கவிமுகத்தின் அறிமுகம் - கனடா கவிஞர் புகாரி

https://www.youtube.com/watch?v=ZV6Fz0PiWVM

வெளிநாட்டில்
தமிழைக் காக்கிற ஒரு தூதுவராக
தமிழைக் காக்கிற
காவலர்களில் ஒருவராக

தமிழ்ப் படைப்பாளிகளில்
ஒரு முன்னணி
படைப்பாளியாகத் திகழ்கிற
புகாரியின் விழாவில்
கலந்துகொள்வதை நான்
பெருமையாகக் கருதுகிறேன்

வெல்க  புகாரியின் தமிழ்
வாழ்க அவர்தம் குடும்பம்  என்று
வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து


மற்றும்....

மூத்த எழுத்தாளர் மாலன்
கவிஞர் யுகபாரதி
கவிஞர் இந்திரன்
கவிஞர் வைகைச் செல்வி
கவிஞர் அண்ணா கண்ணன்
சென்னை பத்திரிகையாளர்கள்

அன்புடன் புகாரி
கனடாவில் மக்கள் பாதையின் தமிழ்க் கையெழுத்துத் திருவிழா

என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே 
உங்கள் அனைவருக்கும் 
என் அன்புவளர் நட்பு வணக்கம்

சகாயம் அவர்களைத் 
தெரியாதோர் இருப்பதரிது 

சகாயம் என்றால் நேர்மை
நேர்மை என்றால் சகாயம் என்று 
தமிழ் அகராதிகள் ஏற்றுக்கொண்டுவிட்டன

எத்தனை இன்னல்கள் வந்து 
எதிர்த்து நின்றாலும்
விடாப்பிடியாய் அவர் தன்
நேர்மையோடு மட்டுமே ஒட்டிக்கிடப்பது 
என்னை வெகுவாகக் கவர்ந்த 
அவரின் அறம் போற்றும் ஆண்மை

மக்கள் பாதை
என்று ஓர் இயக்கத்தை
ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி 
அவரின் வழிகாட்டுதலில் உருவாக்கி 
அதன் செயல்பாடுகளில் ஒன்றாக
தமிழ்க் கையெழுத்துத் திருவிழா ஒன்றை 
சென்னையில் அக்டோபர் இரண்டில் நடத்துகிறார்கள்

அந்தக் கையெழுத்துத் திருவிழாவை
உங்கள் அனைவரின் ஆதரவோடும்
கனடாவில் நிறைவேற்றும் பணியை
நான் மகிழ்வோடு ஏற்றுள்ளேன்

நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒரு சிறு காரியம்தான்

படிவம் ஒன்றினை நான்
அச்செடுத்துக் கொண்டுவருவேன்

அதில் உங்கள் பெயரைத் தமிழில் எழுதி
தமிழிலேயே கையொப்பமும் இட்டுவிட்டால் 
நம் பணி சிறப்பாக நிறைவடைந்துவிடும்

அப்படிக் கனடாவிலும்
தமிழுணர்வோடு 
தமிழர்களாய் ஒன்றிணைந்து
தமிழ்க் கையொப்பம் இடுவதை
ஒரு காணொளியாக எடுப்போம்
மக்கள் பாதைக்கு அனுப்பி வைப்போம்

வரும் சனிக்கிழமை 
2018, 29 செப்டம்பர் மாலை 
6:30 மணிக்கு
186 Staines Road, Scarborough விலுள்ள
என் இல்லத்தில் நிகழும்
தமிழ்க் கையெழுத்துத் திருவிழாவில் 
கனடாவாழ் அன்புத் தமிழர்கள் அனைவரும்
அன்புடன் கலந்துகொண்டு சிறப்பிக்க
உங்கள் அனைவரையும்
பேரன்புடன் வரவேற்கிறேன்

நன்றி
*
அழைப்பது 
நானல்ல 
அன்னைத்தமிழ்

வரப்போவது 
நீங்களல்ல 
உங்கள் 
தாய்த்தமிழ் உணர்வு

தரப்போவது 
வெறும் கையெழுத்தல்ல
தாய்நில மக்களின் 
தலையெழுத்தை மாற்றும் 
பொன்னெழுத்து

*
தலைவன் தலைவி 
தவப்பிள்ளைகள் என்று 
அனைவரும் வருக 
அமுதத் தமிழுக்கு 
உங்கள் 
கையெழுத்து முத்தம் 
தருக

*

உங்களின் 
பத்து நிமிடங்கள் போதும்
பொங்கு தமிழின் 
கையொப்பத் திருவிழா வெற்றிக்கு

அந்தப் பத்து நிமிடங்களோ
தமிழர் வாழ்வை மீட்டுத்தரும்
தங்கப் பொழுதுகளாய் உருவெடுக்கும் 
வரும்நாட்களில்

*
தமிழனுக்கு என்று ஒரு 
தனி நாடு இல்லைதான்
ஆயினும்
அவன் காலூன்றும் ஒவ்வொருநாடும்
தமிழின் நாடாய் பரந்து விரிவதை
மெய்சிலிரிக்கக் காண்கிறோம்

யாதும் ஊரே 
யாவரும் கேளிர்

வேறெவன் சொன்னான்
தமிழனே வென்றான்!

(குறுங்கால அழைப்பினைத் தொடுப்பதற்காக 
என்னை அருள்கூர்ந்து மன்னிக்கவும்)

அன்புடன் புகாரி
416-500-0972

*இறைவன் இல்லை*

இறைவன் இல்லை
என்று இயம்புவதும்
மதங்கள் இல்லை
என்று மறுப்பதும் 
சாதிகள் இல்லை
என்று சாடுவதும்
அவற்றை
இல்லை என்று
அழித்தெறிவதற்காக
அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று முழங்குவதற்காக
காட்டுமிராண்டித்தனம் ஆகாது 
என்று கர்ஜிப்பதற்காக
வன்முறை கேடு 
என்று வலியுறுத்துவதற்காக
தீண்டாமை தவறு 
என்று தடுப்பதற்காக
மட்டுமே

அறமற்ற
கூடாதுகளைச்
செய்யாதிருக்கும் ஆத்திகர்களும்
அவற்றை
அடையாளங் காட்டும்
நாத்திகர்களும் 
உயர்ந்தவர்கள்தாம்

வேரையே
அறுக்கச் சொல்லிக்
கதறுவது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால்
மட்டும்தான்

அன்புடன் புகாரி
*அழுகையும் சிரிப்பும் தூரமில்லை*

இந்த வாழ்க்கை வினோதமானது. ஆனந்தத்தில் ஆடும்போது காலம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. ஆனந்தம் வடிந்து, கொடுந்துக்கம் பற்றிப் புறட்டிப் போடும்போது, ஆழமான தத்துவ வரிகள் நெஞ்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அவை பெரும்பாலும் விரக்தி வரிகளாகவும் நம்பிக்கையைச் சிதைக்கும் முட வரிகளாகவும் இருப்பதால், அவற்றை நான் பொதுவெளிகளில் பகிர்வதில்லை. ஆனால் இந்தக் கவிதையின் முதல் நான்கு வரிகள் என் வாழ்வின் ஒரு மிக முக்கிய காலகட்டத்தை அழுத்தமான என் நினைவில் கொண்டுவந்து நிறுத்துவதால், அவசியம்தான் என்று எண்ணிப் பகிர்கிறேன். மடியும் வரைக்கும் துயரம் என்பதெல்லாம் சுத்தப் பொய். அந்த நேரக் காயத்தின் வேதனைச் சொற்கள் அவை. அதன் பின் நான் ஏராளமான இன்பங்களைத் தாராளமாகச் சுகித்துதுவிட்டேன் சுகித்துக்கொண்டும் இருக்கிறேன் என்பதே நான் இங்கே வாழ்க்கையின்மீது முன்வைக்கும் மேலான நம்பிக்கை. சத்தியம், வாழ்க்கை இனிமையானது, அதில் வந்துபோகும்ம் துயரங்கள் அந்த இனிமையை நமக்கு எடுத்துச் சொல்லும் தத்துவப் பாடப் புத்தகங்கள்.

என்னை மீறும் எண்ணங்களே
என் இதயம் எங்கும் காயங்களே
மண்ணில் வாழ்க்கை மாயங்களே
மடியும் வரைக்கும் துயரங்களே

0

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

0

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

அன்புடன் புகாரி
*முற்றுப்புள்ளி*

எல்லாமும் எந்நாளும்
தொடக்கப்புள்ளிகளே
முற்றுப்புள்ளி
என்றொரு புள்ளி
கிடையவே கிடையாது

அன்புடன் புகாரி



ஹஸ்னா

ஊத்துமலைத் தேனு
ஹஸ்னா
ஓடிவரும் மானு

பூத்தப்புதுப் பூவு
ஹஸ்னா
பொங்கிநிக்கும் பாலு

ஆத்தங்கரை வூடு
ஹஸ்னா
அழகு சந்தனக் கூடு

சாத்துக்குடி கண்ணு
ஹஸ்னா
சோத்துப்பாறை பொண்ணு

அன்புடன் புகாரி
இது நம் முதலிரவு
உன்
காதலை
நீ
சொல்
இது நம் முதலிரவு
என்
காதலை
நான்
சொல்கிறேன்
இது நம் முதலிரவு
நம்
காதலை
பின்
நாம்
மெல்லத்
தொடங்குவோம்
இது நம் முதலிரவு