நலமா என்றான்
இல்லை
நலமாக இருக்கிறேன்
என்றேன்

அடடா
என் இயல்பான கேள்விக்கே
இப்படி ஓர்
அதிநவீன கவிதையா
என்று சிலிர்த்தான்


அப்படியா
என்றேன்

ஓகோ
தெரியாதவனைப் போல
என்னைச் சோதிக்கிறாயா

அதிநவீன கவிதைகளைச்
சரியாய்ப்
புரிந்துகொள்ள
பயிற்சி வேண்டும்
என்று எனக்குத் தெரியும்

என்னைப் பாமரன்
என்று நினைத்து
பம்மாத்து காட்ட வேண்டாம்

அதிநவீன கவிஞர்கள்
தங்கள் படைப்புகளுக்குப்
பொருள் சொல்லமாட்டார்கள்

அவர்கள்
ஆக்கப் பிறந்தவர்கள்
ஆக்கியவற்றை விளக்கப்
பிறந்தவர்கள் அல்லர்

எனக்குப் புரிந்த பொருளை
ஒரு வாசனாய்ச் சொல்கிறேன்
சரியாக இருக்கிறதா
என்றும் சொல்லவேண்டாம்
மௌனமாய்
நகர்ந்தாலே போதும்
நான்
புரிந்துகொண்டுவிடுவேன்

அதிநவீனக்
கவிதைகளை மட்டுமல்ல
அதிநவீனக்
கவிஞர்களையும்
எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்
என்று எனக்கு
நன்றாகத் தெரியும்

இதோ
உன் கவிதையின்
ஆழ்பொருள்

நலமா என்றேன் நான்
இல்லை என்றாய் நீ
ஏனெனில்
நான் நினைக்கும் நலத்தில்
நீ இல்லை

அதோடு நில்லாமல்
தொடர்ந்து
நலமாக இருக்கிறேன்
என்றாய் நீ

ஏனெனில்
இது
நீ நினைக்கும் நலம்

உன்
நல அகராதிப்படியான
நலம்

என்
அகராதிப்படியான
நலம் இல்லை

அடடா
எத்தனை ஆழம்
உன் கவிதையில்
என்று வியந்தான்

விருதுதர
என் முகவரிக்கு வராதே
ஆம்
என் முகவரிக்கு வா
என்றேன்


அடுத்தும்
ஓர்
அற்புதக் கவிதையா
என்ற அதிர்ச்சியில்
உறைந்தே நின்றான்

அன்புடன் புகாரி
ஆயிரம்தான்
அவளுக்குச்
சொக்கத் தங்க
மனதிருந்தாலும்

ஆயிரம்தான்
அவளுக்கு
அமுத சுரபி
அன்பிருந்தாலும்

ஆயிரம்தான்
அவளுக்கு
ஆகாய உயர்
அறிவிருந்தாலும்

எதையும்
பார்ப்பதில்லை
பாழாய்ப்போன
இந்த பூமி

அழகை மட்டுமே
பார்க்கிறது

அதை
அபகரிக்கவும்
பார்க்கிறது

ஊரான் தோப்பு
மாங்காயைக்
கையில் கற்களுடன்
நின்று பார்க்கும்
பள்ளி செல்லாச்
சிறுவனைப் போல

பார்ப்பதுதான்
நாகரிகமா

பறிப்பதுதான்
ஆணினமா

அன்புட்ன் புகாரி
ஐந்தா
புலன்கள்
ஐயாயிரமா

ஐயம்
வந்தது

நேரெதிரே
அவள்

ஆம்
வந்துவிட்டது
கோடை

இவ்வளவுதான்
அமெரிக்கப் பெண்ணின்
ஆடை

கவிஞர் புகாரி
ஆம்...
மரணத்தின்மீது
எவருக்குமே பயமில்லை

ஏன்
பயப்பட வேண்டும்

மரணமென்ன
கொடுமையானதா

பரிசுத்தமான
விடுதலையல்லவா

இருக்கும்போது
அது
வந்திருக்கப்போவதில்லை
இறந்தபோது
நாம்
இருக்கவே போவதில்லை

பிறகு ஏன்
பயப்படவேண்டும்

ஆனால்...

பிரியத்தில்
பாசத்தில்
நெருக்கத்தில்
உயிரில்
இருக்கும் உயிர்களைப்
பிரியப்போகிறோமா
என்று
நினைத்துவிட்டால்

என்னையே நான்
பிரிந்துவிடுவேனோ
என்று
அஞ்சிவிட்டால்

மரணபயம்
கன்னங் கருஞ்சிறகு
பூட்டிக்கொண்டு
காய்த்து வெடித்தக்
கூர்நகக் கால்களோடு
பறந்து வந்து
நெற்றிப் பொட்டில்
அமர்ந்து விடுகிறது

கண்கள்
கண்ணீர்க் காட்டாற்றில்
குதித்தோடத் தொடங்கிவிடுகின்றன

அன்புடன் புகாரி
ஊழல்
மிதமிஞ்சிய நாட்டில்
எவருக்கேனும்
சுதந்திரம் இருக்க
வழியுண்டா?

எல்லோரும்
எவ்வகையிலேனும்
தண்டல் கட்டித்தான்
நடக்க
உட்கார
எழுந்திருக்க
முடியும்

கூடுதல் அவலமாய்
சிலரோ
தங்களுக்குத்
தாராள
ஏராள
சுதந்திரம் இருப்பதான
கற்பனையில்
பொய்ச் சிறகு பூட்டி
பொட்டல் வெளியில்
புழுதிகளாய்ப் பறக்கிறார்கள்

ஜனநாயக நாட்டில்
சுகமாய் வாழ்வதாக
பித்துக்குளிகளைப் போல
பினாத்துகிறார்கள்

அன்புடன் புகாரி
அமெரிக்காவில் கனடாவில் இன்னும் ஐரோப்ப நாடுகளில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க அங்கு வாழும் குடும்பப் பெண்கள் பணிக்கும் சென்றுவிட்டு சனி ஞாயிறுகளில் பெரிதும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் போதிய வசதிகளைச் செய்துகொடுத்தால், புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் அத்தனைத் தமிழ்ப் பிள்ளைகளையும் அழகாகத் தமிழ் பேச வைத்துவிடுவார்கள்.

அடுத்த தலைமுறை தமிழில் பேசுமா? அப்படியொரு அச்சம் எவருக்கும் இல்லையா?

ஊரில் தமிழ்ப்பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்கள். ஆனால் எழுதப்படைக்கத் தெரியவில்லை.

இங்கே கனடாவில் இளையவர்கள் பேசுவதும் இல்லை.

தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவேண்டும் என்பதே இக்காலத்தின் மிகப் பெரிய தேவை, கட்டாயம், அடிப்படை, தமிழுக்கான வாழ்க்கை.
எனக்கு
விழிகள் இரண்டு

ஒன்று
வன்முறையை
இன்மொழியால்
அழிக்கப் பார்க்கும்
விழி

இன்னொன்று
அறத்தை
கருணையன்பால்
வளர்க்கப் பார்க்கும்
விழி

வன்முறை வகைகள்
மூன்று

செயல் வன்முறை
சொல் வன்முறை
எண்ண வன்முறை

இவற்றுள்
எண்ண வன்முறையே
எண்ணிமுடியா
கொடூரத்தின் உச்சம்

செயல்வன்முறையைத்
தடுத்துவிடலாம்

ஏனெனில்
அது நிகழ்வதைக்
கண்ணறியும் என்பதால்

சொல்வன்முறையை
நிறுத்திவிடலாம்

ஏனெனில்
அது உதிர்வதைச்
செவியறியும் என்பதலால்

எண்ண வன்முறையே
அனைத்து
வன்முறைகளுக்குமான
மூலம்
அது
தன்னை
முற்றாக மறைத்துக்கொண்டு
மூட மூர்க்க உலகைத்
தவறிழைக்கத் தூண்டுவதிலேயே
முனைப்பாய் இருக்கும்

எண்ண வன்முறையாளனின்
நாவினிப்புச்
சாதுர்யங்களில் சரிந்து
தன்னை இழக்கும் மனிதனின்
அறியாமை
அடியோடு ஒழிய
மகத்துவம் வாய்ந்த
ஒரே மருந்து
ஈர இள நெஞ்சில்
அறம் பதிப்பதேயன்றி
வேறில்லை

அம்மா தருவாள்
ஆசான் தருவான்
ஆண்டவன் தருவான்

மானுடம்
மானுடமாய் வாழ
அழுத்தமாய் ஆழமாய்
அழிந்துபோக திருத்தமாய்
அறம் பயில்வாய்
அன்பே


பாரதி மட்டும் பயந்திருந்தால்
புரட்சிக் கவிதை
ஒன்றுகூட
உயிர்கொண்டிருக்க
முடியாது

பணம் பட்டம்
அரசியல் செல்வாக்கு
அசிங்கங்களுக்குப்
பயந்து பதுங்கிச் சாகும்
தமிழன்
ஒரு சாபக்கேடு
மதம்
அறம் மிகுந்த
அரசியல் செய்ய
வலியுறுத்துகிறது

அரசியல்
வக்கிரங்கொண்ட
போலி மதவாதிகளைத்
தேடிப் பிழைக்கிறது
#மனிதன் மதம் இறைவன்

கிழக்கில் நின்றாலும்
மேற்கில் நின்றாலும்
வடக்கில் நின்றாலும்
தெற்கில் நின்றாலும்
திசையறியா திசைமாறி
திரும்பியே நின்றாலும்
சூரியன் ஒன்றுதான்
பலவல்ல

எத்தனை எத்தனை
மதங்கள் மாறினாலும்
இறைவன் மாறுவானோ

மதம் மாறினால்
செல்லும் மார்க்கம்
மாறலாம்

பேரண்டத்தில்
இறைவன் ஒருவனே என்றால்
அவன் எப்படித்தான்
மாறுவான்

செல்லும் வழியைச்
செம்மையெனத் தேர்ந்து சேர்வதும்
மனதிற்கு மையமாய் மாற்றுவதும்
ஏற்ற வாழ்விற்கு ஏற்றதாய் ஏற்பதுமே
மதமாற்றம் வேறில்லை

எல்லா நதிகளும்
கடலுக்கே

எல்லா துளிகளும்
நிலத்திற்கே

நீடூரலி அண்ணா, என் பெயருக்கான விளக்கத்தை ஒருவருக்கு நான் எழுதினேன்.அதை அப்படியே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். 

ஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள்.
இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள். என் பெயரை மீண்டும் ஒருமுறை இச்சபையில் கூறுகிறேன். என் பெயர் புகாரி, என் தந்தையின் பெயர் அசன்பாவா.

புகாரி என்பதை புஹாரி என்றுதான் நானும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இடையில் வரும் க என்ற எழுத்து,  ஹ என்ற ஓசையையே பெறும் என்பதால் புகாரி என்று எழுதுகிறேன்.

ஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் அல்ல. சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட எழுத்துமுறை. அந்த எழுத்துக்களின் பெயர் கிரந்தம்.

நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல. ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமேகிரந்தம் பயன்படுத்துவேன்.

புகாரி என்பது சரியாகவே உச்சரிக்கப்படும் வகையில் அமைந்திருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன்.
ஹசன்பாவா என்பதுதான் என் தந்தையின் பெயர். எனக்கு விபரம் தெரியும் முன்பே
அவர் உயிரை விட்டுவிட்டார். ஊரில் மிகுந்த செல்வாக்குடையவர். அவர் பெயர் அசன்பாவா என்றுதான் பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிவாசல் போன்ற
கல்வெட்டுகளிலும் இருக்கின்றது.

அவரின் தமிழ்ப்பற்று எனக்குத் தெரியாது. அவரை அப்படி எழுதவைத்தவர் யார் என்றும் தெரியாது. ஆனால் அவர் அசன்பாவா என்று தன் பெயரை எழுதி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அவரின் தமிழ்ப்பற்று பிடித்திருக்கிறது. எனக்கான தமிழ் மூலமும் அவராகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்ளப் பிடிக்கிறது.

ஆகவே அவர் பெயரை அப்படியே பயன்படுத்துகிறேன். இனி என் பெயரைச் சொல்லி அழைப்பதும், என் தந்தைப் பெயரைச் சொல்லி அழைப்பதும், உங்கள் விருப்பம் எனக்கு ஆட்சேபனை இல்லை.

நான் கனடா வந்ததும் என் பெயர் இப்படித்தான் மாறிவிட்டது
முதல் பெயர்: அசன்
இடைப்பெயர்: பாவா
குடும்பப்பெயர்: புகாரி
இது இந்தியாவில் எடுத்த என் கடவுச்சீட்டில்-பாஸ்போர்ட்டில் உள்ள என் பெயரின் காரணமாக அமையப்பெற்றது.

என்னை அலுவலகத்தில் ”அசான்” என்றும் ஓசைகூட்டி அழைக்கிறார்கள். சில அலுவலகங்களில் புகாரி என்றும் அழைத்ததுண்டு. இரண்டும் எனக்கு பழகிவிட்டது.
தமிழ் வட்டத்தில் இளையவர்கள் மரியாதை காரணாம
ஆசான் என்றும் அழைப்பார்கள்.
 
ஆனால் நான் என் அனைத்து மடல்களிலும் கீழே உள்ளதுபோலத்தான் கையொப்பம் இட்டுத்தான் நிறைவு செய்வேன்.

அன்புடன் புகாரி
--- கள்ளம்
--- ஊழல்
--- பாகுபாடு
--- வெறுப்பு
--- தீண்டாமை
--- தகர்ப்பு
--- தன்முனைப்பு
--- வன்முறை
---அழிவு
--- மிருகம்
இவையாவும்
தினம் தினம் வளரும்
மனிதமன வக்கிரங்கள்
இவற்றை
அழித்துத் துடைத்து
--- அறம்
--- வணக்கம்
--- வேண்டுதல்
--- ஆரோக்கியம்
--- ஈகை
--- அன்பு
--- கருணை
--- அமைதி
--- நிம்மதி
--- மனிதநேயம்
இவை மட்டுமே
தந்தால்தான்
அது
நல்ல மார்க்கம்
https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM

இது பாடலா? கவிதையா?

வைரமுத்து ஒரு பாடலாசிரியர் மட்டுமே கவிஞர் இல்லை என்று சில பித்துகள் புலம்பும். அது வயிற்றெரிச்சல் என்று அதுகளுக்கே தெரியும்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று குறிப்பெடுக்காமல் அப்படியே மூழ்கிப் போங்கள்!

*

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க

ஜனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டது என்றது சாம்பலும் எங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போலொரு மாமருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதி என்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க்க

- கவிப்பேரரசு வைரமுத்து


நான் என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்?

என்னிடம் ஒரு கனித்தோட்டம் இருந்தது. சுவைமிகுந்த அந்தக் கனித்தோட்டத்தில் எலித்தொல்லை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. கிட்டத்தட்ட எல்லா கனிகளையும் எலிகள் குதறியெடுத்து எதற்குமே ஆகாதவைகளாக்கின.
என்ன செய்வதென்றே தெரியாமல் திண்டாடியபோது, ஒரு பெரியவர் ஒரு வேட்டைநாயை கொண்டுவந்து என் கனித் தோட்டத்தில் காவலுக்கு விட்டார்.

வேட்டைநாயின் வலிமையை உரக்கச் சொல்லி எலிகளுக்கு மிகுதியாய் பயங்காட்டினார். எலியின் அத்தனைக் காதுகளிலும் ஓங்கி ஒலிக்கும்படி கட்டளைகளாகவே சொன்னார். அவ்வளவுதான் எலிகள் ஓடி ஒளிந்துவிட்டன.
தோட்டமும், கனிகளும், இலைகளும், பாத்திகளும் எழில் கொள்ளத் தொடங்கின. கனிகளின் வாசம் நாசியை நிறைத்தது. அந்த ஊரே கனிகளைப் புசித்து செழித்து வாழ்ந்தது.
ஓடிப் பதுங்கிய எலிகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன. அட இந்த ஒற்றை நாய் நம்மை என்ன செய்துவிடும் என்ற தைரியம் கொண்டன. ஆனாலும் என்மீதும் பெரியவர்மீதும் வேட்டைநாயின் மீதும் அனைத்துக் காவல் கட்டுப்பாடுகளின் மீதும் உள்ள பயம் முழுவதும் போய்விடவில்லை எலிகளுக்கு.
அப்போதுதான், ரகசியமாய் அந்த வெறிகொண்ட எலிகள் சில கனிகளை கடித்துவிட்டு ஓடிப்போய் பதுங்கிக்கொண்டன. வேட்டை நாய்தான் அந்தக் கனிகளைக் கடித்ததுபோன்ற பெரிய பல் அச்சுகளை உருவாக்கிவிட்டு மறைந்துகொண்டன.
இப்போது நாயின்மீது பழிவந்தது. வந்தவர் சென்றவர் நின்றவர்கள் எல்லாம் இது நாய் கடித்த அச்சுபோல்தானே இருக்கிறது என்று ஆய்வே செய்து வெளியிட்டனர்.

நாயைக் கண்டிக்கத் தொடங்கினர். நாயை வெறுக்கத் தொடங்கினர். நாயைக் கொன்றுபோடலாம் என்றுகூட பரிந்துரைத்தனர்.
இவை அனைத்தையும் கண்ட சில கனிமரங்கள் மட்டும் கண்ணீர் வடித்தன. செய்வதறியாது நின்றன. ஒருநாள் நடு இரவில் இந்தச் சூழலைச் சாதகமாக்கி எலிகள் பெருங்கூட்டமாய் வந்து நாயை நடக்கவும் முடியாத அளவிற்கு கடித்துக் குதறி முழுவதும் ஊனப்படுத்திவிட்டன.
இப்போது கனிகளெல்லாம் எலிகளின் கொண்டாத்தில். கனிமரங்களின் கண்ணீர் எவர் மனங்களையும் தொடாத நிலையில்.

நானோ திகைத்து நின்றேன். ஓ இந்த எலிகள்.... என்று இமைகளே இல்லாமல் போகும் அளவிற்கு விழிகளை விரித்து அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.
இனி ஒரு வேட்டைநாயல்ல எத்தனை வேட்டைநாய்கள் வந்தாலும் என்ன செய்வதென்று எலிகளுக்குத் தெரியும். எலிகளுக்கு உதவ பருந்துகள் உண்டு கழுகுகளும் உண்டு.

இனி பெருத்துப் பெருத்து அனைத்தையும் அழித்து முடிக்கப்போகும் எலிகளால் ஆனதே இந்த உலகு என்பதில் யாருக்கும் எவருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் வேண்டாம்!

வக்கிரம் பிடித்த மனிதர்கள் தீய செயல்களில் ஈடுபட்டு மனித வாழ்க்கையை அழிக்க, அறம் கொண்டு மதங்கள் இறைவனின் பெயரால் வக்கிரங்களை அழிக்கப் போராட, முதலில் பதுங்கிய எலிகள் பின் சூழ்ச்சிகள் செய்து படைதிரட்டிப் பாய்ந்து அறம் கூறும் மதங்களையே நஞ்செனக் கூறி வக்கிரத்தை உக்கிரமாக்க, உலகே அறமிலாச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் கொடும் நாசக் காலம் இது.

மதம்
ஒரு விநோதம்தான்

பலருக்கும் பலகாலும்
அறவாழ்வு தரவந்து
சிலர்கையில் சிலநேரம்
அரிவாளைத் தந்துவிடும்


மதம்
ஒரு விநோதம்தான்

நடந்தே
ஊர்கள் கடந்தோர்க்கு
குதிரைமுதுகு வாய்த்தநொடி
எல்லைதாண்டிப்
பரவத் தொடங்கிவிட்ட

மதம்
ஒரு விநோதம்தான்

மொழிவேறு இனம்வேறு
பழக்கம்வேறு பண்பாடுவேறு
நிறம்வேறு அறம்வேறு
என்றானப் பேருலகில்
தான்மட்டும் தனித்தே போதுமென்ற
பொதுநெறி பரவவிட்ட

மதம்
ஒரு விநோதம்தான்

பேரன்பே இறையென்று
பொன்னெழுத்தில் பொழிந்தாலும்
ஆதிக்கச் சக்திகளும்
அரசியல் வித்தைகளும்
போர்களையே ஏவிவிடப்
பகடைக்காய் ஆகிவிட்ட

மதம்
ஒரு விநோதம்தான்

மனிதநேயக் குரல்வளையை
நொறுக்கித் தூளாக்கும்
வக்கிரர் விரலொடிக்க
தாய்மன இணக்கம் தேடித்
தவித்தே தேம்பிநிற்கும்

மதம்
ஒரு விநோதம்தான்


நண்பன்தான்

ஒரு நண்பன்தான்
உன் வெளிர்ரோசா உதடுகளில்
உன் அனுமதிக்குக் காத்திருக்காமல்
ஒரு சிகரட்டை
ஆதிமுதலாய்த் திணிக்கிறான் 

ஒரு நண்பன்தான் 
உன் மறுப்புகளை நிராகரித்து 
அச்சங்களை அழித்தெடுத்து
உன்முன்
ஒரு போத்தலை
ஆதிமுதலாய்த் திறக்கிறான்

ஒரு நண்பன்தான் 
உன் கூச்ச உணர்வுகளைக் 
கொன்றழித்து
அறிமுகமே இல்லாத 
அந்த வார்த்தையை
உன் செவிகளில்
ஆதிமுதலாய்க் கொட்டுகிறான்

ஒரு நண்பன்தான்
உன் பருவ ராகங்களைக்
கொதிப்பாய்த் தகிப்பாய் 
திரித்தெடுத்து
மேடுபள்ளத் தாக்குகளில்
பிடித்துத் தள்ளிவிடுகிறான்

இப்படியாய்..... 

ஆதிமுதலாய் 
ஆதிமுதலாய்
அத்தனைக் கேடுகளையும்...

நண்பர்களே
நீங்கள் நல்லாவே 
இருக்க மாட்டீர்களடா

அன்புடன் புகாரி


கனடா விருது வாங்கிய கவிஞர் அதே நாளில் தண்ணியால் மாண்டார்.
வேணுவனம் ஓர் கட்டுரை எழுதி மூத்த எழுத்தாளர்களே இளைய எழுத்தாளர்களுக்கு ஊத்திக்கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்
மூத்தவர் செய்யும் தவறைக் கண்ட இளைய தலைமுறை எழுத்தாளர்கள் கெட்டொழிவார்கள் என்றார்.
ஆனால் ஒரு முக்கியமான விடயத்தை மறந்துவிட்டார்.
இப்படி குடித்தே மாண்ட கவிஞர்களின் கவிதைகளைக் கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். எல்லாம் தோல்வி மயம். பித்துநிலை. தனிமையின் துயரம். தாளாத விரக்தி. அத்தனையையும் இளைய தலைமுறை வாசகர்கள் தலையில் ஏற்றுகிறார்கள்.
வாசித்த மாத்திரம் ஓடிச் சென்று தண்ணியடிக்கலாம், தற்கொலை செய்யலாம். வேறு எந்த முன்னேற்ற வழிகளுக்கும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் நம்பிக்கைக் கவிதைகளை இவர்கள் படைப்பதே இல்லை.
இப்படி அழியும் சமுதாயத்தை உலகைப் படைக்கும் கவிதைகளுக்கு கனடா விருது வழங்குகிறது என்றால் அதன் அறியாமையை நினைத்துக் கலங்காமல் இருக்க முடியவில்லை
தான் கெட்டொழிந்தாலும் நம் எழுத்துக்கள் எவரையும் கெட்டொழிக்ககூடாது என்ற அக்கறையில்லாத எழுத்தாளன் எழுத்தாளனா?
'அம்மா’ தான்
இலக்கியத்தைச்
செம்மையாய் வளர்க்கிறார்கள்
இன்றெல்லாம்

டாஸ்மாக்
இல்லையெனில்
இலக்கியமே இல்லை
எழுத்தாளர்களே இல்லை

தண்ணியில் கவிழாமல்
ஒரு வரிகூட
எழுதமுடியாதவர்களாய்
தமிழ்நாட்டின்
எழுத்தாளர்கள்
கவிஞர்கள்

போதைதான் 
எழுத்து

போதைதான் 
இலக்கியம்

ஒரு 
நூலைத் தொட்டால்
அதன் அட்டையிலேயே 
ஒட்டிக்கிடக்கும்
மதுவின் வாடை 
நாசிக் கோட்டையை
இடித்து முடிக்கிறது

போதை வந்து
புத்தி சொல்கிறது
போதையிலில்லாதவனோ
புரிந்துகொள்ள முடியாமல் 
திகைக்கிறான்

உலகுக்கு 
நல்ல கவிதை 
கிடைத்துவிட்டதாய்
புளகாங்கிதம் கொள்கிறார்கள்
இன்றைய 
உயர்மட்டப் படைப்பாளிகள்

அன்புடன் புகாரி
நேற்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழா வழக்கம்போல நன்றாக நடந்தது. பழைய முகங்கள் சில புதிய முகங்கள் பல என்று காண முடிந்தது. ஓரிருவரைத் தவிர ஏனையோருக்கு நேரில் வந்து பரிசு பெறும் வாய்ப்பு கைகூடியிருக்கவில்லை.

(1)
நீச்சல்காரன் என்ற புனைபெயருடைய ராஜாராமன் என்ற இளைஞர் தமிழ்க் கணிமை விருது பெற்று தந்த சொற்பொழிவு மிகவும் இயல்பாக இருந்தது. ஒரு பள்ளிமாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுபோன்றதொரு தொனியில் இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. முகநூலிலும் https://www.facebook.com/neechalkaran?fref=ts வலைப்பூவிலும் http://www.neechalkaran.com/ இருக்கிறார்.

தமிழில் இவர் போன்றவர்களின் வளர்ச்சியே மிக மிக அவசியம். அந்தவகையில் நான் இவரையும் இவர்போன்று உருவாகின்ற அனைவரையும் முதன்மையானவர்களாக நிறுத்தி வாழ்த்துகிறேன்.

இவ்வேளையில் என் நினைவில் முத்து நெடுமாறன் வந்துபோகிறார். உலகின் முதல் கூகுள் தமிழ்க் குழுமமான என் அன்புடன் குழுமம் வந்துபோகிறது. 1999 முதலான என் கணித்தமிழ் வந்துபோகிறது. இன்னும் ஏராளமானோர் வந்துபோகிறார்கள். நான் அதனுள்ளேதான் வாழ்ந்துகிடக்கிறேன்.

(2)
தமிழ் விக்கிப்பீடியா சேவைக்காக மயூரநாதனுக்கு இயல்விருது வழங்கப்பட்டது. அவரின் உரையை அவர் சற்றே இறுக்கமானதாய் அவைக்குத் தேவையான அரியவற்றை சட்டென வழங்குவதாய் இருந்திருக்கலாம். அவரிடம் நிறைய செய்திகள் இருந்தும் வழங்குவதில் பயிற்சி இல்லை என்றே தோன்றியது.

தமிழில் உறுதி செய்யப்படவியலாத இப்படியான விக்கிப்பீடியா இடுகைகள் அவசியம்தான். பல்வகைத் துறை அறிஞர் கூட்டம் இதன் தரத்தில் நின்று உரம்சேர்க்க வேண்டி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

(3)
அமெரிக்காவில் மருத்துவராய் நாற்பதாண்டுகளுக்கும் மேல் வாழும் டாக்டர் திருஞானசம்பந்தம் என்பவரின் பேச்சு சுவாரசியம் மிகுந்ததாகவும் பலன் நிரம்பியதாகவும் இருந்தது. ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்குத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் அரை மில்லியனை தனியே இவர் மட்டுமே கொடுத்தவர். இவர் நண்பர் இன்னொரு அரை மில்லியனைக் கொடுத்திருக்கிறார்.

தமிழுக்கு உயர் பீடங்கள் அவசியம்தான். இதன் பலன் எந்த வகையில் தமிழின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துத் தரும் என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

(4)
முனைவர் மு. இளங்கோவனின் சிறப்புரை நன்றாக இருந்தது. கிடைத்த சில நிமிடங்களில் தொல்காப்பியனைத் தொட்டுக் காட்டினார். கணிமைப் பரிசுபெற்ற ராஜாராம் போன்றவர்களுக்கு உந்துதலாய் இருப்பதாக ராஜாராமே சொல்லிப் போனது அவருக்கான பெரிய பாராட்டு. அவர் தொல்காப்பியன் என்ற ஒருமுனை தொட்டதோடு நில்லாமல் இன்றைய கணினி முனையையும் தொட்டுப் பேசி இருக்கலாம் என்று தோன்றியது. பேசக்கூடியவரிடம் எதிர்பார்ப்பது பிழையில்லையே.

இவர்போன்றவர்கள், பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக, தமிழிக்கு நிறையபேர் வந்து சேரவேண்டும். தமிழ் பழமையோடு நின்றுவிடக்கூடாது, புதுமை புதுமை என்று நிறமிழந்தும் போய்விடக்கூடாது

(5)
முனைவர் ப்ரெந்தா பெக் சிறப்பு விருதினைப் பெற்று உரையாற்றினார். பலரும் கனடிய உடையில் வந்திருக்க இவரோ அழகாகச் சேலை கட்டி வெள்ளையோ வெள்ளை நிறத்தில் உள்ள தமிழ்ப்பெண்ணாகவே வந்திருந்தார். சில வரிகளில் தெளிவாகப் பேசினார். தமிழுக்கு இவர் போன்றவர்கள் வருவது இன்று நேற்றில்லை. தமிழ் அச்சில் வருவதற்கும், அகராதி தொகுத்ததற்கும் என்று நிறைய பணிகளை அயல்நாட்டவர் தமிழ்மீது பற்றுகொண்டு செய்திருக்கிறார்கள். சட்டென்று எனக்கு வீரமாமுனிவர் நினைவில் வருகிறார்.

இவர் போன்றவர்கள் இன்னும் இன்னும் ஏராளமாகத் தமிழுக்கு வந்த வண்ணம் இருக்க வேண்டும். அது தமிழ் வளர்ச்சிக்கு முக்கியமானதாய் இருக்கும்

(6)
தமிழிலிருந்து ஆங்கிலம் (கல்யாண் ராமன்) ஆங்கிலத்திலிருந்து தமிழ் (வி. டி. ரத்னம்) என்று மொழிமாற்றம் செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

மொழிமாற்றச் சேவைகள் தமிழ் வளர்ச்சிக்கான மிகப் பெரிய தூண்கள். தமிழை ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் வெட்டிப் படைப்புகள் ஓய்ந்து உச்சப்படைப்புகள் ஒளிரத் தொடங்கும்.

(7)
இந்த அவையில் மூத்தப் பெரும் படைப்பாளி அசோகமித்திரன் அவர்களுக்கு விருது வழங்கியது சிறப்பு. தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்திப் பிடித்து எழுதியவர்களுள் இவரும் ஒருவர்.

தமிழுக்கு இப்படி பெயர் சொல்லும் பிள்ளைகள் நிறைய வரவேண்டும்.

(8)
இன்னும் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

(9)
குறைகள் ஏதும் இருந்தனவா என்று யாரும் கேட்காதீர்கள். குறைகள் இல்லாமல் இல்லை ஆனால் நிறைகளையே பேசுவோமே என்று உள்ளம் சொல்கிறது.

இன்னும் எத்தனை எத்தனைபேர் தமிழ்த் தொண்டில் பிறந்ததுமுதலே இருக்கிறார். ஏன் பொதுநிலையில் நின்று அவர்கள் பக்கம் எல்லாம் இலக்கியத் தோட்டம் பூக்களைச் சொரிவதில்லை என்று எனக்குப் புரிவதே இல்லை. குறுகிய வட்டத்திலேயே சுழல்வதாகவே நான் காண்கிறேன். அது என் அறியாமையாகக் கூட இருக்கலாம். எனக்கு அறிவுரை சொல்ல எவரேனும் ஒரு தகுதியானவர் என்னிடம் விரைவில் வருவார் என்று நம்பிக்கையோடு நான் இதை நிறைவு செய்கிறேன்

(10)
அதற்குமுன் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அச்சாணி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு என் வழமை மாறாத பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
27 இறுதியாய் ஒரு கேள்வி

இரத்த நயாகராவில்
மீண்டும் மீண்டும்
மனித உயிர்த் தாகத்தோடு
மதர்ப்பாய் நீராடும்
மத மங்கையரே

உங்கள்
மோகனப் பார்வைகளின்
பூரண ஈர்ப்பில்

மேலும் மேலும்
சுண்டி இழுக்கப்பட்டுச்
சுருண்டுவிழும்
பாமர ஆத்மாக்கள்

பக்திப் பெருக்கெடுத்து
கண்கள் மூடி
கைகள் உயர்த்தி

தங்கள் தலைகளிலேயே
கொள்ளி வைத்துக்கொள்கிறார்கள்

வாருங்கள்..
வந்து உங்கள் கூந்தலை
உலர்த்திக்கொள்ளுங்கள்

.

கீதை அழுகிறது
குரான் தேம்புகிறது
பைபிள் கண்ணீர் வடிக்கிறது

வாழ்க்கையைத்தானே
வரையறுத்துச் சொன்னோம்

இறைவனைத்தானே
கண்டு பிடித்துத்தந்தோம்

இந்த
மத வாகனங்களோ
இவர்களை
வாழ்க்கைச் சொர்க்கத்திற்கு
இட்டுச் செல்லாமல்

இப்படி
மூர்க்கமாய் முட்டிக்கொண்டு
சடல தாகம்கொண்ட
சுடுகாட்டையல்லவா
தங்களின்
வெற்றிமேடையாக்கிவிட்டன

.

இப்படி
மாண்டு தீர்ந்தால்

இந்த
மதங்கள் யாருக்கு

அந்த
இறைவன்தான் யாருக்கு

நான் மதவாதி
என்றான் இவன்
நான் பகுத்தறிவு வாதி
என்றான் அவன்
எனக்கோ
இரண்டுமே புரியவில்லை

மதவாதி என்றால் யார்?

ஒரு மதத்தில் பிறந்ததால் அதை ஏற்று, வேறு மதத்தினரைக் கண்டாலே சிவந்து சிறுத்து வெடித்து வெறுப்பவன் பெயர்தான் மதவாதியா?

என்றால் அவன் மதவாதி அல்ல மத வியாதி.
ஆம் அவனுக்குப் பீடித்திருப்பது மத வியாதிதான்

அந்த வியாதி தொற்றிப் பரவக்கூடியது. பரவிப் பரவி உலகையே அழித்து முடித்துவிடும் கொடூர வியாதி அது.

பகுத்தறிவு வாதி என்றால் யார்?

பகுத்தறியாதவன் மனிதனா? ஆகவே மனிதன் என்றாலே பகுத்தறிபவன் என்றுதான் பொருள். அதனால்தான் மனிதர்களுக்கு ஆறு அறிவு சொல்லப்படுகிறது. அந்த அறிவில் ஏற்றம் இறக்கலாம் இருக்கலாம் ஆனால் பகுத்து அறியவே தெரியாத மனிதன் ஒருவன் இருக்கவே முடியாது.

ஆகவே பகுத்தறியாதவன் மனிதனா? அப்படி மனிதனே அல்லாத மிருகத்தைப் பற்றி புழுக்களைப் பற்றி கற்களைப்பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அந்தக் காட்டுமிராண்டியால் அல்லது அறிவிலியால் ஆகும், ஆகப்போகும் துன்பங்கள் துயரங்கள் வாழ்க்கை என்ற அற்புதப் பயிரை அழித்துத்தான் முடிக்குமில்லையா?

நீ எந்த மதத்தில் வேண்டுமானலும் இரு. ஆனால் எல்லா மதங்களையும் நேசிப்பவனாய் இரு. மதத்தில் இருந்தாலும் இல்லாவிட்டால் நிச்சயமாக நீ சிறந்த பகுத்தறிவுவாதியாய் இரு. பகுத்தறிவிற்கு ஏற்பில்லாத எதையுமே எக்காரணத்திற்காகவும் எந்த மதத்திலும் ஏற்காதே.

உலகை நல்ல ஆன்மிகத்தால் சிறந்த பகுத்தறிவால் நிறை அது உனக்கும் உன் சந்ததிக்கும் எல்லாம் தரும் இனிமையே வாழ்வாய் மலரும்.

#மதவாதியும்_பகுத்தறிவும்
ஒரு மதத்தை
உண்மையாய் நேசிக்கும்
ஓர் உள்ளம்
எல்லா மதங்களையும்
தன் மதத்தைப் போலவே
நேசிக்கும்

அதுதான்
ஆன்மிகம் நிறைந்த
பொன்மனம்

அப்படியான
ஆன்மிக மனமற்றவர்கள்
எம்மதத்தில் இருந்தாலும்
அங்கே அவர்கள்
அரசியல் செய்துகொண்டுதான்
இருப்பார்கள்

மதங்களுக்குள்
அரசியல் பெருகப் பெருக
வக்கிரர்கள் பிறப்பார்கள்
வெறியர்கள் வளர்வார்கள்
தீவிரவாதிகள் செழிப்பார்கள்
மனிதர்கள் சாவார்கள்
சுஜாத்தாக்கள் எல்லாம் எழுதி எழுதி 
தமிழ் வாசகர்களை உருவாக்கி இருக்காவிட்டால்
ஜெயமோகன்களுக்கெல்லாம் இன்று 
நான்கு வாசகர்கள்கூட
இல்லாமல் போயிருப்பார்கள்
பேராற்றின்
பெருங்கரைகளுக்கு
அப்பால்

அலைவிழுந்து
சிதறித் தெறிக்கும்
சிறுகுழி
அழுக்குமணல்
விளிம்புகளில்

நிறமிழந்த
சிறுநுரைக்கூட்டம்
ஓடியோடி
காலக்காற்றில்
உடைந்தழியும்
காட்சிதனைக் காண்பார்

கிட்டியது
சாட்சியென்று...

பேராற்றின்
பேரெழில் ஆற்றலையே
தூற்றித் தூற்றித்
தாழ்வார் தரமிலார்

அவர்
உள்ளம்
கள்ளமேயன்றி
நல்லதோ சொல்
நுண்ணறி நெஞ்சே

அன்புடன் புகாரி
அர்ச்சனைகள் சுலோகங்கள் என்று இந்துமதம் சார்ந்த அனைத்தும் சமஸ்கிரதத்தில் இருப்பதால், தமிழனுக்கு அவன் ஓர் இந்து என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

பைபிள் ஹீப்ரு, அராமிக், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு கிருத்தவன் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

குர்-ஆன் அரபியில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு முஸ்லிம் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

இந்து முஸ்லிம் கிருத்தவம் எல்லாம் மதங்கள். மதங்களின் வழியேதான் மொழியுணர்வும் இருக்க வேண்டுமென்றால் உலகில் பல ஆயிரம் மொழிகள் அழிந்து மிகச் சில மொழிகளே வாழநேரிடும்.

மதம் என்பது ஏற்பதால் வருகிறது. இன்று நீ ஒரு மதத்தில் இருக்கலாம். நாளை இன்னொன்றுக்கு மாறுவாய் அல்லது மதமற்றவனாய் ஆவாய்.

ஆனால் மொழி என்பது அப்படியல்ல. அது தாயோடு வருகிறது. அதை அந்தத் தாயே நினைத்தாலும் அழிக்க முடியாது.

இன்றெல்லாம் தாயே தமிழை அழித்துத் தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஊட்டுகிறாள். ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள். ஒரு தமிழனின் மரபணுக்களில் ஓடுவது தமிழெழுத்துக்கள். அதை அவளால் அழிக்கவே முடியாது.

அது ஒருநாள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியேறும். ஐம்புலன்களுடனும் ஐக்கியம் ஆகியிருக்கும் தாய்மொழியை அழிப்பது அத்தனை சுலபமான விடயம் அல்ல. வெளி உணர்வுகளுக்குத்தான் பூட்டு. உள்ளுணர்வுகளை மாற்ற அத்தனை எளிதில் முடியுமா?

ஆங்கிலம் மட்டும் படித்து ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தமிழன் ஒரு தமிழ்ப்பாட்டு கேட்டு தன்னை மறப்பான். ஏன்?

ஒரு சொற்பொழிவைக் கேட்டுச் சொத்தெழுதித் தர தயாராகும் உள்ளங்களும் உண்டு.

தாய்மொழி காப்போம், அது நம் செவிகளுக்கு நெருக்கமாகவே இருக்கட்டும்.

தாய்மொழி காப்போம், அது நம் நாவுக்குள் தேன் வார்ப்பதைத் தடுப்பவர்களாய் நாம் இருக்க வேண்டாம்.

தாய்மொழி காப்போம், அது நம் விழிகளுக்குள் கனவுகளாய் விரிந்தவண்ணமாகவே இருக்கட்டும்.

தாய்மொழி காப்போம், அது நம் உயிருக்குள் உயிராய் உட்கார்ந்திருப்பதை நம்மால் வெளியேற்றவே முடியாது என்பதை உணர்ந்தவர்களாய்... தாய்மொழி காப்போம்

அன்புடன் புகாரி
20160612

ஒரு கவிஞனின் முகவரிகட்டிவைத்தக்
கரையில்லா வெள்ளம்

எந்நாளும் நீரோடும்
உயிர் நதி

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ

வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ

விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்

தூற்றி
வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி

ரசனையெனும்
அமுதக்கடலில் மிதப்பு
அதில் துடிப்புகளின்
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்

கவிஞன்

*

என்னைப்பற்றித்தான் நான் எனக்குள் கண்டதை எழுதினேன் இப்படி பாரதியைப் போல. ஆனால் இறுதியில் கவிஞன் என்று முடித்தேன். இந்த குணங்களை அனைத்துக் கவிஞர்களுக்குமானதாக ஈந்தேன். ஏனெனில் சுயம்பாட நாணம் கொள்வதும் என் அடையாளங்களுள் ஒன்று ;-)

நினைத்துப் பார்க்கிறேன் - திசைகள் மாலன்

நினைத்துப் பார்க்கிறேன்

2005ல் சென்னை சென்றதும். திசைகள் எனக்கு அறிமுக விழா வைத்ததும். எழுத்தாளர் மாலன் தலைமை ஏற்று உரை நிகழ்த்தியதும் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றியதும், கவிஞர் இந்திரன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி, கவிஞர் அண்ணாகண்ணன் ஆகியோர் நூல் விமரிசனங்கள் தந்ததும், மறக்கமுடியாத நிகழ்வுகள்


சென்னையில் திசைகளின் கவிமுகம் அறிமுகம் விழாவில் திசைகள் மாலன் கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து தலைமையுரை ஆற்றுகிறார். சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து. விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி
*****

நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப்
பாராட்டுவோர்
பலர்

நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத்
தூற்றுவோர்
சிலர்

நானொரு
புலம்பெயர் தமிழன்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை
வியப்போர்
பலர்

நானொரு
புலம்பெயர் தமிழன்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை
மறைப்போர்
சிலர்

சிலரா பலரா

நம்மையும்
நம் வாழ்வையும்
தீர்மானிப்பவர்
உண்மையில்
சிலரா பலரா

சிலரும் அல்லர்
பலரும் அல்லர்

உன்னையும்
உன் வாழ்வையும்
தீர்பானிப்பவன்
நீதான்

உன் தமிழ்ப்பற்று
உனக்குள்
எவருக்காகவும்
வந்துவிடவில்லை

உனக்காகவே
உன்னால்
உனக்குள்
வந்தது
வளர்ந்தது

உன் கவிதை மோகம்
எவர் வளர்த்தும்
உனக்குள்
பற்றித் தொற்றி
வளர்ந்துவிடவில்லை

உன் மனம்
வளர்த்தே
மனதோடு மனதாக
தளைத்தது
வளர்ந்தது

அன்புடன் புகாரி
20160610

நினைத்துப் பார்க்கிறேன் - இணையத்தமிழோடு இணைந்த கதை

நினைத்துப் பார்க்கிறேன்

1999 கனடா வந்தேன். வந்தநாள் முதலாக இணையத் தமிழில் இரண்டறக் கலந்துவிட்டேன். 

தமிழ்  உகலம் என்னும் யாஹூ குழுமம்

இங்கே கொட்டியத் தமிழ் மடல்கள் எண்ணிலடங்கா. இவர்கள் நல்ல தமிழில் மட்டுமே உரையாட உலகத்தோரை அழைத்தவர்கள். ஆஸ்தான கவிஞன் என்ற உயர்வை எனக்குத் தந்தவர்கள். இங்கேதான் உலகின் எந்த மொழியிலும் நிகழாத ஒரு புதுமை நிகழ்ந்தது.

அன்புடன் இதயம் என்ற என் கவிதைத் தொகுப்பை இணையத்திலேயே வெளியிட்டார்கள். மாலன் அதற்கான தலைவர்.

இங்கே நான் சந்தித்த தமிழ் நேசர்களைப் பட்டியலிட்டு எழுதத் தொடங்கினால் ’தமிழ் உலகம் தந்த என் உலகம்’ என்ற நீண்ட தொடர் எழுத வேண்டி வரும். அதெல்லாம் நான் பணி ஓய்வு பெறும்போது பார்த்துக்கொள்ளலாம். 

தினம் ஒரு கவிதை 

என்.சொக்கனின் தினம் ஒரு கவிதை என் கவிதைகளுக்கு முற்றம் தந்து  அழகாக வடிவமைத்து உலகெலாம் பரவச் செய்தது. சிறு வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வந்தாலும், நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடர்ந்து கவிதைகள் இட்டுவந்திருந்தாலும், இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மாநில சிறந்த கவிதையாக என் கவிதை ஒன்று தேர்வு செய்யப்பட்டு இந்தியில் மொழிமாற்றம் ஆகியிருந்தாலும், அலிபாபா, தாய், குமுதம், திசைகள் என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் அப்போதே வெளிவந்திருந்தாலும், ஒரு புத்தகம் போடவேண்டும் என்ற துணிச்சலை தினம் ஒரு கவிதையும் தமிழ் உலகமும்தான் எனக்குத் தந்தன. 

கூடவே கனடா உதயன் பத்திரிகை என் கவிதைகளுக்குத் தங்கப் பதக்கம் தந்து பாராட்டியதும் ஒரு முக்கிய காரணம்

அன்புடன் என்னு கூகுள் குழுமம்

யாஹூ குழுமங்களில் மட்டுமே உலாவந்த இணையத் தமிழை. திஸ்கியில் மட்டுமே திளைத்திருந்த இணையத் தமிழை முதன் முதலில் கூகுள் குழுமத்திற்குக் கொண்டு வந்த குழுமம். இது முழுக்க முழுக்க யுனித்தமிழ் என்னும் யுனிகோடு தமிழில் நடத்தப்படும் குழுமம். உலகில் இதுவே இப்படி உருவான முதல் குழுமம். அதைத் தோற்றுவித்து வளர்த்த பணி என்னுடையதுதான்.

அன்புடன் அனுபவங்களைப் பற்றி நான் சொல்ல, என் ஆயுளே போதாது.

இங்கே ஒவ்வொருவருக்கும் இணையத் தமிழ் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இணையத்தில் எப்படி தமிழில் எழுதுவது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. கூகுள் குழுமத்திற்கு அழைப்பு விடுத்து ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் படைக்கப்பட்டன.

இன்னும் வலைப்பூ, வலைத்தளங்கள் என்று நிறைய உண்டு

தற்போது முகநூல் டிவிட்டர்களிலும் தமிழ்ப்பந்தல் இட்டு தமிழ் தாகத்தை இணையக் கோப்பைகளில் அள்ளிப் பருக உலகத்தாருக்கு அன்புடன் தரப்படுகிறது
எளிமையாகச் சொல்வதென்றால் நோன்பு என்பது சூரியன் எழும்போது துவங்கும் விழும்போது முடிவடையும்.
அதிகாலையிலேயே காலை உணவை உட்கொண்டுவிட்டு மதிய உணவை உண்ணாமல் மீண்டும் இரவு உணவை உண்ண வேண்டும்.
இதில் சற்றே சிரமமானது என்னவென்றால் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அப்படியே கட்டுப்பாட்டோடு நோன்பு இருக்க வேண்டும்.
இப்படியாக ரமதான் மாதம் முழுவதும் முப்பது தினங்களுக்கு நோன்பு நோற்க வேண்டும்.
சில நாடுகளில் சில மாதங்களில் 9 மணி நேரங்கள் மட்டுமே நோன்பு இருக்க வேண்டி வரும். ஏனெனில் அங்கே அம்மாதம் பகல் பொழுது குறைவு.
சில நாடுகளில் சில மாதங்களில் 22 மணி நேரம்கூட நோன்பு இருக்க வேண்டி வரும் ஏனேனில் அப்போது அங்கே பகல் பொழுது மிக அதிகம்.
ஆனால் சில நாடுகளில் குறிப்பாக கனடாவின் வட எல்லைகளில் சூரியனே எழாமல் சில நாட்கள் செல்லும். சில நாட்களில் சூரியன் விழாமலே நிரந்தரமாய் நிற்கும்.
அங்கெல்லாம் எப்போது நோன்பு வைப்பார்கள். சவுதி அரேபியாவில் வைப்பதுபோல் சுமார் 14 மணிநேரம் நோன்பை எப்படி வைப்பது?
அதற்கு இருவகையான தீர்வுகளை யூதர்கள் கொண்டு வந்தார்கள். இஸ்லாமியர்களும் அதுபோன்ற தீர்வுகளை ஆலோசித்தார்கள்.
1. அருகில் உள்ள நாட்டின் நோன்பு நேரத்தையே தங்கள் நாட்டின் நோன்பு நேரமாக்கிக் கொள்வது
2. மெக்காவின் நோன்பு நேரத்தையே தங்கள் நாட்டின் நோன்பு நேரமாக்கிக் கொள்வது