கனடாவில் பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி அவர்களின் மறைவு

மறைவு: ஜனவரி 22 அதிகாலை 3:28

என் ஆழ்ந்த அஞ்சலிகள்

எனக்கும் ஆர் எஸ் மணி அவர்களுக்குமான தொடர்பு தமிழின் வழியேதான் வந்தது. நெருங்கிய குடும்ப நண்பர் ஆனார். அவரைச் சந்தித்தால் எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு மகிழ்ச்சி வரும் என்று சொல்லவே முடியாது.

என் கண்களுக்குள் நிறங்களை கலை நயத்தோடு அள்ளி இறைக்கும் அவரின் ஓவியங்களில் ஒன்றை எனக்குப் பரிசாக வழங்கி இருக்கிறார். அது என் வீட்டுச் சுவரில் இன்றும் தொங்கிக்கொண்டிருக்கிறது

என் இரண்டு கவிதை நூல்களுக்கான அட்டைப் படங்களை வெகு நேர்த்தியாக வடிவமைத்துத் தந்தார். என் புகைப்படங்களை மின்னோவியத் தூரிகையால் மெருகேற்றி மின்னச் செய்தார். அத்தனை அன்பு அவருக்கு என் மீது.

என் கவிதைகளை வெகுவாக ரசிப்பார் பாராட்டுவார். என் கவிதைகளுள் சிலவற்றை அவரே தேர்வு செய்து அவரே இசையமைத்து அவரே அருமையாகப் பாடி எனக்கு அனுப்பிவைத்து என்னை நன்றிப்பெருக்கோடு நிற்க வைத்திருக்கிறார்

இசையில் மயங்கும் இனிய உள்ளம் அவருக்கு. என்னையும் அவரோடு இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உயர் ரசனைகளை ஊட்டினார்.

புகைப்படங்கள் எடுப்பதிலும் காணொளிகள் எடுப்பதிலும் கைதேர்ந்த கலைஞர் ஆர் எஸ் மணி அவர்கள்.

என்னுடைய அன்புடன் குழுமம் நடத்திய காணொளிக் கவிதைப் போட்டியில் பரிசு வென்றார். அது உலகத் தமிழர்கள் அனைவருக்குமான கவிதைப் போட்டி.

அவரை நான் இழந்தது என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல் நெஞ்சம் பதறுகிறது.

அவரின் துணைவியாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது? பாசத்தில் பூத்துச் சிரிக்கும் அவரின் முகத்தில் சோகத்தை எப்படிக் காண்பது?

பல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி அவர்களுக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நான் இப்படி ஒரு வாழ்த்துப்பா பாடினேன். இதை மீண்டும் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்

*

பட்டு மிளிர்கின்ற
விழிமணி - உயிர்
தொட்டு அணைகின்ற
கவிமணி


இட்டு நிறைகின்ற
புகழ்மணி - பனி
கொட்டும் கனேடியத்
தமிழ்மணி


மெட்டுக் கவிபாடும்
குரல்மணி - நிறம்
சொட்டித் தாளேறும்
விரல்மணி


எட்டுத் திசைவெல்லும்
நவமணி - கலை
விட்டு விலகாத
தவமணி

அன்புடன் புகாரி

வாட்சப்...வாட்சப் வழியேதான்
இன்று உலகமே
சுழல்கிறதோ

இங்கே ஏறும்
ஒரு துண்டுப் பதிவு
வேற்றுக் கோள்களுக்கும்
உலாப் போவதாகப் படுகிறது

சில ஏற்றுமடல்களைக்
காணும்போது
அவை
மனிதன் படைத்ததுபோலவே
இல்லை

சுற்றும் கோள்களுக்கு
இடையிலும்
அதிவேகமாகச்
சுற்றிச் சுழலும்
வாட்சப்பே

நீதான்
இன்றைய உலகை
உருட்டியெடுக்கும்
உச்சக்கட்ட ஊடகமோ

அன்புடன் புகாரி

என் கவிதை வரிகளைக் கண்டபோது....


ஏதேனும் விழாவிற்குச் செல்லும்போது அங்கே வாசிப்பதற்காக என் கவிதைகளுள் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி நேற்று நான் என் பொங்கல் கவிதையை எடுத்துச் செல்ல விரும்பினேன்.
என்னுடைய வலைப்பூவில் தேடுவதைவிட கூகுள் தேடல், என் கவிதையை உடனே கொண்டுவந்து தரும்.
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
என்று தொடங்கும் என் பொங்கல் வாழ்த்தைக் கூகுளில் தேடினேன்
வந்து விழுந்த சுட்டிகள் ஆனந்தத்தையும் ஒரு சிறு வருத்தத்தையும் தந்தன.
பலரும் என் பொங்கல் கவிதையை எடுத்தாண்டிருக்கிறார்கள். அது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. ஆனால் எழுதியது நான் என்பதைக் குறிப்பிடவில்லை. இது சற்றே வருத்தத்தைத் தந்தது. என்றாலும் இதிலும் ஒரு மகிழ்வினைக் கண்டேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எழுதி இடும்போதெல்லாம் கணியன் பூங்குன்றனார் என்று எழுதுவதில்லை, இது போலவே பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்று பலரின் வரிகளை எடுத்தாளும் போதும் பலநேரம் எழுதியவரை இடுவதில்லை.
அந்த அளவுக்கு என்னை உயர்த்திவிடாமல், எழுதிய என் பெயரை எங்கேனும் குறிப்பிட்டுவிடுங்கள். நன்றி
ஒரு சிலரின் எடுத்தாள்கை மட்டும்:
ம்ஹூம் இப்படியே நீட்டிக்கொண்டு போகமுடியாது என்னால், இதோ நீங்கள் தேடவேண்டிய கூகுள்

இணையப் பேரரசு


>>>மேலும் மேலும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியையே விரும்புகிறார்கள். அது ஏன், அதற்கு என்ன தீர்வு என்பதை சிந்திக்க வேண்டும்<<<<
1. பள்ளி இறுதிவரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி கட்டாயம். 
2. பள்ளி இறுதிக்குள் சரளமாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் உச்சரிக்கவும் கற்றுத்தரும் சிறப்புப் பாடத்திட்டம்
3. கல்லூரிகளில் அவரவர் விருப்பம்போல ஆங்கிலவழி, தமிழ்வழிக் கல்வி
4. கலைச்சொல்லாக்கத்தில் கெடுபிடி காட்டாத ஆங்கிலப் பெயர்ச்சொற்களை ஏற்கும் அறிவியல், கணிதம் போன்றவற்றின் பாடத் திட்டங்கள்
5. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. தனியார் நிறுவனங்களில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை.
6. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கு தமிழகத்தில் முன்னுரிமை
இப்படியான மாற்றங்களைக் கொண்டுவந்த பின்னர் தமிழ் மக்கள் எதை விரும்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
அன்புடன் புகாரி
பள்ளி இறுதிவரை தமிழ்வழிக் கல்வியையும் அதன்பின் ஆங்கிலவழிக் கல்வியையும் நான் ஆதரிக்கிறேன்.

இப்படியே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியில் பள்ளி இறுதிவரை பயின்றும் பின் ஆங்கில வழியில் பயின்றும் வந்தால் இந்தியா சிறக்கும்.

இடையில் இந்தியை நுழைத்துத்தான் இந்தியக் கலாச்சாரச் செழுமைகளைப் பாழ்படுத்துகிறார்கள். இந்தி வேண்டுமானால் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களின் தாய் மொழி என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. அந்த அளவுக்கு அங்கே அழிப்பு நிகழ்ந்துவிட்டதாக இருக்கலாம்.

அன்புடன் புகாரி
ஆங்கிலத்தைக் கொண்டு தமிழை அழிக்க முடியாது. தமிழைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக ஆக்காமல்தான் தமிழை அழிக்க முடியும்.

தமிழ்வழிக் கல்வியைத் தமிழகம் போற்றாவிட்டால் தமிழ் எப்படி வாழும்.

நானறிந்து இணையத்தில் தமிழில் எழுதும் பெரும்பான்மையினர் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள். கல்லூரியில்தான் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்கள்
தமிழ் செத்தால்தான் என்ன? யாருக்கு நட்டம்? என்று கேட்போர் அதிகரிப்பதைக் காண்கிறேன்
எங்கே பிழை?
தமிழுக்கு என்று ஒரு நாடு இல்லை. நாடில்லாத தமிழைக் கட்டிக் காக்க வளர்த்தெடுக்க அதன் வரலாறு பேச புழக்கத்தில் இருந்த சொற்களெல்லாம் உதிர்ந்துபோகாமல் காக்க என்று செயல்படும் எந்த வலுவான அமைப்பும் ஓர் அரசு இல்லாமல் திறம்பட நிகழ்வது கடினம்
தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் பட்டிமன்றங்கள் நடத்தவே என்றாகின
நடிகர்களை வைத்து கூட்டம் சேர்த்து கேளிக்கையில் கரைந்து போகின்றன சங்கங்களின் கொள்கைகள்
நுணுக்கமான ருசிமிக்க தமிழ் பேசும் மேடைகள் மிகக் குறைவு, ஊடகங்கள் இல்லவே இல்லை
கடந்த ஆண்டு கம்பனின் கவித்திறன் பேசிய ஓர் அருமையான உரை கேட்டு பெருமகிழ்வடைந்தேன்.
அது போல் இன்னொன்று என்று வரும் என்ற ஏக்கம்மட்டுமே மீதமாக இருக்கிறது இன்றுவரை
ஒன்றைக் காக்க வேண்டும் என்றால் முதலில் அதை நேசிக்க வேண்டும், அல்லவா?
நேசிக்கும் படியான தமிழின் செழுமைகள், வேர்கள், பண்பாடுகள் எங்கே பேசப்படுகின்றன?
கேட்டுப் புரிந்துகொள்வோர், புரிந்து பூரிப்போர் பத்துக்கு ஒருவர் தேறுவரா?
அன்புடன் புகாரி