20 முடிக்கக் கூடாத கவிதை


எங்கிருந்து வந்தது
இந்த
வேதனை

முதலில்
இது
வேதனைதானா
அல்லது சுகமா

இல்லை
இது ஒரு
சுகமான வேதனை

நீ
என் நெஞ்சத்தில்
நடக்கிறாய் என்பதற்காகநான் மூச்சுவிடாமல்
தம்
கட்டிக்கொண்டிருக்கிறேனே
இதுவும் ஒரு
சுகமான வேதனைதானே

O

உன்
பெயரை உச்சரிக்கும்போதே
என் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றனவே
உன்னையே உச்சரித்தால்

உன்
விழிச்சுடரைத் தொடும்போதே
சுற்றுப் புறங்கள்
இருண்டு விடுகின்றனவே
உன்னையே தொட்டால்

நீ என்
நெஞ்சவீணையில் வாசிக்கும்
ராகத்திற்குப் பெயர்தான்
காதலா

உன்னிடம் அப்படி
எதைக் கண்டுவிட்டு
இப்படி நான்
என்னை மறந்திருக்கிறேன்

உன்னிடம்
வெளிச்சம் போட்டுக் கிடக்கும்
அந்த அழகா

தூசு
தொடமுடியாத
அந்த உள்ளமா

ஏன்
என் நினைவுகளை இப்படி
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்

O

அன்பே
எனக்குள் நீ எழுதுவது
தேவ கவிதைதானே

எழுது எழுது

ஆனால்
எல்லா கவிதைகளையும் போல
இதற்கும் ஒரு
முற்றுப்புள்ளி வேண்டும்
என்றுமட்டும் எண்ணிவிடாதே.

19 ஓ... பாரதத்தாயே

ஓ பாரதத்தாயே...

உன்
ஓட்டை வீட்டின் நடை பாதைகளில்
எலும்புக் குழந்தைகள்
விழிக் குருதியைக்
கன்னப் பாலைகளில் ஆவியாக்கி
மேகக் கன்னிகளைக்
கர்ப்பம் தரிக்கச் செய்ய வேண்டாம்

உன் பட்டினிக் காட்டினில்
பச்சிளங்கன்றுகள்
ஒட்டிய மார்களில்
இரத்தம் குடிக்க வேண்டாம்
உன்
இருண்ட வீதிகளில்
இராப்பிச்சைகள்
பகல் பிச்சைப் பாத்திரங்களில்
எச்சமிட வேண்டாம்

எச்சிலைத் தோப்புகளில்
வறண்ட நாக்குகளைத் தொங்கப் போட்ட
காய்ந்த நாய்கள்
உன் வாரிசுகளால்
பட்டினி போடப்பட வேண்டாம்.

உன் கண்ணகிகள்
வயிற்றடுப்புகளை அணைக்க
கற்புச் சிலம்புகளைக்
கோவலன்களிடமே
விற்பனைக்கு அனுப்ப வேண்டாம்

O

ஆம் தாயே.
இனியேனும்
உன்
செல்லக் குழந்தைகள்
இந்திய நரகத்தில்
வயிறின்றி பிறக்கட்டும்

இல்லையேல்
உன்
கர்ப்பக் கருவறைகள்
கால வரம்பின்றி
மூடிக் கிடக்கட்டும்.

18 செப்டம்பர் 11, 2001

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வானத்தை முத்தமிட்டுக்கொண்டு கம்பீரமாய் நின்றுகொண்டிருந்த இரட்டைக் கோபுரங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியில் இருந்த ஒரு செவ்வாயின் காலையில் தீவிரவாதிகளால் கொடூரமாய் தகர்க்கப் பட்ட செய்தியை செவ்வாய் உயிரினங்கள் கூட அறிந்திருக்கும்.

சுமார் 5000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற முதல் செய்தி நெஞ்சை நெருப்பு ரவைகளால் துளைத்தது. உயிர்களைச் சுமந்த உயிரற்ற விமானப் பறவைகளின் முதல் இடி நடந்ததுமே தொலைக்காட்சிகள் மூலம் முழு அவலத்தையும் காணநேர்ந்தது. அது ஏதோ ஒரு புதிய ஹாலிவுட் திரைப்படத்தின் விளம்பரக் காட்சிபோல் இருந்ததே தவிர உண்மையில் நிகழ்வதாய் நம்பமுடியவில்லை.

இன்றைய தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் ஒரு நாள் என்பது 48 மணிநேரம் என்று நம்பும்படியாய் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு என் இதயம் ஏற்படுத்திய துடிப்புகளை நான் வார்த்தைகளாய் மொழிபெயர்த்ததுதான் இந்தக் கவிதை.

இரட்டைக் குமரிகளாய்
வான் தொட்டு வளர்ந்து நின்ற
உலக வணிகக் கோபுரங்கள்
மூர்க்கர்களின் வெறியில்
இன்று சுடுகாட்டுச் சாம்பல்

அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பை
நடு ரோட்டில் வைத்துத்
துணிகரத் துகிலுரிப்பு

பறப்பதற்கு
பறவைகளுக்கும் பயம்

நேரம் தவறாமல்
வேலைக்கு வந்தவர்களுக்கு
மரணம் பரிசளிப்பு

தீவிரவாத அட்டூழியத்தின்
சரித்திரம் காணாத
புதிய சாதனை

நாடு-நிறம்-மதம்-ஜாதி என்று
வேறுபட்டப் பறவைகள்
கூடிப் பணிபுரிந்த
வணிக வேடந்தாங்கலில்
வக்கிர வல்லூறுகளின்
வஞ்சகச் சதி நெருப்பு

உலகப் பொருளாதாரத்தை
அடித்துத் துவைத்துக்
கிழித்துப்போட்ட அவலம்

உள்ளூர் வெளியூர்
வேலை வாய்ப்புகளுக்குக்
கட்டாய ஓய்வு

உலகமென்றால் அமெரிக்கா
அமெரிக்காவென்றால் உலகம்
என்றிருந்த
சராசரி அமெரிக்கர்களுக்கு
உலக வரைபடத்தின்
அறிமுகப் பாடம்

அடையாளம் தெரியாத
அரசியல் விளையாட்டுகளில்
இது என்ன விளையாட்டோ
என்ற பல கோணக் குழப்பம்

உலக அழிவிற்கு
தீவிரவாதமே காரணமாகிப்போகும்
என்று தீர்மானம்

மதத்தின் முகம்
விகாரமாய்ச் சிரிக்க
மனிதகுலம் செத்து மடிந்த உண்மை

17 அம்மா


அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே

நீ
என்றென்றும்
எனக்காகவே கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று சொன்னாலும்
என் எண்ணம் குறுகியது

என் கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன் மேனியைத் தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு
உன்
கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை
என் ஜீவனில் கலந்த
'அம்மா' வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே

என் பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன் கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்
என் உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி பொக்கிஷங்களில்
ஒரே ஒரு துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா

Amma...
This world is just so tiny 
When compared to
The grandeur of your immense love


Even before my tongue could move
You taught me a language  -
The language of this universe
LOVE - that needs no words


When I first peeped into this world
Cuddled in the warmth of your arms
In a blissful comfort
The whole world seemed
So sweet and serene
With a lot of  promising love


Oh my beloved Amma....
You are my Niagara of love
Drenching my soul deeply
With the never ending shower of
Your hugs and kisses


Oh my most beautiful Amma....
I feel I would have expressed less
When I  said
You are my dark, rain bearing cloud
Ready always for
A heavy downpour of your love
Over me and only me


Oh my selfless Amma...
You have been a candle
All your life
Burning yourself - Sacrificing
Only to bring light to my eyes


Isn't it true?
The first home I ever lived
Is your precious womb


Isn't it true?
The first food I ever consumed
Is the sacred milk
From your body and blood


Isn't it true?
The first lullaby I ever heard
Is the 'Araaro... Aariraro.... '
Which is the voice of your loving soul


Isn't it true?
The first face I ever saw
Is your beautiful face
That glowed with nothing but endless love


Isn't it true?
The first word I ever spoke
Is 'Amma...'
Which is deeply forged in my soul


Isn't it true?
The first breathe I ever took
Is your divine gift to me


Oh my affectionate  Amma....
Like a bird that keeps grains in the beak
To feed its young
You fast always
Waiting for me to eat first
Before taking a morsel for yourself


When in my life I wandered astray
Only your tear drops were the beacon
That guided me to the right path.


Oh my angel Amma....
Isn't it true?
Even If I promise to offer you my life
In place of all your endless sacrifice
I will still be an ungrateful soul
As I will be giving back only a small drop
For the ocean of treasures
You showered upon me


Amma....  Amma...
I love you
Amma....

16 இன்னும் விடியாமல்

பலர்
பதவிப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்
நாட்டுப் பற்றே நோக்கமென
சப்தமாய் முழங்கினர்

சிலரோ
நாட்டுப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்

ஒரு
நாற்காலி வேண்டுமென
மெல்லவே மொழிந்தனர்

இருந்தும், இந்த
நாட்டுப் பற்றுக் காரர்களையே
நாற்காலியில் அமர்த்தியதும்
பதவிப் பற்றுக் காரர்களாய்
அழுக்காக்கி விடுகிறதே
நம்மின் பொல்லாத அரசியல்

பார்த்தீரா
அழுக்கைப் புழுக்களாய் மாற்றும்
ஒரு சாதாரண சாக்கடையல்ல
நம் அரசியல்
பயனுள்ள மனிதர்களையே
புழுக்களாய் மாற்றும் ஒரு
நரகலோகச் சாக்கடைக் கடல்

.

எத்தனையோ கற்பக விதைகள்
தங்களை
இதில் விதைத்துக் கொண்டு
கள்ளிகளாய் வளர்ந்துவிட்டன

எத்தனையோ புத்தர்கள்
இங்கு புண்ணியம் கற்பிக்க வந்து
சித்தார்த்தர்களாகி
தங்களின்
சில்லறை விளையாட்டுக்களில்
செலவழிந்து போயினர்

இந்த
வளைவுகளையெல்லாம்
நிமிர்த்திவிட்டுத் தான்
உயிர் விடுவேன் என்று
வரிந்து கட்டிக் கொண்டு
இதில் குதித்தவர்களில்

பலர்
வளைந்து போயினர்
சிலரோ
ஒடிந்தே போயினர்

.

என்ன ஒரு புதுமை பாருங்கள்

நம்
அரசியல் வயலில்
அழுகிய விதைகளுக்கே
அமோக விளைச்சல்

காரும் நிலமும்
கடிதில் வேண்டுமென்று
அரசியலுக்கு வந்த
பொல்லாதவாதிகள் தாமே
இன்று
முக்கால் வாசி அரசியல் வாதிகள்

இங்கே
சத்தியங்களுக்காய்ப் பிறந்தவர்களெல்லாம்
எங்கே போனார்கள்

சுதந்திர மரத்தின்
வேர்களுக்கு நீரூற்ற வந்த
ஒவ்வொருவருமா
அதன் கிளைகளைத் திருடுவது

.

அடடா
நம் இந்தியாவில் தான்
எத்தனை தேசாபிமானிகள்

கணிசமாய் வரதட்சணை வாங்க
ஒரு பட்டம் வேண்டுமென்ற
வணிகத்தனத்தில்
கேள்வித் தாள்களைப் பற்றி மட்டுமே
கவலைப்படும்
ஒரு கல்லூரி வருகையாளனைப் போல

பலரும்
இந்த தேசத்தைப் பற்றிக்
கவலைப் படுகிறார்கள்

உண்மைதானே
இந்த அரசியல் அங்கவஸ்திரம்
தோளில் ஆடினால்
இவர்களின்
மீசைக்கே தகுதியற்றமேலுதடுகள் கூட
மீசையை விடவும்
அதிகமாய்த் தானே துடிக்கின்றன

.

தம் பெயரைக்
கல்லில் நாட்டுவதற்காகவே
பல மந்திரிகள் இங்கே
மைல் கல்லுக்கும் கூட
அடிக்கல் நாட்டத் தவிக்கிறார்கள்

மந்திரிகளில் பெரும்பாலோர்
தங்களின்
சொந்த சுகதுக்கங்களைக்
கொண்டாடத் தானே
அரசியல் கூட்டம் கூட்டுகிறார்கள்

குண்டர்களே நல்ல தொண்டர்கள்
என்று
தீனி போடப்பட்டால்
நம் சுதந்திரப் பெண்ணின் கற்பு
காற்றில் பறக்காமல்
கலையழகோடவா நடக்கும்

பல நேரங்களில்
தவறு
நம் மந்திரிகளிடமில்லை
கைநாட்டுகள்தாம்
கைத்தட்டுகின்றன என்றால்
இந்தக் கற்றோர்களில் பலருங்கூட
இங்கே கண்மூடியல்லவா கிடக்கிறார்கள்

.

யோசித்துப் பாருங்கள்
நாம்
வாக்களிக்க
முகராசியைத்தானே பார்த்தோம்
கொள்கைகளையா பரிசீலித்தோம்

கட்சிக் கூட்டங்களில்
பெரும்பாலோர் கேட்கும் விருப்பங்கள்
எதிர்க்கட்சித் தலைவரின்
வீட்டு விமரிசனங்கள்தாமே

நம்மில் பலர்
மந்திரிகள் எதைச் சொல்கிறார்கள்
என்பதை விட
மந்திரிகளுக்கு எத்தனை
மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன
என்று தானே
கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

.

வாய் வித்தைகளுக்காய் மட்டுமே
வாக்களித்து விட்டுப் போகும்
வாக்காளப் பெருமக்கள்
நம்மில் கொஞ்சமா

வியாபார விசயமாய்த்
தங்கள் வாக்குகளை
இரகசிய ஏலம் விடும்
தேசத் துரோகிகள் நம்மில்
கொஞ்சமா

.

இந்தியர்களே
நம்
தேசத்தின் அரசியல் நிர்ணயத்தில்
முழுப் பங்கும்
மொத்த வலிமையும் கொண்டோர்
நீங்களே

உங்களின்
அறியாமை ஓடுகளை
உடைத்தெறிந்து
சுதந்திமாகச் சுவாசிக்கச்
சிந்தியுங்கள்

சுதந்திரம்
தனியினச் சுவாசமல்ல - அது
மொத்த நாசிகளின்
முழுச் சுவாசம்

ஒரு சுத்தமான
இரத்த தானம்தான்
விழுந்து கிடக்கும் இந்தியாவை
எடுத்து நிறுத்துமெனில்
தயங்க வேண்டாம்

எழுங்கள் இந்தியர்களே
எழுங்கள்.

15 பெருமூச்சு

*பெருமூச்சு*

இதயக் கடலுக்குள்
வேதனைச் சுழலால்
வீரிட்டெழுந்து
எண்ணச் சோலையில்
ருத்ர தாண்டவமாடி
இறுதியில்
ஆர்ப்பாட்டமின்றி
வெளியேறும்
மனப் புயல்

*

நான் புதுக்கவிதை எழுதிப் பழகியது இப்படித்தான்.

என் சிறுவயது முதல் (ஏறத்தாழ 8 வயது) எதுகை மோனை பார்த்து பின் அசை பிரித்துச் சந்தக் கவிதைகள்தாம் எழுதிக்கொண்டிருந்தேன்.

ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு அதற்கு நான் தரும் எனக்கே எனக்கான விளக்கமாய் என் புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினேன். அப்படி நான் எழுதியவை பல.

எடுத்துக்கொண்ட தலைப்பில் சிந்தனை வயப்பட்டு ஆழ்ந்து அமர்ந்திருப்பேன். பொறி தட்டியதும் பொங்கி எழுந்து சட்டென எழுதிவிடுவேன்.

இரவில் வெகுதூரம் நடந்திருக்கிறேன். திரும்பும்போது கவிதையோடுதான் வருவேன். பகலில் ஏரிக்கரையோரம் மல்லாந்து படுத்துக்கிடப்பேன் அல்லது பாலத்தடியில் அமர்ந்திருப்பேன். எழும்போது பலநேரம் கவிதையோடுதான் எழுவேன்.

எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு இரவில் உறங்கச் செல்வேன். உறங்குவதற்கு முன் உறங்கவிடாமல் ஓர் எண்ணம் என்னை அலைக்கழிக்கும். எழுந்து எழுதாவிட்டால் அன்று இரவு முழுவதும் உறங்க வழியே இல்லை.

மேசையில் அமர்ந்து காகிதங்களோடு பலமணி நேரங்கள் அமர்ந்திருந்தாலும் கவிதை வராது. ஆனால் தலையில் நீர் தாலாட்ட வீட்டின் செயற்கை அருவியில் நீராடும்போது அப்படியே ஈரத்தோடு வெளியே ஓடிவந்து ஈரம் சொட்டச் சொட்ட காகிதங்களில் சில கவிதை வரிகளைப் பதிவு செய்வேன்.

சில கவிதைகள் இலையுதிர்கால மழையைப் போல் சட்டெனக் கொட்டக்கூடியவை. சில கவிதைகள் ஆளரவமில்லாத காட்டுக்குள் தனித்திருக்கும் ஓர் இளம் பெண்ணின் தலைப் பிள்ளைப் பேறினைப் போல வலி மிகுந்தவையாய் இருக்கும்.

எப்படியாகினும்
என் கவிதைகள்
என்பன
என்னை நான்
அவ்வப்போது
என்னையறியாமல்
என்னாளானவரை
உணர்வுக் கொதிப்போடு
இறக்கிவைக்கும்
’நான்’ கள்

அன்புடன் புகாரி

14 சொல்லிவிடவா


காதலை தூரத்தில் வைத்து கற்பனையிலேயே வாழ்ந்தது ஒரு காலம். கண்ணில் பட்ட பெண்ணின் ஏதோ ஒன்று இழுத்ததில் முதன் முதலாய்த் தூக்கம் துவண்டுபோக தனக்குள் தானே சற்றும் ஓய்வெடுக்காமல் வெற்று நீச்சலடித்துக் கொண்டது ஒரு காலம்.

தூரநடக்கும்போதெல்லாம் ஓரக் கண் முள்ளால் இதய ரோஜாவை கிழித்துவிட்டு, சின்னதாய்ச் சிரித்து, அக்கறையாய் நலம் விசாரித்துப் போகும் கல்லூரித் தோழியை டேய் மச்சி அவள் என்னைக் கன்னாபின்னான்னு காதலிக்கிறாடா என்று நண்பர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டது ஒரு காலம்.

இந்த உரசல்களும் தடுமாறல்களும் கொஞ்சம் அடங்கியபின், ஒரு திட நிலையை எட்டி சற்றே அமைதி கொண்டபின் நிசமே நிசமாக அந்தப் பூ வந்து பூத்துவிடுகிறது. ஆமாம்.. நமக்கே நமக்கென்று எல்லா நிலையிலும் உச்சத்தில் நின்று துடிக்குமே அந்த உயிர்க் காதல் பூத்து விடுகிற்து. வேரில் நீர் நிறைந்த ஜீவ செடியில்தான் ரோஜா பூ பூக்கும். பட்டமரத்திலும் மிகச் செழிப்பாய் ஒரு பூ பூக்கும் என்றால் அது வேறென்ன பூவாய் இருக்க முடியும்?

மன முதிர்ச்சி வந்தபின்னும், திட எண்ணங்கள் தலை முழுவதும் நிறைந்த பின்னும். எதைச் செய்யும் முன்னும் உலகின் பிற விசயங்கள் எல்லாம் கண்முன் ஊர்வலம் போகும் நிலை வந்தபின்னும். இது சரி இது தவறு என்று தெளிவாகத் தெரியும் ஞானம் வந்தபின்னும். கண்டதும் கொண்டதும் என்ற அவசரம் மாறி மகா நிதானம் வந்தபின்னும்.

இவை அத்தனையையும் தட்டிப்பறித்து மென்று தின்றுவிட்டு, மில்லியன் மின்னலாய் மன மேக இடுக்குகளில் ஊடுறுவிப் பாய்ந்து விடுகிறதே ஓர் அசலே அசலான காதல். அந்த உயிர் ஈர்ப்புக் காதல் வெடித்தபின், என்ன செய்வதென்றே தெரியாத நம் மனம் நம் மனதையே துரத்தும் விளங்காத விளையாட்டு நிகழும். அந்த விளையாட்டின் வார்த்தை ஓட்டங்களாய் எண்ணிக் கொள்ளலாம் இந்தக் கவிதையை.

அட எப்போ வந்து பூத்தா என்னங்க, காதல் பூசணிக்காயை மனச் சோற்றுக்குள் மூடி வைத்துக்கொண்டு, வெறித்த விழி கிழிய மருகும் நிலை இருக்கிறதே.... அடடா அதைச் சொல்ல ஒரு கவிதை வேண்டாமா. இதோ இது அப்படியொரு கவிதை என்று கொள்ளலாம்.

சொல்லத் தைரியம் இல்லாமல் இருக்கக்கூடும் அல்லது சொன்னபின் இந்தத் தவிப்பு இருக்குமா என்ற கவலையாய் இருக்கக்கூடும். நிச்சயப்படுத்திக் கொண்டாயிற்று நிச்சயம் இது காதலென்று. இதைச் சொன்னால் என்ன சொல்லாவிட்டால்தான் என்ன? காதல் காதல்தானே? மாறவா போகிறது, ஏன் சொல்ல வேண்டும், இப்படியே அனுபவிக்கலாமே என்ற நினைப்பாய் இருக்கக் கூடும்.

யாருக்கு எப்படியோ இந்தக் கவிதையின் நாயகனுக்கு எப்படி என்று கண்டுபிடியுங்களேன். இதோ அதற்கான தடயங்களாய் இந்தக் கவிதை. அட இது நம்ம கதையாச்சே என்று நீங்கள் உச்சுக் கொட்டினால் நண்பர்களே நான் நிச்சயம் மகிழ்வேன்.


சொல்லிவிடவா

என்
நெஞ்சக் கூட்டுக்குள்
படபடவென
சிறகடித்துத் துடிக்கும் கிளிகள்
என்ன சொல்லித்
துடிக்கின்றன என்று

அன்பே
உன்னிடம் நான்
சொல்லிவிடவா

உன்
கருவண்டுக் கண்களுக்குள்
அவ்வப்போது
ஒரு
பனிபடர்ந்தமுகம்
அரும்பு விட்டுப்
பூப்பதைப் பார்க்கிறேன்.

கேட்டுவிடவா
அது
என் முகம்தானே என்று.

உன்
கன்னங்களில் சிவந்து
கழுத்துவரை கரைந்து விழும்
வெட்க நிலாக்களில்
ஒரு
தெளிவில்லாத
முகவரி பார்க்கிறேன்.

கேட்டுவிடவா
அது
என் முகவரிதானே என்று

உன்
மாபெரும் மைவிழிகள்
என்
மனவெளியைப் படுத்தும் பாடு

அப்பப்பா
சொல்லவொண்ணாத் தவிப்பு
அன்பே
உன் புன்னகைகள்
என் கனவுகளில் பொழியும்
பொன்மழையைச் சொன்னால்.

கேட்டு மகிழ்வாயா
அன்பே

ஜென்மங்களில்
நம்பிக்கை உண்டா உனக்கு
எனக்குக் கிடையாது

இருப்பினும்
அது
இருக்க வேண்டுமென
இன்று ஆசைப் படுகிறேன்

என்
வார்த்தைக் குஞ்சுகளை
இன்று நான்
அடைத்து வைத்தாலும்

அவற்றை
நம்
மறு ஜென்மத்திலாவது
ஆசையாய்த்
திறந்து விடலாமல்லவா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

13 குபுக் குபுக் குற்றாலம்


நான் கவிதை எழுதினால் என் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டி அது வேறு எங்கும் செல்லாத நாட்கள். நான் வெட்கப் படுவேன்தான், என் கவிதைகளை வேறு எவரிடமும் காட்டுவதற்கு. அது என் முதல் காதலை அது முளைத்தபோதே ஊர் கூட்டிச் சொல்லுவதைப்போல எனக்குச் சங்கடமாய் இருக்கும்.

ஏனெனில் கவிதை என்பது அப்போதெல்லாம் ஒரு வகையில் எனக்கு என் இதய ரகசியம்தான். பிறகுதான் புரிந்துகொண்டேன், என் இதய ரகசியங்கள்கூட என் வார்த்தை வசீகரத்துக்காக, பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைதான் என்று.

அதன்பின்னும் நண்பர்கள் என் கவிதைகளை வாசிக்கும்போது என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இது உன் சொந்த அனுபவம்தானே என்ற கிண்டல் அதில் இருக்கும். என் அனுபவம்தான். துவக்கத்தில் அது முழுக்க முழுக்க என் அனுபவம்தான். பிறகெல்லாம், மற்ற நண்பர்களின் அனுபவங்களும் எனக்குக் கவிதைகளாயின.

பார்த்துப் பாதி உணர்ந்து பிறகு மீதியை கற்பனையால் நிரப்பிக் கொண்டவையும் கவிதைகளாயின.

இப்போதெல்லாம், எங்கோ ஓர் மூலையில் அழும் குழந்தையின் உணர்வுகள் தெளிவாகக் கேட்கிறது. நான் எழுதுகிறேன். ஆக, கவிதைகள் சொந்த அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும், சொந்த உணர்வுகள்தாம் அவை. என்னால் உணராமல் எதையும் எழுதிவிட முடியாது.

இந்த உணர்வுகளைப் பெற்றதற்காக நான் பெரிதும் பெருமை கொள்கிறேன். அந்த உணர்வுகளே கவிஞன்.

நான் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வணிக நிர்வாகம் (Business Administration) படித்துக் கொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் குற்றாலம் சென்றேன். அதற்குமுன் நான் என் சிறுவயதில் சென்றிருக்கிறேனாம். எனக்கு நினைவு தெரியாத அனுபவத்தை என்னால் நினைவில் கொள்ள முடியாதென்பதால் அதை நான் சென்றதாய் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

கல்லூரியின் துடிப்புத்தனத்தோடு நான் குற்றாலம் சென்றதும், மலைமீது நெடுந்தூரம் ஏறிச்சென்று, தேனருவியில் தனித்து நீந்தியதும், நீ மீண்டுவந்தது அதிசயம், பெரும்பாலும் மரக் கிளைகளால் சுழற்றப்பெற்று மடிபவர்களே அதிகம் என்றதை அலட்சியப்படுத்தி சந்தோசமாய்க் கூச்சலிட்டதும்.... அது ஒரு வயது. எனக்கு நீந்தத் தெரியும் நான் தஞ்சாவூர்க்காரன் என்று என்னோடு வந்த சென்னைப் பொடியன்களுக்குப் பெருமையாய் அறிவிப்பதே எனக்கு அன்றைய சாகசமாகப்பட்டது.

இப்படியான தத்துப்பித்துச் சாதனைகள் என் வாழ்வில் அவ்வப்போது நான் செய்துவந்திருக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். பின் என் கல்லூரி கழிந்த அடுத்த ஆண்டே சவுதியில் நான் சிறைபட்டேன். ஆமாங்க... என்னால் அதை அப்படித்தான் சொல்லமுடியுங்க.... நான் சவூதி சென்று என் முதல் பணியில் அமர்ந்தேன். அதைத்தான் சிறைப்பட்டேன் என்கிறேன்.

ஒரு எட்டு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே உடகார்ந்திருப்பது கடுஞ் சிறையல்லவா? எப்படி இயலும் ஒரு கல்லூரி இளைஞனுக்கு? அதுவும் கவிதை மனம் கொண்ட பறவைக்கு? துடிப்பான இளைஞனுக்கு? அந்தப் பாலைவெளியில் என் கவிதை உணர்வுகளைத் துறந்து, நெருக்கமான நண்பர்களின் கச்சா முச்சா சம்பாசனைகளைத் துறந்து, பாரதிராஜா, பாலுமகேந்திரா, கங்கையமரன் லூட்டிகளைத் துறந்து, அடடா.... மகா கஷ்டம் மகா கஷ்டம். அது கொடுஞ் சிறையேதான்.

ஆனால் அதே சமயம் நான் சவூதியை மறக்கமாட்டேன். எனக்கு முதல் வேலை தந்ததும். என் குடும்பத்தை நிலை நிறுத்தியதும். எனக்கு அனுபவங்களை வாரிக்கொடுத்ததும் சவூதிதான். மனம் நெகிழ்ந்து சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

அந்தக் காலக்கட்டத்தில், ஒரு அறிவிப்பு குமுதத்தில் வந்தது. குபுக் குபுக் குற்றாலம் என்ற தலைப்பில் கவிதை எழுதி பரிசு பெறுங்கள். கவிஞர் நிர்மலா சுரேஷ் பரிசுக்கான கவிதைகளைத் தேர்வு செய்கிறார். நானோ, சொந்தத்தில் எழுதி சொந்தத்தில் வாசித்து சொந்தத்தில் முகர்ந்து சொந்தத்தில் சுகப்படுபவன்.

ஆனாலும் நண்பர்களின் தூண்டுதலால், அலிபாபா இதழ்களில் என் கவிதைகளை இடம்பெறச் செய்திருக்கிறேன். மாலனின் திசைகளில் என் கவிதைகளை வரச்செய்திருக்கிறேன். நா. பார்த்தசாரதியின் தீபத்தில் என் கவிதைகளை ஊர்வலம் போகச் செய்திருக்கிறேன். வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த தாய் பத்திரிகையில், ஆசிரியர் பக்கத்திலேயே என் கவிதைகளை பிரசுரிக்கச் செய்திருக்கிறேன்.

ஆக, இந்த முதல் போட்டியில் கலந்துகொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

அது என் மகள் பிறந்த நேரம். முதல் குழந்தை. எத்தனை ஆனந்தமும் குதூகலமும் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். என் மகள் பெயரில் குபுக் குபுக் குற்றாலம் தலைப்பிற்கு என் போட்டிக் கவிதையை அனுப்பிவைத்தேன்.

பாலையில் காய்ந்துகிடந்த எனக்கு பசுமையாய் இருந்த குற்றால நினைவுகள் வார்த்தைகளை வாரி வாரித் தந்தன. அப்படியே பதிவு செய்தேன். நிர்மலா சுரேஷ் அக்கவிதையைத் தேர்வும் செய்துவிட்டார். ஏதோ பரிசுத்தொகை தருகிறேன் என்றார்கள் குமுதத்தினர். அட... அதெல்லாம் வேண்டாமய்யா.. இந்தப் பரிசு எனக்கு ஒரு கோடி பொன் பெறும் என்று எழுதி அனுப்பினேன்.

இப்போது பார்க்கும்போது, இது என்ன அத்தனை உசத்தியான கவிதையா என்று எண்ணத் தோன்றுகிறது. இதைவிட அருமையான கவிதைகள் பல நான் எழுதிவிட்டேன் என்றே நினைக்கிறேன். இக்கவிதையில் மேலோங்கி நிற்பது குதூகலம் தேடும் ஒரு இளைஞனின் ரசனை உணர்வுகள்தாம். அதற்குப் பரிசும் தேவைதான். அது எங்கே மீண்டும் நமக்குக் கிடைக்கிறது? சொல்லுங்களேன் பார்க்கலாம்?

ஆக நான் பரிசு பெற்ற முதல் கவிதை இதுதான். நான் கலந்துகொண்ட முதல் போட்டியும் இதுதான்.

குபுக் குபுக் குற்றாலம்

நம்ம ஊரு நயாகராவே

பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா

கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன் சிலீர்ச் சந்தங்களா

யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா

அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா

அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண.

என் காதலியின்
ஊடலிலா

11 பனி தூவும் பொழுதுகள்
























2- 2- 2015

டொராண்டோவின் பிப்ரவரி மாதம் பனிப்பொழிவுக்குப் பெயர் போன மாதம். அப்போதெல்லாம் மறக்கமல் இக்கவிதையை நான் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொருமுறையும் அது நேசிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமானதுதான் எனக்கு

டிசம்பர் - ஜனவரி -  பிப்ரவரி 2014

2013ல் தான் பனி தன் பணியைத் தீவிரமாகச் செய்தது என்று நினைத்திருந்தேன். ஆனால் 2014 வந்த பனியும் பலிங்கு நீர்ப் பனிப்பொழிவும் சரித்திரம் காணாதது. இங்கே 40 ஆண்டுகாலமாக வாழ்வோரும் கண்டதில்லையாம் இப்படி ஓர் பனிப்பொழிவை.


என்னாச்சு? ஏன் இந்தப் பனித்தாண்டவம்? இனி வரும் வருடங்களின் நிலை என்ன? அச்சம் ஊட்டுவதாகவே இருக்கிறது நண்பர்களே.


பிப்ரவரி 8, 2013 வெள்ளிக்கிழமை

பனி என்றால் உங்க வீடுப்பனி எங்க வீட்டுப்பனி இல்லை. அப்படி ஒரு பனி. டொராண்டோவில் பனிப்புயல் வீசுகிறது.

சாலைகளெல்லாம் புதைமணில் மூழ்கிய யானைகளைப்போல மூழ்கிக்கிடக்கின்றன.

வீடுகளெல்லாம் வெண்ணையில் விழுந்த திராட்சைகளாய் வழுக்கிக் கிடக்கின்றன.

பள்ளிக்கூடம், பேருந்து சேவை, விமான பயணம் எல்லாம் களேபரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன.

வாகனத்தை எடுத்து ஓட்டினால் அது சாலையில் வழுக்கும் வழுக்கலில் வாழ்க்கை கிடந்து அல்லாடித் தவிக்கின்றது. அடுத்த காருக்கு முத்தமிட ஆவல் கொண்டு அலைகிறது. சிக்னலுக்கு நிற்க மறுக்கிறது. வளைக்கும்போது வேறு திசை பயணப்படுகிறது. பள்ளத்துக்குள் விழுந்து படுத்துக்கொள்ள ஆசைப்படுகிறது. ஸ்டியரிங்கும் டயரும் ஒத்துப் போக மறுத்து விவாகரத்துச் செய்துகொள்கின்றன.

ஆனாலும்.... நான் இப்படி ஓர் பனியை முதன் முதலில் பார்த்தபோது எழுதிய கவிதை நெஞ்சில் அமுதப்பனியைத்தான் இன்றும் பொழிகிறது.

*

அடடா
இது என்ன அழகு

ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து
இனிப்பாய் அசையும்
இந்த மல்லிகைப் பூப்பந்தல்
எவரின் உபயம்

வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து
ஒருவரையும் விடாமல்
உயர்த்திப் பாராட்டும்
இது என்ன விழா

பூமிக்கு இது
கீழ் நோக்கிப் பொங்கும்
பனிப் பொங்கலா

நிறங்களில் அழகு
வெண்மையே என்று
தீர்மானம் நிறைவேற்றும்
கலை மேடையா

.

மரக்கிளைகள் எங்கிலும்
பல்லாயிரம் கொக்குகள்
குட்டித்தூக்கம் போட்டுக்
கொண்டாடுவது போல்
ஓர் அழகு


மத்து எங்கோ தெரியவில்லை
ஆனால் மோர் கடைந்து
இங்கு எவரோ
ஒரு யுகத்துக்கே
வெண்ணை திரட்டுகிறார்

வாசலில் மட்டுமின்றி
கண்களிலும்

கண்களில் மட்டுமின்றி
மனங்களிலும்

மனங்களில் மட்டுமின்றி
உயிர்களிலும்

அந்தப்
பனிப் பெண்ணின்
பல கோடி விரல்கள்
எழிற் கோலமிடுகின்றன

.

அனைத்தையும்
அணைக்கும்
கருணைப் பனியே

வெள்ளிக்கிண்ண பூமியில்
பனிப் பால் வார்க்கும்
அன்புத் தாயா நீ

மொத்தமாய்
நீ என்ன
முத்து வியாபாரம் செய்கிறாயா

வெள்ளை இதழ்கள் விரித்து
நீ சிந்தும்
மாபெரும் புன்னகையா இது

மனிதர்கள் யாவரும்
ஓர் நிறமே என்று
சமத்துவம் பேச வந்தாயா

எழுத்தாணியும் தெரியவில்லை
எழுதும்
கவிஞனையும் காணவில்லை.

ஆனால்
பரிசுத்தமான
வெள்ளைத் தாள்கள்
எங்கெங்கிலும்
வந்து வந்து விழுகின்றன

உற்றுப் பார்த்தால்
உள்ளே கவிதை வரிகள்

.

உன்னை
அள்ளி விளையாட
ஆயுள் போதவில்லை

உன் பூப் பந்துகளை எறிய
உள்ளங்களில் எரியும்
உணர்வுகளுக்கு அளவில்லை

உன்னைக் கண்டு
என் அலுவல் மறந்தேன்
காதல் மறந்தேன்
கவிதை மறந்தேன்
ஏன்
என்னையே மறந்து போனேன்

கைகளை விரித்துக் கொண்டு
சுற்றி சுற்றித் திரிகிறேன்

எனினும்
போதுமென்ற மனம் மட்டும்
வரக் கண்டிலேன்

நீயோர் அற்புத ஓவியன்
ஒற்றை வர்ணம் குழைத்து
நீ தீட்டுவது ஒரு வினோதம்

வெள்ளை வயலில்
வைரமணிப் பயிர் செய்து
உள்ளத்துக்கு உணவளிக்கும்
மகோன்னதமே நீ வாழ்க

10 நினைத்துப் பார்க்கிறேன்

*நினைத்துப் பார்க்கிறேன்*

அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ

ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.

தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.

பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது


நெத்தியெங்கும் பூப்பூக்க
          நெஞ்சமெங்கும் தேன்வடிய
முத்துமுத்துக் கண்மயங்க
          முந்தானை தான்விலக

புத்தம்புதுச் சுகங்கோடி
          பொங்கித்தினம் நீவடிக்க
அத்தனையும் என்னுயிரை
          அதிசயமாய்த் தொட்டதடி


கொஞ்சல்மொழித் தேன்குடமே
          கொத்துமல்லிப் பூச்சரமே
மிஞ்சியிட்ட முதல்நாளே
          மிச்சமின்றித் தந்தவளே

கொஞ்சநஞ்சம் இருந்தாலும்
          கொஞ்சிமெல்ல நானெடுக்க
பஞ்சணைக்கோ நொந்திருக்கும்
          படுக்கையறைச் சிவந்திருக்கும்


மச்சான் என் மனம்போல
          மல்லிகைப்பூக் கூந்தலுடன்
அச்சாக மயிலைப்போல்
          அழகாகக் காலெடுத்து

உச்சிநிலா முகக்கனியில்
          உதடுகளோ துடிதுடிக்க
பச்சைவனத் தென்றலெனப்
          பக்கத்தில் வந்தாயே


என்னருகில் நீவந்தால்
          என்னென்ன செய்வதென்று
எண்ணியவென் எண்ணங்களை
          எப்போதோ மறந்துவிட்டு

எண்ணாத எதையோநான்
          எப்படியோ துவக்கிவைக்க
என்னினிய பூங்கொடியே
          எல்லாமும் நீ ரசித்தாய்
       
மன்மதனோ நானாக
          மானேநீ ரதியாக
என்னென்ன சுகமுண்டோ
          எல்லாமும் நாம்கண்டு

பொன்னாகப் பூவாகப்
          பூத்தோமே சிரித்தோமே
இன்றுன்னைப் பிரிந்தவனாய்
          இருக்கின்றேன் உயிரில்லை


மண்மீது பொழியாத
          மழைமேகம் மேகமல்ல
தென்னையினைத் தழுவாத
          தென்றலுமோர் தென்றலல்ல

கண்ணுக்குள் விரியாத
          கனவும் ஓர் கனவல்ல
உன்னருகில் இல்லாவென்
          உயிரும் ஓர் உயிரல்ல


கனவுகளில் வரச்சொல்லி
          கடிதம் நான் எழுதுகின்றேன்
நினைவுகளில் உனையேந்தி
          நெடுந்தூரம் நடக்கின்றேன்

இனிக்காத இவைபோன்ற
          எத்தனையோ ஆறுதலால்
மனத்தீயைத் தணித்த வண்ணம்
          மரணத்தைத் தவிர்க்கின்றேன்


இருஆறு மாதங்கள்
          எப்படியோ ஓடிவிடும்
மறுகணமே பறந்துவந்து
          மனைவியேயுன் கைகோத்து

சிறுகன்றைப் போல்துள்ளிச்
          செவ்வானாய்ச் சிவந்திடுவேன்
கருவான நம்முயிரைக்
          கைகளிலே ஏந்திநிற்பாய்

அன்புடன் புகாரி
09

தாமதம்

நான் கனடா வந்து இறங்கினேன். இறங்கியதும் ஒரு தமிழ் விழாவில் கலந்துகொண்டேன். ஒருவர் மீதமில்லாமல் எல்லோருமே தாமதமாகவே வந்தார்கள்.

நடத்துனர்களும் தாமதம் பங்களிப்பாளர்களும் தாமதம் பார்வையாளர்களும் தாமதம்.

அட கனடாவில்கூட தமிழர்கள் இப்படித்தானே என்று நொந்தேன். அப்போது வந்துவிழுந்த கவிதைதான் இது. நிறைய பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் பாராட்டியவர்கள்கூட நேரத்தோடு நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. கேட்டால் இதுதான் TST என்றார்கள். Tamils Standard Time.

அன்றிலிருந்து நேரத்தை உயிருக்கு நிகராக மதிக்கவேண்டும் என்று நான் சொல்லியே வருகிறேன். என்றாவது ஒருநாள் நான் தாமதமாக வரும் நாளை பிடித்துக்கொண்டு என்னைக் கொல்ல எப்போதும் சிலர் தூண்டில்களோடு அலைகிறார்கள்.

எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்ளாமல் எந்த நல்ல விசயத்தையும் யாருக்கும் சொல்லிவிடமுடியாது.

ஆனால் டொரோண்டோவில் அ. முத்துலிங்கம் அவர்கள் ஒரு முன்னுதாரணம். நேரம் தாண்ட விடுவதே இல்லை. எவருக்கும் என்றாவது ஒருநாள் அல்லது இருநாள் சறுக்கல் நிகழலாம் ஆனால் சறுக்குவற்காகவே சாக்குகளைச் சேகரிப்பது கொடுங் குற்றம்.

*

அவசரச் செய்தியுடன்
அதிகாலை வரும்
செய்தித்தாள் பொடியன்

ஏழுக்கே வரவேண்டிய
எங்களூர்ப் பேருந்து

இதோ வருகிறேனென்ற
சக தொழிலாளி

ஒரு நொடியில்
தயாரென்ற இல்லாள்

எட்டே முக்காலுக்குத்
தரையெட்டும் விமானம்
மாலை வரவேண்டிய
மாண்புமிகு மந்திரி

என்று எல்லோரும் இங்கே
தாமதிக்கிறார்கள்..

வார்த்தை தந்துவிட்டால்
நெஞ்சுக்குள்
மணிச்சத்தம் கேட்காதா

நேரம் தாண்டும்போது
உயிருக்குள்
புயலொன்று வீசாதா

அதெப்படி
ஆறுக்கே வருகிறேனென்றுவிட்டு
ஆறிப்போய் நிற்பது

எட்டுக்கு வருகிறேனென்றவர்
ஏழுக்கு வந்து நிற்பார்
காலைக்குப் பதிலாய்
மாலை

நேரம் தவறாமை
நம் உயிரல்லவா
எத்தனை முறைதான்
அதைத் தூக்கிலிட

இங்கே
நேரத்தே வருவது
வேதனை மட்டுந்தானோ

பசி தாமதித்தால் நோய்
இதயம் தாமதித்தால் மரணம்
மனிதன் தாமதித்தால்
மனநோய்தானே

தாமதமே கௌரவம் என்பவனை
என்னவென்றழைப்பது

தருணத்தில் வாரா ஞாபகமும்
காலத்தே வாரா அறிவும்
துயரக்கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்

பொங்கும்போதே
இறக்காத பால்
பாழ்தானே

நேரத்தே காணா புண்
புற்றுநோயல்லவா

ஏனய்யா தாமதமென்றால்
எலி செத்துவிட்டது
அதன் ஈமக்கடனில்
தாமதமாகிவிட்டது
என்பார் சிலர்

காருக்குக்
கால் தடுக்கிவிட்டது
கைப்பிடியில்
பெட்ரோலும் இல்லை
என்பார் சிலர்

தாமதம் என்ற தப்புத்தானே
நம்மைப் பொய்புனையும்
குற்றவாளியாக்கியது

தாமதிப்போம்
கைமீறும் காரணங்களில்
நாம் தாமதிப்போம்

ஆனால்
தாமதமே சம்மதம் என்று
தரங்குறையலாமா

அன்புடன் புகாரி
19991106

08 நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்


ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் என்று கூவி விற்பதைக் கண்டிருக்கிறோம். ஒரு கவிதை எப்படி ஈயம் பித்தளையாய் மாறிப்போகக்கூடும் என்பதற்கு இந்தக் கவிதை ஒரு சான்று. இதை எழுதிய போது என் கண்முன் நின்ற விதவையின் கண்ணீருக்கு அடர்த்தி மிக மிக அதிகமாக இருந்தது. அந்த விதவையைப் பார்த்துப் பார்த்து மனதில் கொண்ட வலிகளைக் காகிதத்தில் இறக்கிவைத்தேன். பலராலும் வெகுவாகப்பாராட்டப்பட்ட கவிதை.

ஆனால் இன்று விதவைகளின் நிலை அப்படியே மாறிவிட்டது. பெண்கள் இன்றெல்லாம் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். பெரியார் பாரதிதாசன் பாரதியார் போன்றேரெல்லாம் அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்கள். அதனால் இன்று இந்தக் கவிதையின் உயிர் பரிதாபத்துக்குரியதாய் ஆகிவிட்டது. விதவைகள் வாழவேண்டும் என்பதுதான் இந்தக் கவிதையை எழுதுவதற்கான நோக்கமாக இருந்தது. அதற்காக தன் உயிரையே இந்தக் கவிதை தந்திருக்கிறது என்று எண்ணும்போது, இந்தக் கவிதையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அந்தக் காலத்தில் இப்படி பெண்கள் விதவைகளாக துயரப்பட்டார்களாம் என்று கூற ஒரு சரித்திரச் சான்றாக இந்தக் கவிதை உயர்ந்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.



நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்

வெள்ளை வேலிக்குள்
வாழ்வை முடக்கிக் கொள்ள
சாபமிடப்பட்ட இவர்கள்
விதவைகள்.

இவர்களின் சாம்ராஜ்யத்தில்
ஏக்கங்களுக்குச் சிறைத்தண்டனை
ஆசைகளுக்கு ஆயுள் தண்டனை
உணர்வுகளுக்குத் தூக்குத்தண்டனை

இதய மேடையை
பலிபீடமாக்கிக் கொண்டவர்கள்

விதியின் பெயரைச் சொல்லி
இயற்கையைத் தூக்கிலிடும்
அநீதிபதிகள்

சமுதாயச் சர்வாதிகாரப்படி
இவர்களின் சிட்டுக்குருவிகள்
சிறகொடிந்தே கிடக்கவேண்டும்

பட்டமரமாவதற்குப்
பஞ்சாங்க மக்களால் சபிக்கப்பட்டவர்கள்

பாதி நாடகத்திலேயே பார்வை பறிக்கப்பட்ட
துர்பாக்கியவதிகள்

சமுதாயக் கொள்கைகளுக்குச்
சூட்டப்பட்ட
வெள்ளைக் கேள்விக் குறிகள்

காலனின் கட்டளையில்
வலுக்கட்டாயமாய்த்
துறவிகளாக்கப் பட்டவர்கள்

இன்றைய
அலங்கார மேடைப்பேச்சுகளில்
மட்டுமே
புதுவாழ்வு பூண்டவர்கள்

நிலவுக்கு ஏணி வைத்தவர்களுக்கு
நிலவாக்கப்பட்டவளைக்
கரைசேர்க்க அறிவு போதவில்லை

முல்லைக்குத் தேரீந்தவர்களுக்கு
வெள்ளைச் சேலைக்கு
வர்ணம் பூச நெஞ்சம் போதவில்லை

மனைவி செத்த மறுநாளே
புது மாப்பிள்ளையாகும்
சுயநலக் கோழைகளுக்கு
அறுந்த பட்டத்தின் நூலைப்பிடிக்க
வீரம் போதவில்லை

விலைமாதின் எச்சில் தொட்டியில்
மாணிக்கம் தேடுபவர்கள்
விதவையின் எச்சில் கண்டு
முகம் சுளிக்கிறார்கள்

காதல்
கன்னியருடன் மட்டும்தான்
என்று
வரையறுத்துவிட்டார்கள் போலும்

பாரதிதாசனின் 'வேர்ப்பலாக்கள்'
சிதைந்து அழுக
புறக்கணிக்கப்படுகின்றன

'தனியொருவனுக்கு உண்ண
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்'
என்ற பாரதியின் பாரதத்தில்
இவர்கள் பட்டினி போடப்படுகிறார்கள்

உடன்கட்டை தீதென்றோம்
உடனெரிப்பது கொடூரமென்று
ஆனால் இன்று
அணு அணுவாய் எரிக்கின்றோம்

கிளியைப்
பூனையிடமிருந்து விடுவித்து
கூண்டிலல்லவா அடைத்துவிட்டோம்

சிறகறுந்த கிளி பறக்கச்
சிறகளிப்போம்

இல்லையேல்-
எவருக்கும்
சிறகுகளே வேண்டாமென
அறுத்தெறிய வாளெடுப்போம்.

7 வௌவால்கள்

புதியவனே

காலங் காலமாய்
யுகம் யுகமாய்
பாழடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக் கொண்டிருக்கும்
வௌவால்கள்
எப்போதும்
ஏளனமாய்ச் சிரிக்கும்

நீ
தலை கீழாய்
நடக்கின்றாய் என்று

06 இலவசம் இலவசம்

இலவசம் இலவசம்

ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
ஒருநாள் மட்டும்
மூக்குப்பொடி இலவசம்

பலகீனங்கள் இங்கே
பரீட்சிக்கப்படுகின்றன.

தாலி வாங்கினால்
பெண்டாட்டி இலவசம் என்று
கடை திறக்காததுதான் மிச்சம்

இலவசமாய்
ஓர் அற்பத்தை வழங்கிவிட்டு
உங்களையே
வேரோடு இழுத்துக்கொண்டுவிடும்
வணிக சிகாமணிகளின் சாதுர்யத்தை
என்னவென்று சொல்ல

படி அரிசியைப்
பரிசாய்க் கொடுத்துவிட்டு
பாராளுமன்றத்துக்கு ஓட்டுகுவிக்கும்
திருட்டு அரசியல்வாதிக்கு
சற்றும் இளைத்ததோ
இந்த வணிக நுணுக்கம்

முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிப்பேர்
முழு பலகீனர்களே என்பது
முக்காடுபோடும் வெட்கம்

ஒன்றுக்கு மூன்று
இலவசம் என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும்
விற்றுத்தீரும் அவலம்

சீரழியும் வணிகமுறையால்
பொருள் சிக்கனங்கள்
புரட்டி எடுக்கப்படுகின்றன

தேவைகளோ
தீண்டப்படாமல் திண்டாட
தேவையற்றவையே
தேடி வருகின்றன தினந்தோறும்

கௌரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா

நாளுக்கு நாள்
ஆடை குறைத்து
அலையும் இதயங்களை
அடித்து விழுங்கும்
சில்லறைத் திரைப்படங்களைவிட

இலவசம் என்னும்
காந்தக் கணைகளால்
ஒட்டுமொத்த மக்களின்
தேவைகளைப் பெருக்கி
தில்லானா ஆடவைத்து
பொருள் அழிவில்
பணம் குவிப்பது
உலக அழிவில்லையா

இதுதான் வணிக தர்மமா

அதன் பின் செல்வதுதான்
செவ்வாயில் தேடல் நடத்தும்
நம் அறிவின் முதிர்ச்சியா

05 இன்றைய பொழுதும் தீயில் விழுந்தது

நேற்று தபால்காரன், இன்று இணையம், கடிதம் ஏந்திவரும் பூசாரிகள். ஆனால், கடவுள் வரம் தந்திருக்கவேண்டுமே. வரம் தராதபோது வந்து விழுந்த கவிதையே இது.


கண்களில் தவிப்பும்
தவிப்பாய்த் தவிக்க
கைகளைக் கைகளே
சிவக்கப் பிசைய

தென்றலும் என்னிடம்
நெருப்பாய் வீச
திசைகள் எங்கிலும்
வெறுமை நிலவ

கண்களில் ஏறியே
அலையும் மனதில்
கன்றினைத் தேடும்
பசுக்கள் கதற

இன்றய பொழுதும்
தீயில் விழுந்தது
ஏந்திழைக் கடிதம்
வரவே இல்லை

என்நிலை உணர
ஏனிவள் மறந்தாள்
இனிய மனத்தை
எங்கே புதைத்தாள்

பின்னல் அவிழ்த்து
என்முகம் நனைத்து
பேசிப் பேசியே
உயிரை அணைத்து

என்னில் கலந்தவள்
எங்கு மறைந்தாள்
எழுதி உயிர்தர
எப்படி மறந்தாள்

சென்றுவா மூச்சே
என்நிலை சொல்லிவா
சிந்தை சிதறுமுன்
அஞ்சலைக் கொண்டுவா

04 அந்நியம்

நண்பனே

நம் அறிமுகப் பூமரத்தின்
அடிநிழல் விரிப்பில்

நீ
என்னைத் தூரவைத்தே
மிக நெருக்க பாவனையில்
கலந்தாய்

ஏனெனில்
நம் நட்புமலர் பூக்க
சந்தர்ப்ப சுப நிமிஷங்களுக்காய்
நீ
தவமிருந்தவனல்லவாநான் உன்
மனப் புத்தகத்தைப்
புரட்டுகிறேன் என்பதற்காக
நீயதில்
சில பக்கங்களை
அவசர அவசரமாய் மறைத்துக் கொண்டு
இல்லாத பக்கங்களை
இருப்பதாய் காட்டிக்கொண்டாய்

என் எண்ணத்தராசில்
உன் கனம்
கூடியிருக்க வேண்டுமே
என்ற மனக்கவலை உனக்கு

இன்றோ
நான் நிஜமென்று நெருங்கிவந்த
உன் சிருஷ்டி நாயகன்
தன் அரிதாரத்தைக்
கலைத்துப் போட்டுவிட்டான்

ஏனெனில்
என் எதிர்பார்ப்புக் குருவிகள்
உன் பொய்ரூப நார்களிலேயே
கூடுகட்ட வந்தன

கானலில் வீசிய மீன் வலைக்கு
என்ன கிடைக்கும்

நண்பனே
இன்னமும் நீ எனக்கு
அந்நியப்பட்டே நிற்கிறாய்.

03 உன் மௌனம்

மௌனம், அது விவரிக்கவே முடியாத ஒரு சொல்.

அது எதைச் சொல்லும் என்று சற்றே சிந்திக்கத் தொடங்கினால், அது காடுகொள்ளாப் பூக்களாய்க் பூத்தவண்ணம் இருக்கும், கண்டு முடியாத பேரண்டக் கோள்களாய்க் கூடிக்கொண்டே போகும், ஊற்றி முடியாத நயாகாராவாய்க் கொட்டிக்கொண்டே இருக்கும், எண்ணி முடியாத எண்ணங்களாய் பெருகிப் பெருகி நம்மை மூழ்கடித்துக்கொண்டே இருக்கும்.

என்றால், மௌனத்தின் நீள அகலம்தான் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தின் நீள அகலம் எது வென்றுகூட ஓர் நாள் நாம் சொல்லிவிடலாம் ஆனால் மௌனம் சொல்லும் சேதிகளின்... உணர்வுகளின்... வாழ்க்கையின்... நீள அகலத்தை மட்டும் சொல்லிவிடவே முடியாது.

அதிலும் இந்தக் காதல் இருக்கிறதே காதல். அதில் நிலவும் மௌனத்தைவிடப் பெரியது அந்தக் காதலும் இல்லை, உயிர்க் காதலியும் இல்லை.

ஆமாம் மௌனம் சூழ்ந்திருக்கும்போது எழுந்து நிற்கும் காதல் இருக்கிறதே அது சொல்லிச் சிவந்த எத்தனை உயர்வான காதலையும்விட பன்மடங்கு உயர்வானது. கைகளின் வளைவுகளில் கனிந்து கிடக்கும் எத்தனை அற்புதமான காதலியையும்விட அற்புதமானது.

அப்படியான மௌனம் படுத்தும் பாடு இருக்கிறதே அதைத் தாங்கிக்கொள்ள ஆயிரம் பல்லாயிரம் தேவர்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உயிரை எடுக்கும் அந்த மௌனமே உயிரைத் தருவதாயும் நிலவும்.

அந்த மௌனம் கலைந்துவிட்டால்? எப்படி கலையும்?

ஒன்று சம்மதமாகிக் கைகூடும் அல்லது சருக்கி விழுந்து சருகாகும்.

ஆனால் அது சம்மதத்தையே தொட்டு சந்தோசத்தையே அள்ளிக் கொட்டினாலும், மௌனத்தில் தவித்துத் தவித்து ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒரு கோடி முறை பூத்துப் பூத்து சொர்க்க மணம் வீசிய அந்த விவரிக்க முடியாத ஆனந்த சுகத்தை இழந்ததாகவே ஆகிப்போகும்.

இங்கே ஒரு கவிஞன் தன் காதலியின் மௌனத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து வார்த்தைகளாய் வெடித்து ஒரு கவிதை எழுதுகிறான், வாருங்கள் வாசிக்கலாம்.



உன் மௌனம்
நித்தமும்
ஒரு புதுப் புத்தகசாலை

உன்
மௌனத்துக்கு
உரை வரையத் துவங்கித்தான் -

என்
தூரிகைக்குப்
பொற்சிறகுகள் வெடித்தன

என்
வெற்றுத்தாள்கள்
தங்கத்தாள்களாக்கப்பட்டு
வைர வைடூரியங்கள்
பதிக்கப்பட்டன

என்
கனாக்களுள்
இந்திர நந்தவனங்களத்தனையும்
நறுமணத்தைக் கொட்டிவிட்டு
விதவைகளாய்த் திரும்பின

அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா

என்
உறக்கத்தைத்
தின்று தீர்க்கும் பசிப்பற்களா

நிலவொளீ...
உனக்குத் தெரியுமா

மார்கழிப் பிஞ்சுப்புல்
வைகறைப் பொழுதுகளில்
பனிப் பன்னீர்க் குடங்களைக்
கர்வமாய்ச் சுமக்குமே

அப்படித்தான்
என்
உட்கிளியும்
உன் மௌனத்தைச் சுமக்கிறது

ஒருமுறை
என் உறங்கா விழிகளின்
இமைக்கதவுகள்
அடித்து விலகும்முன்
ஓராயிரம் முறை
உன்
மௌனத்தின் நினைவுகளாய்த்
துடித்து நெளிகிறது

இந்த உன்
மௌனம் கலைக்கப்படும்
பொற்பொழுது எப்பொழுது

உன்
பொல்லாத
மௌனத்தை இழுத்து
முடிவுரை சொல்லச்செய்யும்
திடமனமும் எனக்கில்லை

அடர்ந்து கொண்டே போகும்
அதன்
அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும்
உர உயிரும் எனக்கில்லை

02 உலகம்

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் வெளியான ஒரு பழைய கவிதை இது. மாநில அடையாளக் கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டு இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி மலருக்குத் தேர்வாகி இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். அட நம்ம கவிதையைக்கூட கண்டுகொள்கிறார்களா என்று. இருந்தும் ஒரு கவிதை நூல் வெளியிடும் மனவீரம் அன்று எனக்கு வரவே இல்லை. கனடா வந்துதான் என் பழைய கவிதைகளைக் கோத்து முதல் நூல் மாலை செய்தேன்.


சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து

- அன்புடன் புகாரி

01 வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்


கவிதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை