பாரதியும் இஸ்லாமும் - Nov 29, 2016 by மாலன்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’ பாரதியார்?” என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.
“சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை”
“அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?”
“சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்”
“சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்”
“நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்” என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார். கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்” என்றார்.
“பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்.”
“நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?”
நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:
நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள் ”
பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார். “இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?” என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.
“சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ‘பரமாத்மாவான அல்லாஹீத்த ஆலா அருள் புரிவாராக’ என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்? ”
“இது என்ன புதுக் கதை?”
“இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள். அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது.”
“படியுமேன். கேட்போம்”
“நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்”
“மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?”
” ‘மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்’ என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?”
“நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்”
நான் படித்துக் காட்டினேன்: “… எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும் கலந்தால் பொது இன்பம் ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம் முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.”
“அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?”
“படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:
“பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், “இனி என்ன செய்வது?” என்று தயங்கினான். அப்போது நபி, “அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. “என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்”
“கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?”
பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில் 1905 ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.
அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார் “.
“அவருக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?”
“அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் ‘தாடி ஐயர்’ (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை ‘. ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து ‘என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் . ஆனால் அதற்குப் பின்னும் 1918 ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார் “.
“இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?”
“இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை. கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ? ‘வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்’ என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார் “.
“ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?”
“அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது:” நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும் “என்று ஓரிடத்தில் எழுதுகிறார்”.
வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.
“ஓ! அப்படியா! அப்ப நான் வர்ரேன். உங்க ‘பாய்’ பாரதியாரிடமும் சொல்லுங்க! என்றார் நண்பர் கிண்டலாக.
நான் புன்னகைத்தேன்.
நலமாக இருக்கிறாயா
அம்மா

ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எங்களுக்குத் தவித்தபோது
உனக்கே தவித்ததுபோலத்
தண்ணீரோடு நின்றாய்
இன்று
உன் தவித்த வாய்க்குத்
தண்ணீர்தர உன்னுடன்
ஒருவருமே இல்லை
கண்ணீரோடு நிற்கிறாய்

*

பிள்ளைகள் சுகம் மட்டுமே
போதும் என்ற தியாகத்தைப்
பொட்டலாய்ப் போன
உன் வாழ்க்கையிலும்
தீபமாய் ஏற்றிக்கொண்டாய்

ஐந்து ஆண் பெற்ற உனக்கு
பெண்பிள்ளை என்றால் உயிர்

மருமகளிடமே
இத்தனைப் பாசம் கொட்டும் நீ
மகளிடம் எத்தனைக் கொட்டச்
சேர்த்துச் சேர்த்து வைத்துக்
காத்திருந்திருப்பாய்
உன் கனவுதிர் இரவுகளிலும்
தரிசுப் பகல்களிலும்

*

இன்று உன்னோடு
சேர்ந்து வாழும் ஜீவன்கள்
நீ பெற்ற பிள்ளைகள் அல்ல
நீ பெற்ற நோய்கள்தாம்

காசுதருவோம் வீடுதருவோம்
ஸ்கைப் வழியே முத்தம் தருவோம்
வேறு எதைத் தந்துவிடப் போகிறோம்

உன் உடல் நோய்க்கு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
கொண்டுவரச்சொல்லி
மருந்து தருவோம்

உன் மன நோய்க்கு
பொங்கும் கண்ணீரைத் தவிர
வேறு என்ன தருவோம்

*

வெளிநாடு சென்றால்
எவனும்
பணக்காரன் ஆவதில்லை
எல்லோருமே
பிச்சைக்காரர்கள்தான்
ஆகிறார்கள்

*

விமானம் ஏற
உன் கால்களுக்கு வலுவில்லை
ஆகாயப் பயணம் செய்ய
உன் நெஞ்சுக்குள் திடமூச்சு இல்லை

தாபங்களும் தவிப்புகளுமோ
நாளும் பொழுதும்
பல்லாயிரம்கோடி மைல்களை
அநாயாசமாய்க்
கடந்து கடந்து உயிர்கடுக்கத்
தேம்பி நிற்கின்றன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எப்படி
நலமாக இருப்பாய்

நீ எத்தனைதான் சமாளித்தாலும்
உன் காயங்களை மறைத்து மறைத்து
நல்லா இருக்கேண்டா நல்லா இருக்கேண்டா
என்று நீ சொல்லிக்கொண்டே இருந்தாலும்

உன் பிள்ளைகள் எல்லோரையும்
ஒருநாளேனும் ஒன்றாய் ஒரு கூடத்தில்
ஒற்றை இரவிலாவது
வரிசையாய் மெத்தையிட்டு
அடுக்கடுக்காய்ப் படுக்க வைத்து
இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசிவரை
பார்த்துப் பார்த்து பேசிப்பேசி
அணைத்து அணைத்து
ஆனந்தக் கண்ணீர் உகுத்து உகுத்து
உறங்கித் தீர்க்க வேண்டும்
என்ற உன் ஆசையை உன்னால்
மறைக்கவே முடியவில்லையே
அம்மா

*
நலமாக இருக்கிறாயா
அம்மா

இதோ
இந்த மண்ணில்தான் கேட்கிறாய்
உன் சொர்க்கத்தை

அது ஒன்றும்
கிடைக்கவே கிடைக்காத
பேராசையும் இல்லை

என் வேண்டுதலும் உனக்காக
அது ஒன்றுதான் அம்மா

இதோ
வெகு பக்கத்தில் இருக்கிறது

இதோ
இப்போது வந்துவிடப் போகிறது

இதோ இதோ
எல்லோரும் ஒன்றாக
உன்னுடன் இருப்போம்

அந்த நினைவுகளில்
கனியும் கனவுகளில்
நீ நலமாக இரு அம்மா

- அன்புடன் புகாரி  நவம்பர் 5, 2016
*****

எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறது

வேறு எவரின் கதையோடும்
ஒன்றிப்போகாமல்
தனக்கே தனக்கான கதை என்று
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எவ்வளவு விளக்கமாகச் சொன்னாலும்
உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது
என்று சத்தியம் செய்யும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எனக்கு நடந்ததுபோல்
இந்த உலகில் எவருக்குமே
நடந்துவிடவே கூடாது என்று
கண்ணீராடிக் கேட்டுக்கொள்ளும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

என் நிலை மட்டும்
எவருக்கேனும் வந்திருந்தால்
என்றோ அவர்
மண்ணோடு மண்ணாக
மடிந்துபோயிருப்பார் என்று
திட்டவட்டமாகச் சொல்லும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

ஒவ்வொரு கையின்
ரேகைகளைப் போலவே
அத்தனைபேர் வாழ்க்கையுமே
வித்தியாசமானவைதானா

வலி என்பது
போதை தரும் சக்தியா

உள்ளுக்குள் வெகுநாட்களாய்
ஊறி ஊறிப் புளித்துப்போய்
நுரைத்துக்கொண்டு நிற்கும்
உணர்வுகளும் நினைவுகளும்தான்
வலியா வேதனையா

மதுவில் மூழ்கியவன் உளறுவதைப்போல
வலியில் மூழ்கியவனும்
தான் என்ன சொல்கிறோம்
எப்படிச் சொல்கிறோம்
என்பதையே அறியாதவனாய்ப்
பினாத்துகிறானே

ஆனாலும்
ஒருவனின் துக்கத்தைப்
போதை என்று சொல்லும்போது
உள்ளுக்குள் திரள்திரளாய்
துக்கம் பற்றிக்கொண்டு வருகிறது

துக்கத்தைவிட்டு
விலகிக்கொள்ளுங்கள்

துக்கம்
நம் உடன் பிறந்தவையல்ல

காலில் குத்திய முள்ளைக்
கையில் எடுத்துத்
தலையுல் குத்திக்கொள்வதுதான்
வலியும் துயரமும் துக்கமும்

உங்கள் கதைகளை எல்லாம்
மூட்டைகட்டிக்
குப்பையில் எறியுங்கள்

எறிந்த குப்பையை
மறக்காமல்
தீயிட்டுக் கொளுத்திவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் நடங்கள்

பிறகும் எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கும்

ஆனால் அது
பொதுவான சுகமான
ஒரே கதையாக இருக்கும்
வெற்றிக்
கதையாக இருக்கும்

அன்புடன் புகாரி
20161105