அ. முன்னுரை - அன்புடன் இதயம்


உயிர் முத்தங்கள்

தமிழால்
அமைந்த
கணினி
மேடைக்கும்
அதில்
தமிழெடுத்து
ஆடும்
இணைய
தேவதைக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல்

இணையம்!

தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ்

வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும்

தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம்

ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள்

சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம்

இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல்

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று

வறுமை கிழித்துப்போட்ட குடும்பத்தின் கடைசி ஆடையையேனும் தைத்தெடுத்து விடலாம் என்ற பதட்ட உணர்வுகளோடு மண்ணைப் பிரிந்த தமிழர்கள், தமிழோடு சேர்ந்திருக்கிறார்கள்

தாய்நாட்டில் எவர்க்கும் தமிழ்ப்பற்றே இல்லை என்றுரைக்கும் கண்ணற்ற ஓட்டமல்ல இது. போற்றிப் புகழும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று எல்லோருமே இன்னமும் அங்கேதான் அமோகமாய் விளைகிறார்கள். இருப்பினும், நாளுக்கு நாள் அமீபாக்களாய்ப் பெருகும் ஒரு கூட்டம் திசைமாறிப் பயணப்பட்டு, தமிழை நெருப்பில் புதைத்துச் சிரிக்கிறதே.

இவர்களின் மத்தியில், உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா?

இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கிவிட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து.

புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள்.

உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள்.

வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி உதைத்து விளையாடுகிறது இன்று.

நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடிநடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும்.

தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்ப்டும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன.

இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று.

தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்க்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம்.

உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல்.

தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி
தீர்ந்தே போவதோ?

விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின்
நெற்றியில் தமிழே!

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!

அன்புடன் புகாரி

416-500-0972
anbudanBuhari@gmail.com

முன்னுரை - சரணமென்றேன்

உயிர் முத்தங்கள்

காதலால்
நிறைந்த
ஐம்
பூதங்களுக்கும்
நிறைக்க
முடியாத
ஐம்
பொறிகளுக்கும்
என் காதல் கடல்கள் கணந்தோறும் எழுப்பும் உணர்வு அலைகள் கணினிக் கரைகளில் முத்தங்களாய்ப் பதித்த கவிதைகளை என் மூன்றாம் தொகுப்பாக காகிதங்களில் இறக்கி இருக்கின்றேன்.

இன்னும் இன்னும் எழுதப்படாத எத்தனையோ கோடி காதல் உணர்வுகள் இதயத்தின் இடுக்குப் பகுதிகளையும் சன்னமாய்க் குறிவைத்து புரியாத புயல்களாய் வீசிக்கொண்டிருக்கின்றன.

அவை ஒவ்வொன்றையும் பிடித்துப் பிடித்து கவிதைக் கிரீடங்கள் சூட்டிக் கௌரவப் படுத்தாமல் என் விரல்கள் நெட்டி முறிக்கப் போவதில்லை. இருப்பினும்... எழுதமுடியாத யுகம் தாண்டும் எத்தனையோ கவிதைகளை உணரவும் சுவைக்கவும் செய்வது காதல் என்னும் மகாகவிதானே?

காதல் உயிர்களின் பாடசாலை அதில் கற்க கற்கத்தான் அண்டத்தின் அனைத்தும் செழிக்கின்றன.

இதயத்தின் அத்தனை வலிகளிலிருந்தும் அழுத்தும் பாரங்களிலிருந்தும் காதல் என்னும் புனிதமே விடுதலை தருகின்றது

காதல் தோல்விகளைக் காதலின் எல்லை என்று எண்ணுவது அறிவை அலட்சியப்படுத்திவிட்டு வந்த அவசரக் கருத்து

பெரும்பாலான தருணங்களில் தோல்விகளே நல்ல காதலுக்கு வலுவான அடித்தளமாக இருக்கின்றன.

ஒரு தோல்விக்குப் பின் மலரும் புதிய காதல் மிகவும் புனிதமானதாகவும் வலிமையானதாகவும் இருக்கின்றது. அதுவே சில்லறைச் சிலிர்ப்புகளை நீக்கி வாழ்க்கைக்குப் புதிய புதிய அர்த்தங்கள் சொல்கிறது.

காதல் கடிதம் எழுதும்போது கிறுக்கல்கள் எல்லாம் சித்திரங்கள் ஆகின்றன

காதல் கவிதை எழுதும்போது சொற்களெல்லாம் சொர்க்க வாசனை ஏற்றிக்கொள்கின்றன. அக்கணங்களில் காகிதங்களில் இறங்குவது எழுத்துக்கள் அல்ல, முத்தங்கள்.

பல்துலக்கும்போதும் காதலியின் ஞாபகம் பளிச்சிட்டால் வேப்பங்குச்சிகூட பல நூறு முத்தங்களைப் பெற்றுக்கொள்கிறது.

துளித்துளியாகத்தான் என்றாலும் அந்தத் துளிகளுக்குள் முழுமையாய் வாழ்வதே வாழ்க்கை என்று உணரச் செய்வதே காதல்.

வைரத்தையும் துளைத்து வேர்கள் பதிக்க வீரியம் கொண்டது உலகில் காதல் பயிர் ஒன்றுதான்

ரசனையும் விருப்பமும் காதலாகிவிடாது
அன்பும் நட்பும் காதலாகிவிடாது
பக்தியும் பரவசமும் காதலாகிவிடாது
முத்தமும் மோகமும் காதலாகிவிடாது
பாசமும் தவிப்பும் காதலாகிவிடாது
கருணையும் இரக்கமும் காதலாகிவிடாது
ஆனால் காதலுக்குள் இவை யாவும் இருக்கும்

எந்த ஒரு காட்டுப் பாதையையும் பறவைகள் கால் நோகாமல்தானே கடக்கின்றன? அதைப் போல எந்த ஒரு துயர வாழ்க்கையையும் காதல் சிறகுகளுடன் கடந்தால் அதுவே சௌந்தர்யப் பயணமாகிவிடும்.

காதலெனும் பனி பொழியப்பொழிய கரடு முரடுகள் தெரிவதில்லை
காதலில் மனம் கனியக்கனிய காதலர்க் குறைகள் பொருட்டில்லை
காதலெனும் காற்று வீச வீச கிளைகளில் முட்கள் நிலைப்பதில்லை
காதலெனும் நதி பாயப்பாயப் பசுமைக்கு நெஞ்சில் பஞ்சமில்லை.

காதலில் ஏமாற்றம் கொடுமையானதுதான்
ஏமாற்றியவர்கள் ஏற்கவேண்டிய அத்தனை தண்டனைகளையும்
ஏமாறியவர்களே ஏற்பது எத்தனை கொடுமை?

ஏமாறியவன் தன் ஏமாற்றத்தையே வெற்றியின் வேர்களாக்கி இன்னொரு சாக்கடைக்குள் தன் மூக்கைக் கொடுத்துவிட்டாலும் சத்து நீர் மட்டுமே சுவாசித்து எழுந்தால் ஏமாற்றங்களெல்லாம் தூள் தூளாகும் தண்டனைகூட திசை மாறிப் போகும்

காதல் அன்று புறாக்காலில் துவங்கி இன்று கணினி மடிகளில் கதகதப்பாய் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஓயாத அந்த உயிரோட்டம்தான் உயிர்களின் மூலம்.

காதல் இல்லாவிட்டால், புல்லும் பூண்டும் கூட சுவாசிக்க முடியாது.

வானத்துக் கோள்களும் வாஞ்சையாய்க் காதலிக்கின்றன ஒன்றை ஒன்று சுற்றிச் சுற்றி ஓயாமல் ஈர்த்து ஈர்த்து குதூகலிக்கின்றன.

உயிர்களைப் புதுப்பிக்க காதலேயன்றி வேறு நூதனமில்லை.
உலகை இனிப்பாக்க காதலேயன்றி வேறு சாதனமில்லை.
இயற்கை சுழன்றோட காதலேயன்றி வேறு சக்கரமில்லை.

இந்தப் பிரபஞ்சம் நிஜமென்றால்
அழிந்தழிந்து எழுகின்ற அதன் தத்துவம் சத்தியமென்றால்
எல்லா உயிர்களும் காதல் உயிர்கள்தாம்
எல்லாப் பொழுதுகளும் காதலர் பொழுதுகள்தாம்

பாராட்டுரை - பெருங்கவிக்கோ - சரணமென்றேன்

காதல் சிறகுகளால் காலத்தை வெல்லலாம்-பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன்
மின்னல் கிழிக்கவோ மேல்வான் கிழியுமெனும்
கன்னல் உவமைபோல் காதலுக்குப் - பன்னல்
மீக்கூறும் வெல் உவமை விஞ்சும் உணர்வு அலை
தாக்கும் புகாரி தமிழ்!


என்றன் உலகளாவிய பன்னாட்டுப் பயணங்களில் பல அறிவும் செறிவும் நெறியும் கொண்ட நன்மக்களை நல்லறிஞர்களை வெல்லும் கவிஞர்களைச் சந்தித்திருக்கிறேன். இத்தகுதிவாய்ந்த பெருமக்களுள் உயிர்ப்பும் உண்மையும் அழகுணர்வும் கொண்ட ஆற்றல் வாய்ந்த கவிதைகளைப் படைக்கும் பெருமகன், மனித நேயம்கொண்ட மாமணி, இதயத்தோடு பழகித் தமிழ், தமிழர்க்குத் தொண்டாற்றும் உள்ளொளி உடையவர் புகாரி என்பதை 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற அய்யன் திருவள்ளுவர் வழி அறிந்தேன்.

இணையத்தில் நூல் வெளியிட்டு தமிழ் உலகம் தலை நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை முதன்முதலில் உருவாக்கியவர் கவிஞர் புகாரி என்று நண்பர் மாலன் கூறுகிறார். மாட்சிமிகு மாலன் போன்றவர்கள் யாரையும் முகமனுக்காகப் புகழ்பவர்கள் அல்ல! மாலனே இவருக்கு மகுடம் சூட்டுகிறார் என்றால் புகாரியின் உன்னத கவிதை ஆற்றலும் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துக்காட்ட ஓங்கிய செயற்பாடுகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவுமே புகாரியைத் தலை நிமிரச் செய்கிறது. முதன் முதலாக இணையத்தில் கணினித் தமிழில் முதல் புத்தகத்தைக் கொண்டுவந்தவர் நம் புகாரி என்பதை அறியும்போது அவர்தம் இலக்கை எய்தும் உழைப்பை, உத்தியை எண்ணி வியப்படைகிறேன்.

படைப்பாற்றல் மிகுந்த புகாரி அவர்களின் 'சரணமென்றேன்' என்ற காதல் கவிதைகளின் தொகுப்பைப் படித்தேன். படித்தேனாக இனிக்கும் காதல் தேன் குடமாகத் தித்திக்கிறது புகாரியின் காதல் கவிதைகள். தமிழில் காதல் கவிதைகளுக்குப் பஞ்சமில்லை. நம் சங்ககாலத்திலிருந்து இன்றைப் படத்துறைக் கவிஞர்கள் வரை உள்ள காதல் கவிதைகள் சமுதாயத்தின் விளைநீராகிப் பெருகி வருகின்றது. காதல் இல்லையே மாந்தரில்லை! மனிதம் இல்லை! உலகம் இல்லை. எனவேதான் மகாகவி பாரதியார்

"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"
என்று பாடினார்!

புகாரியின் சரணத்தில்

நிலைகுலைக்கும் நீள்விழியின்
ஒயிலாட்டம் - என்
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும்
புயலாட்டம்


என்று அவளின் நீள்விழி இவனை நெஞ்சடுப்பில் புயலாகத் தள்ளுவதைச் சுவைக்க முடிகிறது. முகம்கண்டு வருங்காதல் மயக்கத்திற்கும் அகங்கண்டு இணைகின்ற உள்ளத்திற்கும் மூன்று நாள் அண்டவெளி ஈர்ப்பினை உவமை காட்டுவது காதல் வெறும் களவாக மட்டும் நின்றுவிடாது கற்புநிலைக் காதலாகக் காலம் வெல்லவேண்டும் என்ற நிலைத்த தமிழர்தம் வாழ்வியலை வகுக்கிறது.

கயிறிழுக்கும் போட்டியுள்ளே நடக்குதடி - என்
கர்வமெல்லாம் பெண்மையிடம் தோற்குதடி

தவிப்பின் தவங்கள் வரமாய் மலர
உணர்வைத் திறப்பாளா - அதில்
உயிரைக் கரைப்பாளா

சின்னச்சின்னக் கன்னப்பாளம்
கிள்ளக்கிள்ள நாடித்தாளம்

சின்னஞ்சிறு கன்னிவாழை
தங்கப்பேழை புதுத்தாழை - எந்தன்
அந்தப்புரம் வரும் நாளை


வாசகர்கள் அக அந்தப்புறத்திற்கு விருந்து வைக்கின்றார் புகாரி! வெறும் உடலோடும் உள்ளத்தோடும் மட்டுமல்ல ஆன்மாவோடும் கவிஞர் காதல் கொள்கிறார்.

"புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒருநாள் தீயில் கரையத்தானே" என்றும்

"என் காதல் விழிகளே இன்று
கோடிச் சூரியன்கள்"
என்றும் ஆன்ம உயிர்க் காதலைத் தரிசிக்கிறார்

கிளைகள் வேண்டாம்
கிளைகள் வேண்டாம்
சிறகுகள்தான் வேண்டும்


இந்தக் காதல் சிறகுகளால், பாறைக்குள் ஈரம் தேடுகிறார், நேசமற்ற நெஞ்சில் பாசம் தேடுகிறார். சுயநல மனத்துக்குள் நியாய ஒளி தேடுகிறார். கவிஞரின் கனவுகள் காதல் தேர்வில் விரிவான விடைகளைத் தேடுகிறது.

அந்தரங்கமாய் விழும்
உன் விழிகளை அடைகாத்த
என் இதயப் புறா
ஆர்ப்பரிக்கும் நினைவுக் குஞ்சுகளாய்
முடிவில்லாமல்
பொறிந்துகொண்டே
போகும்

காதல் நினைவுகளில் கவிஞர் சரணமடையும் காட்சிகள் இந்த நூலிக் சுவைக்கும் சுவை நல்குகின்றன

மின்னல் கிழிக்க வானம் கிழியுமோ
இன்னல் கிழிக்க காதல் கிழியுமோ


என்பது போன்ற எளிய இனிய உவமைகள் படிப்போர் செஞ்சில் கொஞ்சி விளையாடுகின்றன.

பன்முறை யான் கனடா வந்திருந்தாலும் இந்தப் பயணத்தில் கவிஞர் புகாரியின் அறிமுகம் நெஞ்சத்திற்கு ஆறுதல் தரும் உவகை தந்தது. அமெரிக்கா சென்றபோது அறிவியல் அறிஞர் நாசா கணேசன் இல்லம் தங்கியிருந்தேன். அப்போது தாங்கள் கனடா சென்றால் புகாரி என்ற அற்புதமான கவிஞரைச் சந்தியுங்கள் என்று கவிஞரை அறிமுகப்படுத்தினார் கணேசன். உண்மையிலேயே அற்புதம் வாய்ந்த கவித்திறம் படைத்த கவிஞர் புகாரியின் கவிதைப் பணி வாழ்க வெல்க.

காதல் சிறகுகளால் காலத்தை வெல்லலாம்
காதல் உறவொன்றே கண்களாம் - காதலே
காதலைக் காக்கும்களம் அமைக்கும்! காதலோ
காதல் உலகுயர்வுக் காற்று


அன்பன்
வ.மு.சேதுராமன்

பிப்ரவரி 28, 2004

அணிந்துரை - மாலன் - சரணமென்றேன்


ஆதலினால் கவிதை செய்வீர். . .
-மாலன்


காதலுக்கும் கவிதைக்கும் ஒரு மனது வேண்டும்

ஒரு மனது அல்ல, ஒரே மாதிரியான மனது. நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் மீது ஒரூ உபாசனை இவை ததும்பும் மனது. இது இல்லாதவர்கள் காதலிக்கவும் முடியாது. கவிதை எழுதவும் முடியாது. இவையற்ற கவிதையும் சரி, காதலும் சரி பொய்யானதாக இருக்கும். அவை காமமாகத் திரியும். அல்லது வார்த்தைகளாகச் சரியும்.

இந்த மனது புகாரிக்கு இருக்கிறது. அதற்கு சான்று இந்தக் கவிதைகள்.

இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

அறிவின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைத்தவன் துறவியாகிறான். உணர்ச்சிகளின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைத்தவன் காதல் கொள்கிறான். அதனால்தான் துறவி முற்றிலுமாக உலர்ந்து இருக்கிறான். காதலன் முழுதுமாகக் கரைந்து போகிறான். என்றாலும் அறிவும் உணர்ச்சியும் எதிர் எதிர் துருவங்கள் அல்ல, அடுத்தடுத்த வீடு

ஆனால் கவிதை என்பது காய்ந்த சருகாகவோ, கரை மீறிய கடலாகவோ இருந்து விட முடியாது. சருகில் விழுந்த பனித் துளியாக, கடலுக்குள் பூத்த முத்துச் சுடராக, அது இருக்கும். துறவியின் ஒழுங்கையும், காதலின் நெகிழ்வையும் அது தனக்குள்ளே கொண்டிருக்கும். அறிவையும் உணர்ச்சியையும் ஊடும் பாவுமாக நெய்தால் கவிதைகள் கிடைக்கும். .

இதற்கும் சான்று புகாரியின் இந்தக் கவிதைகள்.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. இன்று நேற்று அல்ல, அநாதி காலம் தொட்டு இதுதான் கதை. காதல் கவிதை எழுதப்படாத மொழியே உலகில் இல்லை. கவிதையைப் பரிமாறிக் கொள்ளாத காதலர்களும் அபூர்வம்.

தமிழ் இதற்கு விதி விலக்கு அல்ல. முன்னோடி. உலகில் உள்ள பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் காதல் கவிதைகள் தோன்றிவிட்டன. மொழிக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன், கவிதைகளை அகம் புறம் எனத் திணைகள் வகுத்தான்.

எனவே தமிழில் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் முன் ஒரு சவால் இருக்கிறது. இங்கு காதலும் பழசு. கவிதையும் பழசு. ஆனால் எழுதப்படுகிற காதல் கவிதை மட்டும் புதுசாக இருக்க வேண்டும்!

ஆனால் இது சந்திக்க முடியாத சவால் அல்ல. பழைய மரம் தினம் புதிதாய்ப் பூப்பதைப் போல இங்கு காதல் கவிதை பூக்க வேண்டும். காதல் கவிதையை 'செய்ய' முயன்றால். பழைய வாசனை, பழைய சாயல், பழைய பாணி வந்து விடும்.

புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.

நெடுக அளந்து கொண்டே போகிறீர்களே, அப்படி என்ன இந்தத் தொகுதியில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

சின்ன இதழ்களோ
மின் மடல்கள் - சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

இப்படி ஒரு வரியை இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழந்த பெருங்கவிஞர்கள் யாரும் எழுதியிருக்க முடியாது. இணைய உலகில் வாழ்கிற பேறு பெற்றவர்களுக்குத்தான் இந்த வரிகள் வாய்க்கும்.

இது ஏதோ தற்செயல் அல்ல. இன்னொரு மாதிரி பார்க்கிறீர்களா?

தடதடக்கும் தட்டச்சுப் பலகை - அதன்
தாளலயம் வெல்லுமிந்த உலகை

இணையம், கணினி, விசைப்பலகை என்று இயந்தரத்தனமாக இருக்கிறதோ கவிதைகள் என்று உங்களுக்கு சந்தேகங்கள் வரலாம். ஆனால் தொழில் நுட்பங்கள் வாழ்க்கை ஆகி விடாது என்று அறிந்தவர் புகாரி. வாழ்க்கை மனதால் வாழப்படுவது. மனதால் ஆளப்படுவது. மனதால் பேணப்படுவது. அது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம். ஆனால் மன உலக வாழ்க்கைக்கும் மண்ணுலக வாழ்க்கைக்கும் இடையில் பொருளாதாரம் என்ற பாலம் இருக்கிறது. அது எல்லா நேரமும் பாலமாகவே இருப்பதில்லை. சில நேரங்களில் கதவாகவும் ஆகி விடுகிறது. நீங்காத் தாழ் கொண்ட நெடுங்கதவு.

அப்படி ஒரு கதவின் இரு புறமும் அகப்பட்டுக் கொண்ட ஒரு இளம் ஜோடியைப் பற்றி எழுதுகிறார் புகாரி. அவர்கள் இணையத்தாலே இணைக்கப்பட இயலாதவர்கள். தட்டச்சுப்பலகைகள் கொண்டுத் தங்களுக்குள் பாலங்கள் அமைக்கும் பொறியியல் அறியாதவர்கள். திருமணமாகி ஒரு திங்களுக்குள் அவர்கள் பிரிய நேர்கிறது. பொருள் வயிற் பிரிவு. கணவன் அவன் பணி புரியும் அயலகத்திற்குக் கிளம்பிப் போகிறான் அந்த ஒரு மாத உறவில் கருவுற்று விட்ட மனைவி கடிதம் எழுதுகிறாள், காதலும் தாபமும் கலந்த கவிதையாக.

மனத்தை உருக்குகிறது கவிதை. கவிதைக்குள் பெண் குரல். பெண் மொழி, பெண் விழி, பெண் மனம். புகாரியும் ஒரு பெண்ணாக மாறி இருந்தால்தான் இப்படி எழுதுவது சாத்தியம். ஆணைப் பெண்ணாக மாற்றும் அதிசயத்தைக் கவிதை செய்யும். ஆழ்ந்து பார்த்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மனம் ஆணா? பெண்ணா?

மனம்தான் கவிதையாகிறது.

அண்மையில் இலங்கை போயிருந்த போது வட்டிலப்பம் என்று ஒரு இனிப்புப் பரிமாறினார்கள். நுங்குத் துண்டம் போல் தளதளவென்று ஆனால் கரு நிறத்தில் காட்சி தந்தது அது. பனங்கருப்பட்டியும், முட்டையும் சேர்த்துச் செய்தது, கிழக்கிலங்கையில் இது பிரசித்தம், அதிலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் பெருநாள் பண்டிகையின் போது இந்த இனிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். என்று சொன்னார்கள். இதை நான் எழுதிய போது ஒரு இலங்கை நண்பர் அது இலங்யை஢ல் மட்டுமல்ல இந்தியாவிலும் செய்யப்படுவதுண்டு என்று எழுதியிருந்தார்.

இப்போது அதைக் கனடாவில் புகாரி செய்திருக்கிறார். பல கருக்களைச் சுமந்த மனதைத் தமிழ் என்னும் கருப்பட்டியில் கலந்து இந்த இனிப்பை கவிதை நூலாகத் தந்திருக்கிறார். அதன் இனிப்பு நம் அடிமனதில் நெடுநாள் சுரந்து கொண்டே இருக்கும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
மாலன்

சித்திரை 1, தாரண
13.1.04

***** காதல் தராசு

*காதல் தராசு*

சென்னையில் எழுத்தாளர் மாலன் பத்திரிகையாளர்களை அழைத்து என்னை அன்போடு அறிமுகம் செய்து வைத்தார். 


கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புச் சொற்பொழிவாற்றி என்னை வாழ்த்தினார் பாராட்டினார். அடுத்த நாள் நான் அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். அப்போது எனக்கு மிகவும் பிடித்த கவிதை சரணமென்றேன் என்ற இந்த நூலில் *காதல் தராசு* என்ற கவிதைதான் என்றார். 

நான் அவசரப்பட்டுத் தொகுத்த, எனக்குச் சற்றும் திருப்தி அளிக்காத அந்த நூலில் இப்படியான கவிதைகளாவது இருக்கின்றனவே என்று எண்ணி மகிழ்ந்தேன். இதோ கவிஞர் பாராட்டிய அந்தக் கவிதை:

*

ஓர் ஊரில்
ஒரு தங்கத் தராசு
இருந்ததாம்

அதன்
தட்டுகள் இரண்டும்
ஒன்றை ஒன்று
உயிருக்குயிராய்க்
காதலித்தனவாம்

இடத்தட்டை
இன்ப வானில் ஏற்றிப் பார்க்க
வலத்தட்டு தன் முதுகில்
வண்டி வண்டியாய்ப்
பாரம் ஏற்றிக்கொண்டதாம்

உல்லாச உயரம்
தனதானபோதும்
சுமையோடு வலத்தட்டு
வாடிக்கொண்டிருப்பதைக்
கண்ட இடத்தட்டு
கண்ணீர் விட்டதாம்

வலத்தட்டைவிட
வலுவான எடையை
எலும்பொடிய ஏற்றிக்கொண்டு
கனிவோடு இடத்தட்டு
கீழே இறங்கியதாம்

வசதியாய் மேலேறி
வண்ண நிலா தொட்ட
வலத்தட்டு
இடத்தட்டின் தியாகம் கண்டு
நெஞ்சு கரைந்து போனதாம்

அல்ல அல்ல அன்பே
இது ஏற்புடையதே அல்ல
உன்னை உயர்த்தத்தான்
நான் என்று
தங்கத் தட்டுகள் இரண்டும்
ஒற்றைக் குரலெடுத்து
காதல் சண்டை இட்டனவாம்

போதும் போதும்
இந்தப் போலிச்சண்டை
இனிமேல்
சுமப்பதில் சமமாவோம்
நாம் இருவருமே
என்ற முடிவுக்கு வந்து
உயர்ந்து நின்ற
வலத்தட்டு கொஞ்சம்
கனம் ஏற்றிக்கொண்டு
இடத்தட்டுக்கு இணையாய்
நேர்கோட்டில் நின்றதாம்

இருவரின் காதலும்
தங்களின்
உன்னதத் துடிப்புகளைத்
துணையின் துயருக்கு
ஒத்தடமாய்க் கொடுப்பதில்
உயர்வெற்றி கண்டு
ஒன்றுக்குள் ஒன்று
உயிராகிப் போகினவாம்

இங்கும் அங்குமாய்
ஆடி ஆடித் தவித்து
இப்போது ஒரு
நிலைக்கு வந்துவிட்டத்
தராசின் நடு முள்
மெல்ல உதிர்த்ததாம்
சிலச் சொல் முத்துக்களை

அளவில்லா
அன்புள்ளம் கொண்ட
ஆசைத் தட்டுகளே
உங்கள் காதலின் ஆழத்தை
நான் வான் உயரத்திற்கு
வாழ்த்திப் பாடுகிறேன்

ஆனால்
உங்களின் அதீத அன்போடு
கொஞ்சம்
அறிவையும் பயன்படுத்தினால்
என்ன

இருவரும்
போட்டி போட்டுக்கொண்டு
ஏன் இப்படிச்
சுமைதாங்கிகளாகிப்
போனீர்கள்

இருவரின்
தியாகங்களையும் முதலில்
இறக்கிவையுங்கள்

இருவரின்
பிரச்சினைகளையும் இழுத்து
வெளியே தள்ளுங்கள்

இருவரின்
குறைகளையும்
நிறைகளால்
கழித்துக்கட்டுங்கள்

இப்போது பாருங்கள்
உங்கள் மேல் ஏறிய
பாரத் துயரங்கள்
ஒட்டுமொத்தமாகவே
காலியாகிவிட்டன

இப்போதுதான்
நீங்கள் நிஜமான சமமாகி
நிம்மதியில் திளைக்கிறீர்கள்

இனி
உயிர் இழைகளில்
என்றென்றும்
சிதையாத காதல் கோத்துச்
சிறப்பாக வாழ்வீர்கள்

அன்புடன் புகாரி

நான் காத்திருக்கிறேனடி

அடீ
என் பிரியக் கிளியே
நான்
காத்திருக்கிறேனடி

விழிகள்
சிவப்பேற
இரவுக் கவிஞனுக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கும்
மேற்கு வானமாய்

நான்
காத்திருக்கிறேனடி

உன்னிடம்
சொல்லச் சுரந்த
கவிதை முத்துக்களை
ஒவ்வொன்றாய்
கழற்றி
எறிந்துகொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

நிச்சயம் வருவேன்
என்ற உன்
சத்தியமொழி மெல்ல
வெளுக்க வெளுக்க
அதற்குப்
பொய்வர்ணம் பூசிக்கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

மலரசையும் நேரமெல்லாம்
உன்
மார்பசையும்
இசையமுதோவென
எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

நிமிச விசங்களைச்
சீரணிக்கத் தவிக்கும்
என் பொறுமையுடன்

நான்
காத்திருக்கிறேனடி

மூடி மலரும் என் இமைகளே
உன்னை
நேரங்கழித்துக் காட்டிவிடும்
என்றெண்ணி அவற்றைக்
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பிய்த்தெறிந்து கொண்டே.

நீ வரும் வாய்க்காலை
என் விழிகளால்
ஆழப் படுத்திக் கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

அடீ
நீ வரமாட்டாயா

வந்துவிடு
இல்லையேல்
வரமாட்டேன் என்று
என் கல்லறையிலாவது
வந்து எழுதிவிடு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

நான் எப்போது...

உன்னைச் சந்தித்துவிட்டு
சம்மதமற்ற
சமாதானத்தோடு
நான் சாலைவழியே
சலனமற்று
வந்துகொண்டிருக்கிறேன்

என்
சிந்தனையின்
சந்து பொந்துகளிலெல்லாம்
உன் சுகந்த வரம்
சுகமாய் அப்பிக்கிடக்கிறது

உதடுகள் அவ்வப்போது
ஓணம் பண்டிகை
கொண்டாடுகின்றன
ஒரு காரணமும் இன்றி

கீழே
நிலம் இருப்பதும்
நிலத்தின் மீது என்
பாதங்கள் பதிவதும்
எனக்குத் தெரியவில்லை

நான்
நடந்துகொண்டிருக்கிறேன்

என் விழிகள்
மூடிக்கிடக்கின்றனவா
அல்லது
திறந்திருக்கின்றனவா என்றும்
எனக்குத் தெரியவில்லை

நான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

எதிரே
நீண்டு விரிந்து படர்ந்து
நாணப் புன்னகை
பூணிக்கிடக்கும் உன் முகத்தை

நானறியாமல்
உன்னிடமிருந்து
தொற்றிக்கொண்டுவந்த
உன் அடையாளங்கள் எல்லாம்
ஒரு கூட்டமாய்க் கூடி
என்னை எழுதச் சொல்லி
வாஞ்சையாய் வருடிவிடுகின்றன

நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஒவ்வோர் அட்சரத்திலும்
உன் பருவ மூச்சு
பக்குவமாய்
ஒட்டிக்கிடக்கிறது

வழி நெடுகிலும்
நிற்கும் மரங்களெல்லாம்
வணக்கம் சொல்லி
என்னுடன் வாய்மொழிவது
இப்போதுதான்
எனக்குக் கேட்கிறது

நெடுஞ் சாலையின்
நிம்மதிக் கறுப்பு
என்னை
அணைத்துக்கொண்டே
என்னுடன்
பிரியமாய் நடக்கிறது

சுற்றுப்புறக் காற்றெல்லாம்
என் நுரையீரல் நிறைக்க
போட்டி போட்டுக்கொண்டு
சுற்று வரிசையில்
சூழ்ந்து நிற்கின்றன

வான வீதியில்
ஒரு மாபெரும் நட்சத்திரம்
தன் பிரகாசம் பொழியப் பொழிய
என்னையே பார்த்துக்கொண்டு
என்னோடு வருகிறது
தோழமையோடு

வீடு வந்துவிட்டது

வீட்டுக்குள்
என் கால்கள் நுழைந்து
நெடு நேரம் ஆகிவிட்டது

நான் எப்போது
வீட்டுக்கு வருவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

வேடந்தாங்கல் மரக்கிளைகள்

அது ஓர்
இயற்கை உணர்வுகளின்
வசந்த காலம்

வேடந்தாங்கலில்
இரவை அவிழ்க்க
பகல் தன்
விரல்களை நீட்டும்
பவள மாலைப் பொழுது

வண்ண வண்ண
நினைவுகளோடும்
சின்னச் சின்னக்
கனவுகளோடும்
காற்றுக் கடலேறி
சிறகுத் துடுப்பசைத்து
அந்தப் பெருமரத் தீவில்
வந்து அமர்ந்தது ஓர்
போரழகுப் பறவை

அமர்ந்ததும்
மரத்தின் கிளைகளில்
வானவில்லின் வசீகரம்
வந்து
வனப்பாய்த்
தொற்றிக்கொண்டது

பச்சை உயிர் இலைகள்
பட்டமரக்
கிளைகளெங்கும்
படபடவெனத் துளிர்விட்டன

சிலிர்ப்புப் பூக்கள்
சிரித்துக்கொண்டே
பூத்துப் பூத்துக் குலுங்கின

அந்தப் பறவையும்
அத்தியாவசியங்களுக்காய் மட்டும்
அங்கும் இங்கும்
குட்டிக் குட்டியாய்ப் பறந்தாலும்
அந்த ஒற்றை மரக்கிளையையே
தன் உயிர்க் கூடாக்கிக்
கொண்டது

கூட்டோ டு கொஞ்சுவதும்
கொத்திக்கொத்தி
முத்தமிடுவதும்
பித்துப்பிடித்த எச்சிலின்
தித்திப்புப் பொழுதுகள்

வளர்வது தெரியாமல்
பொழுதுகள் வளர வளர
விரிவது தெரியாமல்
பொன்மஞ்சம் விரிய விரிய
அந்தத் தேனோடையில்
அறிவிப்பில்லாமல்
அவசரமாய் வந்து கலந்தது
அந்த நாள் என்னும்
கருநாக விசம்

பறவையின் சிறகுகள்
புயல் காற்றில் விழுந்து
புரட்டிப்போடும்
பொல்லாத காற்றோடு
அடித்துக்கொண்டன

உயரே உயரே எழுந்து
விடைசொல்லத் தெரியாமல்
விடைசொல்லிப் பறந்தது
அந்தப் பொன் வண்ணப் பறவை

வேடந்தாங்கலோ
வெறிச்சோடிப் போனது
பறிகொடுத்தக் கிளைகளெங்கும்
பறவையின் ஞாபகங்கள்
எச்சங்களாய்க் கிடந்தன

வேர்களில்
நீரைத் தேடாமல்
வானம் நோக்கிக் கைகள் ஏந்தி
அந்த மரம்
ஒரு வரம் கேட்டது

கிளைகள் வேண்டாம்
கிளைகள் வேண்டாம்
சிறகுகள்தாம் வேண்டும்
எனக்கும்
சிறகுகள்தாம் வேண்டும்

தீயில் கரையத்தானே

அவன்:

புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒரு நாள் தீயில் கரையத்தானே

உன்மீது நான் வளர்த்த
என் காதலைப்போல

கனவுப் பாதங்களின்
பிரிய அசைவுகளால்
நிலாத் தளங்களில்
புல்லரிக்கப் புல்லரிக்க
சஞ்சரிப்பது மட்டுமே
போதுமானதாகிவிடுமா

கறுத்த மேகங்களை
விரட்டுகின்ற
அடர்ந்த மூச்சுக்களையும்
அடைந்திருக்க வேண்டாமா

என் கையெலும்புகளோ
கோடிச் சுக்கல்களாய்
நொறுக்கப் பட்டவை

என் பிஞ்சுப் பாதங்களோ
உதவாக் கரிக்கட்டைகளாய்
கருக்கப் பட்டவை

என் ஆசைவிழிப் பயணங்களோ
செக்கு மாட்டு எல்லைகளாய்
சுருக்கப்பட்டவை

நின்று நோக்கி
நானும் வரக் காத்திருக்காமல்
ஒடுவதொன்றே குறிக்கோளாய்
ஒடும் கால வெள்ளத்தின்
உடன் செல்லுவதே
மூச்சுத் திணறலில் இருக்க
எதிர்த்து நீந்த
எனக்கேது உர உயிர்

அன்பே
மறந்துவிடு என்னை

நான் உன்னை மறக்காமல்
அமைதி புதைந்த
மயான மேடைகளில்
அழுது கொண்டிருந்தாலும்
என்னை நீ தொடரத் துடிக்காமல்
வெகு தூரமாய்ச் சென்று
மறந்துவிடு என்னை


அவள்:

என்னருமைக் காதலா
உன்னை எடுத்து நிறுத்தும்
தன்னம்பிக்கையாய்
நானென் சத்தான முத்தங்களைச்
சரம் சரமாய் அனுப்புகிறேன்

அவற்றை
இறுக்கமாய்க் பிடித்துக்கொண்டு
ஏறிவர முயல்வாயா?

ஒரு குங்குமப் பொட்டு அளவிற்கேனும்
நீ உன் விருப்பம் சொல்
உனக்குள் உறங்கிக்கிடக்கும்
ஆண்மை விழித்தெழ
உன் உயிர் உசுப்பி
உன்னை அந்த வான உச்சிக்கே
ஏற்றி வைக்கிறேன்

உன் வக்கற்ற வார்த்தைகளால்
காலம்காலமாய் வலிமைகொள்ளும்
சமூகத் தடைகளும்
பொருளாதாரத் தடுப்புகளும்
நாளைய உள்ளங்களையும்
நம்பிக்கையில்லாப் புற்களாக்கிவிடும்
என் அன்புக் காதலா

நேற்றுவரை
மூச்சுமுட்டி மூச்சுமுட்டி
மடிந்த காதலர்களின்
கண்ணீர்ப் பூக்களையெல்லாம்
ஒவ்வொன்றாய்க் கோத்து
ஒரு துயர மாலை தொடுத்து
இன்று நம் காதலுக்குப்
பரிசளிக்கும்
மரண கோழையல்ல நான்

நம் காதல் வாழவேண்டும்
உன் அவநம்பிக்கை
சாகவேண்டும்

இதுவரை சுரந்த
உன் கண்ணீரையும்
வெட்டியாய் விட்டுவிடாமல்
தடைகளைத் தின்னும் திராவகமாய்த்
திரிப்போம் வா

அதைவிடுத்து
தோல்விக்குக் காரணம் தேடும்
துரோகிதான் நீ என்றால்
இன்றே இப்பொழுதே
இறந்துவிடு என் கண்முன்

இல்லையேல்
என் காதல் விழிகளே இன்று
கோடிச் சூரியன்களாய்க்
கூர்தீட்டி நின்று உன்னைப்
பொசுக்கிச் சாம்பலாக்கும்

அழகு

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு

விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு

புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு

நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு

இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு

சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு

கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு

மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு

கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு

கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு

விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு

இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு

கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு

மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு

காதல் சிறகு

சின்னஞ்சிறு கன்னி வாழை
தங்கப் பேழை
புதுத் தாழை
எந்தன் அந்தப்புரம்
வரும் நாளை

அந்தத்
தேனூறிடுந் திருநாளினுள்
தினந்தோறுமென் மனந்தாவிட

ஏங்கும் கண்ணில் தினம் சோகம்
உருவாகும்
அதிவேகம்
இன்னும் எத்துணைக் காலம்
இத்தாகம்

செல்லக்
கிளியேயுன் இடைதாவிடத்
தடையானயென் நிலைகூறிட

வருவேன் என் சிறகினை விரித்து
தேதி குறித்து
பூக்கள் பறித்து
உந்தன் கண்களின்
அருவியை நிறுத்து

காதல் தலைசாய்வதோ

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்
தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

ஏந்திய கரங்களில் தேனமுதாய் - உள்ளம்
எடுத்துக் கொடுத்தபின் ஏன் தயக்கம்
தூரிகை எடுத்துவா கண்ணோரம் - என்னைத்
தொட்டு வரையலாம் சிந்தூரம்

ஆவிக்குள் பொன்னூஞ்சல் ஆடுகின்றாய் - அன்பே
ஆசையைச் சொன்னாலோ ஓடுகின்றாய்
தேனிதழ் பாடிவா தேவதையே - என்னைத்
தேற்றிட நீயல்லால் வழியில்லையே

பூமுகப் புன்னகை மொட்டாவதோ - பொழுதும்
புரியாத மௌனங்கள் நமை உண்பதோ
சூரியன் கண்ணீரில் கரியாவதோ - அந்தச்
சூத்திரம் சொல்வதுன் விழியாவதோ

காதலன் பொன்மனம் புண்ணாவதோ - அந்தக்
கொடுமையின் காரணம் நீயாவதோ
தாமதம் காதலின் பயிர்மேய்வதோ - பெண்ணே
தாகத்தால் உனதெந்தன் உயிர் சாய்வதோ

மானிடம் பூத்தது காதலுக்காய் - அந்த
மன்மத ராகங்கள் வாழ்வதற்காய்
தீந்தமிழ்ச் சொல்லென என்நாவினில் - என்றும்
தித்திக்கத் தித்திக்க உன் வாசமே

சாவதும் வாழ்வதும் நமதல்லவா - பழைய
சாத்திரம் சொல்வதும் சதியல்லவா
போவதும் புதைவதும் உயிரல்லவா - உறவில்
பொய்மை நம் கழுத்துக்குக் கயிறல்லவா

மானோடு மலராடும் பூஞ்சோலையில் - உந்தன்
மடியோடு மடியாக நானாகணும்
தேனூறும் ஒவ்வோரு எழுத்தாகவே - உன்னைத்
தினந்தோறும் எழுதி நான் கூத்தாடணும்

யாரோடும் சேராத நம்மாசைகள் - மண்ணில்
யாருக்கும் புரியாமல் போனாலென்ன
ஊரோடும் உறவோடும் கைதாவதோ - வேறு
உலகங்கள் சொன்னாலும் தலைசாய்வதோ

கடலும் காற்றும்

கடலெனக்
கிடப்பவள் பெண்

காற்றென
அலைபவன் ஆண்

கடலின் ஆழம்
புதிர் போடும்

காற்றின் வேகம்
விடை தேடும்

காதல் நிகழ்வுகள்

உன்
பவள விரல்கள்
என் பிடறி முடிக்குள் புகுந்து
காதல் தேடும்போது

காம்பில் தவமிருக்கும்
அத்தனைப் பூக்களும்
மொட்டுடைந்து போகின்றன

பச்சைப் போர்வைக்குள்
படுத்துறங்கும்
காய்களெல்லாம்
பழங்களாய்ப்
பழுத்துவிடுகின்றன

ஐம்பூதங்களும்
நரம்புகளுக்குள்
புகுந்து
ஆட்சி செய்கின்றன

வருவாளா

ஆயிரம் பெண்ணின்
காதலைச் சுமந்து
ஒரு பெண் வருவாளா
என் உயிருடன் துடிப்பாளா

என் தாகம் கோத்த
ராகம் கேட்டு
பாடல் புனைவாளா
அதில் பரவசம் கொள்வாளா

தவிப்பின் தவங்கள்
வரமாய் மலர
உணர்வைத் திறப்பாளா
அதில் உயிரைக் கரைப்பாளா

இருளின் அணைப்பில்
ஏக்கக் கொதிப்பில்
உருகும் உயிரை
இறுக்கிப் பிடிப்பாளா
இடர் கருக்கிச் சிதைப்பாளா

எச்சில் நெய்யால்
துயரம் எரிக்கும்
ஈர முத்தங்கள்
வாரித் தருவாளா
அதில் ஊறித் திளைப்பாளா

மொத்தச் செல்களின்
நித்திரைத் தவிப்பின்
சத்தம் நிறுத்தப்
பாலூட்ட வருவாளா
காதல் பசியாற்ற வருவாளா

வண்ணவிழிகளோ வலைத்தளங்கள்இந்தக் கவிதையைப் பற்றி மாலன் :

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. இன்று நேற்று அல்ல, அநாதி காலம் தொட்டு இதுதான் கதை. காதல் கவிதை எழுதப்படாத மொழியே உலகில் இல்லை. கவிதையைப் பரிமாறிக் கொள்ளாத காதலர்களும் அபூர்வம்.

தமிழ் இதற்கு விதி விலக்கு அல்ல. முன்னோடி. உலகில் உள்ள பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் காதல் கவிதைகள் தோன்றிவிட்டன. மொழிக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன், கவிதைகளை அகம் புறம் எனத் திணைகள் வகுத்தான்.

எனவே தமிழில் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் முன் ஒரு சவால் இருக்கிறது. இங்கு காதலும் பழசு. கவிதையும் பழசு. ஆனால் எழுதப்படுகிற காதல் கவிதை மட்டும் புதுசாக இருக்க வேண்டும்!

ஆனால் இது சந்திக்க முடியாத சவால் அல்ல. பழைய மரம் தினம் புதிதாய்ப் பூப்பதைப் போல இங்கு காதல் கவிதை பூக்க வேண்டும். காதல் கவிதையை 'செய்ய' முயன்றால். பழைய வாசனை, பழைய சாயல், பழைய பாணி வந்து விடும்.

புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.

நெடுக அளந்து கொண்டே போகிறீர்களே, அப்படி என்ன இந்தத் தொகுதியில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

சின்ன இதழ்களோ
மின் மடல்கள் - சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

இப்படி ஒரு வரியை இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழந்த பெருங்கவிஞர்கள் யாரும் எழுதியிருக்க முடியாது. இணைய உலகில் வாழ்கிற பேறு பெற்றவர்களுக்குத்தான் இந்த வரிகள் வாய்க்கும்.

இது ஏதோ தற்செயல் அல்ல. இன்னொரு மாதிரி பார்க்கிறீர்களா?

தடதடக்கும் தட்டச்சுப் பலகை - அதன்
தாளலயம் வெல்லுமிந்த உலகை

-மாலன்வண்ணவிழிகளோ வலைத்தளங்கள்

சின்ன இதழ்களோ
மின் மடல்கள்
சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்
பெண்ணே உன்
புன்னகை
மென்கணிச் சாளரங்கள்
கண்டதும்
உன் மன இணையமே
என் தவங்கள்

ஈ. விமரிசனம் - ஆல்பர்ட் - வெளிச்ச அழைப்புகள்


நம்மவர்களால் உருவாகும் கவிதைகளில் பெரும்பாலும் எல்லாம் இருக்கிறது; கவிஞர்கள் இருப்பதில்லை. கவிதை என்கிற கூட்டுக்குள் கவிஞன் என்ற காலப் பறவை குறுகுறுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது கவிதை அல்ல; வெறும் உளறல். தனது பட்டறிவை தானும் தனது குமுகாயமும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளுவதில் தனது பங்களிப்பைப் பற்றிக் கவலையே படாத பலரும் கவிஞர்கள், கவியரசர்கள் என்ற வெற்றி உலாப் போகிற பூமிப் பந்தில் கவிஞர் புகாரி சற்று வித்தியாசமாக வெளிச்சமிடுகிறவர்.

தங்களின் காலணாப் பெறாத கவிதைக் குப்பைகளை புத்தகமாகப் போட்டு மகிழ்ந்து போகிறவர்கள் மலிந்து போன உலகமிது! தன் ஒவ்வொரு எண்ண அதிர்வுகளையும் உன்னத உணர்வோடு,குமுகாயப் பொறுப்புணர்வோடு மக்கள் மதித்துப் படிக்கின்ற பத்திரிக்கைகளில் முத்திரைக் கவிதையாக வெளி வந்த ஒவ்வொரு கவிதை முத்தையும் சிந்தாமல் சிதறாமல் திரட்டி ஒரே புத்தகத்தில் நம்மைப் படிக்க வைத்த கவிஞர் புகாரிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும், தமிழில் பேசினால் தன் சுயமரியாதைக்கு இழுக்கு என்று எண்ணி வலம்வருகின்ற பலருக்கு மத்தியில்

"என் தாய் மொழி தமிழ் என்பதில்
எனக்கு அளவில்லா ஆனந்தம்!
தமிழகத்தில் பிறந்த நான்
இன்று கனடாவில் வாழ்கிறேன்.
இங்கே,
ஒரு தமிழனைச் சந்தித்து
**தமிழில்** உரையாடும்போது மட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன். "என்ற கவிஞரின் முன்னுரை வரிகள் அவரை யார் என்று தீர்க்கமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தமிழன் என்ற உணர்வில்லாமல் மரித்து, மக்கிக் கல்லறையில் கிடக்கும் பிணத்திற்குக்கூட எழுந்து விட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகிற வரிகளிது.

கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகின்ற கவிஞர் புகாரி,

"அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களை எல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது...


கூடவே சுருங்கிப் போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித் தரும் சந்தனக் காற்று! ..."
என்கிறார். நேர்த்தியான வார்த்தை வைரங்களை, மிக நுணுக்கமாகச் செதுக்கி இழைத்து இந்தக் குமுகாயத்துக்கு அளிக்கும் கவிதைக் கலைஞன்!

இதுதான் வணிக தர்மமா? என்று கொதித்துக் குமுறுகிற கவிஞர், அரிசியிலிருந்து அரசியல் வரை, சாமான்யன் முதல் கோமான் வரை இலவசங்களால் சீரழிகின்ற உண்மையை,

முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிப்பேர்
முழுபலகீனர்களே என்பது
முக்காடு போடும் வெட்கம்...


என்று சாடுகிறபோது அவரின் சமுதாய உறுத்தல் வெளிப்படுகிறது. மீன் குஞ்சுகளின் மின்னல் நீச்சல்களைத் தவிர வேறு ஒன்றினையும் கவிதைகளுக்குக் கருப்பொருளாக்கத் தெரியாதவர்களுக்கு ஒரு காலச் சொடுக்காக இங்கே புகாரி முகம் காட்டுகிறார்.

காலத்தின் அருமை பெரும்பாலும் நம்மவர்களுக்கு புரிபடுவதுமில்லை; அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை. ஆறுமணிக்கு விழா என்றால் எட்டு மணிக்கு சாவகாசமாய் வந்தே பழக்கப்பட்டவர்கள். அது இலக்கியவாதி என்றாலும், அரசியல்வாதி என்றாலும் அவர்களோடு உடன்பிறந்தது தாமதம்! அந்தத் தாமதம் என்ற தலைப்பில் கவிஞர் எழுதிய கவிதையை அச்சிட்டுவிழாவில் பேச வருகிறவர்களுக்கு முன்கூட்டியே கொடுத்து விட்டால் இந்தக் குற்றம் குறையும் என்றே தோன்றுகிறது. ஆகாயத்தை அகலமாக்கி விடுகிற கவிஞரின் காந்தப் பார்வையில் இதுவும் ஒரு சிறப்பான கவிதை.

"நேரம் தாண்டும்போது
உயிருக்குள் புயலொன்று வீசாதா?

தருணத்தில் வாரா
ஞாபகமும்
காலத்தே வாரா
அறிவும்
துயரக் கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்...
என்று பொங்கியெழுகிறார்.

அழகாக எழுதுவது மாத்திரமா கவிதை? அந்தி வானத்தைவிட நாம் என்ன எழுதிவிடப் போகிறோம்? கைகால் முளைத்த கவிதையான குழந்தையின் கன்னத்தில் சுழி ஒன்று நிரந்தரமாகப் பள்ளம் தோண்டுகிறதே அதை விடவா அழகான கவிதை பண்ணிவிடப்போகிறோம். அதர்மத்தை எதிர்க்கின்ற துணிச்சல், அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளியெறிகின்ற பங்களிப்பு கவிஞரின் தனிச் சிறப்பாக மிளிருகிறது. இன்னும் விடியாமல் என்கிற தலைப்பில் அரசியல் சாக்கடைப் புழுக்களுக்கும் ஏமாளி மக்களாய் வாக்களிக்கும் வர்க்கத்துக்கும் அவர் தன் கவிதைச் சாட்டையைச் சொடுக்குகிறார்.

எத்தனையோ கற்பக விதைகள்
தங்களை
இதில் விதைத்துகொண்டு
கள்ளிகளாய் வளர்ந்துவிட்டன...!என்றும்,

சுதந்திர மரத்தின்
வேர்களுக்கு நீரூற்ற வந்த
ஒவ்வொருவருமா
அதன் கிளைகளைத் திருடுவது...?என்றும்

கைநாட்டுகள்தாம்
கைத்தட்டுகின்றன என்றால்
இந்தக் கற்றோர்களில் பலருங்கூட
இங்கே கண்மூடியல்லவா கிடக்கிறார்கள்?


என்று சாதாரணக் கவிதையாக முகம் காட்டினாலும், அதற்குள் முகமிழந்து கொண்டிருக்கிற இந்திய சாம்ராஜ்யத்தின் முகவரி அல்லவா தென்படுகிறது? வெட்கப்படு இந்தியனே நீ வெட்கப்படு..! என்று வேகப்படுகிறார். இறுதியாய் ஒரு கேள்வி என்ற தலைப்பில் இப்படி மாண்டு தீர்த்தால் இந்த மதங்கள் யாருக்கு? அந்த இறைவந்தான் யாருக்கு? என்று செவிட்டில் அறைந்தாற்போன்று ஒரு வினாக் கவிதை குசராத் கொடுமைக்கு கனன்று எரிகின்றன.

கவிஞர் ஒரு கவிதையில் தானும் அழுது, வாசிப்பவரையும் அழ வைக்கிறார். ஆம்! எங்கள் கலைக்கூடம் கலைந்தது என்று சொல்லி நடிகர் திலகம் மறைவுக் கவிதையை முத்தாய்ப்பாய்ப் படைத்துள்ளார்.

கரிசல்காட்டு கடுதாசியில் தொலைதூரத்துக் கிராமங்களை நம் கண் முன் விரிய வைக்கிறார்; தாயின் வாஞ்சையை, சகோதரனின் பிரிவை, இதயத்தை ஊடுருவி சில்லிட வைக்கும் நடுக்கும் குளிர்குறித்து, தன் நெஞ்சில் சுரந்ததை கவிதை யாத்திருக்கிறார். கவிதை நாலு வரிகளிலும் எழுதலாம்; நாற்பது வரிகளிலும் எழுதலாம். கவிஞர் புகாரிக்கோ கவிதை ஊற்றெடுத்தால் அதை, ஒரு புத்தகம்முழுக்க பிரசவித்துவிடுகிற பேராற்றல் வசப்பட்டிருக்கிறது.

கவிதை என்பது கற்பனை என்கிற பழைய உலகம் பாழ்பட்டுப் போகட்டும்; கவிதை என்பது கைவாள் என்கிற புதிய உலகம் முழுவதுமாகப் பூக்கட்டும். இந்தப் புதிய உலகத்தின் அழுத்தமான அடையாளங்களில் ஒன்றாக புகாரியின் "வெளிச்ச அழைப்புகள்" படைப்பு! இது முலாம் பூசப்படாத முழு உண்மை.