வீசி
எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்களே

அடடா
பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள்
கட்டி வைப்பதென்பது
நயாகராவை முந்தானையில்
முடிந்து வைப்பதாகவல்லவா இருக்கிறது

போதாதென்று
மூச்சுக் குழாய்களில் அடுக்கடுக்காய்
பிணவறைகள் கட்டியெழுப்பும்
குளிரோ கொடுமை

ஆக
குளிர் குதறிக் கிழிக்க
வேலை விழிகளுக்குள் விரலாட்ட
வருமானம் முகத்தில் கரிபூச
பிள்ளைகள் உயிரில் ஆணியடிக்க
இந்தப் புலம்பெயர் வாழ்வு
தேவைதானா என்ற கேள்வி
உயிரில் பற்றிய நெருப்புதான்
மறுப்பதற்கில்லை

ஆயினும் தமிழா
ஒரே ஒரு கேள்வி உன்னிடம்

பிறந்தமண்ணில்
தமிழ் ஈழம் மலரப்போவது நாளை
இன்றே மலர்ந்திருப்பது கனடாவில்
உண்மையா இல்லையா சொல்

உழைப்பிருந்தால்தானே பிழைப்பிருக்கும்
அயரா உழைப்பால் அந்தக் கடவுள் அட்டை
உன் கட்டைவிரலாகாதா

உன் வீட்டில் தமிழிருந்தால்
வீதியில் தடம்மாறுமா தமிழ்ப்பிள்ளை
தமிழ் வெறும் மொழியல்ல
தரமிகு பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்

புலம்பெயர் வாழ்வில்
மிகப்பெரும் பிழையென்று நான்
உறுதியாய்ச் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான்

ஊரில் என் விடலைப்பருவத்தில்
கவிதை கவியரங்கம் பட்டிமன்றம்
வருகின்றனவென்றால்
தமிழ் கேட்டு நெகிழ உருக
உள்ளமும் உயிரும் உச்சத்துக்கு உயர
கேளிக்கைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு
ஓடிச்சென்று செவி விரித்துக் காத்துக்கிடப்பேன்

எங்கே அந்த இளைஞர்கள் இங்கே?
இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வென்பது
புழுதிவாழ்வாகித்தானே போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
இந்த மேடைகள் அமைதல் வேண்டும்
அதுவே என் நயாகராத்தனமாக உயிராசை

நெஞ்சில் நெருப்பிருந்தால்
கொடும் பனியும் கொடிய குளிரும்
உன்னைக் கும்பிட்டுப் பணியாதா

எதையும் தாங்கும் இதயத் தமிழனை
குளிர் வவ்வால்கள்
கொன்றுபோடவும் முடியுமா?

என் முதற்பணி தேர்வில் இத்தாலிக்காரர் கேட்டார்
பனியிங்கே கொன்றெடுக்குமே
வாழத்தான் முடியுமா உன்னால்?

உன்னால் இயலுமெனில் என்னால் இயலாதா?
குரலுயர்த்திக் கேட்டேன் நொடியும் தாமதமின்றி
கையெழுத்தானது பணியொப்பந்தம்  
அப்பொழுதே மறுபேச்சின்றி

ஈழத்தமிழா
பிறந்த மண்ணை உயிர்முத்தமிட்டு
ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய
தாய் மண்ணைவிட்டு
விதி விரட்டிய திசைகளெங்கும்
சிதறியோடும் அவலத்துக்கு ஆளானாய் நீ

ஆனால்
வந்த இடம் கொடுவாசப் புதரில்லையே
அச்சு அசல் சொர்க்க பூமியல்லவா

லஞ்சம் ஊழல் சாதிவெறி மதவெறி
அழுகல் அரசியல் கற்பழிப்பு கிட்னிதிருட்டு என்று
தாய்மண்ணின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு
நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை

ஏற்றத்தை நோக்கியதொரு மாற்றமே புலம்பெயர்பு
புலம்பெயர்வின்றி சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
பாடினான் பாரதி
ஆனால் கனடாவுக்கும் ஊருக்குமே
இன்று பாலம் வந்துவிட்டதல்லவா
புலம்பெயர்வுகளைப் பூசைக்குரியதாய் ஆக்கிவிட்ட
ஆகாயப் பாலம்

அவலத்தையும் கண்ணீரையும் கருணையோடு துடைத்து
தாய்மடி விரித்துத் தந்த சுவனமல்லவா கனடியமண்

இருளும் உறங்கிப்போகும் இரவுகளில்
உறங்காத இருபத்துநாலு மணிநேர தமிழ் வானொலிகள்
தமிழ்த் தொலைக்காட்சிகள் தமிழ்ச் செய்தித்தாள்கள்
தமிழிலேயே நீதிகேட்கலாம் என்னும் நீதி மன்றங்கள்

'வருக வருக' என்று தமிழிலும் வரவேற்கும்
கனடா தேசக்கோபுரம்  

நம்மூரில்கூட அவசரப்பிரிவுக்கு
ஐசியூ என்றுதானே சொல்கிறார்கள்
கனடாவில் அழகு தமிழிலல்லவா எழுதியிருக்கிறார்கள்

நாள் தவறாமல் எங்கோ ஓர் அரங்கில்
ஜல் ஜல் சலங்கையொலி
கொட்டும் பனியிலும் தமிழ்த்தேன் தட்டேந்தி
முத்தமிழ் விழாக்கள்

கேட்கத் தவித்த தாய்மண் கவிஞர்கள்
பார்க்கத் தவித்த தமிழ்மண் கலைஞர்கள்
வாரந்தோறும் வந்து வந்து தமிழ்மண் மணத்தை
இதயத்தில் கொட்டிச் செல்கிறார்களே

நெஞ்சு திறந்துச் சொல்லுங்கள்
இரண்டாம் தாயகமா
கனடா முதலாம் தாயகமல்லவா
அன்பின் முதன்மைத் தாயகமல்லவா

அகதிகளாய் வாழாமல்
அசல் குடிமக்களாய் வாழும் பெருவாழ்வு
பெறுதற்கரிய பேறல்லவா

அடையாளம் தொலைத்து வீழும்
ஈனத் தமிழரை நான்
தமிழ் மண்ணிலும் காண்கிறேன்
புலம்பெயர் மண்ணிலும் காண்கிறேன்

எங்கே வாழ்கிறோம் என்பதல்ல
எப்படி வாழ்கிறோம் என்பதே
தமிழ் அடையாளத்தின் தாரக மந்திரம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழர் பண்பாடு

புலம்பெயரும் போது
விழுதுகளைத்தான் பரப்புகின்றோம்
நம் வேர்கள் பிறந்த மண்ணில்தான்
அழுத்தமாகக் கிடக்கின்றன

ஒரு பெண் பிறந்த வீடுவிட்டு
புகுந்த வீட்டிற்குப் புலம்பெயர்கிறாள்
அவள்தான் உன் தாய்
ஓர் உயிர் கர்ப்பப்பையிலிருந்து
பூமிக்குப் புலம்பெய்கிறது அதுதான் நீ

மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்தானாம்
உலகெலாம் புலம்பெயர்ந்தானாம்
யாவரும் புலம்பெயர்ந்தோரே என்று
சத்தியமே செய்கின்றன
சரித்திரமும் அறிவியலும்

பறவைகள் யாவும்
புலம்பெயர்ந்த வண்ணமாய் இருக்கின்றன
வாழ்விற்காகப் புலம்பெயர்வென்பது
இயற்கை வகுத்த நியதியல்லவா

தேம்பாவணி வீரமாமுனிவர்
தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்தார்
தன் பெயரைத் தமிழுக்குப் பெயர்த்தார்
தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டாற்றினார்

அன்னை தெரிசா புலம்பெயர்ந்தார்
அவரின் ஆத்மா
கருணைமிக்க அந்தப் புலம்பெயர்வில்தானே
வாழ்ந்து கொண்டிருக்கிறது

பிறநாட்டவர் நம்நாடு பெயர்ந்து
நம் வாழ்வை மொழியை பண்பாட்டை
உயர்த்தினால் போற்றலாம்
நாம் பிறநாடு சென்று அம் மண்ணை மக்களை
செழிக்கச் செய்தால் தூற்றுவதா

யுத்தம் ரத்தம் ஆயுதம் என்பன
வெறுக்க வேண்டிய நாசங்கள்
வாழ்க்கை வளமை வளர்ச்சி என்பன
புலம்பெயர்வின் பயணங்கள்

எல்லைக்கோடுகள்
உலகக் கேடுகள்

சிறு சிறு வட்டங்கள் மீதொரு
பெரு வட்டம் இடுவோம்
அண்டங்களையும் உள்ளடக்கிய
ஒற்றை வட்டமாய் நாம் வளர்வோம்

பஞ்சபூதங்களின் பணியே புலம்பெயர்வுகள்தாம்
தாமும் பெயர்ந்து ஒவ்வொன்றையும் பெயர்த்தி
காலங்கள்தோறும் இவ்வுலகை
புத்தம்புதி இயற்கைச் செழுமையாய்
வடிவமைத்துச் சுழலச் செய்கின்றன

நீர் தன் புலம் பெயராமல் உலகுக்கு மழையில்லை
பயிர் தன் புலம் பெயராமல் வயிற்றுக்குச் சோறில்லை
நதி தன் புலம்பெயராமல் கடல்சேர வழியில்லை

புலம்பெயரா மரங்கள்கூட
விதைகளைப் புலம்பெயர்க்கின்றன

காற்று புலம்பெயரும்போதுதான் மேலி சிலிர்க்கிறது
நெருப்பு புலம்பெயரும்போதுதான் உணவு விருந்தாகிறது
கோள்கள் புலம்பெயரும்போதுதான் நாள்கள் மலர்கின்றன

ஆதியில்
அனைத்துக் கண்டங்களும் ஒட்டிக்கிடந்தனவாம்
இன்றும்கூட கண்டங்கள் யாவும் 
ஆண்டுக்கு ஓரங்குலமேனும் புலம்பெயர்கின்றனவாம்

மண்ணின் புலம்பெயர்வுகள் இவ்வாறு
நிகழ்ந்த வண்ணமாய் இருக்க
மனிதப் புலம்பெயர்வு கூடாதென்றால்
அமெரிக்காவும் இல்லை கனடாவும் இல்லை

அமெரிக்கா கனடா மட்டுமல்ல
உலக நாடுகள் அனைத்துமே
புலம்பெயர்ந்தோரின் நாடுகள்தாம்

வானம் பேரறிவுச் சுரங்கம் 
அதிலுண்டோ எல்லைக்கோடுகள்
எந்த வானம் உங்கள் வானம்
எந்த நட்சத்திரம் உங்கள் நட்சத்திரம்

இந்த பூமி ஒருநாள்
வாழ வழியற்றதென மாறிப்போனால்
வேற்றுக் கோளுக்குப் புலம்பெயர
வெறியோடு நிற்பான் மனிதன்

அறிவியல் வளர்ச்சி
எல்லைக்கோடுகளைக் கேலிக்கோடுகளாக்கிவிட்டது
ஊடக வளர்ச்சி உலகைச் சிறு குடிலாக்கிவிட்டது

தொலைதொடர்பு வளர்ச்சி
நியூயார்க்கை பக்கத்து இருக்கையாக்கிவிட்டது.

இவையெல்லாம் ஆனபின்
புலம்பெயர்வு என்பதற்கான பொருள்தான் என்ன?

தாய் தாய்மொழி தாய்மண்
தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம் என்ற
அடிப்படை வேர்களோடு பிரபஞ்ச வெளிகளெங்கிலும்
கிளை பரப்புவதும் இலை விரிப்பதும்
கலாச்சாரக் கலப்புமலர் சொரிவதும்
சிறந்த பண்புகளை சூரிய ஒளியாய் உள்வாங்குவதும்
இயல்பானது அவசியமானது

அகிலமெங்கும் நிகழும் அயராப் புலம்பெயர்வுகளே
மனிதனையும் மனிதநேயத்தையும்
இமயத்தில் ஏற்றுகின்றன

அதிக அளவில் நிகழும் புலம்பெயர்வுகளால்
உலகம் என்னாகும்
எல்லா நிலமும் ஒன்றுதான் நமதுதான் என்றாகும்
எல்லா மக்களும் ஒருவர்தாம் உறவுதாம் என்றாகும்

இதைத்தானே அன்றே
சொல்லிப் போனான் சங்கத் தமிழன்
அது நிறைவேறும் காட்சி நிலைகள்தானே
இன்றைநாள் புலம்பெயர்வுகள்

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

பிப்ரவரி 16, 2008 கனடா எழுத்தாளர் இணையம் நடத்திய கவியரங்கம்