தேன் முகில்


பஞ்சுமன தேன்முகில்
எங்கள் வீட்டுச் செல்லம்

முகில்... முகில்.. என்றழைத்தால்
முன்னங்காலும் பின்னங்காலும்
ஊஞ்சலாட ஓடிவந்து
மடிவிழும் மதுரம்

பெத்தெடுக்கவில்லை
தத்தெடுத்தாலும்
தாய்களாய் இருக்கிறோம்
நாங்கள் நால்வரும்

தாலாட்டை மட்டும்
இந்தத் தேன்முகில்
தத்தித்தத்தி வந்து
முத்தம் முத்தமாய் இட்டு
எங்கள் கன்னத்தில்
பாடும்

நாங்கள்
எங்கள் முகிலை
கொஞ்சிக் கொஞ்சியே
துயில்வோம்

வீட்டுச் செல்லம்
என்பதோர் ஆனந்தம்
இப்படிச்
செல்லம் பெற்ற எவரும்
உள்ளம் சிதைந்து போவதில்லை

இறுக்கம் இன்னல்
நடுக்கம் துன்பம் என்று
எதுவந்தாலும் அதையெரித்து
ஆனந்தம் தரும் அழகு தீபம்
எங்கள் தேன்முகில் செல்லம்

உன்னோடுதான்
நான் உரசிப் படுத்து
துயில்வேன் என்று
ஓடிவந்து ஒட்டிக்கொண்டு
தலையணைக்கு வயிறுமுட்டும்

தேன்முகிலின் அழகு செய்கை
ஓர் ஆனந்தக் கவிதை

அப்படியே
எங்களை ஆழ்ந்து பார்த்து
அசைந்து நிற்பது
இன்னொரு பிரியக் கவிதை

வெளியில் சென்றுவிட்டு
வீடுவந்ததும்
எங்களைக் கண்டமாத்திரம்
தரைபுரண்டு அபிநயிப்பது
மற்றுமொரு பாசக் கவிதை

இப்படி
பல கவிதைகளால்
கண்களிலும் இதயங்களிலும்
தேனருவி கொட்டும் தேன்முகில்
எங்கள் உயிர்!