காவியம் இதுதானோ

சந்தனப் பேழை
சிந்தியதாலோ
வந்தது மாலை

அந்தச் செந்தேன் மலரில்
வண்டின் தழுவல்
தந்ததோ ராத்திரி

மன்மதக் கருவண்டு
தேனுண்டதாலோ
வெளுத்தது வானம்

அவள் நாணத்தை மொழியும்
தோழிகள்தாமோ
வைகறைப் பூவிதழ்கள்


பன்னீர்ப் பனியில்
பொன்முகம் நாணக்
குளிப்பவள் நிலவாளோ

அவள் பருவ மலர்தழுவி
மணக்கும் தென்றலில்
கூந்தல் உலர்வாளோ

மழைத்துளி மணிகளை
வழியெங்கும் தூவியே
முகிலவன் வருவானோ

அவன் மார்பினில் துயிலும்
மோகத்தில் நிலவாள்
மெல்லத் தவழ்ந்தாளோ

இது இந்திரன் நந்தவனம்
என்றும் இளமை மணங்கமழும்
பல யுகங்கள் கழிந்தாலும்
உயர் காதல் உயிர்வாழும்

மலைமான் இடையில்
அருவிகள் நழுவுது
காவியம் இதுதானோ

குமரி ரோசாப்பு நாணம்
இலைகளில் வழியுது
காதலன் வந்தானோ

கரைகளில் ஓவியம்
வரைந்திடும் அலைகள்
நதிகளின் தூரிகையோ

தினம் ஒரு கவிதை
பாடிடும் குயில்கள்
தேவனின் தூதுவரோ

என் இதயம் குளிர்காயும்
இந்த இயற்கை உயிர்காக்கும்
பெரும் சோகத்தில் தள்ளாடும்
எந்த நெஞ்சும் இளைப்பாறும்

உன்னையே நேசிக்கிறேன்

நீ சூரியன்
உன் ஒரே
ஒரு பார்வையில்
என் உயிர் பிரிந்து விடும்
எனினும் நான்
தினந்தினம் பிறவியெடுத்து
உன்னையே நேசிக்கிறேன்

கொடுத்துவிடு கொடுத்துவிடு

இதழ்களில் எழும்
தாறுமாறு சங்கீதம்
காதுகளை மூர்ச்சையாக்க

நரம்புகளில் கிளம்பும்
நாசகாரப் புயல்கள்
விழிகளைக் குறிவைத்து
வெறியோடு வீச

மூளைக்குள் நிலவும்
மூர்க்க அதிர்வுகள்
இதயக் குருவியை
மின்ராட்டினமேற்றி
சுற்றோ சுற்றென்று சுற்ற

இன்னும் எத்தனை நொடிகளடீ
நீடிக்கும் இவ்வுயிர் ?

கொடுத்துவிடு கொடுத்துவிடு
என் முதல் முத்தத்தை
**36 காலமெல்லாம் காதல்

அவளும் அவனும் அன்பான கணவன் மனைவி. அவர்களுக்கு இடையில் இருக்கும் காதல் வானவில்லைப்போல பல வர்ணங்கள் கொண்டது. சூழல் காரணமாக திடீரென்று தாக்கிய ஒரு துரோக வியாதி அவளைப் படுக்கையில் சாய்த்தது. சில மாதங்களாகியும் அதிலிருந்து மீளாத அவள் இனி மீளவே மாட்டோ மோ, தன் அன்புக் கணவனுக்குத் தானொரு சுமைதானோ, என்று துடித்துத் துடித்து கண்களின் கரைகளில் உப்புக் காய்ச்ச்சுகிறாள். வெளிரிய முகத்துடன் வாடிக்கிடக்கும் அந்த ரோஜாவை தன் மடியில் அள்ளி அணைத்துக் கொண்டு அவன் பாடுகிறான் விட்ட சொல்லைத் தொட்டெடுத்துப் பாடும் அந்தாதிப் பாடலாக:


ஈரக் கண்ணை மூடிக்கொண்டு
வாடி நிற்கும் வாழை
தூரம் இல்லை ஓடி வரும்
நீ மலரும் காலை

காலை முதல் காலை வரை
காதல் சொல்லும் ராகம்
வேளை வரும் பூக்கள் பூக்கும்
தேறும் உந்தன் தேகம்

தேகம் எங்கும் தேனைச் சிந்தும்
தோகை மயில் பெண்ணே
மேகம் போலே நீரைச் சிந்தி
வாடும் எந்தன் கண்ணே

கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
காலமெல்லாம் காதல்
கண்ணின்மணி கண்ணீர் இனி
வேண்டுவதேன் வாழ்வில்

35 காதல் கிழியுமோ

கருமுகில் கிழியலாம்
கடுமழை பொழியலாம்
மின்னல் கிழிக்க
வானம் கிழியுமோ

இருவிழி கிழியலாம்
விழிமழை பொழியலாம்
இன்னல் கிழிக்க
காதல் கிழியுமோ

ஒருவரையொருவர்
உயிரெனத் தழுவி
இருமனம் உருகி
ஒன்றென ஆனபின்

இருட்டுகள் எப்படி
உறவினைத் தீண்டும்
ஈரேழ் பிறப்பும்
ஒளியே வீசும்

அடைகாத்த முட்டைகளாலேயே...

அந்தரங்கமாய் விழும்
உன் விழிகளை அடைகாத்த
என் இதயப் புறா

உன் விழிகள் வெறும்
பொன் முடைகள்தாம்
என்றறிந்த கணத்தில்

அடைகாக்கும் சுகத்தினின்று
மீளவும் முடியாமல்
குஞ்சுவராது என்ற சோகத்தைத்
தாளவும் முடியாமல்

அடைகாத்த முட்டைகளாலேயே
அடைகாக்கப்பட்டு
ஆர்ப்பரிக்கும்
நினைவுக் குஞ்சுகளாய்
முடிவில்லாமல் பொறிந்துகொண்டே

காதல் எனப்படுவது

இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய
உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ
இல்லாமல்
சுவாரசியமாய்ப்
பின்னப்படும்
ஓர் உறுதியான
உணர்வுவலை

சந்தோசமே உயிர் மூச்சு

அவளுக்கும் அவனுக்கும்
இந்த உலகத்தைப் போல
சந்தோசமே உயிர் மூச்சு

ஆனால் அதற்கு
வழிசொல்லும் வரைபடங்கள் மட்டும்
அவர்களிடம் வேறு வேறு என்றால்
அவர்களுக்குள் ஏது பேச்சு
எல்லாமே தூரமாய்ப் போச்சு

அவளின்
வரைபடம் பார்த்தான் அவன்
நிலைகுலைந்த புருவத்தில்
நெருப்புப் பற்றிக்கொண்டது

அவனின்
வரைபடம் பார்த்தாள் அவள்
எழில் வடித்த விழி நழுவி
எரி அமிலத்துள் விழுந்து
துடிதுடித்தது

அவர்களின் இதயங்களில்
வெறுப்புப் பயிர்கள்
வரப்பு மீறி வளர்ந்தன


முதலில்
மௌன மர நிழல்களில்தான்
ஒதுங்கினார்கள்

பின் ஒரு தரங்கெட்ட நாளில்
மௌனக் கூடுகள் உடைந்து
வார்த்தைக் கழுகுகள்
வாய்கிழியக் கூவி வட்டமிட்டன

உள்ளங்கள் ஒருமிக்காத இடத்தில்
உறவுப் பசை ஒட்டுமா ?

பொருந்தாததொன்றே
பொருத்தமென்றானபின்
நிலைக்கும் பிணைப்பென்று
ஒன்றுண்டா ?

கிழக்கும் மேற்கும்
கைகோர்க்கின்றன என்றால்
வியப்பு நிலவலாம்
நிம்மதி நிலவுமா ?

பொய்யும் உண்மையும்
ஒரு முட்டை ஓட்டுக்குள்
உயிர்க் கருவாய் வாழுமா ?

வாழ்க்கைக்குள்
முரண்பாட்டு இடிகள் இறங்கும்
முரண்பாட்டுக்குள்
வாழ்க்கை மழை பொழியுமா ?

அன்பற்ற பாறைக்குள்
ஈரம் தேடுவதும்
நேசமற்ற நெஞ்சில்
பாசமனு தொடுப்பதும்
சுயநல மனதுக்குள்
நியாயவொளி தேடுவதும்
விந்தைகள் என்று
இந்தப் பாழும் மனதிற்குப்
புரியவில்லையென்றால்
என்னதான் செய்வது என்று
அங்கலாய்த்தார்கள் இருவரும்

ஆயினும்
அவளுக்கும் அவனுக்கும்
இந்த உலகத்தைப் போல
சந்தோசமே உயிர் மூச்சு

அங்கேதான்
இருண்டு கிடந்த அவன் இதயத்துள்
ஓர் தீப்பொறி எழுந்தது

ஆம்
அவளுக்கும் அவனுக்கும்
ஒன்றுபோலவே
சந்தோசமே உயிர் மூச்சு
சந்தோசமே உயிர் மூச்சு

வேற்றுமைகளையே
விரல்விட்டு
எண்ணிக்கொண்டிருந்தபோது
வெறுமனே தேய்ந்தது
விரல்கள் மட்டுமல்ல
அவர்களின் நாட்களும்தானே

இலைகளும்
இதழ்விரித்துப் பூத்துக்குலுங்கிய
ஓர் மலர் நாளில்
அவள் கனவுகளைக் காண
அவன் கண்களைத் தந்தான்

மனம் நெகிழ்ந்த மறுநாள்
அவன் ஆசைகளின் திசையில்
அவள் தீபம் ஏற்றி வைத்தாள்

இன்றோ...
அவளுக்கும் அவனுக்கும்
இந்த உலகத்தையே மிஞ்சும்
சந்தோசமே வாழ்க்கை

சுபம்

மகாராசா

உணர்வறியா
உறவுச்சபையில்
மகாராசனாய்
இருப்பதைவிட

உள்ளமறிந்த உயிரோடு
பிச்சையெடுத்தாலும்
போதும் போதும்
ஒப்பில்லா வாழ்வாகும்

தண்டனை

அன்பே
நூறாவது முறையாகவும்
நீ என்னைத் தனிமையின்
தீச்சிறையில் அடைத்துவிட்டு
உன் வெற்றிக்காகக்
காத்திருக்கிறாய்

ஆனால்
உன்னைவிட
இன்றெனக்குத்
தனிமை
பிடித்துப் போய்விட்டது

நெருப்பு வந்து சேருமோ

துளிமறந்தாய் என்பதற்கே
துடிக்கிறதடீ நெஞ்சம்
நீ
முழுமொத்தம் மறந்தாயென
மனமறிய நேருங்கால்
நிலைஎன்ன ஆகுமோ
செந்
நெருப்புவந்து சேருமோ
என்
குலைநடுங்கிப் போனதடீ
கொஞ்சுமொழிப் பைங்கிளியே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

நினைவு வட்டம்

நினைப்பு வளரும்
நினைப்பு வளர்ந்தா
மனசு இருளும்
மனசு இருண்டா
அழுகை நிறையும்
அழுது முடிச்சா
மனசு தெளியும்
மனசு தெளிஞ்சா
நினைப்பு வளரும்
***ஏன்

நான் உன் விழி தீபத்தின்
விட்டில் பூச்சி

உன் சூரிய நெற்றியில்
விழும் பனித்துளி

உன் கன்னக்
கண்ணாடி மாளிகையில்
உணர்வு இழைகளால்
காதல் வலை பின்னிய சிலந்தி

என்னை எற்றுக் கொள்ளாதது
சத்தியமாய் உன் தவறில்லை

பின் ஏன் நானுந்தன்
அனல் முகத்தின் முன்
மெழுகாய்
இன்னமும் நிற்கின்றேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


நீலாம்பல் பூவே

நீலாம்பல் பூவே
நீலாம்பல் பூவே
நீயெங்கு போனாய்
நீலாம்பல் பூவே

கோலாட்டம் போடும்
கொண்டாட்ட மனசு
ஏழெட்டு நாளாய்த்
தூங்காமல் கிடக்கு

காலற்ற மேகம்
வானேறிப் போகும்
காய்கின்ற நிலவும்
கண்மூடி நாணும்

நூலற்று வாடும்
காற்றாடி யானேன்
நீவந்து சேரு
நீலாம்பல் பூவே

ஆகாயம் நீலம்
ஆழ்கடல் நீலம்
ஆனாலும் உன்விழி
போலேது நீலம்

பாகாக்கி மூளும்
பனிப்போரே நாளும்
பாராத நாளில்
என்மொத்தம் நீலம்

வேகாத வெய்யில்
தாளாத தனிமை
விலகட்டும் இமைகள்
விரியட்டும் குடைகள்

சாகாத வரமாய்
உன்பார்வை போதும்
சாவென்ற சதியும்
குறிமாறிப் போகும்

தேரோடு வந்தேன்
தீர்மானம் தந்தேன்
ஊரோடு நீயோ
போராடும் செந்தேன்

யாரோடும் சேரா
ஏகாந்த கீதம்
உன்நெஞ்சில் ஓதும்
என்காதல் யாகம்

சேறோடு சரியும்
உன்னுள்ள தாகம்
என்மான உயிரின்
வேர்கொத்தும் காகம்

மாரோடு மங்களம்
மனத்தோடு குங்குமம்
மாறாகிப் போனால்
முற்றாக நடைப்பிணம்

நீலாம்பல் பூவே
நீலாம்பல் பூவே
நீயெங்கு போனாய்
நீலாம்பல் பூவே

என்னை விதைத்தவள்

விண்ணை நிறைப்பது நீலம் - என்
விழியை நிறைப்பது கனவு
என்னை விதைத்தவள் நீயே - என்
இளமை துளிர்த்தது பூவே

இன்னும் என்னடீ மீதம் - என்
இதயம் போடுதே தாளம்
உன்னைத் தேடினேன் அன்பே - என்
உயிரில் குடியேறு இன்றே

நம்பாதீர்கள்

நம்பாதீர்கள் தோழர்களே
காதல் தோல்வியைச்
சாவு தீர்க்குமென்பது
சுத்தப் பொய்

ஆன்மாவுடன்
தொடர்புகொண்ட காதலை
அதன் வேதனையைச்
சாவால் தீர்க்கவே முடியாது

அழுத்தமான
இன்னொரு காதலல்லவா
அதை அடியோடு
வெட்டிச் சாய்க்கும்

பயணக்கிறக்கம் (Jet lag)


பயணக்கிறக்கம் (Jet lag)

ஜெட்லாக்கை பயணக்கிறக்கம் என்று பயணக்கிறக்கத்தோடு மொழிபெயர்த்தேன்.

ஓர் ஒன்பது தினங்களுக்காக, கனடாவிலிருந்து ஜெர்மனி வழியாக சென்னை, பின் சென்னையிலிருந்து ஜெர்மனி வழியாகக் கனடா, சிறகடிக்காத ஏர் கனடா மற்றும் லுஃப்தான்சா விமானங்கள் விசிலடிக்கப் பறந்தேன்.

டொராண்டோ விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையம் 6340 கிலோமீட்டர் தூரம் ஏழரை மணி நேர பயணம். ஜெர்மனியில் சுமார் ஐந்து மணி நேரம் அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கும் பயண ஓய்வு. பின் ஃபிராங்ஃபர்டிலிருந்து சென்னை விமான நிலையம் 7600 கிலோமீட்டர் தூரம் ஒன்பதரை மணி நேர பயணம்.

ஆக மொத்தம் 13,940 கிலோ மீட்டர் தூரம், 17 மணி நேர விமானப் பயணம், 5 மணி நேர பயண ஓய்வோடு 22 மணி நேரம். ஏழு தினங்கள் கழித்து மீண்டும் சென்னையிலிருந்து ஜெர்மனி வழியாக கனடா. போக ஒரு நாள் வர ஒருநாள் போக ஒன்பது நாள் பயணத்தில் ஏழே நாட்கள் தமிழ்நாட்டில்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தஞ்சை திருச்சி மதுரை கோவை திருநெல்வேலி செல்வதெல்லாம் அடுத்தப் பெருங் கதை. அது நமக்கு இப்போது தேவையில்லை.

இந்த என் திடீர்ப் பயணம் குளிர்கால நள்ளிரவுக் கனவைப் போல் கழிந்தது. படுத்தவன் விழித்தபோது கனடாவின் இயந்திர தினங்களில் மீண்டும் நிற்காத ஓட்டங்களோடு இழைந்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் ஒரு வித்தியாசம். யாரோ முகம்தெரியாத துரோகிகள் பலர் இரவோடு இரவாக என் கனவுக்குள்ளேயே வந்து என்னை அடித்து நொறுக்கிப் போட்டு விட்டதைப்போல ஒரே களைப்பு, கழித்தெடுக்க முடியாத அலுப்பு. ஏன்? எப்படி? அதுதான் ஜெட் லாக் எனப்படும் பயணக்கிறக்கம்.

விமானத்தை விட்டு இறங்கிய சில நாட்களுக்கு ஒருவித சோர்வு, மயக்கம், தடுமாற்றம் என்று எல்லாவித பலகீனச் சொற்களும் நம்மைக் கூடி நின்று கும்மியடிக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், தேர்தலுக்கு நிற்கும் இளம் அரசியல்வாதியின் இடைவிடாத குழப்பம். எதிலும் கவனம செலுத்தமுடியாமல் ஒரு திக்குமுக்காடல். வாகனம் ஓட்ட முடிவதில்லை, கவிதை வாசிக்க முடிவதில்லை, முக்கியமான விசயங்களையும் கவனம் பிசகாமல் விவாதிக்க முடிவதில்லை. எந்த வல்லாரை லேகியத்துக்கும் வசப்படாமல், மண்டைக்குள் அடையாளம் தெரியாத நண்டுக் கால்கள் கலங்கலாக ஓடிக் கொண்டிருப்பதுபோல் ஒரு தத்துப் பித்துத் தாண்டவம்.

இதனால் தொடர் உறக்கம் தொலைந்துபோய், முந்தாநாள் பிறந்த குழந்தைக்கு வரும் துண்டுத் துண்டு உறக்கங்களைப் போல விட்டு விட்டு வந்து தட்டுக்கெட்டு நிற்கும். வாழும் இடத்திற்கும் பருவ நிலைக்கும் ஏற்ப உடலுக்குள் உருவாகி ஒழுங்குக்கு வந்திருக்கும் நம் திடநிலை, தடதடவென்று குலுக்கப்பட்டு தாறுமாறாகக் குலைக்கப்படுகிறது. அவற்றை உடலும் மூளையும் மீண்டும் சரி செய்துகொண்டிருப்பதுதான் இந்த மயக்க, கிறக்க நிலைக்குக் காரணம்.

இதுபற்றி அமெரிக்காவிலுள்ள வானவூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகமான "நாசா" என்ன சொல்கிறது தெரியுமா? ஒரு மணி நேர இட வித்தியாசத்தைச் சரிசெய்துகொள்ள உடலுக்கு ஒரு நாள் வேண்டும் என்கிறது. அப்படியென்றால் எனக்கு ஒன்பதரை நாட்களாவது வேண்டும். கனடாவுக்கும் இந்தியாவிற்கும் தற்போது ஒன்பதரை மணி நேரம் வித்தியாசம் நிலவுகிறது.

விமானம் தரையிறங்கும் தருணத்தில் ஒரு புதுக்கவிதை வாசித்தேன். அதுவோ அதி நவீன கவிதையாய் என் தலையோடு முரண்டுபிடித்தது. எல்லாம் இந்தப் பயணக்கிறக்கம் தந்த பிடிபடாத மயக்கம்தான். இந்த மயக்கத்தால் சில சமயம் நான் வவ்வால் மாதிரி தலைகீழாய்த் தொங்குவதுபோல் உணர்வு.

விமானத்தில் நிலவும் உலர்ந்த நிலையால் உருவாகும் தலைவலியோ மற்றுமொரு கொடுமை. தோலெல்லாம் வறண்டுபோய், மூக்கெல்லாம் (ஒண்ணுதானே?) சொறிந்துவிடு சொறிந்துவிடு என்று விடாது விண்ணப்பித்துக்கொண்டே இருக்க, நீர்க்கேடு (இப்படியெல்லாம் ஜலதோஷத்தை நான் மொழி பெயர்ப்பதும் பயணக் கிறக்கப் பலன் என்று நீங்கள் தாராளமாக நினைத்துக்கொள்ளலாம். ஜலதோசத்தை, நீர்கோத்துக்கொண்டது என்று ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன்) வந்து தலையில் முகாம் இடுவதைப்போல் இருக்கும். தொண்டைக்குள் நம் தங்கக் குரலைத் திருடிக்கொண்டு யாரோ கரகரப் பித்தளைக் குரலை பொருத்திவிட்டுப் போவார்கள்.

உக்கார்ந்துகொண்டே தூங்குவதற்கு நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சிதான் இம்மாதிரியான நீண்ட பிரயாணங்கள் என்று சத்தியமே செய்வேன் நான்.

கால்களில் இனம்புரியாத இக்கட்டு. பாதங்கள் நம்முடையவை அல்லவோ என்ற தப்புத் தப்பான நினைப்பு. போட்டிருக்கும் காலணியை சடக்கெனக் கழற்றி எறிந்துவிட்டுப் பாசமாய் அவ்வப்போது கால்களையும் பாதங்களையும் வாஞ்சையாய்க் கட்டிப்பிடிக்கத் தோன்றும். அதே சமயம் நிம்மதியாய்த் தூங்க இந்தக் கால்கள்தான் இடையூறு என்பதுபோல் இருக்கும் அவ்வப்போது. கால்கள் இல்லாவிட்டால், இந்தக் குறுகிய இருக்கையில் அப்படியே மல்லார்ந்து படுத்து உறங்கிவிடலாமே.

விமானத்தின் அசையாத இறகுகள் அடித்துக்கொள்ளாமல் பறந்துகொண்டிருக்க அசையும் என் கால்கள் அவசியம் அற்றதாய்க் கிடக்க, விமானப் பயணம் படுசோம்பேறித்தனமாய் நீண்ண்ண்ண்டு நிகழும்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாமெல்லோரும் குழந்தையாவே இருந்துடக்கூடாதா என்று அவ்வப்போது ஏங்குவோமே, அந்த ஏக்கத்துக்கு இங்கே அதிக பொருள் உண்டு. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்படி மயக்கம் கிறக்கம் என்று எதுவுமே வருவதில்லை. அவர்களின் உடல் அத்தனை எளிதாய் பயணத்தால் வரும் மாற்றங்களை எல்லாம் சரி செய்துகொண்டே இருக்கிறது

ஆமாங்க.... வளர வளர நமக்கு நம் உடல் ஒரு சுமைதாங்க.

அலுவலகம் வீடு சமையல்கட்டு என்று வாழும் அன்றாடச் செக்குமாடுகளுக்கு நீண்ட தூர விமானப்பயணம் என்பது இன்னும் அபத்தமாய் முடியும். அதனாலென்ன அவர்களுக்கு எல்லாமே எப்போதுமே அபத்தம்தானே?

கனடாவிலிருந்து சென்னையில் குதித்தபோதுகூட இந்தப் பயணக்கிறக்கம் என்னை ஒன்றும் செய்யவில்லை. அக்கினி வெயிலுக்குமுன் பயணக்கிறக்கமாவது மண்ணாவது? ஆனால் சென்னையிலிருந்து கனடா வந்தபின்தான் உயிரை எடுக்கிறது. ஏனெனில், சென்னைக் காற்றில் ஏகப்பட்ட ஈரப்பசை

சென்னையில் நான் ஒரு நண்பரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றேன். வெளியே மழை பொழிகிறதா என்று கேட்டார் நண்பர். அப்படி நனைந்திருந்தேன் வியர்வை அருவியால். அந்த முழுநீள உப்பு ஈரத்திலிருந்து விமானத்தின் உலர்ந்த சூழலில் ஒரு நாள் முழுவதும் வீற்றிருந்தால் என்னாகும்? கிறுக்கான கிறக்கம்தானே வந்துசேரும்?

நீண்ட விமானப் பிரயாணம் செய்யப் போகின்ற செலவாளிகளே என் தலைக்கனமில்லாத யோசனைகளைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.

பணிப்பெண்களெல்லாம் வாஞ்சையாய் அருகில் வந்து நின்று டீ குடிக்கிறாயா கண்ணா? காப்பி குடிக்கிறாயா செல்லம்? பழரசம் வேண்டுமா தங்கம்? போதையில் மிதக்கப் பிரியமா குடிமகனே என்றெல்லாம் குழைவார்கள்

அப்படியே சித்தார்த்தம் தொலைத்த புத்தனாய் மாறி வேண்டாம் வேண்டாம் என்று விரட்டிவிடுங்கள் அவர்களை. ஆனால், நாங்கள் தமிழகத் தமிழர்கள், கர்னாடகாவிடம் மட்டுமல்ல உங்களிடமும் ஒன்றே ஒன்றைத்தான் கேட்போம் "தண்ணீர் தண்ணீர்" என்று பொழுதுக்கும் தொல்லை செய்யுங்கள்.

அடிக்கடி தண்ணீர் குடிப்பதும், குடித்ததை வெளியேற்ற, ஒப்பனையறை செல்வதால் கால்களை இயல்புக்குக் கொண்டுவருவதும் ஆபத்தாண்டவனைப்போல் உங்களைக் காக்கும்

நீங்கள் பெருங்குடிமகன்களாய் இருந்தால் ஒரு மிக முக்கியக் குறிப்பு தருகிறேன். விமானத்தில் நூறு மில்லி அடிச்சா தரையில் நாநூறு மில்லி அடிச்சதுக்கு சமம். அப்புறம் ரஜினிமாதிரி தோளில் துண்டு போடுவதற்குக்கூட கையைக் காலை உதற வேண்டிவரும்.

விமானத்தில் முதல் வகுப்பிலும் வணிக வகுப்பிலும் அடிக்கடி காற்று செலுத்தி தேவலோகமாக வைத்திருப்பார்கள். வழக்கம்போல் நம் வகுப்பில் காற்றும் மட்டமாகவே வழங்கப்படும். காப்பி வேணுமான்னு கேட்டுவரும் பணிப்பெண்ணிடம் காற்றுவேண்டும் என்று கட்டளையே இடுங்கள். அவள் ஏற்பாடு செய்வாள் காற்றுக்கு. இல்லாவிட்டால் காற்றில்லாமல் நீங்கள் தடாலென்று மயங்கிவிழ தடித்த வாய்ப்புண்டு.

வயிறும்கூட கொஞ்சம் குழம்பிப் போய்தான் இருக்கும். ஒரு மாதிரியாகவே நாம் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் வயிற்றின் இயல்பு வாழ்க்கை சிதைந்து "வாழ்வே மாயம்" பாடிக்கொண்டிருக்கும், அவ்வேளையில் நீங்கள் பணிப்பெண் கொண்டுவந்து தரும் எதையாவது உள்ளே கொட்டிக்கொண்டே இருந்தால், வாந்தியும் மயக்கமும் வரக்கூடும்.

அவ்வப்போது எழுந்து உடம்பைக் கொஞ்சம் முறித்துக்கொண்டு நீட்டி மடக்கிப் பயிற்சி செய்வது எல்லாவற்றுக்குமே நல்லது. என்னைப்போல் ஐந்துமணி நேரம் அடுத்த விமானத்திற்காக ஜெர்மனி போன்ற விமான நிலையங்களில் காத்திருக்க நேர்ந்தால், சுகம்மா ஒரு குளியல் போட்டு இரத்த ஓட்டத்தை ஒழுங்கு செய்வது உத்தமம். அல்லது ஜெர்மனி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் ஏதாவது ஒரு பொருளை ஆசையாக எடுத்து விலை கேளுங்கள். அவன் சொல்லும் விலையைக் கேட்டு இரத்த ஓட்டம் தானே உச்சத்தை அடையும்!

இந்தப் பயணக்கிறக்கத்தைத் தீர்க்க நிறைய மாத்திரைகள் வந்திருக்கின்றன. மிகவும் தொல்லையாய் உணர்ந்தால்மட்டும் ஒன்றிரண்டை விழுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் சில மருந்துகள், சித்தெறும்புப் பிரச்சினையைச் சிறுத்தைப் பிரச்சினையாய் ஆக்கிவிட்டுவிடும். அப்புறம் பயணம் முழுவதும் அவசர சிகிச்சைகளுடன் படுக்கையில்தான் கிடக்க வேண்டி வரும். மகா தொல்லையாய் இருக்கிறதே இந்தச் சனியன் பிடித்தக் கிறக்கம் என்று தூக்கமாத்திரைகளை விழுங்கி வைக்காதீர்கள். அது விமானத்த்துக்கும் மேலே உங்கள் உயர்ப் பறவையை ஒரேயடியாய்ப் பறக்க வைத்துவிட நிறைய வாய்ப்புகள் உண்டு.

விமானம் ஏறுவதற்குமுன் நன்றாக தூங்கி எழுங்கள். நிம்மதியாக நீராடுங்கள். நல்ல உடற்பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தைக் குட்டிக் கரணங்கள் போட வைத்துக்கொள்ளுங்கள். விமானம் ஏறியபின் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், விமானத்தின் மென்மையான இசையை மயக்கத்தோடு கேளுங்கள், அடிக்கடி எழுந்து ஒப்பனையறை செல்லுங்கள், அவ்வப்போது உலாவுங்கள், பணிப்பெண்களின் அசைவுகளை அதிர்ந்து அதிசயிக்காமல் இனிமையாய் ரசியுங்கள், அப்புறம் நிம்மதியாய்த் தூங்குங்கள். இந்தப் பயணக்கிறக்கத்தை முக்கால்வாசிக்கும்மேல்.... ஏன் முழுவதுமேகூட வென்று மென்று தின்று செரித்துவிடலாம்.

பிறகென்ன, எத்தனை நாடுகளுக்கு வேண்டுமானாலும் எவ்வளவு குறுகிய காலத்திலும் இளகுவாகச் சென்று வென்று வரலாம் நீங்கள், வாழ்த்துக்கள்!