50

நட்பைத் தவிர்க்கலாம்
காதலைத் தவிர்க்க இயலாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

49

அப்படி என்னதான் இப்படி
ஓயாமல் பேசிக்கொண்டே
இருக்கிறாய்

கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
அலுக்கவே இல்லை
என்ன கேட்டேன் என்றுதான்
தெரியவே இல்லை

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
சலிக்கவே இல்லை
என்ன பார்த்தேன் என்றுதான்
புரியவே இல்லை

செவி அறியாமல் நீ பேசும் ஒலி
என் இதயக் கூட்டுக்குள்
சங்கீதம்

விழியறியாமல் நீ வீசும் ஒளி
என் உள் வானத்தில்
விடியல்

உன் சங்கீதம் சாய்ந்தால்
என் இதயம் ஓயும்
உன் விடியல் தாமதித்தால்
என் உயிர் தவறும்

உன் புகைப்படம் கண்ட
சிறுபொழுதில் இப்படி உளறினால்
உன்னை நேரில் கண்டு
நான் என்னாவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
**** 49 நான் யார்


பத்துமாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க்க அறை தந்த
தாயிடம் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

வாழ்வெனும் ஓட்டை ஓடத்தின்
வழிபாதைகளையும்
அக்கறையாய்ச் செப்பனிடும்
தந்தையைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

என் மோக அனல் மூச்சில்
முழுச் சுவாசம்தேடி
என்னைப் பிரித்தெடுக்கும்
பெருமுயற்சியில்
சரிபாதிப் பங்கெடுக்கும்
இல்லாளைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

கூத்தாடும் குரங்கு மனத்தைத்
தொட்டும் அதட்டியும்
நில்லென நிலைப்படுத்தும்
நண்பர்களைக் கேட்கவேண்டும்
என்னைத் தெரியுமா என்று

ஏனெனில்
என்னை எனக்கே தெரியாமல்
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடைதேடி இருக்கிறேன்

இருந்தும்
இன்னமும் எனக்கது
பனிமூடிய பேருண்மைதான்

48

ஏனோ இப்படி
என் இதயத்தின் சந்துகளில்
நடையாய் நடக்கிறாய்
உனக்குக்
கால்கள் வலிப்பதில்லையா

ஏனோ இப்படி
என் தூக்கத்தை தூக்கிச்சென்று
காலுக்கிடையில் வைத்துக்கொண்டு
மௌன மரக்கிளையில்
பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்

யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா

என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக்
கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா

சொல்
உன் கண்களின் தீபம்
எப்படி என்னை மெழுகுவத்தியாக்கி
இப்படி உருக்கி எடுக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***47

பெண் 2020


பக்கத்துவீட்டுப் ப்ரியா
சின்னவீடு வைத்திருக்கிறாளாம்

கடந்த மாதம் வரை
அலுவலகம் விட்டு வரும்போதெல்லாம்
பாதி நாட்கள் அங்கும்
மீதி நாட்கள் இங்குமாய்த்தான் தங்குவாளாம்

கடந்த இரு மாதங்களாக
பொறுத்துக்கொள்ளமுடியாத
பெரியவீட்டுக் கணவனால் சச்சரவுகள் எழுந்ததாலும்

தன் குழந்தைக்கு தாயின் பெயரோடு
தன் பெயரையும் இணைக்க வேண்டும் என்று
மரபணு வழியாய் தந்தையென அறியப்பட்ட
மூன்றாமவன் ஒருவன் வழக்குத் தொடுத்ததாலும்

எவருக்குப் பிறந்திருந்தாலும்
தன்னுடையவர்கள்தான் என்பதால்
பிள்ளைகளும் தானும் ஒரே வீட்டில்தான்
இருப்போம் என்றும்

மூன்றாமவன் குழந்தையை
வாரம் ஒரு தினம் மட்டும்
வந்து பார்த்து விட்டுச் செல்லலாம் என்றும்

எக்காரணம் கொண்டும்
பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்
எந்த ஆணின் பெயரும்
இணைக்கப்படமாட்டாது என்றும்

மரபணு வழியாய்
தந்தையென அறியப்பட்டாலும்
முறையாகத் திருமணம் செய்துகொள்ளாதவர்
குழந்தைகளிடம் உரிமைகொண்டாட
இயலாது என்றும்

சின்னவீடும் பெரியவீடும்
தான் விரும்பி அழைக்கும்போது மட்டுமே
வந்து இருந்துவிட்டுச் செல்லவேண்டும் என்றும்
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளாம்

இருவரும் சமயலறையிலும் சலவையறையிலும்
அடித்துக்கொள்ள மட்டார்கள்
என்று வாக்குறுதி வழங்கும் பட்சத்தில்
இவளுடனேயே ஒரே வீட்டில்
தங்கிக்கொள்ளலாம் என்றும் சலுகை தந்தாளாம்

இருவருடனும் காட்டும்
அன்பிலும் காதலிலும் தனக்கு
எந்தவித பாரபட்சமும் இல்லை என்றும்
இரு கண்களாகவே இருவரையும் மதிப்பதாகவும்
உறுதி கூறினாளாம்

ஏற்புடையது என்ற தீர்ப்போடு
மூன்றாவது இணைய மன்ற வழக்குச் சுற்று
முந்தாநாள்தான் முடிவடைந்ததாம்.

47

மொட்டுகள்தாமே
மலர்களாய்ப் பூக்கும்
இருதய மணம்வீசி
காதலாய்ப் பூத்தபின்னர்
எப்படி உன் விழிகள்
மொட்டுகளாய் மூடிக்கொண்டன

உன் நினைவுகள் முரசுகொட்ட
என் இமைகள் ஒளிகின்றன
விழிகள் சிவக்கின்றன
பொழுதுகள் கனக்கின்றன

பளு தாங்காத வண்டிச்சக்கரமாய்
என்னுயிர் கிறீச்சிட்டுக் கதறுவது
இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

46

அழகு
காதலுக்கு எழுதிப்போட்ட
நல்வரவுப் பலகை

நினைவுகள்
வாசல்படி

நட்பு
முற்றம்

உயிரே
இருப்பிடம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****46 அட எப்படித்தான் வரும் நிம்மதி என்றேன் சலிப்போடு

இந்தக் கவிதை முழுவதும் கேள்வியும் பதிலுமாகவே ஓர் உரையாடலாய்ச் சென்றுகொண்டிருக்கும். சினிமாவில் இரட்டை வேடம் போடுவதுபோல் கேள்வி கேட்பதும் நானே பதில் சொல்வதும் நானே. இதில் கேள்வி கேட்பவனைப் பிடித்திருக்கிறதா அல்லது பதில் சொல்பவனைப் பிடித்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் ;-)


மூச்சுக்கு
முச்சு தேவைப்பட்டு
மூச்சு நின்றபின்
கிட்டும்
அமைதியா நிம்மதி
என்றேன்

வாழ்வின் தேவைக்கு
செத்தபின் வருமென்பது
எப்படி ஈடாகும்
என்கிறாய்

*

என்னிலும்
துயரத்தில் தள்ளாடும்
உள்ளங்களைக் கண்டு
சமாதானம் கொள்ளும்
புத்திதான்
நிம்மதி என்றேன்

உன்னை
மீறும் எண்ணங்களை
எத்தனைநாள்
ஏமாற்றுவாய் என்கிறாய்

*

எல்லாம் துறந்து
எதையும் சுவைக்காமல
மௌனித்துக் கிடப்பதே
நிம்மதி என்றேன்

இயற்கையைச்
சுத்தமாய்த் துடைத்தெறிவது
எப்படி நிகழும்
என்கிறாய்

*

அன்னை
மடி துயிலும்
மழலைச்சுகமே
நிம்மதி என்றேன்

வளராமல் இருக்க
வரம் இல்லையே
என்கிறாய்

*

காதலியின் அணைவில்
நினைவுகளற்றுப் பறக்கும்
சிறகுகளே
 நிம்மதி என்றேன்

ஒடிப்போயோ
அல்லது உடனிருந்தோ
ஒரு நாளவள்
காணாதொழிவாளே என்கிறாய்

கண்மூடிக்
கண்ணீர் பெருக்கி
தெய்வமே என்று
காலடி கிடக்கும்
பக்தியே நிம்மதி என்றேன்

தினமும் தொழுதெழும்
தீவிர பக்தனும்
தாளாத்துயரென்று வந்துவிட்டால்
இருக்கிறாயா தெய்வமே
என்றுதானே
அழுகிறான் என்கிறாய்

*

அட எதுதான் நிம்மதி
எங்குதான் நிம்மதி
எப்படித்தான் வரும் நிம்மதி
என்றேன் சலிப்போடு

உனக்குள் தேடி
உன்னையே வளர்த்தெடுத்து
உன்னை ஆளவைக்கும்
உன் சக்தியே
நிம்மதி என்கிறாய்

மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும்
வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்... 

45

மரணம்
ஒருமுறையே வரும்
ஆனால்
மரணத்தின் ஒத்திகை
பிரிவின் துயரில்
பொழுதுக்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

44

சொல்லுக்கு
சில
சிறகுகள்தாம்
சொல்லாமைக்கோ
கோடி கோடிச்
சிறகுகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

43

நெஞ்சக் கூட்டுக்குள்
நூறு ஜென்மக் கண்ணீர்
உப்புக் குருவிகளாய்

அழுகைச் சிறகுகள்
அவிழ அவிழ
ஆனந்தமாய்ப் பறப்பதற்கு
ஆயுள் வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*** 42 ஈழத்தாமரை

சூரியன் எழுந்து
சிவப்பைக் கழுவி
வெண்மை விதைக்க
வெளிச்சம் முளைக்கும்

வீதிகளின் பீதி
வெறுமைகளின் துயரம்
கிழிந்த விழிகளில்
கதறியழும் கனவுகள்
புதைந்த எலும்புகளில்
கொப்பளிக்கும் குருதி
நிறுத்தம் கொள்ளும்

இலங்கைத் தடாகத்தில்
ஈழத்தாமரை
அமைதியின் தாலாட்டில்
தொட்டிலும் துயில
சிங்களத் தீவுக்கு
நெடுஞ்சாலைப் பாலம்
நீளும் கவிதையாய்
42

மனக் கூடையிலிருந்து
ஒவ்வொரு செங்கல்லாக
இறக்கி வைத்துக் கொண்டே
இருக்கிறேன்

பாரம் இரட்டிப்பாய்க்
கூடிக்கொண்டே இருக்கிறது

இணையம் முழுவதும்
தவழும் நிலவுகளாய்
உனக்கான என் கவிதைகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

41

காலமெல்லாம் கனாக்கண்டு
கண்டெடுத்ததும்
கனவாகிப் போனால்...

கண்கள் நான்கினின்றும்
கண்ணீர்த் துளிகள்
ஈருயிரையும் ஈரப்படுத்தியபோது
காதல் நிறைகுடமானது

ஆசையாய் முட்டையிட்டு
ஆழ்மனதில் அடைகாத்தப்
பறவைக்கு
முட்டையிலிருந்து
நெருப்புத் துண்டங்கள் வெளிவந்தால்...

விழி விதைகளை
கண்ணீரில் விதைத்தாகிவிட்டது
இதயத்தை
துடிப்புகளுக்குள் புதைத்தாகிவிட்டது
இனி வாழ்க்கையை
வேறெங்கே சென்று தேடுவது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***41

எங்கே கவிதை

எப்போதெல்லாம் கவிதை எழுதுவீர்கள்? ஏன்தான் கவிதை எழுதுகிறீர்கள்?
நீங்கள் என்ன கவிதை எழுதும் இயந்திரமா? கவிதைகள் எங்கே கொட்டிக்கிடக்கின்றன நீங்கள் இப்படி அள்ளிக்கொண்டு வந்து நிற்கிறீர்கள்? எப்படி இத்தனை அழகான கவிதைகளை உங்களால் எழுத முடிகிறது? சிந்தித்துக் கவிதை எழுதுவீர்களா அல்லது சட்டென்று கவிதை எழுதுவீர்களா?

இப்படியாய் ஒரு கவிஞன் முன் கேட்கப் படும் கேள்விகள் ஏராளம். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் மனம்போன போக்கிக் கிறுக்கியதுதான் இந்தக் கவிதை ;-)


உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால் அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க் கவிதைகள்

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்

அதிகாலைப் பொழுதில்
விலகியும் விலகா உறக்கத்தில்
இதழ் விரிக்கும் தளிர் உணர்வுகளில்
திட்டுத் திட்டாய்க் கவிதைகள்

உறக்கம் கொண்ட கண்களில்
உறங்காத மன அலைச்சலில்
உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும்
தத்துவார்த்தக் கவிதைகள்

கோபம் வரும் கூடவே
கவிதை வரும்
காதல் வரும் முந்திக்கொண்டு
கவிதை வரும்
சோகம் வரும் அதைச் சொல்லவும்
கவிதை வரும்

எங்கில்லை கவிதை
எப்போதில்லை கவிதை
எதைத்தான் தழுவவில்லை கவிதை

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு கவிதை

அன்புடன் புகாரி