முத்தக் காட்டில் விட்டுவைத்தேன்


தத்தித் தித்தித்தத் தங்கநிலவே
நீ தாவணிப் பூவுக்குள்
பூவானாய்
முத்துத் தெறித்திடும் மெய்யழகே
நீ முகத்தைக் கவிழ்த்தே
சிரிக்கின்றாய்

பெத்த மனங்களின் பொந்துகளில்
நீ பிறந்ததும் மீட்டிய
குரலிருக்கு
எத்தனை வளர்ந்து நிமிர்ந்தாலும்
உனை எடுத்தே கொஞ்சிடும்
உயிரெனக்கு

பத்துத் திங்கள் சுமந்தவளும்
உன் பருவம் கண்டே
வியக்கின்றாள்
ரத்த இழையின் சின்னவனும்
நீ ரத்தினத் தீவெனக்
கூவுகின்றான்

நித்தம் ஒளிரும் நெற்றி மொட்டே
என் நெஞ்சில் வளரும்
தாலாட்டே
புத்தம் புதிய மழைத்துளியே
நீ பேசிடும் மொழியும்
தேனிசையே

முத்தக் காட்டில் விட்டுவைத்தேன்
நீ மூர்ச்சையாகிப்
போகவில்லை
கட்டித் தழுவி நொறுக்கிவைத்தேன்
உன் கண்களில் தாகம்
தீரவில்லை

எத்தனைப் பாசம் பொன்னழகே
நீ ஏணிக்கு எட்டாத
வெண்ணிலவே
பொத்திய கைக்குள் வைரமென்றே
உனைப் பெற்ற நிறைவுக்கு
ஈடில்லையே

YouTube உங்கள்திரை


YouTube என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? "நீ குழல்" என்பது நேரடி மொழிப்பெயர்ப்பு என்பது என் கருத்து. "குறுந்திரை", "குறுங்காணொளி" இவைகள் பொருத்தமானதாக உள்ளனவா?
நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். கலிஃபோர்னியா கவியரங்கத்திலேயே இதுபற்றிப் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் நேரம் கருதி பேசவில்லை.

கவிஞர் டில்லிதுரை ‘நீ-குழல்’ என்று மொழிபெயர்த்தார். மொழி பெயர்த்தார் என்பதைவிட சொல் பெயர்த்தார் என்பதுதான் சரி. மொழி மாற்றம் செய்யும்போது மொழியாக்கம் ஆவதுதான் சிறப்பு. கருத்தை உள்ளிழுத்துக்கொண்டு நம் மொழிக்கும் இயல்புக்கும் புரிதலுக்கும் ஏற்ப ஒரு புதுச்சொல்லை உருவாக்க வேண்டும். அப்படி ஆக்கப்படுவதுதான் மொழியாக்கம்.

”மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம், பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும், சிதையாமல் மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும் வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு செத்துப்போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.” என்று தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழியாக்கம் செய்த திரு. ஜெயபாரதனின் நூலுக்கான என் அணிந்துரையில் எழுதினேன்.

நீ-குழல் என்ற சொல்பெயர்ப்புக்கு என் பாராட்டு அதன் நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே. சரி, YouTube என்பதை எப்படி மொழியாக்கம் செய்யலாம். இதோ என் சிறு முயற்சி.

Tube என்பது எதைக் குறிக்கிறது? தொலைக்காட்சி என்பதை ’ட்யூப்’ என்று தெரு வழக்கில் கூறும் வழக்கம் ஒன்று உண்டு. அப்படியாய் இது வந்திருக்கலாம். அல்லது அறிவியல் வழியில் சிந்தித்தாலும், Cathode Ray Tube - CRT என்பதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் காட்டப் பயன்படுத்தப்படும் கருவி. அப்படிப்பார்த்தாலும் அது தொலைக்காட்சியையே குறிக்கிறது.

என்றால் “உன்-தொலைக்காட்சி” என்று YouTube ஐ மொழிமாற்றம் செய்யலாம். ஆனால் அது அத்தனை சுகமானதாய் எனக்குப்படவில்லை. என்றால் இந்தப் பொருள் வரும்படியாய் ஒவ்வொரு சொற்றொடராய் நாம் முயலலாம். முதலில் உன் என்பதை தமிழின் மறபுக்கு ஏற்ப உங்கள் என்று மாற்றிக்கொள்வோம்.

உங்கள் காட்சி
உங்கள் படம்
உங்கள் திரை

இதில் உங்கள்திரை என்பது கொஞ்சம் எளிமையாகவும் பொருள் தருவதாகவும் சுகமாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

YouTube உருவாக்கப்பட்டதே நமக்காக நம்முடைய காணொளிகளை வெளியிடுவதற்காகத்தான். ”உங்கள் விருப்பம்” என்ற நிகழ்ச்சியைப்போல் இது உங்கள்திரை. அப்படியான நம் திரையை நாம் ஊருக்குக் காட்டி மகிழ்கிறோம்.

குறுந்திரை, குறுங்காணொளி என்பன நல்ல மொழிபெயர்ப்புகள்தாம் என்றாலும் சின்னத்திரை என்பதன் தொடர் சொல்லாட்சியாகத்தான் படுகிறது.

ஆகவே YouTube என்பதை உங்கள்திரை என்று கூறலாம் அல்லது உங்கள்காணொளி என்றும் கூறலாம் அல்லது இரு சொற்களையுமே இடம்பார்த்துப் பயன்படுத்தலாம்.

சிந்தனை ஓர் எல்லைக்குட்பட்டது


சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?


 
சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது, சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது. அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.

பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே

எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்
*****இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?

அறிதலில்லா அறிதல் கவிதை நூலுக்கான என் முன்னுரை


இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?' என்று கேட்கிறார்கள் சிலர்.

என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக 'இல்லை' என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ 'விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்' என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் 'இன்று கடிதம் இல்லை' என்று அவர் சொல்லமாட்டார் 'அவசியம் நாளை தருகிறேன் தம்பி' என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.

தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?

உயர்வானவற்றை உயர்வான நடையில் எழுதுவதுதானே சிறப்பு.


உயிரின் மொழி
மொழியின் உயிர்
கவிதை

இப்படி நான் என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே எழுதிவிட்டேன். இதை உணர்ந்துகொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களின் அறியாமையின்மீது உண்மையான அக்கறைகொண்டு நான் இதை இங்கே எழுத வருகிறேன்.

மொழியின் உயர்வான நடையில் தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய் ஆகிவிடாதா?

*

இதுவரை நான் நான்கு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். அனைத்தையும் நான் கனடா சென்றபின்தான் வெளியிட்டேன். இந்த 2010 நவம்பரில் இரு கவிதைத் தொகுதிகளை வெளியிடுகிறேன். இந்த முறை முன்பு எப்போதும் அமையாத ஒரு தித்திப்பான வாய்ப்பு என் கவிதைகளுக்கு அமைந்திருக்கிறது. இந்த இரு நூல்களையும் இரு கவிஞர்கள் தங்களின் கவிதைக் கைவண்ணத்தில் தொகுத்து பதிப்பிக்கிறார்கள்.

கவிஞர்களே கவிதை நூல்களுக்குப் பதிப்பகத்தார்களாய் அமைவது எப்படி?

தாய் தன் முதல் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவதைப் போன்ற சிறப்பல்லவா?

கவிஞர் சுதீர் செந்தில் இந்த என் 'அறிதலில்லா அறிதல்' தொகுப்பைப் பதிப்பிக்கிறார். கவிஞர் ரமணன் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்' என்ற கவிதை நூலைப் பதிப்பிக்கிறார்.

அட... எனக்குத்தான் எத்தனை ஆனந்தம்? என் உதிரிப் பூக்களைக் கவிதைப் பொன் விரல்களல்லவா விழா மாலைகளாய்க் கட்டுகின்றன!

கவிஞர் சுதீர் செந்தில் அவர்களின் ’உயிர் எழுத்து’ பத்திரிகை என் எழுத்தையும் உயர் எழுத்தாய் அங்கீகரித்து நூலாய்ப் பதிப்பக்கச் சம்மதித்ததற்கும் அதற்குத் துவக்கப் புள்ளியாய் இருந்த கவிஞர் ரத்திகா அவர்களுக்கும் என் நன்றிகள் சீருடையணிந்த பள்ளி மாணவர்களின் ஊர்வலமாய்...

இலக்கியம் ஊட்டி மனிதநேய இதயத்தோடு என்னை உயர்த்தி வளர்க்கும் தமிழுக்கும் நிம்மதி தீபங்களை அடுக்கடுக்காய் ஏற்றி வாழ்வொளி தரும் கவிதைகளுக்கும் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

என் கவிதைகளுக்கு முத்தங்கள் ஈவதற்காகவே தங்களின் இதழ்களில் தாக ஈரம் நிரப்பிக்கொண்ட என் கவிதைகளின் காதலர்களுக்கு என் கவிதைகளின் பாராட்டு முத்தங்கள் அந்த நெடுவான நட்சத்திரங்களின் எண்ணிக்கையில்...

குழந்தை பிறந்த அந்த நொடியே அது அழுவது ஒரு கவிதை. அதை அப்போதே கேட்க ஆவலோடு வாசலில் இதயம் துடிக்க சில உயிர்கள் காத்துக்கிடக்க, அந்தப் பிஞ்சுக் கவிதையை ஏந்தி கம்பீரமாய் ஆடிவரும் காற்று எத்தனை பாராட்டுக்குரியது? அதுபோல என் கவிதைகளை நான் எழுதிய அதே கதகதப்போடு அப்போதே அச்சேற்ற இனிய மடிதரும் இணையத்துக்கு என் ஒப்பில்லா நன்றிகள்.

அன்புடன் புகாரி
நவம்பர் 2010, கனடா
anbudanBuhari@gmail.com
001-416-500-0972

கவிஞர் க.து.மு.இக்பால் சிங்கையைச் சேர்ந்த மூத்த கவிஞர்களுள் ஒருவர். ’அன்புடன்’ வழியாக எனக்கு அறிமுகம் ஆனார்.  ’காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ என்ற என் நூல் எங்கே கிடைக்கும் என்று கேட்டிருந்தார். ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு ஒரு வழக்கம். எந்த நூலைக் கையில் எடுத்தாலும் மனம் போன போக்கில் ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்புவார். அதை அப்படியே வாசிப்பார். அதுதான் அவர் பார்க்கும் ஒரு சோறு பதம். அப்படி பிரித்து வாசித்த அடுத்த நொடி அவர் எனக்கு எழுதிய மடல்தான் இது.

*
அன்புக் கவிஞர் புகாரி அவர்களே

உங்களின் “காதலிக்கிறேன் உன்னை எப்போதும் “ கிடைத்தது.. மிக்க நன்றி..
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள்போல என்ன வயது ஆனாலும் நாம் காதலில் காணாமல் போகிறோம்....

“ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள்
தொலைந்து போகலாம்..
ஆகாயமே தொலைந்து போகும்
நிகழ்வுதான்
காதல் “

கண்சிமிட்டும் உங்கள் கவிதை நட்சத்திரங்களிடம் நான் “தொலைந்து” போவேன் போல் தெரிகிறது

அருமை கவிஞரே !
வாழ்த்துக்களுடன்

க.து.மு.இக்பால்

உங்கள் கவிதைகளும் காதலிகளே..

டிசம்பர் 12, 2010

விழா - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்சென்னை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

நவம்பர் 21 2010 பாரதீய வித்யா பவன் மைலாப்பூர்

திரிசக்தி பப்ளிகேசன்ஸ்
டாக்டர் சுந்தர்ராமன்
இசைக்கவி ரமணன்
கவிஞர் கபிலன் வைரமுத்து
கவிஞர் ரத்திகா
கவிஞர் புகாரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும் முன்னுரை - காதல் வயதோடு சம்பந்தப்பட்டதா?


காதலிக்கிறேன் உன்னை எப்போதும் முன்னுரை

காதல் வயதோடு சம்பந்தப்பட்டதா? ஆம் என்றால், காதல் உடம்போடு சம்பந்தப்பட்டதா என்ற அடுத்த கேள்வி எனக்கு உடனே எழுகிறது!

காதல் உடம்போடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று கூறுவோருக்கு காதல் வயதோடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்றுதான் ஆகிறது.

ஆனால் காதல் மனதோடு சம்பந்தப்பட்டது என்ற தெளிவினைப் பெற்றவர்களுக்கு காதல் வயதோடு சம்பந்தப்பட்டது என்ற தவறான கருத்து எழுவதே இல்லை.

இளமை வயதோடு சமந்தப்பட்டதா? ஆம் என்றால், இளமை உடம்போடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்றாகிறது. இங்கே மனதை மறந்துவிட்ட கோணம் ஒரு கோணல் என்பது எத்தனை பேருக்குப் புரிகிறது?

என்றும் இளமையாக இருப்பது என்றால் எப்படி? இளமை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று ஆகும்போதுதானே அது நிகழக்கூடும்?

இந்தப் பிரபஞ்சம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? என்றால் அது முதுமையானதா? இயற்கை என்றென்றும் இளமையானதல்லவா?

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒவ்வொன்றும் என்றென்றும் இளமையானதல்லவா?

காதல் மனித மனங்களைப் புதுப்பிக்கவில்லையா? என்றால் அங்கே இளமை எப்படி இல்லாமல் போகும்?

காதல் என்பது உடலும் உடலும் சேரும் சில நிமிடக் கூத்தா? அல்லது காலமெல்லாம் உள்ளக் காட்டில் உதிராமல் வாசம் வீசிப் பூத்துக்கிடக்கும் மல்லிகைக் கூட்டமா?

நான் கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத அமர்ந்ததில்லை. என் கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று முடிவெடுத்து என்னை இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன.

அப்படி எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.

ஆகவே காமத்துப்பால் எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால் இயற்றுவதும் என் கையில் இல்லை. எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது.

அப்படி எழுதப்பட்ட காதல் கவிதைகளைத் தொகுத்து 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்' என்ற தலைப்பில் காதலோடு வெளியிடுகிறேன்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளை நான் எழுத எழுத இணையத்தின் உடனடிப் பிணைப்பால் எழுதிய பொழுதிலேயே வாசித்து நேசித்த இளமை மிகு காதல் உள்ளங்கள் இப்படி ஒரு தொகுப்பை நான் உடனே வெளியிடவேண்டும் என்று அடிக்கடி அடிக்கடி என்னை அன்போடும் அவசரத்தோடும் கேட்டுக்கொண்டன.

அவர்களுக்கும் இந்த நூலை இத்தனை சிறப்பாகத் தொகுத்து வெளியிட பாசத்தோடும் ஆர்வத்தோடும் முன்வந்த திரிசக்தி பதிப்பகத்தின் பெருஞ்சக்தி ஆசிரியர் கவிஞர் ரமணன் அண்ணா அவர்களுக்கும் என் நன்றிகள் ஆயிரமாய் ஆயிரமாய்....

என் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்தோடும் உணர்வுகளோடும் உட்கார்ந்து தேனுறிஞ்சிச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி ரசிகர்களுக்கு என் கவிதைகளின் உயிர் நிறைக்கும் நன்றிகள்.

அன்புடன் புகாரி
நவம்பர் 2010, கனடா

YouTube திருச்சியில் ’அறிதலில்லா அறிதல்’ வெளியீடுகவிதை எழுதுவது இயல்பானது. அதை நூலாய் இடுவது சிரமமானது. அந்த நூலை பாராட்டுபவர்களின்முன் வெளியிடுவதோ மிகவும் இனிமையானது.

சேவியர் விமரிசனம் - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.

கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.

சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.

கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.

இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.

காதலில்லாமல் எப்படி
ஒரு நொடி நகர்த்துவது ?

என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !

காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.

வேகமாய் ஓடிக் கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்,
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்


என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.

“நேரம் போவதெங்கே தெரிகிறது ?
உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?

எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது.
எதைக் கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய் ?


நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.

புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.

அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.

குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன. உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.

புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.

இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.

(கவிஞர் சேவியர்)

நன்றி சேவியர் - அன்புடன் புகாரி
உயிரை உயிரில் கரைக்க
ஓடோடி வந்தேன்
அங்கே உயிரே இல்லை

பொழுதும் மாறும் மாய நெஞ்சோடு
போராடும் கானல் உயிரிடம்
உயிரின் வேர்களுக்கு
நீர் எப்படிக் கிடைக்கும்

என் சொர்க்கங்களில் சில
மறைத்து நிற்கும் உன் திரைகளைத்தாண்டி
என்னிடம் நீள்கின்றனவே
அவற்றை எப்படிப் பொசுக்கப் போகிறாய்

தடுப்புகளைக் கிழித்துக்கொண்டு
உன் விழிகள் பேசும்
மெய் மொழிகளை
எப்படி அழித்தெடுப்பாய்

ஒரு முறை விரிய ஒரு ஜென்மம் மலர
என்று எனக்கு ஜென்மங்களை அருளிய
இதழ்கள் இன்றும் பூப்பதை
எப்படிக் கிழித்தெறிவாய்

எழவும் மறுக்கும் கால்களோடும்
இயங்க வெறுக்கும் இதயத்தோடும்
நான் வரவில்லை நீ போ என்று
கைக்குழந்தையாய்க்
கால்கைகளை உதைத்துக்கொண்டு
ஓங்கி அழும் உயிரோடும்
உன்னைவிட்டு விடை பெற்றேன்

ஆனாலும்
சொர்க்கமும் நரகமும் கட்டிப்புறளும்
இந்த விளையாட்டைத்தானே
இப்போதும் நான் விரும்புகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****
82

நெஞ்சு நிறைய
கண்ணீரைக் கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்

மூச்சுவிட முடியாமல்
மூழ்கிக் கிடக்கிறது
இதயம்

நீரில் விழும் எல்லாமும்
எடை இழக்கும் என்பார்கள்
உன் கண்ணீரில் விழுந்த
என் இதயம் மட்டும்
கனமாய்க் கனக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி
81

நான் உயிருக்குயிராய்க்
காதலிக்கும் உன்னிடம் கேட்டேன்
ஒரு நாள்கூட நீ என்னைக்
காதலித்ததில்லையா
என்று

நீ சொன்னாய்
யோவ், ஒரு நாள்கூட
நான் உன்னைக்
காதலிக்காமல் இருந்ததில்லையா
என்று

காத்திருந்த கண்ணீர்
சட்டென்று இமைக்கரை ஏறி
எரிமலைக் குழம்பாய்ப் புரள்கிறது

சரி போடீ
உன்னிடம் பேசி
ஒரு பிரயோசனனும் இல்லை
என்று அழுகிறேன் நான்

என்னை மன்னிச்சிடுய்யா
என்று கூறி
என் உயிர்த் தோட்டம்
கடந்து
பறந்து
போயே போய்விடுகிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்பின் தரிசனம்

அன்பு வேண்டுமென்று
ஆண்டவனிடம் கேட்டேன்
காத்திருந்தேன்
ஆண்டவன் வேண்டுமென்று
அன்பிடம் கேட்டேன்
தரிசிக்கிறேன்
80

ஒரு குண்டு மல்லியை
அதன் மென்னிதழ் நோகாமல் கிள்ளி
என் சட்டைப்பைக்குள்
கடத்திக்கொண்டு கிறக்கத்தோடு
நடந்த நாட்கள்

விரல்கள் பூ மல்லியில்
விழிகள் வானமல்லியில்

நிலாக் குட்டியை
வாடீ என்று வாரியணைத்து
வருடிக்கொண்டே
என் வாலிப வாழ்க்கை
கனவுகளுடன் மிதக்கும்
என்றேன்

இன்றுமுதல்
நிலாவை நான் வெறுக்கிறேன்
என்றாள் அமைதியாக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
79

நானொரு ரகசியம்
சொல்லட்டுமா என்றேன்
என் ரகசியம்
என்னை நச்சரிக்க

சொல் சொல் என்றாள்
கண்களில் தீபம்
அசைய

வேண்டாம் இப்போது
பிறகு சொல்கிறேன் என்றேன்
தயக்கம் என்னைத்
தயங்காமல்
உறிஞ்சியதுபோக
மிஞ்சிய நெஞ்சால்

பிறகு எப்போது?

விட்டேனா பார் என்று
பார்வையாலேயே
ராஜ தூண்டில் சுழற்றினாள்

நீ சொல்லப் போவது என்னவென்று
எனக்குத் தெரியும் தெரியும்
அதைச் சொல்லித்தொலையேன்
சீக்கிரம் சீக்கிரம்
என்ற தவிப்பான தவிப்பு
தவித்துக்கொண்டிருந்தது
அவள் மாபெரும்
மைவிழிகளில்

பயம் தந்த தைரியத்தில்
பவ்வியமாய் விலகினேன்
பிறகு எப்போது என்று
பிறகு சொல்கிறேன் என்று
பிதற்றிக்கொண்டே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
78

சொர்க்கங்கள் எனக்கு
இரண்டு

ஒன்று
உன் இடது விழி
இரண்டாவது
உன் வலது விழி

கொஞ்சம்
விடுமுறை கொடுக்கலாமா
உன் சொர்க்கங்களுக்கு
என்றேன்
உள்ளே பதுக்கிவைத்த
உணர்வுகள்
உற்சாகத் தோகைவிரிக்க

அவ்வப்போது
இமைகளைப் படபடக்கச்செய்து
விடுமுறை
கொடுக்கத்தானே செய்கிறாள்
போதாதா என்றாள்
பாசாங்குக்காரி

போதாது போதாது
அவற்றுக்கு
ஓர் அவசர விடுமுறை
கொடுக்கவேண்டும் இப்போதே
என்றேன்
நெற்றிப் பொட்டில்
கெட்டிமேளம் கொட்ட

கவலையில்லை
அது எனக்குப்
பிடித்த விளையாட்டுத்தான்
என்றாள்
கழுத்துக் கரைகளில்
சிலிர்ப்பு நதி சீறிப்பாய

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
77

இழுந்து அணைத்து
கழுத்த்த்த்துக்குள்
புதைந்தால்

இமைக் கதவுகளைச் சாத்திக்கொண்டு
விழிச் சொர்க்கங்களுக்கு
விடுமுறை கொடுத்துவிடுவாள்
என் யாழிசை

இதழ்கள் கவ்வி
உயிர் உறிஞ்சினால்
இன்னுமின்னும் இறுக்கமாய்த்
தன் விழிச் சொர்க்கங்களைப் பூட்டிச்
சாவியைத் தூர எறிந்தேவிடுவாள்

இதற்குமேல் எழுதி
அவளைப் பாடாய்ப்படுத்த
நான் தயாராய் இல்லை.

காதல் தவிப்பே என்றாலும்
என் கண்மணி துடிப்பதை
என்னால் ஏற்க முடிவதில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
76

என் விரல்களை
உன் விரல்களில்
கோத்துப் பார்த்தேன்

யாழிசை மொழி பொழியும்
என் தேவதையே

அந்த அழகை நான்
சொல்லவும் வேண்டுமா

அசந்துதான் போனேன்
உயிர் துடித்து
உடல் நிறுத்திக் கிடக்கும்
சிலையாக

நான் மட்டுமா
என் செல்லமே
நீயும்தான்

அப்படியே ஓர் புகைபடம்
எடுத்து பத்திரப் படுத்திக்கொள்வோமா
என்று நம் ஆசைகள்
நம்மை அவசரப்படுத்தின

ஆனால் என் இதயமோ
வேண்டாமடா வேண்டாம்
வெறும் புகைப்படம் வேண்டாம்
இந்த விரல்களை
உனக்கே உனக்கானதாய் ஆக்கு
என்று கெஞ்சிக் கூத்தாடியது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
**** 75

என் உயிரின்
அத்தனை துளிகளிலும்
கண்ணீராய் வாழும்
என் உயிரே

என்னை நிராகரிப்பது
உன் உரிமை
எப்படி வேண்டுமானாலும்
என்னை
நிராகரித்துக்கொள்
ஆனால்
என் கண்கள் தொடும்
தொலைவிலேயே
இரு

உன் மீதான
என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது

எனக்குள்
அதை ஊட்டிவிட்டவள்
நீதான்

நெஞ்சில்
எனக்கான அத்தனை
காதலையும் வைத்துக்கொண்டு
நிராகரிப்பதாய்
உதடுகளால் நடிக்கிறாய்

ஒன்று மட்டும் புரிந்துகொள்
நீ விரும்பாத எதையும்
நான் விரும்ப மாட்டேன்

நீ வாழவே
நான் வாழ்வேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****74

நீ
என்னைக்
கோவிலுக்கு
அழைத்துச் சென்றாய்

தெய்வத்தின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
கோவிலுக்குச் சென்ற
ஒரே பக்தன்
நானாகத்தான் இருக்க முடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
73

வளர
வளரத்தான் நிலவு
பழக
பழகத்தான் அழகு

பார்த்த
மாத்திரத்திலேயே
நீ மட்டும் எப்படி
பேரழகு

உன்னை
முதன் முதலில்
முகர்ந்தபோதுதான்
என் மூக்கு
மூச்சுவிடத் தொடங்கியது

நான்
மூழ்கக் காத்திருக்கும்
படகு

உன்னிடம்
கவிழ்ந்த பின்தான்
என் பயணமே தொடங்கியது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****Top
72

இனி
ஒருபோதும்
கடற்கரைக்கு வராதே

எத்தனை பெரிய
கடல் அது

நீ
எழுந்துபோனபின்னும்
பேரலைகளாய்த்
தாவித் தாவித்
தவிக்கிறது பார்
பாவம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
71

உன்
கண்களில்
மையாகவாவது
என்னை
இட்டுக்கொள்

என்
உனக்காக
கன்னங்கரேல்
என்றாக
எனக்குச் சம்மதம்

உன்
நாவினில்
எச்சிலாகவாவது
என்னை
வைத்துக்கொள்

என்
உனக்காக
நிறமற்றுப் போகவும்
எனக்குச் சம்மதம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****70

இமைத்
துப்பட்டாவோடு
பிறந்த பேரழிகள் கண்கள்
நாகரிகமும் நாணமும்
கொண்ட பண்பு மணிகள்
கண்கள்

இதழ்கள்
கூடினாலும் சரி
இடைகள் கூடினாலும் சரி
நாணம் மிகக்கொண்டு
துப்பட்டாவை இழுத்து மூடிப்
பதுங்கிக் கொண்டுவிடுவார்கள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
69

பூக்கள்
இல்லாப் பூமிக்கு
என்னைப் பொட்டலம் கட்டுங்கள்

வாசனை
இல்லா வெளியில்
என்னை வீசி எறியுங்கள்

நட்சத்திரங்கள்
இல்லா வானத்தில்
என்னை அள்ளிக் கொட்டுங்கள்

கவிதைகள்
இல்லா சூன்யத்தில்
என்னைப் போட்டுப் புதையுங்கள்

புலன்கள்
கழிந்த தேகமாய்
என்னை மாற்றிப் போடுங்கள்

நான்
என் காதலியை
மறக்க வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***69
பாவப்பட்ட முகமூடியே


தப்பான நிமிடத்தில் தவறான முடிவெடுத்து
கற்பிலா நிழல்முகம் பூட்டி
மெல்லச் சுயமுகம் சிதைந்தொழிய
அரிதார முகமாய் மட்டுமே
பரிதாப நிலை கொண்டுவிடும்
பாவப்பட்ட முகமூடியே

எதைச் செய்தாலும் அதை
நீதானே செய்கிறாய்
உன் சொந்த முகங்கொண்டு
செய்யமறுப்பதேன்

ஓ.. நீதான் எத்தனை பெரிய
கோழை என்று நீயே
வெட்கித் தலைமறைகிறாய்

தன்னைத்தான் சாகடிப்போன்
கோழை என்பதை
உன் வேரில் தீமூட்டி
உறுதிப்படுத்துகிறாய் பார்

தலைகெட்டக் கமலவாய் கழிப்பதையெல்லாம்
உன் முகவாய் மொழிந்து குமட்ட
முகமூடி சூடிக்கொண்டாய்
உன்னை நீயே தெருநாய் ஆக்கிக்கொண்டாய்

இட்டுக்கொண்ட மூடிக்கேற்ப
உன் ஜாடியை ஆட்டினாய்
அது உன் நாடிக்கே வேட்டுவைக்க
மூடியாய்மட்டுமே உடைந்துபோனாய்

தன் சொல் சொல்ல தன் முகம் தாரா
கேடுகெட்ட கோழையின் மரணச் செய்தியைத்
தாங்கி நிற்கும் ஓடுதானே முகமூடி
தன் சாவுக்கு தானே ஒப்பாரி வைக்கும்
அவலம் வந்த நிலை காணாயா

இனியாவது சுயம் மீட்டுக்கொள் நண்பா
தற்கொலை வேண்டாமடா
வீரனாய் வெளியில் வா
அதுவுன் தோள்களை வெற்றியாக்கும்
முகத்தைப் பொற்சூரியனாக்கும்
சரித்திரம் அடையாளம் கண்டு
உன் முகக்கீற்றை
வைர வரிகளால் குறித்துக்கொள்ளும்

*

பின் குறிப்பு:

இது புனைப்பெயர் வைத்துக்கொள்வதைப் பற்றியதல்ல. முகமூடி இட்டுக்கொண்டு தன் கருத்துக்கு தன்னையே தகுதியற்றவராக்கிக் கொள்பவர்களைப் பற்றிய கவிதை.

புனைபெயர் தவறல்ல.

பாரதி, கண்ணதாசன், இளையராஜா, பாரதிராஜா போன்ற அனைவரும் முகமூடிகள் அல்லர்.
*****
68

கனடாவில் பிறந்தாலும்
தமிழ்ப் பிள்ளை
தமிழ்ப் பிள்ளைதான்

ஆங்கிலம் அவசியம்
தமிழோ இதயம்

நாக்கு
ஆங்கிலத்தில்
நர்த்தனமே ஆடட்டும்
மூக்கு மட்டும்
தமிழையே சுவாசிக்கட்டும்
68

அன்பே நீ பேசினாய்
என் அடிவயிற்றில் இறங்கி
உன் குரல் குதூகலிக்கிறது

அன்பே நீ சிரித்தாய்
என் ஆயுளின்
அத்தனை அறைகளிலும்
சங்கீதம் கேட்கிறது

அன்பே நீ தொட்டாய்
உயிரின் அத்தனை சந்துகளிலும்
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

அன்பே நீ முத்தமிட்டாய்
மடிவதும் பிறப்பதுமாய்
எனக்குள் பில்லியன் பிறப்புகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
67

சுரக்காத மார் சுரந்து
உனக்காகப் பாலூட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மடியில் அள்ளிவைத்துச்
சோறூட்டிச் சீராட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காலை எழுந்ததும்
உன் தலைகோதி நான் மயங்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

சிணுங்கிச் சிணுங்கி உன்னோடு
பொழுதெலாம் விளையாட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

எண்ணி முடியாமல்
ஈரம் குறையாத இதழ் முத்தமிட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

இடைவெளியும் இடைவலியும்
இல்லாமல் கட்டித்தழுவ
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விட்டுப் பிரியாமலும்
தொட்டு அகலாமலும்
மூச்சோடு மூச்சாகி சுவாசிக்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

உயிரோடு உயிர்வைத்து
ஓருயிராய் உருகி ஒன்றாக
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி


*67

இந்த உலகில்
நம்புவதற்கென்று
ஒன்றே ஒன்றுதான் உள்ளது

அந்த ஒன்றைத்தான்
இன்றுவரை எவரும்
கண்டுபிடிக்கவே இல்லை

நீ
கண்டுபிடித்தால்
அதை
உடனே என்னிடம் வந்து
சொல்

அதை நான் நம்பமாட்டேன்
66

என்னை
அனாதை விடுதிக்கு
அழைத்துச் சென்றாய்

உன் விரல்களை
என் விரல்களால் பற்றிக்கொண்டு
கம்பீரமாய் நடந்து வந்தேன்

அன்றுமுதல்
நான் அனாதை இல்லை
என்றானேன்

காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்

**** 66

சாவு சாவல்ல
சாவுக்குமுன் நிகழும்
போராட்டமே
சாவு
65

விழி வேர்களை உப்புக் கண்ணீர்
ரம்பப் பற்களால் அறுத்தெறிய
கைகளில் விழுந்த என் கண்களை
வாரி எடுத்துக்கொண்டு
ஓடிவந்தேன் உன்னிடம்

அடி பெண்ணே
உன்னால் கழன்று விழுந்தவற்றை
உன்னால்தான் பொருத்தமுடியும் என்று
உயிரழிய மன்றாடினேன்

என் குமுறல்களை
ஓரமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு நீயோ
உன் வாழ்க்கை வளம் பெற்றதற்கு
எனக்கு நன்றிகள் சொன்னாய்

எனக்கென்று உன்னிடம் மீதமிருப்பவை
இந்த நன்றிகள் மட்டுமே என்று
நெகிழ்வோடு கூறி உதடு பிதுக்கினாய்

உனக்கு நான் கவிதைகள் என்ற
நிரந்தரமான ஊன்றுகோல்
கொடுத்திருக்கிறேன் பார் என்று
உன் கருணையை நீயே
போற்றிப் புகழ்ந்துகொண்டாய்

பொற் கைத்தடியால்
நடை பழகிக்கொண்டே நானும்
உனக்கு நன்றி சொல்கிறேன்
நம் நன்றி உணர்வுகள் வாழ்க

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***
64 

அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள்தான் இருக்கிறது படுக்கை
அதில் மலர்ந்தால்தான் பிடிக்கிறது உறக்கம்

அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் அழவேண்டும்
மன அமைதி அதில்தான் மீளவேண்டும்

அழுகைதான் குடை
அதன் அடியில்தான் இளைப்பாறும்
வாழ்க்கையின் நடை

கண்களில் நீர் வந்து முட்டினால்
நிம்மதி நெஞ்சின் கதவு தட்டும்
கன்னத்தில் ஒரு சொட்டு உதிர்கின்ற போது
உயிருக்குள் அமைதி விதை நட்டுப் போகும்

எது வந்து மடி சேர்ந்தபோதும்
அது நில்லாமல் ஒரு நாளில் போகும்
மாற்றந்தான் வாழ்க்கையின் மாறாத நியதி
அழுகைதான் அதற்கான பயணத்தின்
ஊர்தி

கோழையின் கூடாரமல்ல
அழுகை கருணையின் கோபுரம்
தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய் அழப்போவதே
இல்லை

ஒவ்வோர் அழுகையின் முடிவிலும்தான்
ஓர் உறுதியான மனவீரம்
வேர் விடுகிறது
64

இன்று காலை நீ அழைத்தாய்
என் தொலைபேசி
அதை எனக்குத் தெரிவிக்கவில்லை

அது தெரிவித்திருந்தாலும்
என் செவியை என்னால்
அதற்குத் தந்திருக்க முடியாது

ஏனெனில் என் செவி அப்போது
என்னிடம் இல்லை

வார்த்தைகளால் பற்றியெரிந்த
முதல் நாள் நெருப்பு

அதைக் கொளுத்திக் கொளுத்தி
ஈமக்கிரியையும் பொறுப்பாய்ச்
செய்து முடித்துவிட்டதை
என் தொலைபேசி
தெளிவாகவே அறியும் என்பதால்
என் தொலைபேசி
எனக்கு உன் அழைப்பைச்
சொல்லவில்லை

குற்ற உணர்வில் இன்று நான்
என் தொலைபேசியிடம்
கடிந்துகொண்டேன்

ஒருநாளும் இப்படி நீ
எனக்குச் செய்யமாட்டாயே
நேற்று மட்டும் ஏன் அப்படிச்
செய்தாய் என்று

எனக்கும் இதயம் இருக்கிறது
என் இதயமும்
நின்றுபோய்த்தான் இருந்தது

உன்முன் யார் அழுதாலும்
உன் உயிரைக்
கழற்றிக் கொடுத்துவிட்டு
ஒடுங்கிக் கொள்கிறாயே

உன்னுடனேயே இருக்கும்
என் உணர்வுகளையும்
நீ புரிந்துகொள்ளக் கூடாதா
என்று என் தொலைபேசி
என்னிடம் திருப்பிக் கேட்கிறது
நான் என்ன செய்யட்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
63

விடைபெற்ற ஊமைக் கணங்கள்
உடைபட்டு உதிர்கின்றன
ஊன உணர்வுப் பொதிகளாய்
உயிர்மூச்சுப் பாதைகளில்

நீ நிறுத்தி வைத்த இடத்திலேயே
நெடு நேரமாய் நான்
நின்று கொண்டிருக்கிறேன்
அதுவும் எனக்கு
விருப்பமானதாகவே இருக்கிறது

உன் வலக்கரத்தை என் இரு
கரங்களுக்கும் இடையில் வைத்து
மூன்று கரங்களுடன் நான் வணங்கியது
நம் காதலைத்தான்

உன்னை நான் சந்தித்தது
எதேச்சைச் செயலென்று நம்பிக்கொண்டிருக்காதே

யுகம் யுகமாய்த் திட்டமிட்டு
நாம் அறியாத மர்மக் குறிப்பேட்டில்
குறித்து வைக்கப்பட்ட தேவ சந்திப்பு அது

மென்மைகள் கூடி
தேர்வு செய்த மென்மை
மென்மையாய்ப் பெற்றெடுத்த மென்மை நீ

உன் குதிகால் பூவெடுத்து
நீ நடப்பதைக் கண்டு
என் விழிகள் வியப்பதை நீ
வேடிக்கை பார்ப்பாய்

எனவேதான்
என் மூச்சுக்காற்றும் உன்னைக்
கருக்கிவிடுமோ என்ற கவலையில்
எப்போதும் இப்படியே நான்
என்னை மட்டுமே வதைத்துக்கொண்டு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *
63 வால் வீச்சு

புதுத்துணி வெட்ட
பொல்லாக் கத்தரியும் அழும்
உனக்கு மட்டும் ஏன் நண்பா இத்தனை
ஆனந்தம்

முற்றும் அறிந்தவன் மேதினியில் இல்லையென்ற
பழைய தத்துவம் வேண்டுமானால் ஓர் ஓரமிருக்கட்டும்
புல் தொட்டுப் பொதிகைவரை உனக்குப்
பலவும் தெரியும்தான் ஒப்புக்கொள்கிறேன்
அவற்றோடு உன் நெஞ்சத் தெருக்களில்
பண்பு ரதங்களும் மெல்ல
ஊர்ந்து வந்தாலல்லவா நீ மனிதன்

வெட்டரிவாளாய் நீட்டி நிற்கும் உன்
கொம்புகளைக் கொஞ்சம்
நறுக்கிக்கொள்ளக் கூடாதா
புதியவனின் முகத்தைக் குதறுவதால் மட்டுமே
உன் புத்திக்கூர்மை சபைச்சுடர் வீசிவிடுமா

உன்னிலும் இளையவனிடமிருந்து
ஓர் ஒப்பற்ற கலைவெள்ளம் பொங்கிவந்தால்
நீயேன் தட்டுத் தடுமாறி தறிகெட்டுக் கொதிக்கின்றாய்
நீ சிந்தித்தும் காணாததை
உன் இளையவன் எளிமையாய்க் காண்பான்
என்று உனக்குத் தெரியாதா

வஞ்சனை மகுடி ஊதி
வார்த்தைகளைக் கருநாகமாய்
வளைத்துப் போட்டு வம்புக்கிழுக்கிறாயே
பெட்டிக்குள் அடங்கு நண்பா

உன் அழிவை உன் வால் வீச்சால்
நீயே வரவேற்காதே
காலம் வாள் வீசும்போது
உன் வாலோடு சேர்த்துத் தலையும்
துண்டாடப்படும்

***62

நான் வில்லனா கதாநாயகனா

எத்தனையோ நான்
கெஞ்சிக் கூத்தாடியும்
”இவர்கள்” எனக்கு
வில்லன் வேடம்தான்
கொடுத்தார்கள்

கதறி அழுதும்
ஒரு மாற்றமும் இல்லை

நான்
எதுவுமே கேட்கவில்லை
”அவர்களோ” எனக்கு
கதாநாயகன் வேசத்தையே
கொடுத்தார்கள்

எப்போது நீங்களும் என்னை
வில்லனாய் ஆக்குவீர்கள் என்ற
பழைய பயத்தில்
ஐயக் கேள்வி கேட்டுக்கொண்டே
நிற்கிறேன்

எப்படியானாலும்
எங்கும்
நடிக்கத்தான் வேண்டும்
என்பது மட்டும்
வாழ்க்கை நாடகத்தின்
அசைக்கமுடியாத கலைதான்
62

ஆணும் பெண்ணும்
கலந்த முழுமையே கடவுள்

பிளந்த பகுதிகள்
ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதால்
இணையும்போதுதான்
தன்னைக் காணும் என்பதால்
ஆணாய் பெண்ணாய்
பிரிந்த பிறப்புகள் மண்ணில்

துளி வேற்றுமையும் இன்றி
முழுமொத்த ஈர்ப்புடன்
இரு பாதிகள் இணையும் போதுதான்
மீள்கிறது தெய்வம்

ஈர்ப்பில்லாமல் எவரும் இணையாதீர்
வெட்டிச் சேர்க்கைகள்
இயற்கை அவமதிப்பாகும்

சரியான பாதியும்
சரியான மீதியும் சேரும்வரை
உறவில் முழுமை இல்லை

அந்த இறைமை கிட்டும்வரை
உயிருக்கு உயிரில்லை
பாதிகள் அலையும் பரிதவித்தே எப்போதும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
61

கம்பிகளுக்குப் பின் அலையும்
கைதிகளைப்போல் அலைகின்றன
உன் கண்கள்

இதய நடுக்கத்தின் அதிர்வுகளைக்
கசிந்த வண்ணம் இருக்கின்றன
உன் கைவிரல்கள்

ஆழ்மன ஆசைகளைப் படம்பிடித்துக்காட்டும்
ஆப்பிள் திரைகளாய் ஒளிர்கின்றன
உன் கன்னங்கள்

மௌன கன்னிமரா நூலகத்தின்
அத்தனை நூல்களுமாய் விரிந்துகிடக்கின்றன
உன் இதழ்கள்

மறைக்க நினைத்து
மறைக்க நினைத்து
மேலும் அதிகமாக வெளிக்காட்டாதே

மேகம் முழுவதும் சூல்கொண்ட மழை
மனம் முழுவதும் ஆக்கிரமித்த காதல்
வெளியேறியே தீரும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
60

எதுவுமே இல்லாதபோது
தனிமையின் வெறுமை குத்தும்
முள்ளின் வலி

காதல் வந்து
ரத்தத்தில் சித்தாடும்போது
அதைக் காதலியிடம்
எப்படிச் சொல்வதென்று தவிக்கும்
நெருப்பு வலி

ஒருவழியாய்க்
காதல் உறுதி செய்யப்பட்டபின்
எப்போதும் அவளுடனேயே
இருக்க வேண்டுமே என்ற
உறங்கா வலி

ஒன்றுசேர முடியாத
கையாளாகாதத் தனங்கள் முகாரிபாட
தொட்டதை விடமுடியாமல் துடிக்கும்
தாங்கவே முடியாத
தொடர் வலி

எங்கிருந்தாலும் வாழ்க என்று
பேரன்புக் காதல் மனத்தோடு
வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும்
உள்ளுக்குள் உயிர் போகும்
மரண வலி வலி வலி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
59

நம்மைவிட்டு
ஓடிக்கொண்டிருக்கும் நதியை
நாம் காதலிக்கிறோம்
காலடியில் கிடக்கும் குளம்
நம் முகத்தைப் பிரதிபளித்துக்கொண்டிக்கிறது

ஓடிவந்த வேகத்திலேயே
திரும்பிப்போய்விடும் அலைகளை
நாம் காதலிக்கிறோம்
காலடியில் கிடக்கும் மணல்வெளி
நம் சுவடுகள் ஏந்திக்கிடக்கிறது

கண்களுக்கு எட்டி
கைகளுக்கு என்றுமே எட்டாத
உச்சிவான வெண்ணிலவை
நாம் காதலிக்கிறோம்
சூழ்ந்திருக்கும் இரவு நம் நித்திரையைத்
தாலாட்டிக்கொண்டிருக்கிறது

நம்மைக் காதலிக்காத ஜீவனோடு
நாம் காலமெல்லாம்
கனவுகளில் வாழ்வதும்
நாம் காதலிக்கும் ஒரு ஜீவன்
நம்மைவிட்டுத் தொலைதூரம் கிடப்பதும்தான்
நாம் காணும் வாழ்க்கை என்றால்
அதில் துக்கம் தவிர
வேறென்ன இருக்க முடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*59 நிழல்கள்


*
நம்பிக்கை நிழலில்
ஓர்
இன்பதின் நிழல்
காண
காலத்தின் நிழலில்
நின்றேன்

தினம்
துன்பத்தின் நிழல் தந்த
சாவின் நிழலில்
நான்
வாழ்வின் நிழல்
கண்டேன்

*


நான் என் முதல் தோல்வியைச் சந்தித்ததும் எழுதிய கவிதை இது. அப்போது நான் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கவிதை அப்போதைய என் மனோநிலை. அதை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

பிறகெல்லாம் இந்தக் கவிதை நம்பிக்கையைத் தரவில்லை, எனவே இது நல்ல கவிதை இல்லை என்று முடிவெடுத்து கிழித்துப்போட்டுவிட்டேன்.

ஆனால் இன்னொரு சோகம் வந்து தன் முரட்டுக்கொம்புகளால் முட்டியபோது இந்தக் கவிதையின் வரிகள் தானே நினைவுக்கு வந்துவிட்டன.

வாழ்வில் நாம் ஏராளமான சோகங்களை எல்லா நிலைகளிலும் சந்திக்கத்தானே வேண்டும்?

அப்படி ஆட்டிப்படைக்கும் ஒரு கவிதையை நான் ஏன் கிழித்தெறிய வேண்டும்?

என் ஆறாவது கவிதை நூலிலேயே ஏற்றிவிட்டேன்.

58

உன் நகத்தில் கீறலென்றாலும்
என் உயிரில் எரிமலை விழுந்ததாய்
துடித்துப் போகிறேன்

இந்த அன்பை
எனக்குள் வாரி இறைத்தது
உன் அன்புதானே அன்பே

இந்தப் பாசத்தை
எனக்குள் அள்ளிப் பொழிந்தது
உன் பாசம்தானே கண்ணே

இந்த நேசத்தை
எனக்குள் கொட்டிக் குவித்தது
உன் நேசம்தானே செல்லமே

இந்தப் பிரியத்தை
எனக்குள் பொங்க வைத்தது
உன் பிரியம்தானே மலரே

இந்த உயிரை
இப்படித் தவிக்கச் செய்தது
என்னிடம் இருக்கும்
உன் உயிர்தானே உயிரே

இப்படி எழுதும்போதே
என் கண்களும் எழுத வருகின்றன
கண்ணீர் மையெடுத்து

உற்றுப்பார்
உனக்காக உதிரும்
இந்த விழி முத்துக்களில்
என் உயிர் துகள்களாய் மிதக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
57

பிரிவதானால்
பிரியட்டும் உயிர்
நீ பிரியாதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
56

என் நேற்றைய இரவு
ஒரு கேள்வியோடு விழித்திருந்தது

கேட்டால் மெய்யான பதில் வருமா
என்ற ஐயம் உறங்கச்செல்லும்போது
நான் விழித்துக்கொண்டேன்

எதுவும் கட்டாயமில்லை என்னிடம்
இதயத்தின் தனி விருப்பமே
முதன்மையானது என்பதை
நடுவராய் அமர்த்துகிறேன்

எந்தக் கணக்கு
கழித்தல் குறிகளையும்
வகுத்தல் குறிகளையும்
என்முன் உன்னை இடவைத்தது
என்ற கேள்வியைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறேன்

தண்டனை தந்து விடுவித்துவிடலாமா
அல்லது ஈரமாய்ப் பழகிய உயிர் நெகிழ்வை
தீர்ப்பாய் அளித்து மீண்டும் உன்
இதயச் சிறையிலேயே அடைத்துவிடலாமா
என்று இன்றாவது சொல்

மரணம் ஒரு இருக்கையிலும்
வாழ்க்கை மறு இருக்கையிலும்
காத்திருக்கின்றன உன் தீர்ப்புக்காக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****56

வளைகுடாவில் வாங்கிய காகிதத்தில்...


உண்மையில் இது கவிதையல்ல நான் என் மகளுக்கு எழுதி அனுப்பிய முதல் கடிதம். ஒரு ரோஜா நிற காகிதத்தில் மை பேனாவால் எழுதி சவுதி அரேபியாவில்லிருந்து அனுப்பினேன். இப்போதும் வாசித்து நெகிழ்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வுதேடி பாலைவனம் வந்த ஒரு தந்தையின் வலிகளைப் படம்பிடித்துக் காட்டும் காட்சிப்பேழை இது. எங்கோ இருந்து கொண்டு தன் சுற்றங்களுக்காக உழைக்கும் முகம் தெரியாத பல அப்பாக்களுக்கும் சகோதரர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.

பனிரோஜா வம்சத்தின்
ஒற்றை இளவரசியைப் போல்
பிறந்த என் மகளே மகளே
நலமா நலமா

நீ
பிறந்த
பொற்பொழுதான
அப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்
முதல் பிறந்த நாளான
இப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்னை மறந்தல்ல
நான் இங்கே வாழ்கிறேன்
உன் நலன்
நினைத்துத்தான்
நான் இங்கே தேய்கிறேன்

மூடிவைத்த
மின்னலொளிப் பூவே

என்
மனப்பூ வெளியெங்கும்
உன் சிரிப்பூ மகளே

என்
நினைப்பூப் பரப்பெங்கும்
உன் விழி துருதுருப்பூ
மகளே

உன் தாய்தரும் பாலிலே
பாசமுண்டு

உனக்கென இங்கே
நான்விடும் கண்ணீரிலே
என் உயிருண்டு

உன் மொழியை
எழுத்தாய் எழுதும்
கலையை நான் அறிந்திருந்தால்
நம்மூர் அஞ்சலகம்
என் கடிதங்களால் மூழ்கிக்
காணாமல் போயிருக்கும்

அடக்கி அடக்கி வைக்கும்
என் கொஞ்சல்கள் பீறிட
ஈரமாகும் காற்றலைகள்
ஏழுகடல் தாண்டும்
உன் பஞ்சுமேனியைத்
தீண்டும்

நீ வீரிட்டு அழுதால்
உன் அன்னை
வேதனை கொள்வாள்

அவளுக்குப் புரியாது
என் உணர்வுகளின் அதிர்வுகள்
உன் தேன்கன்னம் தொட்டுக்
கிள்ளிவைக்கும் இரகசியம்

பொன்
மகளே மகளே
நலமா நலமா

உன் கால் உதைக்கும் நெஞ்சில்
கவலை உதைக்கும் வரத்தை
நான் வாங்கிவந்திருந்தாலும்
தேனவிழ்க்கும் பூப்பிஞ்சே
உனை நான்
தேடிவரும் நாளொன்றும்
தூரத்திலில்லை

நீ பிறந்த இந்த நாளில்
வானில்
எத்தனை நட்சத்திரங்களோ
உனக்கு என் அத்தனை
முத்தங்கள்

அன்புடன் புகாரி

#தமிழ்முஸ்லிம்
***55 எது வாழ்க்கை?

பழக்கமில்லாதான்
பாதை அறியா ஊருக்குக்
கடிவாளமில்லாக் குதிரையில்
சவாரி செய்யும் கட்டாய விபத்தா

என்றோ செய்த
பாவ புண்ணியத்தின்
கூலி தினங்களா

இனிவரப்போவதாய் நம்பப்படும்
சொர்க்க நரகத்தின்
அனுமதிச் சீட்டுவாங்க
அலையும் அலைச்சலா

முழுமொத்த மௌனமாய்
முன்னிற்கும் கடவுள்முன்
சத்தமாய்க் கதறியழும்
பக்திப் பரவசமா

உள்மனச் சக்தி திரட்டி
சாட்டையைச் சொடுக்கினால்
சொன்னபடி கேட்கும் சாதுபூதமா

வருவதெல்லாம்
நலம்தான் என்றெண்ணும்
முற்றிய விழியிருப்பின்
பொழுதுக்கும் வசந்தம் பொழியும்
சொர்க்க நீரோட்டமா

கைகாட்டி இல்லாக்
காட்டுச் சாலையில் நின்று
இன்னும் இன்னும் இவைபோல
எத்தனை எத்தனைக் கேள்விகள்

இவற்றுள்
ஒன்றுக்குள்ளேனும்
ஒருவழியாய் ஒன்றிப்போகும்
அல்லல் உயிர்களே

எவரையும் விட்டுவைக்காமல்
ஒருநாள் விழுங்கியே தீரப்போகும்
மரணத்தை முந்திக்கொண்டு
தானே அதனுள்
வீழ்ந்துவிடலாம் என்று
பிறந்த உயிர் ஒவ்வொன்றும்
தன் வாழ்நாளில்
ஒரேயொரு முறையேனும்
இதயப்புயல் வீசிவிடுகிறதென்று
புள்ளிவிபரம் ஒன்று சொல்லியது

ஞான ஒளியடித்து
மூளை முடுக்குகளின்
முடிச்சுகளுக்குள்ளும்
ஊடுருவித் தேடிப் பார்த்ததில்

அன்பெனும் நூல் ஈகையெனும் வால்
கருணையெனும் காற்றில்லாம்
வாழ்வுப் பட்டமோ
இருட்டுப் பரணில்
திருட்டு எலிகளின் பற்களுக்கு
எட்டும் இடத்தில்தான் என்ற
உண்மை நெருப்பு சுட்டது

பிறந்த உயிர்
அத்தனைக்கும் இங்கே
தெளிந்த ஊற்றாய் வாழ்க்கை
கொப்பளிக்கவேண்டாமா

இந்த பூமியெங்கும்
அன்புச் சுடரேற்றி
விருப்புகளை விரும்புவோம்
கருணை மலர் தூவி
வெறுப்புகளை வெறுப்போம்
தவறுகளை மன்னித்து
ஆதரவாய் அணைப்போம்
யாசிக்காதார் கதவு தட்டியும்
குறைவற்றுக் கொடுப்போம்

நிம்மதிதான் வாழ்க்கை
அது நிச்சயம் கிடைக்கும்
என்ற நம்பிக்கை
அதில் முளைக்கட்டும்
55

விழிகள் தந்தாய்
கனவுகளைக் காணவில்லை
இதயம் தந்தாய்
நினைவுகளைக் காணவில்லை
இதழ்கள் தந்தாய்
வேர்களைக் காணவில்லை

கனாக்களற்று
நினைவுகள் மறந்து
வேர்கள் மண்மாறிய பொழுதில்
மூடிய இமைகள் காட்டினாய்
என் உயிரைக் காணவில்லை

மீட்டுக்கொண்டு போக
நான் அடகு கடையா வைத்திருந்தேன்
வட்டி தருகிறேன் என்று
வாட்டி எடுக்கிறாய்

உன்னுடையது என்று
இங்கே எதுவுமே இல்லை
என்னைத் தவிர என்று
குருதிக் கண்ணீர் விரிக்கிறேன்

மாற்றுப் பொருள் எனக்கெதற்கு
என்ற உன் நிராகரிப்புக்கு
பதில் சொல்லத் தெரியவில்லை
திவாலாகிவிட்டேன்

வந்து மூடிவிட்டாவது போ
திறந்து கிடக்க்கிறது
இன்னமும் என் நம்பிக்கை

சாவி தொலைந்த பூட்டாய்
வாய் பிழந்து கிடக்கிறது
மரணக் கதவோரம் என் குற்றுயிர்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
54

நீ ஏற்றிவைத்த
மெழுகுவத்தி நான்
நீ இறக்கிவிட்ட
பச்சைக்குழந்தை நான்

நீ மறந்துபோன
ஞாபகம் நான்
நீ சிந்திக்கவிடுத்த
எண்ணம் நான்

நீ பிரித்துவைத்த
இமைகள் நான்
நீ எழுப்பிவிட்ட
அலைகள் நான்

நீ நீர் மறுத்த
வேர்கள் நான்
நீ தரையில் எறிந்த
நெத்திலி நான்

நீ உறையவைக்கும்
சூரியன் நான்
நீ உலரவைக்கும்
உயிர் ஈரம் நான்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
53

ஒரு பழைய மாலை நேரத்தின்
இளமையில்
என் மனவாசல் கதவுகளைத்
திறந்துகொண்டு நீ
அவசரமாய் நுழைந்துவிட்டாய்

தத்தித் தத்தியும் தாவித் தாவியும்
இடைவிடாமல் நீ
உள்ளே நடக்கும்போது

தாள லயத்துக்குக் கட்டுப்பட்ட
அசாத்தியக் கலைஞனாய்
இம்மியும் பிசகாமல்
துடித்துக்கொண்டிருக்கிறது
என் இதயம்

நீ நின்றால்?

இல்லை இனி உன்னால்
நிற்க முடியாது

என் இதயத் துடிப்பு
நிற்கும்போதுதான்
என் மனத்தளத்தில்
புல்லரிக்கப் புல்லரிக்கப்
புதுப் புதுப்
பொற்சுவடுகளைப் பதிக்கும்
உன் பாதங்களும் நிற்கமுடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
52

கண்ணின் மையையும்
வெளிச்சமென்றாக்கும் இருட்டுக்குள்
தடம் தெரியாமல் வாழச் சம்மதமா

துடியாய்த் துடித்து
சுக்கு நூறாய்ச் சிதறியழியும் இதயத்தை
வாரி அள்ளிக்கொண்டு
திசை தெரியாமல் ஓட விருப்பமா

எங்கு ஓடியும்
எவ்வழியும் தெரியாமல் விழுந்து புரண்டு
வெடித்துக் கதறப் பிடிக்குமா

ஒரு சில்லறையைச் சுண்டும்போதுகூட
பூவா தலையா என்ற பதட்டம்
வீறிட்டுப் பறந்து வேதனையில் துவளும்
தோல்வியின் எண்ண மின்னல்கள்
தெளிவற்ற புலம்பல்களாய்
எத்தனை திசைகளில் பாயும் என்று
கணக்கிட முடியுமா

கண்களின் மாய வெளிச்சத்தில்
காதலிக்கத்தான் போகிறாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

51

முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே

என்னிடமிருந்து
கவர்ந்த ஞாபகங்களை
விடுவிக்கும் பொறுப்பை
நீதான் ஏற்கவேண்டும்

அவை என் குரல்களைத்
துகள்களாக்கி
நான் விழுந்தழுவதில்
சிரிக்கின்றன

நீ எரித்தெறியும் ஞாபகங்களின்
சாம்பல் கரைக்க
என் இதய நதியைப் பழக்கவேண்டும்

உன்னால் ஞாபகங்களை
மீளப் பெறவே முடியாது என்று
என் உயிர் என்னிடம் பந்தயம் கட்டி
மரண மடியில் படுத்துக்கொள்கிறது

ஆனாலும்
முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

50

நட்பைத் தவிர்க்கலாம்
காதலைத் தவிர்க்க இயலாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

49

அப்படி என்னதான் இப்படி
ஓயாமல் பேசிக்கொண்டே
இருக்கிறாய்

கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
அலுக்கவே இல்லை
என்ன கேட்டேன் என்றுதான்
தெரியவே இல்லை

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
சலிக்கவே இல்லை
என்ன பார்த்தேன் என்றுதான்
புரியவே இல்லை

செவி அறியாமல் நீ பேசும் ஒலி
என் இதயக் கூட்டுக்குள்
சங்கீதம்

விழியறியாமல் நீ வீசும் ஒளி
என் உள் வானத்தில்
விடியல்

உன் சங்கீதம் சாய்ந்தால்
என் இதயம் ஓயும்
உன் விடியல் தாமதித்தால்
என் உயிர் தவறும்

உன் புகைப்படம் கண்ட
சிறுபொழுதில் இப்படி உளறினால்
உன்னை நேரில் கண்டு
நான் என்னாவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
**** 49 நான் யார்


பத்துமாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க்க அறை தந்த
தாயிடம் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

வாழ்வெனும் ஓட்டை ஓடத்தின்
வழிபாதைகளையும்
அக்கறையாய்ச் செப்பனிடும்
தந்தையைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

என் மோக அனல் மூச்சில்
முழுச் சுவாசம்தேடி
என்னைப் பிரித்தெடுக்கும்
பெருமுயற்சியில்
சரிபாதிப் பங்கெடுக்கும்
இல்லாளைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

கூத்தாடும் குரங்கு மனத்தைத்
தொட்டும் அதட்டியும்
நில்லென நிலைப்படுத்தும்
நண்பர்களைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

ஏனெனில்
என்னை எனக்கே தெரியாமல்
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடைதேடி இருக்கிறேன்

இருந்தும்
இன்னமும் எனக்கது
பனிமூடிய பேருண்மைதான்

48

ஏனோ இப்படி
என் இதயத்தின் சந்துகளில்
நடையாய் நடக்கிறாய்
உனக்குக்
கால்கள் வலிப்பதில்லையா

ஏனோ இப்படி
என் தூக்கத்தை தூக்கிச்சென்று
காலுக்கிடையில் வைத்துக்கொண்டு
மௌன மரக்கிளையில்
பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்

யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா

என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக்
கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா

சொல்
உன் கண்களின் தீபம்
எப்படி என்னை மெழுகுவத்தியாக்கி
இப்படி உருக்கி எடுக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***47

பெண் 2020


பக்கத்துவீட்டுப் ப்ரியா
சின்னவீடு வைத்திருக்கிறாளாம்

கடந்த மாதம் வரை
அலுவலகம் விட்டு வரும்போதெல்லாம்
பாதி நாட்கள் அங்கும்
மீதி நாட்கள் இங்குமாய்த்தான் தங்குவாளாம்

கடந்த இரு மாதங்களாக
பொறுத்துக்கொள்ளமுடியாத
பெரியவீட்டுக் கணவனால் சச்சரவுகள் எழுந்ததாலும்

தன் குழந்தைக்கு தாயின் பெயரோடு
தன் பெயரையும் இணைக்க வேண்டும் என்று
மரபணு வழியாய் தந்தையென அறியப்பட்ட
மூன்றாமவன் ஒருவன் வழக்குத் தொடுத்ததாலும்

எவருக்குப் பிறந்திருந்தாலும்
தன்னுடையவர்கள்தான் என்பதால்
பிள்ளைகளும் தானும் ஒரே வீட்டில்தான்
இருப்போம் என்றும்

மூன்றாமவன் குழந்தையை
வாரம் ஒரு தினம் மட்டும்
வந்து பார்த்து விட்டுச் செல்லலாம் என்றும்

எக்காரணம் கொண்டும்
பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்
எந்த ஆணின் பெயரும்
இணைக்கப்படமாட்டாது என்றும்

மரபணு வழியாய்
தந்தையென அறியப்பட்டாலும்
முறையாகத் திருமணம் செய்துகொள்ளாதவர்
குழந்தைகளிடம் உரிமைகொண்டாட
இயலாது என்றும்

சின்னவீடும் பெரியவீடும்
தான் விரும்பி அழைக்கும்போது மட்டுமே
வந்து இருந்துவிட்டுச் செல்லவேண்டும் என்றும்
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளாம்

இருவரும் சமயலறையிலும் சலவையறையிலும்
அடித்துக்கொள்ள மட்டார்கள்
என்று வாக்குறுதி வழங்கும் பட்சத்தில்
இவளுடனேயே ஒரே வீட்டில்
தங்கிக்கொள்ளலாம் என்றும் சலுகை தந்தாளாம்

இருவருடனும் காட்டும்
அன்பிலும் காதலிலும் தனக்கு
எந்தவித பாரபட்சமும் இல்லை என்றும்
இரு கண்களாகவே இருவரையும் மதிப்பதாகவும்
உறுதி கூறினாளாம்

ஏற்புடையது என்ற தீர்ப்போடு
மூன்றாவது இணைய மன்ற வழக்குச் சுற்று
முந்தாநாள்தான் முடிவடைந்ததாம்.

47

மொட்டுகள்தாமே
மலர்களாய்ப் பூக்கும்
இருதய மணம்வீசி
காதலாய்ப் பூத்தபின்னர்
எப்படி உன் விழிகள்
மொட்டுகளாய் மூடிக்கொண்டன

உன் நினைவுகள் முரசுகொட்ட
என் இமைகள் ஒளிகின்றன
விழிகள் சிவக்கின்றன
பொழுதுகள் கனக்கின்றன

பளு தாங்காத வண்டிச்சக்கரமாய்
என்னுயிர் கிறீச்சிட்டுக் கதறுவது
இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

46

அழகு
காதலுக்கு எழுதிப்போட்ட
நல்வரவுப் பலகை

நினைவுகள்
வாசல்படி

நட்பு
முற்றம்

உயிரே
இருப்பிடம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****46 அட எப்படித்தான் வரும் நிம்மதி என்றேன் சலிப்போடு

இந்தக் கவிதை முழுவதும் கேள்வியும் பதிலுமாகவே ஓர் உரையாடலாய்ச் சென்றுகொண்டிருக்கும். சினிமாவில் இரட்டை வேடம் போடுவதுபோல் கேள்வி கேட்பதும் நானே பதில் சொல்வதும் நானே. இதில் கேள்வி கேட்பவனைப் பிடித்திருக்கிறதா அல்லது பதில் சொல்பவனைப் பிடித்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் ;-)


மூச்சுக்கு
முச்சு தேவைப்பட்டு
மூச்சு நின்றபின்
கிட்டும்
அமைதியா நிம்மதி
என்றேன்

வாழ்வின் தேவைக்கு
செத்தபின் வருமென்பது
எப்படி ஈடாகும்
என்கிறாய்

*

என்னிலும்
துயரத்தில் தள்ளாடும்
உள்ளங்களைக் கண்டு
சமாதானம் கொள்ளும்
புத்திதான்
நிம்மதி என்றேன்

உன்னை
மீறும் எண்ணங்களை
எத்தனைநாள்
ஏமாற்றுவாய் என்கிறாய்

*

எல்லாம் துறந்து
எதையும் சுவைக்காமல
மௌனித்துக் கிடப்பதே
நிம்மதி என்றேன்

இயற்கையைச்
சுத்தமாய்த் துடைத்தெறிவது
எப்படி நிகழும்
என்கிறாய்

*

அன்னை
மடி துயிலும்
மழலைச்சுகமே
நிம்மதி என்றேன்

வளராமல் இருக்க
வரம் இல்லையே
என்கிறாய்

*

காதலியின் அணைவில்
நினைவுகளற்றுப் பறக்கும்
சிறகுகளே
 நிம்மதி என்றேன்

ஒடிப்போயோ
அல்லது உடனிருந்தோ
ஒரு நாளவள்
காணாதொழிவாளே என்கிறாய்

கண்மூடிக்
கண்ணீர் பெருக்கி
தெய்வமே என்று
காலடி கிடக்கும்
பக்தியே நிம்மதி என்றேன்

தினமும் தொழுதெழும்
தீவிர பக்தனும்
தாளாத்துயரென்று வந்துவிட்டால்
இருக்கிறாயா தெய்வமே
என்றுதானே
அழுகிறான் என்கிறாய்

*

அட எதுதான் நிம்மதி
எங்குதான் நிம்மதி
எப்படித்தான் வரும் நிம்மதி
என்றேன் சலிப்போடு

உனக்குள் தேடி
உன்னையே வளர்த்தெடுத்து
உன்னை ஆளவைக்கும்
உன் சக்தியே
நிம்மதி என்கிறாய்

மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும்
வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்... 

45

மரணம்
ஒருமுறையே வரும்
ஆனால்
மரணத்தின் ஒத்திகை
பிரிவின் துயரில்
பொழுதுக்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

44

சொல்லுக்கு
சில
சிறகுகள்தாம்
சொல்லாமைக்கோ
கோடி கோடிச்
சிறகுகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

43

நெஞ்சக் கூட்டுக்குள்
நூறு ஜென்மக் கண்ணீர்
உப்புக் குருவிகளாய்

அழுகைச் சிறகுகள்
அவிழ அவிழ
ஆனந்தமாய்ப் பறப்பதற்கு
ஆயுள் வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*** 42 ஈழத்தாமரை

சூரியன் எழுந்து
சிவப்பைக் கழுவி
வெண்மை விதைக்க
வெளிச்சம் முளைக்கும்

வீதிகளின் பீதி
வெறுமைகளின் துயரம்
கிழிந்த விழிகளில்
கதறியழும் கனவுகள்
புதைந்த எலும்புகளில்
கொப்பளிக்கும் குருதி
நிறுத்தம் கொள்ளும்

இலங்கைத் தடாகத்தில்
ஈழத்தாமரை
அமைதியின் தாலாட்டில்
தொட்டிலும் துயில
சிங்களத் தீவுக்கு
நெடுஞ்சாலைப் பாலம்
நீளும் கவிதையாய்
42

மனக் கூடையிலிருந்து
ஒவ்வொரு செங்கல்லாக
இறக்கி வைத்துக் கொண்டே
இருக்கிறேன்

பாரம் இரட்டிப்பாய்க்
கூடிக்கொண்டே இருக்கிறது

இணையம் முழுவதும்
தவழும் நிலவுகளாய்
உனக்கான என் கவிதைகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

41

காலமெல்லாம் கனாக்கண்டு
கண்டெடுத்ததும்
கனவாகிப் போனால்...

கண்கள் நான்கினின்றும்
கண்ணீர்த் துளிகள்
ஈருயிரையும் ஈரப்படுத்தியபோது
காதல் நிறைகுடமானது

ஆசையாய் முட்டையிட்டு
ஆழ்மனதில் அடைகாத்தப்
பறவைக்கு
முட்டையிலிருந்து
நெருப்புத் துண்டங்கள் வெளிவந்தால்...

விழி விதைகளை
கண்ணீரில் விதைத்தாகிவிட்டது
இதயத்தை
துடிப்புகளுக்குள் புதைத்தாகிவிட்டது
இனி வாழ்க்கையை
வேறெங்கே சென்று தேடுவது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***41

எங்கே கவிதை

எப்போதெல்லாம் கவிதை எழுதுவீர்கள்? ஏன்தான் கவிதை எழுதுகிறீர்கள்?
நீங்கள் என்ன கவிதை எழுதும் இயந்திரமா? கவிதைகள் எங்கே கொட்டிக்கிடக்கின்றன நீங்கள் இப்படி அள்ளிக்கொண்டு வந்து நிற்கிறீர்கள்? எப்படி இத்தனை அழகான கவிதைகளை உங்களால் எழுத முடிகிறது? சிந்தித்துக் கவிதை எழுதுவீர்களா அல்லது சட்டென்று கவிதை எழுதுவீர்களா?

இப்படியாய் ஒரு கவிஞன் முன் கேட்கப் படும் கேள்விகள் ஏராளம். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் மனம்போன போக்கிக் கிறுக்கியதுதான் இந்தக் கவிதை ;-)


உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால் அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க் கவிதைகள்

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்

அதிகாலைப் பொழுதில்
விலகியும் விலகா உறக்கத்தில்
இதழ் விரிக்கும் தளிர் உணர்வுகளில்
திட்டுத் திட்டாய்க் கவிதைகள்

உறக்கம் கொண்ட கண்களில்
உறங்காத மன அலைச்சலில்
உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும்
தத்துவார்த்தக் கவிதைகள்

கோபம் வரும் கூடவே
கவிதை வரும்
காதல் வரும் முந்திக்கொண்டு
கவிதை வரும்
சோகம் வரும் அதைச் சொல்லவும்
கவிதை வரும்

எங்கில்லை கவிதை
எப்போதில்லை கவிதை
எதைத்தான் தழுவவில்லை கவிதை

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு கவிதை

அன்புடன் புகாரி

40

உன் இதழ்களில்
புன்னகை கௌரவிக்கப்படுகிறது
உன் புருவங்களில்
அழகு ஆசிர்வதிக்கப்படுகிறது
உன் கன்னங்களில்
மென்மை ஆராதிக்கப்படுகிறது

அதோ பார்
உன் நெற்றி விழுந்து
வழியும் சுகம்கண்டுவிட்ட
அந்த மழைத்துளிகள்
மீண்டும்
மழைத்துளிகளாகவே பிறக்க
முகிலிடம்
மனுப்போட்டுக்கொண்டு
ஆவியாகின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

39

எத்தனைதான்
கண்ணீராவோமே
எத்தனைதான்
மனக்கூடழிவோமே
எத்தனைதான்
உயிரறுபடுவோமே
அத்தனையையும்
வென்றெடுத்துக்கொண்டு
ஆழமாய்
உயிர் வேர் செலுத்தி
அழுத்தமாய்
வளர்ந்து நிமிர்கிறதே
நம் காதல்
பிரபஞ்சமானது
அழிந்தாலும் பிறப்பது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

38

செத்து செத்து சிநேகிக்கும்
பித்துப் பிடித்தவன்
வாழ்வதும் உன் கண்ணீரில்
சாவதும் உன் கண்ணீரில்தான்
துள்ளி நீந்தும் நீரிலேயே
வெந்து குழம்பாகும் மீனைப்போல

கண் உடைத்து நீர் பெருக்கி
வென்றெடுத்துக்கொள்
என்னை உன் விருப்பம்போல
இப்போதும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

37

உன் இமைகள்
ஓர் ஊசித்துவார அளவுக்கேனும்
அகன்றால் போதும்
என் ஒட்டக உருவையும்
மயிரிழையாய் நீட்டி
எப்படியும் நுழைந்து விடுவேன்
ஆனால் என்முன்
உன் மூடிய விழிகளுக்கு
இமைகளே இல்லாமலல்லவா
இருக்கின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

36

உன்
உள்ளத்தைத் தொடவரும்
ஒவ்வொரு முறையுமே
உன்
பாதங்களைக்கூடத் தொட முடியாத
பாவப்பட்ட அலைகளாய்
நான் திருப்பி அனுப்பப்படுகிறேன்
எனினும்
என் காதலை நிராகரிக்கும்
நீயே என் காதலி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

35

ஒரு நாளில்
எதிர்ப்பட்ட அழகியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு வாரத்தில்
ரயில் சிநேகிதியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு மாதத்தில்
பள்ளித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு வருடத்தில்
கல்லூரித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்

ஒரு
யுகம் கழிந்தாலாவது
உன் முகம் மறந்துபோகுமா
என்றிருக்க நீ மறந்து போகலாமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

34

வெளியில் தேட வேண்டாம்
காதலுக்கு உள்ளேதான்
கடவுள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

33

கேட்டுப் பெறும்
பல கோடி முத்தங்களை
வாய் பிளந்த சிப்பிகளாக்கி
ஒற்றை முத்தாய்
நீள் இருட்டைக் கிழித்துப்
பாயும் ஒளிக்கற்றையாய்
உயிர் தீண்டுகிறது
கேட்காமல் பெறும்
ஒரே ஒரு முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

32

காமம்
உறக்கத்துக்குமுன் நிகழும்
ஒரு சம்பவம் ஆகும்போது
செத்துக் கிடக்கிறது
படுக்கைக்குக் கீழ்
காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

31

உன் முகத்தில்
எனக்கு மிகவும் பிடித்தது
எது தெரியுமா என்றாய்

சட்டென்று உதடுகள் என்றேன்
நீ அதிசயத்தாய்

அதிசயிக்க இதில் என்ன இருக்கிறது
ஆயிரம் முறை என் காதலை நான்
உரத்து சொன்னாலும்
ஒரே ஒரு முறை
என் உதடுகள் உன் உதடுகளை
ஒத்திச் சொல்வதற்கு ஈடாகுமா

அது உனக்குப்
பிடிக்காமல் போய்விடுமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

30

விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே
கழற்றிக்கொள்ளும் உலகில்
உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொண்டவளே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 

29

என் தோட்டத்தில்
உனக்கான
பழங்கள் இல்லை

என் காற்றில்
உனக்கான
வாசம் இல்லை

என் நீரில்
உனக்கான
தாகம் இல்லை

ஆனால்
என் உயிரை
உனக்காக
விருந்து படைக்கும்
காதல்
இருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

28

நீ
விழிவீசும்
ஒவ்வொரு கணமும்
உள்ளுக்குள் என்னென்னவோ
உடைந்து சிதறுகின்றன

சிதறித் தெறித்து
கழன்று குழைகின்றன

என்னடீ இது
பார்வையா
பஞ்சபூதப் பசியா

ஒவ்வொன்றாய் எடுத்து
என் உண்டியலில் சேமித்து
செல்வந்தனாகிறேனா

அல்லது
கனவுகளாயும்
கற்பனைகளாயும் செலவழிந்து
பிச்சைக்காரனாகிறேனா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

27

அன்றொருநாள் நானுன்னைத்
தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த
கோடி மொட்டுகள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின்
மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது
நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள்
மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட
மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும்
புரியாமல் விழித்திருக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

26

மேலிருந்து
கீ
ழா

அல்ல
மழை இன்று
இடமிருந்து
வலமாகத்தான் பெய்தது
ஆம்
என்னை அவள் இன்றுதான்
முதன்முதலாய்
பொன்மழை விழிகளால் நனைத்தாள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
 
**
36 புழுக்களையும் சேர்த்துத்தான் எரு


புண்படத் தேவையில்லை
புழுக்களையும் சேர்த்துத்தான்
எரு

மரங்களின் வேர்களில்
புழுக்களும் உணவு

தீயவை விழுங்கி
நல்லவையாய் நிமிர்கின்றன
மரங்கள்

காற்றைச்
சுத்திகரிக்கின்றன
நீரை
நிறைக்கின்றன
நிலத்தைப்
புதுப்பிக்கின்றன
நெருப்பின்
உணவாகின்றன
வானம்
தொடுகின்றன

சரித்திரம் மரங்களுக்கே!
***35

கண்ணீருக்கு வணக்கம் சிந்துவோம்


கண்ணீர் துளிகள்தான்
சந்தோசக் கோலங்களின்
சரியான புள்ளிகள்

விழியின் ஒவ்வொரு துளியும்
வாழ்வின் பொருள் சொல்லும் கவிதை

கண்ணீர் சிந்தாத கண்களில்
வாழ்க்கையின் ஒளி வீசுவதே இல்லை

ஒரு ஜீவனின்
படைப்பு ரகசியங்கள்
அதன் கண்ணீரில்தான் மிதக்கின்றன

ஒரு துளி கண்ணீரில்
நம் முழு உயிரின் பிம்பமும் தெரிகிறது

கன்னம் அழகாக இருப்பது
கண்ணீர் பாதங்களை மேடை ஏற்றும்
பாக்கியம் பெறத்தான்

கண்ணீர்தான்
கடல்தாயின் உறவினைச்
சொல்லி நிற்கும் பனிக்குடப் பிணைப்பு

கண்ணீரில்
புனிதமான உறவுகள் பூக்கின்றன
வெற்று உறவுகளும்
விரும்பத்தகு உறவுகளாகின்றன

கண்ணீர்
கண்களிலிருந்து வெளிவரவில்லை
உயிரிலிருந்து கசிகிறது

கண்ணீருக்கு
வணக்கம் சிந்துவோம்
வாழ்த்தி விழி பொழிவோம்
25

மலர் கேட்டுப் போனேன்
முள் வந்து சேர்ந்தது
மழை கேட்டுப் போனேன்
கண்ணீர் வந்து சேர்ந்தது

இசை கேட்டுப் போனேன்
இடி வந்து சேர்ந்தது
நிழல் கேட்டுப் போனேன்
நெருப்பு வந்து சேர்ந்தது

கவிதை கேட்டுப் போனேன்
வசை வந்து சேர்ந்தது
வரம் கேட்டுப் போனேன்
சாபம் வந்து சேர்ந்தது

எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது
எதைக்கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*** 34 நட்பு ஒளி

கட்டாயங்கள்
கண்ணகியின் காற்சிலம்புகளைப்போல
கழற்றி எறியப்படட்டும்
அவற்றிலிருந்து தெறிக்கும்
மாணிக்கப் பரல்கள்
நட்பு ஒளியைச்
சூரிய ஒளியாய் வீசட்டும்

24

வந்தமர்வதற்கு மட்டுமல்ல சிறகுகள்
படபடத்து மறைந்து போவதற்கும் என்பதை ஏற்க
வேரில் தீயிட்டுக் கொண்டாலும் இயலுவதில்லை

சிறு மஞ்சள் பூவொன்று ஒருதுளி விழிசிந்த
மேலும் ஈரம் மிகுத்து கரும் பச்சையாகி
வர்ணங்கள் பீச்சும் வானவில் ஆரமாகி

என் உள்வெளிகள் ஈரமானவை
எந்த வெயில் பட்டும் காய்வதில்லை

வெளியேறிய அலகின் நினைவுகள் கூடழிக்க
மீள்வரவு கேட்டு மன்றாடி மேலும் ஈரம் நிரம்பி

என் உள்வெளிகள் ஈரமானவை
எந்த வெயில் பட்டும் காய்வதில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
23

சில நொடிகளில் உடைந்துபோனால்
அது மழைக்கால நீர்க்குமிழி

சில மணிகளில் கரைந்துபோனால்
அது பாலைவன மணல்மேடு

சில நாட்களில் உதிர்ந்துபோனால்
அது மொட்டவிழ்த்த மல்லிகை

சில மாதங்களில் வற்றிப்போனால்
அது வசந்தகால வாய்க்கால்

சில வருடங்களில் சிதைந்துபோனால்
அது வாலிபத்தின் வனப்பு

சில யுகங்களில் மறைந்துபோனால்
அது தொலைதூர நட்சத்திரம்

தீர்ந்தே போகாத ஒன்று உண்டெனில்
அது நீ தரும் பிரிவுத்துயர்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

22

பெண்ணே
நீயொரு பெண்டுலம்
நிமிடத்திற்கொருமுறை
பெரியகாலும்
மணிக்கொருமுறை
சிறியகாலும்
எடுத்துவைத்துக்கொண்டு
உன்னோடு என் தலையெழுத்தும்
இங்கும் அங்குமாய்
ஆடிக்கொண்டேதான் இருக்கிறது
ஒளிமட்டும் போதாதென்று
இருளையும் சேர்த்துச்
சமமாகத் தர
பூமிக்குச் சூரியன்
எனக்கு நீ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

21

யுத்தம்
முத்தத்தில்தான்
இருக்க வேண்டும்

நான்கு உதட்டு ஈர ஆயுதங்கள்
போருக்குத் தயார்

சத்தமே இல்லாத யுத்தம்
கண்கள் இமைக் கேடயங்களுக்குள்
ஓடிப் பதுங்குகின்றன

நரம்புகளெல்லாம்
வீரர்களை உசுப்பேற்ற
ஆர்வத்தோடு ஓடிவருகின்றன

இரண்டு மூளைக்குள்ளும்
ஒற்றை அணுகுண்டு
வெடித்துப் பரவுகின்றது

நெடுநேரம் நீடிக்கும் யுத்தங்கள்
வெற்றியை அறிவிக்கின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
**31

பதட்டமாய் இருக்கிறது


நெல்சனும் பீட்டரும்
ஜான்சனைத்
தத்தெடுத்தான்கள்
பிள்ளையாக

அம்மாவும் ஆண் என்று
கொண்டாட்டம்
ஜான்சனுக்கு

மேற்கின்
மயானக்கரைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்

கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்கதிரவன்
பிறக்கிறான்
எப்போதும்

செத்தே பிறந்துவிடுவானோ
அங்கும் என்று
பதட்டமாய் இருக்கிறது

வாழ்க்கையின் ஓர் துளி


பூமியின்
கண்ணீர்தானே
கடல்

அந்த மாபெரும்
கண்ணீர்முன் நின்று
நீ
ஒரு சொட்டுக்
கண்ணீருக்கு
எத்தனிப்பது சரியா?

ஒரு புலம்பெயர் தமிழனின் கனடிய வாழ்வுஒரு புலம்பெயர் தமிழனின் கனடிய வாழ்வு - அன்புடன் புகாரி கனடா
20

உன்
விழிவானப் பந்தலில்
மினுக்கும் நட்சத்திரங்களின்
கனவுக் கோலங்கள்தான் நீ

உன்
இதய மயிலின்
இயல்பான தோகை விரிப்புகளால்
சிலிர்க்கும் உணர்வுகள்தான் நீ

ஊருக்கும் உறவுக்கும்
உன் நிறம் கரைத்து வெளிர்வது
நாடகம்

வேர் மறைத்த அபிநயங்கள்
ஒருபோதும் வாழ்க்கையாவதில்லை
சுயத்தின் தலை நசுக்கித்தான்
அரிதாரக் கூத்துகளின் அரங்கேற்றம்

வாழும்போது மரணித்தால்
சாகுப்போதா வாழப்போகிறோம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***30 


இறைவன் படைத்தது இயல்புகளை
மனிதன் படைத்தது சிதைவுகளை

இயல்பாய் வாழென
அவன் அனுப்பிவைத்தான்

இவனோ
இஷ்டம்போலச் சட்டமிட்டான்

கோடுகள் கொடுத்ததுவா வாழ்க்கை
கோட்டுக்குள்
நாளும் கிழிகின்றன உயிர்கள்

எது சரி எது தவறு
எவருக்கும் தெரியவில்லை

தவறு சரியென்றும்
சரி தவறென்றும்
தோன்றுவதைத் தடுக்க
எவருக்கும் முடியவில்லை

வட்டம் சிறிதானால் அதனுள்
எப்படி ஓடினாலும்
முட்டத்தான் செய்யும்

வாழ்க்கை ஒருமுறைதான்
ஆனால்
அதனுள் மரண சோதனைகளோ
பலமுறை பலமுறை

வாழ்க்கை கிடைக்கிறது
ஆனால்
வாழ்வதுதான்
பலருக்கும் கிடைப்பதில்ல்லை

தேங்காய் மூடியை
நாய் உருட்டும்
நாட்களாகிப் போகின்றன

அறிவற்று உலவுவதும்
அழகான வாழ்க்கையாகலாம்

எதையும் நம்பி நம்பி வாழ்வதும்
நிரந்தர நிம்மதி தரலாம்

அங்கே
துன்பமென்று
ஏதுமில்லாமல் போகலாம்

துயருக்கும்
வழியில்லை என்றாகலாம்
19

கண்கள் உயிரெழுத்து
பொட்டுநிலா மொட்டுவிட்ட
நெற்றி மெய்யெழுத்து

இதயம் மெல்லெழுத்து
இளங்காலைப் பனிப்பந்தல்
இதழ்கள் இடையெழுத்து

அடியே அழுத்தக்காரி
உந்தன் ஆசைகள்தானடி
வல்லெழுத்து

குரலில் தெறிக்குதடீ
குயிலெழுதும் பொன்னெழுத்து
உன் குற்றாலச் சிரிப்புத்தான்
உயிர் விரிக்கும் பூவெழுத்து

மௌனம் ஆய்த எழுத்து
மனமத்தியில் புதுவாசப்
புயல் அவிழ்க்கும் மல்லிகை மாநாடே
என் அகங்காரி உனைச் சேராமல்
மாறாதடீ என் தலையெழுத்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****29 

செல்கிறேன்


பிரயாணங்கள்
பிரிவுகள் மட்டுமல்ல
பிறவிகளும்

18

உயிர் மரத்தின்
உணர்வுப் பட்டைகளை
கொத்திக் கொத்தி
உனக்கான இரையைக் கிளறி
எனக்குப் பெருமூச்சுகளை
அடுக்கடுக்காய்ப் பரிமாறி
விருந்து வைக்கும்
உன் அலகுகளில் வழிகிறது
என் வாழ்க்கை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***28

பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

குங்குமப்பொட்டிட்டு மல்லிகைப்பூச்சூடி
பொழுதுக்கும் நர்த்தன மணியவிழும்
சிந்தாமணிச் சிரிப்புதிர்த்து
பள்ளிவிட்டு வரும்வழியில் பல்லாங்குழியாடி
சாயுங்காலமும் சாயும்பொழுதில்
தாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும்
பத்துவயதுப் பருவமகளைத்
தூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்
போராடக் கொடுத்தவள்
வானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும்
பிணங்களடியில் எப்பிணம்
மகள் பிணமோவென்று
தேடிச் சாய்கிறாள்

மணத்தேரேற மனத்தேரேறி
விழித்தேர் செலுத்திய நிலவழகு மூத்தமகளின்
கற்பு சூறையாடப்படுவதைத் தன்னிரு கண்களால்
கொடுநெருப்பாய்க் கண்டவள்
அவள் தொங்கிய கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு
நிலைகுத்திய பார்வையில் வெறித்துக் கிடக்கிறாள்

பத்துமாதம் முன்புதான்
ஓர் பகல்பொழுதின் யுத்த இருட்டில்
செல்லடித்துத் தாலியறுபட்டாள்
பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
நாலுவயது பிஞ்சு மகளை
கம்பிவளைகளுக்குப்பின் காணத் துடிக்கிறாள்

வீடுநிலம்விட்டு பொட்டல் வந்தாள்
அனாதை முகாம்களாகிப்போன அகதி முகாம்களில்
பிச்சைவரும் திசை நோக்கி
தண்ணீர்வரும் கிழமை நோக்கி
நோயில் வாடும் ஊன் சுமந்து
நொந்து தொங்கும் மனம் சுமந்து
பொல்லா வயிற்றோடு போராடி நிற்கிறாள்
நாலுவயதுப் பிஞ்சாவது மீதப்பட்டுப் போகாதா
என்ற மிகப்பெரிய ஆசையில்

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!

17

கடல்
தேவையில்லை
உன் விழியின்
ஒரு துளி போதும்
நான்
மூழ்கிப்போவதற்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

27 எது என் ஊர்கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்

பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்

பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்

எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்

தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு

எது
எது
எது என் ஊர்?

திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்

ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்

என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது

நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது

எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது

எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!

27 இலையுதிர் காலம்

செப்டம்பர் 29, 2014 கனடாவில் இலையுதிர் காலம் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகப்போகின்றன. இந்த முறை குளிர் வருவதுபோல் வந்து விலகிவிட்டதில் மகிழ்ச்சி. கனடாவில் இலையுதிர் கால மரங்களைக் காண்பது எத்தனை அழகென்று நான் ஒருநாள் கவிதை எழுதினேன். அக்கவிதையை எழுதும்போது சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன். இதோ அந்தக் கவிதை


பச்சைத் தாவர
இலைகளின் நரம்புகளில்
பஞ்சவர்ணக் கிளியின்
இரத்தம் பாய்ச்சிப்
பரவசம் பொங்கப்
படபடக்க வைப்பதாரோ
நானறியேன்

மஞ்சளும் சிகப்பும்
முதற்காம மஞ்சத்தில்
ஒன்றுக்குள் ஒன்று
குதித்தெழுந்தால் வரும்
கிளுகிளுப்பு நிறங்களில்
எழிலாய்ச் சிரிக்கும்
இலைகளே இலைகளே!

நீங்கள்
இதயத்துக்குள்
இறக்குமதி செய்யும்
இனிப்பெல்லாம் - என்
இமைக்கூட்டுப் பறவைகள் - ஒரு
கனவாய்க் காணவும் முடியாத
சொர்க்க வெளிக்கல்லவா
இதயத்தை
ஏற்றுமதி செய்கின்றன

அடடா....
இலையுதிர் காலம் என்பது
ஒரு தரமான வரமென்பதில்
சந்தேகமில்லை

மரங்களுக்குக் கிடைத்த
இந்தப் பேறு
மனிதர்களுக்கும் வேண்டும்!

காலம்
கறுப்புச் சுமையேற்றும்
கொடிய கணங்களிலெல்லாம்
கவலைக்குள் கசங்கும்
கண்ணீர் இலைகளை
ஒவ்வொன்றாய்
நிறச் சீர்வரிசைகளோடு
நிலம்மீது உதிர்த்துவிட்டு
தன் உர உயிர் உடைந்துவிடாமல்
இயற்கையை எதிர்த்து நிற்கும்
அற்புத வாழ்வல்லவா - இந்த
மரங்களுக்கு வாய்த்திருக்கிறது!

பின்
காலம் கும்பிடுபோடும்
குதூகலப் பொழுதுகளில் - மீண்டும்
புத்தம் புதிதாய்
இலைச் சிறகுகளைப்
பூட்டிக்கொள்ளும்
பூரிப்புத் திருவிழா - என்றும்
காணக் கண்கொள்ளாக்
காட்சியல்லவா?

இலைகள் பூக்களாகும்
இந்தப் பொற்பொழுதுகளில்
அதில் நனையத் துடிக்கும்
வேகத்தோடு

பூமி மத்தளத்தில்
மேளம் கொட்ட நீண்டுவரும்
மழையின் மந்திர விரல்கள்

மெல்ல மெல்லத்
தட்டித் தட்டி - பின்
காதல் இமைகள் அடிக்கும்
கடும் வேகத்தில்
கொட்டிமுழங்கும் கொண்டாட்டம்

தன் நீர் இலைகளையும்
உதிர்கின்றனவோ - இந்த
இலையுதிர்க்கால மேகங்கள்?

இவ்வேளையில்
காற்றுக்கு
அவசரச் செய்தி அனுப்பியது
யாரென்ற புலன்விசாரனை
பிசுபிசுத்துப் போக
உய்ய்ய்ய்யென்று கூவிக்கொண்டு
ஓடி வருகிறது காற்று

அது
கிளைகளில் அமர்ந்து
இலைகளின் காதுகளில்
எதையோ கிசுகிசுக்க
நாணக் குடம் கவிழ்ந்து
மேலும் சிவக்கின்றன
இலைக்குமரிகளின்
ஈர அங்கங்கள்

இந்த
இனிய காலத்தில்
அலுவலகம் நோக்கி
வாகனம் ஓட்டிச் செல்லும்
அகண்ட பெரும் தார்ச்சாலையில்
வானம் தெரிகிறது எனக்கு
நட்சத்திரங்களாய்க்
கொட்டிக்கிடக்கும்
வண்ணவண்ண இலைகளின்
வசீகரப் புன்னகையால்!

* (அக்டோபர் 2003)

16

காலைக்கும் கனிவுக்கும் இடையில்
எச்சில் புரை ஏறியது
என் உயிரையே வெளியேற்றி

அதன் வள்ளுவ நாயகி
நீயாய் இருக்கமாட்டாயா என்ற பேராசையில்
செருமிச் செருமிச்
செருமிக்கொண்டே இருக்கிறேன்

புல்நுனி நீர்ப்பொட்டே
எத்தனைமுறை நினைத்திருப்பாய்
நீ என்னை
மறந்தாவது ஒருமுறை
என்னிடம் சொல்லக்கூடாதா

உன் ஆசை மின்னலைகள்
அலையும் வெளிப்பரப்பை
அறியாதவனா நான்
ஏனிப்படி நாடக இமைகளுக்குள்
சுடர்மணி ஒளித்து
உன்னையே வதைக்கிறாய்

வா...
வருவதுதான் வாழ்க்கை
வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

**** 26 நட்பு விமோசனம்


சாபம்தான் வாழ்வு
என்றாகிப்போனாலும்
அதில்
சாயம் போகாத
நட்பு
விமோசனம்

15

மௌனத்தின் இதழ்களில்
ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்

சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது

தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்

நனைந்தும்
நனையாததுபோன்ற கள்ளத்தனத்தில்
ஆடுமிந்த கண்ணாமூச்சி
உயிர்ப்புடையதாய்ச் சிலிர்த்துச் செல்கிறது
நகரும் நாட்களைத்
தேன்வழியும் புதுப்பூந் தேரோட்டமாக்கி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

14

காதல் இல்லாமல்
சிலிர்ப்பதற்கு
உலகில்
எத்தனையோ விசயங்கள்
இருக்கின்றன
காதலைத் தாண்டித்தான்
ஒரு விசயமும்
இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

24 எனக்குக் கவிதையெழுத வேண்டாம்

எனக்குக்
கவிதை எழுதவேண்டாம்
பற்றியெரிந்து நெற்றி வெடித்துப்போன
ஈழக்கொடுந்துயர் பற்றி எனக்கு
ஒரு கவிதையும் எழுதவேண்டாம்

அரை நூற்றாண்டு மூச்சுத் தவமாய்
இதோ ஈழம் என்று
நடு உயிரில் கனவுகண்டு
ஏக்க உணர்வில் வாழ்ந்துவந்த
அப்பாவி உயிர்களின்
அடிப்படை உரிமைகளும்
துரோகத் தீயினில் பொசுங்கிப்போன
யுகதுக்கத்தை எனக்கு
கவிதையாய் எழுதவேண்டாம்

கள்ள நரியொருபக்கம்
மூர்க்க நாயொருபக்கம்
வானங்கொள்ளா வெறி பிடித்த
ஓநாயொருபக்கமென்று
குதறிக்குதறி வேட்டையாட

சோறு வேண்டாம் எங்களுக்கு
தாய்மண் தின்றால் போதுமென்று
பெற்றெடுத்த மண்மீது
அடங்கா காதல் கொண்ட
மானினம் மடிந்த அவலத்தை
எனக்குக் கவிதையாய் எழுதவேண்டாம்

பௌத்தத்தின் பொருள்
அன்பென்று சொன்னார்கள்
உயிர்களின் மீதா
உயிர்களைத் தின்னவா
என்று சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்

புத்தகங்களும் மக்கள்தாம்
உணர்வுகளோடு வாழும்
பல நூற்றாண்டுகளின் உயிர்க் கொத்துக்கள்
அன்றே அவற்றைத் தீக்குள் சமாதிவைத்த
சுடுகாட்டுக் கரங்கள்
வேறெதைத்தான் இன்று செய்துவிடும்

தீவிரவாதம் அழிப்பதாயொரு
பௌத்தப் படுதா கட்டிக்கொண்டு
எந்த யுகமும் காணா
உச்சத் தீவிரவாதம் காட்டிய
தந்திரமா வெற்றி

நச்சுக் கத்திகளுக்கு ஒத்திகை
கர்ப்பிணியரின் கருவசையும் வயிறுகளா

துஷ்ட துப்பாக்கி ரவைகள்தாம்
சோற்றுக்குச் சாவோரின் வாயிலூட்டும்
ஈர ரத்தப் பருக்கைகளா

ராணுவமென்றால் என்னடா
துரத்தித் துரத்தி
பத்துவயதுகளின் கற்பையும்
பேய்த்தனமாய்ச் சூறையாடும்
காட்டுவெறித்தனமா

உங்கள் இனவெறிப் பசிக்கு
உரிமை கேட்போரின்
உயிர்களையே கொத்துக் கொத்தாய்க்
கொடுத்தாகிவிட்டது

நேற்று விழித்த பிஞ்சையும் சேர்த்து
இன்று இந்த உலமே தெரிந்துகொண்டது
தமிழரென்றால் யாரென்று
ஆனால் அதற்குக் கொடுத்த விலைதான்
அதிகமோ அதிகம்

ஊசலாடும் அரையுயிர்ப் பிணங்களின்
ரத்தச் சொதசொதப்பில்
கனரக ஆயுதச் சக்கரங்களாவது
ரத்தக் கண்ணீர் சிந்தின
நீங்களோ சிவப்புக் கம்பளம் என்று
குதூகலித்தீர்கள்

அலறித் துடித்த அத்தனை உயிர்களின்
கடைசிப்பொழுது சாபங்களும்
சும்மா இருக்காதடா
பெரும் சுனாமிகளாய் எழும்

குள்ளநரி அரசியல் கூத்துகட்டி
நீங்கள் ஆடியதல்ல வெற்றி
அறம்காத்து வருவதொன்றே
நிரந்தர வெற்றி

உரிமை கேட்பது அறம்
தரமறுப்பது அரக்கம்

போராடுவது அறம்
புதைத்துப்போடுவது அரக்கம்

இனியொரு தமிழ்த் தீபாவளி வரும்
அன்று நரகாசுரம்
தன்னைத்தானே எரித்துக்கொள்ளும்

கொஞ்சம் பொறு
உலகத் தமிழினம் ஒற்றுமைச் சிறகுகளை
ஒன்றனுக்குள் ஒன்றாக
அறத்தறியில் நெய்துகொண்டிருக்கிறது

துரோகத் துருப்பிடித்த அச்சாணியோடு
அதுவரைக்கும் இரு