முன்னுரை - சரணமென்றேன்

உயிர் முத்தங்கள்

காதலால்
நிறைந்த
ஐம்
பூதங்களுக்கும்
நிறைக்க
முடியாத
ஐம்
பொறிகளுக்கும்
என் காதல் கடல்கள் கணந்தோறும் எழுப்பும் உணர்வு அலைகள் கணினிக் கரைகளில் முத்தங்களாய்ப் பதித்த கவிதைகளை என் மூன்றாம் தொகுப்பாக காகிதங்களில் இறக்கி இருக்கின்றேன்.

இன்னும் இன்னும் எழுதப்படாத எத்தனையோ கோடி காதல் உணர்வுகள் இதயத்தின் இடுக்குப் பகுதிகளையும் சன்னமாய்க் குறிவைத்து புரியாத புயல்களாய் வீசிக்கொண்டிருக்கின்றன.

அவை ஒவ்வொன்றையும் பிடித்துப் பிடித்து கவிதைக் கிரீடங்கள் சூட்டிக் கௌரவப் படுத்தாமல் என் விரல்கள் நெட்டி முறிக்கப் போவதில்லை. இருப்பினும்... எழுதமுடியாத யுகம் தாண்டும் எத்தனையோ கவிதைகளை உணரவும் சுவைக்கவும் செய்வது காதல் என்னும் மகாகவிதானே?

காதல் உயிர்களின் பாடசாலை அதில் கற்க கற்கத்தான் அண்டத்தின் அனைத்தும் செழிக்கின்றன.

இதயத்தின் அத்தனை வலிகளிலிருந்தும் அழுத்தும் பாரங்களிலிருந்தும் காதல் என்னும் புனிதமே விடுதலை தருகின்றது

காதல் தோல்விகளைக் காதலின் எல்லை என்று எண்ணுவது அறிவை அலட்சியப்படுத்திவிட்டு வந்த அவசரக் கருத்து

பெரும்பாலான தருணங்களில் தோல்விகளே நல்ல காதலுக்கு வலுவான அடித்தளமாக இருக்கின்றன.

ஒரு தோல்விக்குப் பின் மலரும் புதிய காதல் மிகவும் புனிதமானதாகவும் வலிமையானதாகவும் இருக்கின்றது. அதுவே சில்லறைச் சிலிர்ப்புகளை நீக்கி வாழ்க்கைக்குப் புதிய புதிய அர்த்தங்கள் சொல்கிறது.

காதல் கடிதம் எழுதும்போது கிறுக்கல்கள் எல்லாம் சித்திரங்கள் ஆகின்றன

காதல் கவிதை எழுதும்போது சொற்களெல்லாம் சொர்க்க வாசனை ஏற்றிக்கொள்கின்றன. அக்கணங்களில் காகிதங்களில் இறங்குவது எழுத்துக்கள் அல்ல, முத்தங்கள்.

பல்துலக்கும்போதும் காதலியின் ஞாபகம் பளிச்சிட்டால் வேப்பங்குச்சிகூட பல நூறு முத்தங்களைப் பெற்றுக்கொள்கிறது.

துளித்துளியாகத்தான் என்றாலும் அந்தத் துளிகளுக்குள் முழுமையாய் வாழ்வதே வாழ்க்கை என்று உணரச் செய்வதே காதல்.

வைரத்தையும் துளைத்து வேர்கள் பதிக்க வீரியம் கொண்டது உலகில் காதல் பயிர் ஒன்றுதான்

ரசனையும் விருப்பமும் காதலாகிவிடாது
அன்பும் நட்பும் காதலாகிவிடாது
பக்தியும் பரவசமும் காதலாகிவிடாது
முத்தமும் மோகமும் காதலாகிவிடாது
பாசமும் தவிப்பும் காதலாகிவிடாது
கருணையும் இரக்கமும் காதலாகிவிடாது
ஆனால் காதலுக்குள் இவை யாவும் இருக்கும்

எந்த ஒரு காட்டுப் பாதையையும் பறவைகள் கால் நோகாமல்தானே கடக்கின்றன? அதைப் போல எந்த ஒரு துயர வாழ்க்கையையும் காதல் சிறகுகளுடன் கடந்தால் அதுவே சௌந்தர்யப் பயணமாகிவிடும்.

காதலெனும் பனி பொழியப்பொழிய கரடு முரடுகள் தெரிவதில்லை
காதலில் மனம் கனியக்கனிய காதலர்க் குறைகள் பொருட்டில்லை
காதலெனும் காற்று வீச வீச கிளைகளில் முட்கள் நிலைப்பதில்லை
காதலெனும் நதி பாயப்பாயப் பசுமைக்கு நெஞ்சில் பஞ்சமில்லை.

காதலில் ஏமாற்றம் கொடுமையானதுதான்
ஏமாற்றியவர்கள் ஏற்கவேண்டிய அத்தனை தண்டனைகளையும்
ஏமாறியவர்களே ஏற்பது எத்தனை கொடுமை?

ஏமாறியவன் தன் ஏமாற்றத்தையே வெற்றியின் வேர்களாக்கி இன்னொரு சாக்கடைக்குள் தன் மூக்கைக் கொடுத்துவிட்டாலும் சத்து நீர் மட்டுமே சுவாசித்து எழுந்தால் ஏமாற்றங்களெல்லாம் தூள் தூளாகும் தண்டனைகூட திசை மாறிப் போகும்

காதல் அன்று புறாக்காலில் துவங்கி இன்று கணினி மடிகளில் கதகதப்பாய் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஓயாத அந்த உயிரோட்டம்தான் உயிர்களின் மூலம்.

காதல் இல்லாவிட்டால், புல்லும் பூண்டும் கூட சுவாசிக்க முடியாது.

வானத்துக் கோள்களும் வாஞ்சையாய்க் காதலிக்கின்றன ஒன்றை ஒன்று சுற்றிச் சுற்றி ஓயாமல் ஈர்த்து ஈர்த்து குதூகலிக்கின்றன.

உயிர்களைப் புதுப்பிக்க காதலேயன்றி வேறு நூதனமில்லை.
உலகை இனிப்பாக்க காதலேயன்றி வேறு சாதனமில்லை.
இயற்கை சுழன்றோட காதலேயன்றி வேறு சக்கரமில்லை.

இந்தப் பிரபஞ்சம் நிஜமென்றால்
அழிந்தழிந்து எழுகின்ற அதன் தத்துவம் சத்தியமென்றால்
எல்லா உயிர்களும் காதல் உயிர்கள்தாம்
எல்லாப் பொழுதுகளும் காதலர் பொழுதுகள்தாம்

பாராட்டுரை - பெருங்கவிக்கோ - சரணமென்றேன்

காதல் சிறகுகளால் காலத்தை வெல்லலாம்-பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன்
மின்னல் கிழிக்கவோ மேல்வான் கிழியுமெனும்
கன்னல் உவமைபோல் காதலுக்குப் - பன்னல்
மீக்கூறும் வெல் உவமை விஞ்சும் உணர்வு அலை
தாக்கும் புகாரி தமிழ்!


என்றன் உலகளாவிய பன்னாட்டுப் பயணங்களில் பல அறிவும் செறிவும் நெறியும் கொண்ட நன்மக்களை நல்லறிஞர்களை வெல்லும் கவிஞர்களைச் சந்தித்திருக்கிறேன். இத்தகுதிவாய்ந்த பெருமக்களுள் உயிர்ப்பும் உண்மையும் அழகுணர்வும் கொண்ட ஆற்றல் வாய்ந்த கவிதைகளைப் படைக்கும் பெருமகன், மனித நேயம்கொண்ட மாமணி, இதயத்தோடு பழகித் தமிழ், தமிழர்க்குத் தொண்டாற்றும் உள்ளொளி உடையவர் புகாரி என்பதை 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற அய்யன் திருவள்ளுவர் வழி அறிந்தேன்.

இணையத்தில் நூல் வெளியிட்டு தமிழ் உலகம் தலை நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை முதன்முதலில் உருவாக்கியவர் கவிஞர் புகாரி என்று நண்பர் மாலன் கூறுகிறார். மாட்சிமிகு மாலன் போன்றவர்கள் யாரையும் முகமனுக்காகப் புகழ்பவர்கள் அல்ல! மாலனே இவருக்கு மகுடம் சூட்டுகிறார் என்றால் புகாரியின் உன்னத கவிதை ஆற்றலும் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துக்காட்ட ஓங்கிய செயற்பாடுகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவுமே புகாரியைத் தலை நிமிரச் செய்கிறது. முதன் முதலாக இணையத்தில் கணினித் தமிழில் முதல் புத்தகத்தைக் கொண்டுவந்தவர் நம் புகாரி என்பதை அறியும்போது அவர்தம் இலக்கை எய்தும் உழைப்பை, உத்தியை எண்ணி வியப்படைகிறேன்.

படைப்பாற்றல் மிகுந்த புகாரி அவர்களின் 'சரணமென்றேன்' என்ற காதல் கவிதைகளின் தொகுப்பைப் படித்தேன். படித்தேனாக இனிக்கும் காதல் தேன் குடமாகத் தித்திக்கிறது புகாரியின் காதல் கவிதைகள். தமிழில் காதல் கவிதைகளுக்குப் பஞ்சமில்லை. நம் சங்ககாலத்திலிருந்து இன்றைப் படத்துறைக் கவிஞர்கள் வரை உள்ள காதல் கவிதைகள் சமுதாயத்தின் விளைநீராகிப் பெருகி வருகின்றது. காதல் இல்லையே மாந்தரில்லை! மனிதம் இல்லை! உலகம் இல்லை. எனவேதான் மகாகவி பாரதியார்

"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"
என்று பாடினார்!

புகாரியின் சரணத்தில்

நிலைகுலைக்கும் நீள்விழியின்
ஒயிலாட்டம் - என்
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும்
புயலாட்டம்


என்று அவளின் நீள்விழி இவனை நெஞ்சடுப்பில் புயலாகத் தள்ளுவதைச் சுவைக்க முடிகிறது. முகம்கண்டு வருங்காதல் மயக்கத்திற்கும் அகங்கண்டு இணைகின்ற உள்ளத்திற்கும் மூன்று நாள் அண்டவெளி ஈர்ப்பினை உவமை காட்டுவது காதல் வெறும் களவாக மட்டும் நின்றுவிடாது கற்புநிலைக் காதலாகக் காலம் வெல்லவேண்டும் என்ற நிலைத்த தமிழர்தம் வாழ்வியலை வகுக்கிறது.

கயிறிழுக்கும் போட்டியுள்ளே நடக்குதடி - என்
கர்வமெல்லாம் பெண்மையிடம் தோற்குதடி

தவிப்பின் தவங்கள் வரமாய் மலர
உணர்வைத் திறப்பாளா - அதில்
உயிரைக் கரைப்பாளா

சின்னச்சின்னக் கன்னப்பாளம்
கிள்ளக்கிள்ள நாடித்தாளம்

சின்னஞ்சிறு கன்னிவாழை
தங்கப்பேழை புதுத்தாழை - எந்தன்
அந்தப்புரம் வரும் நாளை


வாசகர்கள் அக அந்தப்புறத்திற்கு விருந்து வைக்கின்றார் புகாரி! வெறும் உடலோடும் உள்ளத்தோடும் மட்டுமல்ல ஆன்மாவோடும் கவிஞர் காதல் கொள்கிறார்.

"புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒருநாள் தீயில் கரையத்தானே" என்றும்

"என் காதல் விழிகளே இன்று
கோடிச் சூரியன்கள்"
என்றும் ஆன்ம உயிர்க் காதலைத் தரிசிக்கிறார்

கிளைகள் வேண்டாம்
கிளைகள் வேண்டாம்
சிறகுகள்தான் வேண்டும்


இந்தக் காதல் சிறகுகளால், பாறைக்குள் ஈரம் தேடுகிறார், நேசமற்ற நெஞ்சில் பாசம் தேடுகிறார். சுயநல மனத்துக்குள் நியாய ஒளி தேடுகிறார். கவிஞரின் கனவுகள் காதல் தேர்வில் விரிவான விடைகளைத் தேடுகிறது.

அந்தரங்கமாய் விழும்
உன் விழிகளை அடைகாத்த
என் இதயப் புறா
ஆர்ப்பரிக்கும் நினைவுக் குஞ்சுகளாய்
முடிவில்லாமல்
பொறிந்துகொண்டே
போகும்

காதல் நினைவுகளில் கவிஞர் சரணமடையும் காட்சிகள் இந்த நூலிக் சுவைக்கும் சுவை நல்குகின்றன

மின்னல் கிழிக்க வானம் கிழியுமோ
இன்னல் கிழிக்க காதல் கிழியுமோ


என்பது போன்ற எளிய இனிய உவமைகள் படிப்போர் செஞ்சில் கொஞ்சி விளையாடுகின்றன.

பன்முறை யான் கனடா வந்திருந்தாலும் இந்தப் பயணத்தில் கவிஞர் புகாரியின் அறிமுகம் நெஞ்சத்திற்கு ஆறுதல் தரும் உவகை தந்தது. அமெரிக்கா சென்றபோது அறிவியல் அறிஞர் நாசா கணேசன் இல்லம் தங்கியிருந்தேன். அப்போது தாங்கள் கனடா சென்றால் புகாரி என்ற அற்புதமான கவிஞரைச் சந்தியுங்கள் என்று கவிஞரை அறிமுகப்படுத்தினார் கணேசன். உண்மையிலேயே அற்புதம் வாய்ந்த கவித்திறம் படைத்த கவிஞர் புகாரியின் கவிதைப் பணி வாழ்க வெல்க.

காதல் சிறகுகளால் காலத்தை வெல்லலாம்
காதல் உறவொன்றே கண்களாம் - காதலே
காதலைக் காக்கும்களம் அமைக்கும்! காதலோ
காதல் உலகுயர்வுக் காற்று


அன்பன்
வ.மு.சேதுராமன்

பிப்ரவரி 28, 2004

அணிந்துரை - மாலன் - சரணமென்றேன்


ஆதலினால் கவிதை செய்வீர். . .
-மாலன்


காதலுக்கும் கவிதைக்கும் ஒரு மனது வேண்டும்

ஒரு மனது அல்ல, ஒரே மாதிரியான மனது. நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் மீது ஒரூ உபாசனை இவை ததும்பும் மனது. இது இல்லாதவர்கள் காதலிக்கவும் முடியாது. கவிதை எழுதவும் முடியாது. இவையற்ற கவிதையும் சரி, காதலும் சரி பொய்யானதாக இருக்கும். அவை காமமாகத் திரியும். அல்லது வார்த்தைகளாகச் சரியும்.

இந்த மனது புகாரிக்கு இருக்கிறது. அதற்கு சான்று இந்தக் கவிதைகள்.

இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

அறிவின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைத்தவன் துறவியாகிறான். உணர்ச்சிகளின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைத்தவன் காதல் கொள்கிறான். அதனால்தான் துறவி முற்றிலுமாக உலர்ந்து இருக்கிறான். காதலன் முழுதுமாகக் கரைந்து போகிறான். என்றாலும் அறிவும் உணர்ச்சியும் எதிர் எதிர் துருவங்கள் அல்ல, அடுத்தடுத்த வீடு

ஆனால் கவிதை என்பது காய்ந்த சருகாகவோ, கரை மீறிய கடலாகவோ இருந்து விட முடியாது. சருகில் விழுந்த பனித் துளியாக, கடலுக்குள் பூத்த முத்துச் சுடராக, அது இருக்கும். துறவியின் ஒழுங்கையும், காதலின் நெகிழ்வையும் அது தனக்குள்ளே கொண்டிருக்கும். அறிவையும் உணர்ச்சியையும் ஊடும் பாவுமாக நெய்தால் கவிதைகள் கிடைக்கும். .

இதற்கும் சான்று புகாரியின் இந்தக் கவிதைகள்.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. இன்று நேற்று அல்ல, அநாதி காலம் தொட்டு இதுதான் கதை. காதல் கவிதை எழுதப்படாத மொழியே உலகில் இல்லை. கவிதையைப் பரிமாறிக் கொள்ளாத காதலர்களும் அபூர்வம்.

தமிழ் இதற்கு விதி விலக்கு அல்ல. முன்னோடி. உலகில் உள்ள பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் காதல் கவிதைகள் தோன்றிவிட்டன. மொழிக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன், கவிதைகளை அகம் புறம் எனத் திணைகள் வகுத்தான்.

எனவே தமிழில் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் முன் ஒரு சவால் இருக்கிறது. இங்கு காதலும் பழசு. கவிதையும் பழசு. ஆனால் எழுதப்படுகிற காதல் கவிதை மட்டும் புதுசாக இருக்க வேண்டும்!

ஆனால் இது சந்திக்க முடியாத சவால் அல்ல. பழைய மரம் தினம் புதிதாய்ப் பூப்பதைப் போல இங்கு காதல் கவிதை பூக்க வேண்டும். காதல் கவிதையை 'செய்ய' முயன்றால். பழைய வாசனை, பழைய சாயல், பழைய பாணி வந்து விடும்.

புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.

நெடுக அளந்து கொண்டே போகிறீர்களே, அப்படி என்ன இந்தத் தொகுதியில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

சின்ன இதழ்களோ
மின் மடல்கள் - சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

இப்படி ஒரு வரியை இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழந்த பெருங்கவிஞர்கள் யாரும் எழுதியிருக்க முடியாது. இணைய உலகில் வாழ்கிற பேறு பெற்றவர்களுக்குத்தான் இந்த வரிகள் வாய்க்கும்.

இது ஏதோ தற்செயல் அல்ல. இன்னொரு மாதிரி பார்க்கிறீர்களா?

தடதடக்கும் தட்டச்சுப் பலகை - அதன்
தாளலயம் வெல்லுமிந்த உலகை

இணையம், கணினி, விசைப்பலகை என்று இயந்தரத்தனமாக இருக்கிறதோ கவிதைகள் என்று உங்களுக்கு சந்தேகங்கள் வரலாம். ஆனால் தொழில் நுட்பங்கள் வாழ்க்கை ஆகி விடாது என்று அறிந்தவர் புகாரி. வாழ்க்கை மனதால் வாழப்படுவது. மனதால் ஆளப்படுவது. மனதால் பேணப்படுவது. அது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம். ஆனால் மன உலக வாழ்க்கைக்கும் மண்ணுலக வாழ்க்கைக்கும் இடையில் பொருளாதாரம் என்ற பாலம் இருக்கிறது. அது எல்லா நேரமும் பாலமாகவே இருப்பதில்லை. சில நேரங்களில் கதவாகவும் ஆகி விடுகிறது. நீங்காத் தாழ் கொண்ட நெடுங்கதவு.

அப்படி ஒரு கதவின் இரு புறமும் அகப்பட்டுக் கொண்ட ஒரு இளம் ஜோடியைப் பற்றி எழுதுகிறார் புகாரி. அவர்கள் இணையத்தாலே இணைக்கப்பட இயலாதவர்கள். தட்டச்சுப்பலகைகள் கொண்டுத் தங்களுக்குள் பாலங்கள் அமைக்கும் பொறியியல் அறியாதவர்கள். திருமணமாகி ஒரு திங்களுக்குள் அவர்கள் பிரிய நேர்கிறது. பொருள் வயிற் பிரிவு. கணவன் அவன் பணி புரியும் அயலகத்திற்குக் கிளம்பிப் போகிறான் அந்த ஒரு மாத உறவில் கருவுற்று விட்ட மனைவி கடிதம் எழுதுகிறாள், காதலும் தாபமும் கலந்த கவிதையாக.

மனத்தை உருக்குகிறது கவிதை. கவிதைக்குள் பெண் குரல். பெண் மொழி, பெண் விழி, பெண் மனம். புகாரியும் ஒரு பெண்ணாக மாறி இருந்தால்தான் இப்படி எழுதுவது சாத்தியம். ஆணைப் பெண்ணாக மாற்றும் அதிசயத்தைக் கவிதை செய்யும். ஆழ்ந்து பார்த்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மனம் ஆணா? பெண்ணா?

மனம்தான் கவிதையாகிறது.

அண்மையில் இலங்கை போயிருந்த போது வட்டிலப்பம் என்று ஒரு இனிப்புப் பரிமாறினார்கள். நுங்குத் துண்டம் போல் தளதளவென்று ஆனால் கரு நிறத்தில் காட்சி தந்தது அது. பனங்கருப்பட்டியும், முட்டையும் சேர்த்துச் செய்தது, கிழக்கிலங்கையில் இது பிரசித்தம், அதிலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் பெருநாள் பண்டிகையின் போது இந்த இனிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். என்று சொன்னார்கள். இதை நான் எழுதிய போது ஒரு இலங்கை நண்பர் அது இலங்யை஢ல் மட்டுமல்ல இந்தியாவிலும் செய்யப்படுவதுண்டு என்று எழுதியிருந்தார்.

இப்போது அதைக் கனடாவில் புகாரி செய்திருக்கிறார். பல கருக்களைச் சுமந்த மனதைத் தமிழ் என்னும் கருப்பட்டியில் கலந்து இந்த இனிப்பை கவிதை நூலாகத் தந்திருக்கிறார். அதன் இனிப்பு நம் அடிமனதில் நெடுநாள் சுரந்து கொண்டே இருக்கும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
மாலன்

சித்திரை 1, தாரண
13.1.04