செழுமைகள் கூத்தாடும்
செங்கமலத் தீவு
எழுகின்ற மழைபோல
எல்லாமும் வனப்பு

விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ

கரைமுட்டும் அலையாக
கண்ணுக்குள் மாங்கிளி
தரைதொட்ட முந்தானை
தளிர்விட்ட பூங்கொடி

விரல்பூட்டிக் கால்கட்டி
வீற்றிருக்கும் தீபமே
விலகாமல் உயிருக்குள்
உயிரருந்தும் தாகமே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
8

மரணம் கண்டு பயப்படாதீர்கள்
அது
இருட்டுக்குள் இருக்கும்
பேய் அல்ல
எப்போதும் உங்களைக் காதலிக்கும்
தாய்
உங்கள் உயிரை
அது தட்டிப் பறிப்பதில்லை
மிகுந்த கருணை உள்ளம்
கொண்டதே மரணம்

மரணம் உங்களைக் காதலிக்கிறது
6

நல்லவன் என்றாலும்
கெட்டவன் என்றாலும்
மரணத்தைச்
சந்தித்தே ஆகவேண்டும்

மரணம் பற்றிய
நினைப்பு எப்போதும்
கூடவே இருந்தால்
கெட்டவனும்
நல்லவன் ஆவான்

அடுத்த நிமிடம்
சாகப்போகிறோம் என்று
அறியும் ஒருவன்
நல்லதையே செய்வான்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

198308 அற்புதச் சிற்பவிழி

அற்புதச் சிற்பவிழி
பூஞ் சிற்றிடைப் பேரெழிலி
கற்பனைச் சிற்பியின் முற்றிய நற்றமிழ்
ஏற்றிய தீபவொளி
எனைச் சுற்றிவா சிற்றருவி

சந்தனத்தில் நீராடி நந்தவனப் பூச்சூடி
வந்துநிற்கும் என்தேவி
என் உயிரின் உயிரும் நீதான்டி

காலைப்பனி ஈரத்திலே சேலைவனப் பூந்தளிரே
வாழையாய் நீயசைய உயிரைக் கிள்ளுதடி
உன்னை மாலையாய் அள்ளியணிய
கைகள் துள்ளுதடி

ஊருறங்கும் நேரத்திலே யாருமற்றத் தீவினிலே
போர் தொடுக்கும் உந்தன் நினைவில்
தீயாகிப்போனேன்
என்னைக் கார் கூந்தல் மழை பொழிந்து
காப்பாற்று கிளியே
7

ஒரு
பக்தன் சொல்கிறான்
இறந்ததும்
நான் கடவுளிடம்
சென்றுவிடுவேன் என்று

நம்மை
நம் கடவுளிடம்
கொண்டு சேர்க்கும்
மரணம்
கொடியதாக
இருக்க முடியுமா

மரணம் உன்னைக் காதலிக்கிறது

பாரபட்சமில்லை - மரணம் உங்களைக் காதலிக்கிறது


மரணம்
ஒவ்வொரு உயிரையும்
உண்மையாய்க் காதலிக்கிறது
எத்தனை கோடி உயிர்கள்
தன்னிடம் வந்தாலும்
அவை அத்தனைக்கும்
பாரபட்சமில்லாத
நிம்மதிப் பாலூட்டும்
தாய்தான் மரணம்

வரம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


கடவுளைப்
பார்க்க முடியாது
மரணத்தின் சுவடுகளையோ
நாம் எங்கும் காணலாம்
கடவுளிடம் கேட்கும் வரம்
கிடைக்காமல் போகலாம்
மரண வரம்
ஒருநாள் கிடைத்தே தீரும்

கவிதை அறுவடை 

எங்கோ இருந்தென்னை இழுக்கிறது
நெஞ்சில் ஏக்கத் தடம் வைத்து நடக்கிறது

வங்கம் துளியாய் அடர்கிறது
ஓர் வார்த்தை என்னை அழைக்கிறது

இதயம் கனமாய் இருக்கிறது
என் எண்ணம் புரண்டு படுக்கிறது

விழியின் வாசல் விரிகிறது
ஓர் அதிர்ச்சி என்னுள் அதிர்கிறது

தவிப்பின் நெற்றி சுடுகிறது
நரம்பின் வேர்வை உதிர்கிறது

தேடல் தேடித் திரிகிறது
ஓர் புள்ளியில் கோலம் அமர்கிறது

உயிரில் உழவு நடக்கிறது
உணர்வின் நாற்று விளைகிறது

அறிவின் வரப்பு அணைக்கிறது
ஓர் கவிதை அறுவடை ஆகிறது

பேரறிவு - மரணம் உன்னைக் காதலிக்கிறது


ஒரு
மரண நிகழ்வுக்குச்
சென்றுவரும் மனிதன்
அந்த ஒருநாள் மட்டுமாவது
நல்லவனாய் வாழ்வான்
அதுதான் மரணம் தரும் அறிவு
எதை இழக்கப்போகிறோம்
இங்கே என்ற தெளிவு
மனிதனைச் செதுக்குகிறது
எந்த நொடியும் மரண மடிகளில்
நிம்மதி ஊஞ்சல் ஆடலாம் என்ற
பேரறிவு பெற்றவன்
தானும் வாழ்ந்து
பிறரையும் வாழவைக்கும்
கருணை இதயம்
கொண்டவனாகவே வாழ்வான்

நவீன பூதங்கள்


கேட்டதும் நீர்தூவும்
கருணை மழையாய்

நினைத்ததும் கதிர்பொழியும்
வள்ளல் சூரியனாய்

வேண்டியதும் விதை வளர்க்கும்
நஞ்சை நிலமாய்

அழைத்ததும் விருந்து வைக்கும்
பொதிகைத் தென்றலாய்

மௌனமாய் அள்ளி வழங்கும்
பூரண ஆகாயமாய்

கூகுள் யாகூ அல்டாவிஸ்டா
இன்னபிற நவீன பூதங்களாய்
இணைய நிலமெங்கும்
தேடுதளங்கள்

சொர்க்கம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


வாழும் நாட்களை
நரகமாக்கிக் கொள்ள
மதங்களெல்லாம்
மரணத்தின் பின்
நரகம் உண்டென்று
பிதற்றுகின்றன
அந்தத் தளையை அறுத்து
வெளியில்வா
வாழ்வைச் சுவை
சொர்க்கம் அனுபவி
மரணம்
நீங்காத நிம்மதியோடு
உனக்காகக் காத்திருக்கிறது
எல்லா பிள்ளைகளும்
நல்ல பிள்ளைகளே
மரணத்தாய்க்கு

நிம்மதிக்கடல் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


எத்தனை அணையிட்டு
பாதுகாத்து வைத்திருந்தாலும்
நீரெல்லாம்
கடலையே சேரும்
நீரில் பெரியது
கடல்
நிம்மதியில் பெரியது
மரணம்

இன்னாத்துக்கு கூகூளு மின்குழுவா ஆவோணும் சாமி? இப்ப யாகூல இன்னா கொறஞ்சி போச்சாம்?


வருடம் 2004

கூகுள் மின் குழுமமாய் மாறுவதற்குமுன் நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில், பலன்களையும் பாதகங்களையும் பரிசீலிக்க வேண்டும். நில் என்றால் நிற்காது மாற்றங்கள். பிற குழுமங்களும் மாறவேண்டும் என்று முடிவெடுக்கும் நாள் தூரத்தில் இருக்கமுடியாது.

பலரும், யுனிகோடில் எழுதி தங்கள் வலைப்பூவில் இட்டுவிட்டு பின் அதன் தகுதரத்தை மாற்றி திஸ்கியாக்கிக் குழுமத்தில் இடுகிறார்கள்.

மாலனின் திசைகள், மகேனின் எழில் நிலா, எனது அன்புடன் புகாரி போல, ஏராளமான இணையதளங்கள் துவங்குவதெல்லாம் யுனிகோடில்தான்.

நான் முதலில் திஸ்கியில்தான் என் வலைத்தளம் வைத்திருந்தேன். அதை யுனிகோடாய் மாற்றி வருடம் ஒன்றாகப் போகிறது.

எ-கலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக இருந்தது. அது பின் எ-கலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

எ-கலப்பை 2 டினை நிறுவிவிட்டால், எந்த மாற்றமும் இல்லாமல் முன்புபோலவே தமிழில் தட்டெழுதலாம். தமிழ் எழுத Alt 1 க்குப் பதிலாக இப்போது Alt 2. அதாவது இரண்டுமே பயன்பாட்டில். திஸ்கியும்(Alt 1) எழுதலாம். யுனிகோடும்(Alt 2) எழுதலாம்.

யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோசின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. ஆனால் அது யுனிகோடாக இருக்குமே தவிர, திஸ்கியாக இருக்காது.

திஸ்கியில் பயன்படுத்தியதுபோல, தகுதரத்தை-encoding, user defined ஆக்கத் தேவையில்லை. விண்டோசின் இயல்பிலேயே உள்ள UTF(8) போதும். ஆக நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. தானே தமிழ்த் தட்டச்சு செய்யலாம்.

அடுத்து, யாகூவைப்போல் கூகுள் குறைவான இடம் தருவதில்லை. GB கணக்கில் தருகிறது. எனவே மடல்களை வெட்டி ஒட்டி என்ற கதையெல்லாம் வேண்டாம். சும்மா பூந்து விளையாடலாம்.

இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.

கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

அனைத்தையும்விட மிக மிக மிக முக்கியமான ஒரு விசயம்:
=========================================
=========================================

இரட்டைக் கோடுகளை இரண்டுமுறை பயன்படுத்தி இதனை அடிக்கோடிடுகிறேன். ஏன் தெரியுமா?

தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணைய குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் எதுவும் தேடினால் கிடைப்பதில்லை.

யூனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச்சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும்.

அதாவது உலகலாவி விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தப்போல தேடியதும் தட்டுப்பட்டுவிடும்.

இது தமிழுக்கும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களுக்கும் மிக மிக அவசியம்.

உதாரணமாக, "புகாரி" என்றோ "அன்புடன் புகாரி" என்றோ "வெளிச்ச அழைப்புகள்" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி தேடு பொத்தானை அமுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும் - என் பெயரிலேயே கூட இப்படி என்றால், உங்கள் பெயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

இவையோடு, கூகுளில் உள்ள மடல்களை, ஒரு வார்த்தை தந்து தேடச்செய்யலாம். எப்போ என்ன மடல் என்றெல்லாம் கண்வலிக்கத் தேடவேண்டாம். கூகுளே தேடித்தரும்

போன வருடம் கவிஞர் சேவியர் தன் தொலைபேசி எண்ணை, நம் குழுமத்தில் இட்டாரே என்ற நினைவு வந்த அடுத்த கணம், அவர் தொலைபேசி என்னைப் பிடித்துவிடலாம். Mail search not by subject line but content.

இன்னும் இவைபோல ஏராளம். என் நினைவில் உள்ளவற்றையும் நான் அறிந்தவற்றையுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

அடுத்து, பிரச்சினைகள் என்ன?

விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 வைத்திருப்பவர்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. ஆனால் அதற்கு முன்னுள்ள விண்டோக்களில் மைக்ரோசாஃப்ட் தரும் ஒரு கோப்பினை நிறுவிக்கொள்ள வேண்டும் தகவல்கள் எழில்நிலாவில் ஏராளம்.

ஜிமெயில் வைத்திருப்பவர்களுக்கு யுனிகோடு தண்ணிபட்டபாடு. ஆனால், அவுட்லுக், ஹாட்மெயில், யாகூமெயில் என்று அனைத்திலும் யுனிகோடு பாவிக்கலாம்.

ஜிமெயில் அழைப்பு தருவதற்கு நான் தயார் நிலையில் இருக்கிறேன். ஒரு மடல் anbudanbuhari@gmail.com க்கு அனுப்பினால் போதும் அடுத்த நிமிடம் அழைப்பு உஙகள் மின்னஞ்சல் சாளரம் தட்டும்

அடுத்து,

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் குழுமத்தைக் கலைப்பானேன். தேன்கூட்டைல் கலைப்பதுபோலல்லவா அது. இது என்ன பேஜாரு சாமியோய்! வீணா உறுப்பினர்களுக்கெல்லாம் தொல்லை தருவாங்களா இப்படி? என்று அங்கலாய்க்கவேண்டாம்.

அனைவரின், அஞ்சல் முகவரிகளையும் அப்படியே அங்கே நகர்த்த வேண்டியதுதான். மிகச் சுலபம். எந்த சிரமமும் இல்லை.

தமிழை கணினிக்கு எடுத்துவந்தவர்கள் தமிழர்.
என்றும் முன்னேற்றம் விரும்புபவர்களே தமிழர்.
பனை ஓலைக்கா நாம் அவர்களை அழைக்கிறோம்.
புதிய தொழில் நுட்பத்திற்கே அழைக்கிறோம்.
அனைவரும் ஆவலுடன் வருவார்கள்.

இதுவரை சேமித்த பொக்கிசங்களெல்லாம் பாழா? அநியாயமா இருக்கே இதென்ன அரவேக்காட்டுத்தனம் என்று கூவவேண்டாம் யாரும்.... ஏன்?

ராயர் காப்பி கிளப் என்ற குழுமம் இப்போது இரண்டாவது தளத்தில்தான் இயங்குகிறது. முதல் தளம் இடப்பற்றாக்குறையால் நின்றுவிடவே. அப்படியே இன்னொன்றைத் துவங்கி உறுப்பினர்களை நகர்த்திக்கொண்டார்கள்.

அதோடு பழைய குழுமத்தை அப்படியே வைத்திருக்கிறார்கள். அதன் சரித்திரம் பாதுகாப்பாகவே இருக்கிறது.

அதுமட்டுமல்ல, கூகுள் தருவது கிகாபைட்டுகள் என்பதால், இங்கொரு பிரதியும், அப்படியே அங்கொரு பிரதியும் வைத்துக்கொள்ளலாம். மடல்களை அப்படியே பிரதியெடுத்து புதியதளம் நகர்த்த, திரு. முகுந்த் போன்ற தமிழர்கள், நிரலி எழுதி அசத்தி இருக்கிறார்கள்.

அன்பு உறுப்பினார்களே, உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், குழப்பங்கள் என்று அனைத்தையும் அறிவியுங்கள். பரிசீலிப்போம். ஏற்புடையதை ஏற்போம்.

நன்றி

அன்புடன் புகாரி

வெளிர் நீல சிறகடித்துக்கொண்டு வந்து...


1988 ஜூலை நான் சவூதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டே கணினிக்குள் கட்டெறும்பாய்ப் புகுந்து ஈர்ப்புகளோடும் ஆச்சரியங்களோடும் கணி மொழிகளையும் கணி நிரலிகளையும் புத்தகங்கள் வாசித்தும், பயத்தோடும் பதட்டத்தோடும் தட்டித் தட்டிப் பார்த்தும் ஒருவழியாய் எவரின் துணையுமின்றி தானே பயின்று சின்னச் சின்ன நிரலிகள் எழுதி சந்தோசப் பட்டுக்க்கொண்டிருந்த காலம்.

வெளிர் நீல சிறகடித்துக்கொண்டு வந்து என் படுக்கையில் சன்னமான விசாரிப்புகளோடு விழுகிறது ஒரு கடிதம். அதிதூரம் பறந்த களைப்பு அந்தக் கடிதத்தின் சிறகுகளில் காயங்களாய்த் தெரிகின்றன. எடுத்து என் எழுத்து விரல்களால் ஒத்தடம் கொடுக்கிறேன்.

என் ஒரத்தநாட்டு முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், இங்கில்லை அவன், ஒரு பாலைவனத்தில் வலுவில்லாத ஒட்டகமாய் அலைந்துகொண்டிருக்கிறான் என்று என் அம்மா அதை என் சவூதி முகவரிக்குத் திருப்பிவிட்டிருந்தார்.

அதன் அனுப்புனர் முகவரியைப் பார்தேன். முனைவர் கே. ஏ. ஜமுனா. யார் இந்த ஜமுனா? முழுவதும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட முகவரி. டெல்லியிருந்து வருகிறது. அவசரம் அவசரப்படுத்த, சட்டென்று உடைத்தேன். உள்ளேயும் ஆங்கிலம்தான்.

அந்தக் கடிதத்திலிருந்து முனைவர் ஜமுனா ஓர் இந்திப் பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார், இந்தி தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என்று அனைத்தையும் தமிழிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பவர் என்று அறிந்துகொண்டேன்.

தீபம் இதழில் உங்கள் கவிதையைக் கண்டேன். அதை இந்தியில் மொழி பெயர்த்தேன். மனிதவள அமைச்சரவை (Ministry Of Human Resources) ஆண்டுதோறும் வெளியிடும் வார்சிகி ஆண்டு மலரில் தமிழ் நாட்டின் அடையாளக் கவிதையாகப் பிரசுரிக்க உங்கள் கதையின் மொழியாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதை வார்சிகி 86ல் பிரசுரிக்க உங்கள் அனுமதியைப் பெறவே இந்த மடல். உங்களுக்கு இதனால் வருடா வருடம் உரிமைப்பணமும் (Royalty) கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பாலைவனத்துக்குக் கங்கையைத் திருப்பிவிட்டது யார் என்று கதவுகள் பல தட்டி விசாரித்துப் பார்த்தேன். தட்டிய கைகளும் தட்டப்பட்ட கதவுகளும் என் நினைப்புதான் என்பதால், பதில் ஏதும் வரவில்லை.

தேவதையைக் காதலிக்க தினமும் திருநெல்வேலி அல்வா கூலியா? சிறகுகள் இல்லாமல் வானில் பறக்க சம்மதம் கேட்டு ஒரு தென்றல் மடலா? அதோடு இப்படி ஒரு மடல் வரும் என்று இன்னொரு மடலும் வந்தது தீபம் எஸ். திருமலை அவர்களிடமிருந்து.

தீபம் இலக்கிய இதழ், நா. பார்த்தசாரதி என்ற புகழ்பெற்ற எழுத்தாளருடையது அதை அப்போது பொறுப்பாக நிர்வகித்து வந்தவர்தான் எஸ் திருமலை. ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடுங்கள் என்று 1982லிருந்தே சொல்லத் தொடங்கிவிட்டார்.

ஏனோ என் மனம் அதற்குத் தயாராகவே இல்லை. ஆனால் வெளிச்ச அழைப்புகள் என்று புத்தகத்துக்குப் பெயரிட்டு விட்டேன். கல்லூரித் தோழர் நாகூர் ஆபிதீனிடம் கூறி அதன் அட்டைப்படத்துக்கும் ஓவியம் வரைந்து விட்டேன். அதைத்தான் 2002ல் கனடாவில் நான் வெளியிட்டேன்.

இருபது ஆண்டுகள் உதிர்கால இலைகளாய் உதிர்ந்து ஓய்ந்தபின் தீபம் எஸ். திருமலை அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றிருக்கிறேன். 2005 மே மாதம் பத்து தினங்களுக்காகச் சென்னை சென்றபோது, விழாவில் திரு மாலன் சொன்னார், விழாவைப் பற்றி அறிந்த தீபம் எஸ். திருமலை அவர்கள், என்னை ஞாபகம் வைத்திருந்து மிகவும் விசாரித்ததாகக் கூறச்சொன்னாராம்.

எனக்குப் புல்லரித்துவிட்டது. உடனே சந்திக்க வேண்டும் என்று விசாரித்தேன். சில காரணங்களால் இயலாமல் போனது. அடுத்தமுறை அவசியம் சந்திக்கவேண்டும் என்று சந்திப்பு முத்திரைகள் குத்தப்பட்ட தங்கக் காசு ஒன்றை என் மன உண்டியலில் சிரத்தையாய் இட்டுக்கொண்டேன்.

இப்படியான இனிமையான நினைவுகளைக் கொண்டதுதான் இந்த 'உலகம்' என்ற என் கவிதை.


உலகம்
.

சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்

.

பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன

.

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

.

விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

.

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து

கருணையே வடிவானது - மரணம் உன்னைக் காதலிக்கிறது


கருணையே வடிவானது
மரணம்
கருவான நொடிமுதலாய்
காதலிக்கிறது அது உன்னை
ஆனபோதிலும்
ஒருபோதும் தட்டிப்பறித்தெடுக்க
எண்ணுவதே இல்லை
அது உன் உயிரை
தானே வரும் நாளுக்காய்க்
காதலோடு காத்திருக்கும்
உயர் காதல் கொண்டது
மரணம்
உன் தற்கொலை முயற்சிகள்
தோல்வியில் தொங்கிப்போவதற்கு
கருணைமிகு மரணமே காரணம்
கனிந்து நீ நிறைந்தவனாய்
வரும் நாளல்லாது
உடைந்து நீ
ஓடிவரத் துடிக்கும் நாளில்
உன்னை ஏற்காமல்
அது கதறியழும்
கருணையே வடிவானது
மரணம்

மரபுப்பா பாடவா புகாரி


கவிஞர் புகாரி அவர்கட்கும் இராஜ. தியாகராஜனின் வணக்கம்.

சொல்வளமும், மொழியாற்றலும், நிறைந்த பொருள் ஆளுமையும், உவமை/உவமேயங்களை எடுத்தாளும் திறனும் ஒருங்கே கொண்டவர் கவிஞர் புகாரியவர்கள். எனக்கும் அவர் மரபென்னும் மாகடலில் மூழ்கி முத்தெடுக்க மறுத்து, கரையினிலேயே தமிழென்னும் வாரிதியை வாழ்த்திப் பாடிக்கொண்டிருப்பது வருத்தமாகவே இருக்கிறது.

புதுக்கவிதைக்கோ, துளிப்பாக்களுக்கோ நான் சற்றும் எதிரியல்ல. 75/85 ஆம் ஆண்டுகளில் நானும் புதுப்பாவென்னும் கடலில் முக்குளித்து 200 கவிதைகளூக்கு(!!) மேல் எழுதியிருக்கிறேன். பின்னர் யாப்பருங்கலக்காரிகை உரைகளைப் படித்த போதில் தான், இத்தனை ஆண்டுகளாக நானிழந்தது எவ்வளவென்று அறிந்து வருத்த முற்றேன்.

சொல்லாற்றலொடு புதுப்பாவும், துளிப்பாவும் எழுத எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இன்னும் வருவார்கள். புகாரி போன்ற சொல்வளமும், தமிழின்பால் தாளாத பற்றும் கொண்ட மொழிப் பற்றாளர்கள் வருவது குறைவே. இவர் போன்றவர்கள் மரபில் ஆழ்ந்து எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

அவருக்கு நான் தாழ்மையுடன் வைக்கும் வேண்டுகோள்; புதுப்பாவை, துளிப்பாவை ஒதுக்க வேண்டாம், கூடவே மரபும் எழுதுங்கள் என்பதே! ஆனால் ஒருவரின் கொள்கைப் பிடிப்பு அவரவர் உரிமை. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர் மட்டுமே மரபெழுத வேண்டும் என்ற இள வயதுக்காரர்களின் எழுதாத சட்டத்தை திரு புகாரி போன்றவர்கள் மாற்றக்கூடாதா என்றா ஆதங்கத்தினால் இதை எழுதுகிறேன்.

அன்புடன் இராஜ. தியாகராஜன்.

*

அன்பிற்கினிய இராஜ. தியாகராஜன் அவர்களுக்கு,

நான் மரபுப்பாக்களுக்கு எதிரியல்ல. அதிலுள்ள இலக்கணத்தை ரசிக்க இங்கே பலர் இருக்க நான் அதில் உள்ள இலக்கியத்தை ரசித்துத் திளைக்கிறேன்.

"பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும்" என்பதே சதவசந்தச் சாரதி இலந்தையார் என் கவிதைகளுக்கு தந்த ஒற்றைவரி விமரிசனம். அதை நான் பெரிதும் வரவேற்றேன்.

"பழைமையின் மூச்சும் புதுமையின் வீச்சும்" என்று அவர் கூறியிருந்தால் நான் மேலும் மகிழ்ந்திருப்பேன். ஏனெனில் எனக்கு மூச்சுத்தந்தது மரப்புப்பாக்களின் இலக்கிய நயங்கள்தாம்.

ஓடிவிளையாடிக்கொண்டிருந்தபோதே, மரபுப்பாவின் சந்தமும் நயமான சொல்லாட்சியும் என்னை இழுத்தணைத்தன. இலக்கணம் அறியேன் அப்போது (இப்போதும் அரைகுறைதான்)

என்னை ஈர்ப்பது எதுவோ அதனையே பருகி நான் அன்னப்பறவையாய் வாழ்ந்துவருகிறேன்.

எனக்குப் பாரபட்சம் கிடையாது. நான் எப்போதும் கூறுவேன். எனக்குக் கவிதை என்றால் அதனுள் கவிதை இருக்க வேண்டும் என்று இதை ஒரு வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்த முடியுமா? வாழ்க்கையைப் போல, காதலைப்போல, மரணத்தைப் போல கவிதையும் திட்டமிட்ட தட்டுக்குள் சிக்காத லட்டு என்று நகைச்சுவையாய்ச் சொல்லிவைப்போம்

வெற்றுச் சொல்லாடல்களில் என் மனம் லயித்ததில்லை. ஒரு விசயத்தைச் சொல்ல சுற்றுச் சுற்றி சொற்களைத் தொந்தி கட்டும் கலையில் எனக்கு விருப்பமில்லை.

பாரதிபோல், ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு கவிதையைப் பொத்தி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் ரசிப்பேன்.

அதேபோல, ஒரு கதையை எழுதிவிட்டு அதை மடக்கிமடக்கி எழுதுவதும். ஒரு நகைச்சுவையை ஒடித்து ஒடித்து எழுதுவதும் ஒரு விடுகதையை துளிப்பா என்று எழுதுவதும்

எனக்குப் பிடிப்பதில்லை. அதாவது கவிதைக்குள் கவிதை இருக்கவேண்டும்.

களைகளின் ஊடே பயிர் வளரவே செய்யும். ஒரு தனி மனித வீச்சைத் தடைசெய்யும்போது நல்ல பயிர் வளர்வதில்லை. அவனின் தனித்துவம் ரசிக்க நமக்கு கண்கள் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் எங்க தாத்தா, இப்படித்தான் கோவணம் கட்டுவார் என்றே பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அட இந்தக் கோவணத்துல, இடதுபக்கம் லேசா கிழிஞ்சு இருக்குபாரு என்றால், எங்கள் கொள்ளுத்தாத்தா ஒரு சமயம் இப்படிக் கட்டியிருக்கிறார். எனவே அது விலக்கு, அது கோவணத்தின் கட்டமைப்பைப் பாதிக்காது என்றும், நீ மட்டும் அதைக் கழட்டிட்டு ஜட்டி போட்டுடாதே கண்றாவியா இருக்கு என்று தூற்றுவதையும் நான் ஏற்பதில்லை.

சரி, அதற்காக, மறைக்கவேண்டியதை மறைக்கவேண்டாமோ? அது அசிங்கமல்லவோ என்றால், அட... அதில் மட்டும் நான் ரொம்பத் திடம். கட்டாயம் மறைக்கவே வேண்டும். கோவணமோ ஜட்டியோ இல்லாமல், நேரடியாய் ஓர் மேலாடை கட்டமுடிந்தால், அப்படிக் கட்டினால் எனக்குச் சரிதான். நான் சட்டம் பேச மாட்டேன். இதுவரை இப்படி யாரும் கட்டவில்லை, அபச்சாரம் என்று கதறமாட்டேன்.

ஆக, என்னை நான் இயன்றவரை என் மொழியில் எடுத்து வைத்து விட்டேன். இதுதான் முடிவென்றில்லை என்றாலும் ஏதோ சொல்லி விட்டேன்.

நான் எந்தவகைக் கவிதைக்கும் எதிரியல்ல. எந்த வகைக் கவிதையும் தூற்றுபவனல்ல. ஆனால் எந்தவகைக் கவிதைக்குள்ளும் நான் தேடும் கவிதை இல்லாவிட்டால், என்னால் ரசிக்கமுடிவதில்லை. அவ்வளவுதான்.

நான் எழுதுவேன். அது மரபு மாதிரி இருக்கும் சில நேரம் மரபின் அத்தனை இலக்கணத்துக்குள்ளும் உட்பட்டதாயும் அமைவதுண்டு. ஆனால் நான் இலக்கணம் பார்த்து எழுதியது கிடையாது. செவிகளின் விருப்பமாகவும் நாவின் கனவாகவுமே அவை வந்திருக்கின்றன.

இவையேதான், நான் புதுக்கவிதை, குறுங்கவிதை, இன்னபிற கவிதைகள் எழுதவும் பயன்படுகிறது.

என் கவிதைகள் மரபுக்கவிதையாய் இல்லை, என் கவிதைகள் புதுக்கவிதையாய் இல்லை, என் கவிதைகள் துளிக்கவிதையாய் இல்லை, என் கவிதைகள் நவீனகவிதையாய்

இல்லை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து சொல்லிச் செல்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நவீனகவிதை படைப்பாளர் என்னை போட்டு வாட்டி எடுத்துவிட்டார். எப்போ நீங்க கவிதை எழுதுவீங்க புகாரி. இதையெல்லாம் தூக்கி குப்பையில போடுங்க.

இசையே சுத்தமாக இருக்கக்கூடாது. கவிதை எளிமையாய் புரியும்படி இருக்கக்கூடாது. கவிதை முடிந்ததும்தான் கவிதை தொடங்குகிறது எனவே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள், கமாவோடு நின்றுவிடுங்கள். கவிதைக்குக் கவிஞன் விளக்கம் தரக்கூடாது. புரியலேன்னா போடா என்றுவிடுங்கள். அடடா இன்னும் ஏராளமாகச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் ஏதோ இருக்கிறது. ஒரு புறம் மரபு, ஒரு புறம் நவீனம், இன்னொரு புறம் துளி, இன்னொரு புறம் இசை. நான் சுதந்திரப் பறவை, தொடும் வானம் தொடுவேன், நுகரும் காற்றை நுகர்வேன், இன்பமாய்ப் பறப்பேன். என் கவிதைகளை விரும்புவோர் பாராட்டுங்கள். விரும்பாதோர்

விமரிசியுங்கள். எனக்கு இரண்டுமே தேவைதான். இவையெல்லாம் சேர்ந்து என்னை ஏதோ ஒரு புதுக்கலவையாய்ப் படைக்கிறது. அதையே நான் விரும்புகிறேன்.

நான் யாருக்கும் எதிரியல்ல. எவ்வகைக் கவிதைக்கும் விலக்கானவன் அல்ல.

அட, சனிக்கிழமை காலை இப்படிப் போய்விட்டதா? யாருக்கு வேண்டும் இந்த விளக்கம். அவரவர், அவரவர் எண்ணங்களில் இருப்பார்கள். யார் கேட்கப்போவது என் நியாயத்தை? அவர்களின் நியாயத்துக்குத்தானே அவர்களால் தலை சாய்க்கமுடியும்? அதுதானே உலகம்.

சீக்கிரம் கிளம்பவேண்டும், வங்கி செல்லவேண்டும், இன்று டொராண்டோவின் மாகா தமிழரங்கம்வேறு உண்டு. அங்கே சென்று அதைச் சுவைக்கவேண்டும்.

விடைதாருங்கள் நண்பரே. தேவைப்பட்டால் பிறகு வந்தும் எழுதுகிறேன்!

அன்புடன் புகாரி

செம்மொழியாம் தமிழ்மொழி 2004 செப்டம்பர் 17


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு கொடுத்தது ஜனநாயகமற்ற செயல் என்று அனந்த மூர்த்தி என்ற கன்னட எழுத்தாளர் கூறினார். அதைக் கண்டித்து நான் எழுதிய ஒரு கட்டுரை இது.

இதற்குப் பெயர்தான் மொழி வெறி என்பது. தமிழன் தமிழ்மீது பற்றுவைத்தால் மொழிவெறியன் என்றுவிடுகிறார்கள் அவசரப்பட்டு.

தன் மொழிமீது வைத்திருக்கும் காதல் என்பது பற்று. அடுத்த மொழியை அழிக்க எண்ணும் எண்ணம் மொழிவெறி

இதுவேதான் மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் உண்டான வித்தியாசம். ஒரு மதத்தின் மீது ஒருவன் உயிரையே வைத்திருக்கலாம். அதில் ஒரு பிழையும் இல்லை. அடுத்த மதத்தை இழித்துப் பேசி அதை அழிக்க முற்படும்போதுதான் மதவெறி வருகிறது.

அனந்த மூர்த்தி எந்த இலக்கியக் காரணத்தையும் சொல்லாமல் அரசியல் காரணம் சொல்லி தமிழ் மொழி மீது சேறு இறைக்கிறார்.

இதற்குக் காரணம், தன் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட வாய்ப்புகள் இல்லாத போது எப்படி அதை செம்மொழியாக்கலாம் என்ற குறுக்குப் புத்தியால் வந்த வெறி.

எல்லாத் தகுதிகளோடும் முழுமையடைந்த பெண்ணாய் என்றோ தமிழ் வளர்ந்துவிட்டது. அதற்கு இன்றுதான் பெண் என்ற அங்கீகாரத்தையே அரசு செய்திருக்கிறது. இதுவே மிகப்பெறும் தவறு. என்றோ பெண்ணானவளை இன்று பெண்ணென்று அங்கீகரித்ததற்காக அரசு இப்போதே தலைகுனிந்து நிற்கிறது.

நேற்றுப் பிறந்து ஜட்டியும் போடாத கன்னடம் (மன்னிக்கவும் கோபம் வரத்தான் செய்கிறது) பட்டத்தரசி என்று பட்டம் சூட்ட ங்கா ங்கா என்று கத்துகிறது.

தகுதி வரும்போது, தானே நிகழும் ஒரு காரியத்தை, தகுதிக்கு மீறி ஆசைப்படும் பேராசைக்குப் பெயர்தான் வெறி.

ஏன் செம்மொழித் தகுதியைத் தமிழுக்குத் தரக்கூடாது என்று பட்டியல் போட்டிருந்தால் இவர் எழுத்தாளர். இப்போது இவர் ஒரு கத்துக்குட்டி என்றே தோன்றுகிறது.

ஞானபீட பரிசு பெற்றால், ஞானமின்றி ஏதோ சொல்லுவோம் என்பது எழுத்தாளர்களுக்கு என்ன விதியோ தெரியவில்லை. மேடை ஏறி எதையோ குரைத்து விடுகிறார்கள். மன்னிக்கவும் சொல்லி விடுகிறார்கள் :)

ஞானபீட விழாக் கொண்டாட்டங்களில் அரசியல் நுழைந்து இவர்களை இப்படிப் பேச முடுக்கிவிட்டிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

செம்மொழி என்பது என்ன?

எழுத்தாளர் சுஜாதா:

Classical Language - செம்மொழி என்று மேல்நாட்டினர் கருதுவது, புராதன கிரேக்க, லத்தீன் மொழிகளை மட்டுமே. இதனுடன் ஒருசிலர் சமஸ்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். தமிழும் இவ்வரிசையில் செம்மொழிதான் என்பதில் சிகாகோ, பர்க்லி, பென்சில்வேனியா போன்ற பல்கலைக் கழகங்களுக்கும், விசயம் தெரிந்தவர்களுக்கும் எள்ளளவும் சந்தேகமிலை.

பெரும்பாலும் இந்தியத் துணைக் கண்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டி இருக்கிறது.

ஒரு மொழியை செம்மொழி என்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டாவது பழசாக இருக்க வேண்டும். இங்கிலிஷ், இந்தி எல்லாம் அடிபட்டுப்போய்விடும்.

கலாச்சார இலக்கியத் தொடர்ச்சி இருக்க வேண்டும். தமிழுக்கு கூடுதல் சிறப்பு - இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் இலக்கியத்தின் சில வரிகள் இன்றைய அன்றாடத் தமிழிலும் அரசியல் மேடைகளிலும், சினிமாப் பாடல்களிலும் ஒலிக்கும் அளவுக்கு தொடர்ச்சி இருப்பது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன், இன்றைய தமிழனோடு பேசினால் ஓரளவு புரியும். உலகின் மற்ற மொழிகளுக்கு இந்தத் தகுதி இல்லை என்பதால் தமிழைச் சிறந்தமொழி என்பேன். (செம்மொழித் தகுதி தமிழுக்கே அழுத்தமாக உண்டு என்கிறார் சுஜாதா)

*

முனைவர் சி.எம். சிங்காரவேலன்:

உலகின் தொன்மையான மொழிகள் ஐந்து. அவை தமிழ், வடமொழி, எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் என்பன.

அவற்றுள் இன்றும் வாழும் மொழி தமிழ்.

தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி என்று வரையறுத்துக் கூறியவர் அறிஞர் கால்டுவெல்.

உலகமொழிகளின் தாய் தமிழ்மொழி. தமிழின் வேர்கள் சொற்கள் இலக்கண அமைதிகள் நேற்றய திருத்திய மொழிகளிலும் திருந்தா மொழிகளிலும் காணப்படுகின்றன.

உலகெங்கிலும் பரவியுள்ள அனைத்து மொழிகளுலும் தமிழின் வேர் சாயல் சொற்கள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கண இலக்கிய செழுமை நிறைந்தது.

உலகின் அனைத்துச் சமய நூல்களும் இலக்கியங்களும் உள்ள ஒரே மொழி தமிழே.

*

கு. புகழேந்தி, பொதுச் செயலாளர் மைசூர்த் தமிழ்ச் சங்கம்:

மைசூர் நகரத்தில் மத்திய அரசின் நிறுவனங்கள் பல உள்ளன. மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம், ராணுவ உணவு சோதனைக் கழகம், பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு பிரிவு, கரன்சி நோட்டு அச்சகம், அகில இந்திய செவிடு ஊமை நிவர்த்திக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. இவைகளைப் போன்றே மிக முக்கியமான ஒரு நிறுவனம் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - Central Institute of Indian Languages

மத்திய அரசு தமிழை செம்மொழியென அறிவிக்கத் தகுந்த ஆவணங்களைப் பெறவும் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைத்தான் அணுகியது. இந்தியாவில் 1652 மொழிகள் இருக்கின்றன. ஆட்சி மொழிகள் பதினெட்டுதான் என பட்டியலிருகிறது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்.

*

கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து:


ஒருமொழி செம்மொழி என்ற சிம்மாசனம் பெறுவதற்கு பல்வேறு தகுதிகள் வேண்டும்.

அது தொன்மையுடையதாய் இருக்க வேண்டும். சில மொழிகளைத் தோற்றுவித்த தாய்த்தன்மை கொண்டிருக்க வேண்டும். பிறமொழித் தாக்கம் இல்லாத் தனித்தன்மை கொண்டிருக்க வேண்டும். இலக்கிய செப்பமும் இலக்கிய நுட்பமும் இணைந்திருக்க வேண்டும். உலகக் கருத்துலகத்திற்குக் கொடை கொடுத்திருக்க வேண்டும். உலக ஏற்கும் பொதுமைப் பண்பு அமைந்திருத்தல் வேண்டும்.

செம்மொழிக்கென்று எத்தனைத் தகுதிகள் சொல்லப் பட்டிருக்கின்றனவோ அத்தனைத் தகுதிகளும் கொண்டது தமிழ்.

தமிழுக்கு இரண்டாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சொல்லப்போனால், இந்திய அரசாங்கத்தால் அமைச்சரவை கூட்டி அங்கீகரிக்கப்பட முதல் செம்மொழி தமிழ்தான். இதுவரைக்கும் செம்மொழி என்ற கருத்துவுவாக்கமே மத்திய அரசாங்கத்தில் இல்லை.

சில மொழிகளின் பழைமையும் பெருமையையும் கருதி சம்பிரதாயமாக அவைகள் செம்மொழிகள் என்று மதிக்கப்பட்டனவே தவிர அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அராங்கம் 1850 முதல் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, பாரசீகம், அரபி ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு Fellowship விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வந்ததுண்டே தவிர அவற்றைச் செமொமொழிகள் என்று கொண்டதற்கு ஆதாரங்கள் இல்லை.

தமிழ் செம்மொழி ஆகவேண்டும் என்ற புயல் மையம் கொண்ட பிறகுதான் கரைகளின் நீள அகலமே தீர்மானிக்கப்படுகின்றது

எது செம்மொழி. செம்மொழிக்கான தகுதிகள் யாவை என்று வரைவிலக்கணம் இப்போதுதான் வகுக்கப்பட்டிருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையும் சில மொழிகளைத் தோற்றுவித்த தாய்த் தன்மையும் பிறமொழித் துணையின்றி தனித்து நிற்கும் வேர்த்திறமும் கொழித்துச் செழித்த இலக்கண இலக்கிய வளமும் கொண்டிருக்கும் மொழி எதுவோ அதுவே செம்மொழி.

1000 ஆண்டுகள் என்ற வரைவெல்லையை 2000 ஆண்டு என்று மாற்றியமைத்தால் தமிழின் தனித்தும் இன்னும் அதிகமாய் உணரப்படும் என்பது உண்மையே.

இந்த இலக்கணப்படி இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.

எனவே செம்மொழி என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கும் மொழிகள் இனிமேல் தமிழோடு வந்து ஒட்டிக்கொள்ளலாமே தவிர, தமிழ் சென்று அறிவிக்கப்படாத பட்டியலில் அமர வேண்டியதில்லை.

பூவில் ஓடிவந்து வண்டுகள் ஒட்டிக்கொள்ளட்டும்; வண்டுகளின் காலடியில் பூக்கள் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வதில்லை.

கனவு பலித்திருக்கும் காலகட்டத்தில் கனவுகண்டவர்கள் மீது கண்டவர்களும் கல்லெறிய வேண்டாம்.

சில சட்ட சிக்கல்களுக்காக, அரசாணைகள் வளைந்தும் நெளிந்தும் பேசலாம்.

ஆனால் பாத்திரம் வளைந்திருந்தால் தேனின் ருசியுமா வளையும்?

தமிழ் செம்மொழி என்பது நூற்றாண்டு நோற்றுப் பெற்ற வரம். வாராதுபோல் வந்த மாமணியைத் தோற்போமா?

இனிமேல் தமிழர்கள் பொங்கல் புத்தாண்டைப் போல் செம்மொழித் திருநாள் கொண்டாட வேண்டும்

*

தமிழ் செம்மொழியான நாளை குழுமங்கள் விமரிசையாய்க் கொண்டாடுதல் வேண்டும். இந்திய நடுவண் அரசால் 2004 செப்டம்பர் மாதம் 17ம் தேதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாம் ஆண்டில் நுழைந்து அழகாய்ச் சிரிக்கும் தமிழுக்கு நாம் நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

விற்பனர்க்கும் அற்புதமே
முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
பற்றுகிறேன் நற்றமிழே

அன்புடன் புகாரி

சிதைவதா - மரணம் உன்னைக் காதலிக்கிறது


வெளிச்சம் இருளைக் கண்டு
பயப்படுவதைப்போல
மரணத்தைக்கண்டு மனிதன்
பயப்படத் தேவையில்லை
இருக்கும் நாட்களை இன்பமாய்
இன்றே இப்பொழுதே
அமைத்து வாழ்வதே வாழ்க்கை
எந்தச் சுழலிலும்
ஏதேதோ காரணங்கள் கூறி
சிக்கிச் சிதையாமல்
எக்கணமும் சுகம் தேடும்
இதயமே பெறவேண்டும்
மரணத்திற்குப்பின்
நரகம் என்ற ஒன்றே கிடையாது
நிரந்தர நிம்மதி என்ற
சொர்க்கம் மட்டுமே உண்டு

பார்வையற்றவருக்குக் கனவு வருமா?


பிறவியிலேயே முழுப் பார்வையும் அற்றவருக்கு கனவு வருமா?

வரும். கட்டாயம் வரும்.

எப்படி?

பார்வையற்றவருக்கும் அம்மா உண்டு அப்பா உண்டு உறவுகள் உண்டு. அவனுக்கு நாய் தெரியும், பூனை தெரியும், இட்லி தெரியும், வடை தெரியும். சரிதானே? மாற்றுக்கருத்து உண்டா?

எப்படித் தெரியும்?

பார்த்தானா? இல்லை. அறிகிறான். எப்படி? ஒவ்வொன்றும் அவனுக்கு அறிமுகமாகும் போதும் ஒவ்வோர் எண்ணத்திட்டு உண்டாகிறது. கண்ணைத் தவிர்த்த மற்ற நான்கு புலன்களினாலும் அவன் கொள்ளும் எண்ணத்திட்டுகள் அவை.

அம்மா என்றால் ஓர் எண்ணத்திட்டு. அப்பா என்றால் ஓர் எண்ணத்திட்டு. நாய் என்றால் ஒன்று, பூனையென்றால் ஒன்று... இப்படியாய்...

ஒரு நாயோ பூனையோ அவன் அருகே வரும்போது முதலில் வாசனையின் வித்தியாசமே அவனுக்கு அவற்றைக் காட்டிக்கொடுக்கலாம். இவை இரண்டும் நடந்து வரும்போது கிடைக்கும் துள்ளிய ஓசை வேறுபாடு அவனுக்கு அதைக் காட்டிக் கொடுக்கலாம். பிறகு தொடு உணர்வால் அறியலாம். இப்படியாய் ஏதோ ஒன்று அல்லது அத்தனையும்.

இது செயல்களுக்கும் பொருந்தும். ஓடுவது, அமர்வது, ஆடுவது, பாடுவது அடிப்பது, கொஞ்சுவது இப்படியாய் எல்லாம் ஒவ்வோர் எண்ணத் திட்டுக்குள் வட்டமடித்துக்கொண்டிருக்கும்.

"டேய்... ஒரு நாய் வருகிறது. கவனமாய் இரு" என்று அவனிடம் சொன்னால். உடனே அவன் சேர்த்து வைத்திருந்த எண்ணத்திட்டுக்கள் எல்லாம் செயல்படத் துவங்கிவிடும். நாய் என்பது நமக்குக் காட்சிப் பொருள் மூலம் வரும் விளக்கம். அவனுக்கோ எண்ணத்திட்டுகளின் விளக்கம். நாயை அவன் எப்படி எண்ணி வைத்திருக்கிறானோ அப்படித்தான். மீண்டும் கவனம். இங்கே உருவத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

அவன் உறங்கும் போது அவனின் உள்ளத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப எண்ணத்திட்டுகளின் ஊர்வலமே அவன் கனவுகள்.

"அம்மா! தங்கச்சி கல்யாணம் பண்ணிப் போறாமாதிரி கனவு கண்டேன்" என்று ஒரு பார்வையற்றவன் சொல்லமாட்டான் என்று நினைக்கிறீர்களா?

நம்முடைய எண்ணங்களில் மண்டிக்கிடப்பதுதான் காட்சிப் பொருள்கள். பார்வையற்றவனின் எண்ணங்களில் என்ன இருக்கும்? எப்படி இருக்கும்? என்று எண்ணிப்பாருங்களேன்! தானே விளங்கிவிடும்.

இன்னொரு விளக்கமும் தரமுடியும். அம்மாவையும் அப்பாவையும் பார்வையற்றவன் எப்படி வித்தியாசப் படுத்தி தெரிந்து வைத்திருப்பான்? சாதாரணமாகச் சொன்னால், குரல் பதிவினால் என்று கொள்வோமா? எனில் அவன் கனவு காணும்(?)போது உருவங்கள் வராமல், குரல்கள் வரலாமில்லையா?

கனவு கண்டான் - இது கண்தெரிந்தவர்கள் உருவாக்கிய வார்த்தை.
பார்வையற்றவன் காண்பதில்லைதான்.

கனவு உணர்ந்தான் - இப்படி வேண்டுமானால் மாற்றிப் பாருங்கள்.
யார் வெறியன்?

பிறந்து
ஐம்பத்துநாலு தினங்களே ஆன
பெண் குழந்தையைத்
தந்தையே கற்பழித்துக்
கொன்றானாம்
அது செய்தியில்லையாம்

அவன் ஒரு கிருத்தவனாம்
அதுதான் செய்தியாம்

யார் வெறியன்?

குடிவெறியில்
மகன் தன் தாயையே
தகாத உறவுக்கு அழைத்தானாம்
அது செய்தியில்லையாம்

அவன் ஓர் இந்துவாம்
அதுதான் செய்தியாம்

யார் வெறியன்?

தந்தை தன் மகளை
அடித்து அடித்துக் கிழித்தே
கொன்று முடித்தானாம்
அது செய்தியில்லையாம்

அவன் ஒரு முஸ்லிமாம்
அதுதான் செய்தியாம்

யார் வெறியன்?

மரணம் உன்னைக் காதலிக்கிறது - முதுமை


முதுமை என்பது
தேய்பிறையல்ல
அது முழுநிலவைத் தொட
வளரும்
ஒளி விரல்களால் ஆன
வளர்பிறை
அமாவாசை என்பதும்
முழுநிலாதான்
கறுப்பு முழுநிலா
அது
பௌர்ணமியைவிட
பூரணமானது
குறைவற்ற நிம்மதியுடையது
மரணம் போன்றது

மூச்சுக்குமூச்சு - மரணம் உன்னைக் காதலிக்கிறதுஉடற்சிறையில்
சாவுக்குப் பட்டினி
கிடந்து
காலனின் கட்டளையில்
விடுதலை காணும்
சிட்டுக்குருவியே
உயிர்

மூச்சுக்கு மூச்சு
தேவைப்பட்டு
மூச்சு
நின்றபின்
கிட்டும் அமைதியே
நிம்மதி

#தமிழ்முஸ்லிம்

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புகிறான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்கிறான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்து விடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 14 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

நிச்சயமாக இஸ்லாம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. நல்ல ஒழுக்கத்தையும் கட்டுப்பாடையுமே அது வலியுறுத்துகிறது.

சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். அப்படியானால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.

படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.

பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.

அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போதெ‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.

பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.

முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது.

பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.

ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.

முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.

வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.

படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.

மத அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிகளில் பெண் கல்வியின் அவசியத்தைத் தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.

இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் மிக உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.

நகைச்சுவையாளர்கள்

தேகத் திசுக்களுக்குப்
பட்டாம்பூச்சி சிறகு பூட்டி

ரத்த நாளச் சிற்றோடைகளில்
வளர் ஆயுள் அலைகள் கூட்டி

நெஞ்சக் கூட்டுக்குள்
ஒட்டும் ஒட்டடைகளைத் தட்டி

தளரும் மூச்சுக் காற்றைத்
தாங்கிப் பிடித்து உயிர் ஊட்டி

மொட்டுகளாகிப் பின் மலராமல்
ஒட்டுமொத்த அணுக்களிலும்
பட்டுப்பட்டென்று
பூக்களாகவே வெடித்துக் குலுங்கும்
சிரிப்பென்னும் நாட்டிய நந்தவனம்

பூத்தவிடத்திலேயே முடங்கிவிடாமல்
புவி முழுதும் நிறைக்கும் அற்புதம்

வீடுகளெங்கும் மன விரிசல்கள்
நெருஞ்சி முட்களாய் மண்டிக்கிடக்க

வீதிகளெங்கும் வேதனைகள்
கொடும் விசம்போல கொட்டிக்கிடக்க

நகைச்சுவை ஒளிப்பூக்களை
நகக் காம்புகளிலும்
மத்தாப்பின் வண்ண வண்ண
மின்னல் தெறிக்க ஏற்றி

பகைக்கின்ற இதயங்களிலும்
தித்திப்புத் தேனூட்டி

நாட்களின் நரம்புகளிலும்
பொழுதுகளின் செல்களிலும்
குதித்தோடும் சந்தோச நிறங்கள் ஏற்றி

தாயின் உயிர்ப் பாலாய்
காதலின் பொன்மடியாய்
உயிர்கள் அனைத்திற்கும்
வாழ்வளிக்கும்
நகைச்சுவையாளர்களே
உங்களுக்கெல்லாம்
என் உயிரின் முத்தங்களை
என்றென்றும் உறுதி செய்கிறேன்

அழகு - மரணம் உன்னைக் காதலிக்கிறது


அழகில்லாதவற்றைக்
குறையுள்ள கண்களால் கண்டு
அழகு அழகு என்று
நாம் அரற்றுகிறோம்
மரணமே அழகு
வெறும் அழகல்ல பேரழகு
அது நம்
அசிங்கங்களை எல்லாம்
துடைத்துக்
கழுவியெறிந்துவிட்டு
நம்மையும்
அழக்காக்கிவிடுகிறது

மனித வாழ்க்கை என்பதோ குறைகுடம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


மனித வாழ்க்கை
என்பதோர் குறைகுடம்
மரணமே அதில் நிறைகுடம்
நீ தழும்பித் தழும்பி
இன்று ஏன் அழுகிறாய்
மரணத்தாய் தன்
மார்நிறைத்த நிம்மதியோடும்
மடிநிறைத்த மகிழ்ச்சியோடும்
உனக்காகக் காத்திருக்கிறாள்
மரணம் இறப்பல்ல பிறப்பு
இறக்கும் வரைக்கும்
யாதொரு கவலையுமின்றி
இன்பம் தேடித் திரி

காதலிப்போம் வாருங்கள்


பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளையும் நாம் காதலிப்போம். அதுவே உண்மையான காதல். அதற்கு ஆதாரமாய் அமைவது ஆண் பெண் மீது கொள்ளும் காதலும் பெண் ஆண்மீது கொள்ளும் காதலும்தான்.

பிரபஞ்ச செடியில் காதல் ரோஜாக்கள் பூக்கப்பூக்க, வன்முறை முட்களெல்லாம் உதிர்ந்து போய்விடுகின்றன. ஆகவே காதலிப்போம் வாருங்கள்.

ஆண் பெண் காதல் என்பது எதிர்பார்ப்புகள் உள்ள சுயநலம் கொண்ட அன்பு என்கிறார்கள் சிலர். உண்மைதான், ஆனால் அதை ஏன் சுயநலம் என்று சொல்லவேண்டும். இருவருக்கும் பொதுவான வாழ்க்கைப் பிடிப்பும் உயிர் வாழும் ஆதாரமும் மகிழ்வுறும் நலனும் கிடைக்கும் உயர்வு உண்மையான உயர்வல்லவா?

அதோடு எந்த உறவில் சுயநலமில்லை எந்த உறவில் எதிர்பார்பில்லை. ஒரு பக்கம் கொடுப்பதும் இன்னொரு பக்கம் பெறுவதுமாகவே இருக்கும் நிலைப்பாடு என்றென்றும் நீடித்திருக்கும் நிரந்தரமாய் அமையாது. அது எல்லோருக்கும் ஏற்றதாகவும் ஆகாது. கொடுத்தலும் எடுத்தலுமே வாழ்வின் நிலைத்த ஒன்றாய் ஆகும். அப்படியான எல்லோருக்கும் பொதுவான ஒன்றையே நாம் பரிந்துரைக்க வேண்டும். வெற்றுத் தியாயங்களுக்கு ஆயுள் குறைவு.

அன்னை தெரசா போன்றோர் இந்த உலகையே காதலித்தார்கள். தனக்கென தனியே ஒரு துணையைத் தேடிக்கொள்ளவில்லை. அப்படியானவர்களாகவே எல்லோரும் ஆகிவிடமுடியாது. அந்தக் கருணையிலும் அன்பிலும் ஒரு பகுதியேனும் நாமும் பெறவேண்டும் என்றால் நாம் ஆண் பெண் காதல் என்ற உறவினுள் திருப்தியடையவேண்டும். அது நம் மனதில் அன்பையும் கருணைகையும் பிறருக்குக் கொடுக்கும் மனதையும் கொடுக்கும். அன்னை தெரிசாவும் பிறப்பதற்குக் காரணமாய் இருந்தது ஓர் ஆண் பெண் காதல் உறவுதான்.

உயிர்களெல்லாம் ஆண் பெண் காதலால் வந்தவையே. காதலின்றி உயிரினங்களே மண்ணில் இல்லை. அப்படி உயிரினங்களே இல்லாதபோது யார் மீது அன்பு காட்டுவது? அன்பு காட்டுபவரும் இல்லை. அதைப் பெறுபவரும் இல்லை. எதிர்ப்பார்ப்பு பொதுவாக எல்லாவற்றிலுமே உண்டு.

ஒரு தாய் பிள்ளைக்கு பணிவிடை செய்யும்போது மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறாள். அந்த மகிழ்ச்சிதான் அவளின் எதிர்பார்ப்பு. அது கிடைக்காத பட்சத்தில் அவள் செய்யப்போவதில்லை. தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த தன் பிள்ளை என்ற சுயநலம்வேறு அவளிடம் மிகுதியாக இருக்கும். அதுமட்டுமல்ல தன் பிள்ளை தன்னைக் கைவிடமாட்டான் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தாய்க்கும் உண்டு.

தாய்ப்பாசம் என்பது சுயநலம் குறைந்த ஓர் உணர்வு என்றாலும் அப்படியான தாய்ப்பாசத்துக்கும் ஆதாரமாய் இருப்பதும் ஆண் பெண் காதல்தான். அதுதான் பின் வளர்ந்து பலருக்காக என்று பெருகுகிறது.

காதல் என்ற உணர்வு உள்ளுக்குள் இருக்கும். காதல் என்றதும் நாம் உடம்பையே நினைத்தல் கூடாது. சுயநலமான காதல்தான் பொதுநல அன்புக்கான ஆதாரப்புள்ளி. ஆண் பெண்ணைத் தவிர காதலிக்க நிறைய இருக்கிறதுதான். நாம் உயிரினத்திற்கு எது ஆதாரம் என்பதையே இங்கே பார்க்கிறோம். ஒன்று என்ற தொடக்கத்திலிருந்துதானே ஆயிரம் பல்லாயிரம் எல்லாம்.

ஆண் பெண் இருவர் ஏற்றிவைக்கும் தீபத்தில்தான், மற்ற உறவுகளே விளைகின்றன. உறவில்லாத அப்பா அம்மா உறவானபின் வந்த உறவுகள்தான் அக்கா தம்பி மாமா மச்சான் எல்லாம். அப்பா அம்மா என்ற நிலைப்பாடே இல்லாவிட்டால், எதுவுமே இல்லை.

அந்த அப்பா அம்மா என்ற நிலைப்பாட்டுக்கான உணர்வுகள்தான் நம்மிடம் வேறு வேறு வடிவங்களாய் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

தெய்வத்திடம் வைக்கும் காதலில் அதாவது பக்தியில் கூட சொர்க்கம் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பாவது மனிதர்களிடம் உள்ளது. வேறு நிலைப்பாடுகளில் புகழ் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அல்லது தன் தனிமையைப் போக்கவும் தனக்கான அங்கீகாரத்தை வளர்க்கவும் நட்பையும் உறவையும் வளர்த்துக்கொள்வது எதிர்பபர்ப்பாக இருக்கிறது.

இன்னொருவரின் பாராட்டையோ அன்பையோ உறவையோ எதிர்பார்த்துச் செய்பவையும் சுயநலத்தின் வெளிப்பாடுதானே. எது எப்படியானாலும் அன்புக்கு அடிப்படை காதல் என்ற உணர்வுதான். காதலின் பல்வேறு வெளிப்பாடுகள்தான் பாசம், நேசம், அன்பு, பரிவு, கருணை, இரக்கம் என்ற எல்லாமும்.

மரணத்தாய் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


மண்ணில் நீ இருக்கப்போகும்
உன் கர்ப்ப நாட்கள்
எத்தனை என்ற கணக்கினை
நீ அறியமாட்டாய்
கருவின் நாட்களைச்
சிசு அறியாது
தாய்தான் அறிவாள்
நீ மரணித்து தன் கரங்களில்
நிம்மதியாய் தவழும் நாளுக்காக
கடுந்தவத்தோடு காத்திருக்கிறாள்
உன் மரணத்தாய்

மரணம் உன்னைக் காதலிக்கிறது - மௌனம்


மரணம் என்பது
பரிசுத்தமான மௌனம்
அந்த மௌனத்துக்குள்
மலர்ந்ததும்
நிகரில்லாத நிம்மதி
உன்னை அள்ளியணைத்து
அதன் முத்தங்களாகவே
மாற்றிவிடும் உன்னை
அதன்பின் எப்போதும்
துயரத்தின் பொருளைக்கூட
நீ அறியமாட்டாய்

காதலும் கொஞ்சம் கவிதைகளும்


(கனடா கீதவாணி வானொலி வழியே)

காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
உயர் கீத வாணியே
உயர்வாய் நீ நாளுமே


வணக்கம்

கீதவாணியும் தமிழ்நாடு கலாச்சார சங்கமும் இணைந்து வழங்கும் இந்த தமிழக நேரத்தில் என் கவிதைகளோடு உங்களைச் சந்திப்பதில் நான் பெருமிதமடைகிறேன்.

கனடாவில் தமிழனை உயர்த்தவும் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் பல வழிகளில் தொண்டாற்றும் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என்றென்றும் வாழ்க

இனி காதலும் கொஞ்சம் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்கள் உள்ள வனங்களில் மெல்லப் பூக்க வருகிறேன் உங்கள் செவி மொட்டுக்களை என்பால் கொஞ்சம் மலரச் செய்யுங்கள்

முதலில் காதலைப் பற்றிய ஒரு சிறு விளக்கமாய் ஒரு வரியில் எனக்குள் உருவான ஒரு கவிதை

காதல் எனப்படுவது யாதெனில்

இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ இல்லாமல்
சுவாரசியமாய்ப் பின்னப்படும்
ஓர் உறுதியான உணர்வுவலை


உலகம் என்றோ துவங்கிவிட்டது துவங்கிய நாள் முதலாய் இந்த பூமி சுழல்கிறது அந்த நிலா தேய்கிறது வளர்கிறது. மலர்களெல்லாம் பூக்கின்றன் வண்டுகள் எல்லாம் பாடுகின்றன என்று எத்தனையோ விசயங்கள் தங்களின் இயல்பு மாறாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் காதலும்.

காதல் அரும்பாத மனித மனம் இருக்கவே முடியாது. காதலை ஆராதிக்காத இதயங்கள் படைக்கப்படவே இல்லை

பிறக்கும், ஒவ்வொரு ஜீவனும் மீண்டும் ஒரு முறை பிறக்கிறது என்றால் அது காதலிக்கும்போது மட்டும்தான். நிஜமான காதல் தீண்டிய இதயம் மட்டுமே தான் மீண்டும் ஒரு முறை பிறந்துவிட்டதாய் அதிசயிக்கிறது.

காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. கம்பன் இளங்கோ பாரதி பாரதிதாசன் வள்ளுவன் காளிதாசன் கண்ணதாசன் வைரமுத்து என்று காதலில் மூழகி மூழ்கி கவிதை முத்துக்களைக் கோர்த்தெடுக்காத கவிஞர்கள் இல்லை

காதல் பலருக்கும் பலமுகம் காட்டும் நூதன கண்ணாடியாய் இருக்கிறது. ஆளுக்கொரு எண்ணமாய் காதலில் பவனிவரும் மானுடம் அதனாலேயே வாழ்கிறது காதலில்லையேல் இந்த மானுடம் இல்லை. ஜீவராசிகளே இல்லை.

உண்மையான அன்பே காதல் என்பார் சிலர். வெறும் இனக் கவவர்ச்சியே காதல் என்பார் சிலர். பசி துக்கம் போல காதலும் உயிர்களின் ஒரு தேவை என்பார் சிலர். இப்படியாய்க் காதலைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லச் சொல்ல அவற்றுள் ஏதோ ஒன்று குறைவதாகவே காதலிப்போர் சொல்வர். அதுதான் காதல். அனைத்து உணர்வுகளையும் ஒருசேரப் பெற்ற ஒரு முழுமை காதல். காதலுக்கு விளக்கம் தேடி அலைவதைவிட அதில் சுகித்துக் கிடப்பதே புத்திசாலித்தனன் எனலாம்.

உயிரினம் தோன்றிய நாள் முதலாய் ஆண்கள் பெண்களைப் பார்த்தும் பெண்கள் ஆண்களைப் பார்த்தும் அதிசயிக்கிறார்கள். ஏழு அதிசயங்கள் என்று எதை எதையோ காட்டினாலும் ஓர் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் தரும் அதிசயமே முதலாவதாகிப் போய்விடுகிறது.

காதல் புனிதமானது. எத்தனயோ முட்கள் காதலில் விழுந்தபின் ரோஜாக்களாய் மாறிவிடுகின்றன. காதல் என்ற ரோஜா மல்ர்ந்துவிட்டால், அத்தனை முட்களும் உதிர்ந்துவிடுவது காதலின் பெருமைதானே? காதலுக்குத் தவிப்பும் துடிப்பும் தவிர்க்க இயலாதது. இதில், ஒருதலைக் காதலில் உள்ளாடும் சோகம் மிக மிகக் குடிமையானது. களத்தில் இறங்காமலேயே தோல்வியென்றால் எந்த இதயம் துடிக்காது. அது எத்துணைப் பரிதாபம் உதாரணத்திற்கு ஒரு கவிதை

ஏன்

நான் உன் விழி தீபத்தின்
விட்டில் பூச்சி

உன் சூரிய நெற்றியில்
விழும் பனித்துளி

உன் கன்னக்
கண்ணாடி மாளிகையில்
உணர்வு இழைகளால்
காதல் வலை பின்னிய சிலந்தி

என்னை எற்றுக் கொள்ளாதது
சத்தியமாய் உன் தவறில்லை

பின் ஏன் நானுந்தன்
அனல் முகத்தின் முன்
மெழுகாய்
இன்னமும் நிற்கின்றேன்


சிலருக்குக் காதல் சட்டென்று வந்துவிடுகிறது. அதைச் சொல்லும் தைரியமோ மிக மிகத் தாமதமாய் வருகிறது. காதல் தகிக்கும் போதெல்லாம், தன் காதலை தான் காதலிப்பவளிடம் சொல்லிவிடத் தீர்மானமெடுப்பான் நாளை நிச்சயம் சொல்லிவிடுவது என்று. ஆனால் நேரில் பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி மௌனித்துவிடுவான். காலன் காத்திப்பானா. அவன் தன் பணியைச் செய்து கொண்டுதானே இருப்பான். விளைவு, பலநேரம் மனதைக் கண்ணாடிப் பாத்திரமாய் நொருங்கச் செய்துவிடுகிறது.

என் நண்பர் ஒருவருக்கு இக்கதி நிகழ்ந்த போது நான் ஒரு முழு இரவும் உறங்காமல் கிடந்தேன். காலையில் எனக்கோர் கவிதை மிச்சமானது. அதுதான் 'வார்த்தைகள் உயிர்த்த போது' என்ற இந்தக் கவிதை.

வார்த்தைகள் உயிர்த்தபோது

அன்பே
என் வீட்டுத்தோட்டத்தில்
புதியதாய் மலரும்
பூக்களையெல்லாம்
உன் பெயரிட்டே அழைத்தேன்.

உன் கூந்தல் தோகையினின்று
பறந்து வந்து ஒற்றை முடி இறகை
என் பாடப் புத்தகத்தில்
பத்திரப் படுத்தினேன்

உன் தாவணிச் சோலையில்
பொட்டுப் பொட்டாய்த் தெரியும்
பூக்களில்
ஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்
இருந்துவிட ஏங்கினேன்

உன் கைகளுக்கு
எண்ணெய் தடவுவதை விட
என்னைத் தடவுவதே அழகு என்று
சினிமா வசனங்களெழுதி
சந்தோசப் பட்டேன்

ஆனால் நீ உன்
கல்யாணப் பத்திரிகையுடன்
என் கனவுகளை மிதித்துக் கொண்டு
யதார்த்த வாசலில் வந்து
நண்பரே என்று நின்றபோதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் செய்திருக்க வேண்டியவை
இவைகளல்ல என்று


மனங்கள் இணைந்து, வெறும் விழிச்சுடர் தொட்டே முழுச் சுகம் காணும் காதலர்களும் உண்டு. எல்லாம் சரிவரப் பொருந்திய அற்புதக் காதலர்கள்கூட நம் சமுதாய, சம்பிரதாய சடங்குகளாலும் சாதி மதம் என்ற பேதமைகளாலும் வீரியம் இழக்கிறார்கள்.

பல நேரங்களில் காதல் வாழ காதலர்கள் வாழ்வதிலை. நெஞ்சில் குடியேறியக் காயங்களோடு காலமெல்லாம் கண்ணீரில் நீந்துகிறார்கள்.

கடிதமெழுதாத காதலர்கள் இருக்க மாட்டர்கள். ஆயிரம் தூது இருந்தாலும் அந்தக் காகிதத் தூதே கிளுகிளுப்பான தூது.

எழுதி எழுதி நிற்கும் காதலர்கள் என்றும் ஓய்வதே இல்லை. ஆனால் அவர்கள் தங்களின் கடைசி கடிதம் என்று தங்களின் கோழைத்தனத்தைக் காதலை எரித்து அதன் சாம்பலில் எழுதுவதே நம் சமூகத்தின் சாபக் கேடு. இங்கே

ஒரு காதலன் காதலிக்கு எழுதும் கடைசிக் கடிதம் ஒரு காதலி காதலனுக்கு எழுதும் கடைசிக் கடிதம் இருவேறு கவிதைகளாய் மலர்கின்றன. அல்ல அல்ல கண்ணீரில் நனனைகின்றன.

தீயில் கரையத்தானே

புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒரு நாள் தீயில் கரையத்தானே

உன்மீது நான் வளர்த்த
என் காதலைப்போல

கனவுப் பாதங்களின்
பிரிய அசைவுகளால்
நிலாத் தளங்களில்
புல்லரிக்கப் புல்லரிக்க
சஞ்சரிப்பது மட்டுமே
போதுமானதாகிவிடுமா

கறுத்த மேகங்களை
விரட்டுகின்ற
அடர்ந்த மூச்சுக்களையும்
அடைந்திருக்க வேண்டாமா

என் கையெலும்புகளோ
கோடிச் சுக்கல்களாய்
நொறுக்கப் பட்டவை

என் பிஞ்சுப் பாதங்களோ
உதவாக் கரிக்கட்டைகளாய்
கருக்கப் பட்டவை

என் ஆசைவிழிப் பயணங்களோ
செக்கு மாட்டு எல்லைகளாய்
சுருக்கப்பட்டவை

நின்று நோக்கி
நானும் வரக் காத்திருக்காமல்
ஒடுவதொன்றே குறிக்கோளாய்
ஒடும் கால வெள்ளத்தின்
உடன் செல்லுவதே
மூச்சுத் திணறலில் இருக்க
எதிர்த்து நீந்த
எனக்கேது உர உயிர்

அன்பே
மறந்துவிடு என்னை

நான் உன்னை மறக்காமல்
அமைதி புதைந்த
மயான மேடைகளில்
அழுது கொண்டிருந்தாலும்
என்னை நீ தொடரத் துடிக்காமல்
வெகு தூரமாய்ச் சென்று
மறந்துவிடு என்னை

*

காதலியின் கடிதம்

என்னுயிர்க் காதலனே
காதல் என்ற
பரவசப் பட்டாம்பூச்சியை
இந்தப் பெண்மைக்குள்
பறக்க விட்ட
என்னழகுக் கள்வனே

துளையில்லா என் இதயத்துள்
ஊரறியாத் தருணத்தில்
தேர்பூட்டி நீ மெல்ல
ஊர்ந்ததுதான் எப்படி

என் நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய விழிகளில் அசைவில்லை
உன் முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச் சில்லானேன்

நீ உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு சிறகடிக்கும்
உன் வண்ணத்து மொழிகள்

நீ சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள் சிக்கவைக்கும்
உன் கன்னத்துக் குழிகள்

நீ அசைய அசைய
அங்குமிங்குமாய்த் தெறிக்கும்
பொற் கவிதை வரிகள்

அப்பப்பா
நான் எப்படிச் சொல்ல

நீ என்னை
அகலும் இமைப்பொழுதோ
இந்தச் சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய் அலறிக்கொண்டு
உயிரின் வேர்களில்
ஓங்கி ஓங்கி இடிக்க
மொத்தமாய்த் தகர்கின்றன
எனக்குள் அத்தனையும்


என் ஆருயிர்க் காதலனே

நீ என் உயிருக்குள்
உதடு வைத்து
ஒத்தி ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச் சுற்றி
புரியாத காற்றொலிகள்
ரிதம் மீட்டுகின்றன

அவை மல்லியைப்போல்
என் மனம்தொட்டு
மங்கா மணம்வீச நீ
எந்நாளும் என்னருகே
இருப்பாயா என்
காதலனே காதலனே காதலனே

என்று நான் உன்முன்
உருகி உருகி நின்றதெல்லாம்
சத்தியம் சத்தியம் சத்தியமே

ஆனால்
என் காதலனே

என் இதயத்தின்
ஒவ்வோர் அணுவையும்
ஆக்கிரமித்த உன்னையும்
உன் இதயத்தின்
ஒட்டுமொத்தத் துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான என்னையும்

இன்று நானே
சிலுவையில் அறைந்துவிட்டேன்

காதல் என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே சமுதாயம் என்ற
சாத்தான் தானே வலிமையானவன்

அவன் சட்டங்களுக்குள்
சிக்கிக் கிடக்கும்
பிணக் குவியல்களில்
இன்று நானும் ஒருத்தி

முனகவும் அனுமதியில்லாத
இந்தப் பெண்மை
மௌனிப்பதையே துறவாய்ப் பூண்டது

இன்று எனக்குள்
பரிதவித்துத் துடிக்கும்
ஒவ்வோர் அணுவும் நீ
என்னை மறந்து எங்கேனும்
நிம்மதியாய் வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது தவித்துக்கொண்டிருக்கும்
நான் மண்ணுக்குள் புதைந்த பின்னும்


நன்றி வணக்கம்

மிஸ்டர் ஐயர்


குதூகலமாய்க் கொண்டாடும் மனோ நிலையில் இன்று நான் இருக்கின்றேன். என் மென்மனப்பூவின் சின்னஞ்சிறு இதழ்களை இப்போது எவரும் வம்பாய்க் கிள்ளினாலும் கிச்சுக்கிச்சு மூட்டியதாகவே உணர்வேன் சிரிப்பேன்.

காரணம்

2006 கோடையில் ஒரு கொடை வருகிறது. டொராண்டோ பல்கலைக்கழகம் தமிழையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள அங்கீகரித்திருக்கிறது.

இந்தத் தித்திப்புச் செய்தி டொராண்டோ பல்கலை தென்னாசியா மையமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கிய திரு பத்மநாப ஐயரின் இயல் விருது விழாவில் செவியில் சாக்லெட் ஐஸ்கிரீம்போல் சொட்ட நான் கனடா தேசக் கோபுர உச்சிக்கும் டொரண்டோ கீழ்த்தள ரயிலடிக்கும் எகிறி எகிறிக் குதிக்கிறேன்.

ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி வாழும் சூழலின் வினோத விசயங்கள் அனைத்தையும் நகைகூட்டி எளிமையாய் எழுதும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் என்னைத் தமிழ் இலக்கியத் தோட்டம் திரு. பத்மநாப ஐயருக்கு வழங்கும் இயல் விருது விழாவிற்கு அழைத்தபோது எப்படியும் போயே தீரவேண்டும் என்று நான் என் மன ஏட்டின் மடியாத பக்கங்களில் மூன்று முறைக்கும்மேல் குறித்துவைத்தேன்.

உடன் செல்ல கனடா உதயன் தமிழ் வார ஏட்டின் ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கத்தையும் அழைத்திருந்தேன். அவர் அவரின் பங்குக்கு முன்னாள் கல்லூரி முதல்வர் கனகசபாபதி அவர்களை அழைக்க, இப்படியாய் அழைப்புகள் அதிகரித்து ஆறுபேர்ப் பட்டாளமாய் டொராண்டொ பல்கலைக்கழகம் விரைந்தோம். பொய்.... எங்கள் வாகனம் விரைந்தது.

விழாவிற்குச் செல்லும் முன்பாகவே விழாவை அசைபோட்டதில், மூன்று விமரிசனங்கள் எனக்குள் முந்திரிக்கொட்டைகளாய் முந்திக்கொண்டு வந்துவிட்டன. இந்த விசயத்தில் என்னால் அவசரப் படாமல் இருக்க முடியவில்லைதான். என்ன செய்வது? அதுதானே என் இயல்பு!

1. ஐயர் என்று சாதிப் பெயர் கொண்டு ஒருவரை அழைத்து அவருக்கு விருதும் கொடுப்பதா?

2. தமிழ் இலக்கியத் தோட்டத்தில் தமிழ் இல்லையா?

3. அப்படி என்னதான் சாதித்துவிட்டார் இந்த ஐயர். பலருக்கும் இவர் பெயரைக்கூடத் தெரியவில்லையே?

இந்த என் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்குமா என்ற ஆர்வம் கையில் ஒளிப்பந்தம் திணித்து உற்று உற்றுத் தேடச்சொல்லி என்னை அணுவிசையாக முடுக்கிவிட்டிருந்தது. கவனமாகக் கவனித்துவந்தேன் வலைத்தளங்களில் எதை மட்டும் வாசிக்கலாம் என்று கணியெலி தேடுவதைப்போல.

ஐயர் என்று தன்னைக் குறுக்கு நூலில் விரல் ஊஞ்சல் ஆட்டிச் சொல்லிக்கொண்டு, தானே உயர்ந்தோன் என்ற கர்வத்தில் இந்த பத்மநாப ஐயர் ஒருநாளும் வாழ்ந்ததில்லை. அப்படியான ஒரு சமூக அமைப்பும் அவருக்கு இல்லை. முன்பு தமிழகத்தில் இருந்த அப்படியொரு நிலை என்றுமே யாழ்ப்பாணத்தில் இருந்ததில்லை என்று யாழ்ப்பாணர்கள் ஈழத்தின்மீதே சத்தியம் செய்து ஒப்புவித்தார்கள்.

ஐயர் ஐயர் என்று அழைத்து அழைத்து அப்படியே அதுவும் ஒரு பெயராகிப் போனதேயொழிய அதனால் அவருக்குத் துளித்தேன் அளவுக்கும் பலனுமில்லை; சுண்டுவிரல் நகநுனி அழுக்களவுக்கும் அகந்தையுமில்லை.

விழாவினைத் தொடங்கி நடத்திச்சென்ற டொராண்டோ பலகலைக் கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர் செல்வ கணகநாயகம் அவ்வப்போது அழகிய ஆங்கிலத்தில் குழைந்தார். தமிழ் தேடிச்சென்ற என்னை ஆதங்கத்தில் ஆழ்த்தினார். அடுத்து வந்த சத்தியபாமா மகேந்திரன் கொஞ்சம் பேசினாலும் கொஞ்சும் தமிழில் பேச அடடா என்று சோம்பியவன் எழுந்தமர்ந்து சமாதானமானேன்.

இயல் விருது வழங்க வந்த டொரண்டோ பல்கலைக்கழகத்தின் புதுக்கல்லூரி முதல்வர் டேவிட் கிளன்பீல்ட் மட்டுமே தமிழ் அறியாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே பேசினாரே தவிர, மேடையேறிப் பேசவந்த ஏனைய தமிழர்கள் ஆங்கிலத்தில் துவங்கினாலும் அமுதத் தமிழிலேயே அதிகம் பேசி வானவெளி நட்சத்திரங்களை வாஞ்சையாய்த் தொட்டு தமிழமுத முத்தமிட்டு உயர்ந்தார்கள்.

கனடாவில், பல்கலைக்கழக வளாகத்தில் நிகழும் விழாவில் இப்படித் தமிழ் மழை பொழிவதைக் கேட்க எனக்கு எத்தனை ஆனந்தம் என்கிறீர்கள்? விழுவதறியாமல் நயாகராவில் நழுவிவிழும் தங்க மீனின் பரவசச் சிலிர்ப்புத்தான்.

தமிழைப் போற்றவும் தமிழை வளர்க்கவும் தமிழ்த் தொண்டர்களுக்கு விருது வழங்கவும் அமையும் விழாக்களில் தமிழ் இல்லாவிட்டால் அங்கே கூடுவதில் பொருளுண்டா தேடலுண்டா அல்லது சொற்ப சுகம்தான் உண்டா?

அழைப்பிதழைப் பார்த்தேன். Asian Institute, University of Toronto என்று முகப்பில் எழுதி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அதன் உள்ளேயும் கூட ஆங்கிலத்தில்தான் அச்சிட்டு இருந்தது. தமிழிலும் எழுதி இருக்கலாமே என்ற என் பற்று பற்றியெரிய என் கண்கள் கருகியதை என் இதயம் கவனித்தது.

தமிழ் இலக்கியத் தோட்டம் என்று அற்புதமாய்ப் பெயரிடப்பட்ட அமைப்பை Tamil Literary Garden என்றே தாழ்ந்த விழிகளுடன் எனக்கு வாசிக்க நேர்ந்ததை நான் வரவேற்கவில்லைதான், ஆனால் அதற்கு ஆறுதலாகவோ என்னவோ, டொராண்டோ பல்கலைக்கழக விழா மேடையில் தொங்கிய தோரணம், "தமிழ் இலக்கியத் தோட்டம்" என்று தமிழில் கொட்டை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.

அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்கள் தராதது, விழாபற்றி எழுத விரும்பிய எனக்குச் சில சங்கடங்களைத் தந்தது.

அழைப்பிதழில் மாலை ஏழு மணி தொடங்கி ஒன்பது மணிக்கு முடியும் என்றிருந்தது. வழக்கமாய், ஏதேதோ காரணங்கள் சொல்லி ஒரு பத்து நிமிடமாவது நம் தமிழர்கள் விழாவைத் தாமதித்துவிடுவார்கள். ஆனால் அதிசயமாய் அத்தனை வருகையாளர்களும் அரைமணி நேரத்திற்கு முன்பே வந்து குவிந்திருக்க, பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே விழா தொடங்கிவிட்டது.

என் ஞாபக இழைகளின் சின்னச் சின்ன இடுக்குகளிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு வந்து போனதாய் எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை. நேரத்தோடு ஒரு விழாவைத் தொடங்குவதற்கு வருகையாளர்கள் எந்த அளவுக்கு பொறுப்பாகிறார்கள் என்ற இன்னொரு கோணத்தையும் அன்று நான் தெளிவாகவே புரிந்து கொண்டேன்.

விழா முடிந்தும் எவரும் எழுவதாய் இல்லை. விழா முடிந்தது.... விழா முடிந்தது... விடைபெறுவோம்... விடைபெறுவோம்... என்று நடத்துனர் மீண்டும் மீண்டும் உறுதிசெய்தார். அப்படியோர் அருமையான விழாவாய் இயல் விருது விழா அமைந்தது, டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெரும் பெருமைதான்.

2005 ஜூன் மாதம் பனிரெண்டாம் தேதியின் வசந்தமாலையில் துவங்கிய விழா முதலில் வருகையாளர்களின் கலந்துரையாடல்களைச் சிறப்பாய்ச் செய்தது. தரமான வரவேற்பில் தங்கத் தமிழ்மணம் வீசியது. எதிர்பாராத சீதோசண வெப்பம், செயற்கைக் குளிர்ச்சி ஊட்டப்படாத அரங்கில் சென்னையின் சித்திரை வெயிலை அப்படியே முத்திரை மாறாமல் கொண்டுவந்து நிறுத்திவைத்துப் போரிட்டது.

கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு நான் என் மே மாத சென்னை விழாவில் கலந்துகொண்ட அந்தச் சூட்டைவிட இந்தச் சூட்டை உக்கிரமாகவே நான் உணர்ந்தேன். இயல்புக்கு எதிரான வெப்பம் எல்லொரையும் நீர் தேடும் பாலைவன ஒட்டகங்களாய் அடிக்கடி அலைய விட்டது.

முந்நூறுக்கும் மேற்பட்ட வருகையாளர்கள் ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். ஆச்சரியமும் ஆனந்தமும் ஆரத்தழுவிக்கொள்ளும் வைபவம்போல் அவர்கள் அத்தனை பேரும் தரமானவர்களாய் இருந்தார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் விழாவிற்கு வந்து குவிந்திருந்தார்கள்.

கோட்டு சூட்டுகளுக்குள் திடீர் வெப்பத்தால் அவர்கள் புழுங்கினாலும், முகத்தில் ஊட்டிமலைத் தோட்டங்களைக் காட்டி அன்பும் அறிவும் வழிய கதைத்துக் கதைத்துப் பேசினார்கள்.

எப்படிப்பட்டவர்களுக்காக இந்த விழா என்பதை முன்பே திட்டமிட்டு அவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ்கள் அனுப்பி வரவழைத்த விழா நெறியாளரின் சாதுர்யம் பாராட்டுக்குரியது.

விழாவின் சிறப்பான விசயங்களுள் ஒன்று, லண்டன் திரு. நித்தியாநந்தன் அவர்கள் குறுகிய காலத்திலேயே தொகுத்து வழங்கிய பத்மநாப ஐயரின் குறும்படம். அதனைக் கண்ட அனைவரும் உள்ளத்தில் புத்துணர்ச்சி விதைக்கப் பெற்றார்கள். அதற்குக் கிடைத்த கைத்தட்டல்கள் அரங்கை அதிரவும் செய்தது.

பலரும் ஐயரின் சேவையில் உள்ள விடாப்பிடியான குணத்தைப் பாராட்டிய வண்ணமிருந்தனர். ஒரு பைசாகூட இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய்க்கான காரியத்திலும் உடனடியாய் ஈடுபடுவதில் ஐயர் மகா வல்லவர் என்றார்கள். அவரின் தமிழ்த்தாகமும் ஈழத்தமிழர் வாஞ்சையும் அப்படியாம்!

கையே இல்லாமல் முழம்போடும் வித்தகரோ நம் ஐயர் என்ற கற்பனை விரிய நான் இதழ் அவிழ்த்துச் சிரித்தேன். வெற்றித் தமிழா நீ வாழ்க என்று கர்வப்பட்டேன்!

ஐயரின் நகைச்சுவை உணர்வு பற்றியும், திறந்த மனப் பேச்சு பற்றியும் திறந்த மனத்துடன் அரங்கில் குறிப்பிடப்பட்டது. புதிய புத்தகங்களை அவ்வப்போது வாங்குவதும், வாங்கியவற்றை நண்பர்கள், உறவினர்கள் என்று மட்டுமின்றி காண்பவர்கள் மூலமெல்லாம், அனைவருக்கும் அனுப்பிவைப்பதும் என்று மிகுந்த சிரத்தையோடு தமிழ்ப்பணி செய்து வந்திருக்கிறார் ஐயர்.

இவர் தொல்லை தாங்காமல், ஊருக்குப் போவதையே இவரிடம் சொல்லாமல் ஓடிவிடுவர் பலர் என்று நகைச்சுவையாகவும் கூற அரங்கம் சிரிப்புச் சுனாமியால் குலுங்கியது.

ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழ் இலக்கியங்களை வளர்க்கும் பணியிலும் இவர் ஆற்றிய பங்கை வேறு எவருமே ஆற்றியதில்லையோ என்ற உணர்வுதான் எனக்கு விழாவில் ஊட்டப்பட்ட இனிய அமுதம்.

விழாவின் அடுத்த சிறப்பென்று சொல்வதென்றால், திரு. சிவதாசன் அவர்களின் சொற்பொழிவு. தமிழும் சரி ஆங்கிலமும் சரி, பருவம் சிதையாத திராட்சைகள் பாலில் நழுவி விழுவதைப்போல் விழுந்தன அவரின் உதடுகளிலிருந்து.

ஐயரை தமிழ் இலக்கியத் தூதர் என்று புகழ்ந்து மகிழ்ந்தார் சிவதாசன். ஐயர் எழுதாமல் இருந்ததே நலம், அவர் எழுதியிருந்தால் அவரின் தமிழ்ப் புத்தகத் தொண்டுக்கு மாசு நேர்ந்திருக்கலாம் என்ற தன் ஐயத்தை ஐயமின்றி அறிவித்தார்.

எனக்கென்னவோ ஐயரின் திட்டவட்டமான சேவையை நினைக்கும்போது அவர் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவரிடம் மிதமிஞ்சி நிற்கப்போவது, தன் சமூகத்தினரின் எழுத்துக்களைக் கரைசேர்க்கும் உயர்ந்த எண்ணமே என்று தெளிவாகவே பட்டது.

அப்படியே நின்றுவிடாமல், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலுள்ள எழுத்தாளர்களையும் இவர் உற்சாகப்படுத்தி வளர்த்துவந்திருக்கிறார்.

அதோடு சிவதாசன், ஒரு சில ஈழத்தவரைப்போல் தமிழகத்தின் பதிப்பகங்களை வன்மையாகச் சாடினார். இந்திய மற்றும் தமிழ்நாட்டுச் சட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டிய அவர்களின் கட்டாயங்களை மீறி தனக்கிருக்கும் எதிர்பார்ப்புகளை மட்டுமே உணர்வுபொங்க வெளியிட்டார்.

டொராண்டோ பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை மாணவர் தலைவர் திரு அஸ்வின் ஆங்கிலத்திலேயே பேசியது என் செவிகளுக்கு வினோதமாய்ப் பட்டாலும், அழகாகப் பேசினார். தன்னை அவர் தமிழோடு வளர்த்துக்கொண்டால், பொன்மேடைகள் பல அவரை நிச்சயம் வரவேற்கும். சரளம் அவர் பேச்சில் நடனமாடிக்கிடந்ததை கண்டு நான் அப்போதே அவரை வாழ்த்தினேன்.

அக்கரை இலக்கியம், மரணத்துள் வாழ்வோம் போன்ற தரமான நூல்களின் அன்புத் தாயாக இருந்திருக்கிறார் ஐயர்.

டொராண்டோ பல்கலைக்கழக புதுக்கல்லூரி முதல்வர் திரு டேவிட் கிளன்பீல்ட் தன் எளிமையான பேச்சுக்கிடையில் அந்தத் தேனில் மிதந்த கற்கண்டுச் செய்தியை அறிவித்தார்.

2006 முதல் தமிழ் அங்கே ஒரு பாடமாகும் என்று. கைதட்டியவர்கள் பிரமாண்டமான அந்தக் கட்டிடத்தையே அசைத்துப் பார்த்துவிட்டார்கள்.

தமிழ் உணர்வுகள், தமிழோடு வாழும் உணர்வுகள் அன்றைய வெப்பத்தையும் விஞ்சி பேரனல் பாய்ச்சியது. உள்ளங்களோ குளிர்ந்து குதித்தன.

பின்னர்தான் அந்த மிக முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. திரு பத்மநாப ஐயரை வாழ்த்தி அவருக்கு இயல் விருது வழங்கப்பட்டது, ஆயிரத்து ஐநூறு கனடிய டாலர்களுடன். அதைத் தொடர்ந்து ஒரு பொற்கிழியும் வழங்கப்பட்டது. பொன்னும் அல்லாத பெரும் கிழியும் அல்லாத பொற்கிழியைப் பெற்ற ஐயர் உயிர்க் கிளியாய்ச் சிறகடித்தார் தன் மாறாத மறையாத புன்னகையால்.

அதனைத் தொடர்ந்து, இயல் விருதுக்கு முழு தகுதியும் பெற்ற ஐயர் நன்றிகூற எழுந்தார். பேசினால் மனிதர் நிறுத்தவே மாட்டாராம். தமிழர்களுக்குச் சொல்ல ஒரு கோள் நிறைய தகவல்களைக் குவித்து வைத்திருக்கும் அவர் தமிழின் வளர்ச்சியையும் ஈழத்தமிழரின் சிறப்புகளையும் பெருமையோடு கூறிய வண்ணமிருப்பார் என்பதால் இவ்வளவுதான் உங்கள் நேரம், அதோடு நாம் அரங்கை விட்டுவிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருப்பார்கள்போல் தெரிந்தது.

தன்னால் இந்தக் குறுகிய நேரத்தில் சொல்ல நினைப்பதை எல்லாம் சொல்ல இயலாதென்றும், காலம் இதழில் ஒன்பது பக்கக் கட்டுரையில் விவரித்து இருப்பதாகவும் கூறினார்.

எத்தனை எத்தனை இலக்கியங்கள் யார் யாரால் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்ற நீண்ட பட்டியலைத் தந்தார். நேரடியாகவே தமிழர்கள் இப்போது ஐரோப்பிய மொழிகளில் எழுதிவருவதையும் மார் நிமிர்த்திக் கூறினார்.

தமிழ் இன்று உலக அளவில் நிறைந்து மணம் பறப்புவதற்கு இலங்கையிலிருந்து 1983ல் வெளியேற்றப்பட்ட ஆறு லட்சம் தமிழர்கள் ஒரு காரணம் என்று கூறிப் பெருமைப்பட்டார்.

ஆனால் இப்படி வெளிநாடுகளில் புகலிடம்தேடி வந்து வாழும் தமிழர்களின் நாளைய நிலை என்ன என்று எண்ணி கவலை கொண்டார். இன்று எழுதவும் வாசிக்கவும் அறிந்த தமிழர்கள், நாளை பேசமட்டுமே செய்வார்கள். அதன்பின் அதுவும் அழிந்துவிடும் என்று தன் கவலையைத் துயரத்தோடு பகிர்ந்துகொண்டார். அதைத் தடுக்கும் வழியாகவே அவரும் அவர்போல் பலரும் பாடுபடுவதாகக் கூறி, நல்ல தமிழனாய் உயர்ந்தார்.

மேற்குலக நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையாக சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் வாழும் டொராண்டோவில், உலகத் தமிழ் ஆய்வுத்துறை ஒன்று நிறுவுதல் வேண்டும் என்ற தன் ஆசையைக் கூறி அரங்கத்தில் பூத்திருக்கும் அததனை முகங்களையும் நோக்கினார். அதில் பூத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்துப் பூரித்தார். அப்போதுதான் அவர் முகத்தில் உண்மையான விருதுபெற்ற நிறைவு நிறைந்ததைக் கண்டேன்.

இறுதியாக வந்த காலம் செல்வம், உணர்வுபொங்க ஐயருடன் தன் பத்தாண்டு பந்தத்தை எண்ணிப் பெருமைப் பட்டுக்கொண்டு, அவரை மனமார வாழ்த்தினார். அனைவருக்கும் அன்போடு நன்றியறிவித்தார்.

லண்டன் ஐயரின் நாற்பதாண்டுகால இலக்கியச் சேவையை நினைத்தால் என் கண்களில் வெண்ணிற நீர்க் குண்டுமணிகளாய் உருள்கின்றன.

படைப்பாளிகளைக் கௌரவிப்பதால் இலக்கியம் செழிக்கும்தான். ஆனால் படைப்பாளிகளுக்குப் பக்கபலமாய் இருக்கும் எண்ணற்ற இலக்கியத் தொண்டர்களைக் கௌரவிப்பதால் இலக்கியமே நன்றியோடு தன்னை வளர்த்தப் பெருமனக்காரர்கள்முன் தலை வணங்கும் என்பதை இந்த விழா சத்தமாகவே எடுத்துக் கூறிவிட்டது.

பெற்றவள் அம்மாவா வளர்ப்பவள் அம்மாவா? விடை கிடைத்த நிறைவோடு நான் வெளியேறினேன். அது மட்டுமா, விழாவுக்கு வரும்முன் என்னிடம் உதித்த விமரிசன முந்திரிக் கொட்டைகளெல்லாம் உடைந்துபோயின. அதன் சிறப்பான பருப்பை விருப்போடு உண்டு நான் களிப்போடு விடுபட்டேன்.

வீடு வந்து சேரும்போது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அமைப்பையும் அதன் சேவையையும் எண்ணி என்னால் நெகிழ்ந்து வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை.

அடடா... எத்தனைப் பெரிய தொண்டு இது? தமிழுக்கு வளம் வழங்கியவர்களில் விடுபட்டுப் போனவர்களையும் விடுபடாமல் விசாரித்து இயல் விருது கொடுத்து அன்புடன் கௌரவிப்பதென்பது சும்மாவா?

தமிழ் இலக்கியத் தோட்டம்பற்றி ஒரு தவறான எண்ணம் உலகளவில் நிலவி வருவதை என் செவிகள் கேட்டு முன்பு சிதைந்திருந்தன. ஆனால் உண்மை நிலையைக் கண்டறிந்ததும் உள்ளம் உற்சாக நடனம் இட்டது. பலரும் எண்ணுவதுபோல் இந்தத் தமிழ் இலக்கியத் தோட்டம், ஈழத்தமிழர்களுக்கே உரித்தானதல்ல. அது ஈழத்தமிழ் பரப்பவோ ஈழத்தமிழர்களை மட்டுமே வளர்க்கவோ ஏற்பட்ட அமைப்பு அல்ல. உலகளாவி இதில் பல்வேறு நாட்டினரும் அங்கம் வகித்திருக்கின்றனர்.

வெறுமனே இயல் விருதுகளை இலங்கைத் தமிழர்களுக்கே கொடுத்து ஒரு சின்ன வட்டமாய் முடங்கிக்கொள்ளும் அமைப்பல்ல தமிழ் இலக்கியத் தோட்டம். உலகத் தமிழர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு தரமான பரிந்துரைகளின் மூலமே இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதோடு, தமிழுக்கு விடை சொல்லிப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களை முழுமையாய்த் தமிழுக்குள் ஈடுபடுத்தவும், தமிழ்ச்சுவை ஊட்டி, தாய்மொழி உணர்வுகளை ஊட்டி, நாளைய உலகையும் திடமான தமிழ் உலகாக ஆக்க, ஆவன செய்யும் அற்புதத் தோட்டம்தான் இந்தத் தமிழ் இலக்கியத் தோட்டம்.

2001ல் சுந்தர ராமசாமிக்கும் 2002ல் கே. கணேசுக்கும், 2003ல் வெங்கட் சாமிநாதனுக்கும் 2004க்கானதை இப்போது லண்டன் பத்மநாப ஐயருக்கும் என்று இதுவரை நான்கு இயல் விருதுகளை பாரபட்சம் பாராமல் நடுநிலையுடன் வழங்கியுள்ளது என்பது தித்திப்பான செய்தி.

இனிவரும் ஆண்டுகளிலும் தமிழ் இலக்கியத் தோட்டம் அடையாளம் காட்டப்போகும் தமிழ்த் தொண்டர்கள் ஏராளம் ஏராளம். அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள் இன்றே.... இப்பொழுதே....!

1

மண்ணில் ஒரு
கருவைப்போலத்தான் இருக்கிறாய்
மரணத்தில்தான் நீ பிறக்கிறாய்

மண்ணெனும் கருவறை
துக்கங்களால் சூழப்பெற்றது
ஏனெனில் அது உன்னை
வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது

மண்ணில் நீ
முழுமையான மனிதனாய்
இருக்கவே முடியாது

முழுமை பெறும்போது
நீ மரணித்திருப்பாய்

மூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி


இரண்டு பேர் இருந்தால், அங்கே குறைந்தபட்சம் என் கட்சி, உன்கட்சி, நம் கட்சி என்று மூன்று கட்சிகள் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.

எனக்கோ இரண்டு பேர் என்பதும் அவசியம் இல்லை.
என்னைப்போல் ஒருவன் இருந்தாலே போதும் அங்கே மூன்று கட்சிகள் தோன்றிவிடும்.

என் எண்ணங்கள் ஒரு கட்சியாய் உருவாகும்
என் ஐயங்கள் இன்னொரு கட்சியாய் நிற்கும்
என் தீர்மானங்கள் மூன்றாம் கட்சியாய் மலரும்

என் தீர்மானங்கள் எல்லாம் தற்காலிகமானவையே.
அவையே நிரந்தரமானவையாகவும் ஆகக்கூடும்.

ஏன் தற்காலிகம் என்கிறேனென்றால், அவ்வப்போது அது எண்ணங்களாலும் ஐயங்களாலும் ஆய்வுசெய்யப்பட்டு ஊர்ஜிதப்படுத்தப்படும் அல்லது உதறித் தள்ளப்படும்.

என் எண்ணங்களை என்னால் தடுத்து நிறுத்த இயன்றதில்லை.
என் ஐயங்களையும் என்னால் முடக்கிப் போட முடிந்ததில்லை.
ஒரு தீர்மானம் தீட்டாமல் எந்த உறக்கமும் என்னைத் தழுவியதும் இல்லை.

இந்த மூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி.

விஞ்ஞானமே நவீன கடவுள்


நாம் இன்று வாழ்வது விஞ்ஞான யுகத்தில். இன்றெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஒளி வேகத்தில் செல்கிறது என்றுரைத்தாலும் அது குறைவோ என்ற ஐயம் வருகிறது.

உண்மையில் விஞ்ஞானத்தால் நாம் பயன் அடைகிறோமா அல்லது அமைதியை இழந்து உழைப்பை இழந்து வீரத்தை இழந்து இயற்கையை இழந்து உறவுகளை இழந்து பண்பாட்டை இழந்து பாரம்பரியத்தை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

விஞ்ஞானத்தால் இன்று மனிதன் உச்சத்தில் வளர்ந்திருக்கிறான் என்பது நிச்சயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால், விஞ்ஞானம் வளர வளர மனிதன் மூளையை மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டானல்லவா?

முன்பு இந்தியாவில் ஒரு சாதியினர் மட்டும் தங்களை கல்வி, அறிவு போன்றவற்றுக்கே ஆகுமானவர்கள் என்று ஆக்கிக்கொண்டார்கள். அவர்கள் வேறு எந்த உடல் உழைபில் ஈடுபட மாட்டார்கள். தம் அறிவைக்கொண்டு வரும் வருமானத்தில் மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

ஆனால் இன்று எப்படி? எல்லோருமே அதே நிலைக்கு வந்துவிட்டார்கள் அல்லவா? இனி வருங்காலத்தில் எவருமே உடல் உழைப்பைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டதல்லவா?

விஞ்ஞானத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டால் பட்டியலே மூழ்கிப்போய்விடும் என்பது அப்படியே உண்மை. அவற்றுள் மிக முக்கியமானதாக மனிதனின் ஆயுளைச் சொல்வேன் நான். மனிதனின் ஆயுளை விஞ்ஞானம்தான் உயர்த்தி இருக்கிறது.

கடவுளிடம் கேட்கும் அந்த வரத்தை அருளியிருப்பது விஞ்ஞானம்தான்!

பேய் பிசாசுகளையெல்லாம் விஞ்ஞானம் ஓட்டோ ஒட்டென்று ஓட்டிவிட்டது. அந்தக் கால மனிதர்களை அது படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடவுளிடம் கேட்ட இன்னொரு பெரிய பாதுகாப்பு இது.

இதை அருளியதும் விஞ்ஞானம்தான்!

இப்படி மனிதன் கடவுளிடம் எதையெல்லாம் கேட்டானோ அதையெல்லாம் அருள்வது இன்று விஞ்ஞானம்தான்... ஆக விஞ்ஞானமே நவீன கடவுள் என்றுகூடச் சொல்லலாம்.

ஆனால் மனிதன் அந்தக் காலம்முதல் இந்தக்காலம் வரை கடவுளிடம் நிம்மதியைத்தானே முதலில் கேட்டான். அதை மட்டும் விஞ்ஞானத்தால் அருளவே முடியவில்ல்லையே.

அது விஞ்ஞானத்தின் மிகப்பெரும் தோல்வியல்லவா?

நிம்மதி மட்டும் மனிதனின் மனதில்தானே இருக்கிறது. அதை அவனிடமே எடுத்துக்கொடுக்க என்ன வேண்டும்? நல்ல மெய்ஞானம் வேண்டும். மனித நேயம் ஒன்றையே போற்றி வாழும் உண்மையான மெய்ஞானம் வேண்டும்.

நாம் உண்மையில் பயப்படுவது கடகடவென்று வளரும் விஞ்ஞானத்திற்கு அல்ல. அதைத் தவறாய்ப் பயன்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்குத்தான்.

கடவுளிடம் இருந்த பயம்போய் இப்போது மூளை வலுப்பெற்ற கெட்டழியும் மனிதர்களுக்குப் பயப்படுகிறோம்.

விஞ்ஞானம் கெட்டவர்களை கொடூரமான சாத்தான்களாய் ஆக்கிவிட்டிருக்கிறது!

ஆக விஞ்ஞானத்தோடு நமக்குத் தேவை ஜாதி மதம் இனம் கடவுள் என்ற எதனோடும் சார்பில்லாத மெய்ஞானம். இது விஞ்ஞான யுகத்தின் தேவைமட்டுமல்ல. விஞ்ஞானமே இல்லாத அந்தக் காலத் தேவையும்தான்.

எந்த வளர்ச்சி எப்படி வந்தாலும் மனிதநேய உயர்வே மனித வாழ்வைச் சரியாக்கும்... அதற்குத்தான் மதங்கள் இனங்கள் கடந்த உண்மையான மெய்ஞானம் வேண்டும்.

அதோடு இந்த விஞ்ஞான விளையாட்டுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வருடத்தில் ஒரு மூன்று மாதங்களாவது எந்த விஞ்ஞான வசதிகளுமே இல்லாத கற்கால பூமிக்குச் சென்று நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் நம்மை வளர்க்கும். மெய்ஞானம் நம்மை எளிமைப்படுத்தும். நம் வாழ்க்கை வளமானதாய் அமையும்.

வள்ளல் தமிழ்த்தாயே

கணினித் திரை நிறைத்து
கற்கண்டாய்க் குவிந்தாயே
இணைய வலை கிழித்துப்
பொற்பாதம் சுழன்றாயே

அழியும் மொழிகளுக்குள்
தமிழிருக்கும் என்றாரே
ஒளியாய் ஒளிப்பிழப்பாய்
உச்சத்தை வென்றாயே

துள்ளும் நடைபோட்டுத்
தொழில் நுட்பம் தாண்டுகின்றாய்
மெல்லச் சாவதினிச்
சொன்னவனின் மொழியென்றாய்

உள்ளம் உருகியோட
உனதுமடி தலைவைத்தேன்
வள்ளல் தமிழ்த்தாயே
வளரமுதம் ஊட்டுமம்மா

தேவதையிடம் பத்து வரங்கள் - தொடர்பதிவு


இன்று தேவதை உங்கள்முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள். இப்படி ஒரு தொடர்பதிவில் கலந்துகொள்ள எனக்கு ஓர் அழைப்பு வந்தது.

என்னை அழைத்த கவிநட்புக்கு முதலில் என் நன்றி. தொடர்பதிவுகள் நட்பின் அடையாளங்களுள் ஒன்றுதான். ஆகவே அதை வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

ஒருவரின் ஆசைகளைக் கேட்டறிவது இன்னொருவருக்குச் சுவாரசியமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் அந்த ஒருவர் தனக்குப் பிடித்தமானவர் என்றால் சொல்லவே வேண்டாம். அதைக் கேட்பதே இவரின் முதல் ஆசையாக இருக்கும்.

புத்தரிடம் பத்து ஆசைகள் என்னவென்று கேட்டால் அவர் தேவதையைப் பார்த்து, உயிர்களெல்லாம் ஆசைகளை அழித்து வாழவேண்டும் என்ற தன் ஆசையைப் பத்துமுறை சொல்வார். அதையே அவர் சித்தார்த்தனாக இருந்தபோது கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்பார்? ஆசைகள் நிமிடங்கள் தோறும் நிறம் மாறக்கூடியவையே.

இன்றைய ஆசைகள் நாளைக்கு ஒன்றுமற்றவையாக ஆகலாம். நாளை நாம் கொள்ளப் போகும் ஆசை இன்று நம் விருப்பத்திலேயே இல்லாததாக இருக்கலாம். மனிதன் பிறந்த நாள்முதல் இறக்கும் நாள் வரை ஒரே ஆசையைக் கொண்டிருப்பதில்லை.

நம்மிடம் நம் உள் மனம் சொல்லும் ரகசிய ஆசைகள்தான் நம் கனவுகள். சில நேரம் கனவுகள் பயங்கரமானதாக இருக்கும். ஒரு சிங்கம் நம்மைத் துரத்த நாம் எதுவும் செய்யமுடியாமல் செயலற்று நிற்பதுபோல் கொடிய கனவு வரும். அது வேறொன்றுமில்லை. நம் ஆசைகள் நிறைவேறாதோ என்ற நம் உள் மனதின் பயம்தான் அது.

ஆடை இல்லாதவன் அரைமனிதன் என்பார்கள். ஆசை இல்லாதவன் மனிதனே இல்லை என்று சொல்லலாம். ஆசைகளே ஒருவனின் ரசனைகள். ரசனைகள் இல்லாவிட்டால் அவன் எதையுமே ரசிக்க முடியாது. எதையுமே ரசிக்காதவன் ஒரு ஜடம். அவனுக்கு வாழ்க்கையே இல்லை.

வாழ்வதற்காகத்தான் நாம் மண்ணில் பிறந்திருக்கிறோம். பின் ஆசையை ஒழி என்றால் என்ன பொருள். பேராசைப் படாதே என்றுதான் பொருள். கிட்டாதாயின் வெட்டென மற என்றும் பொருள். அது உன்னையும் பிறரையும் வாழவைக்கும் என்று பொருள்.

ஆதலாம் உயிர்களே நாம் ஆசைப்படுவோம். என் கவிதைமனம் சொல்லும் என் ஆசைகளை நான் இங்கே பட்டியல் இடப்போகிறேன். அவற்றை எந்த தேவதையும் வந்து நிறைவேற்றித் தரமாட்டாள்.
ஆனால் அவற்றை நானே நிறைவேற்றுவேன். என் எண்ணங்கள் நிறைவேற்றித் தரும். என் எழுத்துக்கள் நிறைவேற்றித்தரும்.

என்னை நேசிப்போர் என் ஆசைகளையும் நேசிப்பர். அவர்கள் நேசிக்கும் ஆசைகளாய் என் ஆசைகள் ஆகும்போது, நிறைவேறுவது நிக்ழக்கூடியதுதானே. ஊர் கூடித் தேரிழுத்தால் தேருக்கு வேறு வழியுண்டா?

இதோ என் ஆசைகள்:

1. எல்லைக் கோடுகள் அழிந்திடணும். அதையென் சின்னக் காலால் அழித்திடணும். உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்.

2. காற்றில் அலையும் பறவைகளாய் மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும் சிறுமை கட்டுகள் அறுந்து விழவேண்டும்.

3. அழியும் அகிலம் தொடவேண்டும். எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும். வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்.

4. காலை எழுந்து பறந்திடணும். பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும். அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்.

5. காணும் உயிரைத் தழுவிடணும். அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும். உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்.

6. மதங்கள் யாவும் இணைந்திடணும். செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும். தெய்வம் மனிதம் கண்டு தொழுதிடணும்

7. தமிழே பேரண்டத்தின் மொழியாக ஆக வேண்டும். ஒவ்வோர் உயிரும் இதய வாசம் சொட்டும் கவிதைகள் எழுதவேண்டும்.

8. புத்தம் புதிதாகப் பிறக்க வேண்டும் செத்த விலங்கோடும் அன்பு வேண்டும் யுத்தம் இல்லாத பூமி வேண்டும்

9. ஏக்கமும் துக்கமும் மனதின் இடுக்குகளிலிருந்தும் உடைந்து தூள் தூள் ஆகவேண்டும்

10. வரம் தரும் தேவதையே நீ என் தேவதையை என்னிடம் தரும் தேவதையாக வேண்டும்


என்று நான் எழுதினால் “வந்துட்டாய்ங்கய்யா வந்துட்டாய்ங்க” என்று வடிவேலு வந்துவிடுவார் என்பதால் என் தத்துப்பித்துப் பத்து ஆசைகள் கீழே.

தமிழர்கள் இரண்டு விசயங்களைத் தமிழ்த் திரைப்படங்களில் விரும்புவார்கள். ஒன்று கதையின் பிரதான பாத்திரத்தின் முக்கியமான கதைக் காட்சிகள் இன்னொன்று இடையிடையே வந்து லூட்டியடிக்கும் வடிவேலுத்தனங்கள். ஆகவே ஆசைகளும் இருவேறு பட்டியலில் பிரியவே செய்யும் என்பதால் இதோ என் இரண்டாம் பத்து ஆசைகள்:

1. எப்படியாவது ஒரு பத்து ஆசைகளை யோசிக்க வேண்டும்

2. யோசித்த பத்து ஆசைகளையும் மறக்காமல் எழுதிவிடவேண்டும்

3. எழுதிய பத்தும் வாசிப்பவர்களுக்குச் சுவையாக இருக்க வேண்டும்

4. எழுதி முடித்ததும் ஒரு நாலுபேரைக் கண்டுபிடிக்க வேண்டும்

5. அந்த நாலுபேரும் பத்துப் பத்து ஆசைகள் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்

6. அவர்களின் பத்துத்பத்து ஆசைகளையும் எழுத அவர்கள் சம்மதிக்க வேண்டும்

7. சம்மதித்தவர்கள் விடு ஜூட் சொல்லிவிடாமல் அக்கறையாய் அமர்ந்து எழுதவேண்டும்

8. எழுதி முடித்ததும் அவர்களும் நாலு நாலு பேர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்

9. கண்டுபிடித்தவர்கள் ஏற்கனவே மாட்டிக்கொண்டவர்களாய் இருக்கக்கூடாது

10. வெட்டியாய் ஆசைகளைக் கேட்டுவிட்டு ஒன்றுமே செய்யாத தேவதையே உன்னை ராஜபக்சேவிடம் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும்.

அடுத்தது நான் அழைக்கும் நால்வர்:

இந்த என் இடுகையை வாசித்துக் கருத்துச் சொல்லும் பதிவர் இதுவரை இந்தத் தொடர் பதிவில் சிக்காதவராய் இருந்தால் முதலில் கருத்துச் சொல்லும் நால்வர் மட்டும் என் அழைப்பினை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிலுவையில் அறைபட்ட இதயம்

சிலுவையில்
அறைபட்ட இதயம்
என் சிறகுகள்
தீபட்டுச் சிதையும்

அழுகையில்
கரைந்தே அழியும்
என் ஆயுளும்
முடிந்தால் தெளியும்

கழுவினில் ஏறிய உயிரிது
தினம் கனவினிலும்
எரிகிற பயிரிது

விழுவதும் எழுவதும்
இயற்கை
என் வீழ்ச்சிக்கு இல்லை
இறக்கை

அணிந்துரை - எல்லோருக்கும் சேவியரை பிடித்திருக்கிறது


இலையுதிர்கால இளமாலைப் பொழுதுகளில், மெல்லிய காற்றின் மிருதுவான தொடுதல்களில், இருப்பைத் துறந்து மிக இயல்பாய் நிலத்தை முத்தமிட வரும் வண்ண வண்ண வசீகர இலைகளாய் சேவியர் கவிதைகள்.

ஒவ்வோர் இலையிலும் அனுபவ நரம்புகளின் அழகிய ஊர்வலம், மனிதர்களை நேசிக்கும் உயர்ந்த உணர்வுகளின் கோட்டோ வியங்களாய்.

எல்லோருக்கும் மழை பிடிப்பதில்லை என்று கவிதைக் குடை விரிக்கும் சேவியரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

"தவற விட்ட பத்துகாசு போலத்தான்
என் கவிதைகளும்"

என்று தன் கவிதைகளுக்கு கவிதையாலேயே ஒரு முன்னுரை வழங்குகிறார் சேவியர் ஓர் கவிதையில். பிறகு...

"தேவைப்படும் பாத்திரம் தேடி வருமென்றே
காத்திருக்கின்றன என் கவிதைகள்"

என்று அழகாக ஓர் அணிந்துரையையும் அவரே வழங்கிவிடுகிறார். இனி நான் என்ன எழுதுவது?

ஏராளமான வெள்ளிப் பாத்திரங்களில் தாராளமாகவே விழும் பொற்காசுகளாய் மின்னுகின்றன சேவியரின் பல கவிதைகள் என்பதை என் பங்குக்கு நானும் சொல்லத்தானே வேண்டும். சொல்லுகிறேன்... சொல்லுகிறேன்...

"இலட்சியமில்லாமலேயே
வாய்த்திருக்கிறது கவிதை"

என்கிறார் இன்னொரு கவிதையில். அப்படி இலட்சியமில்லாமலேயே வாய்க்கப் பெற்ற இவரின் கவிதைகள், மனிதநேயம் என்ற முதன்மை இலட்சியத்தை நோக்கி அக்கறை நடைபோடுவதை அனேகமாக அனைத்துக் கவிதைகளிலுமே காணலாம்.

"யார் வீட்டுக் கஷ்டத்தையோ கைப்பிடி அளவு
குறைத்திருக்கிறேன் என்றே அமைதி கொள்ளும் மனசு"

என்று தன் பொருளை இழந்தபோது பிறர் நலனுக்காய் தன் ஏமாற்றத்தையும் கருணையோடு ரசிக்கும் கவிஞர்,

"வழக்கம் போலவே இந்த முறையும்
எதிர்பார்த்து ஏமாந்தேன். கவிதை பேசும் சகபயணியை"

என்று கவிதைகளில் மூழ்காத கட்டாந்தரை மனங்களைக் கண்டுமட்டும் ஏகமாய் ஏமாறுகிறார். எது கவிஞனை உண்மையாய் ஏமாற்றுகிறது என்பதை அறியும்போதே ஆனந்த வெள்ளம் வழிகின்றது இதய ஓடைகளில்.

"எப்போதும் தோன்றியதே இல்லை
அவருக்கும் ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப"

என்று தபால்காரரைப் பார்த்து ஒரு கவிதையில் சொல்வதைப்போல் தொகுப்பெங்கும் பல பொன்மனப் பார்வைகள்...

"முக்கியமற்றதாய் தோன்றும் நிகழ்வுகளின் கூட்டுத் தொகையில்
வாங்க முடிகிறது முக்கியமான சில இலட்சியங்களை"

என்பது போன்ற நறுக்கென்ற வாழ்க்கைத் தத்துவங்கள்

"காதலுக்காக நழுவ விட்ட கணங்களை இறுகப் பிடித்திருந்தால்
ஒருவேளை முற்றத்தில் பூத்திருக்கக் கூடும் சில காதல்கள்"

என்று காதலைச் சொல்லும்போதும்,

"மூன்று வார மழையில் தெருவோரப் பிள்ளையார்
ஆல மர அழுக்குகளோடு கவனிப்பாரற்று"

என்று பக்தியைச் சொல்லும்போதும், கச்சிதமாய்த் தேன் எச்சமிட்டிருக்கின்றன இவரின் கவிதைகள்.

"அவன் கந்தலாடைக் கன்னிக்கு
பத்து பைசா பிச்சையிடும்போது கவனித்தேன்.
அவன் பார்வையை"

போன்ற தேள் தீண்டல்கள்...

"கிடைக்காத ஒரு கவளச் சோறு
உயிரைத் தின்று சடலம் துப்பும் போது
அரசு விளம்பரம் சிரிக்கும்.
கருத்தடைச் சாதனம் இலவசம்"

போன்ற சுளீர் சொடுக்குகள்...

"கழுதைக்கு முன்னால் குச்சியில் கட்டி நீட்டப்படும்
உணவு பற்றி பள்ளிக் கூட வயதில் எதுவும் புரியவில்லை.
தேர்தல்கள் தான் தீர்த்து வைக்கின்றன சந்தேகங்களை"

போன்ற அரசியல் சிதறு தேங்காய்கள்...

"உடைந்து வழியும் நிலவை
கிழியாத இலையில் ஏந்திப் பிடித்திருக்கும் பனைமரம்"

"நீ பற்றவைக்கும் பார்வைகளை என் மீது உரசிப் போடாமல்
புறக்கணிக்கும் போதெல்லாம் எரிந்து போகிறேன்".

"நடுக்கூடத்தில் நாற்காலியில்
குட்டி மரணம் போடுபவனை"

போன்ற ரசனை மேயும் நயங்கள்...

"நீளமான கருப்புக் கூந்தலோடு யாரேனும் நடந்தால்
சிரிக்கக் கூடும் எதிர்கால வீதிகள்"

போன்ற வளரும் நவீனத்தில் அழியும் அழகை எடுத்து வீசும் கவிதை மூச்சுகள்...

"முன்பெல்லாம் பத்து மைல் என்றாலே
பதட்டப் படாமல் நடந்து சென்றனராம்.
இப்போது அது இல்லை, அதனால் தானோ என்னவோ,
ஆயுளிலும் தரப்படுகிறது ஐம்பது சதம் தள்ளுபடி".

மூளையை மட்டுமே நடக்கவிடும் நவீனயுகத்தில் ஆயுள் கேள்விக்குறிதான். கிழியும் உடலை மருத்துவத்தால் தைத்துத் தைத்து கந்தலாய் ஒரு வாழ்க்கை என்பதை இந்தக் கவிதை சொல்லாமல் சொல்வது எத்தனை உச்சம்.

பல கவிதைகளில் கடைசி வரிகளில் ஒளித்துவைத்திருக்கிறார் கன்னிவெடிகளை. அவற்றை நம் கண்கள் மிதித்ததும் வெடித்துச் சிதறி வாசிப்பு வெறுமைகளைக் கொன்றுபோட்டுவிட்டு, எண்ணங்களில் மத்தாப்பு கொளுத்திவிடுகின்றன.

"நூறு ரூபாய்க்குக் கேட்டிருக்கலாமோ ?"

ஏமாற்று உலகில் மன நிறைவென்பது கிடைக்காத ஒன்று என்பதை இந்தக் கேள்வி ஒரு திடமான பதிலாகவல்லவா தருகிறது.

"ஒரு முள்ளுக்காய் எப்படி வெறுக்க முடிந்தது
உன்னால் அத்தனை மலர்களையும்?"

அறுபட்ட இதயத்தின் வேதனையை எப்படி அருமையாய்ச் சொல்கிறார் பார்த்தீர்களா?

தனக்கு, தாரம் வரும் 'கல்யாணக் கணக்குகள்' கவிதையில் பொருளாதார விளையாட்டு, மைதானம் காண்கிறது. 'அனுமதிக்கப் படாதவைகள்' கவிதை யோசித்துப் பார்க்காத நம் நடைமுறை தவறுகளில் நெருப்புக்குச்சி உரசுகிறது. காதலை எப்படியெப்படியெல்லாமோ சொல்லிவிட்டார்கள் ஓர் அறுந்த செருப்பாகப் பார்க்கும் 'காதல்' என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளுள் வித்தியாசமானது.

"இப்போதெல்லாம் வருவதில்லை ஆத்தா.
மகாலட்சுமியின் மகளுக்கு
அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கிறதாம்."

போன்ற குட்டிக்கவிதைகளில் சகட்டுமேனிக்குக் கொட்டிவைத்திருக்கிறார் அழுத்தமான உணர்வு வேட்டுகளை.

"என் மனைவிக்கு ரசனையில்லையென்று நான் சொல்லும்போது,
என் புருஷனுக்கு பொறுப்பே இல்லை என்பாள் மனைவி."

இந்தக் கவிதை எதைச் சொல்கிறது? பார்க்கும் வேறு வேறு கோணங்களையா? இருவேறு இதயங்களின் திருமணக் கோளாறுகளையா? எல்லோருக்கும் பார்வைகள் உண்டு என்பதைதா? ஒன்றை வைத்துக்கொண்டு இன்னொன்றை கோட்டைவிட்டுவிடாதே என்ற தத்துவத்தையா? குறைகூறும்முன் உன் குறையைக்கொஞ்சம் பார் என்பதையா? சகிப்புத்தன்மையே வாழ்க்கை என்பதையா? இன்னும் என்னென்ன விசயங்கள் இந்தப் பொடிக் கவிதையில் மூடிக்கிடக்கின்றன?

அதுதான் கவிதை. அப்படித்தான் கவிதை இருக்கவேண்டும். அப்படித்தான் கவிதைகள் நம் செழுமையான மரபிலும் வளமாக விளைந்திருக்கின்றன. கவிஞன் காலத்துக்கு ஏற்ப கவிதையின் நடையை மாற்றுகிறான் ஆனால் கவிதைகள் என்னவோ அப்படியே உயரத்தில்தான் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கின்றன. யாரும் கவிதையை கீழே விழச் செய்துவிடமுடியாது. விழுவதும் விழப்போவதும் எப்போதும் கவிதை என்ற பெயரில் குவித்துப் போடும் குப்பைகளும் குவிக்கும் 'கண்டிருந்த' வான்கோழிகளும்தான்.

"ரசனையை விலை நிர்ணயிப்பதில்லை என்பதை
மழலைதான் முதலில் கண்டு கொள்கிறது."

இப்படி எளிமை எளிமை எளிமையிலும் எளிமை. அவற்றுள் இனிமை இனிமை இனிமையிலும் இனிமை. இவைதாம் சேவியரின் கவிதைகள். வாசகனைத் தன்னோடு கட்டியணைத்து கவிதை காட்டுவதில் எப்போதுமே வெற்றிகாண்கிறார் சேவியர்.

"சிப்பி பிடிக்காது என்பதற்காய்
முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்"

உயர்வான எழுத்துலகிலும் இப்படியான துர்நாற்ற அவலங்கள் தூய்மைப் படுத்தப்பட வேண்டும். கவிஞன் தன் மனச்சிப்பிக்குள் வந்துவிழும் உணர்வுகளை வளர்த்தெடுத்து முத்துக்களாய் உருவாக்குவதும், அவை வக்கற்ற வெற்று ஓடுகளின் வயிற்றெரிச்சல்களை வாரிக்கொள்வதும் வாடிக்கைதான். அவற்றை ஓர் எதுகை மோனையால் தூக்கி ஓர் ஓரமாய் எறிந்துவிட்டு நடக்கத் தெரிந்தவன்தான் நல்ல கவிஞன்.

சேவியர், வெற்றி நடையையே தன் நடையாக்கிக்கொண்டவர்.

இனிப்பாக இதயம் பேசும் சேவியர் கவிதைகள் மேலும் இறுக்கமாக விளைந்து என்றென்றும் நிலைத்து வாழ என் வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி
ஜனவரி 2005

குறள் 0005


அருளும் இறைவனின்
அனைத்துப் பெருமைகளையும்
அறிந்தே வாழ்வோரிடம்
அளவிலாத் துயர் தரும்
அறியாமைச் செயல்கள்
எட்டியே நிற்கும்
எப்போதும்இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 5

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 19, 2003