Posts

Showing posts from February, 2013
மாம்பழக் கவிதை

மாம்பழத்தைப் பற்றி
ஆயிரம் கவிதைகள்
எழுதலாம்
ஆனால் அதை
கத்தியால் நறுக்காமல்
அப்படியே
கடித்துத் தின்பதைப் பற்றி
ஒரே ஒரு கவிதைதான்
எழுதமுடியும்
அது
வார்த்தைகளால்
ஆனதில்லை
ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன்

கொஞ்சுமுகப் பிஞ்சுமகன்
பாலச்சந்திரனின்
நெஞ்சைத் துளைத்தேறிய
இனவெறி ராணுவ ரத்த ரவைகளின்
காட்டேறி வக்கிர உச்சங்களை
உணர்வு தப்பாமல் சொல்லிவிட

ஆனால்
என் தமிழின்
எந்த ஒரு வார்த்தைக்கும்
அத்தனைக் கொடூரக் குணமில்லையே
கவிதையாய்
எடுத்தெழுதிக்காட்டிவிட

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ

Image
தன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு ;-)
என் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.

இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.

ஓ.... இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.

சுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா?

இளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்த…

அன்பும் அமைதியும் நிறைக

இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.

ஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது "அன்பும் அமைதியும் நிறைக" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா?

இஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது "அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்" பிறகு அங்கே வெட்டு குத்து பேசுவதற்கோ ஆதரிப்பதற்கோ இடமுண்டா?

உண்மையான இஸ்லாம் குர்-ஆனில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறியில் காண இன்னும் எத்தனைக் காலமோ என்று மனம் ஏங்குகிறது. இஸ்லாத்தில் பாதிக்குப் பாதி உண்மையான மார்க்கச் செயல்பாடுகளின் அறிதலில்லாதவர்களாய் இருப்பது வேதனையாய் இருக்கிறது. ஆனால் அதைவிட வேதனை ஏதெனில்... பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.

தீவிர இறைப்பற்று

தீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.

இறையின் மீது தீவிர பற்று இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்.

ஏனெனில்
அவையாக இறைவன் இருப்பதாகத்தான்
அனைத்து வேதங்களும் சொல்கின்றன.

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) - இளையராஜா டொராண்டோ

Image
துவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.

எலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.

பார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை ;-)

கடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது ;-)

இளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.

நிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.

இளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத…

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

Image
யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

ஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா? அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.

நான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.

ஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…

எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை

எந்த வாழ்க்கையும்
புதிய வாழ்க்கை இல்லை.
எல்லா வாழ்க்கையும்
முன்பே வாழப்பட்டவைதாம்

எந்த மனிதரும்
புதிய மனிதரில்லை
எல்லா மனிதரும்
முன்பே பிறந்தவர்கள்தாம்

கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல

விடைபெற்றுப்
பாழாகும் தினங்கள்
பெரும்
வெற்றியென நினைக்கின்ற
ரணங்கள்

அடைகாத்த
முட்டைகளும் குஞ்சாகும்
ஆனால்
சினம்காத்த நெஞ்சமோ
நஞ்சாகும்

கடக்கின்ற
நாளேதும் மீளாது
என்றும்
கடப்பாரை குடலுக்குள்
வேகாது

தடையில்லா
வாய்க்காலில் நீரோடும்
தினம்
தடுகின்ற உள்ளத்தால்
எது வாழும்

அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்?

Image
அடீ மருதாணீ
என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க
அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்

எந்த மன்மதன் அனுப்பி
இங்குநீ தூது வந்தாய்

நீ முத்தமிட்டு முத்தமிட்டா
என் விரல் நுனிகள் இப்படிச் சிவந்தன

மருதாணீ
நீ யாருக்குப் பரிசம் போட
இங்கே பச்சைக் கம்பளம் விரித்தாயோ

அடியே
நீ வெற்றிலையைக் குதப்பி
என் விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்

அன்றி
உன்னை நசுக்கி அரைத்து
இங்கே அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ இது

அழாதேடி தோழீ
உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என் அவருக்காய் காத்திருக்கிறேன்

அவர் வரட்டும்
உன் காயங்களுக்கு அவர் இதழ் எடுத்து
ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறேன்

எங்கேயோ....

எங்கேயோ உலவும்
ஒரு மேகம்
இந்த மனதை
நனைக்கக்கூடும்.

எங்கேயோ பூக்கும்
ஒரு பூ
இந்த நாசிக்குள்
வாசம் வீசக்கூடும்

எங்கேயோ வீசும்
ஒரு தென்றல்
இந்த தேகத்தைத்
தொட்டுத் தழுவக்கூடும்

எங்கேயோ பாடும்
ஒரு பாடல்
இந்த உயிரை
உசுப்பிவிடக்கூடும்
இலக்கியம் யாதெனிலோ

வாழ்க்கையில்
வாழ்க்கை தேடிக் களைத்து
கற்பனையில் வாழ்க்கை தேடி
விருப்பம்போல் வாழ்வதே
அருங்கலைகளும்
அற்புத இலக்கியங்களும்

இயல்பில் நீ
ஒரே ஒரு கதாநாயகன்
ஆனால்
இலக்கியத்திலோ
நீ பல நூறு கதாநாயகன்

இல்லாததையும்
இயலாததையும்கூட
எண்ணங்களால் வாழ்ந்து
பல நூறு ஜென்மங்களை
ஒற்றைப் பிறவியிலேயே
பெற்றுச் சிறக்கும்
பேரின்ப வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

படுத்த படுக்கையாய்க்
கிடக்கும்
முற்று முடமானவனும்
படபடவெனப்
பொற்சிறகுகள் விரித்து
நீல வானின்
நிறந்தொட்டுப் பறக்கும்
அதிசய வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

உன்
உடலைக் கொண்டு
ஒரு வாழ்வுதான்
உன் உள்ளத்தைக் கொண்டு
உனக்கு
ஓராயிரம் வாழ்வு

எழுதி வைத்தால்தான்
அது இலக்கியம் என்றில்லை
ஆக்கிவைத்தால்தான்
அது கலையென்றில்லை
எண்ணத்தில் கருவாகி
உனக்குள்ளேயே
ரகசியமாய்
பொன்னுலகம் படைத்து
பூரித்து வாழ்ந்தாலும்
அது
கலைதான்
இலக்கியம்தான்

கலையும் இலக்கியமும்
இல்லாவிட்டால்
கடவுள் தந்த அரிய வாழ்வும்
கரிக்கட்டையாய்க்
கருகியே போகும்

யாப்புக்குத் தோப்புக்கரணம்

யாப்புக்குத்
தோப்புக்கரணம் போடமாட்டேன்
என்றார்
அதிலுள்ள
எதுகையை ரசித்தேன்

மரபுக்குள்
மடிவதோ என்றார்
அதிலுள்ள
மோனையை ரசித்தேன்

எதுகை மோனை தொல்லை
எனக்கதில் நாட்டம் இல்லை
என்றார்
அதிலுள்ள
இயைபை ரசித்தேன்

இப்படி எழுதிப்போகும்
இந்தப்
புதுக் கவிதையைக்
கண்டேன்
அதன் இயல்பினையும்
ரசித்தேன்