கொஞ்சு முகப் பிஞ்சுப் பெண்ணே

அந்நியனோ
அடிக்கடி வீடுவரும்
அங்கிளோ

தொடுதல்
காமத் தொடர்தலுக்கானத்
தூண்டில்கள்

தொடும் விரல்களின்
வேர்களில்
தீவிர காமத் தாகம்
தகித்துக்கொண்டிருக்கலாம்

சொல்லித்
தருவதில்லையா
உன் அம்மா

உன்
ஐந்தே வயதுக் காலழகு
அம்மாவுக்கு அற்பம்தான்
அலைபாயும்
கண்களில் பட்டாலோ
அபாயமல்லவா

பாவம்தான்
நீ
என் கண்கள்
கழன்று விழுகின்றன
உன்முன்
துயரத் துளிகளாய்

என்செய்வது
அறம் அவிழ்ந்த பாவிகளின்
பூமியாகிப் போனதே
நம் மாண்புமிகு மண்

முகம்விரித்து முறுவலித்து
சாக்லெட் தரும் உள்ளம்
அன்பு உள்ளமாகத்தான்
இருக்க வேண்டும்
ஆனால்
எக்ஸ்ரே எடுத்தால்
கபடம் மறைத்த வாய்ப்பல்லவா
அதிகரித்துக்கிடக்கிறது

யார் தொடலாம்
எவர் தந்தால் பெறலாம்
யாரழைத்தால் செல்லலாம்
என்று சொல்லித் தரும்
தாயே
ஏமாந்து நிற்கிறாளே

பாழும் உலகமம்மா இது
மிருகங்கள்
கட்டவிழ்ந்துத் திரிகின்ற
பாதகக் காலமம்மா

ஊரோர ஐயனாரின்
கொடுவாள் எடுத்து
நான்
வீட்டுக்குள் விளையாடும்
உன் பிஞ்சுப் பருவத்தைக்
கொய்கிறேன்
உன் சிறுமி ஆசைகளைத்
துண்டிக்கிறேன்
உன் அடிப்படைச் சுதந்திரத்தைக்
கொல்கிறேன்

தறிகெட்டத் தறுதலைகளுக்குத்
தண்டனையாய்
அக் கருந் தலைகளை
அந்நொடியே வெட்டிவீசும்
கட்டுமானமும்
கட்டளையும்
களையெடுப்பும்
இல்லையே இங்கே
நான் வேறென்ன செய்ய?

அன்புடன் புகாரி

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - Edited Version

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரையே எழில் முத்திரையே
சொல்லிவிடு உன் சூட்சுமத்தை

அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்

முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ

கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி

எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே

முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே

முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும் வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்
ஏப்ரல் 8, 2018 கனடா ஸ்டெர்லைட் போராட்ட நாளில்...

காப்பரைத் தின்று
தமிழினத்தின் மீது கேன்சரைக் கக்கும்
வேதாந்தா பணப்பிசாசே

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரங்கள்
சிதைத்தழிய ஆட்டிப்படைக்கும்
அணில் அகர்வாலே

தமிழினத்தின் மீது
தொடர்த் துயரங்களை
வாரி வாரி இறைக்கும்
கொடுங்கோல் மத்திய அரசே

அடடாவோ
இது என்ன கொடுமை

சுந்தரத் தமிழினத்தின்மீது
சீறிப்பாயும்
ஸ்டெர்லைட் கருநாகமே

ரத்தினகிரி உன்னை மொத்தி அனுப்பும்
தமிழ்நாடு மட்டும் ஆரத்தி எடுத்து அணைக்குமா

குஜராத் உன்னைக் குதறியனுப்பும்
தமிழ்நாடு மட்டும் கும்பிடுபோட்டு வரவேற்குமா

கோவா உந்தன் மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும் தத்தெடுத்து உச்சிமுகருமா

தமிழினத்தின் மீது
தரங்கெட்ட அரசியல் மிருகங்கள்
தரிகிடதித்தோம் போடுகின்றன

குரங்குகள் எல்லாம் தாவிக் குதித்து
நட்டநடுவீட்டிலேயே ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில் சிறுநீர் கழிக்கின்றன
படுக்கையறையில் மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில் நாற்றுநடும் தினவு
எப்படி வந்தது உங்களுக்கு?

எங்கள் பொறுமையைக் கண்டு
அடடா கோழைகள் தமிழர்கள் என்று
தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்களா

நீறுபூத்த நெருப்பு
எங்கள் மறத்தமிழர் மார்பு

அது சிறுமைகண்டு பொங்கும்போதும்
விம்மித் துடித்து எழும்போதும்
தடுத்து நிறுத்த இந்தத் தரணியில்
எந்த ஒரு சக்திக்கும் எள்ளளவு திராணியும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

உங்கள் கொட்டங்கள் அனைத்தையும்
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
எங்கள் தமிழ் மண்ணையும்
எங்கள் தமிழர்தம் வளமிகு வாழ்வையும்

***பாரதிதாசனைத் துணைக்கழைக்கிறேன்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்

தமிழ் வாழ்க தமிழினம் வளர்க
துரோகங்கள் ஒழிக துயரங்கள் ஒழிக

பிரிக்கவும் சேர்க்கவும் பழகவும்

மகிழ்ச்சியையும் முத்தத்தையும்
பகிர்ந்தால் மட்டுமே
இன்பத்தைச்
சுவைக்க முடியும்

கோபத்தையும் ரகசியத்தையும்
பகிராவிட்டால் மட்டுமே
நிம்மதியைக்
காக்க முடியும்

உதடுகளையும் உள்ளத்தையும்
ஒட்டவைத்தால் மட்டுமே
சத்தியத்தில்
நனைய முடியும்

துக்கத்தையும் தூக்கத்தையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
நெடுந்தூரம்
கடக்க முடியும்

கண்களையும் காட்சிகளையும்
பிணைத்துவைத்தால் மட்டுமே
உலகத்தை
ரசிக்க முடியும்

கனவுகளையும் யதார்த்தங்களையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
வாழ்க்கையை
ருசிக்க முடியும்

சிந்திப்பையும் சிரிப்பையும்
பிண்ணிவைத்தால் மட்டுமே
செவிகளை
ஆள முடியும்

கருத்தையும் கட்டளையையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
ஏற்பினை
எட்ட முடியும்

உயிரையும் உணர்வையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
அன்பை
வளர்க்க முடியும்

புகழையும் பேச்சையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
சுயத்தைக்
காக்க முடியும்

நட்பையும் நம்பிக்கையையும்
இணைத்து வைத்தால் மட்டுமே
மெய்யாக
நகைக்க முடியும்

காதலையும் கபடத்தையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
உறவுகள்
தழைக்க முடியும்

காயங்களையும் கருணையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
எவரையும்
மன்னிக்க முடியும்

வார்த்தைகளையும் வக்கிரங்களையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
வன்முறையைக்
கொன்றழிக்க முடியும்

இறைவனையும் நம்பிக்கையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
இறைவனிடம்
கையேந்த முடியும்

நன்மையையும் தீமையையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
இன்னல்களை
எடுத்தெறிய முடியும்
உன்னை நீ நேசித்தால்...

யாரோ உன்னை
நேசிக்கலாம்
யாரோ உன்னை
வெறுக்கலாம்

சிலர் நேசிப்பதால்
சில புன்னகைகள் உன் தோட்டதை
மணங் கமழச் செய்யலாம்

ஆனால்
எவரோ உன்னை வெறுப்பதால்
உன் வேர்கள் ஒருக்காலும்
நீரின்றிப் போகப்போவதில்லை

நேசிப்போர் நேசிக்கட்டும்
வெறுப்போர் வெறுக்கட்டும்
பெருவிளைவு அதிலேதுமில்லை

ஆனால்
உன்னை நீ நேசிக்கிறாயா
என்பதில்தான் இருக்கிறது
அறிவு அறிவு பேரறிவு

ஏனெனில்
நீ நேர்மறையாய்
நெஞ்சு நிமிர்த்தி நிற்பதென்பது
வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை
உனக்கு உள்ளிருந்துதான்
வெளியே வருகிறது

அந்த உள்
உருவாவது
வேறு எவற்றாலோ
அல்ல
உன்னை
நீ
நேசிக்க நேக்கத்தான்

அன்புடன் புகாரி


ஒரு நிமிடம் ஒத்திவைத்தால்

அன்பின் சிறப்பே
பேராழம்தான்
பிரிதொரு கருத்தில்லை

அன்புடை நெஞ்சம்
பழகுநாள் பொழுதுகளில்
கொதியுணர்வுக் கோட்டைதான்
குறையேதும் இல்லை

ஆனபோதிலும்
திடீர் உதய உணர்வுகளை
திறம்பட அலசாமல்
தாமதித்துப் பொழியாமல்
பேரன்புடைய உறவுகளிடமே
சட்டெனக் கொட்டிவிடும் துயரம்
உயர்ரக நெய்யில் விழுந்து
உயிரிழக்கும் மரணம்

ஒரு நொடி நாவசைவை
ஒரு நிமிடம் ஒத்திவைத்தால்
உண்மை அன்பு
உடையாத உயரம்
ஏறிக்கொள்ளும்

ஒரு நாள் ஒத்திவைத்தாலோ
அன்பின் வெள்ளத்தில்
அழகிய பாசப் படகில்
அழியாத ஜென்மப் பிணைப்பில்
உறவின் ஆயுள்
அற்புதமாய் அமர்ந்து
அமர்க்கள உலாப்போகும்

அன்புடன் புகாரி
இதயக்கூடு திறந்துவைத்து...

ஒருவன்
நல்லவனாய் இருப்பதை
ஏமாளியாய் இருக்கிறான்
என்று நகைப்பவர்கள்
ஏமாற்றுக்காரர்கள் என்று
உறுதியாய்த் தங்களை
அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்

நல்லவன் என்பது
ஏமாளி என்று பொருள்தரும்
குணாதிசயமன்று

எந்த நல்லவனும்
ஏமாந்து நிற்கத் தயாராய்
இருப்பதே இல்லை

நல்லவனாய் இருப்பதென்பது
உன்னையும்
நல்லவனாய்க் காண
விழைகிறேன் என்பதற்கான
அறிவிப்புப் பலகை

அவ்வகை அறிவிப்புகளின்
சங்கமங்களால்
நல்லோர்
நல்லோரைக் கண்டு
கட்டியணைத்து
அன்புபாச முத்தமிட்டு
மரணம்வரை உயர்ந்துவாழ
உறுதி எடுக்கிறார்கள்

அதுவே
நல்லவர்கள் பெருகவும்
ஏமாற்றுக்காரர்கள் அழியவும்
இறைவன் எத்திவைத்த
ஏற்பாடு

இறைவன்
இருக்கிறான் என்று
நம்புவதாலேயே
உள்ளங்கையில்
இதயக்கூடு திறந்துவைத்து
யாதொரு சூதுமின்றி
வெளிப்படையாய்
உரையாடுகிறார்கள்
நல்லவர்கள்

அப்படி
உயிரின்
சிற்றிழைகளும் தெரிய
அளவளாவும்
ஒருவனைக் கண்ணுற்றதும்
சிக்கிவிட்டான் ஓர் அடிமையென்று
சப்புக் கொட்டுபவன்
மனிதனை வெட்டித் திண்ணத்
தேடியலையும்
மனிதக்கறி வெறியன்

அவ்வாறான
மனிதக்கறி வெறியர்களைக் கண்டால்
தானும் வெறியனாய் ஆக
எந்த ஒரு நல்லவனும்
சிற்சிறு நொடியும்
எண்ணுவதே இல்லை

மாறாக
அவன் நிழல்தீண்டும்
தளத்தையும் விட்டு
வெகுதூரம் விலகி
நல்லோர் வாழும்
சுவனபுரிக்குள்ளேயே
ஓடிப்புகுந்து
பெருமூச்சுவிடுவான்

அவ்வகைப்
பெருமூச்சுகளால் ஆனதே
இம் மண்ணிலேயே
சொர்க்கம் காணும்
மகத்துவத்தின் பெருவெளி

அன்புடன் புகாரி