முத்தக் காட்டில் விட்டுவைத்தேன்


தத்தித் தித்தித்தத் தங்கநிலவே
நீ தாவணிப் பூவுக்குள்
பூவானாய்
முத்துத் தெறித்திடும் மெய்யழகே
நீ முகத்தைக் கவிழ்த்தே
சிரிக்கின்றாய்

பெத்த மனங்களின் பொந்துகளில்
நீ பிறந்ததும் மீட்டிய
குரலிருக்கு
எத்தனை வளர்ந்து நிமிர்ந்தாலும்
உனை எடுத்தே கொஞ்சிடும்
உயிரெனக்கு

பத்துத் திங்கள் சுமந்தவளும்
உன் பருவம் கண்டே
வியக்கின்றாள்
ரத்த இழையின் சின்னவனும்
நீ ரத்தினத் தீவெனக்
கூவுகின்றான்

நித்தம் ஒளிரும் நெற்றி மொட்டே
என் நெஞ்சில் வளரும்
தாலாட்டே
புத்தம் புதிய மழைத்துளியே
நீ பேசிடும் மொழியும்
தேனிசையே

முத்தக் காட்டில் விட்டுவைத்தேன்
நீ மூர்ச்சையாகிப்
போகவில்லை
கட்டித் தழுவி நொறுக்கிவைத்தேன்
உன் கண்களில் தாகம்
தீரவில்லை

எத்தனைப் பாசம் பொன்னழகே
நீ ஏணிக்கு எட்டாத
வெண்ணிலவே
பொத்திய கைக்குள் வைரமென்றே
உனைப் பெற்ற நிறைவுக்கு
ஈடில்லையே

YouTube உங்கள்திரை


YouTube என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? "நீ குழல்" என்பது நேரடி மொழிப்பெயர்ப்பு என்பது என் கருத்து. "குறுந்திரை", "குறுங்காணொளி" இவைகள் பொருத்தமானதாக உள்ளனவா?
நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். கலிஃபோர்னியா கவியரங்கத்திலேயே இதுபற்றிப் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் நேரம் கருதி பேசவில்லை.

கவிஞர் டில்லிதுரை ‘நீ-குழல்’ என்று மொழிபெயர்த்தார். மொழி பெயர்த்தார் என்பதைவிட சொல் பெயர்த்தார் என்பதுதான் சரி. மொழி மாற்றம் செய்யும்போது மொழியாக்கம் ஆவதுதான் சிறப்பு. கருத்தை உள்ளிழுத்துக்கொண்டு நம் மொழிக்கும் இயல்புக்கும் புரிதலுக்கும் ஏற்ப ஒரு புதுச்சொல்லை உருவாக்க வேண்டும். அப்படி ஆக்கப்படுவதுதான் மொழியாக்கம்.

”மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம், பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும், சிதையாமல் மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும் வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு செத்துப்போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.” என்று தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழியாக்கம் செய்த திரு. ஜெயபாரதனின் நூலுக்கான என் அணிந்துரையில் எழுதினேன்.

நீ-குழல் என்ற சொல்பெயர்ப்புக்கு என் பாராட்டு அதன் நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே. சரி, YouTube என்பதை எப்படி மொழியாக்கம் செய்யலாம். இதோ என் சிறு முயற்சி.

Tube என்பது எதைக் குறிக்கிறது? தொலைக்காட்சி என்பதை ’ட்யூப்’ என்று தெரு வழக்கில் கூறும் வழக்கம் ஒன்று உண்டு. அப்படியாய் இது வந்திருக்கலாம். அல்லது அறிவியல் வழியில் சிந்தித்தாலும், Cathode Ray Tube - CRT என்பதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் காட்டப் பயன்படுத்தப்படும் கருவி. அப்படிப்பார்த்தாலும் அது தொலைக்காட்சியையே குறிக்கிறது.

என்றால் “உன்-தொலைக்காட்சி” என்று YouTube ஐ மொழிமாற்றம் செய்யலாம். ஆனால் அது அத்தனை சுகமானதாய் எனக்குப்படவில்லை. என்றால் இந்தப் பொருள் வரும்படியாய் ஒவ்வொரு சொற்றொடராய் நாம் முயலலாம். முதலில் உன் என்பதை தமிழின் மறபுக்கு ஏற்ப உங்கள் என்று மாற்றிக்கொள்வோம்.

உங்கள் காட்சி
உங்கள் படம்
உங்கள் திரை

இதில் உங்கள்திரை என்பது கொஞ்சம் எளிமையாகவும் பொருள் தருவதாகவும் சுகமாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

YouTube உருவாக்கப்பட்டதே நமக்காக நம்முடைய காணொளிகளை வெளியிடுவதற்காகத்தான். ”உங்கள் விருப்பம்” என்ற நிகழ்ச்சியைப்போல் இது உங்கள்திரை. அப்படியான நம் திரையை நாம் ஊருக்குக் காட்டி மகிழ்கிறோம்.

குறுந்திரை, குறுங்காணொளி என்பன நல்ல மொழிபெயர்ப்புகள்தாம் என்றாலும் சின்னத்திரை என்பதன் தொடர் சொல்லாட்சியாகத்தான் படுகிறது.

ஆகவே YouTube என்பதை உங்கள்திரை என்று கூறலாம் அல்லது உங்கள்காணொளி என்றும் கூறலாம் அல்லது இரு சொற்களையுமே இடம்பார்த்துப் பயன்படுத்தலாம்.

சிந்தனை ஓர் எல்லைக்குட்பட்டது


சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?


 
சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது, சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது. அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.

பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே

எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்
*****இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?

அறிதலில்லா அறிதல் கவிதை நூலுக்கான என் முன்னுரை


இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?' என்று கேட்கிறார்கள் சிலர்.

என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக 'இல்லை' என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ 'விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்' என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் 'இன்று கடிதம் இல்லை' என்று அவர் சொல்லமாட்டார் 'அவசியம் நாளை தருகிறேன் தம்பி' என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.

தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?

உயர்வானவற்றை உயர்வான நடையில் எழுதுவதுதானே சிறப்பு.


உயிரின் மொழி
மொழியின் உயிர்
கவிதை

இப்படி நான் என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே எழுதிவிட்டேன். இதை உணர்ந்துகொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களின் அறியாமையின்மீது உண்மையான அக்கறைகொண்டு நான் இதை இங்கே எழுத வருகிறேன்.

மொழியின் உயர்வான நடையில் தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய் ஆகிவிடாதா?

*

இதுவரை நான் நான்கு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். அனைத்தையும் நான் கனடா சென்றபின்தான் வெளியிட்டேன். இந்த 2010 நவம்பரில் இரு கவிதைத் தொகுதிகளை வெளியிடுகிறேன். இந்த முறை முன்பு எப்போதும் அமையாத ஒரு தித்திப்பான வாய்ப்பு என் கவிதைகளுக்கு அமைந்திருக்கிறது. இந்த இரு நூல்களையும் இரு கவிஞர்கள் தங்களின் கவிதைக் கைவண்ணத்தில் தொகுத்து பதிப்பிக்கிறார்கள்.

கவிஞர்களே கவிதை நூல்களுக்குப் பதிப்பகத்தார்களாய் அமைவது எப்படி?

தாய் தன் முதல் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவதைப் போன்ற சிறப்பல்லவா?

கவிஞர் சுதீர் செந்தில் இந்த என் 'அறிதலில்லா அறிதல்' தொகுப்பைப் பதிப்பிக்கிறார். கவிஞர் ரமணன் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்' என்ற கவிதை நூலைப் பதிப்பிக்கிறார்.

அட... எனக்குத்தான் எத்தனை ஆனந்தம்? என் உதிரிப் பூக்களைக் கவிதைப் பொன் விரல்களல்லவா விழா மாலைகளாய்க் கட்டுகின்றன!

கவிஞர் சுதீர் செந்தில் அவர்களின் ’உயிர் எழுத்து’ பத்திரிகை என் எழுத்தையும் உயர் எழுத்தாய் அங்கீகரித்து நூலாய்ப் பதிப்பக்கச் சம்மதித்ததற்கும் அதற்குத் துவக்கப் புள்ளியாய் இருந்த கவிஞர் ரத்திகா அவர்களுக்கும் என் நன்றிகள் சீருடையணிந்த பள்ளி மாணவர்களின் ஊர்வலமாய்...

இலக்கியம் ஊட்டி மனிதநேய இதயத்தோடு என்னை உயர்த்தி வளர்க்கும் தமிழுக்கும் நிம்மதி தீபங்களை அடுக்கடுக்காய் ஏற்றி வாழ்வொளி தரும் கவிதைகளுக்கும் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

என் கவிதைகளுக்கு முத்தங்கள் ஈவதற்காகவே தங்களின் இதழ்களில் தாக ஈரம் நிரப்பிக்கொண்ட என் கவிதைகளின் காதலர்களுக்கு என் கவிதைகளின் பாராட்டு முத்தங்கள் அந்த நெடுவான நட்சத்திரங்களின் எண்ணிக்கையில்...

குழந்தை பிறந்த அந்த நொடியே அது அழுவது ஒரு கவிதை. அதை அப்போதே கேட்க ஆவலோடு வாசலில் இதயம் துடிக்க சில உயிர்கள் காத்துக்கிடக்க, அந்தப் பிஞ்சுக் கவிதையை ஏந்தி கம்பீரமாய் ஆடிவரும் காற்று எத்தனை பாராட்டுக்குரியது? அதுபோல என் கவிதைகளை நான் எழுதிய அதே கதகதப்போடு அப்போதே அச்சேற்ற இனிய மடிதரும் இணையத்துக்கு என் ஒப்பில்லா நன்றிகள்.

அன்புடன் புகாரி
நவம்பர் 2010, கனடா
anbudanBuhari@gmail.com
001-416-500-0972

கவிஞர் க.து.மு.இக்பால் சிங்கையைச் சேர்ந்த மூத்த கவிஞர்களுள் ஒருவர். ’அன்புடன்’ வழியாக எனக்கு அறிமுகம் ஆனார்.  ’காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ என்ற என் நூல் எங்கே கிடைக்கும் என்று கேட்டிருந்தார். ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு ஒரு வழக்கம். எந்த நூலைக் கையில் எடுத்தாலும் மனம் போன போக்கில் ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்புவார். அதை அப்படியே வாசிப்பார். அதுதான் அவர் பார்க்கும் ஒரு சோறு பதம். அப்படி பிரித்து வாசித்த அடுத்த நொடி அவர் எனக்கு எழுதிய மடல்தான் இது.

*
அன்புக் கவிஞர் புகாரி அவர்களே

உங்களின் “காதலிக்கிறேன் உன்னை எப்போதும் “ கிடைத்தது.. மிக்க நன்றி..
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள்போல என்ன வயது ஆனாலும் நாம் காதலில் காணாமல் போகிறோம்....

“ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள்
தொலைந்து போகலாம்..
ஆகாயமே தொலைந்து போகும்
நிகழ்வுதான்
காதல் “

கண்சிமிட்டும் உங்கள் கவிதை நட்சத்திரங்களிடம் நான் “தொலைந்து” போவேன் போல் தெரிகிறது

அருமை கவிஞரே !
வாழ்த்துக்களுடன்

க.து.மு.இக்பால்

உங்கள் கவிதைகளும் காதலிகளே..

டிசம்பர் 12, 2010

விழா - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்



சென்னை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

நவம்பர் 21 2010 பாரதீய வித்யா பவன் மைலாப்பூர்

திரிசக்தி பப்ளிகேசன்ஸ்
டாக்டர் சுந்தர்ராமன்
இசைக்கவி ரமணன்
கவிஞர் கபிலன் வைரமுத்து
கவிஞர் ரத்திகா
கவிஞர் புகாரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும் முன்னுரை - காதல் வயதோடு சம்பந்தப்பட்டதா?


காதலிக்கிறேன் உன்னை எப்போதும் முன்னுரை

காதல் வயதோடு சம்பந்தப்பட்டதா? ஆம் என்றால், காதல் உடம்போடு சம்பந்தப்பட்டதா என்ற அடுத்த கேள்வி எனக்கு உடனே எழுகிறது!

காதல் உடம்போடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று கூறுவோருக்கு காதல் வயதோடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்றுதான் ஆகிறது.

ஆனால் காதல் மனதோடு சம்பந்தப்பட்டது என்ற தெளிவினைப் பெற்றவர்களுக்கு காதல் வயதோடு சம்பந்தப்பட்டது என்ற தவறான கருத்து எழுவதே இல்லை.

இளமை வயதோடு சமந்தப்பட்டதா? ஆம் என்றால், இளமை உடம்போடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்றாகிறது. இங்கே மனதை மறந்துவிட்ட கோணம் ஒரு கோணல் என்பது எத்தனை பேருக்குப் புரிகிறது?

என்றும் இளமையாக இருப்பது என்றால் எப்படி? இளமை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று ஆகும்போதுதானே அது நிகழக்கூடும்?

இந்தப் பிரபஞ்சம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? என்றால் அது முதுமையானதா? இயற்கை என்றென்றும் இளமையானதல்லவா?

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒவ்வொன்றும் என்றென்றும் இளமையானதல்லவா?

காதல் மனித மனங்களைப் புதுப்பிக்கவில்லையா? என்றால் அங்கே இளமை எப்படி இல்லாமல் போகும்?

காதல் என்பது உடலும் உடலும் சேரும் சில நிமிடக் கூத்தா? அல்லது காலமெல்லாம் உள்ளக் காட்டில் உதிராமல் வாசம் வீசிப் பூத்துக்கிடக்கும் மல்லிகைக் கூட்டமா?

நான் கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத அமர்ந்ததில்லை. என் கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று முடிவெடுத்து என்னை இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன.

அப்படி எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.

ஆகவே காமத்துப்பால் எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால் இயற்றுவதும் என் கையில் இல்லை. எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது.

அப்படி எழுதப்பட்ட காதல் கவிதைகளைத் தொகுத்து 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்' என்ற தலைப்பில் காதலோடு வெளியிடுகிறேன்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளை நான் எழுத எழுத இணையத்தின் உடனடிப் பிணைப்பால் எழுதிய பொழுதிலேயே வாசித்து நேசித்த இளமை மிகு காதல் உள்ளங்கள் இப்படி ஒரு தொகுப்பை நான் உடனே வெளியிடவேண்டும் என்று அடிக்கடி அடிக்கடி என்னை அன்போடும் அவசரத்தோடும் கேட்டுக்கொண்டன.

அவர்களுக்கும் இந்த நூலை இத்தனை சிறப்பாகத் தொகுத்து வெளியிட பாசத்தோடும் ஆர்வத்தோடும் முன்வந்த திரிசக்தி பதிப்பகத்தின் பெருஞ்சக்தி ஆசிரியர் கவிஞர் ரமணன் அண்ணா அவர்களுக்கும் என் நன்றிகள் ஆயிரமாய் ஆயிரமாய்....

என் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்தோடும் உணர்வுகளோடும் உட்கார்ந்து தேனுறிஞ்சிச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி ரசிகர்களுக்கு என் கவிதைகளின் உயிர் நிறைக்கும் நன்றிகள்.

அன்புடன் புகாரி
நவம்பர் 2010, கனடா

YouTube திருச்சியில் ’அறிதலில்லா அறிதல்’ வெளியீடு



கவிதை எழுதுவது இயல்பானது. அதை நூலாய் இடுவது சிரமமானது. அந்த நூலை பாராட்டுபவர்களின்முன் வெளியிடுவதோ மிகவும் இனிமையானது.

சேவியர் விமரிசனம் - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.

கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.

சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.

கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.

இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.

காதலில்லாமல் எப்படி
ஒரு நொடி நகர்த்துவது ?

என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !

காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.

வேகமாய் ஓடிக் கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்,
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்


என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.

“நேரம் போவதெங்கே தெரிகிறது ?
உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?

எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது.
எதைக் கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய் ?


நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.

புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.

அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.

குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன. உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.

புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.

இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.

(கவிஞர் சேவியர்)

நன்றி சேவியர் - அன்புடன் புகாரி