முத்தமிழ் இன்றியோர் வாழ்வேது

கவிதை என்பது மொழியுலகில் ஒரு கம்பீரமான யானை. அதை நிதிகேட்டுக் கையேந்த விடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆயினும் தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழ் வளர்ச்சி, புலம்பெயர் தேசத்தில் தமிழ்ப் பிள்ளைகளின் ஈர நாவுகளில் தமிழ்ச்சொல் சேவை போன்றன  என்றால் அந்த யானையே தன் உள்ளப் பெருக்கோடு ஓடிவந்து நிதி கேட்டு ஒவ்வொரு தமிழரின் முன்னும் பாசத்தோடு அசைந்தாடி நிற்கும். ஏனெனில் கேட்பது அதற்காக அல்ல அன்னைத் தமிழுக்காக என்பதால்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாத் தமிழ்மன்றம், ஒரு தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைக்க 2019 மார்ச் மாதம் ஓர் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நிதி திரட்ட முடிவெடுத்து, ஒரு விழா மலரும் வெளியிட்டது.  அம்மலரில் "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்" என்ற கருத்துடன் ஏன் இந்த அயல் மண்ணில் நமக்கு ஒரு தமிழ்ப் பண்பாட்டு மையம் தேவை என்பதை ஒரு கவிஞரின் பார்வையில் சொல்லத் தகுதியான வட அமெரிக்கத் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரான நீங்கள் ஒரு வாழ்த்துக் கவிதை எழுதித் தருவீர்களா என்று அன்போடு அழைத்தது.

ஆனால் அவர்கள் எனக்குக் கொடுத்த அவகாசமோ ஒரே ஒரு நாள் மட்டும்தான். உடனடியாக எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்தோடுதான் என்னிடம் வந்தார்கள். நானும் என் நிறுவனப் பணிச்சுமைகளுக்கு இடையே பணிநாள் ஒன்றில் இக்கவிதையை அவசர அவசரமாகப் படைத்துக்கொடுத்தேன். 

அமெரிக்கப் பொன்வானிலே
வெகு அழகான வைர நிலவாய்
மதுரத்தேன் வளைகுடாவில்
எழில் தவழ்கின்ற தமிழ்மன்றமே
     
தமிழ்மன்றப் பூஞ்சோலையில்
புதுத் தளிரொன்று துளிர்க்கின்றதோ
தமிழ்ப் பண்பாட்டு மையமென்றே
தனி நடைபோட்டு ஒளிர்கின்றதோ


இந்நாள் இந்நாள் இனியநாள்
இந்தத் திருநாள் தமிழரின் அமுதநாள்
கண்ணால் முன்னால் காணும்நாள்
இந்தப் பொன்னாள் தமிழரின் பெருநாள்

வந்தாள் வளர்ந்தாள் தமிழ்த்தாய்
இந்த வையத்தின் மையத்தில் கணித்தாய்
விதைத்தாள் விதைக்குள் முளைத்தாள்
பெரு விருட்சமாய்ப் பண்பாடு தழைத்தாள்

என்பாடு உன்பாடு எனப்பாடு
தமிழ்ப் பண்பாடு ஒன்றுதான் நிலைப்பாடு
வந்தாடு நின்றாடு வென்றாடு
தமிழ்ப் பண்பாட்டு மையத்தைக் கொண்டாடு

பண்பாடு புதைப்பது கண்ணியமில்லை
தமிழ் அடையாளம் தொலைப்பது தமிழினமில்லை
பண்பாடு காப்பதே தமிழனின் பெருமை 
தமிழ் அடையாளம் தோற்பதோ புழுவினும் சிறுமை

அமெரிக்கப் பொன்வானிலே
வெகு அழகான வைர நிலவாய்
மதுரத்தேன் வளைகுடாவில்
எழில் தவழ்கின்ற தமிழ்மன்றமே
     
தமிழ்மன்றப் பூஞ்சோலையில்
புதுத் தளிரொன்று துளிர்க்கின்றதோ
தமிழ்ப் பண்பாட்டு மையமென்றே
தனி நடைபோட்டு ஒளிர்கின்றதோ


வித்தகர் யாவரும் கூடிடுவோம்
அந்த விண்ணிலும் தமிழை ஏற்றிடுவோம்
முத்தமிழ் இன்றியோர் வாழ்வேது
தமிழ் முரசுகள் ஒலித்தே போற்றிடுவோம்

இரத்தமும் பீறிடும் தமிழாக
தினம் முத்தமும் ஊறிடும் தமிழ்பாட
பித்தமும் தெளிந்திடும் தமிழ்பேச
அந்தப் பேய்களும் வணங்கிடும் தமிழ்கேட்க

எத்தனைப் பொற்கரம் தமிழோடு
உயர் இமயமும் அற்பமே தமிழுக்கு
நித்திரை மறந்து தமிழெடுப்போம்
அந்த நீலவான் எங்கிலும் நட்டுவைப்போம்  
     
செல்வமும் செழித்தநற் தகையோரே
லட்சங்கள் வாரி வழங்கிடுவோம்
சிறுதுளிப் பெருவெள்ள இலக்காக
சில நூறுகள் எளியவர் ஈந்திடுவோம்
  
அமெரிக்கப் பொன்வானிலே
வெகு அழகான வைர நிலவாய்
மதுரத்தேன் வளைகுடாவில்
எழில் தவழ்கின்ற தமிழ்மன்றமே
     
தமிழ்மன்றப் பூஞ்சோலையில்
புதுத் தளிரொன்று துளிர்க்கின்றதோ
தமிழ்ப் பண்பாட்டு மையமென்றே
தனி நடைபோட்டு ஒளிர்கின்றதோ


வாழ்க்கை இனிமையானது

வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்

காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை

0

சிந்தனைத் துளிகள் சொட்டச் சொட்ட
அனுபவ ராகங்கள் கேட்கக் கேட்க
ஞானப்பல் முளைக்க முளைக்க

நிம்மதி செத்துப் போய்
நித்திரை அற்றுப்போய்
விரக்தி ரொம்பிப்போய்

அப்பப்பா
இது என்ன வாழ்க்கை
என்றே கருகினேன்

0

வாழ்க்கை என்ற அரிய பயிர்
கருகியபின் ஓடிவரும்
அழகு நீரோடைதான்
அனுபவமாம்

விரக்தியோடு சொன்னார்கள்
கண்டுணர்ந்தவர்கள்

ஆயினும் என்னைப்
புதுப்பிக்கும் மனத்தோடு
பொறுமையாய்க் காத்திருந்தேன்

கடந்த கணங்களின்
அழுக்குச் சுவடுகளைக்
கழுவிக்கொண்டே நடந்தேன்

முடிந்த துயரத்தின்
இருட்டுப் பிடியிலிருந்து
உயிர்த்தெழும் உர உயிராய்ப்
பூத்தெழுந்தேன்

உச்ச இறுக்கத்தில்
சிக்கிக் கிடந்ததால்
அது வைரம்

தப்புகளும் தவறுகளும்
வாழ்வின் தடங்கள்

அந்த
ஓடுகளை உடைத்துக்கொண்டு
புதிய பிறப்புகள்
மீண்டும் மீண்டும் பூக்கும்

வாழ்க்கை எப்போதும்
வசந்த வரங்களைப்போல
வந்துகொண்டே இருக்கும்

உடல் ஒன்றுதான்
உயிர் பிரியுமுன் வரும்
ஜென்மங்களோ ஆயிரம்

வாசலைத்
திறந்துவைப்போம்
நம்பிக்கை கொண்ட
வாழ்க்கை இனிமையானது
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்

புலம்பெயர்வு என்றதும், தமிழர்கள் நாடுவிட்டு நாடு புலம்பெயர்வதைப் பற்றியே பெரும்பாலும் நாம் நினைக்கின்றோம். நம் தமிழன்னை அவள் பிறந்த காலம் தொட்டு இன்றுவரை புலம்பெயர்ந்த வண்ணம் இருக்கிறாளே அதை மறந்துவிடுகின்றோம். தமிழன்னையின் புலம்பெயர்வும் தமிழனின் புலம்பெயர்வும் சில காலகட்டங்களில் இணைந்தே நிகழும் ஒன்றாகவும் இருக்கிறது.

ஓசைகளாய் மட்டுமே இருந்த தமிழன்னை இன்று கணினிக்குள் பெயர்ந்து மின்னடனம் போடுகிறாளே அதுதான் எத்தனை உயர்வானது? இன்று இணையத்தில் வெகு அதிகமாக புழங்கப்படும் சில மொழிகளுள் தமிழும் ஒன்று என்பது நமக்கெல்லாம் எத்தனை பெருமையானது?

தமிழன்னை பழைய ஓலைச் சுவடுகளோடுமட்டுமே முடங்கிக் கிடப்பவளல்லள். ஆற்றல்மிக தமிழர்களால் எக்காலத்திற்கும் ஏற்றவளாய்ப் புதுமைக்குள் புலம்பெயர்ந்த வண்ணமாய்த்தான் இருக்கின்றாள்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல் மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகு தமிழ் அமுதத் தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்